எழுத்தாளர் ஹரணி எழுத்துலகில் நாற்பதாண்டு களுக்கும் மேலாக இயங்கிவருபவர். கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, ஆய்வு, சிறுவர் படைப்புகள் என அனைத்துத் தளங்களிலும் தன் ஆளுமையைக் காட்டி வரும் தேர்ந்த படைப்பாளர். கலை என்பது மக்களுக்காக என்ற கருத்தில் ஊன்றிநிற்கும், இலக்கியவாதி. காவிரிக் கரையின் பிரபல இலக்கிய ஆளுமைகளான தஞ்சை பிரகாஷ், கவிஞர் சுகன், உள்ளிட்டவர்களோடு இலக்கிய அமைப்புகளிலும் பங்கேற்றவர். தஞ்சை எழுத்தாளர்களில் தனித்தன்மை வாய்ந்தவராகவும் இவர் திகழ்கிறார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற அவர், சிறந்த நூல்களையும் படைத்திருக்கி றார். இலக்கியப் பொன்விழாவை நோக்கிப் பயணிக்கும் ஹரணி ஏராளமான விருதுகளைப் பெற்றவர். அவரை இனிய உதயம் இதழுக்காக சந்தித்தபோது....
முனைவர் க. அன்பழகன் என்ற இயற் பெயரைக் கொண்ட நீங்கள், ஹரணி என்ற பெயரில் எழுதக் காரணம்?
ஹரணி என்பது என் புனைபெயர். ஆய்வாளராகவும் பேராசிரியராகவும் பணியாற்றிய காலத்து முழுமையும் க.அன்பழகன் என்கிற பெயரில்தான் எழுதிவந்தேன். அது கல்விநிலை சார்ந்தது. படைப்பிலக்கியத்திற்காக ஹரணி என்ற புனைபெயரை சூட்டிக்கொண்டேன். அதோடு, உத்ரா எனும் பெயரிலும் எழுதுகிறேன்.
தங்களின் குடும்பம், இளமைக்காலம் பற்றிக் கூறுங்கள்?
நடுத்தரக்குடும்பம். என் தந்தையார் மருத்துவத் துறையில் மருந்தாளுநராகப் பணிபுரிந்தார். அம்மா படிப்பறிவு இல்லையென்றாலும் அனுபவ ஞானம் மிக்கவர். எனக்கு மேலே மூன்று சகோதரிகள் எனக்கு அடுத்து ஒரு சகோதரர். என்னுடைய அப்பா எனக்கு தந்தை என்கிற உறவைத் தாண்டி நல்ல வழிகாட்டி யாகவும் மிகச்சிறந்த நண்பனாகவும் இருந்தவர்.
அன்றையகால மரபுப்படி என்னுடைய சகோதரிகள் வயதுக்கு வந்தபின்பும் படிக்க அனுப்பவியலாத சூழலில் வீட்டிற்குள்ளே இருக்கவேண்டிய கட்டாயம்.
என்னுடைய தந்தையார் தீவிர திராவிடப் பற்றாளர். வாழ்நாள் முழுக்க தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் என்றே வாழ்வை அமைத்துக்கொண்டவர். வீட்டில் இருக்கும் பெண்களுக்காக அப்போதே அப்பா ராணி, ராணிமுத்து இதழ்களை வாங்கிவந்து வாசிப்பைத் தொடங்கிவைத்தார். அழைத்துச்சென்று பெரியார் அண்ணாவின் நூல்களை வாசிக்கவேண்டும் என்பதை அன்பாக வலியுறுத்தியவர்.
பள்ளிப்பருவத்தில் தவறாமல் தஞ்சையில் நடைபெறும் கலைஞர் கூட்டங்களுக்கு அழைத்துப் போவார். தாள்களை மடித்து சிறுசிறு நோட்டுகளாகத் தைத்து அவற்றில் பல்வேறு அறிஞர்கள் பற்றிய கருத்து கள், மேற்கோள்கள், வரலாற்றுத் துணுக்குகளை எழுதி அவற்றை வாசிக்க வைப்பார். இப்படித்தான் ஆப்ரகாம் லிங்கன், மார்ட்டீன் லூதர் கிங், கென்னடி போன்றோரை மனத்துள் விதைத்தவர். அப்பாவின் வாசிப்பு ஊக்கந்தான் ஆறாம் வகுப்பு கரந்தை உமா மகேசுவரா உயர்நிலைப்பள்ளியில் படிக்கிறபோது தொகுப்பு எனும் இதழை நடத்தும் ஆர்வத்தைத் தந்தது. அதில் அப்போதே இரண்டு தொடர்கதைகளையும் எழுதினேன். .
பேராசிரியர் அன்பழகனைப் போல நானும் பேராசிரியனாக வரவேண்டும் என்று பெயர் வைத்ததாக அப்பா கூறுவார். பேராசிரியர் ஆனதையும் பார்த்தவர். கடைசிவரை எங்கள் குடும்பம் தி.மு.க. குடும்பம் அப்பா வாழ்வின் இறுதித் தருணங்களில் பாதி நினைவும் பாதி மயக்கமுமாக இருந்த சூழலில் அவருக்கு உணவூட்ட நாங்கள் கையாண்ட உத்தி கலைஞர் எனும் சொல்தான். அப்பா.. இங்க பாருங்க டிவில கலைஞரக் காண்பிக்கறாங்க என்றால் போதும் சட்டென்று விழிப்பார். ஊட்டிவிடுவோம்.
வீட்டில் குங்குமம் வந்தது. அப்பா மு.வ. நூல்களை அடுக்கியிருந்தார். அவற்றை வாசிக்க வைத்தார். எங்கள் வீட்டிற்கருகில் இரு சமணர் குடும்பங்கள் இருந்தன. அங்குதான் முத்து காமிக்ஸ், அம்புலிமாமா, கல்கி கிடைத்தன. அவற்றை வாசித்து அதைப்போன்றே கதைகள் எழுதும் பயிற்சி வந்தது. திருமணமான நிலையில் என்னுடைய மனைவிவழிச் இலக்கியம் என்பது யாருக்காக? மக்களுக் காக எனில் மக்கள் இலக்கியத்தை வரவேற்கிறார் களா?
கண்டிப்பாக இலக்கியம் என்பது மக்களுக்காகத் தான். இலக்கியம் எனும் சொல்லுக்குக் குறிக்கோளை எடுத்து இயம்புவது, அது ஓர் உயர்ந்த கருத்தை உள்ளடக் கியது என்றெல்லாம் அறிஞர்கள் வரையறுத்துள் ளார்கள். இவற்றை அடியாக வைத்துதான் நம்முடைய முன்னோர்கள் பல்வகை இலக்கியங்களை உருவாக்கி விட்டுப் போயிருக்கிறார்கள். பேழங்கால இலக்கியங் களாக இருந்தாலும் சரி படைப்பிலக்கியமாக இருந்தாலும் சரி அவை முழுக்க முழுக்க மக்களுக் காகத்தான். இலக்கியம் எனும் சொல்லிலேயே இலக்கு எனும் சொல் மறைந்திருக்கிறது. இந்த இலக்கு என்பது இலக்கியம் சென்று சேருமிடம். அதில்தான் தொடர்ந்து இடைவெளியுள்ளது. இந்த இடைவெளியை நிரப்பும் முயற்சியில் இலக்கிய உருவாக்கம் நிகழ்ந்தாலும் சிறுகதை, நாவல், கவிதை வடிவங்கள் மட்டுமே போதுமானவையாக இல்லை. புதிய புதிய மாற்று வடிவங்களும் தேவைப்படுகின்றன.
தொலைதூரக் கல்வி இயக்கத் தமிழ்ப்பிரிவின் பொறுப்பில் பணியாற்றியுள்ளீர். அந்த அனுபவம் எப்படி?
நான் என் வாழ்நாளின் விருப்பமாகக் கொண்டி ருந்தது ஆசிரியர் பணி. அதற்காகக் கடுமையாக உழைத்தேன். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்து தமிழ்ப் பிரிவின் பொறுப்பிற்கு வந்தேன். விருப்பமுடன் ஏற்ற பணியாதலால் மிக விருப்பமுடனே நிறைய வாசித்து அவற்றையெல்லாம் கற்பிப்பதில் செலவிட்டேன். பணியாற்றிய காலம் முழுக்க ஒவ்வொரு வகுப்பிற்கும் முன்னால் நிறைய தயார் செய்துகொணடுதான் போனேன்.
தொலைதூரக் கல்வி என்பது எல்லா வயதினருக்கும் உரிய கல்வி. ஆகவே ஒரு வகுப்பறை என்பது இளைய பருவம் தொடங்கி பணியோய்வு பெற்றவர் வரையாக மாணவர்களைக் கொண்டது. அவர்களுக்கு வகுப்பெடுப்பது என்பது ஒரு சவாலாகவே இருந்தது.
பெரும்பாலான பேராசிரியர்கள் உதவிப் பேராசிரியர்கள், ஆசிரியர்கள் இலக்கியம் வாசிப்பதில்லை. படைப்பதில்லை. அவர்கள் குறித்து தங்கள் கருத்து?
இதில் இரண்டு நிலைகள் உள்ளன. ஒன்று ஆசிரியப் பணி சார்ந்த கல்விப் பணி இன்னொன்று படைப்புப் பணி. கல்விப் பணியில் மிகச்சிறந்து விளங்கிய, இன்றும் விளங்கும் பேராசிரியர்கள் இருக்கிறார்கள். படைப்புப் பணி என்பது ஆசிரியப் பணியோடு செய்வதற்கு ஒருசிலருக்கே வாய்க்கிறது. படைப்பாளன் உருவாக்கப்படுவதில்லை உருவாகிறான் என்று சொல்வதுபோல ஆசிரியப் பணியோடு படைப்புப் பணியும் மேற்கொள்கிறவர்கள் வெகுசிலரே. இது பேரா. மு.வ. தொடங்கி விதிவிலக்குகள் உள்ளன. பேரா.கு.வெ.பாலசுப்பிரமணியன், எழுத்தாளர் பெருமாள் முருகன் என ஒரு பட்டியல் உள்ளது. இதே போன்று பேராசிரியராகப் பணி யாற்றியவர்களில் மிகச்சிறந்த கல்வி யாளராக இன்றும் இயங்கி வருகிறவர்களில் பேரா.சு.இராசாராம் போன்றோரைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். இவர்களின் ஆய்வுகள் ஒரு சிறந்த படைப்புக்கு எந்தவிதத்திலும் குறையாத தகுதியைப் பெற்றவை என்பதையும் மறுக்கமுடியாது.
இலக்கியத்தின் அனைத்து வகைகளிலும் எழுதி வருகிறீர். வாசகர்களிடையே எதற்கு வரவேற்பு இருக்கிறது? தங்களுக் குப் பிடித்தமான வடிவம் எது?
எனக்குப் பிடித்த வடிவம் சிறுகதைதான். எழுதத்தொடங்கிய காலத்தில் எல்லா வகைகளும் எழுத வந்தன. அதற்குரிய பிரசுர மரியாதையும் கிடைத்தது. ஆகவே எழுதினேன். ஒருபுறம் கல்வி யாளராக இலக்கியம், இலக்கணம், பொருண்மை யியல், அகராதியியல், அறிவியல் தமிழ், மொழியியல், உளவியல், பக்தி இலக்கியம் என இவை சார்ந்து ஆய்வுக்கட்டுரைகள், இலக்கியக் கட்டுரைகள் எழுதுவது, கருத்தரங்குகளில் பங்கேற்பது.. இன்னொருபுறம் படைப்பாளராகக் கவிதைகள், சிறுகதைகள், குறுநாவல்கள், நாவல்கள், பொதுக் கட்டுரைகள், மொழிபெயர்ப்பு, அறிவியல் கதைகள், ஆங்கிலக் கவிதைகள் சிறுவர் இலக்கியம், சிறுவர் கதைப்பாடல்கள், சிறுவர் பாடல்கள் எனவும் விடாது இயங்கிய காலத்தில் நிறைய பிரசுரம் கண்டது தொடர்ந்து எழுதவைத்தது. சிறுகதையின் வடிவம் எவ்வகையாக இருந்தாலும் அவை வரவேற்கப்படும் என்பதை உணர்ந்திருக்கிறேன்.
நாற்பதாண்டுகளுக்கு மேலாக எழுதி வருகிறீர்.. தங்களுக்கு எப்போதாவது சலிப்பு ஏற்பட்டதுண்டா?
ஒரு துளிகூட சலிப்பு இல்லை. மாறாக என் வாழ்வின் பல்வேறு கசப்பான, காயம்பட்ட, அவமானத் தருணங்களில் எனக்கு ஆறுதலாகக் கொண்டது என் எழுத்தைத்தான். நாற்பதாண்டு களாக இடைவிடாமல் எழுதிக்கொண்டி ருக்கிறேன். இன்றும் வருடத்திற்கு ஐந்து நூல்கள் என்று ஆய்வு நூல்களும் படைப்பிலக்கிய நூல்களையும் கொண்டுவருவதுகூட சலிப் பின்மையால்தான்.
தங்கள் நாவல்களில் மிக வித்தியாசமானது பேருந்து நாவல். தங்கள் அனுபவத்தை வெளிப்படுத்தியிருந்தது. அதுபோல நாவல் எதுவும் எழுதும் எண்ணம் உண்டா?
என்னைப் பொறுத்த அளவில் என் வாழ்வில் கண்ட அனுபவங்களையே படைப் பிலக்கியப் பொருண்மையாகக் கொள்கிறேன். அவற்றின் உண்மைகளைக் கற்பனை கலந்து எழுதுகிறேன். தொடர்ந்து பத்தாண்டுகள் தஞ்சைக்கும் சிதம்பரத்திற்கும் பேருந்தில் சென்ற அனுபவமே என்னைப் பேருந்து நாவல் எழுதுவைத்தது. அந்த நாவலை வாசிப்பவர்கள் மனத்துள் நடத்துநர் ஓட்டுநர் இருவரையும் மரியாதையாகப் பார்க்கும் எண்ணத்தைத் தரும். ஐந்தாண்டுகளுக்கும் மேலாக அது திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பாடமாக வைக்கப்பெற்றது. குறிப்பாக ஓட்டுநர்- நடத்துநர் மத்தியில் அது எனக்கு ஒரு மதிப்பைத் தந்தது. ஒரு பேருந்து என்பது வெறும் பயணிகளை உள்ளடக்கியது அல்ல. நிறைய நெகிழ வைக்கும் கதைகளை யும் அதற்கான போராட்டங்களையும் கொண்டது. அதில் பயணிக்கும் ஒவ்வொருவருக்கும் உள்ள கதைகளை இணைத்தேன். ஒரு பேருந்து நிறுத்தத்தில் ஏறி அடுத்த பேருந்து நிறுத்தத்தில் இறங்கிவிடும் பயணியின் நேரம் குறைவாக இருக்கலாம் ஆனால் அதற்குள்ள கதை யாரையும் கசிய வைக்கும் ஈரத்தைக் கொண்டது.. தற்போது ரயிலில் பயணம் செய்த அனுபவத்தை ரயில் நாவலாக எழுதிக் கொண்டிருக்கிறேன்.
சிறுவர்க்கான படைப்புகள் தற்போது அதிகரித்து வருகிறதே.. இது பற்றி தங்கள் கருத்து?
உலகத்தின் குழந்தை இலக்கியங்கள் போல நம் நாட்டில் குழந்தை இலக்கியங்களின் தேவைகள் சரியாக உணரப்படவில்லை. நமக்கு அழுத்தமான பாட்டி கதைசொல்லும் மரபு இருந்தும் அது சரியாக வெளிப்படுத்தப்படவில்லை. 1990 இலிருந்து நான் சிறுவர் இலக்கியங்கள் பல்வகையான பொருண்மைகளில் எழுதிவந்தேன். இடையில் சிறுகதை நாவல் என்று பாதை மாறிப்போனாலும் தற்போது சிறுவர் இலக்கியம் படைப்பதற்குப் படைப்பாளிகள் குறைவு என்கிற உறுத்தலில் நானும் தற்போது அதிகம் சிறுவர் இலக்கியங்கள் படைப்பிற்கு முக்கியத்துவம் அளித்து இயங்கத்தொடங்கியுள்ளேன்.
தஞ்சையின் இலக்கியச் சூழலில் உங்கள் அனுபவங் களைப் பகிருங்கள் இதயம் பேசுகிறது சிறுகதைக் களஞ்சியத்தில் என் முதல் சிறுகதை “பறக்க மறந்த சிறகுகள்” என் புகைப்படத்துடனும் முகவரியுடனும் வெளிவருகிறது. என் கதைக்குத்தான் அந்த இதழுக்கு அட்டைப்படம் போட்டிருக்கிறார்கள். அதைப் படித்துவிட்டு மதிப்பிற்குரிய கவிஞர் நா.விச்வநாதன் ஒரு அஞ்சலட்டை யில் கதையைப் பாராட்டிவிட்டு தஞ்சையில் ப்ரகாஷ் என்பவர் இருக்கிறார் அங்கு வாருங்கள் என்று அழைப்பு விடுத்தார். என் ஆசான் தஞ்சைப் ப்ரகாஷை நா.விச்வ நாதன் அறிமுகத்துடன் சந்திக்கிறேன். மகா பிரமிப்பு. எத்தனை பெரிய ஆளுமை? ஆனால் சாதாரணமாக வாங்க உக்காருங்க.. விச்சு சொன்னான்.. நல்லா எழுதி யிருக்கீங்கன்னு.. இன்னும் நிறைய படியுங்க.. எழுதுங்க என்று முதல் அறிமுகத்திலேயே உற்சாகமும் ஊக்கமும் தந்தார். அப்போது எதைப் படிக்கவேண்டும் என்று கேட்டபோது புதுமைப்பித்தன் தொடங்கி மிகப் பிருமாண்டமான ஆளுமைகளின் உலகத்தைக் காட்டினார் கள். அன்றிலிருந்து வெறிபிடித்ததுபோல வாசிக்க ஆரம்பித்தது இன்று வரை குறையாதிருக்கிறது. நிறைய உரையாடல்கள் நிறைய இலக்கியம் குறித்த தகவல்கள். வாசிப்புக் கடலைப் பருகக்கூட முடியாது என்று உணர்த்திய தருணங்கள். இதற்கு நா.விச்வாதன் மட்டுமே காரணம். அவருக்கு என்னுடைய நன்றிகளைப் புலப்படுத்துகிறேன்.
சும்மா இலக்கியக் கும்பல் என்று நிறைய கூட்டங்களை ஆசான் நடத்தினார். தமிழின் ஆகச்சிறந்த ஆளுமைகளின் முகத்தைப் பார்க்கவும் ஒன்றிரண்டு பயத்துடன் பேசவுமான அதிர்ஷ்டக் காற்று அடித்தது. ஜெயகாந்தன், தி.ஜானகிராமன், எம்.வி.வி., கரிச்சாங்குஞ்சு, கி.ரா., நாஞ்சில் நாடன், சுந்தரராமசாமி.. எனப் பிரமிப்பு குறையாது அள்ளித் தந்துகொண்டேயிருந்தார் ஆசான். எனக்கு முன்னதாக கவிஞர் நா.விச்வநாதன், சி. எம். முத்து, காதம்பரி வெங்கட்ராமன், கவி ஜீவன், புத்தகன், சௌந்தர சுகன், நட்சத்திரன், சுந்தர்ஜி, விஜயராகவன், தங்க. செந்தில்குமார், செல்லதுரை, எனக் களைகட்டிய சபையின் அடுத்தவரிசையில் நான் இருந்தேன். நிறைய கிடைத்தது ஒவ்வொரு நாளும் விருந்துபோல. நிறைய அமைப்புகள் தொடர்ந்து மாலை வேளைகளில் கூடி கவிதைகள் வாசித்து விவாதங்கள் நடத்தி எல்லாவற்றிலும் கலந்துகொண்டு கவிதை வாசித்து என்னைப் பற்றி அறிந்துகொண்ட சோதனைத் தருணங்கள் அவை.
இதில் சௌந்தர சுகன், நேர்மையும் ஒழுக்கமும் நல்லதைத் தவிர எதற்கும் சமரசம் செய்துகொள்ளாத சிற்றிதழ்ப்போராளியாகத் திகழ்ந்தவர். தன்மானமிக்கவர். அவரின் அறிமுகம் அற்புதமானது. நிறைய எழுதலாம். எத்தனை முறை பேசினாலும் தரமான படைப்பாக இருந்தால் மட்டுமே இதழில் பிரசுரிப்பார். இல்லையெனில் நேரிடையாக சரியில்லை என்று கூறிவிடுவார். மிக அன்பானவர். இதழியலில் ஒரு முனிவனைப்போல தவம்செய்து இதழ் வளர்த்தவர். தஞ்சைப் படைப்பாளிகளில் என்றும் நினைக்கத்தக்கவர். நிறைய இதழ்களுக்குப் பின்னரே என் படைப்புகளைப் பிரசுரித்தவர். இன்று அவரில்லை. ஆனாலும் அவரின் குடும்பத்தோடு அற்புதமான இலக்கியத்தொடர்பு நீடித்திருக்கிறது.
அவரோடு ஒரு தந்தையாக நின்றவர் பெருங்கவி வெற்றிப்பேரொளி ஐயா.. மிகுந்த ஆற்றல் மிக்க படைப்பாளி. மரபுக் கவிதைகளில் இன்றளவும் சுவையும் இலக்கிய வல்லமையும் கொண்டு எழுதிவருபவர். மேலும் தமிழகத்தின் சிறந்த படைப்பாளுமைகளில் குறிப்பிட்ட விழுக்காடு சௌந்தர சுகனில் எழுதியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. என்னை யாரென்று தெரியாமல் என் படைப்புகளைக் கண்டு கௌரவம் தந்தவர் வைரமுத்து சமுக இலக்கியப் பேரவையின் தலைவர் இரா.செழியன். திலகர் திடலில் நடைபெற்ற பிரம்மாண்டமான மேடையில் வைரமுத்து கையால் சிறந்த தமிழ்ப் பணி ஆற்றுபவர் என்கிற விருதைத் தந்தவர். அன்றிலிருந்து அவர் காட்டும் அன்பால் பல இலக்கியவாதிகள் அடையாளப்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். தமிழ்த்தாய் பேரவை எனும் அமைப்பின் வழி நிறைய கவிஞர்கள் உருவாகிநின்றார்கள். தஞ்சை வாசன் போன்றோரை குறிப்பிட்டுச் சொல்லலாம். என்னுடைய சுபாவம் குடும்பச்சூழல் காரணமாக ஒருசில குழுக்களில் மட்டுமே தொடர்ந்து பங்கெடுக்கமுடிந்தது. ஆசான் மறைவிற்குப் பிறகு எதிலும் பங்கேற்காமல் வாசிப்பது, எழுதுவது என்கிற செயல்பாடுகளை மட்டுமே இன்றுவரை மேற்கொண்டு வருகிறேன்.
தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி யிருக்கிறீர்கள். அந்த அனுபவம் பற்றிக் கூறுங்கள்?
என் பணியனுபவம் இரண்டு பெரிய பல்கலைக்கழகங்களில் அமைந்தது கொடுப்பினைதான். இளநிலை உதவியாளராகத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பணியில் சேர்ந்தேன்.
அப்போது துணைவேந்தர் மாண்பமை வ.அய்.சுப்பிரமணியம் எனும் பேராசான். மாண்பமை எனும் பொருளுக்குப் பொருத்தமானவர். நேரிய நடையும் கூரிய பார்வையும் தெளிந்த செயல்பாடுகளும் கொண்டவர்.
என் பணி ஷிப்ட் முறை. காலை ஷிப்ட்டில் பின்புறம் வந்துநிற்பார் துணைவேந்தர். திரும்பிப் பார்த்தால் உன் வேலையைப் பார் என்பார். பின்னால் நிற்கிறார் என்கிற பயத்துடனேயே உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு உடலில் துளிகூட அசைவில்லாமல் வேலை பார்ப்பேன். கொஞ்சநேரம் கழித்து நடப்பது நடக்கட்டும் திரும்பிப் பார்த்தால் இருக்கமாட்டார். எப்போது போனார் என்று அறியமுடியாது. பின்னாளில் அவரின் மகா ஆளுமையைப் புரிந்து கொண்டேன். அவரைப் பற்றி எழுத இந்த நேர்காணல் போதாது.
பதினான்கு ஆண்டுகள் அங்கே பணிபுரிந்து இறுதியில் மாண்பமை துணைவேந்தர் ஔவை நடராசனார் கீழாகப் பணியாற்றிய உதவியாளர்களில் ஒருவராகப் பணியாற்றும் சூழல் வாய்த்தது. அது அற்புதமான அனுபவம். நிறையக் கற்றுக்கொண்டேன் அவரிடம். ஔவை நடராசனார். இந்தப் பெயரை உச்சரிக்கும்போதே மிகுந்த மரியாதையும் அன்பும் வரும். தனக்குக் கீழ் பணிபுரிபவர் என்கிற அதிகாரத்தை ஒருபோதும் அவர் செலுத்தமாட்டார். ஆழமாகப் பேசுவார். அதை எளிமையாகப் புலப்படுத்துவார். மற்றவர் வெளிப்படுத்தாத கோணமாக அது இருக்கும். நிறைய நூல்களை வாசித்துக் கொண்டேயிருப்பார். அதுகுறித்து அழைத்துப் பேசுவார். நினைவாற்றலில் அவரை விஞ்சுகிற ஆள் இல்லை.
அப்போது நான் படைப்பாளியாக இருக்கிறேன் என்று தெரிந்ததும் மேலும் என்மீது அன்புகாட்டினார். என் முதல் சிறுகதைத் தொகுதி உயிர்க்குடில் (இக்கதை குங்குமம் நட்சத்திரச் சிறுகதைப்போட்டியில் பரிசு பெற்றது) எனும் தலைப்பில் 1993 ஆம் ஆண்டு வெளிவந்தது.
அதற்கு துணைவேந்தர்தான் அணிந்துரை தந்தார்கள்.
நான் முனைவர் பட்ட ஆய்வாளராகக் களத்தில் இயங்கியபொழுது என்னுடைய முதல் ஆய்வுக்கட்டுரை“இல்லம் கண்ட மருத்துவம்’ என்பதாகும். அறிவியல் தமிழ் இயக்கம் நடத்திய பன்னாட்டுக் கருத்தரங்கு அது. நான் கட்டுரை வாசித்த அமர்வின் தலைவர் மாண்பமை துணைவேந்தரின் சகோதரர் ஔவை மெய்கண்டான், கண் மருத்துவர். நான் கட்டுரை வாசிக்கப் பலரிடையே வெறுப்பும் எதிர்ப்பும். ஒரு அலுவல் நிலை பணியமைப்பில் இருந்துகொண்டு கல்விநிலையில் கட்டுரை வாசிப்பதா? அதுவும் பன்னாட்டுக் கருத்தரங்கில் என்று? ஆய்வாளர் நிலையில்தான் நான் சென்றாலும் ஏற்க வில்லை. ஆச்சர்யமான ஒரு செயல் நடந்தது. பேரா. இராமசுந்தரம் எல்லோரும் பிறக்கும்போது ஆசிரியர் களாகப் பிறக்கவில்லை நீ சென்று கட்டுரை வாசி என்றார். நான் மேடைக்குப் போகிறேன்.. திடீரென்று மாண்பமை துணைவேந்தர் ஔவை நடராச னார் வந்து அமர்ந்திருக்கிறார். எத்தகைய கொடுப்பினை எனக்கு?
தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய காலத்தில் நிறைய வழிகாட்டிகளாகப் பேராசிரியர்கள் பலர் எனக்குத் தந்தை நிலையில் இருந்து ஊக்கப்படுத்தியதன் விளைவே இன்றைக்குப் பேராசிரியராகவும் படைப்பாளராகவும் நிற்கிறேன். தமிழ்ப் பல்கலைக்கழக அனுபவங் களை ஒரு நூலாக எழுதுமளவுக்கு இருக்கிறது. அவர்கள் இல்லையென்றால் நான் இல்லை.
எழுத்தாளர்களிடையே ஓர் இணக்கமான போக்கு இருப்பதில்லையே.. அது ஏன்?
இருப்பதற்கான வாய்ப்பு மிகக்குறைவு. இதற்குப் பல காரணங்கள் உள்ளன. குறிப்பாகக் குழு மனப்பான்மை தொடர்ந்து நீடித்துக் கொண்டேயிருக்கிறது. அறிவியல்பூர்வமாகவும் மண்ணின் பண்பாடு சார்ந்தும் படைப்பாளிகளுக்குள் இன்னொரு மனிதன் இயங்கிக்கொண்டிருக்கிறான்.
ஆனாலும் அவர்களின் சிறந்த படைப்புகளால் இணக்கம் பெறச்செய்வது நலமானதுதானே?
தங்கள் படைப்புகள் பல பல்கலைக்கழகங் களில் பாடமாக வைக்கப்பட்டுள்ளதே.. மாணவர் களிடையே அதற்கு வரவேற்பு எப்படி இருந்தது?
பாடமாக வைக்கப்படும்போது அதைக் கட்டாய மாகப் படிக்கவேண்டும், தேர்வு எழுதவேண்டும் என்கிறபோது நல்ல படைப்பு என்பதைக் கடந்து ஒரு பாடநூலாகவே அது இருக்கிறது. என்னுடைய நூல்களைப் பொருத்தளவில் அதனை நடத்தும் ஆசிரியர்களிடம் வரவேற்பு இருக்கிறது. எங்கேனும் சொற்பொழிவுகளில் பேசுகிறபோது ஒருசில மாணவர்கள் பாராட்டிப் பேசுகிறார்கள். பாடநூலாக இருந்தாலும் விரும்பிப் படிக்கிற மாணவர்களும் இருக்கவே செய்கிறார்கள். அவர்களிடத்து ஏற்படுத்தும் மாற்றம் நம் படைப்புகுறித்த நோக்கத்தை நிறைவுபடுத்திவிடும்.
படைப்பாளியாகவும் இருக்கிறீர்கள்.. ஆய்வாளராகவும் இருக்கிறீர்கள்.. இரண்டில் எது பிடித்தமானது?
நிச்சயமாக படைப்பாளியாக இருப்பதுதான் பிடித்திருக்கிறது. என்றாலும் நான் விரும்பிப்பெற்ற பணி ஆசிரியப்பணி என்பதால் அதிலும் என்னுடைய அதிகபட்ச நேர்மையான கடின உழைப்பைத் தந்திருக்கிறேன். சரியாகக் கற்பிப்பது..மாணவர்களிடம் கருத்துகேட்பது.. என்னைச் செப்பம் செய்துகொள்வது என்பதில் தொடர்ந்து கவனம் செலுத்தியிருக்கிறேன். இதே போன்று ஓர் ஆய்வுக்கட்டுரை எழுதும்போது அதற்கான தரவுகளை முறையாகச் சேகரித்து விவாதங்களை உள்ளடக்கியதாக அதை அமைத்துக்கொண்டு கருத்தரங்குகளில் வாசித்திருக் கிறேன்.
இஸங்கள் ஏராளமாக உள்ளன. இஸங்களால் இலக்கியம் வளருமா?
மேலைத் திறனாய்வாளர்கள் இந்த இஸங்களைக் கொண்டு படைப்புகளைத் திறனாய்வு செய்து வகைப்படுத்தினார்கள். தமிழிலும் இத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எம்.பில்., பி.எச்.டி. ஆய்வேடுகள் வெளிவந்தன. படைப்பாளன் இஸங்களைக் கொண்டு படைப்புகளை உருவாக்குவதில்லை. ஆனாலும் இஸங்களின் அடிப்படையில் படைப்புகளைத் திறனாய்வு செய்யப் படைப்புகள் இடமளித்தன என்பது கவனிக்கத்தக்கது. இலக்கியங்களின் அடுத்த கட்ட நகர்வுக்கு ஒரு காலத்தில் இந்த இஸங்கள் முக்கிய காரணமாக இருந்தன. ஒரு சில படைப்பாளர்கள் இஸங்களின் அடிப் படையில் படைப்புகளைத் தந்தபோதும் அவை வெகுவாகக் கவனிக்கப்படவில்லை. மேலும் ஒரு படைப்பு பல்வேறு திறனாய்வுகளுக்கு உட்படுத் தப்படும்போது அது படைப்பின் நிலைபேற்றுத் தன்மை எனும் வளர்ச்சியை அடைகிறது என்றும் சொல்லலாம்.
இணையத்திலும் ஏராளமாக வாசிக்கக் கிடைக்கின்றன. அச்சு நூல்களும் வந்துகொண்டே உள்ளன. மக்களிடையே வாசிப்பு வழக்கம் பெருகி வருகிறது என்று கருதலாமா? எதிர்கால இலக்கிய உலகம் எப்படி இருக்கும்?
வாசிப்பு வழக்கம் என்பது பெருகியுள்ளது என்பது உண்மை. இணையத்தில் வாசிப்பு என்பது பெரும்பான்மை விழுக்காடு இல்லை. அதனால்தான் இன்றைக்கும் அச்சு நூல்களுக்கு ஒரு மதிப்பு இருந்து கொண்டேயிருக்கிறது. இணையத்தின் வாசிப்பு என்பது பெருகலாம். இணையத்தைப் பயன்படுத்து பவர்கள் எல்லோரும் நூல் வாசிப்பை மேற்கொள்கிறார்கள் என்று உறுதி செய்யமுடியாது. என்றாலும் அச்சு நூல்களின் வாசிப்பே எப்போதும் ஆழமான இடையறாத வாசிப்பைத் தரமுடியும்.
தங்கள் படைப்புகள் விமர்சிக்கப்படும் போது தங்கள் மனநிலை எப்படி இருக்கும்?
நிச்சயமாக இதுவரையிலும் விமர்சனத்தை விருப்பமோடு ஏற்றுத்தான் என்னை மாற்றிக் கொண்டிருக்கிறேன். சில சமயங்களில் சரியான விமர்சனம் இல்லாத சூழலில் கொஞ்சம் வருத்தமிருக்கும். அதுவும் கொஞ்சநேரத்தில் மாறிவிடும். அவர்களுக்குப் பதில் அளிக்காது விலகி விடுவேன்.
சிற்றிதழ்கள் தற்போது முன்பு அளவிற்கு அதிகம் வருவதில்லையே ஏன்?
இல்லை. நிற்கிற இதழ்களுக்கு நிகராகவும் கூடுதலாகவும் சிற்றிதழ்கள் வந்து கொண்டேயிருக்கின்றன. மேலும் சிற்றிதழ்கள் தற்போது கூடுதல் பக்கங்களுடன் குறிப்பிட்ட இலக்கிய வகைமைக்காகவும் வருவது மிகவும் வரவேற்கத்தக்கது. மரபுக்கவிதை, புதுக்கவிதை, சிறுகதை என ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக சிற்றிதழ்கள் வருவது பெருகிவருகிறது. வடிவமைப்பு நேர்த்தி, அச்சு, படைப்புகள் இவற்றில் சிற்றிதழ்கள் சிறந்த கவனத்தைக் கொண்டிருக்கின்றன என்றும் கூறுவேன். சிற்றிதழ் விரும்பியாக நான் தொடர்ந்து இருக்கிறேன்.
மூத்தவர் படைப்புகளை வாசித்தபின்னே படைப்புலகிற்கு வருகிறோம். படைப்பில் பிறர் தாக்கமின்றி எழுத முடியுமா?
ஒரு படைப்பாளனாக வருவதற்கு முன்னர் மூத்தவர் படைப்புகளை வாசிப்பது என்பது அடிப்படையானது என நான் எப்பவும் எண்ணுகிறேன். என் தொடக்கக்கால எழுத்து களில்கூட மூத்தவர் சிலரின் பாதிப்பு இருப்பதாகக் குறிப்பிட்டனர். போகப்போக எனக்கென்று ஒரு தனித்த அடையாளத்தைத் தக்கவைத்துக்கொண்டேன். பிறர் தாக்கமின்றி எழுத முடியும்.
ஒவ்வொரு படைப்பாளிக்கும் ஒவ்வொரு படைப்பும் ஓர் அடையாளமாக இருக்கும். தங்களை அடையாளப்படுத்தும் படைப்பு எது?
ஆய்வுநிலையில் என்னுடைய முனைவர் பட்ட ஆய்விற்காக ஆய்வு மேற்கொண்டது பொருண்மையியல் சார்ந்த ஆய்வு. அது சொல்லும் பொருளும் எனும் தலைப்பில் நூலாக வெளி வந்துள்ளது. என்னுடைய கல்விப்பணியில் அது இன்றுவரை பேசப்படுகிறது. எனக்கு நெறியாளராகத் திகழ்ந்த பேரா.பெ.மாதையன் அவர்களை இத்தருணத்தில் நன்றியுடன் நினைவுகூர்கிறேன். மேற்படி ஆய்விற்கு எனக்குப் பல்வகையிலும் வழிகாட்டிய பேரா. எச். சித்திரபுத்திரபிள்ளை, பேரா. சு.இராசாராம், பேரா. கி.அரங்கன், பேரா. இராமசுந்தரம், பேராசிரியர் ஆறு. இராமநாதன், பேரா. சா.கிருட்டினமூர்த்தி போன்றோரை என்றும் மனம் நினைத்திருக்கும். படைப்புலகைப் பொருத்தளவில் என் சிறுகதையே என்னை அடையாளப்படுத்தும் படைப்பாகும்.
தற்போது இலக்கியத்தின் போக்கு எப்படி இருக்கிறது.
நன்றாக உள்ளது. போக்கு என்பது அவ்வக் காலத் தாக்கத்தை உள்வாங்கிப் பிரதிபலிப்பது. இந்தத் தாக்கம் பல்வேறு விவாதங்களைக் கொண்டது. நிறைய பொருண்மைக்களங்களில் படைப்புகள் குவிந்தவண்ணம் இருக்கின்றன. இளையவர்கள் தனித்த சிறப்புடைய படைப்புகளைத் தருகிறார்கள். வாசிப்புக்கு நிறைய கிடைக்கின்றன. மொழிநடை, சொல்லும்முறை, விவரிப்புத்திறன், சொல்லாடல்கள், சொற்களைப் பயன்படுத்தும் தெளிவு என எல்லாவற்றிலும் தொடக்கக்காலச் சூழலைவிட நிறைய மாற்றங் களை உள்வாங்கி இன்றைக்கு இலக்கியம் நகர்ந்துகொண்டிருக்கிறது.