எழுத்தாளர் புதிய மாதவி தமிழர், மும்பைவாசி. முற் போக்குச் சிந்தனையாளர். பெண்ணியத்தை முன்னெடுத்துச் செல்லும் ஒரு படைப் பாளி. விளிம்புநிலை மக்களுக் காக குரல் கொடுத்துவருபவர். அரசியலைக் கூர்ந்து கவனித்து கவிதைகள் மூலம் விமர்சனம் செய்பவர். கதை, கவிதை, கட்டுரை, விமர்சனம் என இலக்கியத்தின் அனைத்துத் தளங்களிலும் இடைவிடாது இயங்கிவரும் ஒரு படைப்பாளி. முகநூலில் முத்திரை பதித்துவருகிறார். பெண் படைப் பாளுமைக்காக மேலாண்மை பொன்னுச் சாமி நினைவு விருதினை த.மு.எ.க. சங்கம் சமீபத்தில் இவருக்கு அறிவித்துள்ளது. இனிய உதயம் இதழுக்காக அவருடன் ஒரு நேர்காணல் தமிழ்நாட்டுக்காரரான நீங்கள் மும்பைவாசியான அனுபவத்தைச் சொல்லுங்கள்..?
நான் மும்பைவாசியாகவில்லை. நான் மும்பைவாசியாகவே பிறந்து வளர்ந்து வாழ்கிறேன். காரணம் மும்பைவாழ் தமிழ்ச் சமூகத்தின் நாலாவது தலைமுறையாக என் வாழ்க்கை தொடர்கிறது. எனவே ஒருவகையில் மும்பைதான் என் பிறப்பிடம். என் வாழ்விடம். என் வாழ்க்கை. அம்ச்சி மும்பை. ஆனால் இந்திய மண்ணில் என் வேர்கள் தமிழ்நாட்டில் இன்னும் இருக்கின்றன என்ற புரிதலுடன் வாழும் மும்பைவாசி நான்.
மும்பை இலக்கியச் சூழல் எப்படி உள்ளது?
மும்பை தமிழ் இலக்கியச்சூழல் என்று நீங்கள் அர்த்தப்படுத்திக் கொண்டால் அது இன்னும் கவியரங்க மேடைகளையும் பட்டிமன்றங்களையும் தாண்டவில்லை. நவீன இலக்கியத்தில் மிகச்சிறந்த பங்களிப்பு களைக் கொடுத்திருக்கும் நாஞ்சில் நாடன், இந்திரன் ஆகியோர் மும்பையிலிருந்து தங்கள் பயணத்தை ஆரம்பித்திருக்கிறார்கள் என்று நாங்கள் எங்களுக்குள் அடிக்கடி பெருமையுடன் சொல்லிக்கொண்டாலும் கூட எங்கள் இலக்கியம் இன்னும் முழுமை யாக எழுதப்படவில்லை. அந்த முயற்சி, அந்தச் சூழல் இப்போதுதான் ஆரம்பித்திருக் கிறது. வ.இரா. தமிழ் நேசன், இறை. சா. ராஜேந் திரம் ஆகியோரின் அண்மைக்கால படைப்பு கள் நம்பிக்கை அளிக்கின்றன. மும்பை இலக்கியச் சூழல் என்பது அதற்கான புலம் பெயர்ந்த மக்களின் பின்புலம் சார்ந்தது என்பதால் அதற்கான அவகாசம் தேவைப்படுகிறது.
மற்றபடி, மும்பை ஒரு பன்மொழி இலக்கியக்கூடம். பரந்து விரிந்த தளம். மாநகர கவிதா மண்டலம் போன்ற பன் மொழி இலக்கியக்கூடுகைகளில் கலந்து கொள்ளும்போது ஏற்படும் அனுபவங்கள் புதிது. இனிதும் கூட. புதிய மாதவி பெயர்க் காரணம்?
எட்டாவது வகுப்பு படிக்கும்போது நான் எழுதிய சிறுகதை “புதிய மாதவி.
அப்போதுதான் சிலப்பதிகாரம் எனக்கு அறிமுக மாகிறது. அக்கதையை என் அப்பாவை சந்திக்க வரும் தோழர்களிடம் கார்பன் காப்பி எடுத்து வாசிக்க கொடுப்பேன். அப்படி வாசித்தவர்களில் ஒருவர் சீர்வரிசை சண்முகராசன். அவர் சீர்வரிசை இதழில் என் கவிதையைப் பிரசுரிக்க விரும்பினார். என் இயற்பெயரில் வேண்டாம் என்று சொன்னேன். கவிதை எழுதற பொண்ணெல்லாம் குடும்பத்துக்கு இலாயக்கு கிடையாதுனு இருந்த சூழலில் நான். அவர் தான் என் எழுத்துகளை 'புதிய மாதவி’ என்ற பெயரில் வெளியிட்டார். அதன்பின் மல்லிகா என்ற நான்தான் புதிய மாதவி என்ற பெயரில் எழுதுவதை அறிந்த சில அறிவாளிகள்.. வேற பெயர் கிடைக்கலியானு கேட்டப்போ.. முடிவு செய்தேன்.. ‘புதிய மாதவி’ என்ற பெயரில் மட்டுமே எழுதுவது என்று. இப்படி யாகத்தான் புதிய மாதவி என்ற பெயர் என்னை சுவீகரித்துக் கொண்டது.
தங்கள் இலக்கியப் போக்குடன் மும்பை இலக்கியப் போக்கு ஒத்துப் போகிறதா?
நான் ஏற்கனவே சொன்னதுபோல இப்போதும் மும்பை தமிழ்ச் சங்கங்கள் கவியரங்க மேடைகளையும் பட்டிமன்றங்களையும் தாண்டவில்லை. அந்த மேடைகளின் கைதட்டல்களில் ஏற்படும் மயக்கத்திலிருந்து வெளிவரவில்லை. நான் கடந்த 10 ஆண்டுகளாக இந்த மேடைகளைத் தவிர்த்துவிட்டேன்.
அதனால் தனித்து விடப்பட்டிருந்தாலும் காலப் போக்கில் என் பாதையில் சிலராவது இணைவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. நம்பிக்கைதானே வாழ்க்கை.
தமிழ்நாட்டிலேயே இருந்திருந்தால் இலக்கியத்தில் இன்னும் அதிகம் சாதித்திருக்க முடியும் என எண்ணியதுண்டா?
எப்போதாவது அப்படி எண்ணியதுண்டு. ஆனால் அது உண்மை அல்ல என்பதை அறிவேன். காரணம் எங்கிருந்தாலும் யாரை முன்னிலைப் படுத்த வேண்டும், யாருடைய எழுத்துகளை எடுத்துச் செல்லவேண்டும் என்பதில் ஒரு நுட்பமான இலக்கிய அரசியல் செயல்படுகிறது. அதை நானும் அறிவேன். சாதித்தல், சாதனை என்பது என்ன? இதைக் காலம்தான் எழுதும். இதை ஜால்ரா போடும் கூட்டம் எழுதிவிடமுடியாது. சென்ற தலைமுறையில் எழுதியவர்களின் படைப்புகள் இன்று எத்தனை பேரால் வாசிக்கப்படுகின்றன? ஏன் அந்தச் சாதனை மனிதர் களைச் சமூகம் மறந்துவிட்டது? யாரெல்லாம் இன்று சாதனையாளர்கள் என்று இச்சமூகம் ஒரு பட்டியல்போட்டு வைத்தி ருக்கிறதோ அதைக் கூர்ந்து கவனிக்கும்போது, அவர்களுடைய முகவரி, அவர்களின் அடையாளம், அவர்களின் எழுத்து அரசியல் இதை எல்லாம் கவனிக்கும் போது, இச்சாதனையின் பின்புல அரசியல் புலப்படுகிறது. அதனால் தான், சாதனை” என்றால் என்ன? என்ற கேள்வி அடிக்கடி எழுகிறது.
என்னைப் பொருத்த வரை, எழுதியதையும் எழுதப் போவதையும் காலத்தின் கைகளில் விட்டுச்செல்கிறேன். காலம் எதை எடுத்துச்செல்ல வேண்டுமோ அதை மட்டும் எடுத்துச் செல்லும்.
மும்பையில் இருந்தாலும் தமிழ்நாட்டுக்கு அடிக்கடி வந்து செல்கிறீர்.. இரண்டு வாழ்க்கையில் எது பிடித்தமானது?
ஒரு பறவையின் வேடந்தாங்கல் மாதிரிதான் எனக்கு தமிழ்நாடு. உறவுகள், நட்புகள், கூடல்கள் நிறைந்த வாழ்க்கை வாழும் மனித சமூகத்தின் ஓர் அங்கம் நான். எனவேதான் ஓராண்டிற்கு ஒரு முறையாவது தமிழ்நாடு வருகிறேன். எது பிடித்தமானது என்று கேட்டால், எங்கே பறந்து சென்றாலும் பறவை தன் கூடு அடைவதில் மட்டுமே திருப்தி அடைவது போல நானும் மும்பை வாழ்க்கையில் மட்டுமே தன் கூட்டுக்குள் வந்தடைந்த பறவை போல உணர்கிறேன்.
தற்போது தங்களை புலம்பெயர்ந்தோர் என கொள்ளலாமா?
புலம்பெயர்ந்தோர் என்பது குறித்த புரிதல் என்னவாக இருக்கிறது? அதாவது இந்திய தேசத்தை விட்டு அயல்தேசத்தில் வாழ்பவர்களை மட்டுமே புலம் பெயர்ந்தவர்களாக நினைக்கிறோம். நாலு தலைமுறை தாண்டி தங்கள் வாழ்விடத்தை மாற்றிக்கொண்ட அயல் மாநிலத்தில் வாழும் எங்களைப் போன்றவர்களை தமிழ்நாடு “புலம்பெயர்ந்தோர் “ என்று பார்க்கிறதா? எங்கள் எழுத்துகளை அப்படி வகைப்படுத்துகிறதா? எனக்குத் தெரியாது. அதை தமிழ்நாட்டிலிருக்கும் நீங்கள்தான் சொல்ல வேண்டும்.
தங்கள் படைப்புகளில் புலம்பெயர்ந்த தாக்கம் அதிகமிருப்பதில்லையே.. ஏன்..?
இதுதான் புலம்பெயர்ந்தோர் குறித்த தமிழ்நாட்டின் புரிதல்.
அந்நிய தேசத்திலிருந்து எழுதப்படுவதும் அக்களமும் புலம்பெயர்ந்தோர் இலக்கிய வகையாக எளிதாக உங்களால் புரிந்துகொள்ளப்படுகிறது. ஆனால் தாராவி பற்றி நாங்கள் எழுதுவது உங்களுக்கு இன்னும் புலம்பெயர்ந்தோர் இலக்கிய மாக தெரியவில்லை. ஏன்?
என் தனியறை கதைகள் , புதிய ஆரம்பங்களில் எழுதிய தாராவி வாழ்க்கை, கொரோனா காலத்தில் தாராவி மக்களின் தமிழ்நாட்டு பயணம் குறித்து எழுதிய ‘சிறகொடிந்த வலசை நாவல், மும்பை தாதருக்கு கையில் மஞ்சள் பையுடன் வந்திறங்கிய தமிழனின் மும்பை வாழ்க்கையை எழுதிய மின்சார வண்டிகள்... இதெல்லாம் புலம்பெயர்ந்தோர் இலக்கியமாக ஏன் தெரியவில்லை?
எம் தாராவி சனங்களைப் பற்றிய ரத்தமும் சதையுமான வாழ்க்கை நெருக்கடிகளை கவிதைகளில் எழுதியபோது “கழிவறைக்காதல் கவிதைகள் “ என்று விமர்சித்தவர்களுக்கு அக்கவிதைகள் புலம்பெயர் தமிழரின் வாழ்க்கைச் சித்திரம் என்பது ஏன் புரியவில்லை?
சைதய்பூமி கட்டுரைகள் முழுக்கவும் மராட்டிய மண்ணின் தலித்தியம், பாபாசாகிப் அம்பேத்கருக்கு முன் இருந்த தலித்திய சூழல், மராட்டிய மண்ணில் எடுத்துச் செல்லப்படும் திராவிட அரசியல், மராட்டிய எழுத்தாளர்களின் பங்களிப்பு இதை எல்லாம் முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரைகள். அது புலம்பெயர்ந்தோர் அரசியலாக ஏன் பார்க்கப்படவில்லை? இதை எல்லாம் புரிந்து கொள்வதிலும் ஏற்றுக் கொள்வதிலும் எதோ ஒரு மனத்தடை இருக்கிறதோ..!
படைப்புகளில் படைக்கப்படும் பாத்திரங்கள் மனிதர்கள் என படைக்கிறீர்களா? இல்லை மும்பை வாசி, தமிழ்நாட்டு வாசி என படைக் கிறீர்களா?
கதைளும் கதைக்களமும் கதைமாந்தர்களைத் தீர்மானிக்கின்றன.
மும்பைவாசியோ தமிழ்நாட்டு வாசியோ யாராக இருந்தாலும் அவர்கள் அனைவரும் மனிதர்கள் தான்.
தனியறை கதைகளில் முழுக்க மும்பை மனிதர் கள். இதற்குக் காரணம் இட நெருக்கடி, மக்கள் பெருக்கம் என சொல்லலாமா?
இட நெருக்கடி மக்கள் பெருக்கம் என்ற காரணங்களை முன்வைப்பது அசல் காரணங்களை மூடி மறைப்பதாகும். ஏன் இட நெருக்கடியான இடம் என் வாழ்விடமானது? ஏன் எங்கள் வாழ்க்கை தாராவியில்?
ஏன் தாராவியை நீங்கள் இன்றும் ஆசியாவின் குடிசையாகவே வைத்திருக்கின்றீர்கள்? ஏன் உங்கள் திரைப்படங்களில் எங்களைக் காட்டும்போதெல்லாம் வில்லனாகவும் அழுக்கான மனிதர்களாகவும் காட்டுகின்றீர்கள்? நீங்கள் எல்லாம் யார்?
மும்பையின் வருமானத்தில் மட்டுமல்ல, மராட்டிய மாநிலத்தின் வருமானத்தில் கணிசமான பங்களிப்பைக் கொடுக்கும் தாராவி எங்கள் வாழ்விடமாக இருப்பதன் பின்னணி என்ன? இதன் அசல் காரணிகளைப் பேசினால் தமிழ்ச் சமூகத்தின் “சாதி முகம்” கிழிந்து தொங்கும்.
புலம்பெயர்தலுக்குப் பல காரணங்கள் உண்டு.
மும்பைக்கு தமிழர்களாகிய நாங்கள் நாலு தலைமுறைக்கு முன் புலம்பெயர்ந்தக் காரணம், சொந்த மண்ணில் சுயமரியாதையுடன் வாழமுடியாத அவலம் மட்டும்தான். இப்போதும் கூட எனக்கு தமிழ் நாட்டில் நிரந்தரமாக வாழ்வது என்பது அச்சம் தருகிறது. ஏன்?
மகாத்மா காந்தி ‘கிராம ராஜ்யத்தை’ கொண்டாடிய காலத்தில் பெரு நகரத்தை நோக்கி தன் மக்களைப் புலம்பெயரச் சொன்ன பாபாசாகிப் அம்பேத்கரின் வலி சுமந்தக் குரல் என்னவென்று தெரியுமா உங்களுக்கு? சொந்த ஊர், பிறந்த ஊர், சொந்தம் , தன் மண், தன் வாழ்க்கை இதெல்லாம் இருந்தும் இல்லாமல் வாழ்வதன் வலியும் அதற்கான காரணங்களும் தமிழ்ச் சமூகம் இப்போதும் உணர்ந்திருக்கிறதா என்ன?
பெண்கள் பொருளாதார அளவில் முன்னேறி இருந்தாலும் குடும்ப அளவிலும் சமூக அளவிலும் இன்னும் பின்தங்கியே உள்ளனரே..?
பெண்ணுக்கு பொருளாதார அடிப்படை உரிமைகள் கிடைத்துவிட்டால் பெண்ணிய விடுதலை கிடைத்துவிடும் என்று நம்பியது தவறு. சமூகம் என்பது புற அரசியலால் மட்டுமல்ல, பண்பாட்டு அரசியலால் கட்டமைக்கப் பட்டிருக்கிறது. பெண் வாழ்க்கையில் சென்ற தலைமுறையைவிட இன்றைய தலைமுறைக்கு முன்னேற்றம் உண்டு. குடும்பம் என்ற நம் நிறுவன அமைப்பின் தலைமைத்துவம் இன்றும் ஆணுலகம்தான். பெண் தலைமைத்துவம் குடும்பத்தில் வரவேண்டும் என்பதைக் கடந்து இன்றைய பெண்கள் குடும்ப அமைப்பில் சம பங்காளியாக இருக்கவேண்டும் என்பதை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்கள். எந்த மாற்றங்களும் திடீரென வந்துவிடாது.
ஆண் படைப்பாளிகளும் பெண்ணியம் பேசி வருவதை எப்படி பார்க்கிறீர்?
பேசட்டுமே… நாங்கள் ஆண்களைப் பற்றிப் பேசவில்லையா என்ன?! நாங்கள் பேசுவதை நீங்கள் ஆணியம் என்றா வகைப்படுத்துகின் றீர்கள்! ஆனால் ஆண்கள் பேசும் பெண் பற்றிய அனைத்தும் ஓர் ஆண் பார்வையில் ஒரு பெண் ணைப் புரிந்துகொண்டிருப்பதாக மட்டுமே இருக்க முடியும். அப்படித்தான் இருக்கிறது! சில நேரங்களில் தங்களை “புரட்சியாளர்களாக’ காட்டிக்கொள்ள ஆண்கள் பெண்ணியம் பேசும்போதுதான் எரிச்சல் வருகிறது.
இலக்கியத்தில் நவீனம், பின்நவீனம் என பல வகைகள் இருக்கின் றதே... இவை இலக்கியத்தின் வளர்ச்சிக்கு உதவுகிறதா?
இசங்களாகட்டும், இயக்கங்கள் ஆகட்டும் ஒன்றின் போதாமையை பூர்த்தி செய்ய இன்னொன்று பிறக்கிறது. ஒன்றிலிருந்து மற்றொன்று.
அதிலிருந்து பிறி தொன்று.. புறச்சூழலில் மாற் றங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. அவை அகச்சூழலில் ஏற்படுத்தும் தாக்கங்கள். அதை வெளிப் படுத்தும் இலக்கியம் புதிது புதிதாக தன்னைப் பிரதி எடுத்துக் கொள்கிறது.
இலக்கியவாதிகள் பல குழுக்களாக பிரிந்து செயல்படுகின்றனரே.. இது ஆரோக்கிய மானதா?
நான் தமிழ் இலக்கியவாதிகளின் குழுவிலிருந்து விலகி இருக்கும் சூழலில் வாழ்கிறேன். வெளியிலிருந்து இக்குழுக்களை எல்லாம் பார்க்கும்போது அக்குழுக்களின் முகவரியை அடையாளம் காணும் போது அக்குழுக்களின் இலக்கியப் பட்டியல் வரிசை யைப் பார்க்கிறதுபோது.. உண்மையைச் சொல்லணும்னா .. சில நேரங்களில் அருவெறுப்பா இருக்கு.
கதை, கவிதை, கட்டுரை என்னும் வகைகளில் எழுதி வருகிறீர்? சமூக பிரச்சனையை பேச எது சரியான வடிவம்..?
எல்லாமுதான். ஆனா கட்டுரை வடிவம் என்பது அப்பிரச்சனை குறித்த நம் நேரடி விசாரணை, அனுபவம். அதில் எந்தப் புனைவுகளும் இல்லை.
கதை கவிதைகளிலும் அரசியல் உள்ளுறையாக இருக்கும்.
நேரடியாக சொல்ல முடியாதவைகளை புனைவு களின் வழி சொல்வதற்கு கதை கவிதைகள் கைகொடுக்கும்.
படைப்புகளைத் தாண்டி விமர்சனங்களும் எழுதி வருகிறீர். தங்கள் விமர்சனம் எவ்வகையைச் சார்ந்தது..?
எதைப் பற்றி விமர்சனம் எழுதுகிறேன் என்பதைப் பொருத்து விமர்சனம் வகைப்படும்.
அரசியல் பற்றிய எழுத்துகளை விமர்சிக்கும்போது அந்த அரசியல் கோட்பாடுகளைச் சார்ந்து விமர்சனம் எழுதவேண்டும். சமரசமின்றி தலைமை வழிபாடுகளின்றி எழுதவேண்டும்.
தத்துவங்கள், மெய்யி யல் இதெல்லாம் பற்றி எழுதி யிருக்கும் புத்தகங்களை விமர்சிக்கும்போது அந்த தத்துவ விசாரணை, மெய்யி யல் குறித்த சில புரிதல்களுடன் விமர்சனம் செய்ய வேண்டும்.
தங்கள் படைப்பு களின் மீதான விமர்சனத் தால் தாங்கள் காயப்பட்ட துண்டா?
யார் விமர்சிக்கிறார் கள்? அவர்களின் உள் நோக்கம் என்ன?
இதைப் புரிந்து கொள்கிறேன். எனவே எதுவும் காயப்படுத்துவதில்லை.
விமர்சனத்தால் காயப்படாத நான், கள்ள மவுனத்தில் கடந்து செல்லப்பட்ட தருணங்களில் காயப்பட்டிருக்கிறேன். காயப்படுகிறேன்.
அந்த ஊமைக்காயங்கள் ஆறாதவை.
இன்றைய சூழலில் விமர்சகர்கள் என்று தனியாக இல்லையே?
விமர்சனத்தை ஒரு கலை இலக்கியப் படைப்பாக தமிழ் இலக்கியச் சூழல் வளர்த்தெடுக்கவில்லை. இலக்கிய விமர்சனங்கள்கூட “மொய் எழுதற கதையா” இருக்கு.
ஒரு படைப்பாளரே விமர்சனம் செய்யும் போது அதில் விமர்சனத் தன்மை முழுமையாக இருக்குமா?
முழுமையா இருக்குமா இருக்காதா என்பது எழுதுபவரைப் பொருத்தும்/ எழுதப்படுவதன் நோக்கம் குறித்துமாக அமையும். ஆனால் ஒரு படைப்பாளரே விமர்சகராகும்போது அது சிக்கலான உளவியல் பிரச்சனையாகிறது.
படைப்புகள் எந்த மக்களுக்காக எழுதுகிறாமோ எந்த மக்களைப் பற்றி எழுதுகிறாமோ... அந்த மக்களை படைப்புகள் சென்றடைகிறதா?
சென்றடைய வேண்டும் என்பதுதான் எழுதுபவரின் நோக்கமும் எழுத்தின் வெற்றியும்.
உடனே அது நடக்காவிட்டாலும் காலதாமதமாக வேணும் அது சென்றடையும்.
தினசரி முகநூலில் ஏதாவது ஒரு பொருண்மை யில் கவிதை எழுதுகிறீர்.. அதற்கு வரவேற்பு எப்படி உள்ளது?
முகநூல் என்பது நம் சமூகத்தின் குறுக்குவெட்டுத் தோற்றம். நிறைய கற்றுக் கொள்கிறேன். மனிதர்களைப் புரிந்து கொள்ளவும் முடிகிறது.
அதிலும் குறிப்பாக ஒரு பெண் என்ற நிலையில்தான் அவர்கள் என்னைப் பார்க்கிறார்கள். அவர்களின் லைக்ஸ் - விருப்பக்குறிகள், அவர்களின் பின்னூட்டங்கள் எனக்குச் சொல்லிக் கொண்டே இருக்கிறது “நான் எதாக இருந்தால் அவர்களுக்கு பிடிக்கும் என்று”. பிரபலங்களோடு போட்டோ போடு. நீயும் விதம்விதமா போட்டோ போடு. முடிஞ்சா புதுசு புதுசா சமையல் குறிப்பு போடு.
உன் புருஷன், பிள்ளைங்க, பேரன் பேத்திகள் பற்றி போட்டோ போட்டு அவுங்க பிறந்த நாளையும் சமூகவெளியில் கொண்டாடு. இதெல்லாமாக நீ இருந்தாதான் எங்களுக்குப் பிடிக்கும்னு முகநூல் எனக்கு பல்வேறுவிதமாக உணர்த்துகிறது. முக்கியமா பொம்பளக்கு எதுக்கு அரசியலும் விமர் சனமும்னு கேட்குது? கவிதை எழுதினா காதலையும் இயற்கையையும் எழுது. நீ ஏன் வேறமாதிரி எழுதறனு கேட்டுட்டே இருக்கு? என்னை அவுங்க விரும்புகிற ஒரு சிமிழுக்குள் அடைத்து வைக்கப் பார்க்கிறது. ஆனா…
அப்படி எல்லாம் நானில்லைனு தெரிஞ்சவுடனே..எதுவும் சொல்லிக்காம விலக்கி வச்சிடுது!
கவிதைகள் எல்லாம் சரவணனிடம் பேசுவதா கவே உள்ளதே.. சரவணன் யார்? நிஜமா? கற்பனையா?
அதை எழுதும்போது சரவணன் ‘ நிஜம்'. எழுதி முடித்த பின் சரவணன் ஒரு கற்பனை.
அரசியலைக் கூர்ந்து கவனித்து வருகிறீர்.. இன்றைய அரசியல் சூழ்நிலை எப்படி உள்ளது?
மக்களாட்சியில் எதிரணி, எதிர்க்கட்சி என்பது ரொம்பவும் முக்கியம். அது வலுவாக இல்லை என்றால் ஜனநாயகம் அர்த்தமிழந்துவிடும். இந்திய அரசியல் என்பது இறையாண்மை கொண்ட துணை தேசிய அரசியலின் கூட்டாட்சி என்பது இன்றும் என் நம்பிக்கை. துணை தேசிய அரசியல் வலுவுடன் இருந்தால்தான் இந்தியாவின் பன்முகத் தன்மை பாதுகாக்கப்படும். இந்தியாவின் பன்முகத் தன்மைதான் இந்தியாவின் சிறப்பும் தனித்துவமும்.
ஒரு குடும்பத் தலைவியாக இருந்துகொண்டு இலக்கியத்தில் ஈடுபடுவதில் சிரமம் இல்லையா?
இருக்கு.. இல்லைனு சொல்லிட முடியுமா? என்னிடம் பலர் கேட்பார்கள் எப்போது எழுது கின்றீர்கள் என்று. என் இருபத்தைந்தாவது மணி நேரத்தில் எழுதுகிறேன் என்பேன். எனக்குனு எழுத்து மேசையோ நாற்காலியோ கிடையாது. வாங்குகிற புத்தகங்களை அடுக்கிவைக்க ஒரு புத்தக அலமாரி இன்னும் எனக்கு எட்டாத கனவுதான். விடியலுக்கு முன், என் விரல்கள் கணினியின் எழுத்துப்பலகையை வெளிச்சமின்றி அடையாளப்படுத்திக் கொள்ளும்.. இதெல்லாமும்தான் நானும் என் எழுத்தும்.
மும்பையில் இலக்கிய சங்கங்கள் உள்ளதா? சங்கங்களின் செயல்பாடு எவ்வாறு உள்ளது?
15 இலட்சம் தமிழர்கள் வாழ்வதாக பத்து ஆண்டுகளுக்கு முன் ஒரு புள்ளிவிவரம் இருந்தது. சற்றொப்ப 80 தமிழ் அமைப்புகள் மும்பையில் இருக்கின்றன. அதில் அவ்வப்போது செயல்படுபவை, லெட்டேர்பேட் அமைப்புகள் எல்லாமும் உண்டு. தமிழ்ச் சங்கங்கள் என்றால் பம்பாய்த் தமிழ்ச் சங்கம், (சயான்,) , நவிமும்பை தமிழ்ச் சங்கம், ஜெரிமேரி தமிழ்ச் சங்கம், டோம்பிவலி தமிழ்ச் சங்கம், கோரேகான் தமிழ்ச்சங்கம், அணுமின்சக்தி நகர் தமிழ்ச் சங்கம், பன்வெல் தமிழ்ச்சங்கம், மலாடு தமிழ்ச்சங்கம், பாண்டூப் திருவள்ளுவர் மன்றம், மராட்டிய மாநில தமிழ் எழுத்தாளர் மன்றம், தமிழ்க்கூடல், தமிழ் இலெமுரியா அறக்கட்டளை, ஜெய்பீம் அறக் கட்டளை, பகுத்தறிவாளர் கழகம், மகிழ்ச்சி மகளிர் பேரவை, இப்படியாக பல அமைப்புகளும் சங்கங்களும் இருக்கின்றன. என்ன செயல்பாடு என்று கேட்டால்… தமிழ்நாட்டிலிருந்து பிரபலங்கள் என்று அவர்கள் நம்புகின்றவர்களை விமானத்தில் அழைத்து வந்து கூட்டம் நடத்தி, அதை போட்டோ எடுத்துப் போட்டுக்கொள்வதில் பலர் மன நிறைவு அடைந்துவிடுகிறார்கள். இதையும் தாண்டி சில செயல்பாடுகள் பல இடர்ப்பாடுகளுக்கு நடுவில் தொடர்கின்றன.
விருதுகள் அறிவிக்கப்படும்போதே விமர்ச னங்களும் வருகிறதே..இது பற்றி தங்கள் கருத்து..?
நோ கமெண்ட்ஸ்.
இலக்கியத்தில் தங்கள் முன்னோடி யார்..?
கவிதைகளில் நாம்தேவ் தாசல், கட்டுரைகளில் அருந்ததிராய், ராமச்சந்திர குஹா, எப்போதும் மனசுக்கு நெருக்கமாக பாரதியும் காரைக்கால் அம்மை யாரும்.
இலக்கியத்தில் தங்களின் அடுத்த கட்ட நகர்வு என்ன?
எம் தாராவியை எழுத வேண்டும். தாராவி என்பது எம் சனங்களின் கதை மட்டுமல்ல. அது ஒரு காலத்தின் கதை. சின்னச் சின்ன சந்தோஷங்களில் எம் பெருவலிகளை மறந்து வாழ்க்கையைக் கொண்டாடிய கதை. தாராவி உங்களுக்கு குடிசை. ஊடகத்திற்கு ஸ்லெம்டாக் மில்லியனர். எங்களுக்கு எங்கள் சுயமரியாதையைக் கொடுத்த மித்தி நதிக்கரை. நிராகரிப்புகளையும் புறக்கணிப்புகளையும் கடந்து இப்பெரு நகரத்தின் மையமாக நாங்கள் நிற்பதை யாரும் மாற்றி எழுதிவிட முடியாது. அதுவே என் அடுத்தகட்ட நகர்வாக இருக்கும். இருக்க வேண்டும்.