வானம் எனக்கொரு போதிமரம்!
நாளும் எனக்கது சேதிதரும்!
திருநாள் நிகழும் தேதிவரும்!
ஒரு நாள் உலகம் நீதிபெறும்!
-என தன் தொடக்க நாளிலேயே தன்னைப் புதுமை வரிகளால் தமிழ்த் திரையுலகிற்கு அடையாளம் காட்டியவர் அவர். மாணவப் பருவத்திலேயே தன்னை ஒரு மகாகவி என்று செம்மாந்த மரபு வரிகளால் உணர்த்தி வியப்பூட்டியவரும் அவர்தான்.
எட்டு முழ வேட்டி, டிரங்குப் பெட்டி, செருப்பில்லாப் பாதங்கள். ஒரு கையில் இருநூற்று நாற்பது ரூபாயும் மறு கையில் கவிதை நோட்டுகளுமாகச் சென்னை எழும்பூரை வந்தடைந்த ஒரு கிராமத்து இளைஞர்தான் அவர். கலைமாமணி முதலாக ‘சாதனா சம்மான்’ விருது, சாகித்திய அகாதமி விருது, சிறந்த நூலுக் கான ஃபிக்கி விருது, சிறந்த பாடலாசிரி யருக்கான ஏழு தேசிய விருது, நாட்டின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ, பத்மபூஷன் முதலான எண்ணற்ற விருதுகளைச் சுமந்து கொண்டு வலம்வரும் அந்த அவர்தான், தமிழுக்கு இளரத்தம் பாய்ச்சும் கவிப்பேரரசு வைரமுத்து. அறிவுக்குப் போதையேற்றும் கவி வித்தகர்.
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகம், மதுரை காமராசர் பல்கலைக் கழகம், கோவை பாரதியார் பல்கலைக் கழகம் என்று பல்கலைக் கழகங்களின் மதிப்புறு முனைவர் பட்டங்களையும் சுமக்கின்றார். இந்த விருதுகளை விடவும் பட்டங்களை விடவும் மிக மிக உயரிய விருதாக, கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயம் என்னும் விருதைத் தம் ஒற்றை இதயத்தில் இதமாகச் சுமக்கின்றார். ஒரு பாடலாசிரியர் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டிருக்கும் வரலாறு பத்மஸ்ரீ கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு மட்டுமே உரித்தானது.
’சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன்’ என்று நூல் வடித்த கவிப்பேரரசு,. சொல்லைச் செதுக்கிச் செதுக்கி அதன் வழி காலம்கடந்தும் நிலையாக நிற்கக்கூடிய கலையாகத் தம்மையே செதுக்கிக் கொண்டவர். “சமூகம் உன்னை நினைக்க வேண்டும் என்று செயல்படாதே; சமூகத்தை நினைத்து நீ செயல்படு” என்று சொல்லாலும் செயலாலும் தமிழ்ச் சமுகத்தை நினைத்துச் செயல்பட்ட, கவிப்பேரரசு வைரமுத்துவின் இலக்கியப் பொன்விழாவைத் தமிழ்ச் சமுதாயம் கொண்டாடிக் கொண்டிருக்கின்றது. கூடவே அவரது 69-ஐயும்.
ராமசாமி-அங்கம்மாள் தம்பதியர் தமிழுக்குக் கொடுத்த உயிர்க்கொடை வைரமுத்து. பாமர மக்களுக்கு இவர் ஒரு திரைப்படப் பாடலாசிரியர். பண்டிதர்களுக்கு கவிஞர், கட்டுரையாளர், பயண இலக்கியப் படைப்பாளர், திறனாய்வாளர், வரலாற்று நூலாளர், சிறுகதை, புதினப் படைப்பாளர் என்றெல் லாம் பல்வேறு பரிணாமம் கொண்டிருப்பவர். கேட்டார்ப் பிணிக்கும் மயக்கூட்டும் பேச்சாளராகவும் மேடைகளை ஆண்டுவருகிறார். வைரமா முத்தா? என வியக்கும் வண்ணம் கவிதைப் படைப்பில் கம்பனுக்குப் பின்னும், திரைப்பாடல்களில் கண்ணதாசனுக்குப் பின்னும் தொடர்ந்து ஐம்பது ஆண்டு காலமாக அசைக்கமுடியாத பெரும் சக்தியாக நிலைத்து இருக்கின்ற மாபெரும் ஆளுமை வைரமுத்து.
“சொல்ல முடியாத சுமைகளை எல்லாம் இறக்கி வைப்பதற்குக் கவிதை என்ற சினேகிதனைத் தவிர ஜீவ நட்பு வேறு ஏதும் இல்லை. கவிதை என்பது மொழியின் முதிர்ச்சி. சொற்களின் ஒழுங்கமைப்பு” என்று கூறும் கவிப்பேரரசுக்குப் பதினொரு வயதில் என்ன மாதிரியான சுமைகளோ,. மகாகவி பாரதியாரைப்போல வைரமுத்துவும் தம் பதினொன்றாம் வயதில் கவிதை எழுதத் தொடங்கினார். பதினான்கு வயதில் யாப்பை முழுமையாகக் கற்றுத்தேர்ந்தார். இவரது பதினாறு வயது இளம் நெஞ்சின் ஏக்கம், தேன் மழையில் நனைந் தது. தேன்மழை இதழில் அதே தலைப்பில் முதல் முதலில் முகம்காட்டியது கவிப்பேரரசு என்ன
வானம் எனக்கொரு போதிமரம்!
நாளும் எனக்கது சேதிதரும்!
திருநாள் நிகழும் தேதிவரும்!
ஒரு நாள் உலகம் நீதிபெறும்!
-என தன் தொடக்க நாளிலேயே தன்னைப் புதுமை வரிகளால் தமிழ்த் திரையுலகிற்கு அடையாளம் காட்டியவர் அவர். மாணவப் பருவத்திலேயே தன்னை ஒரு மகாகவி என்று செம்மாந்த மரபு வரிகளால் உணர்த்தி வியப்பூட்டியவரும் அவர்தான்.
எட்டு முழ வேட்டி, டிரங்குப் பெட்டி, செருப்பில்லாப் பாதங்கள். ஒரு கையில் இருநூற்று நாற்பது ரூபாயும் மறு கையில் கவிதை நோட்டுகளுமாகச் சென்னை எழும்பூரை வந்தடைந்த ஒரு கிராமத்து இளைஞர்தான் அவர். கலைமாமணி முதலாக ‘சாதனா சம்மான்’ விருது, சாகித்திய அகாதமி விருது, சிறந்த நூலுக் கான ஃபிக்கி விருது, சிறந்த பாடலாசிரி யருக்கான ஏழு தேசிய விருது, நாட்டின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ, பத்மபூஷன் முதலான எண்ணற்ற விருதுகளைச் சுமந்து கொண்டு வலம்வரும் அந்த அவர்தான், தமிழுக்கு இளரத்தம் பாய்ச்சும் கவிப்பேரரசு வைரமுத்து. அறிவுக்குப் போதையேற்றும் கவி வித்தகர்.
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகம், மதுரை காமராசர் பல்கலைக் கழகம், கோவை பாரதியார் பல்கலைக் கழகம் என்று பல்கலைக் கழகங்களின் மதிப்புறு முனைவர் பட்டங்களையும் சுமக்கின்றார். இந்த விருதுகளை விடவும் பட்டங்களை விடவும் மிக மிக உயரிய விருதாக, கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயம் என்னும் விருதைத் தம் ஒற்றை இதயத்தில் இதமாகச் சுமக்கின்றார். ஒரு பாடலாசிரியர் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டிருக்கும் வரலாறு பத்மஸ்ரீ கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு மட்டுமே உரித்தானது.
’சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன்’ என்று நூல் வடித்த கவிப்பேரரசு,. சொல்லைச் செதுக்கிச் செதுக்கி அதன் வழி காலம்கடந்தும் நிலையாக நிற்கக்கூடிய கலையாகத் தம்மையே செதுக்கிக் கொண்டவர். “சமூகம் உன்னை நினைக்க வேண்டும் என்று செயல்படாதே; சமூகத்தை நினைத்து நீ செயல்படு” என்று சொல்லாலும் செயலாலும் தமிழ்ச் சமுகத்தை நினைத்துச் செயல்பட்ட, கவிப்பேரரசு வைரமுத்துவின் இலக்கியப் பொன்விழாவைத் தமிழ்ச் சமுதாயம் கொண்டாடிக் கொண்டிருக்கின்றது. கூடவே அவரது 69-ஐயும்.
ராமசாமி-அங்கம்மாள் தம்பதியர் தமிழுக்குக் கொடுத்த உயிர்க்கொடை வைரமுத்து. பாமர மக்களுக்கு இவர் ஒரு திரைப்படப் பாடலாசிரியர். பண்டிதர்களுக்கு கவிஞர், கட்டுரையாளர், பயண இலக்கியப் படைப்பாளர், திறனாய்வாளர், வரலாற்று நூலாளர், சிறுகதை, புதினப் படைப்பாளர் என்றெல் லாம் பல்வேறு பரிணாமம் கொண்டிருப்பவர். கேட்டார்ப் பிணிக்கும் மயக்கூட்டும் பேச்சாளராகவும் மேடைகளை ஆண்டுவருகிறார். வைரமா முத்தா? என வியக்கும் வண்ணம் கவிதைப் படைப்பில் கம்பனுக்குப் பின்னும், திரைப்பாடல்களில் கண்ணதாசனுக்குப் பின்னும் தொடர்ந்து ஐம்பது ஆண்டு காலமாக அசைக்கமுடியாத பெரும் சக்தியாக நிலைத்து இருக்கின்ற மாபெரும் ஆளுமை வைரமுத்து.
“சொல்ல முடியாத சுமைகளை எல்லாம் இறக்கி வைப்பதற்குக் கவிதை என்ற சினேகிதனைத் தவிர ஜீவ நட்பு வேறு ஏதும் இல்லை. கவிதை என்பது மொழியின் முதிர்ச்சி. சொற்களின் ஒழுங்கமைப்பு” என்று கூறும் கவிப்பேரரசுக்குப் பதினொரு வயதில் என்ன மாதிரியான சுமைகளோ,. மகாகவி பாரதியாரைப்போல வைரமுத்துவும் தம் பதினொன்றாம் வயதில் கவிதை எழுதத் தொடங்கினார். பதினான்கு வயதில் யாப்பை முழுமையாகக் கற்றுத்தேர்ந்தார். இவரது பதினாறு வயது இளம் நெஞ்சின் ஏக்கம், தேன் மழையில் நனைந் தது. தேன்மழை இதழில் அதே தலைப்பில் முதல் முதலில் முகம்காட்டியது கவிப்பேரரசு என்னும் மகா விருட்சத்தின் முதல் துளிர். ‘தேன்மழை’ தான் அச்சில் இடம்பிடித்த கவிப்பேரரசின் முதல் கவிதை. இன்று அந்தத் துளிர் மாபெரும் விருட்சமாகி இலக்கியத்தில் பொன்விழா ஆண்டில் திளைத்துக் கொண்டிருக்கிறது.
“கவிஞன் தன்னை இருபது வயதுக்குள் அடயாளம் காட்டாவிட்டால், அவன் கவிஞனே ஆகமுடியாது” என்று பிரெஞ்சுக் கவிஞர் பாடிலெர் கூறுவார். இருபதுக் குள் தம்மை முழுமையாக அடையாளம் காட்டியவர் வைரமுத்து. இவர் பதினேழு வயதில் எழுதிப் பத்தொன்பது வயதில் வெளியிட்ட நூல் ‘வைகறை மேகங்கள்’. மழலைப் புறப்பாட்டின் ’கன்னி முத்திரை’ என்று இந்நூலைச் சொல்லவேண்டும் என்பார் இந்திரா பார்த்த சாரதி. சந்தக் கவிதைகளால் நிறைந்த இந்தக் கவிஞரின் காதல் சிந்து, கவியரசர் கண்ணதாச னின் உச்சி முகர்தலோடு வெளியிடப் பட்டு இளைய சமுதாயத்தின் இதயச் சிம்மாசனத்தில் செம்மாந்து அமர்த்தியது. மாணவராக இருக்கும் ஒருவரின் படைப்பு, மாணவர்களுக்குப் பாடமாக இருந்த வரலாறும் இக்கவிஞருக்கே உரியது. இந்நூல் நாற்பதுக்கும் மேற்பட்ட பதிப்புகளைக் கண்டது.
சமுதாயத்தில் புரையோடிக் கிடக்கின்ற ஒரு மரபை, பல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கோட்பாட்டை மாற்றுவது என்பது கடும்முயற்சியும், அஞ்சாநெஞ்சமும் கொண்ட ஒருவரால் மட்டுமே இயல்வது. அம்மாற்றத்தை எடுத்து மொழியவும் எதிர்ப்புகளையும், விளைவுகளையும் எதிர்கொள்ளவும் கூட வைரம்பாய்ந்த நெஞ்சம் வேண்டும். வைரம்பாய்ந்த நெஞ்சத்துணிவோடு பச்சையப்பன் கல்லூரியில் இளங்கலை இரண்டாமாண்டு படிக்கும் காலத்தில் அவர் எழுதிய கவிதைதான் ‘கருப்பு நிலா’.
கற்புக்கரசி கற்புக்கரசி என்று கண்ணகியை அறிஞர்களும் பேராசிரியர்களும் வந்தனை செய்துகொண்டிருந்த அக்காலத்தில், காவியத்தில் உனைக்கண்டு கண்ணீரா நான் வடித்தேன்? ஆவி சிலிர்த்தேனா? அல்ல சிரித்துவிட்டேன்.
அந்திப்பூ விரிவதுபோல் அறிவை விரித்து வைத்து சிந்தித்தேன் ஆமாம்! சிரிப்புத்தான் வந்ததம்மா!
உள்ளபடி உன்வாழ்க்கை உலகுக் குதவாத செல்லுபடி ஆகாத சிறுகாசு தானென்பேன்!”
-என்று திறனாய்வு செய்ததன் விளைவாகக் கண்ணகியை நிந்தனை செய்து இளைய சமுதாயத்தின் இதயத்தில் இன்னும் அழுத்தமாக இடம்பிடித்தார். அதேவேளையில் ஒட்டுமொத்த பேராசிரியர்களின் எதிர்ப்புகளையும் சந்தித்தார்.
பாவாட சட்டையே
பரமசிவன் கொடுத்த வரம்
சக்களத்தி மகளேநான்
தாவணிக்கு என்னபண்ண?
தாவணி வேணுமின்னா
தாய்மாமன் வரவேணும்
தாய்மாமன் வரனுமின்னா
ஜாமீனில் வரவேணும்
இந்த லட்சணத்தில்
ஏன்டியம்மா குத்தவச்ச?”
-என்ற இந்தக் கேள்வியைப் படிக்கும் மனத்தில் இரத்தம் கசியவைக்காதா?
“நதிக்கரை ஓரத்து நகரம்
வெள்ளப் பெருக்கை எதிர்பார்த்து
விழிப்போடிருப்பது போல்
எப்போது விழிப்பாய் இரு”
என்னும் வித்தியாசமான தாலாட்டை, என்னென்னவோ கனவுகளும் கற்பனைகளும் கண்ட தோழிகள்,
ஒம்புள்ள ஒம்புருசன்
ஒம்பொழப்பு ஒன்னோட
என்புள்ள எம்புருசன்
எம்பொழப்பு என்னோட”
என்று சோகத்துடன் பேசித் தீர்த்த தோழிமார் கதையை, சிறகாயணத்தை, இலக்கணக் காதலை, இன்னபிற கவிதைகளை எத்தனை முறை படித்தாலும் மூளையில் இலேசாகப் போதை ஏறுவதை எல்லோரும் உணர்வார்கள்.
“எனக்குச் சுயம் உண்டே தவிர சரிதம் கிடையாது” என்று ‘
இதுவரை நான்’ என்னும் தன்
வரலாற்று நூலின் முன்னுரையில் சொன்னாலும் அவரது இருபத்தி எட்டாவது வயதில், சுயசரிதையைப் படைக்கும் அளவுக்குத் தமிழ் அவரை உயர்த்தியது. அல்லது தமிழை அவர் உயர்த்தினார்.
இராமாயணம், மகாபாரதம் போல இந்தப் படைப்பாளியின் விரல்வழி கிளர்ந்த இதிகாசங்கள் கள்ளிக்காட்டு இதிகாசமும் கருவாச்சி காவியமும். இவற்றை இரட்டைக் காப்பியங்கள் என்பர்.
வைகை அணை பிறப்பதற்காக மெட்டூரில் பிறந்தவர்கள் தம் சொந்த மண்ணை காலி செய்து விட்டு அகதிகளாகக் கிராமத்தோடு குடிபெயர்ந்த கண்ணீர் வரலாறு ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ என்னும் புதினமாக உருவானது. கதை மாந்தர்கள் பேயத்தேவன், அழகம்மா, மொக்கராசு, மகள்கள் செல்லத்தாயி, மின்னல் ஆகியோர். எப்போது நினைத் தாலும் சிலிர்க்கவைப்பார்கள். பேயத்தேவரும் மொக்கராசுவும் நக்கல் பேச்சோடு வாசகனின் கண்களில் வந்துபோவார்கள். இந்த இதிகாசம் 2003-ல் சாகித்ய அகாதமி விருது பெற்றது.. சாகித்ய அகாதமியால் இருபத்தி மூன்று இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்படும் வரலாறும் இந்நூலின் பெருமை. அதாவது இந்தப் படைப்பாளி வைரமுத்துவின் பெருமை. இந்நூலின் இந்தி மொழிபெயர்ப்பு சிறந்த புத்தகத்துக்கான ‘ஃபிக்கி’ விருதினைப் பெற்றது.
கவிஞரின் முதல் புதுக்கவிதை படைப்பு ’திருத்தி எழுதிய தீர்ப்புகள்’. முதல் புதினம் ’வானம் தொட்டுவிடும் தூரம்’தான். இது வெற்றிபெற்ற திரைப்படமாகவும் வலம்வந்தது. அறச்சீற்றம் கொண்ட ஆவேசக் கவிதைகளால் நிரம்பிய ‘திருத்தி எழுதிய தீர்ப்புகள்’, கவிதை மொழியில் இடம்பெற்ற நீலக்கடலின் அற்புதங்கள் அடங்கிய காவியம் ‘தண்ணீர் தேசம்’, கலை ஆளுமைகள் பற்றிய ‘என் ஜன்னலின் வழியே’, தமிழ்த் திரைப்படங்கள் பற்றிய ‘மௌனத்தின் சப்தங்கள்’, தமிழ் இலக்கிய ஆராய்ச்சி நூலான ‘கல்வெட்டுக்கள்’, மரபுக்கவிதைகள் நிரம்பிய கல்லூரி காலத்தில் எழுதிய ‘என் பழைய பனை ஓலைகள்’ போர்க்குணம் மிக்க புதுக்கவிதைகளால் ஆன ‘கொடிமரத்தின் வேர்கள்’, இளைஞர்களின் எழுச்சிக்காகப் படைத்த ‘கேள்விகளால் ஒரு வேள்வி’, ‘சிற்பியே உன்னை செதுக்குகிறேன்’ என்னும் சுய முன்னேற்றக் கட்டுரைகளின் தொகுப்பு, திரைப்பாடல்கள் பிறந்த சூழலைச் சுவையாகச் சொல்லும் ‘நேற்று போட்ட கோலம்’ மொழிபெயர்ப்புக் கவிதைகளால் விரியும் ‘எல்லா நதியிலும் என் ஓடம்’, ஆளுமைகளின் அழுத்தமான வரலாற்றைச் சொல்லும் ‘காவி நிறத்தில் ஒரு காதல்’, தமிழர்களின் பண்பாட்டுக் கருவூலமான வரலாற்றுப் புதினம் ‘வில்லோடு வா நிலவே’, கவிஞர் என்பது மாறி கவிப்பேரரசு என்று கலைஞர் கனிவாக அழைக்கக் காரணமான ‘பெய்யெனப் பெய்யும் மழை’, வடுகப்பட்டி முதல் வால்கா வரை பயணித்த கவிஞரின் அனுபவப் பிழிவான ‘ஒரு கிராமத்துப் பறவையும் சில கடல்களும்’ என்னும் பயண நூல், ஓர் இந்திய உழவனின் வாழ்வியலை உள்ளூர் மொழியில் எழுதிய ‘மூன்றாம் உலகப்போர்’, நுட்பமான வாழ்வியல் சிந்தனைகளால் பின்னப் பட்ட ‘வைரமுத்து சிறுகதைகள்’, மூவாயிரம் ஆண்டுகளாகத் தமிழை வளர்த்தவர்களை எழுத்தோவியமாக வரைந்த ‘தமிழாற்றுப்படை என்று நீளும் இவரது நூல் பட்டியலில் முப்பத்தி மூன்று நூல்கள் இடம்பிடிக்கின்றன. இவரது படைப்புலகில் நுழைந்து வெளிவர ஒரு பிறவி போதாது. அத்தனையும் ஆழ்கடலின் பவளப்பாறையென, அதில் உலாவரும் வண்ண மீன்களென, புரண்டுவரும் சிப்பிகளுக்குள் புதைந்துள்ள முத்துக்களென அழகியல் காட்டுவன.
இலக்கியம் கவிஞரின் ஒருமுகம் என்றால் திரைப்படப் பாடல்கள் கவிஞரின் திருமுகம். மெட்டுக்குப் பாட்டுப் படிப்பதற்காகவே மெட்டூரிலிருந்து புறப்பட்டு வந்தது இந்தப் பாட்டுப் பறவை. வானமகள் நாணும் ஒரு பொன்மாலையில் தொடங்கியது இந்தப் பறவையின் சிறகடிப்பு.
இசை இன்றி எவரும் வாழ்க்கையைக் கடந்துவிட முடியாது. ஆனால் இசை மட்டுமே செவிகளுக்கு இன்பத்தைத் தந்துவிடாது. இசையோடு கூடிய சொற்களே மக்களின் ரசனைக்குள் போதையை ஏற்றுகிறது. குறிப்பாகத் தமிழ் மக்கள் அன்றும் இன்றும் என்றும் பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டத்தை ருசிப்பதைப் போலவே சொல்லுக்குள் பொதிந்து வைக்கும் சூட்சுமங்களை ரசித்து ரசித்து அனுபவிப்பவர்கள். அந்தவகையில் வெற்றிபெற்றவர்கள் கவியரசர் கண்ணதாசனும் கவிப்பேரரசு வைரமுத்துவும். கவியரசருக்கு இலக்கியத் தமிழ் என்றால் கவிப்பேரரசுவின் தமிழ் இயற்கையோடு தம்மை இணைத்துக் கொண்டவை.
மெட்டுப் போடு மெட்டுப் போடு என் தாய் கொடுத்த தமிழுக்கில்லை தட்டுப்பாடு மெட்டுப் போடு மெட்டுப் போடு அட கடலுக்குண்டு கற்பனைக்கில்லை கட்டுப்பாடு”
என்று மெட்டுப் போட வைத்து அந்த மெட்டில் தமிழையும் கற்பனையையும்; கலந்து ரசிகர்களை, ஆத்தாடி மனசுக்குள்ள காத்தாடி பறந்ததா? ஒலகமே மறந்ததா?”
என்று கேட்டு உலகையே மறக்கடிக்கும் போதையில் ரசிகர்களைத் திளைக்கச் செய்வார். கதைக்களத்துக்கு மட்டுமல்லாமல் எப்போதும் எங்கும் யாவருக்கும் பொருந்தும் வகையில் காதலை, வீரத்தை, தன்னம் பிக்கையை, தத்துவத்தை என்று எல்லாவற்றையும் அந்தந்த உணர்வுகளுக்கு ஏற்பப் பேசும். கேட்கும் பாடல்களில் இது கவிப்பேரரசு வைரமுத்து பாடல் என்று கண்டுபிடிக்கும் சூட்சுமத்தைப் பொதிந்து வைத்திருப்பார்.
கவிப்பேரரசு வைரமுத்துவின் திரையிசைப் பாடல்கள் வானின் நீலத்தால் மேகத்தில் காதல் கடிதம் தீட்டும் கலையைக் காதலர்க்குக் கற்றுத்தரும். சந்திர சூரியர்களை அஞ்சல்காரர்களாக்கும் அற்புதத்தைக் கற்றுத் தரும்.
பொன்னே உன் கடிதத்தைப்
பூவாலே திறக்கின்றேன்
விரல் பட்டால் உந்தன்
ஜீவன் காயம் படுமல்லோ”
என்று காதலியின் கடிதத்தைக் கையால் திறக்காமல் பூவால் திறக்கும் மென்மைக் காதலைக் கற்றுத்தரும்.
புத்தம் புது பூமி வேண்டும்
நித்தம் ஒரு வானம் வேண்டும்
தங்க மழை பெய்ய வேண்டும்
தமிழில் குயில் பாட வேண்டும்
புன்னகை எங்கள் தாய்மொழி
என்று வரம் கொடு”
என்று தமிழ் மொழி யின் பக்கமும்,
பூமியை வெல்ல ஆயுதம் எதற்கு
பூப்பறிக்கக் கோடரி எதற்கு?
பொன்னோ பொருளோ போர்க்களம் எதற்கு?
ஆசை துறந்தால் அகிலம் உனக்கு’
என்று அகிம்சையின் பக்கமும் விதியை நினைப்பவன் ஏமாளி அதை வென்று முடிப்பவன் அறிவாளி”
என்று தன்னம்பிக்கையின் பக்கமும்,
முப்பதுக்கு மேல உனக்கு
முடி உதிருது - அட
நாப்பதுக்கு மேல பார்வ
நடுக்கமாகுது
அம்பதுக்கு மேல பல்லு
ஆடிப் போகுது - அட
அறுபதுக்கு மேல ஆன்மா
அடங்கிப் போகுது
ஒடம்போட பொறந்ததெல்லாம்
உன்ன பிரியுது - இதில
உன் கூட பிறந்ததுவா
இருக்க போகுது?”
என்று தத்துவத்தின் பக்கமும்
உழவன் வீட்டுத் தேனும் கூட
உப்புக்கரிக்கும்
அதில் கண்ணீர் மிதக்கும்”
என்று உழவனின் ஏழ்மையின் பக்கமும் முந்நூற்று அறுபது டிகிரியிலும் சுற்றிச் சுழன்று தம் சிறகை விரித்துப் பறந்த பாட்டுப் பறவை கவிப்பேரரசு. ஆம் ஊஸ்ங்ழ்ஹ்ற்ட்ண்ய்ஞ் ன்ய்க்ங்ழ் ற்ட்ங் நன்ய் என்பதுதான் கவிப்பேரரசு.
கனா கண்ட கவிஞர் பொன்விழாக் காணும் வேளையில் இதயம் தொட்ட ரசிகர்களின் இன்ப வானம் தொட்ட பாடல்கள் ஓராயிராமா? ஈராயிரமா? ஏழாயிரத்து ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்கள். கவிஞரின் பொன்விரல் அதிகமாக எழுதிய சொல் ‘பல்லவி’.
அந்தப் பல்லவிகளை மட்டும் எழுதினாலும் ஏழாயிரத்து ஐந்நூறு வரிகள் ஆகுமே..
பைத்தியமாகப் பருவ வயதினைரைச் சுற்றவிடும் காதல் பாடல்களை இப்போதும் எப்போதும் தந்துகொண்டே இருப்பவர் இந்தக் கரிசல் காட்டுக்காரர். திரைப்படப் பாடல்களில் இயற்கையைப் புகுத்தி புதுமை புரிந்ததைப் போலவே கவிப்பேரரசு வைரமுத்து சின்னத்திரையிலும் தம் கவிவரிசையைக் காட்டியுள்ளார்.
மெல்லிசைப் பாடல்கள், பக்தி இசைப் பாடல்கள் அல்லது தொடர்களின் தொடக்கப் பாடல்கள் என்று மட்டுமே சின்னத்திரையில் பாடல்கள் இடம்பெற்று வந்தபோது ‘நாட்படு தேறல்’ என்னும் புதுமையான படைப்பால் சின்னத்திரையிலும் பிரம்மாண்டம் படைத்துள்ளார். பாட்டுத் தமிழைத் தொகையாகக் கொடுக்கும் நூறு பாடல்களின் தொகுதி, நூறு பாடல்களைக் கடந்து இரண்டாவது பருவம் வந்துகொண்டிருக்கிறது. நூறு பாடல்களுக்கும் நூறு இசையமைப்பாளர்கள், நூறு பாடகர்கள், நூறு இயக்குநர்கள் என்று புதுமை படைத்து வருகின்றார்.
கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு அவர்தான் கவிப்பேரரசு. கொஞ்சம் பழமை; கொஞ்சம் புதுமை அவர்தான் கவிப்பேரரசு. எப்படி? முக்கனியில் பனிக்கூழைக் குழைத்துக் கொடுத்த சுவை அது. அதற்குச் சான்றுதான் பழமையைப் புதுமையில் குழைத்துக் கொடுத்த பின்வரும் காவடிச் சிந்துப் பாடல். சொற்களும் சந்தமும் இசையும் சுற்றிச் சுற்றி வந்து காதிலும் கருத்திலும் சிலம்பம் ஆடுகின்றன. காதலியைக் கேசாதி பாதமாக வர்ணிக்கும் அற்புதச் சிந்து இது. பழந்தமிழ்ப் பா வகையை, செய்யுள் இலக்கணத்தை அழகிய எளிய நடையில் பயிற்றுவித்த அல்லது மீட்டுருவாக்கித் தந்த புதுத்தமிழ்ப் பாட்டு.
கொண்டல் மேகம் ஒன்று
கொண்டை ஏறி நின்று
கொண்டுலாவும் குழலாள்
பிறை கொண்டு வார்த்த நுதலாள்
வெள்ளிக் கெண்டை மீன்கள் ரெண்டு
முண்டித் தாவி வந்து
சண்டைபோடும் விழியாள்
என் ரெண்டு கண்ணில் அழியாள்”
-பாடலின் ஒவ்வொரு சொல்லும் குரலோடும் இசையோடும் காட்சியோடும் சேர்ந்து .இதயத்தின் ஆழத்தில் சென்று உயிரை உருக்குகின்றது. அல்லது உலுக்குகிறது. இந்த நாட்படு தேறலை மாந்தியவர்கள் பூமியில் மோட்சம் காண்பார்கள் என்பது உறுதி.
வைரத்தாலும் முத்தாலும் இயற்றிய புதிய புதிய அழகு அணிகலன்களைத் தமிழன்னைக் குப் பூட்டிக்கொண்டே இருப்பவர் கவிப்பேரரசு.
அவ்வகையில் எப்போதும் தமிழ் உணர்வாளர்களின் உயிர்ப்பைக் கூட்டிக்கொண்டிருப்பவர். ஐம்பது ஆண்டுகளின் அசகாயச் சாதனையை நான்கு பக்கங்களில் எழுதுவது என்பது கடல் நீரைக் கையால் அருந்துவதுபோல். ஆகவே இது சாதனைப் பட்டியல் அல்ல. “கவிப்பேரரசு ஒரு தனிமனிதர் அல்லர்; தமிழின் தலையாய நிறுவனம்; இளைஞர்கள் இதயங்களில் செதுக்கிக்கொள்ள வேண்டிய இதிகாசக் கல்வெட்டு” என்பார் வார்த்தைச் சித்தர் வலம்புரி ஜான். டிவிட்டரின் கீச்சுகள்போல் நான்கு வரிகளுக்குள்ளேயே படிக்கப் பழகிப் போன இளைய சமுதாயம் விட்டுவிடாமல் அல்லது கடினப்படாமல் இந்தச் சாதனை சரித்திரத்தைச் சற்றே புரட்டிப் பார்த்து இதயத்தில் செதுக்கிக் கொள்வதற்காகவே இந்த கட்டுரை.
கவிப்பேரரசு வைரமுத்து நம் காலத்து வாழும் வரலாறு. அவர் வாழும் காலத்தில் வாழ்கிறோம்;
அவரைக் கண்ணுறும் பேற்றைப் பெற்றிருக்கிறோம்;
அவர் சுவாசிக்கும் காற்றைச் சுவாசிக்கிறோம்;
அவரை அணுகவும் அன்பைப் பெறவும் வாய்க்கப் பெற்றிருக்கிறோம்; அவரை வாழ்த்தும் அரும்பேறு பெற்றிருக்கிறோம். இது எங்களின் பெருமைக்குச் சான்றல்ல. அந்த வரலாற்று நாயகனின் எளிமைக்குச் சான்று.
இலக்கியத்தில் தடம்பதித்துப் பொன்விழா காணும் பத்மஸ்ரீ வைரமுத்து அவர்களின் உள்ளப் பேனாவில் இன்னும் சில பொன்விழாக்களுக்குத் தேவையான மை சுரக்கட்டும்! எழுதித் தீராது இன்சுவைக் கவிதைகள் பிறக் கட்டும்! வாசித்து வாசித்து வாசகனின் அறிவு வாசல் சிறக்கட்டும். வாழ்க நீவிர் பல்லாண்டு என்று தாலாட்டு நன்னாளில் தலைவணங்கி வாழ்த்துகிறோம்!