"கருத்து என்ற விஷயம் உருவம் எடுக்கின்ற அளவில் முக்கியமானது. கலை உருவம் பெற்ற கருத்து வெறும் தத்துவ உருவம் பெற்ற எழுத்தைவிட முக்கியமானது.
ஆகவேதான் ஏசுவின் உபதேசங்கள் கூட PARABLE ளுக்கு இருக்கிற முக்கியத்துவம் வெறும் சிந்தனைகளுக்கு இல்லை"
-க.நா.சு.
சகலவிதமான கல்யாண குணங்களையும் கொண்டவராக தஞ்சை ப்ரகாஷ் என்ற ஆசானைச் சொல்லலாமா? என்ற கேள்வி உண்டு. புகழை ஏற்காத ஒரு மனிதரின்மேல் நூறு கேள்விகள் இருக்கும் என்பது உள்ளதுதான்.
இலையுதிர் காலமேகம் உறுமும். ஆனால் மழைவராது. மழைக்கால மேகம் நீர்பொழியும் இடி முழங்காது என்பதுதான் சரியாக இருக்கும்.
சிலநேர அவரது மௌன இடைவெளியில் நிறைய எதிர்மறையான விஷயங்களைச் சொல்வர். அப்போது அவர் பதில் சொன்னதில்லை. இப்போதும் இவரின்மேலான விமரிசனம் இருக்கவே செய்கிறது. பதில் சொல்ல நாங்கள் இருந்தாலும் அவரது எழுத்தே அவருடைய ஏற்ற பதிலைச் சொல்லக்கூடும்.
அவருடனான ஒவ்வொரு சந்திப்பும் புதுப்பொலிவானது. மனிதர்களைப் படித்ததனால் அவர் எழுத்தில் வெளிப்படையான உலகத்தை கூச்சம் துளியின்றிச் சொல்ல முடிந்தது. புதிர்கள் தொலைத்தது. வாசிக்கும் ஒவ்வொரு எழுத்தும் அவரது உச்சம் என்று சொல்லவைத்தது.
"கள்ளம்" என்பது மனிதனின் கள்ளம்தான். தஞ்சாவூரின் சித்திரப்படக்காரர்களின் வாழ்வியல் கள்ளம்தான். அதுதான் இன்னும் குரூரமானது.
அசிங்கமான உள்ளடக்கம் கொண்டது.
அப்பட்டமான அந்த வாழ்வைச் சித்தரிப்பதில் நம்பிக்கையில்லை என்பதற்குக் காரணம் இந்தக் குரூரம்தான்.
தமிழ் அவற்றை வாங்கிக்கொள்ளத் தயாரில்லை. காரணம் தமிழின் போலித்தன்மை. தஞ்சை சித்திரப்படக் கலைஞர்களில்-
அரண்மனை புறாக்களாகிப்போன பெண்களில் ரூபாய்க்குக்கூட விற்கப்படும் தாழ்ந்த ஜாதிப் பெண்களில் - தஞ்சாவூர் இடிசல் அரண்மனைக் குப்பை கூளங்களில்-,இனியும் சாகமறுத்து வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களின் பேராசைதான் கள்ளம் என்று உரக்கவே சொல்வார்.
இல்லாத புனிதத்தை இவர்கள் வாழ்வில் பெய்து மனிதாபிமானம் கொள்ளவைப்பதோ ஆண் பெண் ரகசியங்களின் திரை நீக்கி உண்மை காண்கிற சத்தியத் தேடலோ கிடையாது. லேசில் இணக்கம் ஆகாத ஒரு தமிழ் வாழ்க்கையை இங்கே அப்படியே சொல்லி இருக்கிறேன் என்பது ப்ரகாஷ்.
ரங்கமணியோ அவன் காதலிக்கும் கதையின் பெண்களோ காமத்திற்காக மட்டுமே சோரம்போனவர்கள் இல்லை. இது அசிங்கம் - யோக்யர்களின் உலகம் சொல்வது.
சோரம் வாசிப்பனிடத்தில்தான்.
பெருமாள் ஸ்டோரில் எல்லாம் இயல்பாகவே நடக்கிறது. மீன்களுக்குச் சிறகுகள் உண்டா? மீன்கள் பறக்குமா? பறக்கலாம். பறக்கும். தஞ்சை ப்ரகாஷ் சொல்வார்."சிறகுகள் பறப்பதற்குத்தான் மீனாயிருந்தால் என்னவாம்' *கள்ளம்* வாழும் தந்திரம். கனவல்ல நிஜம். தஞ்சாவூர்க் கலைகள் நொறுங்கிக் கொண்டிருக்கின்றன. கலைகள் வாழமறுத்து சிதைந்து கொண்டிருக்கின்றன. இடிந்து விழுந்து கொண்டே இருக்கும் அரண்மனை, மறந்துகொண்டிருக்கும் புரவியாட்டம் , களையிழந்துபோன மராத்திய ஜம்னாபாய்கள். சிதைவுகளும் கலையே.
ப்ரகாஷ் அதிரடியாக சிலவற்றை எழுதினார். வாசகனை அதிர்ச்சிக்குள்ளாக்குவது நோக்கமல்ல. ஆனால் இயல்பான அவரது எழுத்து, வாசகனை நிலைகுலைய வைத்தது. புன்னகைக்கக்கூட முயற்சி செய்துகொண்டிருக்கும் காலத்தில் நிஜமான உலகத்தைக் காட்டினார்.
காமம், செக்ஸ் எழுத்து, சரோஜாதேவி எழுத்து என்று தன் எழுத்து விமரிசிக்கப்படுவதை அவர் கண்டுகொள்ளவே இல்லை. மோக அனுபவம், ஆசைஅனுபவம், காதல் அனுபவம் என ஒவ்வொன்றிற்கும் ஓர் அடிப்படையான அனுபவம்தான். இந்த அடிப்படையைக் கடந்துவிட வேண்டும். யாருமே இந்த உலகத்தில் பக்குவத்துடன் அடியெடுத்து வைப்பதில்லை. வாழ்வின் மீது பொய்யான வண்ணம் தீட்டுதல் பொய்மையானது.
ப்ரகாஷ் உண்மையை வரவேற்க எப்போதும் தயாராக இருந்தார்.
தஞ்சை ப்ரகாஷ் என்ற ஆசானை இன்னும்கூட முழுமையாக வாசிக்கவில்லை. அலுக்காத தன்மைதான் காரணம். பிறர் தன்னிடம் எதிர்பார்ப்பதைச் செய்யாதவர் என்பது விசேஷ இலக்கிய மேன்மைதான்.