நீலவானின் நீளத்தையும், ஆழ்கடலின் ஆழத்தையும் விஞ்சியதாய் விரிந்து கிடக்கிறது தமிழிலக்கியத்தின் வரலாற்றுப் பெருவெளி. தொன்மைமிகு நூலான தொல்காப்பியமே, அதற்கு முன்னால் ஆயிரக்கணக்கான நூல்கள் அருந்தமிழில் இருந்ததற்கான ஆவணமாக அமைகிறது.

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளின் பரப்பில் விரிந்திலங்கும் தமிழிலக்கியத்தின் கருவும் உருவும், காலந்தோறும் மாறி வந்திருக்கின்றன. சைகைமொழி ஓசையாகி, ஓசை ஒழுங்குற்று, எழுத்தாகி, சொல்லாகி சொற்றொடராகி, செவ்வியல் வடிவத்தைப் பெறுகிற ஒரு மொழியின் பயணம் மிக நீண்டது.

செவ்வியல் வடிவம் பெற்ற உலகின் மூத்த முதன்மொழி என்று மொழியியலாளர்களால் உச்சிமேல் வைத்து மெச்சப்படும் நம் தமிழ்மொழியின் பழைய இலக்கியங்கள் அனைத்தும் செய்யுள் வடிவிலேயே அமைந்திருப்பது சிந்தனைக்குரியது.

செய்யுள் வடிவத்தில் மாந்த இனம் அன்றாடம் தனக்குள் உரையாடி வாழ்ந்திருக்க முடியாது.

Advertisment

ஆனால், அவர்களிடையே செய்யுள் வடிவிலேயே எல்லாப் பொருள் குறித்த நூல்களும் உருவாகியுள்ளன. நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் உரைநடை நூல் இல்லை.

தமிழின் முதன்மைக் காப்பியம் என்றும், குடிமக்கள் காப்பியம் என்றும் போற்றப்படுகிற, சிலப்பதிகாரம்கூட, உரைநடையில் இல்லாமல், அதேநேரம் உரைநடையை முற்றிலும் தவிர்க்காமல், உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுளாகப் புதுமைத் தோற்றம் தருகிறது.

கவிகளைச் "செவிநுகர் கனிகள்' என்பான் கம்பன்.

Advertisment

காகிதப் பயன்பாடு இல்லாத காலத்தில், காதுகளின் வழியே புகுந்து கருத்தில் நிலைபெற்றிருப்பதற்கு, கவிதை வடிவமே ஏற்றது என அன்றைய புலவர்கள் கருதியதால், அறவியல், அரசியல், அறிவியல் என அனைத்துப் பொருள்களுமே செய்யுள் வடிவில் எழுதப்பட்டிருக்கலாம். எழுத்து, சொல், பொருள் ஆகியவற்றின் இலக்கணம் கூறும் தொல்காப்பியமும், அதைத் தொடர்ந்து வந்த இலக்கண நூல்கள் பலவும்கூட செய்யுள் வடிவிலேயே இருந்து வந்துள்ளன.

ஒவ்வொரு காலத்திலும் இலக்கியத்தின் உள்ளீடுகள் மாறி வந்துள்ளன.அகம், புறம் என்ற சங்க கால உள்ளீடு அறம் என சங்கம் மருவிய காலத்தில் மாற்றப்பெற்றது. அகம், புறம் என்பது பக்தி இலக்கிய காலத்தில் இகம், பரம் என மாறியது, சிற்றிலக்கிய காலத்தில் முற்றிலும் வேறுபட்ட கருப்பொருள்களை கவிதைகள் பேசின. கருப்பொருள்கள் மாறுவது போலவே கவிதையின் வடிவமும் காலம்தோறும் மாறி வந்துள்ளன.

செய்யுள் வடிவம் குறித்து தொல்காப்பியம் எள்ளினின்று எண்ணெய் எடுக்கப்படுவது போல, இலக்கியங்களிலிருந்து இலக்கணம் வரைவுபெறுவதாக கூறும் தொன்மை இலக்கண நூலின் கருத்துப்படி, முதலில் இலக்கியங்கள் தோன்றி பிறகே இலக்கணங்கள் உருவாகும் என்பதை உணரலாம்.

தொல்காப்பியத்தின் செய்யுளில், நுட்பமான செய்யுள் கூறுகளை செப்பமாக எடுத்துரைப்பதைக் கவனிக்கும்போது, அதற்கு முற்காலத்திலேயே தமிழ்மொழி இலக்கியச் செழுமை பெற்று, நெடும்பயணம் செய்து வந்திருப்பதை அறிய முடிகிறது. தொல்காப்பியத்தின் 26-வது இயலான செய்யுளியல் பொருளதிகாரத்தில் இடம்பெறுகிறது. இதன் முதல் நூற்பா செய்யுளின் கூறுகளைக் கூறுகிறது.

1. மாத்திரை (ஒலிஅளவு) 2. எழுத்துவகைகள் 3. அசை வகைகள் 4. யாத்தசீர் 5. அடி 6. யாப்பு 7. மரபு 8. தூக்கு 9. தொடைவகை 10. நோக்கு 11. பா 12. அளவியல் 13. திணை 14. கைக்கோள் 15. கூற்றுவகை 16. கேட்போர் 17. களன் 18. கால வகை 19. பயன் 20. மெய்ப்பாடு 21. எச்சவகை 22. முன்னம் 23. பொருள் 24. துறைவகை 25. மாட்டு 26. வண்ணம் என யாப்பியல் வகையால் அமைந்த 26 உறுப்புகளும் 1. அம்மை 2. அழகு 3. தொன்மை 4. தோல் 5. விருந்து 6. இயைபு 7. பலன் 8. இழைவு ஆகிய எட்டு உறுப்புகளும் சேர்ந்து செய்யுளுக்கு 34 உறுப்புகள் என செய்திறம்மிக்க புலவற்றுள் உரைத்துள்ள தாக நூற்பா கூறுகிறது. செய்யுளில் இத்தனை கூறுகளை ஆராய்ந்து கூறுவதற்கேற்ப அது வளம்பெற்றுத் திகழ்ந்திருப்பதை இதன்மூலம் அறிய முடிகிறது.

ஆதி வடிவங்கள்

தமிழ் யாப்பு மரபில் ஆசிரியப்பா, வெண்பா, வஞ்சிப்பா, கலிப்பா ஆகியவையே மூத்த வடிவங்களாக உள்ளன. சங்க இலக்கியப் பாக்கள் பெரிதும் ஆசிரியப்பாவால் அமைந் துள்ளன. முத்தொள்ளாயிரம் வெண்பாக் களால் இயற்றப்பட்ட முதல் நூல் எனக் கூறப்படுகிறது.

ஆசிரியம், வஞ்சி, வெண்பா, கலி என நால் இயற்று என்ப பாவகை விரியே (தொல்காப்பியம் - நூற்பா - 1362 பொருளதிகாரம் செய்யுளியல்) ஆசிரியப்பா போன்ற நடையை உடையது வஞ்சிப்பா என்றும் வெண்பா போன்ற நடையை உடையது கலிப்பா என்றும் தொல்காப்பியத்தின் 1365-வது நூற்பா நுவல்கிறது.

ஒவ்வொரு பாவின் வகைமையையும், இலக்கணங்களையும் தொல்காப்பியம் துல்லியமாக விளக்குகிறது, அகவலோசை, செப்பலோசை, துள்ளலோசை, தூங்கலோசை ஆகிய ஓசைகள் முறையே ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகியவற்றிற்கு உரியவையாக வகுக்கப்பட்டுள்ளன.

அகம், புறம், அறம், சைவம், வைணவம், இஸ்லாமியம், கிறிஸ்தவம், சமணம், பௌத்தம், நாத்திகம், திராவிடம், தேசியம், மார்க்சியம், தமிழியம், பெண்ணியம், தலித்தியம் என பல்வேறு உள்ளீடு களில் இயங்கி வரும் தமிழ்க் கவிதையின் உருவங் களும், ஓசைகளும் கடந்துவந்துள்ள காலத்தையும் களத்தையும் கவனித்தால், அதன் இடையறாத் தன்மையையும், காலத்துக்கேற்ற வடிவத்திற்குத் தன்னை வார்த்துக் கொள்கிற பான்மையையும் நாம் உணரலாம்.

ஆசிரியப்பா:

நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று

நீரினும் ஆரளவின்றே சாரல்

கருங்கோள் குறிஞ்சிப் பூக்கொண்டு

பெருந்தேனிழைக்கும் நாடனொடு நட்பே

(குறுந்தொகை)

வெண்பா:

உயிருக்குள் ஞான ஒளியேற்றிப் பாடல்

பயிர்விளைய வைத்துநீ பார்த்தாய் - உயரத்தில்

வைத்தவளே உன்றன் வயிற்றில் கருவான

மைத்துளிநான் சொந்த மகன்.

(ஆரூர் புதியவன்)

அறுசீர் விருத்தம்:

இன்னல்கள் வேலை இல்லா

இளைஞரின் பெரும்படைகள்

கண்ணீரில் நீந்தும் ஏழைக்

காண்கிற போராட்டங்கள்

விண்ணேற்றம் அடைந்து வாழ்வை

வீழ்த்திடும் விலையேற்றங்கள்

முன்னேற்றப் பாதை மீதோ

முப்போதும் மதச் சண்டைகள்

(ஆரூர் புதியவன்)

எண்சீர் விருத்தம்:

உனைக் காணும் போதெந்தன் உள்ளத்துக்குள்

ஊறிவரும் உணர்ச்சிகளை எழுதுதற்கு

நினைத்தாலும் வார்த்தை கிடைத்திடுவதில்லை

நித்திய தரித் திரராய் உழைத்துழைத்து

தினைத்துணையும் பயனின்றி பசித்தமக்கள்

சிறிதுகூழ் தேடுங்கால் பானைஆரக்

கனத்திருந்த வெண்சோறு காணும் இன்பம்

கவின்நிலவே உனைக்காணும் இன்பம் தானோ

(புரட்சிக்கவி - பாரதிதாசன்)

வண்ணம்:

முத்தைத்தரு பத்தித் திருநகை

அத்திக்கிறை சத்திச் சரவண

முத்திக்கொரு வித்துக் குரபரஎனவோதும்

முக்கட்பர மற்குச் சுருதியின்

முற்பட்டது கற்பித் திருவரும்

முப்பத்து வர்க்கத் தமரரும் அடிபேணப்

(திருப்புகழ்)

சிந்து:

யாப்புமுறை உரைப்பான் - அணி

யாவும் உரைத்திடுவான்.

பாப்புனை தற்கான - அனு

பவம்பல புகல்வான்

தீர்ப்புற அன்னவளும் - ஆசு

சித்திரம் நன்மதுரம்

சேர்ப்புறு வித்தாரம் - எனும்

தீங்கவிதை யனைத்தும்

கற்று வரலானாள் - அது

கால பரியந்தம்.

(புரட்சிக்கவி - பாரதிதாசன்)

hajakani

உருப்படி:

நின்னைச் சரணடைந்தேன் - கண்ணம்மா

நின்னைச் சரணடைந்தேன்.

பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்

என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று

நின்னைச் சரணடைந்தேன்.

(பாரதியார்)

நாட்டுப்புறப்பாடல்:

ஆச வச்சேன் உம்மேல -மச்சான்

அரளிவச்சேன் கொல்லையிலே

திரைப்பாட்டு:

என்ன நடக்குது நாட்டுல - அதை

எடுத்துச் சொல்லனும் பாட்டுல

கொள்ளையடிச்சவன் கூட்டுல - நம்ம

குடும்பம் நிக்கிது ரோட்டுல

(யுகபாரதி)

வசன கவிதை:

அசைகின்ற இலையிலே உயிர்நிற்கிறதா? ஆம்

இரைகின்ற கடல்நீர் உயிரால் அசைகின்றதா? ஆம்

கூரையிலிருந்து போடும்கல் தரையில் விழுகின்றது

அதன் சலனம் எதனால் நிகழ்விது? உயிருடைமையால்

ஓடுகின்ற வாய்க்கால் எந்நிலையில் உளது? உயிர்

நிலையில், ஊமையாக இருந்த காற்று ஊதத்

தொடங்கிவிட்டதே அதற்கு என்ன நேரிட்டுநிக்கிறது?

உயிர் நேரிட்டிருக்கிறது

(காற்று - பாரதியார்)

புதுக் கவிதை:

வன்முறை கூடாது

என்று பேசியவனின்

வாயில் தெறித்தது

எச்சில் அல்ல

என் தோழனின் ரத்தம்.

(இன்குலாப்)

ஐக்கூ

உடைந்த வளையல்துண்டு

வீசினேன் குளத்தில்

எத்தனை வளையல்கள்.

(அறிவுமதி)

சென்ரியு

பேசாதீர்கள்

பேசவில்லை ஆசிரியரும்

நடந்தது பாடம்

(ஈரோடு தமிழன்பன்)

குறும்பா

வள்ளுவரும் மாணவனாய் ஆனார்

திருக்குறளில் தேர்வெழுதப் போனார்

முடிவு வெளியாச்சு

ஃபெயிலாகிப் போச்சு

பாவம் அவர் படிக்கவில்லை கோனார்

(கவிக்கோ அப்துல்ரகுமான்)

லிமரைக்கூ

பறவை யோடு சேர்ந்து பற

சிறகுகள் தேவை இல்லை மனிதன்

என்பதை மட்டும் நீ மற

(ஈரோடு தமிழன்பன்)

கஸல்

எரியட்டுமே சுடர் எரியும் வரை

எதுவரை எரியும் விடியும் வரை

(கவிக்கோ)

இப்படி ஏராளமான வடிவங்களை மரபுக் கவிதை பெற்று வளர்ந்து வந்துள்ளது.…இதில் சில வடிவங்கள் பிறமொழிகளிலிருந்து தமிழுக்கு அறிமுகமானவை என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழின் பாவகைகளில் காலந்தோறும் புதுவகைமைகள் தோன்றக் கூடும் என்பதைத் தொல்காப்பியத்தின் ""விருந்தே தானும் புதுவது கிளந்த யாப்பின் மேற்றே''’’ என்ற நூற்பா அறிவிக்கிறது.

புதிய பொருளை புதிய வடிவில் தருவதே விருந்து என்ற சொல்லின் விளக்கமாகும்.

உரைப்பா என்னும் வசன கவிதை முத்தமிழறிஞர் கலைஞரால் முற்றிலும் புதிய வகையிலும், பாவலரேறு பெருஞ்சித்திரனாரால் வளமான முறையிலும் கையாளப்பட்டன.

சுவைபுதிது, பொருள்புதிது, வளம்புதிது, சொற்புதிது, சோதிமிக்க நவகவிதை’’ என்ற தனது கவிவகைமை பற்றிய பாரதியின் கவிதையும் இங்கு நினைவுகூரத் தக்கது.

"பழையன கழிதலும், புதியன புகுதலும்

வழுவல கால வகையி னானே’’

என்ற நன்னூலின் கருத்துப்படி, தமிழின் பாவகைகளில் பழையன கழிந்தும், புதியன பிறந்தும் வந்துள்ளன.

இருபதாம் நூற்றாண்டு வரை மரபு ஓசைகளுக்குக் கட்டுப்பட்டு உரையாடி வந்த தமிழ்க்கவிதை, இருபத்தோராம் நூற்றாண்டில், புதுக்கவிதை என்ற புதுப் பாய்ச்சலுக்குத் தயாரானது.

இயல்பான பேச்சு சந்தமே புதுக்கவிதையின் ஓசை வடிவமாக அமைந்தது.

1930-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் கோபங் கொண்ட இளைஞர்கள் (Angry youngmen) என்ற அமைப்பினர் புதுக்கவிதை (New Poetry) என்ற சொல்லைப் பயன்படுத்தினர்.

1855-ல் அமெரிக்காவில் வால்ட் விட்மன் வெளியிட்ட புல்லின் இலைகள் (Leaves of the grass) என்ற நூல் அதற்கு முந்தைய மரபுகளை மீறிய முதல் புதுக்கவிதை நூலாக அறியப்படுகிறது.

1886-ல் பிரான்சில் 17 வயது இளைஞரான ரிங்பார்ட், "ஒளிவெள்ளம்' என்ற புதுக் கவிதைத் தொகுதியை வெளி யிட்டார். தமிழிலும் இதன் தாக்கம் வெளிப்பட்டது. பாரதியார் வசன கவிதை முயற்சிகளைத் தொடங்கி வைத்தார்.

ந. பிச்சமூர்த்தி, கு.ப. ராஜகோபாலன், க.நா. சுப்பிரமணியன், சு. சீனிவாசராகவன் ஆகியோர் மேற்கத்தியத் தாக்கத்தோடு தமிழில் புதுக்கவிதைகள் எழுதத் தொடங்கினர்.

சூறாவளி, கலா மோகினி ஆகிய இதழ்கள் புதுக்கவிதைகளைப் பிரசுரித்து வந்தன. 1950-களில் சி.சு, செல்லப்பாவின் "எழுத்து' இதழ் புதுக் கவிதைகளைத் தாங்கி வெளிவந்தது. இதைத் தொடர்ந்து, 1960-70 காலங்களில் நடை, இலக்கிய வட்டம், சிவாஜி, தாமரை உள்ளிட்ட இதழ்கள் புதுக்கவிதையை வளர்த்தன.

மரபுக் கவிதைகளைப் போற்றுவோரால் புதுக்கவிதை பெரும் எதிர்ப்பையும் சம்பாதித்தது. 1970-க்குப்பிறகு கணையாழி, வானம்பாடி, தீபம், ஞானரதம், கசடதபற போன்ற இதழ்கள் புதுக்கவிதைக்குப் பேராதரவு தந்தன.

மனிதநேயமும், சமுதாய விழிப்புணர்வும், ஆதிக்கத்திற்கெதிரான அறைகூவலும் வானம்பாடி களின் பாடுபொருளாகின.

மு. மேத்தா, புவியரசு, கங்கைகொண்டான், சிற்பி, தமிழ்நாடன், அக்னிபுத்திரன், சக்திக்கனல், ஈரோடு தமிழன்பன், கோவை ஞானி, பிரபஞ்சன், பாலா, அபி, நா. காமராசன் ஆகியோர் வானம்பாடி இயக்கத்தின் குறிப்பிடத்தகுந்த கவிஞர்கள்.

இதே காலகட்டத்தில் கவிக்கோ அப்துல்ரகுமானின் கவிதைகள் வடிவம், உள்ளடக்கம் இரண்டிலும் தமிழை உலகத்தரத்தில் உயர்த்திப் பிடித்தன.

வைரமுத்துவின் கவிதைகளும், கவித்துவமிக்க திரைப்படப் பாடல்களும், மக்களிடையே பெரும் கவனத்தைப் பெற்றன.

உவமைக்கவிஞர் சுரதா, உடுமலை நாராயணகவி, பாபநாசம் சிவன், கண்ணதாசன், பட்டுகோட்டை கல்யாணசுந்தரம், மருதகாசி, கவி. கா.மு. ஷெரீப், ஆலங்குடி சோமு உள்ளிட்ட கவிஞர்கள் திரைப்படப் பாடல்களையும் இலக்கியச் செழுமை உடையதாக மாற்றி மக்களை ஈர்த்தவர்கள்.

அண்ணாமலை செட்டியாரின் காவடிச் சிந்துபாடல்கள், திரிகூடராசப்ப கவிராயரின் குற்றாலக் குறவஞ்சி ஆகியவை பின்னாளில் இசையமைக்கப்பட்டு இளைய உள்ளங்களை ஈர்த்துள்ளன.

அகவலோசை, செப்பலோசை, துள்ளலோசை, தூங்கலோசை, காவடிச் சிந்துகள், நாட்டுப்புற அடவுகள், ஒப்பாரி, தாலாட்டு, பள்ளியெழுச்சி, கானாப்பாடல் என்று பல்வேறு ஓசை வடிவங்களைக் கடந்து பயணித்து வந்துள்ள தமிழ்க் கவிதை என்ற காட்டாறு, இப்போது, இயல்பான பேச்சு சந்தத்தோடு, சிந்தனையை அதிகம் தூண்டுகிற செய்நேர்த்திகள் மிக்க புதுக்கவிதை என்ற வடிவத்தில் பயணித்து வருகிறது.

இலக்கணச் செங்கோல்,

யாப்பு சிம்மாசனம்,

எதுகைப் பல்லக்கு

மோனைத் தேர்கள்,

தனிமொழிச் சேனை

பண்டித பவனி,

இவையேதும் இல்லாத கவிதைகள்

தம்மைத் தாமே

ஆளக் கற்றுக் கொண்ட

புதிய மக்களாட்சி முறையே

புதுக்கவிதை’’

என்கிறார் மு. மேத்தா.

எதிர்காலத்தில் தமிழ்க்கவிதையின் ஓசைகளும் உள்ளீடுகளும், இன்னும் பல புதுமை களையும், வியக்கத்தக்க வளர்ச்சிகளையும் பெறவேண்டும். புதிய தலைமுறைக் கவிஞர்கள் தமிழின் கடந்தகாலச் சுவடுகளை ஆழ்ந்து உள்வாங்கிக் கொண்டு புதிய தடங்களில் தமிழ்க் கவிதையை அழைத்துச் செல்ல வேண்டும்.