குடும்பத்தின் செல்வமாக அம்மா இருந்தாள். படுத்த படுக்கையாகி நீண்ட நாட்களாகிவிட்டன. இனி அம்மா இந்த படுத்த நிலையிலிருந்து எழுந்து நடக்கமாட்டாளா? அவனுக்கு சந்தேகம் உண்டாகாமலில்லை.
அம்மாவும் மகனும் தனித்திருக்கும் ஒரேயொரு அறையைக்கொண்ட வீடு. தனிமைத் தீவில் அம்மாவும் மகனும். மகனுக்கு அம்மாவையும், அம்மாவுக்கு மகனையும் தவிர வேறு யாருமே துணைக்கில்லை.
"அம்மா... உங்களுக்கு என்மேல எதுவுமே தோணக் கூடாது. உங்களோட சிரமங்கள் தெரியாம இல்லை. ஆனா அதுக்கான கொடுப்பினை எனக் கில்லை. நான் அதுக்கு தயாராவும் இல்லை' என்று அவனுக்குக் கூறவேண்டும் போலிருந்தது. எதுவும் கூறவில்லை. தளர்ந்து, வெளிறிப்போய்க் காணப்பட்ட அம்மாவின் முகத்தையே அவன் ஆர்வத்துடன் உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான்.
வறண்ட உதடும் வறண்ட முகமும்... கண்ணீரின் வாய்க்கால் காய்ந்து வறண்ட... உயிர்ப்பற்ற கண்களையே நீண்டநேரம் பார்த்துக்கொண்டிருந்தான்.
சிறிதுநேரம் தாண்டினால் அம்மா தூக்கத்திலிருந்து அதிர்ச்சியடைந்து கண்களைத் திறப்பாள்.
அப்போது அதிகமாகப் பேசுவாள். களைப்பு, தளர்வு... அனைத்தையும் மறந்துவிட்டு.
"மகனே... அம்மா சீக்கிரமா போயிருவேன். அதுக்கு முன்ன என் மகன்...'
சொல்லப்போவது என்னவென்பது தெரியும். திருமணம் முடித்து பிள்ளைகளும், பிள்ளைகளின் பிள்ளைகளுமாக வாழவேண்டும். வம்சப் பரம்பரையை நிலைநிறுத்தவேண்டும்.
அம்மா மரணமடைவதற்குமுன்பு, அம்மா தரக்கூடிய அன்பைவிட அதிகமான அன்பை வெளிப்படுத்தக்கூடிய தகுதிகொண்ட ஒருத்தியைக் கண்டுபிடிக்கவேண்டும். தாலியைக் கட்டவேண்டும். அவன் எதையோ நினைத்ததைப்போல மெதுவாக சிரித்தான். வெளிறிய சிரிப்பு. ஆகாயத்தில் பயணித்துக்கொண்டிருந்த ஒரு இருண்ட மேகக் கூட்டத்தைப்போல...
"மனைவியுடனும் குழந்தைகளுடனும் சிரமப்பட்டுக்கொண்டும் அன்பு செலுத்திக்கொண்டும் வாழ்வதுதான் சந்தோஷமானது. அதுதான் வாழ்க்கை.' அம்மா தெளிவான நினைவில் இருக்கும்போது கூறுவாள்.
"வாழ்க்கையென்பது வேறு பலவும்கூட.. நிரந்தரமான ஒரு அர்த்தமுமற்ற... புதிர் நிறைந்த ஒரு அர்த்தமற்ற நிலை இருக்கிறதே... அதுதானே இங்கு வாழ்க்கையென்று கூறப்படுகிறது?'
துறவியின் மடத்தின் சங்கொலியைப்போல ஒலிக்கும் அவனது குரலைக் கேட்டவாறு அம்மா சிந்தனையில் மூழ்கிப் படுத்திருப்பாள். இறுதியில் எதையோ கண்டடைந்துவிட்டதைப்போல சிறிது ஆவேசத்துடன் அறிவுரை கூறுவாள்:
"உன்னோட தத்துவ சிந்தனைங்க உன் வயது உடையவங்ககிட்ட உண்டாகக் கூடிய மன நோய்கள்ல ஒரு வகை. இதை வச்சிக்கிட்டு நீண்டகாலம் நடந்து திரிய நான் அனுமதிக்கமாட்டேன். உன் பிள்ளைகள்ல ஒன்னையாவது பார்க்கணும்னு நினைக்கிறேன். உன் குழந்தைத் தன்மைய இந்த வயசான காலத்தில நான் பார்க்கறது உன் குழந்தைங்க மூலம்தான்.'
நிறைந்து கசியும் அந்த வறண்ட கண்களைப் பார்த்து எப்படிக் கூறமுடியும்?
"கல்யாணம் செஞ்சுக்கப்போற பெண்ணைக் கனவு கண்டுக்கிட்டிருப்பதைவிட எனக்கு சந்தோஷம் இந்த ஓவியம் வரையறதுல மூழ்கியிருக்கும்போது கிடைக்கற ஆனந்த அனுபவம்தான்ங்கற உண்மை... அம்மா, உங்களுக்குத் தெரியாது. அனைத்து சுக மோகங்களையும் இங்க அர்ப்பணம் செஞ்சிருக்கிறேன்... அம்மா. அவளுடைய கால் பாதத்திற்கருகில்... அவள் எனக்கு இடம் தந்தா, நான் கொடுத்து வைக்கப் பட்டவனாக... அழிவற்றவனாக ஆவேன்.'
அவன் கனவு நிலையிலிருந்து சுய உணர்விற்கு வந்து அம்மாவிடம் ஒருமுறையல்ல... பலமுறை கூறவேண்டுமென்று ஆசைப்பட்டிருக்கிறான்.
அம்மா மரணத்தைத் தொழுதுகொண்டிருக்கிறாள்.
சுயவுணர்வின் ஏதோ மூலையில் அப்போதும் மகனைப் பற்றிய குறை இருந்தது. கண் விழித்து எழும்போதெல்லாம் மனதில் தோன்றிய அனைத் தையும் சம்பந்தமே இல்லாமல் பேசுவதற்குக் காரணம்கூட அதுதான். மகனைப் பற்றிய விஷயங்கள்தான்...
ஓவியனான மகன் பல திசைகளிலும் அலைந்து திரிந்துவிட்டு இறுதியில் அம்மாவே கதியென்று வந்துசேர்ந்திருக்கிறான். பைத்தியமென்று கூறுவதற்கில்லை. பைத்தியக்காரர்கள் சொந்த சரீரத்தின்மீது நேசம் வைத்திருப்பார்கள். அவனுக்கு அதுவுமில்லை. முந்தைய நாள் புகைத்த கஞ்சாவின் புகைக்கறை அவனுடைய தலைக்குள் சோர்வடைந்த நரம்புகளில் ஆழமாகப் படிந்துகிடந்தது.
அவன் எதையுமே பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.
ஆனால், திடீரென பார்வை அம்மா படுத்திருக்கும் கட்டிலுக்கு எதிரே இருந்த சுவரைநோக்கி அறியாமலே சென்றது. அப்பாவின் நிறம் மங்கிப்போன ஓவியம் இருந்தது.
பழிவாங்கும் உணர்வும் கவலையும் குடி கொண்டிருக்கும் அப்பாவின் ஈரமான கண்கள்! இதயத்தில் ஏதோ மோதி ஒளிர்வதைப்போல தோன்றியது. பயம் இருந்தாலும், தைரியத்தை வரவழைத்தவாறு உற்றுப் பார்த்தான்.
"உன்னோடவும் உன் அம்மாவோடவும் நான் தனி மனிதனா போராடியவன்டா... சண்டையிட்டு தளர்ந்துபோய் இறந்து விழுந்துட்டேன்னு நீயும் உன் அம்மாவும் நினைச்சிக்கிட்டிருக்கலாம். ஆனா தோல்விக்கு முன்னாலும் உன் அப்பா முழங்காலிடல.'
அவன் தலையை குனிந்துகொண்டான். பலவற்றையும் அப்பா கூறினாலும் கூறலாம். கூறுவதற்கு பலவும் இருக்கின்றன. யார் எதிர்த்தாலும், ஒரு அங்குல அளவுகூட பதறாமல் போராடினார். சுகமும் சந்தோஷமும் என்றால் என்னவென்று தெரியாமலே விழுந்து இறந்த பரிதாபத்திற்குரிய ஆத்மா அவர்.
"அப்பா... மன்னிச்சிடுங்க! தெரியாம செஞ்சிட்ட அனைத்து குற்றங்களுக்கும்..!'
அவன் அந்த உருவப் படத்திற்கு முன்னால் குனிந்து அமர்ந்திருந்தான். நீண்ட நேரமாக... கண்கள் நிறைந்து வழிந்துகொண்டிருந்தன. ஈரக் கண்களுடனே அம்மாவை மீண்டும் பார்த்தான். தளர்ந்து படுத்திருந்தாள்.
தேவைப்படும் கவனிப்புகள் கிடைக்கவில்லை.
கைவிடப்பட்ட இல்லத்தைப்போன்ற இந்த உயிர்ப்பற்ற வீட்டில் பெண்ணாக யாரும் பிறக்க வில்லை.
"என் வாழ்க்கையில எனக்கு ஒரு பெண் குழந்தைகூட பிறக்காம பார்த்துக்க..!' அப்பா வேண்டிக் கொண்டதாக அம்மா கூறுவாள்.
பெண் குழந்தைகளின்மீது கொண்ட வெறுப்பு காரணமாகவா அப்பா அப்படிக் கூறினார்? இல்லை... நிச்சயமாக இல்லை. ஒரேயொரு வாரிசாகப் பிறந்த ஒரு மகன் தான்தோன்றியாக ஆகிவிட்ட அளவற்ற வேதனையல்லவா அந்த வார்த்தைகளில் கலந்திருக்கிறது.
அடுப்பிலிருந்து இறங்காத கஷாயப் பாத்திரங்கள் தான் சமையலறையில். தேவையான கவனிப்பில்லை. கஷாயத்தை கொதிக்கவைப்பதிலும், மண்டியைப் பிரித்தெடுப்பதிலும், இரண்டு ஆழாக்குகளாக சுண்ட வைப்பதிலும்... யாரும் தேவையான அளவுக்கு அக்கறை செலுத்துவதில்லை.
பாடுபட்ட அம்மா... மகனுக்கு ருசியாக உணவு சமைத்துத் தந்தாள். அக்கறையுடன் நின்று பரிமாறி... தேவையாக இருந்தாலும் இல்லாவிட்டாலும்... மகனை நன்கு சாப்பிடவைத்தாள்.
வயதான காலத்தில் அம்மாவைப் பார்த்துக் கொள்வதற்கு யாருமே இல்லையென்ற நிலை உண்டாகிவிட்டது. பெயருக்கு ஒரு பணிப்பெண் இருந்தாள். ஒருவகையில் பார்த்தால்... அவள் வருவதையே அம்மா விரும்பவில்லை.
"சாயங்காலம் வர்றதுக்கு முன்னாடி போயிடு. இங்க...' அம்மா முழுமை செய்வதில்லை.
நினைத்துப் பார்ப்பதற்கு பலவும் இருக்கின்றன.
திரேஸ்யாக்குட்டி என்னும் வாசலைப் பெருக்கும் பெண்ணுடன் மகன் நட்பில் இருக்கிறான் என்ற விஷயம் தெரிந்தவுடன் அவளைக் கூறி அனுப்பி விட்டாள்.
"திரேஸ்யாக்குட்டி... நாளையிலிருந்து நீ வரவேணாம். இன்னும் சொல்லப் போனா... கொஞ்சம்கூட ஜாதியையும் மதத்தையும் பார்க்காம சமையலறைக்குள்ள நுழைய விடுறதுக்காக ஆளுங்க குற்றம் சுமத்த ஆரம்பிச்சிட்டாங்க.'
அம்மா ஏதோ இல்லாத காரணத்தைக் கூறி அவளை சமாதானப்படுத்தினாள். 'மகனோட விரும்பத்தகாத உறவு வச்சிருக்குற காரணத்தாலதான் உன்னைப் போகச் சொல்றேன்' என்று அம்மா கூறவில்லை. இளம்பெண்களை வீட்டில் இருக்கச் செய்வதை அம்மா ஒப்புக்கொள்வதே இல்லை. மகன் எனும் குள்ளநரியின் கண்களில் இந்த கோழிக் குஞ்சுகள் அகப்படாமலிருக்க வேண்டுமென்று அம்மா நினைத்திருக்கவேண்டும். எந்தச் சமயத்திலும் மகனை அம்மா குற்றம் சுமத்தியதில்லை.
ஆனால் பார்த்துத் தெரிந்துகொண்டிருந்தாள்.
இளமை குடிகொண்டிருக்கும் மகன்... திருமணமாகாதவன். கெட்டபெயர் உண்டாகி விடக்கூடாது.
அம்மா முற்றிலும் செயலற்ற நிலையில் இருக்கி றாள். இனிமேலும் அம்மாவை சோதனைக்குள்ளாக்க வேண்டுமா? அம்மாவிற்கு வேண்டியாவது ஒருத்தியை இங்கு அழைத்துக்கொண்டு வந்தால் என்ன?
இந்தத் தோணல் மனதிற்குள் பலமாகத் தொடங்க, தன்னைத்தானே திருத்திக்கொள்வதற்கு முயற்சிப் பான்.
வேண்டாம்... வேண்டாம். பொறுப்புகளை சுமக்கக்கூடிய மனிதனாவான். இறுகக் கட்டப் படுவான். எந்தவொரு திசைக்கும் போகவோ வரவோ மனதில் நினைப்பதைப்போல முடியாது. ஒருவேளை அவளுக்கு அடிமையாக இருக்கக்கூடிய சூழல்கூட உண்டாகலாம்.
அம்மாவையேகூட மறக்க நேரிடலாம். வசீகரிக்கக்கூடிய மந்திரசக்தி கொண்ட மருந்து அவளின் கையில் இருக்கும். ஒருமுறை அனுபவித்தால், திரும்பத் திரும்ப அனுபவிக்க வேண்டுமென்ற அளவற்ற ஆசை காரணமாக அவளுக்கு முன்னால் ஐம்புலன்களையும் அடக்கிக்கொண்டு நிற்கவேண்டிய நிலை உண்டாகும். வேண்டாம்... அந்த போதைப் பலகாரத்தைத் தொடவே கூடாது.
"பாவத்தின் வித்துகள் முளைவிட ஆரம்பித்தது உன்னிடமிருந்த போதையிலிருந்தே...'
மறக்க முயற்சித்தான். தொழிலில் மனதை ஊன்றினான். வண்ண புட்டிகள் இருந்தாலும், எந்தெந்த நிறத்தையெடுத்துப் பயன்படுத்துவதென்று தெரியவில்லை. படிப்படியான பழக்கத்தால் எந்தெந்த வண்ணத்தை ஒன்றோடொன்று கலப்பதன்மூலம் புதிதாக உண்டாகக்கூடிய நிறங்களைப்பற்றி தெரிந்துகொண்டான். அந்தச் சமயத்தில் இளமை அவனிடமிருந்து விலகிச் சென்றிருந்தது. நிறைய மனிதர்களிடமிருந்து கலைகுறித்த விமர்சனங்களைச் சந்திக்கவேண்டியதிருந்தது. வண்ணத்தையும் தூரிகையையும் கையில் வைத்திருப்பவன் எப்படிப்பட்ட தான்தோன்றித்தனத்தையும் வெளிப் படுத்தலாமென்று இருக்கிறதா?
விமர்சகர்கள் கர்ஜனை செய்தார்கள். கண்களை உருட்டிக் காட்டினார்கள். கடுமையான வார்த்தைகளில் அர்ச்சித்தார்கள். பிரசவ வேதனை தெரியாத... உயர்ந்த இடத்தில் இருப்பவர்களிடம் எப்போதும் இளமையாக இருக்கும் தாய் என்ன கூறமுடியும்?
அவன் எல்லாவற்றையும் மறந்துவிட்டு கலை எனும் வேள்வியில் மூழ்கினான். இந்தத் துறையில் நிலையாக நிற்பதற்கு நிறைய சிரமப்பட்டான். பலம்கொண்டவ னாக இருக்கவேண்டும். மண்ணுக்குள் வேர்கள் ஆழமாக இறங்கவேண்டும். பிடித்து உலுக்கினாலும், கிளையை முறித்தாலும் அடிவேர் ஆடக்கூடாது.
அவனுடைய மனம் வேறேதோ உலகத்தில் இருந்தது. அம்மா திடீரென கண்களைத் திறந்தாள். கஷாயம் அளிக்கவேண்டிய நேரம்.
அவுன்ஸ் க்ளாஸில் கஷாயத்தை ஊற்றி அவன் அம்மாவின் வாயில் புகட்டினான்.
கசப்பான கஷ்டம் அம்மாவின் தொண்டைக் குழியின் வழியாக இறங்கிச் செல்வதை அவன் கவனித்தான்.
நெற்றியில் அம்மாவின் ஓராயிரம் சுருக்கங்கள் தெரிந்தன. எமதர்மராஜாவின் கலப்பை உண்டாக்கிய உழவுக் கோடுகளோ?
அவன் அம்மாவின் நெற்றியைத் தொட்டுப் பார்த்தான்.
உடனடியாக ஒரு துளி முலைப்பால் கிடைத்திருந்தால்? இந்த கடுமையான சூடு சற்று அடங்கியிருக்கும்.
யாரிடம் முலைப்பால் கேட்பது? பெண்ணைக் கட்டாதவன் முலைப்பாலுக்காக கெஞ்சிக்கொண்டு நடந்து திரிந்தால் என்ன தோன்றும்?
தனக்கொரு மனைவி இருந்திருந்தால்...
அவள் இப்போதுதான் பிரசவமே ஆகியிருக்கிறாள் என்றால்... நேராகச் சென்று முலையைப் பீய்ச்சி பால் எடுத்திருக்கலாம். முலைப்பாலில் சிறிது பச்சைக் கற்பூரத்தைக் கலந்தெடுத்து, சூடாக கொதித்துக்கொண்டிருக்கும் அம்மாவின் நெற்றியில் தொடர்ந்து தேய்த்திருக்கலாம். முலைப்பாலில் சேலைத் துணியை நனைத்து குளிரச் செய்திருக் கலாம்.
அவன் எழுந்தான். அம்மாவின் தலையைத் தலையணையில் கொஞ்சம் கொஞ்சமாகத் தாங்கிப் படுக்கச் செய்தான். கருத்த கம்பளியைக் கொண்டு அம்மாவின் கழுத்துவரை மூடினான். கறுப்புநிற வடை சட்டியிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு அப்பளத்தின் அளவில், மஞ்சள்நிற தாளைப்போல வெளிறிப்போன முகத்தைப் பார்த்தான். நரைத்து, வெண் சாமரத்தைப் போலிருந்த தலைமுடி...
நேராக நிற்காத தலை. ரசாயனப்பொடி தேய்க்கப்பட்டதால் சிவப்புநிறம் விழுந்த மண்டையோடு. குழிக்குள் விழுந்துகிடக்கும் வறண்ட கண்கள். நீண்ட செவியில் தொங்கிக் கிடக்கும் தட்டை. பல்லில்லாத ஈறு...
அம்மாவின் தளர்ந்து சேர்ந்துபோன முகத்தில் அவன் நீண்டநேரம் தன் முகத்தைச் சேர்த்து வைத்துக்கொண்டு தேம்பித்தேம்பி அழுதான்.
அம்மாவின் கொதித்துக்கொண்டிருக்கும் நெற்றியில் கண்ணீர் உதிர்ந்து விழுந்துகொண்டிருந்தது.
அம்மாவின் வறண்ட கண்கள் மெதுவாக மூடின.
அம்மா உறங்குகிறாள்.
நிம்மதியாக உறங்கட்டும்.