தனித்துவமான தனது திரைப் பாடல்களால், இளைஞர்களின் இதயத்தை ஏகபோகமாகக் கொள்ளை யடித்து வருபவர் கபிலன். தேர்ந்த மரபுக்கவிஞரான இவர், கானா பாடல்களை ஆய்வு செய்து, பட்டம் பெற்றவர். "உன் சமையலறையில் நான் உப்பா? சர்க்கரையா?' என்ற பாடல் மூலம், திரைப்பாடல் உலகிற்கு புதிய சுவை சேர்க்கத் தொடங்கிய திரைக் கிப்ரான். அதிரடி கானாவா? அட்டகாச துள்ளல் பாட்டா? உயிர் சொட்டும் காதலின் மயிலிறகு வருடலா? அத்தனையிலும் கபிலன் தன் சுவடுகளைப் பதித்துவருகிறார். இப்போது பரபரப்பாக வெற்றிகளைக் குவித்துவரும் "சார்பட்டா'விலும், இயக்குநர் ரஞ்சித்தோடு கைகோத்து தன் முத்திரையைப் பதித்திருக் கிறார் கபிலன். பெரிய பெரிய இயக்குநர்களோடும், இசை யமைப்பாளர்களோடும், தயாரிப்பு நிறுவனங்களோடும் கைகோத்து, நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் கபிலனை, நம் இனிய உதயம் வாசகர்களுக்காக தொலைபேசியில் மடக்கினோம். அப்போது....
உங்கள் மாணவப் பருவம் பற்றிச் சொல்லுங்களேன்?
நான் வடசென்னை கன்னிகாபுரத்தைச் சேர்ந்தவன். என் அப்பா கந்தசாமி பின்னி மில்லில் வேலை பார்த்தார். பகுத்தறிவாளர். நல்ல குரல் வளமுள்ள அவர், நடிகவேள் எம்.ஆர். ராதா உள்ளிட்டவர்களின் நாடகங்களில் பின்பாட்டுக் கலைஞராகப் பணியாற்றியிருக்கிறார். அதன் மூலம் திராவிட இயக்கக் கொள்கைளை பரப்பி வந்தார்.
அவரால் எனக்கும் திராவிட இயக்க உணர்வு ஊறியது. அம்மா பெயர் புவனேஸ்வரி.
நான் அம்மாவின் அம்மா ஊரான புதுவையில் பிறந்தவன். இங்கே வட சென்னை கன்னிகாபுரம் மாநகராட்சிப் பள்ளியில்தான் நான் படித்தேன். இதுதான் என் பால்யத்தின் கதைச் சுருக்கம்.
உங்களுக்கு கவிதை ஆர்வம் எப்போது ஏற்பட்டது?
எங்கள் பகுதியில் கவிஞர் சிங்கார சடையப்பன் இருந்தார். நகைச்சுவை உணர்வோடும் ஓசை நயத்தோடும் கவிதை பாடக்கூடியவர். அவர்தான் என் ஆரம்பகால கவிதை குரு. அவருடன் அடிக்கடி சந்தித்துப் பேசி என் கவிதை உணர்வை வளர்த்துக்கொண்டேன்.
அவர் போகிற கவியரங்குகளுக்கும் தி.மு.க. கூட்டங்களுக்கும் அவரை சைக்கிளில் டபிள்ஸ் அடித்து அழைத்துப் போவேன். அப்போது வடசென்னை பேசின் பிரிட்ஜ் பாலத்தின் மீது நான் வாங்கிய மூச்சு எனக் குத்தான் தெரியும். அதை இப்போது நினைத்தால் சுகமாக இருக்கிறது.
அவர்தான் எனக்கு மரபுக் கவிதையைக் கற்றுக்கொடுத்தார். மு.மேத்தாவின் கண்ணீர்ப்பூக்கள், வைரமுத்துவின் திருத்தி எழுதிய தீர்ப்புகள், மீராவின் கனவுகள்+கற்பனைகள்= காகிதங்கள் போன்ற நூல்களைப் படிக்கும் வாய்ப்பு அந்தக் காலகட்டத்தில் எனக்குக் கிடைத்தது. அது என் கவிதை உணர்வை மேலும் தூண்டியது.
நான் 15, 16 வயதில் சிகரெட்டைப் பற்றி எழுதிய வெண்பா இப்போதும் என் நினைவில் இருக்கிறது.
"பூட்டிய வீட்டில் புகையில் குஞ்சுகள்
ஓட்டை வழியே உதிர்ந்தன ஈட்டும்
குரலின் மொழியில் இருமல் முழக்கம்
விரலின் இடையில் விரல்.'
-எனது அந்த 16 வயதை இந்த வெண்பா வரிகளில் இப்போது பார்க்கும் போது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.
உங்கள் கல்லுரிக் காலம் எப்படி?
பச்சையப்பன் கல்லூரியில் படித்த நாட்களை, என் கவிதைக்கு சிறகு முளைத்த நாட்கள் என்று சொல்லலாம். அப்போதுதான் தொல்காப்பியம், நன்னூல், யாப்பெருலங்காரிகை, தண்டியலங்காரம், உள்ளிட்ட இலக்கண நூல்களைப் படித்தேன்.
அவைதான் என் மரப்புக் கவிதைகளுக்கு உயிர்ப்பைக் கொடுத்தது. புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், உவமைக் கவிஞர் சுரதா, கவிஞர்பொன்னிவளவன் உள்ளிட்ட பெரும் கவிஞர்களின் கவிதைகளுக்குள் அந்த நேரத்தில் நீச்சல் அடித்தேன். சுரதா, பொன்னிவளவன் உள்ளிட்ட கவிஞர் களின் நட்பும் எனக்கு அப்போது தான் கிடைத்தது. இவை என் கவிதைச் சிறகை மேலும் வலுவாக்கின.
அதேபோல், கல்லூரிக் காலத்தில் நிறைய இலக்கியப் போட்டி களில் பங்கேற்றுப் பரிசுபெறும் வாய்ப்பும், அதன் மூலம் நிறைய இலக்கிய நண்பர்களைச் சந்திக்கிற வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. தமிழ்வளர்ச்சித்துறை இயக்குநராக இருந்த ஔவை நடராஜன் அவர்களின் மகன் அருள், பர்வின் சுல்தானா உள்ளிட்டவர்கள் சக கல்லூரி நண்பர்கள்.
என்னோடு பல்வேறு போட்டிகளில் அவர்கள் கலந்து கொண்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் என் வாழ்விலும் காதல் வந்தது. என் வாழ்வில் தேன் வார்க்கும் என் தோழி உஷாவைத் திருமணம் செய்த

என்னோடு பல்வேறு போட்டிகளில் அவர்கள் கலந்து கொண்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் என் வாழ்விலும் காதல் வந்தது. என் வாழ்வில் தேன் வார்க்கும் என் தோழி உஷாவைத் திருமணம் செய்துகொண்டேன். அது கலப்பு மற்றும் சீர்த்திருத்தத் திருமணம். முன்னாள் அமைச்சர் வீரபாண்டியாரின் உறவினரான எங்கள் பேராசிரியர் தங்கராஜ் தலைமையில், எங்கள் திருமணம் நடந்தது. அப்போது ஈரோடு தமிழன்பன், பெரியார்தாசன் உள்ளிட்டவர்கள் எங்களை வாழ்த்திய அந்த நிமிடங்கள் இப்போதும் நினைவில் இனிக்கின்றன. இப்போது எங்களுக்கு தூரிகை என்ற மகளும் பௌத்தன் என்ற மகனும் இருக் கிறார்கள். மகள் கல்லூரி போகிறார். மகன் பள்ளிப் படிப்பில்.
திரைப்படத் துறையில் நுழைந்தது எப்படி?
இது ஒரு எதிர்பாராத வாய்ப்பு என்றுதான் சொல்லவேண்டும். திருமணம் ஆனதும் நான் சாஸ்த்திரி பவனில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத் தில் ஏறத்தாழ 6 ஆண்டுகள் வேலை பார்த்தேன். அப்போது அங்கே பாஸ்போர்ட் தொடர்பாக வந்துசென்ற இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான், வித்யா சாகர், ஹாரிஸ் ஜெயராஜ், கலைஞானி கமல் உள்ளிட்ட திரைப்புள்ளிகளுடன் எனக்கு நட்பு ஏற்பட்டது. அவர்கள்தான் என்னை திரைத்துறைக்கு அழைத் தார்கள். சில வெளிவராப் படங்களுக்கும் ஆல்பங் களுக்கும் நான் பாடல்கள் எழுதியிருந்த நிலையில், முறையாக என் திரைப்பிரவேசம், கமல் மூலம்தான் நடந்தது.
என் முதல் கவிதைத் தொகுப்பான "தெரு ஓவியம்' நூலை, கமல் வெளியிடவேண்டும் என்று விரும்பினேன். என்னை தயாரிப்பாளர் மாதேஷ், அவரிடம் அழைத்துச்சென்று அறிமுகப்படுத்தினார்.
அப்போதே என் கவிதைகள் சிறப்பாக, புதிய கோணத்தில் இருப்பதாகப் பாராட்டினார் கமல். என் அழைப்பை ஏற்று நூலை வெளியிட இசைந்தார். இதற் காக கொடைக்கானலில் படப் பிடிப்பில் இருந்த அவர், சூட்டிங்கை ரத்து செய்து விட்டு, சென்னை வந்து நூலை வெளியிட்டார். பின்னர், ரயிலிலேயே கொடைக்கானலுக்குத் திரும்பினார். அவரது அந்த அன்பை இப்போதும் நினைத்துப் பார்க்கிறேன். அந்த அறிமுகத்தில்தான் தெனாலி படத்துக்கு பாடல் எழுதச் சொன்னார் கமல். அப்போது அலுவலகப் பணி நெருக்கடியாலும். ஏ.ஆர்.ரகுமான் கீ போர்டில் ?
வாசித்த டியூனை சரியாக கேட்ச் பண்ண முடியாத தாலும், எனக்கு வார்த்தைகள் பிடிபடவில்லை. இருந்தும், என்னைவிடாமல் தனது அடுத்த படமான பம்மல் கே. சம்மந்தம் படத்தில், பாடல் எழுதச் சொன்னார் கமல். அதில் "சகல கலா வல்லவனே...' என்ற படலை எழுதினேன். அதன் பின் நான் சிறகடிக்க, திரைவானம் திறந்துகொண்டது. இதற்கிடையே என் கல்லூரிக் கால தோழரான இயக்குநர் திருப்பதிசாமி, தனது நரசிம்மா படத்தில்
"லாலா நந்த லாலா.. வா வா... வா.. வா..
மோகம் கொண்டு கண்ணன் ஊதும்
மூங்கில் பாடல் வேண்டும்
ஒன்பது துளையில் எண்பது ராகம்
என்னை வந்து தீண்டும்' என்ற பாடலை எழுதியிருந்தேன். அதேபோல் 2001-ல் தில் படத்துக்காக வித்யாசாகர் இசையில் நான் எழுதிய.... "உன் சமையல் அறையில், நான் உப்பா சக்கரையா?' என்ற பாடல் எனக்கு பெரும் வெளிச்சத்தைக் கொடுத்து, தொடர் வாய்ப்புகளை உருவாக்கிக்கொடுத்தது.
கமல் படத்தில் நடித்திருந்தீர்களே?
ஆமாம். கமல் அடிக்கடிஎன்னிடம் இலக்கியம் பகிர்வார். அவரது ஆழமான ரசனை ஆச்சரியத்தைத் தரும். ஒரு நாள் திடீரென்று கமல் என்னை தனது தசாவதாரம் படத்தில் நடிக்க அழைத்தார். படப்பிடிப்பிற்கு தன் காரிலேயே என்னைக் கூட்டிப்போனார். அதில் கருப்பான பூவராகவன் கேரக்டரில் கமல் வரும்போது, நான் கபிலனாகவே வருவேன். அப்போது பூவராகவன் கேரக்டருக்கு எதிராக நான் ...
"மணல்; கூழாங்கல்லின் குழந்தை. நீங்கள் மண்ணை வெட்டுவது எங்கள் மழலையை வெட்டுவது போல்.
திருடிய மண்ணைக் கொட்டிவிடு
திருட்டுத் தொழிலை விட்டுவிடு
இனியும் திருட நினைத்தால் இவனை
இரண்டு துண்டாய் வெட்டிவிடு' என்றெல் லாம் கவிதைத்தனமாக வசனம் பேசியிருப்பேன். இதெல்லாம் கமல் என்மீது காட்டிய அன்பின் அடையாளம்..
கமலின் அரசியல் பற்றி?
கமல் என்ற மகா கலைஞனுக்கு சினிமா வில் நிறைய வேலை இருக்கு. அவர் அரசியலில்
தன்னைக் கரைத்துக்கொள்வதை நான் விரும்ப வில்லை.
ரஜினி பற்றி?
அதிகம் பழகவில்லை. எனினும் கபாலி பட சூட்டிங்கின் போது சாப்பிடக் கூப்பிட்டார்.
அப்போது ஆன்மீகம் பற்றிதான் அதிகம் பேசினார். அவருடைய எளிமை எனக்குப் பிடிக்கும்.
உங்கள் கவிதைப் பணிகள் எப்படி இருக்கிறது?
கலைஞர் சொன்னபடி, பாடல்களை மட்டும் எழுதாமல், கவிதைகளையும் தொடர்ந்து எழுதிக்கொண்டு தான் இருக்கிறேன். "குறில் நெடில்', "நகர்ப்பறை' ஆகிய இரண்டு கவிதைத் தொகுப்புகளும், "எகிறி குதித்தேன் வானம் இடித்தது' என்ற கட்டுரைத் தொகுப்பையும் நான் எழுதி முடித்திருக்கிறேன். விரைவில் வெளியிட இருக்கிறேன்.
உங்கள் பாடல்களில் உங்களுக்குப் பிடித்த பாடல்கள் எவை?
ஆகாயம் தீப்பிடிச்சா நிலா தூங்குமா?, ஆசை ஓர் புல்வெளி, என்னோடு நீயிருந்தால் உயிரோடு நான் இருப்பேன், என்றெல்லாம் என் பாடல்கல் பலவற்றையும் பட்டியல் போட்டு, பலரும் தங்களுக்குப் பிடித்ததாகக் குறிப்பிடுவார்கள்.
ஆனால், எனக்கு மிகவும் பிடித்த என் பாடல் என்றால் அது..
"எகிறி குதித்தேன் வானம் இடித்தது; பாதங்கள் இரண்டும் பறவையானது' பாடல்தான். அதே போல் நானே ரசித்து ரசித்து எழுதிய பாடல்.. "கரிகாலன் காலப் போல' பாடல். பெண்ணை எத்தனையோ கவிஞர்கள் வர்ணித்திருக்கிறார்கள். இருப்பினும், கொஞ்சம் புதிதாக முயன்று, திரைப்பாடலில் பெண்ணின் ஒவ்வொரு அங்கத்திற்கும் தலா 2 உவமைகளைச் சொல்லியிருக்கிறேன். "வேட்டைக்காரன் 'படத்தில் இடம் பெற்ற அந்தப் பாடல்...
"கரிகாலன் காலப் போலக் கருத்திருக்குது குழலு
குழலில்ல குழலில்ல தாஜ்மஹால் நிழலு
சேவலோடக் கொண்டை போல செவந்திருக்குது உதடு
உதடில்ல உதடில்ல மந்திரிச்சத் தகடு
ஏய் பருத்திப் பூவப்போல பதியுது ஒம்பாதம்
பாதமில்ல பாதமில்ல பச்சரிசி சாதம்'-என்பதாக நீளும்.
இதில் கூந்தல், உதடு, பாதம் என பாடல் முழுக்க, உவமைகளால் திருவிழா நடத்தியிருப்பேன். இப்படிப்பட்ட பாடல்கள் சுய நிறைவையும் மகிழ்வையும் தருகிறது.
இப்போது பாடலாசிரியர்கள் அதிகரித்த அளவுக்கு தரமான பாடல்கள் அதிகம் வரவில்லை என்ற ஆதங்கம் பலரிடமும் நிலவுகிறதே?
அதற்குக் காரணம், வெற்றிமாறன், வசந்தபாலன், ரஞ்சித் போல, புதிய கதையம்சத்தை இயக்குநர் கள் தேட வேண்டும். அதை யொட்டிப் பாடல்கள் இருக்கவேண்டும். மிஷ்கினுக்கு நான் எழுதும் பாடல்கள் கவிதை யாக இருக்கும். இயக்கு நர் மற்றும் இசையமைப் பாளரின் ரசனையே பாடல்களின் அழகையும் தரத்தையும் தீர்மானிக்கி றது.
நான் எல்லோரையும் குறிப்பிடவில்லை.
இன்றைக்கு புதிதாக வரும் ஒருசில இசையமைப் பாளர்கள் தமிழ் தெரியாமலே இசையமைக்கிறார் கள். இசைபற்றியும் பெரிய புலமை இருப்பதில்லை. அப்படிப்பட்டவர்களுக்கு வார்த்தைகளின் ஆழமும் அழகும் எப்படித் தெரியும்? அதேபோல் புதிதாகப் பாடல் எழுத வருகிறவர்கள், நிறைய படிக்கவேண்டும். தரமான பாடலைத் தரவேண்டும் என்ற வெறியோடு எழுதவேண்டும். துள்ளலிசைப் பாட்டு எழுதும் போது கூட, கொஞ்சம் இலக்கிய நயம் இருக்கனும். அதே துள்ளலிசைப் பாடல்களை நானும் எழுதியிருக்கேன். குறிப்பாகச் சொல்லனும்ன்னா, "கண்ணும் கண்ணும் நோக்கியோ' "ஆடுங்கடா என்ன சுத்தி', "ஆடி.. போனா ஆவணி' என்றெல்லாம் நிறைய எழுதியிருக்கேன். இவை எல்லாவற்றிலும் இலக்கிய நயம் இருக்கும். என்னைப் பொறுத்தவரை, கிடைக்கிற வாய்ப்புகளை நான் சரியாகவே பயன்படுத்துகிறேன். ஒரு கவிஞன், தான் எழுதும் ஒவ்வொரு வரியிலும் அவன் இருக்க வேண்டும்.
சமூகப் பிரச்சினைகளைத் தொடும் திரைப் பாடல்களும் இப்போது குறைந்து வருகிறதே?
மற்ற பாடலாசிரியர்களைப் பற்றி நான் சொல்ல விரும்பவில்லை. என்னைப் பொறுத்தவரை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சமூகத்தை எதிரொலிக் கிறேன்.
"போக்கிரிப் பொங்கல் பாடலில், தீப்பந்தம் எடுத்து தீண்டாமை கொளுத்து என்று எழுதினேன்.
வேட்டைக்காரன் படத்தில் "உணவு உடை இருப்பிடம் உழவனுக்குக் கிடைக்கணும். அவன் அனுபவிச்ச மிச்சம்தான் ஆண்டவனுக்கே படைக்கணும்!' என்று எழுதினேன். போக்கிரி படத்தில் "சேரி இல்லா ஊருக் குள்ள பொறக்க வேணும் பேரப்புள்ள!' என்று என் எண்ணத்தை விதைத்தேன். "பள்ளிக்கூட புள்ளப் போல சாதி பார்க்காம சேர்ந்திருப்போம்!' என்றும், "ஹிந்தி திணிப்பு வேணாம்டி, கரகாட்டம் ஆடிக்கிட்டே தமிழில் பாடேண்டி!' என்றும் "கற்றவை பற்றவை' என்றும் சமூகத்துக்கான முற்போக்குச் சிந்தனையை பதிவுசெய்திருக்கிறேன். இப்படி பெரிய பட்டியலையே போடலாம். இயன்றவரை இதய ஈரத்தைத் தொட்டுக் கொண்டுதான் என் பாடல்களை நான் எழுதுகிறேன்.
உங்களுக்குப் பிடித்த திரைப்படப் பாடலாசிரியர்கள்?
உணர்வு ரீதியிலான பாடல்களுக்கு கவியரசு கண்ணதாசன். அறிவு ரீதியிலான பாடல்களுக்கு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். இப்போதும் கூட கண்ணதாசன் பாடல்கள் உயிர்ப்பாக இருப்பதற்குக் காரணம், அதில் இருக்கும் உணர்ச்சிதான். அம்மாவை, அப்பாவை, அத்தையை, அண்ணன் தம்பியை, தங்கையைன்னு நம் சகல உறவுகளையும் தன் பாடல் களால் கொண்டாடியவர் கண்ணதாசன். "அண்ணன் என்னடா தம்பு என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே' இப்போது கேட்டாலும் அது நம் வாழ்வோடு பொருந்துகிறது. அதன்பிறகு வைரமுத்து வின் பாடல்கள் என்னை ஈர்த்தன. எனக்கு முன், தடம்பதித்த முன்னத்தி ஏர் வைரமுத்து. அதேபோல் மதிப்பிற்குரிய புலவர் புலமைப்பித்தனின் இலக்கிய வரிகளிலும் நான் வயமிழந்திருக்கிறேன்.
கலைஞர் மீது அதிகக் காதல் கொண்டவர் நீங்கள். அவருடனான நட்பு பற்றி?
2001-ல் ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடந்த கலைஞர் பிறந்த நாள் விழாவில், கவிக்கோ அப்துல்ரகுமான் தலைமையில் நடந்த கவியங்கில் நானும் கலந்துகொண்டேன். என்னை எங்கள் பேரா.
மு.பி.பாலசுப்ரமணியம்தான் பரிந்துரை செய்திருந் தார். நான் சின்னப்பையன் என்பதால், என்னை முதலில் பாடச்சொன்னார்கள். அப்போது மா.செ.வாக இருந்த பலராமன், தலைவர் கலைஞர் எதிரில் உட்கார்ந்தி ருக்கிறார். அதனால் சீக்கிரம் முடிச்சிக்க என்றார். கவிக்கோவோ, கட்டை விரலை உயர்த்திக்காட்டி, நீ, கவலைப்படாமல் பாடு என்றார். எடுத்த எடுப்பிலேயே கலைஞரைப் பார்த்து, "சூரியனுக்கு ஓட்டு கேட்க ஒரு சுயேட்சை வேட்பாளர் வந்திருக்கேன்'னு சொன்னேன்.
கலைஞர் பேராசிரியரைப் பார்த்து சிரித்தார். அடுத்து, "பனித்துளி; நீர்க்குமிழியின் முட்டை; பலாப்பழம் முள்ளம் பன்றியின் முட்டை; கலைஞர் தமிழ் முட்டை! ' என்ற நான். "வெள்ளைக் கரு, அவர் வேட்டி சட்டை, மஞ்சள் கரு சால்வை'ன்னுன்னு அடிச்சி விட்டேன். ஒரே கைதட்டல். அப்ப ஸ்டாலின் மேயரா இருந்தார். நிறைய பாலங்கள் கட்டினார். அது பற்றிச் சொல்லும் போது, "நீங்கள் இங்கே கட்டியிருக்கும் பாலம் ஒன்றையாவது, இங்கிருந்து ஈழம் நோக்கிக் கட்டியிருந்தால், கள்ளத் தோணியில் வரும் தமிழர்கள் கால்நடையாகவாவது வந்திருப்பார்கள்' என்றேன். இதைக்கேட்டு ஆரவாரம் செய்த கூட்டம், ஒன்ஸ் மோர் கேட்டது. அப்ப, ஜெ’அன்பழகன், கபிலன் கவிதையை ரெக்கார்டு பண்ணியிருக்கோம். அதை கவியரங்கம் முடிஞ்சதும் ஒலிபரப்புவோம்ன்னு அறிவிச்சார். அதே போல் செய்தார்கள். அந்த நிகழ்ச்சியின் இடையில் பாத்ரூம் போக, கலைஞர் மேலே வந்த போது, அவருக்கு போய் வணக்கம் வைத்தேன். என்னைப் பார்த்த கலைஞர், நல்லா இருந்துச்சுயா உங்கவிதை. எந்த ஊருன்னு கேட்டார். பாண்டிச்சேரின்னு சொன்னபடியே, அவரிடம் நான் எழுதிய "தெரு ஓவியம்' புத்தகத்தை நீட்டினேன். அதில் நான் கையெழுத்து கேட்கிறேன் என்று நினைத்துக்கொண்டு, பேனாவை எடுத்தார் கலைஞர். நானோ, இது நான் எழுதிய நூல், இதை நீங்கள் படித்துவிட்டு எனக்கு உங்கள் கருத்தைத் தெரிவித்தால் மகிழ்வேன்னு சொன்னேன். உடனே, பக்கத்தில் இருந்த தன் செயலாளர் சண்முகநாதனிடம், என் முகவரியை வாங்கிக்கொள்ளச்சொன்னார். அடுத்த இரண்டு நாளில், என் முகவரிக்கு கலைஞர் கடிதம் எழுதியிருந்தார். அதில், அவர், யாரோ ஒரு கல்லூரி மாணவர் பாடுறார்ன்னு நினைச்சேன். ஆனால் நீ, ஆரம்பம் முதல் கடைசிவரை மேடையை ஆக்கிரமிச் சிட்ட. பின் வரும் காலத்தில் நீ நல்ல கவிஞனா வரு வேன்னு சொல்லி, நாலஞ்சு கவிதைகளையும் மேற்கோள் காட்டிப் பாராட்டியிருந்தார்.
பிறகு நிறைய கவியரங்கத்துல அவர் என்னைப் பாட வச்சார்.
அதேபோல், கண்ணகி சிலையை ஜெயலலிதா அரசு அகற்றியபோது, கண்டனக் கூட்டம் கலைஞர் தலைமையில் மெரினாவில் நடந்தது. அப்போது, சண்முகநாதன் போன் பண்ணி, உங்களைத் தலைவர் கவிதை பாடச்சொல்றார்ன்னு சொன்னார். நானும் பாடினேன். இப்படி எவ்வளவோ சொல்லலாம். ஒருமுறை அவருடைய பிறந்த நாள்ல அவரை சந்திக்கப் போனப்ப, என்னய்யா சினிமாப் பாட்டை மட்டுமே எழுதுற? கவிதைகளும் தொடர்களும் எழுதுய்யா.. முரசொலியிலும் எழுதுன்னார். அவர்போல் ஒரு தலைவரைக் காண்பதரிது.
ரஞ்சித்தின் சார்ப்பட்டா இப்போது மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. ஆனால் இதற்கு முன்பான அவருடைய படங்கள் எல்லாம் சாதியத்தைப் பேசுவதாக விமர்சிக்கப் பட்டதே?
தான் பார்த்ததை, தான் கேட்டதை, தான் உணர்ந்ததை படைப்பாக்குகிறவனே உண்மையான கலைஞன். அந்த வகையில் இயக்குநர் ரஞ்சித், தான் வாழ்ந்த வாழ்வையும், தான் சுமந்த அழுக்கையும், தான் அடைந்த வலியையும் படைப்பாக்குவது தவறா? பல படங்களில் பல்வேறு சாதிக் குரல்கள் எழுந்திருக்கின்றன. அப்போ தெல்லாம் பேசாதவர்கள் ரஞ்சித் தன் வாழ்வைப் பேசினால் கூட, சாதி முத்திரை குத்துகிறார்கள். அவர் களுக்கு ஒரு நீதி. ரஞ்சித்துக்கு ஒரு நீதியா? ரஞ்சித்தின் குரலை சாதியக் குரலாகப் பார்க்காமல், ஒடுக்கப்பட்ட வர்களின் உரிமைக் குரலாகப் பார்க்கவேண்டும். நசுக்கப் பட்டவர்களின் ஆவேச வெடிப்பாக அதை மதிக்க வேண்டும்.
ரஞ்சித்தின் ‘சார்பட்டா’ திராவிடக் குரலை எதிரொலிச்சிருக்குதே?
ஆமாம். அது ஒரு பீடியாரிட்டிக்கல் படம். மிசா என்னும் நெருக்கடி காலம், நம் முதுகில் ஏறிய 75 களில், வட சென்னையில் இருந்த தட்ப வெப்பத்தை அப்படியே எந்தவித புனைவும் இல்லாமல் சார்பட்டா எதிரொலிச்சிருக்கு. அப்போது அங்கே இருந்த தி.மு.க.வினர் மிசாவைக் கண்டு அஞ்சாமல், அரசியல் செய்ததை அந்தப் படம் புனைவின்றிக் காட்டி இருக்கிறது. அதனால் அவர்களின் குரல் திராவிடக் குரலாகத்தான் இருக்கும். அரசியல் குரலாகத்தான் இருக்கும். ஆனால் தி.மு.க. என்று உச்சரித்தாலே சிலரின் காதுகளில் அது நெருப்பைக் காய்ச்சி ஊற்றுவது போல் இருக்கிறது. அதைப்பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை. அங்கே வாழ்ந்த சிலர், சார்பட்டாவில் பாத்திரங்களாகி இருக்கிறார் கள். மிசா காலகட்டத்தில் நடந்த சம்பவங்களை எதார்த்த மாக அப்படியே காட்டியிருப்பது, மக்களைக் கவர்ந்தி ருக்கிறது. இதுவரை டூயட், கொலை, செயற்கையான சண்டைக் காட்சிகள், கண்ணீர் வடிக்கும் செண்டி மெண்ட் காட்சிகள், படத்தோடு ஒட்டாத நகைச் சுவைக் காட்சிகள் என்று படத்தில் ஒரு கலவை இருந்தா தான், அந்தப்படம் ஓடும் என்று இதுவரை பலரும் நினைத்திருந்தார்கள். அந்த ஃபார்முலவை உடைத் தெறிந்திருக்கிறது சார்பட்டா. அந்தப் படத்தில் குத்துச் சண்டையும், கதையும், கதைக்களமும், எதார்த்த மும்தான் ஹீரோக்கள். இந்தப் படத்தின் மூலம், அன்றைய வட சென்னையை அப்படியே கண் முன்கொண்டு வந்திருக்கிறார் ரஞ்சித். எனவே ஒரு ரசிகனாகவும் வடசென்னைக் காரனாகவும் நான் பெருமைப்படுகிறேன். அந்தப் படத்தில் பாடல் எழுதியதற்காக கூடுதல் பெருமை எனக்கு ஏற்பட்டிருக்கிற்து.
சார்பட்டா படத்தில் எம்.ஜி.ஆரை இயக்குநர் ரஞ்சித் இழிவு செய்துவிட்டதாக முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் ஜெயகுமார் குற்றம் சாட்டியிருக்கிறாரே?
அது வேடிக்கையான குற்றச்சாட்டு. சார்பட்டா தி.மு.க.வின் புகழைப் பாட எடுக்கப்பட்ட படமல்ல. அது பீரியாடிக்கல் படம். மிசா கால கட்டத்தில் வடசென்னை எப்படி இருந்தது? குத்துச்சண்டை எந்த அளவில் போற்றப்பட்டது? என்பதைச் சொல்லும் படம் அது. அப்போது தி.மு.க. ஆட்சி கலைக்கப் பட்டது. மிசா காலகட்டத்தில் எங்கே எம்.ஜி,ஆர் களத்தில் இருந்தார்? முதலில் அவர் படத்தை பார்த்துவிட்டு சொல்லட்டும்.
திரைக்கலைஞர்கள் பலரும் அரசியல் ரீதியாக தங்களை அடையாளம் காட்டத் தயங்குகிற காலத்தில், நீங்கள் நிறைய திராவிட இயக்க மேடை களில் தொடர்ந்து ஏறுகிறீர்களே?
பெரியாரும் திராவிடக்கட்சிகளும் இல்லை என்றால், நான் படித்திருக்கமாட்டேன். படித்து நிமிர்ந் திருக்க மாட்டேன். ஒரு கவிஞனாக கவிதை நூல்களை எழுதியிருக்க மாட்டேன். பாடல்கள் எழுதியிருக்க மாட்டேன். மொத்தத்தின் நான் நானாக இருந்திருக்க மாட்டேன். என்னை உருவாக்கியது திராவிடச் சிந்தனை.
என்னை சுயமரியாதை உள்ள மனிதனாக வைத்திருப் பதும் அதுதான். இது எனக்கு மட்டுமல்ல; எல்லோருக் கும் பொருந்தும்.
ஆட்சி மாற்றம் வந்திருக்கிறதே?
பத்தாண்டு கால இருட்டிற்குப் பிறகு தமிழகம் விடிந்திருக்கிறது.முதல்வர் எடுத்த எடுப்பிலேயே, தந்தை யைத் தாண்டி 16 அடி பாய்கிறார். அது மகிழ்ச்சி யைத் தருகிறது. நான் ஒரு சின்ன கோரிக்கையை மட்டும் முதல்வர் ஸ்டாலினிடம் வைத்திருக்கிறேன். இசைஞானி இளையராஜா வசிக்கும் முருகேசந்தெருவிற்கு, இசைஞானி தெருவென்றும், இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் வசிக்கும் சாமியார் மடத்திற்கு, இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் நகர் என்றும் பெயர்மாற்றம் செய்ய வேண்டும் என்று கேட்டிருக்கிறேன். மக்களுக்கான மற்ற கோரிக்கைகளை அவர் பார்த்துக்கொள்வார்.
-அமுதா தமிழ்நாடன்