இயல், இசை, நாடகம் என்று ஏதேனும் ஒரு கலையில் தன்னை முழுமையாக ஒப்புக்கொடுத்து, ஆர்வத்துடன், ஈர்ப்புடன், உயிர்ப்புடன் உழைக்கும் கலைஞர்களின் வழியாக உன்னத நிலையை அடையமுயல்கிறது. கலைஞர்கள் வெறும் கருவி. கருவி இயக்கும் திறன்/உயிர் கலை. தமிழ்நாட்டில் நாடகத்தின் ஆதி வடிவம் தெருக்கூத்து எனலாம். பொழுதுபோக்கு மட்டுமே என்று தட்டையாகப் பார்க்காமல் ஒரு சடங்காக, மக்களின் நிலையை கூறும் வகையில் அரசியல், சமூக மாற்றத்தின் சாதக, பாதகத்தை குறிப்புணர்த்துவதாகவும் நிகழ்த்தப்பட்டு வந்தது என்று சொல்லலாம். தற்கால சூழ்நிலையில் தெருக்கூத்து அரிதான ஒன்றாக மாறிவருகிறது. அப்படியான கூத்துக் கலைஞர் களின் வாழ்வியல் பாடுகளை அவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு நெருக்கமாக, தமிழ் சினிமாவில் அதிகம் சொல்லப்படாத - முதல் முறையாக திருவண்ணாமலையும் அதன் சுற்றுவட்டார மக்களின் மொழியுடன் நடிகர், இயக்குநர் பாரி இளவழகன் 'ஜமா' என்ற திரைப்படத்தை தந்திருக்கிறார்.
மனிதர்

மனிதர்களுக்குள் ஈகோ என்று சொல்லுவார்களே, தன்னிருத் தலை நிரூபிக்கும் அல்லது நிலைநிறுத்தும் முயற்சியானது எல்லா துறையிலும், குடும்ப அமைப்பு உட்பட நிர்வாக அமைப்பிலும் இருக்கிறது. துறையிலும் அமைப்பிலும் ஒரு உச்சம் அதாவது அதிகார பொருந்திய நிலை என்ற ஒன்று இருக்கும்.
அதை அடையவும் தக்கவைத்துக் கொள்ளவும் ஒரு பெரும் போராட் டத்தை செய்யவேண்டியிருக்கிறது. எப்படி அந்த இடத்தை அடையலாம் என்பதை, எப்படியாவது அடையவேண்டும் என்கிற எண்ணம்தான் சுயநலம் என்கிற மனித கீழ்மையான படுகுழிக்குள் தள்ளிவிடுகிறது. மற்றவரையும் தள்ளிவிட முடிவெடுக்கிறது. இது ஒருவகையில் தக்கவைக்கவும் அந்த இடம் நோக்கி நகர்பவர்களுக்கும் பொருந்துவது போலவே, அந்த இடத்தை அடைந்தவர்கள் மீது வெறுப்பை எந்நேரமும் உண்டாக்குகிறது. எப்போது நேரம் வரும் தள்ளிவிடலாம் என்று காத்திருக்கிறது. இதை கூத்துக் கலையை களமாகக் கொண்டு ஜமா திரைக் காட்சி பூர்வமாக விரித்துச்சொல்கிறது.
தெருக்கூத்தை முதலில் வேடிக்கை பார்க்க வரும் இளவரசன் என்னும் இளைஞர், பின் அதில் ஐக்கியமாகி, வேஷம் கட்டி, கூட்டாளி தாண்டவத்துடன் சொந்த ஊரிலேயே 'அம்பலவாணன் நாடக சபா' என்றொரு ஜமா ஆரம்பிக்கிறார்.
கூத்துக்கலைஞராக வலம் வரும் இளவரசனிடமிருந்து சக கலைஞர் தாண்டவம் முழுமையாக 'ஜமாவை; தட்டிப் பறித்துக்கொள்கிறார். மனம் நொந்து குடித்து, குடித்து சாகிறார் இளவரசன். இளவரசனின் மகன் கல்யாணம் மீண்டும் ஜமாவை கைப்பற்றினாரா என்பதே திரைக்கதையின் வடிவம்.
திரைப்படத்தின் இயக்குநர், நடிகருமான பாரி இளவழகன், கல்யாணம் என்கிற கதாபாத்திரத்தில், கூத்தில் பெண் வேடமிட்டு அடவு கட்டும் கதாபாத்திரமாக அச்சு அசலாக அப்படியே வாழ்ந்திருக்கிறார். உடல் மொழியில் அடவு கட்டுபவர்களின் நெளிவுசுளிவுடன் ஆட்காட்டி விரலையும் நடுவிரலையும் சுண்டி போட்டுக்கொண்டு பேசுவது காதலி யிடம் குழைவது, ஆற்றாமை, கோபம் வெளிப்படுத்து வது, திக்கு தெரியாமல் வெறித்த பார்வை பார்ப்பது, சொந்த நிலம் விற்று மோசம் போகும்போது தவிப்பது என்று ஆகச் சிறந்த நடிகரை தமிழ் சினிமா பெற்றிருக்கிறது.
வாத்தியார் தாண்டவமாக சேத்தனும் இளவரசன் கதாபாத்திரத்தில் கிருஷ்ணா தயாளும் மற்ற நடிகர்களும் வெகுசிறப்பாக செய்திருக்கிறார்கள்.
கல்யாணத்தின் அம்மா(மணிமேகலை), விரும்பும் பெண்(அம்மு அபிராமி), தாண்டவம் மனைவி(சத்யா மருதாணி)பெண் கதாபாத்திர வார்ப்பு சிறப்பாக உள்ளது. மண்ணும் மணமும், சொல்லும் இசையும், அடுத்தடுத்து நகரும் தேவையான காட்சியுடன் நகரும் திரை மொழியிலும் சிறந்த கட்டமைப்பு கொண்ட இயக்கத்திலும் பாரி இளவழகன் மிளிர்கிறார்.
இசை இளையராஜா. திரை மொழிக்கு ஏற்றார் போல் இசையும் அமைதியும் மிகச் சரியாக, நேர்த்தியாக தந்திருப்பதை உணர்வீர்கள். அதுவும் இளவரசன் குன்றின்மீது தனித்து ஆடி சரியும் காட்சிக்கான பின்னணி இசையில் ஒரு கலைஞரின் இயலாமையை, நிராகரிப்பை, அவமானத்தை நம்முள் கடத்தியிருப்பார். இப்படியான இசை ஒருபுறம் இருக்க மேலும் கண்டிப்பாக குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய விஷயம் இரண்டு. ஒளிப்பதிவு, வசனம்.
முன்பாதியில் கல்யாணம் கதை சொல்லுவதாக ஆரம்பிக்கும் காட்சியிலும், பின்பகுதியில் இளவரசனின் கதை சொல்லும்போதும், இளவரசன் கூத்தை வெறுத்து, ஒதுக்கிப் பேசும்போதும், கல்யாணம் தனி ஜமா ஆரம்பிக்க ஏற்படும் பிரச்சினைகள் நேர் கொண்டபோதும், இளவரசன் கிரீடம் தரித்து தனித்து ஆடி சரியும்போதும் மலைக் காட்சி காண்பிக்கப்படுகிறது. எல்லாவற்றுக்கும் மலை வெறும் சாட்சியாக நிற்கிறது என்பதை கேமராவில் சரியாகக் காண்பித்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர் கோபால் கிருஷ்ணா.
கூத்துக் கலையைப் பின்னணியாக கொண்ட தமிழ்ப் படங்கள் குறைந்த அளவே வந்திருந்தாலும் சொல்லிக்கொள்ளக்கூடிய அளவில் நாசரின் 'அவதாரம்'(தெருக்கூத்து), சுரேஷ் கிருஷ்ணாவின் 'சங்கமம்'(தெருக்கூத்து), மீரா கதிரவனின் 'அவள் பெயர் தமிழரசி'(தோல்பாவை கூத்து), வசந்த பாலனின் 'காவியத்தலைவன்'(நாடகம்) இருக்கிறது. இந்த வரிசையில் அழுத்தமான, ஆழமான தடம்பதித்திருக்கிறது "ஜமா"