முரசுக் கட்டிலிலில் உறங்குபவர் புலவர் என அறிந்ததும் உருவிய வாளை உறையில் இட்டுவிட்டு கவரி எடுத்து வீசிய காவலனை நாம் அறிவோம். நீண்டகாலம் வாழவைக்கக்கூடிய அருநெல்லி அந்தக் கருநெல்லி என்பதைஅறிந்து அதைத் தான் உண்ணாமல் தமிழை வாழவைக்கக் கருதி அமுதின் இனிய சொற்கிழவி ஔவைக்குத் தந்து அழியாப் புகழ்பெற்ற அதியமானையும் நமக்குத் தெரியும். ஆனால் ஒரு மன்னனைப் பார்த்து உன் பிறப்பை ஐயுறுகிறேன் என்று சொல்லியும் உயிர்பிழைத்த நாவலராம் பாவலரைப் பலருக்குத் தெரியாது.
ஆம், சோழன் நலங்கிள்ளியின் தம்பி மாவளத்தானும் புலவர் தாமப்பல் கண்ணனாரும் வட்டாடிக் கொண்டிருந்தனர். பல்லாங்குழி ஆடும்போது பாண்டிவரும் எனத் தெரிந்ததும் ஒரே குழியில் இரண்டு காய்களைப் போட்டு அல்லது கையில் ஒரு காயை வைத்துக் கொண்டே பாண்டியை அள்ளி ஏமாற்றி ஆடுபவர் சிலர் உண்டு. அதைப்போல் புலவர் தாமப்பல் கண்ணனார் ஒரு வட்டைக் கையில் மறைத்து வைத்துக் கொண்டார். அதைக்கண்டு சினங்கொண்ட இளவரசன் மாவளத்தான் தன்னிடமிருந்த ஒரு வட்டைப் புலவர்மேல் எறிந்தான்.
புலவர் செய்தது தவறு. ஐயோ நாம் ஏமாற்றுவேலை செய்தோம் இளவரசன் அதைக்கண்டுவிட்டான் என்று நாணித் தலைகுனியவேண்டும் புலவர். மாறாக, "ஒரு புறாவின் அழிவுக்கு அஞ்சி துலாக்கோலில் (தராசில்) ஏறி அமர்ந்த வள்ளல் சிபி வழிவந்தவனே! கிள்ளியின் தம்பியே! நின்முன்னோர் எவரும் அந்தணர் துன்புறும்படி எதையும் செய்யமாட்டார்கள். இச்செயல் உனக்குத் தகுதியானதுதானா? உன் பிறப்பை நான் ஐயுறுகிறேன்' என்றார்.
..... கடுமான்
கை வண்தோன்றல் ஐயம் உடையேன்.
ஆர்புனை தெரியல்நின் முன்னோர் எல்லாம்
பார்ப்பார் நோவல செய்யலர்; மற்றிது
நீர்த்தோ நினக்கு?
என்கிறது புறநானாறு 39-ஆம் பாடல்.
இந்த இழிசொல்லைக் கேட்டால் எவ்வளவு பொறுமை சாலிக்கும் சினம் மூளும். வேறொரு அரசனாக இருந்தால் புலவரின் தலையைச் சீவி இருப்பான். இவனோ தான் தவறு செய்துவிட்டோமோ என்று நினைத்து வெட்கித் தலைகுனிந்தான்.
இச் செயல் புலவரின் உள்ளத்தை உறுத்தியது. நான் செய்த பிழைக்கு வருந்தாமல் நீ பிழைசெய்ததைப் போல் நாணினாய்.
""நமக்குப் பிழை செய்தோரைப் பொறுக்கும் செம்மலே! இக்குடியில் பிறந்தோரின் பெருமையைப் பாருங்கள் எனக் காணத்தக்க மொய்ம்பு காட்டினாய்.
தவறு செய்தவன் நானே. நீ காவிரிக் குன்றின் மணலைவிடப் பலகாலம் வாழ்வாயாக!'' என வாழ்த்தினார் புலவர்.
நின்யான் பிழைத்தது நோவாய்; எனினும்
நீ பிழைத் தாய்போல் நனிநா ணினையே
தம்மைப் பிழைத்தோர்க் கெண்மை காணும் எனக்
காண்டரு மொய்ம்பு காட்டினை ஆகலின்,
யானே பிழைத்தனன் சிறக்கநின் ஆயுள்
மிக்கு வரும் இன்னீர்க் காவிரி
எக்கர் இட்ட மணலினும் பலவே!
என்கிறது பாடல்.
தங்கக்காலமாம் சங்கக்காலம் தொட்டே தமிழரின்மேல் அந்தணர் ஆதிக்கம் இருந்திருக்கிறது. நாங்களே உயர்ந்தவர்கள் ஏனையோர் தாழ்ந்தவர்கள். தாங்கள் தவறு செய்தால்கூட தங்களுக்குத் தீங்கு செய்யக் கூடாது. அப்படிச் செய்தால் அவர்கள் நிரயத்துக்குச் (நரகத்துக்குச்) செல்ல நேரிடும் என்றெல்லாம் கூறி மூளைச் சலவை செய்து நம்மை அடிமைப்படுத்தி வைத்திருக்கிறார்கள் அந்தணர்கள் என்பது இதிலிருந்து நமக்குப் புலனாகின்றது.