மேசைமேல் இருந்த புத்தகத்தின் பக்கங்கள் காற்றில் படபடத்தன. “எடுத்துப் படிக்காமல் இன்னும் என்ன செய்துகொண்டிருக்கிறாய்… எதை எதையோ படித்துக் கொண்டிருக்கிறாயே?’’ என்று கேட்பது போல் இருந்தது.
அதை அன்போடு கையில் எடுத்தேன். "கண்மணி சோபியா' என்கிற தலைப்பில் அறிவியல் புதினம். வானம்பாடிக் கவிஞர் புவியரசு எழுதியது. எண்பத்து எட்டு வயதில் இப்படி ஒரு புதினத்தை எழுதியிருக்கிறாரே என்ற எண்ணத்தோடு எடுத்துப் புரட்டினால் “மிகப் பல காமுகர்களால் சிதைக்கப்பட்ட பின்னும் அதை உலகிற்கு உணர்த்த உயிர்தாங்கி வரும் ஈராக் நாட்டு இளம்பெண் நாதியாவுக்கும், பாலியல் வன்முறைக்கு ஆளாகி 42 ஆண்டுகள் கோமாவில் கிடந்த அருணாவுக்கும், புதுதில்லியில் கொடூரமாகக் கொல்லப்பட்ட நிர்பயாவுக்கும், சிதைத்துக் கொன்று கிணற்றில் வீசப்பட்ட 10 வயது தேனி சிறுமிக்கும், தலித் சிறுமி நந்தினிக்கும், ஏமாற்றப்பட்ட பொள்ளாச்சி அபலைகளுக்கும், கஸ்தூரிநாயக்கன்பாளையத்து 7 வயது சிறுமிக்கும், தினந்தோறும் காமக் கனலுக்கு இரையாகிவரும் பெண்குலத்தார் அனைவருக்கும் இது காணிக்கை என்ற குரல் எழுந்தது.
அன்பில் நெகிழ்ந்து வாழும் தந்தைமையின் குரல். கண்ணீரால் பொங்கி எழுந்த குரல். "இது பொறுப்பதில்லை- தம்பீ-எரிதழல் கொண்டு வா!' என்று கொதிக்கிற குரல். ஆம்.. புதினம் முழுக்க முழுக்கக் கவிஞர் புவியரசின் குரல். அணையாத நெருப்பின் அடையாளமாகக் கவிஞர் பொங்கிப் பீறிட்டெழுந்த என் சினத்தின் வெளிப்பாடுதான் இந்த- அறிவியல் வன்முறைப் புதினம்.
பச்சை மண்போன்ற நம் சிறுமிகளைப் பாலியல் வன்முறைக்குப் பலியாக்கி, நார் நாராகக் கிழித்துக் குதறும் காமப் பிசாசுகளுக்குச் சரியான தண்டனை கிடைக்காமல், தப்பிவிடுகிறார்கள். அதேசமயம் நம் குழந்தைகளின் உடல் நிலை, மனநிலைகளைச் சமூகம் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. செத்துப் போன குழந்தைகளே பாக்கியசாலிகள்!
இக்கொடுமை கண்டு யாருக்கும் நெஞ்சு கொதிக்கவில்லை. கோடானு கோடி சாமியார்கள் இதற்குத் தலைகுனியவில்லை.. கண்டனக் குரல்கூட எழுப்ப வில்லை. சாதாரண மக்களுக்கு இது ஒரு பரபரப்புச் செய்தி… அவ்வளவுதான்.
நெஞ்சு பதறவைக்கும் இந்த வன்முறைக் கற்பனைக் கதையை உங்கள் முன் வைக்கிறேன். என் மனக்குமுறலை சோபியாவே சொல்வாள்.
இந்தக் காம வெறிபிடித்த சொறிநாய்கள் இன்று நாட்டில் அதிகரித்துவிட்டதற்கு யார், அல்லது எது காரணம்? என்று கேட்டு நெருப்பாய்க் கொதிக்கிறார். புதினம் எழுந்த காரணம் இதுதான்.
சில நாள்களாகப் படித்த செய்திகள் யாவும் வரிசையாக நினைவுக்கு வந்தன. இப்போது இந்தப் புதினமும் அப்படிப்பட்ட செய்தியையே தாங்கிநின்றது. “யாரையும் தொந்தரவு செய்யாத எழுத்து எதற்கு?’என்ற அருந்ததி ராயின் கருத்து மேற்கோள் காட்டப்பட்டிருந்தது. சரிதான். ஒவ்வொரு எழுத்தும் சமுதாயத்தைக் கொஞ்சமாவது கிள்ளிப் பார்க்க வேண்டும். சுரணை போய்விடக் கூடாதல்லவா?. வெறும் வர்ணனைகளில் எத்தனை காலத்துக்குக் கடலை யும், மலைகளையும், குகைகளையும் படித்துக் கொண்டிருப்பது? சமகாலத் தைக் கண்முன் நிறுத்தாத எழுத்தால் என்ன பயன்? மக்களின் வாழ்க்கை ஏன் இப்படி இருக்கிறது என்பதற்கான விளக்கத்தைச் சமூக, அரசியல் பின்புலத்தில் காணாமல், புராணக் கதைகளின் புளுகு விளக்கங்களில் தேடிக் கொண்டிருப்பதில் என்ன இருக்கிறது? சமுதாயக் கவிஞரான புவியரசால் அப்படி இருக்கமுடியாது. அவர் முழங்கத்தான் செய்வார். செவிப்பறை கிழியப் பாடத்தான் செய்வார்.. ஆனால் இந்தப் புதினத் தில் வித்து, விதைப்பு, முளைப்பு, செடி, பூப்பு, மொக்கு, முகை, அரும்பு, போது, மலர், அலர், பூ, வீ, செம்மல், மணம் என்று பதினைந்து குறுந்தலைப்புகளில், நம்மைக் கடத்திக் கொண்டு போகிறார் கவிஞர். தஸ்தயேவ்ஸ்கி, பெர்னார்டு ஷா, ஸ்டீபன் ஹாக்கிங், தி. ஜானகிராமன், ரமேஷ் வைத்யா, ராஜு முருகன், கிஷன் சந்தர், சுஜாதா, பாரதி, ஷெல்டன் பி.கோப், அருந்ததி ராய், ஜான் பெர்க்கின்ஸ் போன்றோரின் கருத்துகளுக்குள் நம்மைக் கால்பதிக்க வைத்து நெடுக இழுத்துச் செல்கிறார்.
சுட்டுப் பொசுக்கும் வெயில்
கண்கள் கூசின
ஓர் இலைகூட அசையவில்லை’’
என்று ஹைகூ கவிதையைப் போலப் புதினம் தொடங்குகிறது. நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. புதினம் முழுவதும் இனி நம்மைச் சுடப்போகிறது என்பது.
யார் இந்த சோபியா? எங்கிருந்து வருகிறாள்? அமெரிக்கா வில் நாசாவில் பணிபுரியும் விஞ்ஞானி சார்லஸ் தேவநாதனின் மகள்தான் சோபியா.. அவள் அருணாசலம்- அன்னபூரணி இணையருக்கு எப்படி நெருக்கமாக இருக்கிறாள், இளங்கோ அவளிடம் எப்படிக் காதல் கொள்கிறான்? எல்லாவற்றையும் தர்க்கரீதியாக எப்படி விவாதிக்கிறாள், அவள் என்ன செய்கிறாள், என்ன ஆகிறாள் என்று நீள்கிற புதினம் விறுவிறுப்பாக எழுதப்பட்டிருக்கிறது.
சில ஆண்டுகளுக்கு முன், திரைப்படம் ஒன்று வெளிவந்தது. பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப் பட்டுக் கொலைசெய்யப்பட்ட பெண்ணின் தந்தையாக நடிகர் மணிவண்ணன் அருமையாக நடித்திருப்பார். உண்மையான குற்றவாளிகளுக்காக, புகழ்பெற்ற வழக்கறிஞர் வாதாடுவார். குற்றவாளிகள் விடுதலையாகி விடுவார்கள். ஆனால் மணிவண்ணனுக்குக் கிடைக்க வேண்டிய நீதியை அந்த வழக்கறிஞரே பெற்றுத் தருவார். எப்படித் தெரியுமா? எந்தக் குற்றவாளிகளுக்குத் தன் வாதத் திறமையால் விடுதலைக்கான தீர்ப்பை வாங்கித் தந்தாரோ, அவரே அவர் களை ஒவ்வொருவராகக் கொலை செய்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தைக்குரிய நீதியை வழங்குவார். அந்தத் திரைப்படம் நல்ல விறு விறுப்போடு அமைந்திருந்தது.
இந்தப் புதினத்தில் சோபியா அப்படிப்பட்ட நீதியைத்தான் வழங்குகிறாள். அப்படி வழங்குகிறபோது, அவள் கேட்கிற கேள்விகள் சொல்கிற நியாயங்கள் நம்மைச் சிந்திக்க வைக்கின்றன. அறம் என்று ஒன்று இருக்கிறதா? பாவத்தின் சம்பளம் மரணம் என்கிறார்களே அது உண்மைதானா? நியாயத் தீர்ப்பு நாள் என்றைக்கு வரும்? எந்தக் குற்றத்துக்கும் தண்டனையை உடனே கொடுத்தாக வேண்டும் என்பது அவள் தரப்பு நியாயம். திரையரங்கத்தில் அப்படி ஒரு நியாயத்தைக் காட்டுகிறாள் சோபியா. அவளைப் பின்புறமாகத் தட்டியவனை ஒரு மிதி மிதிக்கிறாள். அவன் அலறுகிறான்.
"இவளோ என்ன வலிக்குதா? பாத்து உக்காருங்க' என்கிறாள். அண்ணி அன்னபூரணி "என்னம்மா?'
என்கிறாள். இவளோ ,“ "ஒன்னுமில்ல அண்ணி… நாம உள்ள வரும்போது எம் பின்னால லேசா தட்டிப் பார்த்தான். எதுக்கும் போய்ப் பார்ப்போம்னு போனேன். இந்தத் தடவை நல்லாவே தடவிப் பார்த்தான். அதான் ஒரு மிதி மிதிச்சேன்! பாவம்! தாங்க முடியலெ. அலறிட்டான். கால் சரியாக ஒரு மாசமாவது ஆகும்' என்கிறாள். அன்னபூரணியோ, "ஏம்மா வம்பு.. வந்த இடத்தில?'’’ என்கிறாள்.
இவளோ,’"அண்ணி… வந்த இடத்திலதான் விவகாரம் வரும். வீட்லேயே இருந்தா பிரச்சனையே இல்ல. அப்பிடி இருந்துக்க முடியுதா? அண்ணி, தப்பு செஞ்சா ஒடனே தண்டனை குடுத்தா நியாயம்! சகிச்சுக்கிட்டு வந்தா அது அநியாயம்! அதுதான், ஒடனே குடுத்துட்டேன்' என்கிறாள்.
சோபியாவின் இந்தக் கோபத்துக்கு என்ன காரணம்? அவள் பாலியல் வன்முறைக்கு ஆளானவள்.
ஒருவரா இருவரா.. மொத்தம் ஆறு பேர். அவர்களில் நான்கு பேர் காவலர்கள். அவள் சொல்கிறாள்..
"அந்த ரேப்பர்கள் எல்லோருமே தண்டனை இல்லாமே தப்பிச்சிட்டாங்க. வெறும் டிரான்ஸ்பர். அவ்வளவு தான். இதுதான் யதார்த்த உலகம். அந்த வெள்ளத்தில் நாமும் ஒரு துரும்பு. பரிதாபத்திற்குரிய பெண்பிள்ளை கள் எல்லாமே புது வெள்ளத்தில் அகப்பட்ட துரும்புகள்.. ஒவ்வொரு நாளும் நியாயத்தீர்ப்பு நாளே! அப்படீன்னு மிர்தாத் சொன்ன மாதிரி நான் நேரம் பார்த்துக் கொண்டிருக்கேன்'’ என்கிறாள்.
"அய்யய்யோ! சோபி! பழிவாங்கப் போறியா?'’’ என்கிறாள் தெரசா அக்கா. அதற்கு சோபியோ "அதற்குப் பழிவாங்கல்னு பேரு இல்ல.. செய்த செயலுக்கு ஏற்ற பலனை அனுபவிக்க ’’உதவுதல்’’ அப்ப டீங்கற நல்ல திட்டம்.. பிராயச்சித்தம்' என்கிறாள்.
காவலர்கள் அந்தோணி செல்வராஜ், குணசேகரன், மாணிக்கம், மாரிமுத்து ஆகியோருக்கு அவள் வழங்கு கிற நியாயத் தீர்ப்பும் இறுதியாகக் கொல்லப்பட வேண்டிய காவலர் அருள்மணியைப் படுத்த படுக்கை யாகக் கண்ட போதும், அவனின் குடும்ப நிலைமையை அறிந்தபோது அவளுக்குள் எழுந்த எண்ணம் எப்படி இருக்கிறது என்பதும் நம் கண்களுக்குள் காட்சிகளாக விரிகின்றன. அவளுடைய செயல்பாடுகளுக்கு நியாயம் கற்பிக்க கவிஞர் சோபியாவாக மாறிப் பேசுகிறார். ’"வேண்டாம் சோபி.. விட்ரு' என்கிற இளங்கோவிடம், "விட்டுட்டா, இன்னும் எத்தனபேரு என்ன ஆவாங்களோ? ஒரு சமுதாயச் சொரணை வேண்டாமா? ஒண்ணு அரசாங்கம் தண்டிக்கணும். இல்லை, கடவுள் தண்டிக்கணும். ரெண்டும் இல்லேண்ணா நாமதானே தண்டிக்கணும். குற்றங்கள் குற்றங்களாகவே நின்னுவிடலாமா? தமிழ் வாழ்கன்னு… நியான் சைன் போட்டு வச்சிருக்காங்களே, அதை யெல்லாம் எடுத்துட்டு, அறம் தோற்கும், பாவம் வெல்லும்னு வெளிச்சம் போட்றலாமா? சொல்லு.. என்ன செய்யலாம்? அரசாங்கம் இருக்கு, காவல்துறை இருக்கு, நீதிமன்றம் இருக்கு, இப்படி இருக்க ஒவ்வொருத்தரும் சட்டத்தெக் கையில எடுக்கலாமா? அப்படீன்னு கேக்கறாங்களே,அவங்கெல்லாம் உண்மையில் இரகசியக் குற்றவாளிகள். தங்களோட பாதுகாப்புக்காக அப்படி ஒரு ஸ்டேட்மெண்ட் எடுத்து விடறாங்க.. திருட்டுப் பசங்க! அப்ப.. அப்ப அங்க இங்க போட்டுத் தள்னாத்தான் எல்லாம் உருப்படும்' என்கிறாள் கான்ஸ்டபிள் மாணிக்கத்துக்கு சோபியா நியாயத் தீர்ப்பை வழங்கியபோது மழையில் அகப்பட்டுக் கொண்ட வயதான பிராமணர் ஒருவருக்கும் அவளுக்கு மிடையில் நடைபெறுகிற உரையாடல் ஒருபுறம் நகைச்சுவையாக இருந்தாலும், இன்றைய அரசியல், சமுதாயச் சூழலுக்கேற்ப நுட்பமான அரசியலும் இழையோடியிருப்பதாகவே அவதானிக்க முடிகிறது.
“சாமீ.. நீங்க.. எப்பிடிப் போகணும்?’’
“பக்கத்தில்தான்.. முப்பாத்தம்மன் கோயில்பக்கம்.. நீ?’’
“பெரியார் சாலை’’
“ரொம்பத் தூரமாச்சேம்மா’’
சாமி… அதெல்லாம் உங்களைப் போலவாளுக்கு. நான் ஒரே ஓட்டமாக ஓடிருவேன்’’
இந்த உரையாடல் இப்படியென்றால் பட்டாக்கத்தி பாண்டியனுக்கு நியாயத் தீர்ப்பு வழங்கிவிட்டு அதனை தேவராய சுவாமிகளால் எழுதப்பட்டு, சென்னிமலையில் அரங்கேற்றம் செய்யப்பட்ட “கந்தர் சஷ்டிகவச வரிகளோடு பொருத்திப் பார்ப்பது அவளுக்குள் குமுறிக்கொண்டிருந்த ஆத்திரத்தை வெளிப்படுத்துவதாக அமைகின்றன. இந்தப் புதினத் தின் முக்கியமான விவாத அரங்கமாக பத்தாவது அத்தியாயம் விளங்குகிறது. கடைசியாகக் காவலர் அருள்மணிக்கு “நியாயத் தீர்ப்பு வழங்க வருகிறாள். குடும்ப நிலைமையைப் பார்க்கிறாள். அவனோ குற்றுயிரும் குலைஉயிருமாகக் கிடக்கிறான். காதலன் இளங்கோ, "பாவம் சோபி.. இப்ப எதுவும் பண்ணிட வேண்டாம்' என்கிறான். "அட.. நீயேன் கவலப்படறெ? சாகப் போறவனெ என்ன பண்ண? என்ன, கைநழுவிப் போகுதேங்கற கவலைதான்!' என்பவள் "இவன இப்பக் கொன்னா அது பாவச்செயல்!' என்கிறாள். அவன் அதிர்ந்து போகிறான்.
அவனுக்குத் தேவையான குருதியை அவளே தருகிறேன் என்கிறாள். இந்த இடத்திலிருந்து புதினத் தின் போக்கு அப்படியே திசைமாறுகிறது. அறிவியல் புதினமாக மாறுகிறது. அமெரிக்காவிலிருந்து தந்தை தேவநாதன் ஓடிவருகிறார். இளங்கோவிடம் பலவிசயங்களைச் சொல்கிறார். அவனோ திகைத்து நிற்கிறான்.. சோபியாவைத் திருமணம் செய்து கொள்கி றானா? எப்படி இந்தப் புதினம் அறிவியல் புதினமாக மாறுகிறது என்பதை முழுவதுமாக அறிந்து கொள்ள வேண்டுமென்றால் புத்தகத்தைப் புரட்டிப் படித்துப் பாருங்கள்..
எண்பத்து எட்டு வயதில் கவிஞர் புவியரசு பெற்றெடுத்த “கண்மணி சோபியா நியாயத் தீர்ப்பு நாளைப் பற்றி நிறையவே பேசுகிறாள். தீர்ப்புகளையும் எழுதிவிடுகிறாள். நம்மவர்கள் படித்துணர வேண்டும்.
நூல்: கண்மணி சோபியா’’
ஆசிரியர்: கவிஞர் புவியரசு
வெளியீடு: நந்தினி பதிப்பகம்
169, 6-வது வீதி நீட்சி, காந்திபுரம்
கோவை-12 அலைபேசி: 9942232135
விலை ரூ150/- பக் 170