மதுப் பழக்கத்தை நிறுத்துவதற்காக ஒரு மாதகாலம்... மனைவியின் வற்புறுத்தலைத் தொடர்ந்து ஸ்ரீநிவாசன் பெங்களூரில் தங்கியிருந்தான். மதுவி-ருந்தும் போதை மருந்துகளி-ருந்தும் இளைஞர்களை விடுவிப்பதற்காகப் பாடுபடும் சில ஆன்மிக மனிதர்கள் நடத்தக்கூடிய ஒரு நிறுவனத்தில்தான் அவன் போய்ச் சேர்ந்தான்.
அமைதியான குணம்படைத்த ஒரு புதிய மனிதனாகத் தன் கணவன் வீட்டிற்குத் திரும்பி வந்திருக்கிறான் என்று தோழிகளிடம் பிரேமா கூறினாள். மதுவின் வாசனையைக் காற்றில் பரப்பாமல், கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் அவன் நுழைந்து வந்தபோது, தான் மிகவும் சந்தோஷப்பட்டதாக அவள் அவர்களிடம் கூறினாள்.
"ஸ்ரீநியின் முக வெளிப்பாடு ஒரு துறவியுடையதைப்போல இருந்தது. வாசவதத்தையின் உபகுப்தனுடைய சாயல்...' பிரேமா கூறினாள்.
குடிகாரனாக இருந்த காலத்தில் அவன் அவளை அடித்து உதைக்க மட்டுமல்ல... கொஞ்சவும் செய்வான். அவன் தன்னைக் கட்டிப்பிடிப்பான் என்று நினைத்து அவள் வாசலை நோக்கி நடந்தாள். ஆனால், ஒரு விருந்தாளியின் கம்பீரத்துடன் அவன் ஒரு ஸோஃபாவில் அமர்ந்தான். செய்தித் தாள்களை ஒவ்வொன்றாக எடுத்து வாசித்தான்.
"என்னைப் பார்க்கறதுக்கு யாராரெல்லாம் வந்தாங்க?'' அவன் கேட்டான்.
அவன் திரைப்படத் தயாரிப்பாளர்களை மனதில் வைத்துதான் கேட்கிறான் என்பதை பிரேமா புரிந்துகொண்டாள். எனினும் அவள் கூறினாள்: "ஸைனுத்தீன் வந்திருந்தாரு. ஒரு மாசத்துகுள்ள கடனைத் திருப்பித் தரணும்னு சொன்னாரு. அவரோட மகளின் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டாச்சாம்.''
ஸ்ரீநிவாசனின் முகம் உடனடியாக சிவந்தது.
"அவன் இங்க வந்திருக்கக்கூடாது. இதெல்லாம் ஆம்பளைங்களுக்கிடையே பேசித் தீர்க்க வேண்டிய விஷயம். உனக்கு தொந்தரவு கொடுத்தது கொஞ்சம்கூட சரியில்ல...'' அவன் முணுமுணுத்தான்.
"தெரிஞ்சவரைக்கும் கேட்கறேன். ஸ்ரீநி... எவ்வளவு ரூபாய் கடன் வாங்கினீங்க?'' அவள் கேட்டாள்.
"உனக்கு அதெல்லாம் தெரியவேணாம். நான் என் நண்பர்கள்கிட்டயிருந்து கடன் வாங்குவேன். அதைத் திருப்பித் தரவும் செய்வேன். அது எதுவும் உன்னுடைய பொறுப்புக்குள்ள வராது.'' அவன் கறாராகக் கூறினான்.
"பெரிய தொகையா?'' அவள் கேட்டாள்.
அவன் எழுந்து நின்றான்.
"பெரிய தொகையா இருந்தால்கூட நீ அதைப்பத்தி சிந்திச்சு கவலைப்பட வேணாம். ஏதாவதொரு கதாபாத்திரம் எனக்கு உடனடியா கிடைக்காம இருக்காது.
முன்பணத்தை வாங்கி நான் கடனைத் தீர்த்திடுவேன். கடன் வாங்கறதுங்கறது ஒரு புதிய அனுபவமில்ல. யாரும் வரலையா? நான் சிலரை எதிர்பார்த்தேன்.'' அவன் கூறினான்.
"யார் வருவாங்க? கடந்த சிங்க மாதத்தில ஊட்டியில படப்பிடிப்பு நடக்கறப்போ நீங்க முக்கியமான நடிகையோட கணவரை அடிச்சு விழச்செய்தீங்கன்னு சினிமா பத்திரிகையில நான் வாசிச்சேன். குடிச்சு... நிதானத்தை இழந்து செய்யற காரியங்கள வெண்டைக்காய் அளவுல உள்ள எழுத்துகள்ல பத்திரிகைக்காரங்க அச்சடிக்கிறாங்க. என்கிட்ட பலரும் கேட்டாங்க. நான் தெரியாதுன்னு சொல்லி கழன்றுகிட்டேன்.''
"சினிமா பத்திரிகை? எந்த சினிமா பத்திரிகை உண்மையை மட்டும் எழுதுது? பொய்க் கதைங்களை எழுதினா, அவங்களுக்கு அதிகமான பிரதிகள் விற்பனையாகும். நான் மானநஷ்ட வழக்கு போடுவேன். அவங்க கையில இருந்து லட்சக்கணக்கான ரூபாயை நான் வாங்குவேன்.''
அவன் அலறினான்.
தன் கணவன் மது அருந்தாமலே சிங்கத்தைப்போல கர்ஜிப்பான் என்பதைப் புரிந்துகொண்டதால் இருக்கவேண்டும்- அவள் அதற்குப்பிறகு மௌனத்தைக் கடைப் பிடித்தாள்.
சமையலறையில் பருப்பு வெந்துவிட்டிருந்தது. காய்கறிகளை அறுப்பதற்காக அவள் கத்தியைக் கையில் எடுத்தாள்.
"எங்கே அந்த பத்திரிகை?'' அவன் சமையலறைக்குள் நுழைந்துகொண்டே கேட்டான்.
"எனக்குத் தெரியாது.'' அவள் கூறினாள்.
"உனக்குத் தெரியாம பத்திரிகை எங்க போயிருக்கும்?'' அவன் குரலை உயர்த்திக் கேட்டான்.
மனைவி தலையை உயர்த்தவில்லை. தோல் உரிக்கப்படாத வாழைக்காய்த் துண்டுகளை வாணலியில் கிளறியவாறு நின்று, அவள் சிந்தித்துக் கொண்டிருந்தாள்.
"நான் கேட்டது காதுல விழலையா?'' அவன் கேள்வியை மீண்டும் கேட்டான்.
"உங்களோட ரசிகைகள்ல யாராவது ஒருத்தி எடுத்துக்கிட்டுப் போயிருப்பா.'' பிரேமா கூறினாள்.
"ரசிகைகளா? நீ யாரைப்பத்தி பேசுற?'' அவன் கேட்டான்.
"டீச்சருங்க... உங்களோட கல்லூரியில சேர்ந்து படிச்சவங்க. பிறகு... அங்கும் இங்குமென பழக்கமானவங்க... எல்லாரும் தேடி வர்றதுண்டு.'' அவள் கூறினாள்.
"யாரும் வரலையான்னு கேட்டதுக்கு ஸைனுத்தீன் மட்டும்தான் வந்தான்னு நீ சொன்னே. என்னைப் பார்க்க வந்த பெண்களைப் பத்தி முதல்ல சொல்லல...'' அவன் கூறினான்.
கோபம் அவனுடைய முகத்தை அவலட்சணமாக்கியது. அவனுடைய முகத்தின் அழகு குறைவதைப் பார்த்து அவள் மேலும் சந்தோஷமடைந்தாள்.
"முழங்கையில சொறி இருக்கற அந்த டீச்சர் வந்தாள். விசேஷ நாட்கள்ல கோவிலுக்குப் போய் உங்களுக்காக மலர் அர்ச்சனை செய்யற அந்த கருப்பி... அது வந்துச்சு. இங்க இல்லைன்னு தெரிஞ்தும், பிரசாதத்தோட திரும்பிப் போயிருச்சு.''
"அந்த டீச்சருக்கு சொறி எதுவுமில்ல. நீ ஏன்
அவங்களை சொறிபிடிச்ச பெண்ணாக்கின?''
அவன் சிரித்துக்கொண்டே கேட்டான்.
"சொறியைப் பார்த்திருக்க மாட்டீங்க. பார்க்கவேண்டிய இடத்தில எதையும் நீங்க பார்த்திருக்க மாட்டீங்க...'' அவள் முணுமுணுத்தாள்.
"அந்த பெண்மேல உனக்கு ஏன் இந்த அளவுக்கு பகையுணர்வு? அப்பாவிப் பெண்... அதிகாலையில கோவிலுக்குப் போவாங்க... வழிபடுறதுக்கு ம
த்தியில என்னை நினைப்பாங்க. உடனே... எனக் காகவும் வழிபாடு நடத்துவாங்க. அந்த டீச்சர் அன்போட சின்னம். என்ன ஒரு குடும்பத்தனமான பெண்! நுனியில கட்டப்பட்டிருக்கற கூந்தலையும், அழகான ஆடையையும், நெத்தியில சந்தனக் குறியையும் பார்த்தா, நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவங்க என்பதை யாராலும் புரிஞ்சுக்க முடியும்.'' ஸ்ரீநிவாசன் கூறினான்.
"எல்லாம் ஒரு ஜாடை. உங்களுக்கு இதெல்லாம் புரியாது. டீச்சருக்கு கணவர் இருக்காரு. பிள்ளைகள் இருக்காங்க. அவங்களுக்காக மலர் அர்ச்சனை நடத்திக்கட்டும். உங்களுக்காக கும்பிடறதுக்கு நான் இல்லியா?'' பிரேமா உத்வேகத்துடன் கேட்டாள். கரண்டியை அவள் சமையலறையின் திண்ணையின்மீது வைத்தாள். வியர்வைத் துளிகள் முகத்தில் வழிந்தன.
"உனக்கு இருக்கறது குறுகிய மனசு...'' அவன் கூறினான்.
"இருக்கலாம்...'' அவள் கூறினாள். அந்த நிமிடத்தில் தொலைபேசி ஒலித்தது. அவன் வேகமாக அதை எடுத்து "ஹலோ...'' என்றான்.
"பிறந்தநாளா? அது... எனக்கு ஞாபகத்தில இல்ல. அதெல்லாம் வேணாம். எனக்காக இப்படி கஷ்டப்படாதீங்க. சரி சரி... கட்டாயம்னா மிருத்யுஞ்ஜய ஹோமம் செய்யுங்க. எனக்கு அதிலெல்லாம் நம்பிக்கை இல்ல...'' அவன் ஃபோனில் கூறினான்.
"டீச்சர்... அப்படித்தானே?'' அவள் கேட்டாள்.
"ஆமா... நாளை என்னோட பிறந்தநாள்னு சொன்னாங்க. எனக்கு ஞாபகத்தில இல்ல. நீயும் ஞாபகப்படுத்தல. அவங்களுக்கு கோவிலுக்குப் போகணும். என் பேர்ல ஒரு மிருத்யுஞ்ஜய ஹோமம் செய்யணும். பாயசத்திற்கு சீட்டு கொடுத்திருக்காங்க. அதை எடுத்துக்கிட்டு இங்க வரப்போறதா சொல்றாங்க. வேணாம்னு சொன்னா லும் அவங்க கேட்கல.'' ஸ்ரீநிவாசன் ஒரு புன்சிரிப்புடன் கூறினான்.
"நாளைக்கு அந்த நாசமா போனவளை நான் வீட்டுக்குள்ளே நுழையவிட மாட்டேன். ஒரு பிறந்தநாளன்னிக்கு அந்த பொணத்தை வீட்டுக்குள்ளே அனுமதிக்கறதுல எனக்கு விருப்பமில்ல...'' பிரேமா கூறினாள்.
"உன் உண்மையான குணத்தை பத்திரிகையாளருங்க இதுவரை புரிஞ்சிக்கல. நான் ஒரு சைத்தான்னும், நீ ஒரு தேவதைன்னும் அவங்க மனசுல நினைச்சிக்கிட்டு இருக்காங்க.'' அவன் கூறினான்.
சிரிக்கும்போது, ஒரு பக்கத்தில் துருத்திக்கொண்டிருந்த பல் அந்த சிரிப்பின் அழகைக் கெடுத்தது. அதை இமையை மூடாமல் பார்த்துக்கொண்டு நின்றிருந்தபோது பிரேமாவுக்குத் தோன்றியது... தன் கணவன் ஒரு சைத்தான்தான் என்று. ட்ராகுலாவின் முகச் சாயல்...
"ஒரு நடிகனாகறதுக்கு உங்களால முடியும்.
ஆனா ஒரு நட்சத்திரமாகறதுக்கு உங்களால முடியாது. அந்த அளவுக்கு உங்களுக்கு அழகில்லை.'' பிரேமா கூறினாள்.
அவன் குலுங்கிக் குலுங்கி சிரித்தான்.
"எனக்கு இளம்பெண்கள் எழுதற காதல் கடிதங்களை உனக்கு நான் காட்டறேன். மம்மூட்டிக்கும் மோகன்லாலுக்கும் வரக்கூடிய அளவுக்கு கடிதங்கள் ரசிகைகள்கிட்டயிருந்து எனக்கும் வருது. உனக்கு அதுவும் தெரியாதா?''
புடவையின் தலைப்பால் பிரேமா கண்களைத் துடைத்தாள். சாளரத்தின் வழியாகப் பார்த்தபோது, மஞ்சள்நிறக் குடையைப் பிடித்தவாறு தெருவில் நடந்துவரும் டீச்சரை
அவள் பார்த்தாள்.
"எனக்கு வாழ்க்கையே வெறுத்துப் போயிடுச்சு...'' அவள் கூறினாள்.
__________________
மொழிபெயர்ப்பாளரின் உரை
வணக்கம்.
அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்! இந்த மாத "இனிய உதய'த்திற்காக இரண்டு அருமை யான சிறுகதைகளை மொழிபெயர்த்திருக்கிறேன்.
"கேர் ஆஃப் ஸ்வாத் பள்ளத்தாக்கு' என்னும் சிறுகதை இந்திமொழியில் எழுதப்பட்டது. இந்தக் கதையை எழுதியவர் மனீஷா குல்ஸ்ரேஷ்ட என்னும் புகழ்பெற்ற பெண் எழுத்தாளர். ராஜஸ் தான் சாகித்ய அகாடமியின் ரானே ராகவ் விருதினைப் பெற்றிருக்கும் இவர், கீதாஞ்சலி இந்தோலி ஃப்ரெஞ்ச் இலக்கிய விருதினையும் பெற்றிருக்கிறார். இந்தக் கதையில் வரும் சுகந்தா மிகச் சிறந்த பாத்திரப் படைப்பு! குடும்ப வாழ்க்கையை நடத்திக்கொண்டே, வாழ்க்கையில் ஏதாவது சாதிக்கவேண்டுமென்று முயற்சிக்கும் சுகந்தாவைப் போன்ற எத்தனைப் பெண்களை நாம் தினமும் பார்த்துக்கொண்டிருக்கிறோம்! "என் முகவரி... அது என்னுடைய தொப்புள் கொடிக்கும் கர்ப்பப் பாத்திரத்திற்குமிடையே எங்கோ சிக்கித் தொங்கிக்கொண்டிருக்கிறது' என்ற வரிகளின்மூலம் சுகந்தாவைப் படம்பிடித்து நமக்கு முன்னால் உலவவிடுகிறார் மனீஷா. சியாமள் பாபுவும் நம் இதயங்களில் என்றும் வாழ்வார்.
"அடிமை' என்னும் மலையாளச் சிறுகதையை எழுதியவர் தேசிய சாகித்ய அகாடமி விருதுபெற்றவரும், மலையாள பெண் எழுத்தாளர்களின் துருவ நட்சத்திரமுமான மாதவிக்குட்டி. இந்தக் கதையின் நாயகியான பிரேமா... நம் வீடுகளில் அன்றாடம் பார்க்கும் சராசரிப் பெண் எனினும், அவளுக்கும் ஒரு தனித்துவ குணம் இருக்கிறது.
அதை யாருக்காகவும்... ஏன்- தன் கணவனுக்காகக்கூட விட்டுத்தர அவள் தயாராக இல்லை. அதுதான் நாம் ரசிக்கும்- விரும்பும் அவளின் உயர்ந்த குணம்! கதையை வாசித்து முடித்தபிறகும் நாம் பிரேமாவை மறக்கமாட்டோம்.
இந்த இரு கதைகளும் உங்களுக்கு மாறுபட்ட வாசிப்பு அனுபவத்தைத் தரும். நான் மொழி பெயர்க்கும் நல்ல இலக்கியப் படைப்புகளை "இனிய உதயம்'மூலம் தொடர்ந்து வாசித்துவரும் உயர்ந்த இலக்கிய உள்ளங்களுக்கு என் இதயத்தின் அடித்தளத்திலிருந்து நன்றி.
அன்புடன்,
சுரா