அவர் முதன் முதலில் எனக்கு பாடியது 'பால்குடம்' படத்தில். 'மல்லிகைப்பூ வாங்கி வந்தேன் புன்னகையின் நினைவாக' -என்ற பாடல்.அதற்கு முன்பாக அவர் தமிழ் சினிமாவில் பாடிய முதல் பாடல் 'சாந்தி நிலையம்' படத்தின் 'இயற்கை என்னும் இளைய கன்னி ' யாக இருக்கலாம் .அவர் பாடி முதலில் ஆடியோ வெளிவந்த பாடல் எம்ஜிஆர் நடித்த 'அடிமைப்பெண்' படத்தின் 'ஆயிரம் நிலவே வா' வாக இருக்கலாம்.
ஆனால் அவர் பாடல் முதலில் திரையில் தோன்றியது நான் நடித்த ' பால்குடம்' படத்தில்தான்.
1969 பொங்கலுக்கு 'பால்குடம்' வெளியானது. அதே ஆண்டு மே மாதம் தான் 'சாந்தி நிலையம்' , 'அடிமைப்பெண்' வெளியானது.
அந்தக் கணக்குப்படி பார்த்தால் எஸ்பிபி தமிழில் முதல் முதலில் எனக்குத்தான் பாடியிருக்கிறார்.
1971 -ல் 'மூன்று தெய்வங்கள்' படத்தில் அவர் 'முள்ளில்லா ரோஜா 'என்ற பாடல் எனக்காகப் பாடினார் .அப்போது அவருக்கு வயது 24 .இளமை ததும்பும் குரலில் பாடியிருப்பார் .
என் பாடலை படமாக்க ஒரு தயாரிப்பாளர் முதன்முதல

என் பாடலை படமாக்க ஒரு தயாரிப்பாளர் முதன்முதலில் வெளிப்புறப் படப்பிடிப்புக்கு ஊட்டிக்கு என்னை அழைத்துச்சென்றதும் அந்தப் பாடல் காட்சிக்காகத்தான். என்னுடன் சந்திரகலா பாடி நடித்தார்.
அந்தப்படம் சென்னை ஓட்டேரி மேகலா தியேட்டரில் வெளியாகியிருந்தது. இரவு காட்சி நான் பார்க்கப் போயிருந்தேன்.அப்போது அங்கே சட்டக்கல்லூரி மாணவர்கள் ஹாஸ்டலிருந்து லுங்கி, துண்டு என்று மேலே சட்டை இல்லாமல் வந்து குழுவாக அமர்ந்து படத்தைப் பார்த்தார்கள். நான் அந்தப் பாடல் காட்சியில் தோன்றி நடித்ததைப் பார்த்தவுடன் ""அடேய் சிவகுமார் ..உனக்கு வந்த வாழ்வு பாருடா!"" என்று கூச்சலிட்டார்கள். அதற்கு மேலும் அங்கு இருந்தால் சரியாக இருக்காது என்று முக்கால்வாசி படத்துடன் வெளியேறி சைக்கிளிலேயே வீடு வந்து சேர்ந்தேன்.
1971-ல் வந்த ஏ.பி .நாகராஜன் அவர்களின் படம் 'கண்காட்சி'' அந்தப் படத்தில் கே.டி.சந்தானம் நடிகர், பாடலாசிரியர் ஒரு பாடல் எழுதி இருந்தார்.
'அனங்கன் அங்கஜன் அன்பன் வசந்தன் மன்மதன் என்று' என்ற அந்தப் பாடலுக்காக எஸ்.பி.பியை அழைத்துக் கடினமான வரிகள் கொண்ட அந்தப் பாடலைக் காட்டிய போது இந்தப் பையன் பாடுவாரா என்று அவருக்கு ஒரு சந்தேகம் இருந்தது. ஆனால் எஸ்.பி.பி, "" நான் சென்னையில் வளர்ந்த பையன். எனக்கு தமிழ் நன்றாகத் தெரியும்"" என்று வீட்டுக்கு பாடல் வரிகளை எழுதி வாங்கிச்சென்று மறுநாள் பிரமாதமாகப் பாடினார். நாங்கள் எல்லாருமே அசந்து விட்டோம்.
இளையராஜாவின் இசையில் உச்சம் தொட்ட பாடல் என்று 'உச்சி வகுந்தெடுத்து' பாடலைச் சொல்லலாம். எஸ்.பி.பி தான் பாடியிருந்தார்.' ரோசாப்பூ ரவிக்கைக்காரி' படத்திற்காக அந்தப் பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்டு இருந்தது. நான் அப்போது பிரசாத் ஸ்டுடியோவில் 'ஏணிப்படிகள்' படப்பிடிப்பில் இருந்தேன் .பதிவான பாடலைக் கேட்டுவிட்டு அதிர்ந்து போய்விட்டேன்.
அங்கே வந்த தயாரிப்பாளர் திருப்பூர் மணியிடம்
""அந்த பாடல் காட்சிகளை இப்போது எடுக்க வேண்டாம். எல்லாம் முடிந்த பிறகு கடைசியாக எடுக்கலாம்"" என்று கூறினேன்.
அதன்படி 45 நாள், ஏற்காடு மலையில் வெயிலிலும் பனியிலும் காய்ந்து வறண்டு, உதட்டில் ரத்தம் வர வைத்து அந்த பாடல் காட்சியில் நடித்தேன். படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
அது எனது நூறாவது படம்..
அதே படத்தில் இவர் பாடிய 'மாமன் ஒருநாள் மல்லிகைப்பூ கொடுத்தான்' பாடலும் மிகப் பிரபலமானது. படம் எட்டு சென்டர்களில் நூறு நாள் ஓடியது 100-வது பட வெளியீட்டு விழாவில் முதல்வர் எம்ஜிஆர் கலந்து கொண்டு என்னை ஹீரோவாக வைத்து படம் தயாரித்த 100 தயாரிப்பாளர்களுக்கும் கேடயங்களை வழங்கினார்..
100-வது படத்தின் நூறாவது நாள் விழாவுக்கு சிவாஜி தலைமை தாங்கி படத்தில் நடித்தவர்கள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு கேடயம் வழங்கினார்..
இளையராஜாவின் இசையில் தேவராஜ் மோகன் இயக்கத்தில் வந்த 'சிட்டுக்குருவி' படத்தில் எஸ்.பி.பி பாடிய‘ என் கண்மணி உன் காதலி' என்ற பாடலும் மிகப் பிரபலமானது .நானும் என் மனசாட்சியும் பாடுவதுபோல் ஒரு பஸ்ஸில் துவங்கும் அந்தப் பாடல் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது.
அதற்கு எஸ்.பி.பி.காட்டிய பாவம் அற்புதமானது.
இயக்குநர் பாலச்சந்தர் நூறு படங்கள் எடுத்தவர்.. அதில் ஐந்து படங்கள் அவருக்கு ரொம்பவும் பிடித்தவை..அவற்றில் சிறந்த மூன்று என்று கருதப்படும் ' சொல்லத்தான் நினைக்கிறேன்',
'அக்னிசாட்சி', 'சிந்துபைரவி' படங்களில் நான் நடித்து இருக்கிறேன்.
'கனாக் காணும் கண்கள் மெல்ல உறங்காதோ பாடல் சொல்ல?' என்ற அற்புதமான பாடல் காட்சி 'அக்னி சாட்சி' படத்தில் வரும்.
அந்தப் பாடலை எஸ்பிபி உருகி உருகிப் பாடினார்.
இந்தப் படமும் பாடலும் என்னால் மறக்க முடியாது.இப்படி எத்தனையோ பாடல்களை எனக்குப் பாடியிருக்கிறார். அவர் 50 ஆண்டுகாலம் பாடி தனது சுவாசக்காற்றையே பாடலாக மாற்றி இந்த உலகத்தில் உலவ விட்டிருக்கிறார். நிறைவான வாழ்க்கை வாழ்ந்த மனிதர்.
அப்படிப்பட்ட சாதனையாளர் வாழ்க்கையில் நானும் இருந்திருக்கிறேன் என்பது எனக்குப் பெருமையாக இருக்கிறது.
இந்த மண்ணில் காற்றும் ஒலியும் இருக்கும் வரை தன் பாடல்கள் வழி எஸ்.பி.பி. சிரஞ்சீவியாக வாழ்ந்து கொண்டிருப்பார்.
-அருள்