அவன் ஏசுவிடம் கூறினான்:
"பிதாவே... நீங்கள் உங்களின் ராஜ்யத்திற் குள் நுழையும்போது என்னை நினைவில் வைத்திருங்கள்".
ஏசு அவனிடம் கூறினார்: "நிச்சயமாக நான் உனக்குக் கூறுகிறேன்... இன்று நீ என்னுடன் சொர்க்கத்தில் இருப்பாய்.''
லூக் ஷ்ஷ்ண்ண்ண். 42, 43.
ஒரு காலத்தில் இந்த உலகில் எழுபது வருடங்கள் வாழ்ந்த ஒரு மனிதன் இருந்தான். தன் வாழ்க்கை முழுவதும் அவன் பாவச் செயல்களையே செய்தான்.
அவனுடைய உடல்நலம் பாதிக்கப்பட்டது.
அதற்குப் பிறகும், அவன் தன் பாவச்செயல்களுக்காக வருந்தவில்லை.
இறுதித் தருணத்தில் மட்டுமே... தான் இறக்கும் நிலையில்...
அழுதவாறு அவன் கூறினான்:
"பிதாவே! என்னை மன்னியுங்கள். சிலுவையில் இருந்த திருடனை நீங்கள் மன்னித்ததைப் போல....''
இந்த வார்த்தைகளை அவன் உச்சரித்தபோது, அவனுடைய ஆன்மா அவனின் சரீரத்திலிருந்து நீங்கிக்கொண்டிருந்தது. கடவுளின் மீது அன்பு வைத்திருந்த... அவருடைய கருணையின்மீது நம்பிக்கை வைத்திருந்த... அந்த பாவியின் ஆன்மா சொர்க்கத்தின் வாயில்களுக்குச் சென்றது.
அவற்றைத் தட்டியது. சொர்க்க ராஜ்யத்திற்குள் நுழைவதற்காக பிரார்த்தனை செய்தது.
வாயிலுக்குள் இருந்து ஒரு குரல் வந்தது:
"சொ''
"அய்யா! நான் உங்களின் குரலைக் கேட்கிறேன்.
ஆனால், உங்களின் முகத்தைப் பார்க்க முடியவில்லை. உங்களின் பெயரையும் என்னால் தெரிந்துகொள்ள முடியவில்லை.''
குரல் பதில் கூறியது:
"நான்... பீட்டர்... இறைத்தூதர்.''
அந்த பாவங்கள் செய்த மனிதன் பதில் கூறினான்:
"என் மீது கருணை வையுங்கள் இறைத் தூதரான பீட்டர் அவர்களே! மனிதனின் பலவீனத்தையும், கடவுளின் கருணையையும் நினைத்துப் பாருங்கள். நீங்கள் ஏசுவின் சீடர்தானே? தன் சொந்த உதடுகளால் பேசும் அவரின் போதனைகளை நீங்கள் கேட்கவில்லையா? உங்களுக்கு முன்னால் அவர் கூறிய உதாரணமாக நீங்களே இல்லையா? அவர் எப்படி கவலைப்பட்டார் என்பதையும், மனதிற்குள் வருத்தப்பட்டார் என்பதையும் இப்போது நினைத்துப் பாருங்கள். விழிப்பு நிலையில் இருந்தவாறு பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று மூன்று தடவைகள் உங்களிடம் கூறினார். நீங்கள் உறங்கினீர்கள்.
ஏனென்றால், உங்களின் கண்கள் மிகவும் கனத்துப் போய் காணப்பட்டன.
நீங்கள் தூங்கிக்கொண்டிருப்பதை அவர் மூன்று முறைகள் பார்த்தார். என் கதையும் அதேதான்.
ஞாபகப்படுத்திப் பாருங்கள்... கையாஃபாஸுக்கு முன்னால் அவரைக் கொண்டு செல்லும் தருணத்தில்...
மரணமடையும் வரை நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருப்பதாக நீங்கள் எப்படி சத்தியம் பண்ணினீர்கள் என்பதையும், அவருக்கு எதிராக மூன்று முறைகள் எப்படி நடந்து கொண்டீர்கள் என்பதையும். என் விஷயமும் அதேதான். இதையும் நினைத்துப் பாருங்கள். சேவல் கூவும்போது, நீங்கள் வெளியே சென்று எப்படி கவலையுடன் அழுதீர்கள் என்பதை. அதேதான் எனக்கும் நடந்திருக்கிறது.
என்னை உள்ளே விடுவதற்கு நீங்கள் மறுக்க முடியாது.''
கதவுகளுக்குப் பின்னாலிருந்த குரல் அமைதியாக இருந்தது.
பாவங்கள் செய்த அந்த மனிதன் சிறிது நேரம் அங்கேயே நின்றிருந்துவிட்டு, மீண்டும் தட்ட ஆரம்பித்தான்.
சொர்க்க ராஜ்யத்திற்குள் தன்னை விடும்படி கேட்டான்.
கதவுகளுக்குப் பின்னாலிருந்து வேறொரு குரல் ஒலித்தது. அது கூறியது:
"யார் இந்த மனிதன்? இவன் பூமியில் எப்படி வாழ்ந்தான்?''
பாவங்களைக் கணக்கிடுபவரின் குரல் மீண்டும் ஒலித்தது.
அந்த பாவியின் அனைத்து பாவச் செயல்களையும் அது கூறியது. ஒரேயொரு நல்ல செயலைக்கூட செய்யவில்லை என்பதையும்.
கதவுகளுக்குப் பின்னாலிருந்த குரல் பதில் கூறியது:
"இங்கிருந்து போகட்டும்! இப்படிப்பட்ட பாவிகள் நம்முடன் சேர்ந்து சொர்க்கத்தில் இருக்க முடியாது." அதற்கு பாவி கூறினான்:
"அய்யா...நான் உங்களின் குரலைக் கேட்கிறேன். ஆனால், உங்களை என்னால் பார்க்க முடியவில்லை. உங்களின் பெயரும் எனக்குத் தெரியவில்லை.''
அந்த குரல் பதில் கூறியது:
"நான்... டேவிட்.
அரசனும், தீர்க்கதரிசியும்...''
அந்த பாவி நம்பிக்கையை இழந்து விடவில்லை.
சொர்க்கத்தின் வாயிலை விட்டு நகரவும் இல்லை. அவன் கூறினான்:
"என்மீது கருணை வையுங்கள்.. அரசர் டேவிட் அவர்களே! மனிதனின் பலவீனத்தையும், கடவுளின் கருணையையும் நினைத்துப் பாருங்கள். கடவுள் உங்களின்மீது அன்பு வைத்து, மனிதர்களுக்கு மத்தியில், உங்களை உயரத்தில் இருக்கும்படி செய்தார்.
உங்களுக்கு அனைத்தும் இருந்தன. அரசாங்கம், மதிப்பு, செல்வச் செழிப்பு, மனைவிகள், குழந்தைகள். ஆனால், நீங்கள் உங்களுடைய வீட்டின் மாடியிலிருந்து ஒரு ஏழை மனிதனின் மனைவியைப் பார்த்தீர்கள். பாவ எண்ணம் உங்களுக்குள் நுழைந்தது.
உரியாவின் மனைவியை அபகரித்துக் கொண்டீர்கள்.
அவனை கூர்மையான வாளால் தாக்கினீர்கள். பணக்கார மனிதராக இருந்தாலும், அந்த ஏழை மனிதனிடமிருந்த ஒரு பெண் ஆட்டை நீங்கள் எடுத்துக்கொண்டு, அவனைக் கொன்றுவிட்டீர்கள்.
இப்படிப்பட்ட காரியங்களை நானும் செய்திருக்கிறேன்.
அதற்குப் பின்னர் நீங்கள் எப்படி அதற்காக வருத்தப்பட்டீர்கள் என்பதையும், "எல்லையை மீறி செயல்பட்டதை நான் ஒத்துக்கொள்கிறேன். என் பாவங்கள் எனக்கு முன்னால் எப்போதும் நின்றுகொண்டே இருக்குமா?'' என்று கூறியதையும் ஞாபகப்படுத்திப் பாருங்கள். நானும் அதையேதான் செய்திருக்கிறேன்.
நான் உள்ளே நுழைவதற்கு நீங்கள் மறுக்க முடியாது.''
கதவுகளுக்குப் பின்னாலிருந்த குரல் அமைதியாக இருந்தது.
பாவச் செயல்களைச் செய்த அந்த மனிதன் அங்கேயே சிறிது நேரம் நின்றிருந்துவிட்டு, மீண்டும் கதவைத்தட்டினான். சொர்க்க ராஜ்யத்திற்குள் விடும்படி கேட்டான்.
கதவுகளுக்குப் பின்னாலிருந்து ஒரு மூன்றாவது குரல் ஒலித்தது:
"இங்கிருந்து வெளியேறு! சொர்க்க ராஜ்யத்திற்குள் பாவிகள் நுழைய முடியாது''.
அதற்கு அந்த பாவி கூறினான்:
"உங்களின் குரலை நான் கேட்கிறேன். ஆனால், உங்களின் முகத்தை என்னால் பார்க்க முடியவில்லை. உங்களின் பெயரும் எனக்குத் தெரியவில்லை.''
அதற்கு அந்தக் குரல் பதில் கூறியது:
"நான் புனித... ஜான். ஏசுவின் அன்பிற்குரிய சீடன்.''
அதைக் கேட்டு பாவி சந்தோஷமடைந்து,
கூறினான்:
"இப்போது நான் உறுதியாக உள்ளே நுழைவதற்கு அனுமதிக்கப்பட்டு விடுவேன். பீட்டரும் டேவிட்டும் என்னை உள்ளே நுழைவதற்கு விட்டிருக்கவேண்டும்.
ஏனென்றால், மனிதனின் பலவீனமும், கடவுளின் கருணையும் அவர்களுக்குத் தெரியும். நீங்கள் என்னை உள்ளே நுழைய விடுவீர்கள்.
ஏனென்றால், நீங்கள் அதிக அன்பு செலுத்துபவர்.
இல்லையா... புனித ஜான் அவர்களே?'
அன்பே கடவுள். அன்பு இல்லாதவர்கள், கடவுளை அறியாதவர்களா?'' என்று எழுதியவர் நீங்கள். உங்களின் வயதான காலத்தில் நீங்கள் மனிதர்களிடம் கூறவில்லையா? "சகோதரர்களே! ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்துங்கள்' என்று. பிறகு எப்படி உங்களால் என்னை வெறுப்புடன் பார்க்கமுடியும்? என்னை இங்கிருந்து விரட்டியடிக்க முடியும்? ஒன்று... நீங்கள் என்ன கூறினீர்களோ, அதிலிருந்து முரண்பட்டு நடக்கலாம். இல்லாவிட்டால்... என்மீது அன்பு செலுத்தலாம்.
சொர்க்க ராஜ்யத்திற்குள் என்னை நுழைய வைக்கலாம்.''
சொர்க்கத்தின் கதவுகள் திறந்தன. பாவச் செயல்களுக்காக வருத்தப்பட்ட பாவியை ஜான் இறுக அணைத்தவாறு சொர்க்க ராஜ்யத்திற்குள் அவனை அழைத்துச் சென்றார்.