வானத்தை நோக்கிப் பார்வையை உயர்த்தி நின்றவாறு, அளவற்ற ஆர்வத்துடன் பகீரதன் பிரார்த்தித்தான்:

""கங்கையே! உலகத்தின் பாவத்தை நீக்குபவளே! பூமிக்கு வரவேண்டும். வானத்தை முத்தமிட்டுக் கொண்டிருக்கும் உயர்ந்த மலையின் வழியாக இறங்கி, அடர்ந்த காடுகளின் வழியாகவும், வறண்ட நிலங்களின் வழியாகவும், பாலைவனங்களின் வழியாகவும் ஓடி ஓடி இங்கு... இந்த பாதாளத்திற்கு வந்து சேரவேண்டும். இங்கு என்னுடைய முன்னோர்களின் எலும்புக்கூடுகள் கிடக்கின்றன. உன்னுடைய கரம் பட்டால் மட்டுமே அவர்களுக்கு கதி உண்டாகும்.''

கடந்த காலத்தின் நினைவுகள் கொண்ட மனதின் வெப்பம் பட்டு, கங்கையின் இதயம் உருகியது. அவள் கேட்டாள்:

""நான் எப்படி வரமுடியும்? நீதான் பார்க்கிறாயே...

Advertisment

இந்த ஆகாயத்தில் நட்சத்திர மண்டலம்தான் என்னுடைய இடம். எல்லையற்ற மண்டலத்தில் கோடிக்கணக்கான சூரியன்களுக்கும் கோடிக்கணக் கான நட்சத்திரங்களுக்கும் பிரம்ம உலகத்திற்கும் விஷ்ணுவின் இடத்திற்கும் மத்தியில் நான் இவ்வாறு ஓடிக்கொண்டிருக்கிறேன். நான் விழும் வேகத்தைத் தாங்குவதற்கு பூமியால் முடியுமா?''

பகீரதன் கூறினான்: ""பூமியிலேயே மிகவும் உயரமான மலை இமயமலை. அங்கு "தூர்ஜடி' தவத்தில் இருக்கிறார். அவருடைய தலையில் பாதத்தை வை.

அதற்கு எதையும் தாங்கும் சக்தி இருக்கிறது.''

Advertisment

கங்கை சந்தேகப்பட்டாள்: ""அந்த அடர்ந்தசடை முடிக்குள் நான் அகப்பட்டுக்கொண்டால்...? காணாமல் போய்விட்டால்...? நெருப்புத் தன்மை நிறைந்த பகவான் சற்று கண்ணைத் திறந்தால் போதும்... என் கதை முடிந்துவிடும்.''

sivanபகீரதன் சமாதானப்படுத்தினான்: ""இல்லை தாயே! ஆதிதெய்வத்தை வழிபட்டு நான் வழி உண்டாக்குகிறேன். அதற்குப் பிறகு நீ புறப்பட்டால் போதும்.''

மீண்டும் பகீரதன் பல்லாயிரம் வருடங்கள் தட்சிணாமூர்த்தியான சிவனை நினைத்துத் தவம் செய்தான்.

""பகவானே! என் முன்னோர்கள் ஆணவம் உண்டாகி, தெளிவற்று பூமியைப் பாதாளமாக்குவதற்காக குழிதோண்டினார்கள். முனிவர்களின் சாபத்தால் அழிந்த அவர்களின் எலும்புக்கூடுகள் அனாதையாகக் கிடக்கின்றன. ஆதி மனிதர்களின் பாவத்தைப் போக்குவதற்காக, அவர்களுக்கு நற்கதி கிடைப்பதற்காக தேவ நதியான கங்கையை வரவேற்று பூமிக்குக் கொண்டுவர விரும்புகிறேன். மானிடப் பிறவிகளை முழுமையாகக் காப்பாற்ற வேண்டும்.''

சிவன் கூறினார்: ""சரி... நல்ல விஷயம்தான். கங்கையின் சுமையை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், ஆரம்பத்தில் அவள் மென்மையாக இருக்க வேண்டும். பணிவாகவும் சுத்தமாகவும் எளிமையாகவும் வரவேண்டும். பிறகு... இதயம் நிறைந்த ஈடுபாட்டுடன் கீழ்நோக்கிப் பாய்ந்து வரச்சொல். கீழ்நோக்கி... கீழ்நோக்கி மட்டும்.''

பகீரதன் மீண்டும் கங்கையிடம் பிரார்த்தித்தான்:

""வா... பாகீரதி... உன்னுடைய பாதச் சுமையைத் தாங்குவதற்கு பூதநாதர் தயாராக இருக்கிறார். கனிவு கொண்ட தேவியாக பூமியை நோக்கிப் புறப்பட்டு வா.''

கங்கைக்கு பயம் உண்டானது. அத்துடன் சந்தோஷமும்... அண்டசராசரத்தின் நாயகரான சங்கரனின் தலையை மிதிக்கக்கூடிய வாய்ப்பல்லவா கிடைத்திருக்கிறது? தேவதைகள் பாதம் தொழும் தேவனின் தலையில் பாதத்தை வைப்பதற்கு...

பெருமையுடன், ஆணவத்துடன், உற்சாகத்துடன் அவள் இரைச்சல் எழுப்பியவாறு குதித்து வந்தாள். அந்த ஓட்டத்தில் நுரையும் குமிழ்களும் நிறைந்தன.

பாய்ந்தோடி வரும்போது பலமான ஓசை... வெறிபிடித்த பெண்ணைப்போல... மனம் இளகிய மந்தாகினி,

ஜடாதரனின் திருமுடியை நோக்கி பிரவாகமெடுத்து வேகமாக வந்து பாய்ந்தாள்.

அற்புதம்! வானமெங்கும் நிறைந்து ஓடிய அந்த மகாபிரவாகத்தில் ஒரு துளிகூட வெளியே வரவில்லை. எல்லையற்ற பரம்பொருளின் வாரிசான கங்கை முதலும் முடிவுமற்ற மூர்த்தியின் தலைமுடியில் தஞ்சமானான்.

கீழே... தாழ்வாரத்திலிருந்தவாறு மலையின் உச்சியையே பார்த்துக்கொண்டிருந்த பகீரதன் அந்த விபரீத சம்பவத்தைப் பார்த்து தலையில் அடித்துக்கொண்டு புலம்பினான்:

""பகவானே! கருணை வையுங்கள். என் முன்னோர்

களுக்கு நடந்த அதே பாவச்சுமைதான் கங்கை அன்னைக்கும் உண்டாகியிருக்கிறது. அவளும் கர்வம் கொண்டவளாகிவிட்டாள். தன்னுடைய பலத்தையும் மகத்துவத்தையும் எண்ணி ஆணவம் கொண்டுவிட்டாள். பூதநாயகரான தங்களின் கரத்தால் புனிதமானவளாக்கி மீண்டும் அன்னையை கீழ்நோக்கி பாய்ந்தோடி வரச் செய்யுங்கள். ஏனென்றால்... கங்கையின் மூலம்தான் உலகத்திற்கு வாழ்வு கிடைக்கும். மனித இனம் உயிர்ப்பற்ற தன்மையிலிருந்து விலகி, மோட்சத்தை அடைவார்கள்.''

சதாசிவன் புன்னகைத்தார். சுண்டுவிரலை உயர்த்தி மார்பில் சற்று தொட்டார். கைலாசநாதரின் வலது பக்கத் தோளின் ஓரத்தில் சாய்ந்திருக்கும் முடிச்சுருளின் நுனியில் ஒரு துளி... அது நிறைந்து ததும்பி கீழே உதிர்ந்து விழுந்தது. கூர்மையான பாறைகளின் வழியாக நுழைந்து இறங்கி, பொன் நிற நதி மீண்டும் பகீரதனுக்கு முன்னால் வந்தது. அது கூறியது: ""வா... இளைஞனே! எனக்கு வழியைக் காட்டு.''

பகீரதன் வணங்கினான்: ""தாயே! மன்னிக்க வேண்டும். உயர்ந்த மலையின் உச்சியிலிருந்து உன்னை பாதாளத்தை நோக்கி நான் அழைத்திருக்கிறேன். இங்கு வழி சிரமமானது... துன்பங்கள் நிறைந்தது. தடைகள் நிறைந்த மலைச் சிகரங்களின் வழியாக ஏறி, புரண்டு, பாறைகளில் மோதிச் சிதறி, மலை இடுக்குகளுக்குள் நுழைந்து இறங்கி, நீண்ட தூரம் பயணித்து வரவேண்டும். மிகப்பெரிய சக்தி படைத்த முனிவர்களின் ஆசிரமங்களைக் கடக்க வேண்டும். கொடூர மிருகங்களின் தொல்லைகளைத் தாங்கிக்கொள்ள வேண்டும். படைப்பு உண்டான காலத்திலிருந்து ஈரம் பட்டிராத பாலைவனங்களின் வழியாக நீந்தி ஏறி, இறுதியில் பிணங்கள் வாழக்கூடிய இடமான, ஆழமான பள்ளத்திற்குள் விழவேண்டும். ஆனால், சொர்க்கத்தின் இன்பத்திற்குரிய நீர்நிலையாக இருந்த நீ இன்றிலிருந்து எங்களுடைய கங்கை அன்னையாகியிருக்கிறாய். மனித இனத்திற்கு முழுமையாக வாழ்வளிக்கும் நல்ல மனம் படைத்த மந்தாகினி... உன்னுடைய ஒவ்வொரு துளி நீரும் எங்களுக்கு தாய்ப் பால்...''

புண்ணியச் சின்னமான பாகீரதி கம்பீர வேடம் பூண்டாள். கன்னிப் பெண், தாயானதைப்போல அவள் பார்க்கப் பார்க்க வளர்ந்து, சில இடங்களில் வேகமாக, வேறுசில இடங்களில் மெதுவாக, தடைகள் இருக்குமிடத்தில் உக்கிரம் கொண்டவளாகப் பிரவாகமெடுத்து ஓடினாள். தாகமெடுத்த உயிரினங் களின் அவலம் நிறைந்த சத்தங்கள் கேட்கின்றன... ""நீர்... நீர்... உயிர் வாழ்வதற்கு அடிப்படையாக இருக்கும் தூய நீரைத் தா...''v அழைக்கும் இடங்களையெல்லாம் போய் அடையமுடியுமா? ""வாருங்கள்... வாருங்கள்... கவலையிலிருக்கும் உயிரினங்களே! என்னிடம் வாருங்கள்.'' சேவை என்ற அடர்ந்த ஜுவாலையில் தன்னை முழுமையாகக் கரைத்தவாறு கங்கை முன்னோக்கிப் பாய்ந்தது. இதற்கு முன்பு பழக்கமற்ற சூழல்கள்... ஆசையும் நிராசையும், நோயும் வறுமையும், வெறியும் பொறாமையும் ஒவ்வொன்றையும் மாறி மாறி மென்று உண்ணக்கூடிய அற்ப ஆயுள் கொண்ட மனிதர்கள்... பால் சுரக்கப்போவதை மறந்து நின்றுகொண்டிருக்கும் பசுக்கள்... பூங்கதிரில் காய்ந்த நிலையிலிருக்கும் தானியங்கள்... பசியெடுத்த வயல்களுக்குள் வாய்க்கால்கள் உண்டாக்கி அதன் நீர் கடந்து சென்றது. மிதக்கும் மரத்தடிகளாலும் மரப்படகுகளாலும் நெஞ்சுப்பகுதி அலங்கோலமாகத் தோன்றினாலும் வருத்தம் உண்டாகவில்லை. சொர்க்கத்தின் உணர்ச்சியற்ற சந்தோஷத்தைவிட, இந்த வேதனை எவ்வளவு உயர்ந்தது. ""பகீரதா, உனக்கு நான் நல்லது நடக்கட்டும் என்று வாழ்த்து கிறேன். சேவை செய்யும்போது உண்டாகக்கூடிய கவலை என்ன என்பதை இன்று நான் தெரிந்து கொண்டேனே!'' பகீரதன் கூறினான்: ""மன்னிக்க வேண்டும்... தாயே! பார்த்தது எவ்வளவு குறைவு! பார்ப்பதற்கும் தாங்கிக் கொள்வதற்கும் இன்னும் இருக்கின்றனவே.''

மலைகள் கடந்து, சமவெளிகள் கடந்தன. புண்ணிய தீர்த்தங்களும் கடந்தன. இருபக்கங்களிலிருந்தும் வந்து தன்னுடன் கலந்த காட்டு நீரோட்டங்களின் கலங்கிய நீர் சேர்ந்து கங்கை முற்றிலும் தாறுமாறாகிவிட்டது. கரைகளில் மோதிப் பாய்ந்து, கிளை வழிகளில் திரும்பியது. வழியெங்கும் பூக்களையும் ஏற்றுக்கொண்டு, பலம்கொண்ட பாகீரதி அறிமுகமற்ற இடங்களை நோக்கிப் பாய்ந்து போய்க்கொண்டிருந்தாள்.

அப்போதும் பகீரதன் முன்னால் நடந்துகொண்டி ருந்தான். வெறி பிடித்தவளைப்போல இருந்தால் மட்டுமே கங்கையால் பாதாளத்தின் பள்ளத்திற்குள் விழமுடியும் என்று அவனுக்குத் தெரியும். சகர மைந்தர்கள் வளர்த்து உண்டாக்கிய குழிகள் பூமியின் மேற்பகுதியையும் ஆழத்திற்குள் கொண்டு சென்றிருந்தன. பல்லாயிரக்கணக்கான எலும்புக் கூடுகள்... தாங்க முடியாத கெட்டநாற்றம்... மரணத்திற்கு நிகரான பேரமைதி... எதையும் காணாத தவ நிலை. அந்த ஆழமான குழிகளுக்கு அருகில் போய்ச் சேர்ந்தபோது, கங்கை சிறிது நேரம் தலையைத் திருப்பிக்கொண்டு நின்றது. ""பகீரதா... இதுதான் எனக்கு நீ காட்டும்- நான் போய்ச்சேரும் இடமா? இதுதான் என் தலைவிதியா? ஆகாயத்திலிருந்து பாதாளத்திற்கு... உச்சியிலிருந்து ஆழமான பள்ளத்திற்குள்... பேரமைதியிலிருந்து அமைதியற்ற நிலைக்கு... ஆனால்...''

பகீரதன் கவலை கலந்த குரலில் கூறினான்: ""ஆனால், அது நடந்தே ஆகவேண்டும் தாயே! பூமியிலிருக்கும் உயிரினங்களின் விடுதலைக்காக, பூமி நிலைபெற்று நிற்பதற்காக, பல யுகங்களின் பாதுகாப்பிற்காக ஆகாய கங்கை பாதாள கர்ப்பத்திற்குள் சென்று சேர்ந்தே ஆகவேண்டுமென்பது விதிக்கப்பட்டது. சகர மைந்தர்களின் சாகசமும் கபிலரின் சாபமும் பகீரதனின் தவமும் அதற்கான காரணங்களாக இருக்கலாம். ஆனால், தேவி! உன்னுடைய புனித நீர் பட்டு, மோட்சம் கிடைக்கும் நாங்கள் பூமியை சொர்க்கமாக்குவோம். புண்ணிய கங்கை நதி நிரந்தரமாக ஓடிக்கொண்டிருக்கும். போ... கீழ்நோக்கி பாய்ந்தோடு. கீழ்நோக்கி... கீழ் நோக்கி மட்டும்...''

""பகீரதா! உன்னை வாழ்த்துகிறேன். நீ கூறுவதைப் போல நடக்கட்டும். இங்கு... கங்கை இறக்கிறாள்.

ஆகாயத்தின் விளையாட்டுப் பிள்ளையான கங்கை... அவளுடைய கண்ணீர் பெருவெள்ளத்தை ஏற்று பல்லாயிரக்கணக்கான உயிர்கள் மோட்சம் அடைவதாக இருந்தால், நடக்கட்டும்... எல்லையற்ற பேராற்றலின் விதியை நான் ஏற்றுக்கொள்கிறேன்.''

அளவற்ற வேகத்துடன், ஆவேசம் நிறைந்த சாகசத்துடன் சொர்க்க நந்தினியான நதி கடலின் ஆழத்தை நோக்கி வேகமாகப் பாய்ந்தோடியது.

அவளுடைய கண்ணீர் வழிந்து பரவியது. உணர்ச்சிகள் எழும்பின. முழக்கத்தைப்போன்ற பெருமூச்சுடன் அலைகள் அசைந்து புரண்டன. கடல்... எல்லையற்று, பரந்த கடலாக பாகீரதி வடிவமெடுத்தாள்.

ஒரே நிமிடத்தில் பூகம்பங்கள் நின்றன. விஷவாயுக்கள் உயிரணுக்களாக மாறின. நரகஜீவிகள் மோட்சத்தை அடைந்து மறுபிறவி எடுத்துவந்தன. ஏழு பூகண்டங்களைச் சுற்றி ஏழு கடல்கள் அவற்றின் நீராவிக் காற்று வெளியை நோக்கி உயர்ந்து மேகமாக மாறி, மீண்டும் மழையாக கங்கை நீராகத் திரும்பி வந்து பூமி முழுவதையும் மழைத்தூறலால் மூடியது.

புலர்காலைப் பொழுதில் சூரியன் பொன் நிறப் பூக்களை அர்ப்பணித்தவாறு புகழ்ந்து கூறியது: ""நீ சந்தோஷமாக வரவேண்டும்.''

அமிர்தகிரணன் வெண்மையான புன்சிரிப்பை வெளிப்படுத்தியவாறு கூறினான்: ""தாயே! எழுந்து வா. என்னை இறுக அணைத்துக்கொள்.''

கடலின் நீலநீர் வட்டங்களில் ஆவேசம் உண்டானது.

அவள் திருப்தியடைந்தாள். நீலவானம் அவளுக்குமேலே குடையாக நின்றிருந்தது. நட்சத்திரக்கூட்டம் அதில் பிரதிபலித்தது. பகீரதன் நன்றிப்பெருக்குடன் கைகூப்பி நின்றவாறு கூறினான்:

""ஆகாயத்தைப்போல பூமிக்கும் வந்துவிட்டாயே!''

ஆனால், கண்ணுக்குத் தெரியாத உலகத்தில் அமைதியாக நின்றிருந்த சில தேவர்கள் அப்போதும் தூற்றிக்கொண்டிருந்தார்கள்.

""கங்கை புனிதமானவள்... பாதாளவாஹினி...

அவளுடைய புனிதத்தன்மை பாழாகிவிட்டதே!''