தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்

நிலையின் இழிந்தக் கடை.

-என்கிறார் நம் வள்ளுவப் பேராசான். இதன் பொருள், தன்னிலை இழந்து மானத்தை இழப்பவர்கள், தலையிலிருந்து உதிர்ந்த தலைமுடிக்குச் சமமாகக் கருதப்படுவார்கள் என்பதாகும்.

இந்த குறளுக்கு ஏற்ப மானம் கெட்டு, நாகரிகம் கெட்டு, பண்பு கெட்டு, நடத்தை கெட்டு, ஆபாசத்தில் ஊறித் திளைக்கிற குற்றச்சாட்டுக்கு, பா.ஜ.க.வில் இருக்கும் சில பெரும்புள்ளிகளே ஆளாகி இருக்கிறார்கள். உச்சகட்டமாக ஒருவர் மீது ஒருவர் ஆபாச அர்ச்சனைகளை நடத்தி, கூனிக்குறுகும் அளவிற்குக் குற்றச்சாட்டுக்களைக் கொட்டிவருகிறார்கள், இத்தகைய நபர்களைத்தான் தலைமுடிக்குச் சமமானவர்கள் என்கிறார் வள்ளுவர்.

Advertisment

ss

*

தி.மு.க. பேச்சாளர் ஒருவர் அண்மையில், நடிகை குஷ்புவை அநாகரிகமாக விமர்சித்தார் என்று பா.ஜ.க. அண்ணாமலை, தானே களமிறங்கி ஒரு போராட்டத்தையே நடத்தினார். ஆனால் அதற்கு முன்னதாகவே அந்தப் பேச்சாளர் தி.மு.க. தலைமையால் கடுமையாகக் கண்டிக்கப்பட்டு, பொதுவில் தன் வருத்தத்தையும் தெரிவித்துக்கொண்டார். அதன்பிறகும் அவருக்கு எதிராகத் தங்கள் மகளிரணியினரைத் திரட்டிப் போராட்டம் நடத்திய அண்ணாமலை "பெண்களை யார் ஆபாசமாகப் பேசினாலும் அவர்களின் நாக்கை அறுப்பேன்' என்று முண்டா தட்டினார். அப்படிப் பட்ட அண்ணாமலைதான் பா.ஜ.க.வினரின் அத்தனை அசிங்கங் களையும் ஆபாசங்களையும் இப்போது ஆசிர்வதித்துக்கொண்டு இருக்கிறார்.

தமிழக மக்களை அதிரவைக்கும் அளவிற்கு கடந்த வாரம், ஒரு ஆபாச லாவணிக் கச்சேரி வெளியிலே வந்தது. அதை நடத்தியவர், அந்தக் கட்சியில் இருக்கும் யாரோ ஒரு கீழ்மட்டத் தொண்டர் அல்ல. மாறாக, அண்மையில் பா.ஜ.க.வில் சேர்ந்து, அக் கட்சியின் ஓ.பி.சி. பிரிவின் மாநில பொறுப்பில் அமர்ந்த சூர்யா சிவா என்பவர்தான் அந்த ஆபாச லாவணிக் கச்சேரியை நடத்தினார்.

அதிலும் தங்கள் கட்சியிலேயே சிறுபான்மைப் பிரிவு மாநிலச் செயலாளராக இருக்கும் சகோதரி டெய்சி சரணுக்குதான் அவர் ஆபாச அர்ச்சனையை நடத்தினார்.

காரணம், சூரியா சிவாவுக்குப் பிடிக்காத அவரது முக்குலத்தோர் சமூகப் பிரமுகருக்கு, டெய்சி தரப்பு போஸ்டர் அடித்து ஒட்டியதாம். அவர் மீது எரிச்சலில் இருந்த சூர்யா சிவா, டெய்சியைத் தொடர்புகொண்டு இப்படி ஆபாச ஆபாசமாய் விளாசித் தள்ளி இருக்கிறார்.

பா.ஜ.க.வினர் எப்படியெல்லாம் வரம்புமீறிப் பேசுவார்கள் என்பதற்கு சூரியா சிவாவின் இந்த பேச்சு ஒரு உதாரணம். டெய்சியை செல்போனில் தொடர்புகொண்டு அவர் பேசிய அந்த "ஏ' ரக உரையாடலையும் நக்கீரன்தான், தனது யூடியூப் சேனல் மூலம் முதன்முதலில் அம்பலப்படுத்தியது.

அதில் அப்படி சூர்யா என்ன பேசினார் என்பதை முழுதாக இங்கே பதிவிட முடியாது. அவ்வளவு ஆபாசச் சாக்கடை வழிகிறது அவர் பேச்சில். எனினும் தனது முரட்டுத்தனத்தையும் சண்டியர் தனத்தையும் அவர் எப்படி வெளிப்படுத்துகிறார் என்பதை, சில சொற்களை தணிக்கை செய்துவிட்டுப் பார்ப்போம்.

காட்டமாக டெய்சியிடம் பேசும் அவர், எடுத்த எடுப்பிலேயே....

"கேசவ விநாயகம் கிட்ட...... பதவியை வாங்கிக்கிட்டு வந்து நிப்ப. உன் கிட்ட நான்வந்து தலையைக் குனிஞ்சிக்கிட்டு நிக்கனுமாடி?......... நீ ஊர் மேஞ்சுக்கிட்டு பதவியை வாங்கிக்கிட்டு வந்த..... ஒரு சாமியாருக்கிட்ட..... இருக்குற நீ பெரிய பத்தினியா? நீ அண்ணாமலை கிட்ட போ. ஜே.பி. நட்டா கிட்ட போ...

அமித்ஷா கிட்ட போ... மோடிகிட்ட போ.. எங்க வேணும்னாலும் போ' என்று சகட்டுமேனிக்குத் தங்கள் கட்சிப் பிரமுகர்களையும் தலைவர்களையும் தன் ஆபாசப் பேச்சுக்குள் இழுக்கும் அவர்...

"நான் என் சாதிக்காரனை உன் மீது ஏவிவிடுறேன். நாளைக்கு நீ ஊரு தாண்டமுடியாது. உன்னோட.... அறுத்து மெரினா பீச்ல போடுவேன். நாளைக்கு நீ தெருவுல நாயா செத்துக்கிடப்ப. நான் யாருன்னு இனிமே நீ பாப்ப. ஒரு மாசத்துல நீ வாழ முடியாதபடி செய்றேன். சென்னைக்குள்ள நீ வாழமாட்ட. பத்துப் பைசாவுக்கு நீ தேறமாட்ட...' என்றதோடு..

"ஜனவரி 2023-க்குள் உன் கதைய முடிச்சிடுவேன். நான் தி.மு.க.வுலயே ரவுடியிசம் பண்ணுனவன்' என்று டெரரின் உச்சத்துக்குப் போகிறார்.

சூரியா தனது பேச்சு மூலம்.....

1. பா.ஜ.க.வில் முக்கியப் பொறுப்பில் இருக்கும் கேசவவிநாயகம் என்பவரை, பாலியல் ரீதியாக காம்ப்ரமைஸ் செய்துதான், டெய்சி சிறுபான்மைப் பிரிவு பொறுப்பாளர் பதவியை வாங்கினார் என்று குற்றம் சாட்டியிருக் கிறார்.

2. டெய்சியை ஆபாசமாக சித்தரித்த தோடு, அவரைத் துண்டு துண்டாக வெட்டி மெரினாவில் வீசுவேன் என்று கொடூரமாக மிரட்டி இருக்கிறார்.

3. அதோடு, 2023-க்குள் டெய்சியைக் கொன்றுவிடுவேன் என்று அவரது மரணத்துக்கும் கெடுவிதித்திருக்கிறார்.

4. அது விபத்தாகவோ கொலையாகவோ இருக்கும் என்றும் அச்சுறுத்தி இருக்கிறார்.

5. மேலும், தனது சமூகத்தைச் சேர்ந்தவர்களை டெய்சி மீது ஏவுவேன் என்று கூறி, சாதிய மோதலுக்கும் கலவரத்துக்கும் அச்சாரம் போடுவதுபோல் பேசி இருக்கிறார்.

6. பொது மக்கள் திகிலடையும் வகையில்... பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் அவர் பேசியிருக்கிறார்.

-அப்படி இருந்தும், ஆபாச நாயகன் சூரியாவை அண்ணாமலை கண்டிக்கவில்லை. தான் நடத்திய ஆபாசக் கச்சேரிக்காக பொதுவில் மன்னிப்புக் கேட்கும் படியும் சூரியாவைக் கேட்டுக்கொள்ளவில்லை. அவர் மீது காவல்துறையில் புகார் கொடுக்கும்படியும்

அவர் டெய்சியிடம் சொல்லவில்லை. இதற்கு மாறாக, கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு விசாரித்து அறிக்கை தரும்வரை சூர்யா, கட்சி நிகழ்சிகளில் பங்கேற்கவேண்டாம் என்று கேட்டுக்கொள்வதாக 22 ஆம் தேதி ஒரு பவ்ய அறிக்கையை வெளியிட்டார் அண்ணாமலை.

Advertisment

ff

அதேநேரம், ஆபாச அர்ச்சனைக்கு ஆளான டெய்சிக்கு ஆதரவாக, அதே கட்சியில், அண்டை மாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவுத் தலைவராக இருந்த நடிகை காயத்ரி களமிறங்கினார். தனது டுவிட்டர் பக்கத்தில்...

"இப்படிப்பட்ட நபர்களை போலீஸார் கைதுசெய்ய வேண்டும். கட்சியை விட்டு உடனடியாக நீக்கவேண்டும். இப்படிப்பட்ட நபர்களுக்கு கட்சியில் மாநிலப் பதவி கொடுத்தது மிகப்பெரிய தவறு' என்று குரல் எழுப்பினார். ஆபாச நாயகன் சூரியா சிவாவைக் கண்டிக்கத் துப்பில்லாத அண்ணாமலை, பாதிக்கப்பட்ட டெய்சிக்காகக் குரல்கொடுத்த காயத்ரி மீது கடும் கோபம்கொண்டு, அவரைக் கட்சியிலிருந்து 6 மாதங்களுக்கு நீக்கிவைப்பதாக அறிவிப்பை வெளியிட்டார். இதிலேயே அந்த அண்ணாமலை எப்படிப்பட்டவர் என்பது தெரியவில்லையா?

சூரியாவின் பேச்சை எளிதாக எடுத்துக்கொண்ட அண்ணாமலையைப் பார்க்கும்போது, உண்மையில் அவர் ஒரு ஐ.பி.எஸ். அதிகாரிதானா? என்ற கேள்வி நமக்கே எழுகிறது.

அவர் ஒரு முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி என்றால் என்ன செய்திருக்கவேண்டும்? ஆடியோ ஆதாரம் பகிரங்கமாக வெளியான நிலையில், கொலைமிரட்டல் குறித்தும், ஆபாச அர்ச்சனை குறித்தும் சூரியா மீது, காவல்துறையில் டெய்சியை விட்டுப் புகார் கொடுக்கச் சொல்லியிருக்க வேண்டாமா? அதைச் செய்யாத அண்ணாமலை, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதிவேண்டும் என்று பேசிய நடிகை காயத்ரி மீது கோபம் கொள்கிறார். சூரியாவை கண்டிக்க காயத்ரிக்கு என்ன உரிமை இருக்கிறது என்று கோபப்படுகிறார். அதனால் அவரை 6 மாதங்களுக்கு கட்சியைவிட்டு நீக்குகிறார்.

அப்படியென்றால்... இங்கே சூரியா சிவாவுக்கு எதிராக அவரால் ஒரு சிறு துரும்பையும் அசைக்க முயவில்லை என்று தெரிகிறது.

இதையெல்லாம் பார்க்கும்போது "அண்ணாமலை, சூரியா சிவாவிடம் ஏதோ ஒரு வகையில் சிக்கிக்கொண்டிருக்கிறார். சூரியாவிடம் பம்முகிறார்' என்கிறார்கள் பலரும். அதேபோல் எதற்கெடுத்தாலும் பாய்ந்து பிடுங்கும் பா.ஜ.க.வைச் சேர்ந்த நடிகைகளான கஸ்தூரி, குஷ்பு, கௌதமி உள்ளிட்ட நடிகைகளும்கூட அண்ணாமலையின் பார்வைக்குக் கட்டுப்பட்டு, டெய்சி விசயத்தில் அமைதி காத்துவருகிறார்கள். டெய்சியை ஆபாசமாகத் திட்டித் தீர்த்த சூரியா சிவா பற்றி அவர்கள் மூச்சுவிடவில்லை. இவர்கள்தான் அடிக்கடி பெண்ணுரிமை பற்றிக் குரல் எழுப்புகிற பெண்ணியப் போராளிகளாம்.

இந்த விவகாரத்தில் சூரியாவுக்கு எந்தவிதமான சட்டச் சிக்கலும் ஏற்பட்டு விடக்கூடாது என்று பதைத்த அண்ணாமலை, சூரியா சிவாவையும் அவரது மிரட்டலுக்கும் ஆபாச அர்ச் சனைக்கும் ஆளான டெய்சியையும் சமாதானப் படுத்தி இருக்கிறார்.

இதைத்தொடர்ந்து திருப்பூரிலுள்ள பா.ஜ.க. அலுவலகத்தில் சூர்யா சிவாவும் டெய்சியும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தார்கள். அப்போது டெய்சி...

"கண் திருஷ்டி பட்டதுபோல் இந்த அசம்பாவித சம்பவம் நடந்துவிட்டது. சூர்யா சிவா எனக்கு தம்பி போன்றவர். உணர்ச்சிவசப்பட்டு அவர் பேசிவிட்டார். இனி நாங்கள் அக்கா தம்பியாகப் பழகுவோம். பிரச்சினையை சுமுகமாக முடித்துக்கொண்டோம்.' என்று சொல்லியிருக்கிறார்.

எந்தத் தம்பி தன் அக்காவை, இப்படி அறுத்துவிடுவேன்... கிழித்துவிடுவேன்... துண்டு துண்டாக வெட்டி வீசிவிடுவேன் என்று மிரட்டுவார்? ஆபாசமாகப் பேசுவார்?

இப்படிப்பட்ட அசிங்கத்தையும் வெட்கக்கேட்டையும் எளிதாக சகித்துக்கொண்டு, சமாதானமாகிவிட்டேன். கட்சிப்பணியில் தொடருவேன் என்று அறிவித்திருக்கிறார் பாதிக்கப்பட்ட பெண்மணி. தனக்கு என்ன நேர்ந்தாலும், தன்னை எவ்வளவு இழிவுசெய்தாலும். பதவி இருந்தால் போதும் என்று நினைக்கிற இப்படிப்பட்டவர்களுக்காகவே நம் வள்ளுவப் பேராசான் இன்னொரு குறளையும் எழுதி இருக்கிறார்.

dd

அது...

"ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே கெட்டான் எனப்படுதல் நன்று' என்பதாகும்.

இதன் பொருள், தன்னை மதிக்காதவரின் பின்னால் சென்று வாழ்வதைவிட கெட்டழிந்துபோவது மேல் என்பதுதான் இதன் பொருள்.

*

அந்த சமாதான ஊடகச் சந்திப்பில் பேசிய சூரியா சிவா "நான் பேசியது தவறுதான். செல்போனில் பேசிய எங்கள் இருவரிடமிருந்தும் இந்த ஆடியோ வெளியே செல்லவில்லை.

அரசியல் காரணங்களுக்காகவே இந்த ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக்கப்பட்டிருக்கிறது' என்று விளக்கம் கொடுத்திருக்கிறார். இதில் கூட தனது அநாகரிகத்துக்காகவும், முரட்டுத்தனத்துக்காகவும் அவர் வெட்கப் படவில்லை. ஆபாசமாகப் பேசிய ஆடியோ வெளியே போய்விட்டதே என்ற எரிச்சல்தான் அவர் பேச்சில் வெளிப்பட்டது.

எனினும் பல தரப்பிலும் கடும் விமர்சனம் வந்ததால், அண்ணாமலை சூரியாவையும் 6 மாதகாலம் கட்சியில் இருந்து நீக்குவதாக... தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அறிவித்திருக்கிறார். அந்த அறிவிப்பிலும்கூட..

"அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ஆறு மாத காலம் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். எனினும், கட்சியின் ஒரு தொண்டனாக கட்சியின் வளர்ச்சிக்கு அவர் பணியாற்றலாம்.

அவரது நடவடிக்கைகளில் மாற்றம் கண்டால், அவர்மேல் தனக்கு மீண்டும் நம்பிக்கை வந்தால், பொறுப்பு அவரைத் தேடிவரும்" என்று மண்டியிட்டு தெண்டனிட்டுத் தெரிவித்திருக்கிறார்.

எந்தக் கட்சியிலாவது ஒழுங்கு நடவடிக்கை அறிவிப் பிலேயே, கட்சிப்பணி ஆற்றலாம். பதவி மீண்டும் தேடிவரும் என்கிற சலுகையும் போனசும் இருக்குமா? இப்படி ஒரு நடவடிக்கை அறிவிப்பை எந்தக் கட்சியிலாவது பார்க்கமுடியுமா? இதுபோன்ற சலுகைக்குறிப்பு காயத்ரி, டெய்சி ஆகியோருக்கான ஒழுங்கு நடவடிக்கை அறிவிப்பில் இல்லையே. கட்சியிலேயே ஆளுக்கொரு நீதி.

*

ஆர்.எஸ்.எஸ்.சில் பயிற்சி எடுத்தவர்கள் பிரமச்சாரிகளாக இருப்பார்கள் என்கிறார்கள். ஆனால் கேசவ விநாயகம் உள்ளிட்ட வர்கள் மீது பாலியல் புகார்கள் கிளம்புகின்றன. அதையும் வெளியில் இருப்பவர்கள் கிளப்பவில்லை. அந்தக் கட்சியில் இருப்பவர்களே சொல்கிறார்கள். ஆனால் தன் மீதான குற்றச் சாட்டுகளுக்கு கேசவ விநாயகம் வாயையே திறக்கவில்லை. கட்சி மீது சொல்லப்படும் ஆபாசக் குற்றச்சாட்டுகள் பற்றி அண்ணாமலை யும் பெரிதாக விளக்கம் கொடுக்கவில்லை. ஆனாலும் அவர்கள் கட்சித் தலைமை அலுவலகமான கமலாலயத்தை "காமாலயம்' என்று பலரும் வர்ணிக்கிறார்கள். பா.ஜ.க. பிரமுகர்கள் பலர் மீதும், இது போன்ற ஆபாசப் புகார்கள் எழுந்தபடியே இருக்கின்றன.

இந்த நிலையில், ஆபாசமாகப் பேசுகிறவர்களின் நாக்கை அறுப்பேன் என்று சூளுரைத்த அண்ணாமலை, சூரியா சிவாவின் நாக்கை அறுப்பதற்குப் பதில், அவரோடு சேர்ந்துகொண்டு, காசி தமிழ்ச் சங்கம நிகழ்ச்சிக்குச் சென்றதாகவும் வெட்கம் கெட்ட தகவல்கள் உலவுகின்றன.

இவர்கள்தான், நாட்டுக்குத் தொண்டாற்ற வந்த உத்தம புத்திரர்களாம். இவர்கள்தான் இந்து மதத்தின் புனிதத்தைக் காப்பாற்றும் அரசியல்வாதிகளாம். இவர்கள் தான் பெண்ணியத்தின் கண்ணியத்தைக் காப்பாற்றும் பாதுகாவலர்களாம்.

இப்படிப்பட்டவர்களை என்னவென்று சொல்வது?

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த வள்ளுவர், காறி உமிழும் எச்சில் இப்போது இவர்கள் முகத்தின்மீது வந்து விழுகிறது. தன்னிலை கெட்டு, மானத்தை இழப்பவர்கள், உதிர்ந்த தலைமுடிக்குச் சமம் என்கிற வள்ளுவரின் தீர்ப்பு, இவர்களைத் தவிர வேறு யாருக்குப் பொருந்தப்போகிறது?

-எரிச்சலுடன்,

நக்கீரன்கோபால்