"சுதந்திரப் போராட்ட வரலாற்றை முழுஅளவில் மையமிட்ட முதற்படம் வீரபாண்டிய கட்டபொம்மன்'' என்பார் ஆர்.கே. அழகேசன் (ப.240) இது விமர்சனத் துக்கு உரியது. தமிழகத்து ரசிகர்கள், நடிப்புலகத்திற்கு நுழைய விரும்பிய கலைஞர்கள், சினிமா விமர்சகர் எனும் முத்தரப்பினராலும் மனப்பாட வரிகளான ஆற்றல் இப்படத்தின் வசனங்களுக்கு உண்டு என்பது சரிதான்.
""முதல் சுதந்திரக் குரல்கொடுத்தவன் வீரபாண்டிய கட்டபொம்மன். சிவாஜி அந்த வேடத்தில் நடிக்க இந்தப் படம் சில வருடங்களுக்கு முன்னால் வந்திருக்குமேயானால் நம் நாடு 1947-க்குச் சற்று முன்பே சுதந்திரம் பெற்றிருக்குமோ'' என்று எழுதுகிறார் முக்தா வி.சீனிவாசன் (தமிழ்த் திரைப்பட வரலாறு, ப.118). "வீரபாண்டிய கட்டபொம்மனாக எம்.ஜி.ஆர். நடித்திருந்தால் பிரிட்டிஷ்காரனோடு சண்டையிட்டு ஜெயித்திருப்பார். அவரைத் தூக்கிலேயே போட்டிருக்க முடியாது' என்பது எம்.ஜி.ஆர். ரசிகர்களின் முடிவு. இரண்டுமே ரசிகக் கோளாறுகள். அவ்வளவுதான்.
""கர்ண பரம்பரையாகப் பாடல் வடிவிலும், ஏடுகளிலும், தெருக்கூத்து வடிவிலும் ஏனோதானோ என்றிருந்ததைத் துடிப்பும் வீரமும் கருத்தும் பொருந்திய வசனங்களில் சக்தி கிருஷ்ணசாமி நாடகமாக்கி தந்தார்'' என்பார் வீ.கு. சந்திரசேகரன் (தமிழ்த் திரைக்களஞ்சியம், ப.108).
கோவில்பட்டியில் சக்தி கிருஷ்ணசாமி எழுதிய நாடகம் ஒன்று அரங்கேறியது. நாடகத்தில் சிவாஜி நடித்திருந்தார். நாடகம் முடிந்த பின் சிவாஜியும் சக்தி கிருஷ்ணசாமியும் மகிழுந்தில் திருநெல்வேலிக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். மகிழுந்தில் கயத்தாற்றைக் கடக்கும்போது கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட கதையை இருவரும் பேசிக்கொண்டார்கள். அப்போது சிவாஜி, தன் மனதில் நீண்டநாள் கனவாய் இருக்கை போட்ட கட்டபொம்மன் வேடத்தில் நடிக்கவேண்டும் என்ற ஆவலை வெளியிட்டார். சக்தி கிருஷ்ணசாமி தனது அடுத்த நாடகமாகக் கட்டபொம்மனை எழுதப்போவதாகத் தெரிவித்தார். சிவாஜிக்காக மட்டுமே கதை எழுதுவதாகக் கூறினார். மகிழுந்து தாழையூத்தை நெருங்கும்போது இருவரும் ஒரு முடிவை எட்டியிருந்தார்கள். கட்டபொம்மு நாடகத்தைச் சக்தி கிருஷ்ணசாமி எழுதித்தர வேண்டும் என்றும் சிவாஜி தன் சொந்த நாடகக் குழுவில் அதை அரங்கேற்றுவது எனவும் முடிவுசெய்தனர். அந்தக் காலகட்டத்தில் சிவாஜி நாடக மன்றம் தொடங்கப்படவில்லை.
தி.மு.க. மேடைகளில் அதிகம் நடித்திருந்த சிவாஜிக்கு நாடகத்தின் தாக்கம் பற்றி ஒரு தெளிவான தொலைநோக்குப் பார்வை இருந்தது. சிறுவயதி லிருந்தே நாடக மேடையில் நடித்து வந்தாலும் தி.மு.க. மேடைகளில் நடிக்க ஏறிய பொழுதுதான் நாடகத்தின் அரசியல் சிவாஜிக்குப் புரிந்தது. தி.மு.க.விற்கு முதல் செக் வைக்க சிவாஜி சொந்தமாக நாடக மன்றத்தை 1957-ல் தொடங்கினார். முதல் நாடகமாகக் "கட்டபொம்மன்' அமையவேண்டும் என்று விரும்பினார். தி.மு.க. எழுத்தாளர்களைத் திணறவைக்க சக்தி கிருஷ்ணசாமியை உரையாடல் எழுதவைத்து கட்டபொம்மனையே முதல் நாடகமாக அரங்கேற்ற விரும்பினார். நாடக ஒத்திகையின்போது தன் வீட்டு உணவையே வழங்கினார்.
சிவாஜியின் நினைவுத்திறன் வரப்பிரசாதம். உரையை உரக்கப் படிக்கச் சொல்லி ஒருமுறை கேட்டால் போதும், அதை அப்படியே மனதிற்குள் பதியவைத்து மேடையில் நடிக்கும்போது ஒரு சொல்லைக்கூட மாற்றாமல் பேசிவிடுவார். கட்டபொம்மன் வசனங்களை கே.வி. சீனிவாசன் வாசிக்க, தரையில் படுத்தபடியே மௌனமாகக் கேட்டு மனப்பாடமாக ஒப்புவித்தார், சிவாஜி. கட்டபொம்மன் வரலாற்றுக் குறிப்புகளை ம.பொ.சி. திரட்டித் தந்தார். சேலம் அரசு பொருட்காட்சியில் இந்நாடகத்தை அரங்கேற்ற முயன்றனர். 1957-ஆம் ஆண்டு இந்திய விடுதலையின் பத்தாமாண்டு விழாவில் ஓரங்க நாடகமாகக் கட்டபொம்மனாக கணேசனை நடிக்க வைக்க காமராசரும் விரும்பினார்.
அவ்வாறே ஏற்பாடும் செய்யப் பட்டது.
நாடகந்தானே...என்று சாதாரணமாக நினைத்தபடி இருந்த காமராசர், மேடையில் கட்டபொம்மனாகக் கணேசன் தோன்றியவுடன் தன்னை மறந்து உற்று நோக்கினார். ஒன்பது நிமிடங்கள் சிவாஜியின் ஆளுமை கட்டபொம்மனாக உயிர் பெற்றது. காமராசரும், ""சிவாஜி தேசிய குடும்பத்தில் பிறந்தவர். அவரது தந்தையார் இந்திய விடுதலைப் போராட்ட வீரர். இந்தியத் தேசிய உள்ளத்தோடு அவர் விடுதலை நாள் விழாவில் கலந்துகொண்டார்'' என்று அறிவித்தார்.
1957 ஆகஸ்ட் 28-ல் சேலம் பொருட்காட்சி அரங்கில் கட்டபொம்மன் நாடகம் முழுமையாக முதன்முதலில் அரங்கேற்றப்பட்டது. பேரா. மு.வ. தலைமை தாங்கினார். மக்கள் மகிழ்ந்தனர். ஒன்பது நாட்கள் நாடகம் நடைபெற்றது. இறுதி நாளில் காங்கிரஸ் கட்சியினர் நிரம்பியிருந்தனர்.
கட்டபொம்மன் இந்திய தேசிய உணர்வுக்குப் புது ரத்தம் பாய்ச்சியது சிவாஜியைக் காங்கிரசுக்காரராக அடையாளம் காட்ட முற்பட்டது.
தொடர்ந்து பல ஊர்களில் நாடகம் நிகழ்த்தப்பட்டது. பம்பாயில் பெரும் வரவேற்பைப் பெற்றது. ராஜ்கபூர், அசோக் குமார், திலீப்குமார், சுனில் தத் போன்றவர்கள் பார்த்து பாராட்டினர். 1958-ல் ராஜாஜி நாடகத்தைப் பார்த்தபோது, தூக்கிலிடும் காட்சியில் மயங்கி விழுந்த பிறகு எழுந்து பாராட்டினாராம். தொடர்ந்து 20 ஆண்டுகள் இந்த நாடகம் நடத்தப்பட்டது.
1957 ஆகஸ்டு 28-ல் சேலம் நகராண்மைக் கழகம் பொருட்காட்சி கலை அரங்கில் முதல் காட்சியில் தொடங்கி 1958 மார்ச்சில் மேயர் மதிய உணவு நிதி கமிட்டிக்காகச் சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் 100-வது காட்சியாக நிகழ்த்தப்பட்டது. இடைக்காலங்களில் பம்பாய், வேலூர், தஞ்சாவூர், மதுராந்தகம், மதுரை, மன்னார்குடி, திருநெல்வேலி, கோயம்புத்தூர், சேலம், கோபி, கும்பகோணம் எனும் ஊர்களில் நடத்தப்பட்டது. இவரது ஜோடி ஜக்கம்மாவாக ரத்னமாலா நடித்திருக்கிறார்.
சிவாஜி நாடகமன்றத்தின் பல நாடகங்களில் மிகவும் முக்கியமானது கட்டபொம்மன் நாடகம். """செத்தும் கொடுத்தான் சீதக்காதி' என்று கூறுவார்களே, அதுபோல் கட்டபொம்மன் இருக்கும்போது நாட்டுக்காக பாடுபட்டான். அவன் இறந்த பிறகும் அவன் கதை இந்த நாட்டிற்காகப் பயன்பட்டது. பல அனாதைக் குழந்தைகளின் இல்லத்திற்கும் ஏழைக் குழந்தைகளின் கல்வி ஸ்தாபனத்திற்கும், பல பள்ளிகளுக்கும் பலதரப்பட்ட சமூக சேவை ஸ்தாபனங் களுக்கும் நாடக வருமானத்தைக் கொடுத்திருக்கிறோம். ஆகவே, கட்டபொம்மனை நான் இறந் தாலும் மறக்க மாட்டேன்'' என்பார் சிவாஜி கணேசன்.
(எனது சுயசரிதை, ப.145).
""நாடகத்தில் வசனம் பேசிக் கொண்டிருக்கும்போது சில சமயம் வாயிலிருந்து ரத்தம் குபுக் குபுக்கென வந்துகொண்டே இருக்கும். அதையும் பொருட் படுத்தாமல் வசனம் பேசிக் கொண்டே இருப்பேன். மூக்கிலும் வாயிலும் இரத்தம் வருவதைக் கண்டு மக்கள் ஐயோ ஐயோ என்று பதறு வார்கள். நாடகத்தில் பேசும்போது என்னுள் ளிருந்து வரும் சப்தமானது அடி வயிற்றிலிருந்து வருகிறதா? இல்லை இதயத்திலிருந்து வருகிறதா? என்று எனக்கே தெரியாது. சிலசமயம் நாடகம் முடிந்தவுடன் இரத்தம் கக்குவேன். கட்டபொம்மன் நாடக வெறியினால் என் உடல் நிலையைக் கூடச் சரியாகக் கவனிக்காமல் நடித்துக் கொண்டிருந்தேன்'' (ப.150), என்பார் சிவாஜி.
""சிவாஜிகணேசனின் கம்பீரத் தோற்றத் திலும், எடுப்பான குரலிலும், எவரும் எளிதில் புரிந்துகொள்ளும் வண்ணம் அவர் பேசும் வசனங் களும் நம்மை உணர்ச்சிவசப்படச் செய்வதாக உள்ளன. அப்பழுக்கற்ற வீரன், கருணை உள்ளம், படைத்தலைமை, மானம் பெரிதென மதிக்கும் தமிழ்நாட்டு வேந்தன், கலை ஆர்வம் உடையவராக... இத்தகைய பல்வேறு குணாதிசயங்களுடன், சிவாஜிகணேசன் கட்டபொம்முவைக் காட்டுகிறார். தமிழர் அனைவரும் கட்டாயம் பார்த்து பரவசப்பட வேண்டிய உன்னத நாடகம்'' என்று ‘நவ இந்தியா’ எழுதியது. காமராசர் மட்டுமன்று அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர். என அனைத்து தலைவர்களும் பார்த்து பாராட்டினர். குறுகிய காலத்தில் நூறு மேடைகளைக் கண்டது.
கட்டபொம்மனின் வாழ்க்கை வரலாற்றை நாடகமாக அரங்கேற்றினார்கள். சென்னை ஒற்றைவாடை திரையரங்கில் நாடகம் அரங்கேறியதற்கான ஆவணங்கள் இன்றும் உண்டு.
நாடகத்தில் ஆச்சார்யா கட்டபொம்மனாகவும், சொக்கம்மாள் கட்டபொம்மன் மனைவியாகவும் டாக்டர் சிவராம் ஜாக்சன் துரையாகவும், டாக்டர் பானர்மனாகவும் நடித்தனர். நாடக அரங்கேற்றத் தின் முதல்நாள் சேத்தூர் ஜமீன்தாரும் இரண்டாம் நாள் கல்கி கிருஷ்ணமூர்த்தியும் முன்னிலை வகித்தனர். நாடகம் வரவேற்பைப் பெற்று பரவலாகப் பேசப்பட்டதால் இந்நாடகத்தைப் படமாகத் தயாரிக்க செல்வம் பிக்சர்ஸ் முடிவுசெய்தது.
1948-ஆம் ஆண்டு பி.யு. சின்னப்பா கட்டபொம்முவாக நடிக்க, எஸ். தொட்டானி தயாரித்து இயக்க பூர்வாங்க வேலைகளில் இறங்கியது. (சிவாஜி ஆளுமை 1, ப.202-3). ஒருவேளை இப்படம் வெளிவந்திருந்தால் சிவாஜி படம் எடுபட்டிருக்காது. ஏற்கனவே பி.யு.சின்னப்பா நடித்த ஆர்யமாலாவைக் காத்தவரா யனாக சிவாஜி நடித்துள்ளார்.
சிவாஜி கணேசனின் கட்டபொம்மு நாடகம் சினிமாவாக எடுக்கப் பட்டபோது, படம் வெளியாவதற்கு முன் ஒரு விழா எடுக்கவேண்டும் என்று பத்மினி பிக்சர்ஸ் உரிமை யாளர் பந்துலு விரும்பினார். அப்பொறுப்பை ம.பொ.சி., நாடகக் காவலர் என்.கே.டி. முத்துவிடம் ஒப்படைத்தார். திருவட்டீஸ்வரன் பேட்டை கோவிலில் இருந்து கிளம்பி மிகப் பெரிய ஊர்வலம் மெரினா விலுள்ள திலகர் திடல் வரை மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்தது, என்பார் குடந்தை மாலி (அமுதசுரபி) (சிவாஜி ஆளுமை - 3 - ப.204).
எஸ்.எஸ். வாசன் கட்டபொம்மனின் வீரவரலாற்றைத் திரைப்படமாகத் தயாரிக்கும் எண்ணத்துடன் தமது பத்திரிகையில் அந்தக் கதையைத் தொடராக எழுதி வந்தார். அவரும் இப்போது களம் இறங்கப் போவதாகக் கேள்விப்பட்டவுடன் பந்துலுவுக்குப் பயங்கர ஷாக்கானது. அவர் சிவாஜியைத் தூண்டிவிட சிவாஜியும் வாசனிடம், ""ஒரே கதை, ஒரே சமயத்தில் இரண்டு கோணங்களில் திரைவடிவம் எடுத்தால் அது, ஆரோக்கியக் கேடு. ஆகவே, இந்தக் கதையை எங்களுக்காக விட்டுத்தர வேண்டும்'' என்று வேண்டினார்.
வாசனும் ஏற்றுக்கொண்டார். ""ஔவையார் கதையைக் கே.பி. சுந்தராம்பாள் இல்லாமல் எடுப்பது மாதிரி, கட்டபொம்மன் கதையை நீங்க இல்லாம எடுப்பதும் சிரமமான காரியம்தான்! அவரின் அவதாரமா வந்த நீங்களே முன்வந்து கேட்பது அந்த வீரபாண்டிய கட்டபொம்மனே நேரில் வந்து கேட்பது மாதிரி தோணுது,'' என்றாராம். (ப.179).
1958-ல் சிவாஜியின் நெருங்கிய நண்பரும், காங்கிரஸ்காரருமான பி.ஆர்.பந்துலு, நாடக மேடையில் கட்டபொம்மன் எழுப்பியிருந்த வெற்றியைக் கண்டு, அதைப் படமாகத் தயாரிக்க முடிவுசெய்தது. சிவாஜி நாடக மன்றத்தாரிடமும், சக்தி கிருஷ்ணசாமியிடமும் பேசி அதற்கான முயற்சிகளில் இறங்கினார். தமிழரசுக் கழகத்தைச் சேர்ந்த ம.பொ.சி. அதிகப்படுத்தினார்.
சிவாஜியை மட்டம் தட்டுவதனைக் குறிக்கோளாகக் கொண்டிருந்த தி.மு.கழகத்தினர் கட்டபொம்மனின் திரைப்படத்தை எதிர்த்து களமிறங்கினர். காங்கிரசு கட்சியோ கண்டுகொள்ளவில்லை. ""கட்டபொம்மனை வீரனாகக் காட்ட முயற்சிக்கும் ம.பொ.சி.யின் வேலை பூனைக்குப் புலிவேசம் போடுவது போன்றது. கட்டபொம்மனைவிட மருதுபாண்டியர்களே வெள்ளையரிடம் தீவிரமாகப் போராடினர்'' என்று பிரச்சாரம் செய்தனர்.
வீரபாண்டிய கட்டபொம்மன் சென்னையில் சித்ரா, க்ரௌன், சயானி திரையரங்குகளில் திரையிடப்பட்டது. சித்ராவில் கோட்டை அமைத்து சிவாஜியை மன்னராக அமரவைத்து அலங்கரித்தனர். பல ஊர்களில் மூவர்ண கொடிகளால் அழகு செய்தனர். 27 தியேட்டர்களில் நூறு நாட்களைத் தாண்டி இமாலய வெற்றியைப் பெற்றது. காங்கிரசு கட்சிக் கொடியில் சிவாஜியின் உருவம் பதித்த நாட்காட்டியும் வெளியானது. தன்னைத் துரத்திய தி.மு.க.விற்கு இது சரியான பாடம் என்று சிவாஜியும் கருதினார். நாகர்கோவில் வெற்றி விழா சிவாஜியைத் தேசியத் தலைவராகப் பறை சாற்றியது.
1960-ல் எகிப்தின் அதிபர் நாசர். அங்கு ஆப்ரிக்க ஆசியத் திரைப்பட விருது விழா. இந்திய தேர்வுக் குழு, தடையை மீறி கட்டபொம்மனைத் தேர்ந்தெடுத்து அனுப்பியது. விழாவில் கலந்துகொள்ள கெய்ரோவிற்கு கட்டபொம்மு வெள்ளையம்மாவோடு அதாவது சிவாஜி, பத்மினியோடு பி.ஆர். பந்துலுவும் சென்றார்.
கட்டபொம்மன் ஆங்கிலேயருக்கு எதிராக நடத்திய போராட்டத்தைச் சிறு குறிப்பாக அறிவித்துவிட்டு திரைப்படத்தைத் திரையிட்டனர். அனைவரையும் கட்டபொம்மன் கட்டிப் போட்டான். எகிப்து மக்கள் ஆங்கிலேயரை எதிர்த்து போராட்டங்கள் நடத்தி விடுதலை பெற்றவர்கள். ஏற்கனவே ஆங்கிலேயர் மீது கோபம் கொண்ட எகிப்தியர்கள் சிவாஜியைப் பெரிதும் ரசித்தனர். சிறந்த நடிகராக அறிவித்தவுடன் சிவாஜி ஆனந்த படபடப்பில் ஒரு நிமிடம் தன்னை மறக்க, பத்மினியோ துள்ளிக் குதித்து ஆரவாரம் செய்தார். பந்துலு தாரை தாரையாகக் கண்ணீர் வடித்தார். விருதினைத் தன் தலைக்குமேல் தூக்கிப்பிடித்து, ""இந்தப் பெருமை எல்லாம் தன் குருவுக்கே'' என்றார். இந்திய அரசு இதற்கு எந்த அறிவிப்பையும் செய்யவில்லை, ஆனால் இவர்தான் 1961-ல் முறைப்படி காங்கிரசில் தன்னை இணைத்துக் கொண்டார்.
கட்டபொம்மன் வரலாற்றில் பானர்மேன் தன் நாட்குறிப்பில் என்ன எழுதினார் என்று சிவாஜிக்குத் தெரியாது. ஆனால் பானர்மேன் எழுதிய வர்ணித்த அதே காட்சியைக் கட்டபொம்மனாக அவரால் எப்படி நடிக்க முடிந்தது. இறுதிக் கட்டத்தில் ""நீ பேசத் தெரிந்தவன்'' என்று பானர்மேன் சொன்னதும் கட்டபொம்மன், ""வெறும் பேச்சல்ல, மானத்திலே பாசமுடையவன், வல்லவன், வாள்வீசத் தெரிந்தவன், அதனால்தான் யாருக்கும் வால்பிடித்து வாழவேண்டும் என்ற நிலையில் இல்லாதிருப்பவன், பொன்னாட்டு மக்கள் எங்கள் தென்னாட்டு மக்கள். போர் என்றால் புலிகுணம், பொங்கி வரும் காதல் என்றால் பூமணம், புகழுக்குரிய மானத்திற்கு இழுக்கு என்றால் மரணத்தை ஏற்றுக் கொள்ளும் ஒரே இனம் என்ற சரித்திரம் கண்டவர்கள் நாங்கள்'' என்று பதில் கூறுவான். ""இவனைக் கொண்டு போய் புளியமரத்திலே தூக்கில் இடுங்கள்'' என்பான் பானர்மேன்.
கட்டபொம்மன் படத்தில் வரும் இந்தக் காட்சியை முடிந்தால் இன்னொரு முறை பாருங்கள். அந்தக் கண்களில் எத்தனை வெறுப்பும் அலட்சியமும். இந்தப் படத்தில் சிவாஜி அப்படிப் போகும்போது ஒரு பக்கத்திலே வெறுப்பு - துரோகிகள் மீது இன்னொரு பக்கத்திலே மரணத்தைப் பற்றிய அலட்சியம். என்னுடைய தாயகத்துக்கு இந்த நிலையா? என்கிற வேதனை. இவ்வளவு உணர்ச்சிகளும் அந்தக் கண்களில் இருக்கும், தூக்கு மரத்தடிக்குக் கொண்டுபோய் நிறுத்துகிறார்கள். துணிந்தவனுக்குத் தூக்குமேடை பஞ்சு மெத்தை விலகிப்போங்கள் என்று சொல்வார்.
சக்தி கிருஷ்ணசாமி எழுதிய வசனத்திலே சில இடங்களில் அவராகவே சொல்வார். ""தம்பீ ஊமைத்துரை! அஞ்சாத சிங்கமே! இந்தக் கடைசி நேரத்திலும் உன்னைப் பார்க்கத் துடிக்கிறேன்.
புன்னகை புரியும் தமிழ் மண்ணே! உன்னைப் பிரிந்து போவது ஒன்றேதான் எனக்கு வருத்தம். தருக்கர்கள் சிலரால் நீ தாழ்வுற்று இருப்பினும், எதிர்காலத்தால் ஆயிரம் ஆயிரம் இளங்காளையர் உயிரினும் மேலாக உன்னைப் பேணுவதற்கு வருவர். உன் பெருமையை உயர்த்துவர்.''
இது அவருடைய ஆசை. இப்படி ஆயிரம் ஆயிரம் இளைஞர்கள் இந்தத் தமிழகத்திலே உருவாகி வரவேண்டும் என்பது அவரது ஆசை. வீரபாண்டிய கட்டபொம்மனில் சிவாஜி அதை வெளிப்படுத்துவார் என்பார் வை.கோ. (தேன் மலர்கள், ப.89).
அரைகுறையாய் ஏனோ தானோ எனக் கர்ணபரம் பரைக் கதையாக இருந்த கம்பளத்தார் கூத்தைச் சக்தி கிருஷ்ணசாமி அற்புதமான கட்டமைப்புக்கு மாற்றி, மெச்சும்படியாக மெருகேற்றி, கம்பீரமான கதையாக நாடக வடிவத்துக்கு மாற்றித் தந்தார். சிவாஜி நாடக மன்றம் அதை மேடை ஏற்றியது. சிவாஜி கட்டபொம்மனாக மேடையில் தோன்றும் போதெல்லாம் அதற்கு மக்கள் மன்றத்தில் மாபெரும் வரவேற்பு இருந்தது. வீராவேசமாய் சிம்மக்குரலெடுத்து பேசிய வசனங்களுக்கு விசில்களும் கைத்தட்டல்களும் பறந்தன. ஏறக்குறைய நூறு மேடைகளில் ஏறிய பிறகுதான் கட்டபொம்மன் திரையில் தோன்றினான்.
கட்டபொம்மன் வரிகொடுக்க மாட்டேன் என்று சொல்லவில்லை வசூலித்து நிதானமாகத் தருகிறேன் என்றான். இதனை மழுப்புதல் ஏமாற்றுதல் என்று கலெக்டர் எண்ணினார். ஜெகவீரகட்டபொம்முவின் தந்தையார் மாபூப்கானுக்கு உதவி செய்தாலும், புலித்தேவனை அடக்க வந்த கிழக்கிந்திய கும்பினியின் கமாண்டர் யூசப்கானுக்கு உதவியதாலும் வெகுமதியாக 60 கிராமங்களைப் பாஞ்சாலங்குறிச்சியார் பெற்றுள்ளனர்.
கட்டபொம்மன் மக்களிடம் வரி வசூல் செய்தாலும் வரிப்பணத்தை மேலிடத்திற்கு அனுப்பவில்லை.
கட்டபொம்மு கூத்தில், ஒரே ஒரே முத்தாலு ஒக உத்தமாட்டாலு செப்ப பொய்யேன் அந்து ஒச்சின ராஜாவொடு அந்தலுனு மனதல்லி பிட்ட’’ என்றுதான் பெரிய நாயக்கர் கம்பளத்தாரிடம் சொல்லுகிறார். (ப.411). இதுதான் இயல்பான கூத்தம்சம். ஒரு தெலுங்கன் இன்னொரு தெலுங்கனிடம் இன்றும் தெலுங்கில்தான் பேசிக்கொள்கிறான். அன்று கேட்கவா வேண்டும்?
ஆனால் வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் கட்டபொம்மு இலக்கண சுத்தமாக - இலக்கியச் செறிவாகப் பளிச்சென்றும், பக்கம் பக்கமாகவும் மூச்சுவிடாமல் பேசுகிறான். அது தமிழர்களிட மானாலும் சரி, தம்பி, மனைவி பிள்ளை என்று பேதம் இல்லாமல் அவர்களுக்குப் புரியுமா புரியாதா என்ற கூட புத்தியில்லாமல் ஏன் ஆங்கிலேயரிடம்கூட அப்படித்தான். இவை அரிய உரையாடலாக இருக்கலாம், ஆனால் எதார்த்தமற்றவை.
1781-ல் ஜெகவீரக் கட்டபொம்முவை நோக்கி, ""வானம் பொழிந்தது. பூமி விளைந்தது. மன்னா என் பூமி வரி எதற்கு? என்று கூறி மக்கள் வரிசெலுத்த மறுத்தனர். மக்களின் வரிகொடா இயக்கம் அன்றே தோன்றலாயிற்று. அதுவும் தமிழர்கள் செய்த முதல் முழக்கமாக அந்த முழக்கம் தென்னாட்டிலே திருநெல்வேலியிலே ஒலித்தது. கட்டபொம்முவும் இதரப் பாளையக்காரர்களும் விவசாயிகள் மீது சீறினர். ஒன்றுகூடி நெல்லை எல்லாம் கொள்ளை அடித்தனர். விவசாயிகளைச் சிறையில் அடைத்தனர்; சவுக்கால் அடித்தனர்'' என்பார் சிரஞ்சீவி. (ப.342).
1786-ல் டிபார்ட்மென்ட் ஆப்தி போர்டு ஆப் ரெவின்யூ என்ற இலாகா அமைக்கப்பட்டு, பெஞ்சமின் டோரின் திருநெல்வேலி கலெக்டராக நியமிக்கப்பட்டான்.
வானம் பொழியுது பூமி விளையுது
மன்னவன் கும்பினிக் கேன் கொடுப்பேன்
சீனிச்சம்பா நெல்லு ஏன் கொடுப்பேன் - அந்தச்
சீரகச்சம்பா நெல் ஏன் கொடுப்பேன்?
என்னைப்போல் வெள்ளாமை இட்டானா அந்த
இங்கிலிசு வெள்ளைக் காரனுந்தான்’’
என்ற கூத்துப் பாடலே ஜாக்சனை நோக்கி கட்டபொம்மன் பேசுவதாக வசனமாக்கினர்.
""கிஸ்தி, திறை, வரி, வட்டி - வேடிக்கை. வானம் பொழிகிறது! பூமி விளைகிறது. உனக்கேன் கொடுப்பது கிஸ்தி. எங்களொடு வயலுக்கு வந்தாயா? ஏற்றம் இறைத்தாயா? நீர்பாய்ச்சி நெடுவயல் நிறையக் கண்டாயா? நாத்து நட்டாயா? களை பறித்தாயா? கழனிவாழ் உழவருக்குக் கஞ்சிக் கலயம் சுமந்தாயா?
அங்கு கொஞ்சி விளையாடும் என்குலப்
பெண்களுக்கு மஞ்சள் அரைத்துப் பணி புரிந்தாயா?
அல்லது மாமனா மச்சானா? மானங்கெட்டவனே!
எதற்குக் கேட்கிறாய் வரி? யாரைக் கேட்கிறாய் திறை? போரடித்து நெற்குவிக்கும் மேழைநாட்டு உழவர் கூட்டம் உன் பறங்கியர் உடல்களையும் போரடித்து நெற்கதிர்களாய்க் குவித்து விடும் ஜாக்கிரதை!'' இதுதான் ஆங்கிலேயரிடம் பேசும் தமிழா?
""கணேசன் இந்த அளவுக்கு உயர்ந்திருப்பதற்குக் காரணம் இந்த நாடகத்திலே அடிக்கடி குறிப்பிட் டார்களே முருகன், ஜக்கம்மா என்றெல்லாம் அந்த முருகன் அருளோ, ஜக்கம்மா அருளோ அல்ல; தன் சொந்த உழைப்பினாலும் முயற்சியினாலும் அவர் இத்தகைய திறமையையும் புகழையும் பெற முடிந்தது. இந்த நாடக மன்றம் எனும் வைரமாலையின், ஜோதி நிறைந்த கோமேதகப் பதக்கமாகத் தோன்றுகிறார் கணேசன். கணேசனை என் மனமார வாழ்த்துகிறேன். அவருடைய புகழ் மேலும் வளர வேண்டும் வளருவார் என்ற நம்பிக்கை எனக்குண்டு. தம்பி கணேசா, நீ நன்றாக வளர்ந்திருக்கிறாய். இன்னும் வளருவாய். நன்றாக வளரு. நீ எங்கிருந்தாலும் வளரு என்று வாழ்த்துகிறேன்'' என்றார் பேரறிஞர் அண்ணா. (சிவாஜி நாடக மன்றம் நடத்திய ‘வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்தின் 100-வது நாடகச் சிறப்பு மலரிலிருந்து) (சிவாஜி கணேசன், கதாநாயகனின் கதை, ப.15).
""வெள்ளைக்காரர்கள் ஆட்சிக் காலத்தில் கட்டபொம்மன் பட்ட கஷ்டங்களைவிட காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இந்த சினிமா கட்டபொம்மன் அதிகச் சிரமங்களை அனுபவிக்க நேர்ந்தது'' என்பார் அறந்தை நாராயணன்.
1857 சிப்பாய்க் கலகத்தை இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்டமாகக் கணக்கிட்டு 1957-ல் நூற்றாண்டு விழாவை அரசு அறிவித்துக் கொண்டாடியது. அதற்கு முன்னதாகவே வீரபாண்டியக் கட்டபொம்மன் முதல் முழக்கம் செய்தான் என்று கூறினார் ம.பொ.சி. அதனாலும் தி.மு.கழகத்திலிருந்து முழுமையாக வெளிவந்து, காங்கிரஸ் மேடையில் சிவாஜி கணேசன் ஏறாததாலும் காங்கிரஸ்காரர்கள் கட்டபொம்மனைப் பெரிதாக மதிக்கவில்லை. 26 வாரம் ஓடினாலும் செலவுக்கு வருமானம் பந்துலுவுக்குக் கிடைக்கவில்லை என்பார். (தமிழ் சினிமாவின் கதை, ப.454).
பண்டிதமணி ஜெகவீர பாண்டியனாரின் பாஞ்சாலங்குறிச்சி வீரசரித்திரம் 1954 வரை இரண்டு பதிப்புகளாக வந்து மூன்றாவது செம்பதிப்பாக 2019-ல் கே.எஸ். ராதாகிருஷ்ணனின் முயற்சியால் "உயிர்மை'யில் பதிப்பிக்கப்பட்டுள்ளது.
""வீரபாண்டிய கட்டபொம்மன் என்ற பெயரே யாருக்கும் தெரியாது. நாட்டுப்பாடல்களிலும் தெருக்கூத்திலும் நாடகங்களிலும் கிழக்கிந்திய கம்பெனி ஆவணங்களிலும் கட்டபொம்மன் என்ற பெயரே உள்ளது. வீரபாண்டியன் என்று ஜெகவீரபாண்டியன்தான் முதலில் குறிப்பிடுகிறார். இதனைத் திரைப்படக் குழுவினர் பயன்படுத்திக் கொண்டனர். ஆனால் இவரது பெயரை இருட்டடிப்பு செய்துவிட்டனர். பெயர் முதலிய இயல்களைக் கருவாய்க் கவர்ந்து உரிமையைக் கடந்து சிறுமை புரிந்திருப்பது நன்றி கொன்ற செயலே'' என்பார் ஜெகவீர பாண்டியனார்.
இந்த வீரபாண்டிய மன்னன் சரித்திரத்தைச் சினிமாவில் படம் எடுக்கப் போவதாக ஒருவர் பெரிய விளம்பரங்களைச் செய்திருக்கின்றார். தங்களைக் கலந்து கொண்டார்களா? என்று நண்பர் சிலர் இங்குக் கடிதங்கள் எழுதியுள்ளனர். நேரிலும் சிலர் வினவுகின்றனர். யாதொரு தகவலும் இல்லை என்று நான் பதில் சொன்னால் அவர் திகைத்து நிற்கின்றார்.
நாட்டு நிலையை நினைத்து நகைத்துப் போகின்றார். நகைப்பும் திகைப்பும் வியப்பாகியுள்ளன என்பார் ஜெகவீர பாண்டியனார் (இரண்டாம் பதிப்பின் இயலுரை). திரைப்படம் இவருக்கும் திருப்தியில்லை போல் தெரிகிறது.
வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம் உருவாக்கக் காலத்தில் அதைப்பற்றி ஆராய்ந்த ம.பொ.சி. போன்ற தமிழ் அறிஞர்கள், அந்தப் புளியமரம் எங்கே இருந்திருக்கக்கூடும் என்ற ஆய்வை நிகழ்த்தினார்கள். அந்தப் படம் அடைந்த வெற்றியின் காரணமாக சிவாஜிகணேசன் கயத்தாறில் உள்ள அந்த இடத்தை விலைக்கு வாங்கி, தனது சொந்தச் செலவில் கட்டபொம்மனுக்குச் சிலை எடுத்து நினைவு ஸ்தூபியும் அமைக்க அன்றைய குடியரசு தலைவர் நீலம் சஞ்சீவி ரெட்டி திறந்து வைத்தார். இப்போது அந்த இடம் அரசிடம் ஒப்படைக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது.
""கதை கட்டுவது என்று வந்துவிட்டால் சரித்திரம் பின்னால் போய்விடும். சரித்திரத்துக்குத்தான் முதலிடம் என்றால் சுவாரஸ்யம் பின்னுக்குப் போய்விடும்.
அசல் சரித்திரம் என்பது அபூர்வத்திலும் அபூர்வம்.
கதைகள் மாத்திரமான மொழியும் மாறிக் கொண்டேதான் வரும். கட்டபொம்மு காலத்து மொழி ஜெகவீரனார் காலத்து மொழியாக இருந்ததா?
இப்போது ஜெகவீரபாண்டியனார் எழுதியது போலத்தான் கட்டபொம்மு காலத்துப் பாத்திரங்கள் பேசினவா? சரித்திரம் என்பது மொழி முதற்கொண்டு யாவும் அப்படியே எழுதுவதுதானே சரி!'' என்பார் கி.ரா. (மகிழ் உரை, ப.13).
எது எப்படி இருந்தாலும் எதார்த்தக் குறைகள் இருந்தாலும் வரலாற்றுப் பிழைகள் இருந்தாலும் தப்பாதது சிவாஜிகணேசனின் நடிப்பு மட்டும்தான்.
வரலாற்றில் வெள்ளையரை எதிர்த்துநின்ற காலகட்டத்தில் கட்டபொம்மனின் வயது என்னவோ, படம் வெளியானபோது சிவாஜி கணேசனின் அன்றைய வயதும் அதுதான். ஏறக்குறைய முப்பது. நிறம்? ஒத்துப்போய்விட்டது. ஆனால், கட்டபொம்மனின் உயரம்? அதுவும் சிவாஜியின் உயரம்தான் என்பது எதிர்பாராமல் அமைந்த ஒற்றுமை. ஆனால், கதாபாத்திரத்தை ஏற்கும் நடிகன் ஒரு மேதையாக இருந்தால் மட்டுமே அதன் உயரத்தை மேலும் ஓரடி கூட்ட முடியும். அந்த அதிசயத்தைத் திரை நடிப்பின் மேதை சிவாஜி கணேசன் செய்துகாட்டினார்.
அதை நாம் மட்டுமே வியக்கவில்லை. உலகமும் எகிப்து அதிபர் நாசரும்கூட வியந்தனர். தானே தேடி வந்து சிவாஜியைச் சந்தித்தார். ‘இவரா (?) படத்தில் ஆறடிக்கு மேல் தெரிந்தாரே என வியந்தார் நாசர்!
வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் அந்த நடையும், கைகளை, விரல்களை சிவாஜி பயன்படுத்தும் விதமும் அலாதியானவை. வால்மீகி ராமாயணத்தில், வால்மீகியும் ராமனின் நாலுவித நடைகளைக் குறிப்பிடுவார். சிங்க நடை, தலைமைக் குணத்தைக் குறிப்பது. புலிநடை, சீற்றத்தையும் கோபத்தையும் குறிப்பது. யானை நடை, பெருமிதத்தைக் குறிப்பது. எருது நடை, அகந்தை, அலட்சியம் இவற்றைக் குறிப்பது. வால்மீகியைப் படிக்காமலேயே சிவாஜி அவற்றைத் தனது உடல்மொழியால் உணர்த்திய விதம் அதிசயம். அரச சபையிலும் நகர்வலம் செல்லும்போதும் மந்திரி, நண்பர்களுடன் இருக்கும்போதும் நடக்கும் நடை ஒரு சிம்மத்தின் தலைமைக் குணத்தைக் குறிக்கும் நடை. ஜாக்சன் தன்னை அவமதித்து கோபப்படுத்தும்போது ஒரு புலியின் சீற்றம் நடையில் தெரியும். மனைவி ஜக்கம்மாவிடம் போருக்கு விடைபெறும்போது ஒரு யானையின் பெருமிதம் தொனிக்கும். கடைசியில் பானர்மன் தூக்கு தண்டனை விதித்ததும் தூக்கு மேடையை நோக்கி நடக்கும் சிவாஜியின் கால்களில் ஒரு எருதின் அலட்சியம் தெறிக்கும் என்பார் எஸ்.கோபால் (இந்து தமிழ்திசை, 13.09.19)
வி.சி.கணேசன் அண்ணாவின் நாடகத்தில் சிவாஜியாக நடித்ததால் பெரியார், "சிவாஜி' என்ற பட்டத்தின் மூலம் அவரை சிவாஜிகணேசன் ஆக்கிவிட்டார். ஆனால் அந்நாடகத்தில் எப்படியெல்லாம் நடித்திருப்பார் என்பது நமக்குத் தெரியாது. எனினும் அதன் சாயலை "ராமன் எத்தனை ராமனடி'யில் பார்க்கலாம். ஒருவேளை அதற்கு முன் வீரபாண்டிய கட்டபொம்மனில் நடித்திருந்திருப்பாரேயானால், நாம் சிவாஜிகணேசனை இழந்து கட்டபொம்மு கணேசனைப் பெற்றிருப்போம். 90 ஆம் ஆண்டிலும் நம் நெஞ்சில் வாழ்ந்து கொண்டிருக்கும் வீரபாண்டிய கட்டபொம்மு கணேசனை வணங்குவோம்.