ஆயுதக் கடை விரிக்கும் பெண்ணியத் தொடர்! (7)
முகத்தில் அறைவதுமாதிரி ஒரு சொல், நெஞ்சைக் கிழிப்பது மாதிரி ஒரு பார்வை, நினைவுகளைத் துளைப்பது மாதிரி ஒரு தோள்குலுக்கல், கனவிலும் மறக்கமுடியாத மாதிரி ஒரு கேலிலி, அவமானம், தலைகுனிவு, ஏளனங்கள், இளக்காரங்கள், மௌனத்தால் அவமானம், வார்த்தையால் அவமானம், செயலால் அவமானம், செயலின்மையால் அவமானம் இப்படியாகப் பலவிதமான அவமானத்தின் முகங்கள் அவளுக்குப் பெரிதும் பரிச்சயம். இந்தச் சாயல்கள் இல்லாமல் அவளின் பொழுதுகள் விடிவதுமில்லை. முடிவதுமில்லை. அவளுக்கு வலிலிகளின் ருசியே பெருவிருந்தாக அமைகிறது.
அவளின் எச்சில் இலை முழுக்கப் பரிமாறப்படுவது கங்கை ஜலமல்ல.. சாக்கடைத் தண்ணீரே. கொஞ்சல் அழுகல், கொஞ்சம் கருகல், கொஞ்சம் பழையது, கொஞ்சம் சுவையற்றது, கொஞ்சம் மிச்சம், கொஞ்சம் மீதி இவையெல்லாம்தான் அவள் பசிக்கு உணவாகின்றன. சூடும் சுவையுமாக, காரமும் ருசியுமாக, உப்பும் உறைப்புமாக. வாய்க்காத உணவுக்காக அவள் ஏங்குவதில்லை. கிடைக்கும் பருக்கையை விருந்தென்று புளகாங்கிதமாக ஏற்கும் பக்குவம் மிக்கவளாகவே இருக்கிறாள்.
மிச்சமான எச்சில் சோறு சாப்பிட்டாலும் என்ன? அவளிடம் தன்மானம் உண்டு. கண்ணியம் உண்டு. நேருக்கு நேரான நெருப்புப் பார்வை உண்டு. நிறையவே ரௌத்திரம் உண்டு.
சங்க இலக்கியப் பெண்குரல்கள் இந்த நேர்மைக் குரலை உரத்து ஒலிலிக்கிறார் கள். அதற்குப் பின் மிக நீண்ட மௌனப் பெருவெளிதான். அவளின் இருப்பையும் இறப்பையும் சொல்லுவதாக அமைகிறது. அதற்குப்பின் மிக நீண்ட இடைவெளி. இப்போது உரத்துக் கேட்கின்றன பெண்குரல்கள். உலுக்கிக் கேட்கின்றன பெண் குரல்கள். உண்மையாய்க் கேட்கின்றன பெண்குரல்கள். வன்மையாய் கேட்கின்றன பெண் குரல்கள். அன்னா ஸ்விர் எனது துயரம் என்ற கவிதையில் ஒலிக்கிறார் உண்மைக் குரலை.
எனது துயரம் எனக்குப் பயன்படுகிறது
அது எனக்கு முன்னுரிமை தருகிறது அடுத்தவர்களின் துயரத்தை எழுதுவதற்கு எனது துயரம் ஒரு பென்சில் அதைக் கொண்டு நான் எழுதுகிறது…
பென்சிலால் மீண்டும் மீண்டும் எழுதியதன் மேலே எழுதுமளவுக்கு வாழ்வும் துயரும் ஒரே வழமையாகவே இருக்கிறது அவளுக்கு.
“நாங்கள் இதயத்தில் சுடப் போகிறோம்’’ என்பது அன்னா ஸ்விர் அனுபவித்திருக்கும் இன்னும் ஓர் அவமானம். அவளின் காதல் அவளுக்கு மறுக்கப்படுகிறது. சமூகம் அவளின் காதலை கொல்லுவதற்கு கொலைக் கருவியோடு காத்திருக்கிறது. எனவே அடுத்தவர் கையால் தனது காதலுக்கு மரணம் தருவதை விடவும் தானே தந்துவிடலாம் என்று அன்னா ஸ்விர் நினைக்கிறார்.
நாங்கள் எங்கள் காதலை கொல்லப் போகிறோம்
நாங்கள் அதன் குரல்வளையை நெறிப்போம்
ஒரு குழந்தையின் குரல்வளையை
ஒருவர் நெரிப்பதைப் போல
நாங்கள் அதை உதைப்போம்
ஒரு விசுவாசமுள்ள நாயை
ஒருவர் உதைப்பதைப் போல
நாங்கள் அதை கிழித்தெறிவோம்
அதன் உயிருள்ள சிறகுகளை
ஒருவர் அதை ஒரு பறவைக்கு செய்வதைப்போல
நாங்கள் அதன் இதயத்தில் சுடுவோம்
ஒருவர் தன்னையே சுடுவதைப் போல
-இது அண்ணா ஸ்விர்
அனுபவிக்கும் வலிலியா? வேதனையா? அவமானமா?
இல்லை இல்லை இது சமூக
அவமானம். குழந்தையின் குரல்வளை நெரித்தல் எதிர்வினை ஆற்றமுடியாதது- குழந்தையால். குட்டி நாயை பபல்ம் உள்ளவர் உதைத்தல்- எதிர்வினை ஆற்ற முடியாது கூட்டினால் பறவையின் சிறகுகளை பிரித்தறிவது எதிர்வினை ஆற்ற முடியாதது- குட்டி நாயால். பறவையின் சிறகுகளைப் பிய்த்தெறிவது எதிர்வினை ஆற்றமுடியாதது- பறவையால். தானே சுட வேண்டிய இலக்கு எனும் போது தனக்குத் தானே ஒருவர் எப்படி எதிர்வினை ஆற்ற முடியும்? இப்படியான கையறு நிலையில் தான் நேசம் கொப்பளிக்கும் பெண்கள் அலைக்கழிக்கப் படுகிறார்கள். நேசத்தின் வனத்தில் அமிலம் பாய்ச்சும் பணியை தானாகச் செய்வதன் மூலம் சமூகத்தின் குரூர முகத்தை அப்பட்டமாக வெளிச்சமிடுகிறார் அன்னா ஸ்விர்.
அழகிய முகமூடிகள் பலவற்றை சமூகம் அணியலாம். ஆனால் நிஜமுகம் கொடூரம் நிறைந்தது என்பதை மெல்லிய உயிரிகளால் வலிமையாக்குகிறார் அன்னா ஸ்விர்.
ஜென்மம் முழுதும்
செலவழித்தே வாழ்ந்தாலும்
தீரப்போவதில்லை
அவமதிப்புகளால் பொறிக்கப்பட்ட
என் துயர நாணயங்கள்
அசதியுறும்போதெல்லாம்
அவமதிக்கப்பட்ட ப்ரியங்களின்
உறைந்த ரத்தக்கட்டிகள் மீது
சற்றயர்ந்து கண்மூடிக்கொண்டிருக்கிறேன்
கனவுகள் எவையுமற்று
கனவுகள் வண்ணமற்று
சமூகம் விளைவிக்கும் மன அழுத்தம் எத்தகையது என்பதற்கு ஒரு பானை சோறு இளம்பிறையின் குரல். வானவில் வண்ணங்களால் ஆன வாழ்க்கை வாழ சமூகம் அனுமதிப்பதில்லை. கனவுகளற்ற ஏழ்மைத் தூக்கம் வாய்க்கிறது. கனவுகள் மட்டும்தான் கயிற்றுக் கட்டிலை பஞ்சு மெத்தையாக்கும். மண்சட்டி கஞ்சியை பொன்சட்டி விருந்தாகும். ஆனால் இளம்பிறைக்கு வாய்ப்பதோ கனவுகளின் சுவாரஸ்யம் ஏதுமற்ற வெறுமைத் தூக்கம். வண்ணமற்ற வெறுமைத் தவிப்பு. இந்தச் சூழல் அவருடையது மட்டுமல்ல. சமூகம்- பலருக்குமான இருப்பாக நிர்ப்பந்திப்பது. இந்த வெறுமை வெளியைத்தான் நட்ட நடு மண்டையில் ஓங்கி அடிக்கிறார் பெருந்தேவி “விளையாட வந்த எந்திர பூதம்’’ என்பதாக.
விழிப்புணர்வு என்ற ஒன்பது வரி கவிதையில் தொக்கி நிற்கும் அவமானம் சமூகத்தைத் தலைகுனிய வைக்கிறது.
நான்கு ரௌடிகள்
ஒரு பெண் பாம்பை
வன்புணர்வு செய்துவிட்டார்கள்
அந்த நாளிதழ் செய்தியை
இப்போதுதான் வாசித்தேன்
ஒன்று கவனித்தீர்களா?
இப்போதெல்லாம்
கற்பழிப்பு என்று
எவனும் எழுதுவதில்லை
உச்சபட்சமான அவலம் இது. வார்த்தை மாறியிருக்கிறது. தண்டனை மாறியிருக்கிறது.
ஆனாலும் மாறவேண்டியவர்களின் மனசு மாறவே இல்லை. காலங்காலமாகச் செய்யப்படும் வன்புணர்வு இன்னும் இன்றும் தொடர்கிறது. வார்த்தை நாகரீகம் அடைந்திருக்கிறது. இந்த வார்த்தை உலக அகராதியில் வழக்கொழிந்து போகவேண்டும். இந்த சீரழிவும் வழக்கொழிந்து போகவேண்டும். இந்த எண்ணத்தை வார்த்தைக்குள் பொதிந்து சமூகத்தை தோலுரிக்கிறார் பெருந்தேவி. அதைத்தான் எல்லோருடைய நாட்களும் ஒன்றல்ல என்கிறார் பெருந்தேவி.
பார்த்திருப்போம்
அவமானத்திலிருந்து தொடங்கும்
பலருடைய நாட்கள் அவமானத்திலேயே முடிகின்றன
-இதை மறுக்கவியலாது நம்மால்.
“இலக்கிய கூட்டம் ஒன்றில் மைக்பிடித்து உரையாற்றியது’’ என்னும் கவிதை முச்சந்தியில் நம்மை நிற்கவைத்து, நாம் அணிந்திருக்கும் அழகழகான முகமூடிகளைக் கழட்டி, நம் அழுக்கு முகதரிசனம் தருகிறது.
நான் கடவுளை மறுக்கிறேன்
கடவுள் மறுப்பை மறுக்கிறேன்
கடவுள் அவர் பாட்டுக்கு
பழைய மணைக்கட்டை ஓரத்தில்
உட்கார்ந்திருக்கட்டும் என்கிறேன்
தீவிர இலக்கிய சாமிக்கு
பஜனை பாட மறுக்கிறேன்
அன்பை வலியுறுத்துகிறேன்
அன்பை எழுத்தில் கொட்டி முழக்காதீர்
காதுகளை டமாரம் ஆகிக் காலமாகிவிட்டது
உங்கள்
எழுத்தாளர் ல பெண் எழுத்தாளர் ஆட்டம்
அலுத்துவிட்டது
இது பின் பால் உயிரிகளின் காலம்
காலையில் கிழவனாக
மதியம் பெண்ணாக
முகநூலில் ஃபேக் ஐடியாக
இரவில் மிகை இயக்க ட்ரோன் ஆக
வாழ்பவர்களின் காலமிது
முகமூடிகள் அணிந்து புனிதர்களாக வலம் வருபவர்களின் நிஜத்தை அப்பட்டமாகச் சொல்லுகிறார் பெருந்தேவி. அலங்காரம் செய்து, மினுமினுப்பு அப்பி, உண்மையின் மிகைக் குரலிலில் கூவினாலும் அவர்கள் பொய்மையின் நாற்றங்கால்கள் என்பதை வெட்ட வெளிச்சம் ஆக்குகிறார். அவமானம் என்று சமூகம் உணர்தல் வேண்டும். உண்மையைச் சொல்லுதல் அவமானம் இல்லை. உண்மையைச் சொல்வதாக நடித்தலே பெருத்த அவமானம் என்று பெருந்தேவி சொல்கையில் மறுப்பேதும் உண்டா?
ஜோமனா ஹத்தாத் செய்யும் கவிதை கட்டுடைப்பு பெண் எழுத்தின் புதிய பரிமாணம். புதிய வீரியம். புதிய சுயம். புதிய அகம். புதிய முகம். இந்த துணிச்சலும் ரௌத்திரமும் இல்லாமல்தான் பெண்கள் மௌனப் பெருவெளியாக பல்லாண்டுகள் கிடந்தார்கள்.
நான் சலித்துப் போய் விட்டாள் என்கிறாள்
உறக்கத்துக்குத்கூட தகுதியற்றுப் போனவள் என்கிறாள்
ஆனாலும் அவள் உறங்குகிறாள்
ஆழ்மறதியின் நீர்நிலையில் மூழ்கிக் கிடக்கும்
கருக் குழந்தையாகவே
இருந்துவிடவேண்டும் என்பதற்காக
இயல்பிலேயே தான் இறக்கப் பிறந்தவள் என்கிறாள்
எல்லா வெற்றிகளுக்கும் தன்னைத் தகுதிப்படுத்திக்கொள்ள இழப்பவள்
வாழ்க்கையே ஒரு கெட்ட பழக்கம் என்கிறாள்
அதை கைவிடாமல் தொடர முடியும் என்று நம்புகிறாள்
ஒரு சிறிது மன உறுதியும்
ஒரு பாடு மறதியும் கொண்டு
ஒவ்வொரு வாழ்க்கையும் ஒவ்வொரு இடைவெளியும் ஒவ்வொரு வாக்கியமும் சமூகம் பெண்ணை வைத்திருக்கும் சறுக்கல் நிலைக்கான சத்திய சான்று அல்லவா? சுவாசிப்பதற்கான மன உறுதியும் ஒவ்வொரு இடைவெளியும் ஒவ்வொரு வாக்கியமும் சமூகம் பெண்ணை வைத்திருக்கும் சறுக்கல் நிலைக்கான சத்திய சான்று அல்லவா சுவாசிப்பதற்கான மனவுறுதியும் குரல்வளையை நெறிக்கும் சமூகம் குறித்த மறதியும்தான் அவளாகின்றன. இப்படியான உறுதியும் மறதியுமான இரு துருவ வாழ்க்கையே அவளின் இருப்பு என்றாகிறது.
சில்வியா பிளாத் இதைத்தான், “மரணம் ஒரு கலை பிற கலைகளைப் போலவே’’
என்கிறார். அழகியலோடு இறக்கும் கலையத்தான் பெண்கள் வாழ்வதாக பெயர் பண்ணிக்கொண்டு காணப்படுகிறார்கள்.
மாயா ஏஞ்சலோவும் சம்மட்டிக் குரலாகச் சொல்கிறார்.
“சரித்திரப் பக்கத்தில் என்னை ஒதுக்கலாம்
கசந்து முறுக்கேறி திரிக்கப்பட்ட
உங்கள் பொய்கள் என்னை நிராகரிக்கும்
புழுதியில் தள்ளி என் மீது நடக்கலாம்
ஆனாலும் மேலும் உறுதியாக நானும் எழுந்திருப்பேன்’’
புழுதியாகவேனும் எழுந்து உச்சம் தொடுவேனே தவிர- கல்லாகக் கிடந்து காலம் கழிக்கமாட்டேன் என்பது நவீனப் பெண் சிந்தனை. இவள் கால் தூசிக்கு காத்திருக்கும் அகலிகை அல்ல. கால் தூசியாகவேணும் உயிர்த்தெழும் உன்னதம் என்பதுதான் சமூகத்துக்கு இவளின் பதில்.
தினம்தினம் வருகிறான் அவன்
சாணை பிடிப்பவன்
காலால் சக்கரம் உருட்டிச்
சர்சர்ரென்று தீட்டிக்
கிளப்புகிறான் பொறி
கூவுவான்
கூராக்கக் காத்திருப்பான்
வாடிக்கைதான் கிடைப்பதில்லை
அவனுக்கு ஏன் புரியவில்லை
மொக்கையே பழகிவிட்டது
எல்லோருக்கும்
யாருமே சாணை பிடிப்பதில்லை
எதையுமே
சொரணையைக் கூட
மொக்கையான, மரத்துப்போன, கூர்மழுங்கிப் போன மனசும் வாழ்வும் சமூகத்துக்குப் பழகியிருக்கலாம்.
அவள் இன்னமும் கூர்பொருட்களோடு புழங்கிக்கொண்டேதான் இருக்கிறாள் அன்றாடத்தில். அதனால்தான் தன்னைக் கூர்தீட்டிக்கொள்ளும் செயல்பாடு இன்றும் தொடர்கிறது.
புதுக்கோட்டை மு.கீதா “விழிதூவிய விதைகள்’’ தொகுப்பில் இந்தக் கூர்முனையாக இருக்கும் மனசை வெளிப்படுத்துகிறார்.
புதைத்தாலும்
பூமியில் விதையாய்
அழித்தாலும்
அனலில் தங்கமாய்
சிதைத்தாலும் சித்திரமாய்
மறைத்தாலும்
தமிழ் மறையாய்
வையகத்துள் நிலையாய்
நிலைபெற்றிடும் என்னை
வீழ்வேனென்று நினைத்தாயோ
இன்றைய காட்சி என்று உமாமகேஸ்வரி காட்சிப்படுத்தும் இந்தச் சூழல், உலகின் கடைசி மனிதன் இருக்கும்வரைக்கும் நிதர்சனமாகவே இருக்கும்.
நிராசைகள் கொப்பளிக்கும்
நம் படுக்கையில் நிழத்துவோம் இன்றும்
திரை நியமங்கள் விலகாத
எண்ணிக்கையுள் வராத
இன்றைய காட்சியை
நீயே தீர்மானித்த சுலபப் பாதையை
ராஜபாட்டையென்று கருதி
நிறுவிக்கொள்கிறா் நீயாகவே
இறுதி நிறுத்தத்தை வெற்றிப் புள்ளியென்றும்.
அனுசரணைகள், பூசிமெழுகல்கள்,
சம்பிரதாயங்கள், சமரசங்கள்
மூடிய புதைகுழிகளுனூடாக
அடைய முடியாது என்றைக்குமே
ஆதிக் காதலின் பாதாள வனத்தை
புதர்கள் தாண்டிப் பூத்த
அந்த ஒரே உச்சி மலரை
செய்வதொன்றுமில்லை இனி
திரும்பிய முதுகோடு உன் ஒரே நொடி உறக்கம்
சில்லிடும் தரை ஒண்டிய சுவர்
சுருண்ட பூனையாக என் உளைச்சல்கள்
இவளின் சுட்டுவிரலில் தொக்கிநிற்கும் குற்றச் சாட்டு பிரேரணைகள் பொய்யென்று சொல்லிவிடமுடியுமா இட்டுக்கட்டிய அணிவகுப்பு என்றும் சொல்லிவிடமுடியுமா சமூகம் அடைகாத்துத் தருகின்ற கற்பிதங்கள் எல்லாமே சமநீதியின் வார்ப்படம் என்றும் சொல்லிவிட முடியுமா சமூக நீதியின் நியமங்கள் என்று சொல்லிவிடமுடியுமா மேடு பள்ளங்களால், அவளுக்கென்றே தயாரிக்கப்படும் காவுவாங்கும் கருவிகளால் உருவாக்கப்பட்டிருக்கும் சனாதனங் களைச் சோழிபோல உருட்டுகிறாள் அவள். பகடைக்காயாக அவள் இல்லை.
இனிமேல் அவளின் உருட்டலில் எல்லாமே தாயங்கள்தாம். எல்லாமே குருஷேத்ரப் போர்தான். பணயம்- சமூகம் மட்டுமே.