முனைவர், கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், சமூகப் பணியாளர், விவசாயி, சூழலியல் செயல்பாட்டாளர் என பன்முகத் திறன்கொண்ட படைப்பாளர். இயற்கையையும் பெண்ணையும் இணைக்கும் சக்தி ஜோதியின் கவிதைகள் உயிரொலியின் மிகச்சிறிய மீட்டல். உயிர் இசையின் தாழ்சுருதியின் கணத்தில் கனவுகளினால் ஆன்மாவைத் திறந்துவிடுகின்றன இவரது கவிதைகள். பெண்கள் முன்னேற்றம், இளைஞர் மேம்பாடு, சூழலியல், வேளாண்மை சார்ந்தும் இவர் செயல்பட்டு வருகிறார். இலக்கியம், வேளாண்மை, பெண்கள் முன்னேற்றம் குறித்து இருநூறுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் உரையாற்றியுள்ளார். சங்கப் பாடல்கள், நவீன இலக்கியம், நீர் மேலாண்மை, கல்வி, சுற்றுச்சூழல், விவசாயம் சார்ந்து ஏராளமான கட்டுரைகளையும் எழுதிவருகிறார்.
இவரது கவிதைத் தொகுதிகளை முன்வைத்து இளநிலை ஆய்வு, முனைவர் பட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவரது கவிதைகள் கல்லூரிகளின் பாடத்திட்டத்தில் வைக்கப்பட்டுள்ளன.
தமிழக அரசின் நூலக விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, சிற்பி இலக்கிய விருது உள்ளிட்ட விருது கள் இவரது நூல்களுக்காகப் பெற்றவை. கடந்த ஆண்டு (2021), தென்னிந்திய பதிப்பக மற்றும் விற்பனையாளர் சங்கம் வழங்கும் தமிழகத்தின் சிறந்த பெண் எழுத்தாளருக்கான விருதும், திண்டுக்கல் மாநகரத் தமிழ்ச்சங்கம் வழங்கும் சிறந்த கவிதாயினி விருதும் பெற்றிருக்கிறார். நிலம் புகும் சொற்கள், கடலோடு இசைத்தல், எனக்கான ஆகாயம், காற்றில் மிதக்கும் நீலம், தீ உறங்கும் காடு, சொல் எனும் தானியம், பறவை தினங்களைப் பரிசளிப்பவள், மீன் நிறத் திலொரு முத்தம், இப்பொழுது வளர்ந்து விட்டாள், மூங்கிலரிசி வெடிக்கும் பருவம், வெள்ளி வீதி, கனவின் முற்றத்தில் தரையிறங்கும் தாரகைகள் ஆகிய கவிதை நூல்களையும், சங்கப் பெண் கவிதைகள், ஆண் நன்று பெண் இனிது ஆகிய கட்டுரை நூல்களையும் தந்திருக்கிறார்.
உங்கள் இளமைக்காலம் பற்றிச் சொல்லுங் கள்?
என்னுடைய பால்யம், சுருளியாறு நீர்மின் திட்ட பணிகள் நடைபெற்ற மலைப் பிரதேசக் காட்டில் மணலாறு நதியோடும் பகுதியில் தொடங்கி யது. அப்பாவுக்கு, நீர்மின் திட்டப்பணியில் கட்டிடப் பொறியாளர் வேலை. எனவே மின்சார வாரியம் அமைத்திருந்த தற்காலிகக் குடியிருப்புகளில் வசித்தோம். நான் தவழ்ந்து நடைபயின்ற அந்த நிலம் இப்போது நீரால் நிரம்பி, நதி ஓடிக்கொண்டிருக்கிறது. அடர்ந்த காடும், மலைகளுமான காடம்பாறை பகுதியில் என்னுடைய வளரிளம் பருவம் நிகழ்ந்தது. அதுவும் தற்காலிகக் குடியிருப்புதான். இன்று அந்த நிலம் அடர்ந்த கானகமாக மனிதர்களின் புழக்கமற்று சிறுத்தைகள் வாழுமிடமாக மாறியுள்ளது. இந்த இரண்டு வகையான நிலத்தில் வாழக்கிடைத்த என்னுடைய பருவங்களில் அப்பாவாலும், அண்ணனா லும் வாசிப்பிற்குள் நுழைந்திருந்தேன். இயற்கை யோடும் புத்தகங்களோடும் இணைந்திருந்த தனித்த அனுபவம் அது. இப்போதும் எனக்குள் அந்தக் காடு இருக்கிறது, அந்த நதி இருக்கிறது, அந்த மலைகள் இருக்கின்றன அதனதன் இயல்பு கெடாமல்.
உங்கள் எழுத்துக்கு இலக்கு அல்லது நோக்கம் எதுவெனக் கருதுகிறீர்கள்?
இதுதான் என்கிற வரையறைக்கு உட்பட்ட இலக்கு என்பதில்லை. ஆனால் எழுதுவதற்கான தூண்டுதலை எப்பொழுதும் எனக்குள் கொண்டி ருக்கிறேன். அதற்கான வாழ்வும் எனக்குக் கிடைத்திருப் பதாக நம்புகிறேன். என்னுடைய வாழ்க்கையில் நான் சந்தித்திருக்கும் மனிதர்களை, அவர்களின் வழியாக எனக்குக் கிடைத்திருக்கும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் உத்வேகம் இருக்கிறது. இதன் வழியாக என்னை நான் திரும்பிப் பார்த்துக்கொள்ளவும் முடிகிறது. இயற்கையையும் அதனோடு இணைந்த வாழ்க்கையையும் விட்டு நாம் விலகிச் செல்வதும், இன்றைக்குப் பல்வேறு வகைகளில் சிக்கல் மிகுந்ததாய் அமைந்துவிட்டதுமான நமது வாழ்க்கைமுறை என்னைச் சலனப்படுத்திக் கொண்டிருக்கிறது. சமூகத்தின் அனைத்து வகையான சிக்கல்களுக்கும் அன்பு ஒன்றே நிரந்தரத் தீர்வு எனவும் நான் நம்புகிறேன். அதனால் நிலத்தையும் நீரையும் அது சார்ந்து வாழ்கிற மனிதர்களையும் நேசிக்கிறேன். இதுவே என்னுடைய கவிதை மனமாக இருக்கிறது. மேலும் இந்த நிலம், நீர், ஆகாயம், காற்று, நெருப்பு ஆகிய அனைத்தும் பெண்ணின் வடிவங்கள்தாம். இவைகளின் எது இருக்கிறதோ அது என் கவிதைகளில் இருக்கிறது.
எழுதுவதற்கு உங்களைத் தூண்டக்கூடியவை எவை?
அன்பும் காத்திருப்பும். ஆண்டாண்டு காலமாக எங்கேனும் ஒரு பெண், ஒரு ஆணுக்காகக் காத்திருப்பதை அறிகிறேன். தன்னுடைய தகப்பனுக்காவோ, கணவனுக் காகவோ, மகனுக்காகவோ, காதலனுக்காகவோ அல்லது நண்பனுக்காகவோ அவள் காத்திருக்கிறாள்.
இந்தக் காத்திருப்பின் காலமானது ஒரு கணமாக இருக்கலாம், ஒரு நாளாக இருக்கலாம், ஒரு வருடமாக இருக்கலாம் அல்லது அவளது வாழ்நாள் முழுமையுமாக இருக்கலாம். அந்த ஆண் நல்லவனாக இருந்தாலும், அல்லாமல் போனாலும்கூட அவன் மீதான அன்பின் பொருட்டு பெண் காத்திருக்கிறாள். இந்த நிலத்தில் எந்த இனத்தைச் சேர்ந்தவளாக ஒரு பெண் இருப்பினும், அவள் எந்த மொழியைப் பேசினாலும் அவளின் தனிமைக்கும் அதன் பொருட்டான காத்திருப்புக்கும் ஆண் என்றே பொருள் கொள்ள முடிகிறது. இந்தப் புரிதல்தான் என்னை எழுதத் தூண்டிக் கொண்டே இருக்கின்றது.
உங்கள் திருமண வாழ்க்கை பற்றிச் சொல்லுங்கள். உங்கள் எழுத்து மற்றும் சமூகப் பணிகளுக்கு குடும்பம் உதவியாக இருக்கிறதா?
எங்களுடையது காதல் திருமணம். என் கணவர் சக்திவேல். விவசாயத்தை மட்டுமே வாழ்வாகக் கொண்டவர். நாங்கள் இருவரும் வேறுவேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இருவீட்டார் எதிர்ப்பில்தான் வாழ்க்கையைத் தொடங்கினோம். என்னுடைய வாழ்க்கையில் எத்தனையோ சோதனைகளைக் கடந்துகொண்டிருந்தாலும், ஒருபோதும் இந்த வாழ்வை நான் போராட்டமாக நினைக்க வில்லை.
என் அப்பாவுக்கு எழுத்தாளர் ஆகவேண்டும் என்ற விருப்பம் இருந்தது. என்னுடைய அண்ணன் ஜெயபாலன்தான் என்னுடைய வாசிப்புக்கான அடித்தளம் கொடுத்தவர். ஆனால் அம்மாவுக்குத் தான் என்னை கவிஞராக காணமுடிந்தது. திருமணத் திற்குப்பிறகு என்னுடைய பல்வேறு விருப்பங்களுக்கு மதிப்பளித்து கணவர், மகன் திலீப்குமார், மகள் காவியா மற்றும் என் குடும்பத்தினர் கொடுத்த அரவணைப்புதான் இன்று இந்த சமூகத்தில் ஒரு கவிஞராக அறியப்பட முக்கிய காரணம்.
பெண் மைய எழுத்துகளைப் பற்றிய உங்கள் சிந்தனைகள்?,
ஆண் மையச் சமூகம் வலுப்பெற்றிருந்த காலத்தில் சங்ககால பெண்பாற்புலவர்களின் சிந்தனைகளை பெண்மைய எழுத்துகளாக அடையாளம் காண முடிகிறது. சங்ககாலத்தில் எழுதிய பெண்கள் உணர்த்தியவையும் அதே காலகட்டத்தில் அல்லது உலகம் முழுக்க வேறு மொழிகளில் எழுதிய பெண்கள் பேசிய செய்திகளுக்குமே பாரதூரமான இடைவெளி இருந்தது. அந்த அளவிற்கு தீர்க்கமாக சங்கப் பெண்களின் மொழி இருந்தது. அதனை அடியொற்றி இன்றைய காலகட்டத்தில் நீட்சியடைந்திருக்கும் காத்திரமான படைப்புகளை வாசிக்கும்போது நிறைவைத் தருகிறது. ஏனெனில் பெண்களின் எழுத்துகள் பலநூறு ஆண்டுகள் மறைக்கப்பட்டோ அல்லது இல்லாமலோ இருந்து, சமகாலத்தில்தான் பெண்களுக்கு கல்வியும் கலைகளும் இயல்பாக கிடைத்துள்ளது. இந்தச் சூழலில் உருவாகிற எந்த வகையான பெண் எழுத்தும் கவனிக்கத் தக்கவையே.
பெண் சுதந்திரம், குடும்பம் சார்ந்த மன அழுத்தங் கள், அவளது தனிமை, பெண்ணின் பாலியல் விருப்பு வெறுப்புகள், ஏக்கம், கோபம், ஏமாற்றம், உடல் மற்றும் உள்ளம் சார்ந்த வலிகள் என இன்றைக்கு பெண் மைய எழுத்துகளாக வெளிவந்து கொண்டிருப்பவை அனைத் துமே மிக நிச்சயமாகப் பேசப்பட வேண்டியவை. என்ற போதிலும் மேற்கு நாடுகளின் பெண்ணிய எழுத்துகளுக்கும் நம்முடைய எழுத்துக்களுக்கும் மிகப் பெரிய இடைவெளி இருக்கிறது. இங்கே பெண்களுக்கு நினைத்ததைப் பேசுவதற்கு போதிய சுதந்திரம் இன்னமும் இல்லை. மரபார்ந்த சிந்தனையிலிருந்து மட்டுமல்ல, ஒவ்வொரு பெண்ணும் தன்னிடமிருந்தே விடுதலை பெற்ற மனதினை அடையவேண்டும். நம்முடைய கலாச்சாரம் சார்ந்த மனத்தடையுடன்தான் பெண்கள் பொதுவெளியில் இயங்குகிறார்கள். எனவே பெண் எழுத்துகள் செல்லவேண்டிய தூரமும் மிக அதிகம்.
சுய அனுபவத்தை பொது அனுபவமாக மாற்றும் வகையில்தான் ‘அவன், அவள்’ என படர்க் கையில் உங்கள் கவிதைகள் அமைந்துள்ளனவா?
தன்னிலையில் எழுதப்படுகிற கவிதைகளை விடவும் அவன், அவள் என எழுதப்பட்டு, காலங் கடந்து நிற்கிற சங்க மரபுதான் அது. அகக்கவிதை கள் படர்க்கையில் பேசப்படுவதும் புறவாழ்வை தன்னிலையில் எழுதுவதுமான அந்த மரபு சங்க இலக் கிய வாசிப்பு மூலமாக எனக்குள் பதிந்திருப்பதால் இருக்கலாம். மேலும் என்னுடைய கவிதைகளில் வருகிற அவனோ, அவளோ ஒரு அவனும், ஒரு அவளும் அல்ல. மேலும் நான் சந்திக்கிற பலவிதமான பெண்களின் அனுபவங்களில் என்னைப் பொருத்திக் கொள்கிறேன். பொதுவாக படைப்பு மனம் என்பது எல்லாவற்றோடும் தன்னைப் பொருத்திக் கொண்டும், தன்னிலிருந்து தன்னை விடுவித்தும்கூட இயங்கும் என்பதே என்னுடைய எண்ணம்.
தமிழின் பாரம்பரிய கவிதைகள் பெண்ணுடல் குறித்த சுதந்திரமான கற்பனைக்கு இடம் கொடுக்கிறதா?
கொடுத்திருக்கிறது. பெண்களின் உடல், மன உணர்வுகளைப் பற்றி சங்கப் பெண்களும், ஆண்டாளும், காரைக்கால் அம்மையும் தாராளமாகப் பேசியிருக்கி றார்கள். பிற்காலத்தின் ஆவுடையக்காளும் மிக நுட்பமாகத் தன்னை வெளிப்படுத்தியுள்ளார். ஆண்பாற் புலவர்கள் பெண்களின் உடலைக் கொண்டாடி வருணனை செய்ததற்கும், பெண்ணுடல் குறித்து அச்சப்பட்டு பழித்துப்பேசியதற்கும் கூட நம்முடைய கவிதை மரபில் மிகச்சுதந்திரமான இடம் இருந்திருக்கிறது. பெண்களின் படைப்புகளில் வெளிப்படுகிற பெண்ணுடல் மனமாகவும், ஆண்களின் படைப்புகள் பெண்ணுடலை உடலாக மட்டுமே நிறுத்துவதும் இன்றுவரையில் நிகழ்ந்து கொண்டிருப்பதற்கும் நம்முடைய மொழியில் இடம் இருந்துகொண்டுதான் இருக்கிறது.
ஆண், பெண் இருவருக்கும் உடலியற்கூறு சார்ந்து வாழ்வியல் மாறுபடுகிறது. வாழுகிற முறையின் அடிப்படையில் சிந்தனையும் மாறுபட்டிருக்கிறது. இந்த உயிரியல் தன்மையின் வேறுபாட்டினை முன்னிட்டு படைப்பிலும் மிக நுட்பமான வேறுபாடு இருக்கிறது.
சங்க இலக்கியம் தொடங்கி சமகாலம் வரையில் ஆழமான வாசிப்பினைக் கொண்டவர் நீங்கள்.
தமிழ் தவிர வேற்று மொழி இலக்கியங் கள் வாசிப்பு எந்த வகையில் உங்களது சிந்தனைகளுக்கு உதவுகிறது?
பதின்பருவத்தில் எனக்கு வாசிக்கக்கிடைத்த ருஷ்ய மொழி இலக்கியங்கள் வழியாகவே அயல் இலக்கியங் களுக்குள் பிரவேசித்தேன். பிறகு தொண்ணூறுகளில் ஐரோப்பிய இலக்கியப் பரிச்சயம் கிடைத்தது. மனித மனங்களின் அகவெறுமை மற்றும் தனிமையைப் பற்றிய புரிதல் ஏற்பட்டதும் அப்போது நிகழ்ந்தது. கிழக்கு மற்றும் மேற்கு நாடுகளில் சமூகப் பொருளாதார, நிலவியல் சார்ந்த புரிதலோடு ஆண்பெண் உறவு சார்ந்த வேறுபாடுகளும் புரியத்தொடங்கியது. இன்று வரையில் தேடித்தேடி வாசித்துக்கொண்டிருக்கிற கதைகள், கவிதைகள் மூலமாகவும், அயல் திரைப்படங் கள் வழியாகவும் உலகம் முழுமையும் வாழ்கிற மனிதர் களைப்பற்றி அறிந்து கொள்ள முயலுகிறேன்.
நேரடியாக பயணப்பட்டு அறிந்து கொண்ட நாடுகளை விடவும் வாசிப்பின் வழியாக அந்த நிலத்தில் வாழவும் செய்கிறேன்.
சங்கப் பெண்பாற்புலவர்களின் பாடல்களை நவீன வாழ்வியலோடு ஒப்பிட்டு நீங்கள் எழுதியுள்ள ”சங்கப்பெண் கவிதைகள்” பரவலான கவனம் பெற்றுள்ளது. இருவேறு காலகட்டத்தை எவ்வித மாக ஒப்பீடு செய்கிறீர்கள்?
சங்கப் பெண்பாற்புலவர்களின் அகப்பாடல்கள் எனினும் புறப்பாடல்கள் எனினும் அது அவர்கள் வாழ்ந்த நான்கு நிலத்தினை அடிப்படையாகக் கொண்ட சூழலில் எழுந்தவை. அவர்கள் காலத்தின் வாழ்வியலை நிலக்காட்சிகளின் வழியே உணர்த்தி யுள்ளனர். ஈராயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ்நிலத்தின் வேரில் தான் இன்று நாம் விழுதுகளாகி கிளைபரப்பி யுள்ளோம். நான்கு நிலத்திற்கும் தனித்தனியாக கடவுள், மரம், பறவை, உணவு, இசை, மனிதர், விலங்கு, ஊர், நீர்நிலை, தொழில் போன்றவை கருப்பொருள்களாக இருந்தன. இந்த நான்கு நிலத்தின் புறக்காட்சிகள் வழியாக அக உணர்வுகளைக் கட்டமைத்திருந்தார்கள்.
காடு, மலை, பள்ளத்தாக்கு, சமவெளி, பாலை எதுவாக இருந்தாலும் பயனேதும் விளைவிக்காத நிலமேதும் இருக்காது. அதன்மேல் வாழ்கின்ற ஆண்களின் மனதிற்குத் தகுந்த பலன் தருகிறது அந்நிலம் என்பதன் அடிப்படையில் எழுந்தன சங்கப் பாடல்கள்.
இன்றைக்கு நிலம் திரிபடைந்துவிட்டது. பொழுது திரிபடைந்துவிட்டது. நிலத்தையும் பொழுதையும் மாற்றுகிற விதமாகவே மனிதர்களின் வாழ்வும் திரிபடைந்துள்ளது. என்றபோதிலும் அடிப்படையான மனித உணர்வுகளான காதலும், வீரமும் மாறவில்லை. ஆனால் அவை சார்ந்த நேர்மறை எதிர்மறை செயல்பாடுகள் விரிவடைந்துள்ளன.
எனவே இன்றைய படைப்பிலக்கியம் அகம் மற்றும் புற உணர்வுகளின் எதிர்மறை நிலைகளையும் காட்டுகிறது. ஈராயிரம் ஆண்டுகால மொழியின் தொடர்ச்சியில் இன்றைய படைப்பிலக்கியம் அடையாளப்படுத்துகிற மனிதர்களின் உளவியலை எழுத விழைந்திருக்கிறேன். நவீன பெண் கவிஞர்களின் படைப்புகள் மட்டுமன்றி, ஆண் படைப்பாளர்கள் சிலருடைய கதை, கவிதைகளையும், திரைப்படங்களின் காட்சிகள், பாடல் வரிகளையும் இணைத்துப் பேசியுள்ளேன். மேலும் உலகம் முழுமையும் கணினி என்கிற ஒற்றைச் சாளரத்தில் திறக்கப்பட்டுள்ள இந்தக் காலத்தில் ஏற்பட்டுள்ள கலாச்சார கலப்பின் காரணமாக சங்கப் பாடல்களின் உணர்வோடு அயல் மொழித் திரைப்படங்களையும் அடையாளம் காண முயன்றிருக்கிறேன்.
என்னுடைய முனைவர் பட்ட ஆய்வில் இந்தச் சமூகத்தின் மையமாக ஆண் எவ்விதம் கட்டமைக்கப்படுகிறான் என்று பேசப்பட்டது என்றால் என்னுடைய இந்த சங்கப் பெண் கவிதைகள் எனும் நூல் இந்த சமூகத்தின் மையமாகக் கருதப்படுகிற ஆணை இயக்குகிறவளாக பெண் எவ்விதம் இருக்கிறாள் என்பதைப் பற்றியே பேசுகிறது.
உங்கள் முனைவர் பட்ட ஆய்வு பற்றிச் சொல்லுங்கள்.
ஆணும் பெண்ணும் தங்களின் தேவைகளை முன்னிட்டு ஒருவரை ஒருவர் சார்ந்து வாழவேண்டிய சூழல் இருக்கிறது. தனிச்சொத்து உருவாக்கத்திற்குப் பிறகு தேவை என்பது பொருளாதாரத்தின் அடிப்படை யில் கணக்கிடப்பட்டது. மனம் மற்றும் உடலின் தேவை என்பது பொருளை முன்னிட்டு நிகழத் தொடங்கிய பின்பே ஆணுக்கு பெண்ணுடல் மீதான கட்டுப்பாடுகளும், ஆண் மேலாதிக்கமும் நிகழ்ந்திருக்கிறது. நிலத்தின் மீதான பெருவிருப்பமே பெண்ணுடல் மீதான ஆதிக்கமாக உருவாகியுள்ளது. இதனை நிகழ்த்த மொழியே துணையாக இருக்கிறது. அதிகாரத்தினால் பெண்ணுடல் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகளை அல்லது ஒடுக்குதலைவிட அன்பின் பொருட்டே அதிகமும் நிகழ்கிறது. இதற்கான தொடக்கப்புள்ளியை ஆய்வு செய்ய விரும்பிய என்னுடைய தேடல்தான் என்னுடைய முனைவர்பட்ட ஆய்வு. மானுடவியல் தோற்றம் தொடங்கி நிலம், நிலத்தின் பொருட்டு பெண்ணுடல், அதனைக் கையகப்படுத்த பெண் மனதை வழிப்படுத்த மொழி எவ்வாறு பயன்பட்டது என்பதே என்னுடைய ஆய்வு. “சங்க இலக்கியம்- நிலம் உடல் மனம் மொழி” என்கிற தலைப்பில் நூலாகவும் வர இருக்கிறது.
இருவேறு விதமான மனநிலையைத் தருகிற சமூகப்பணி சார்ந்த உங்கள் செயல்பாடு மற்றும் இலக்கியச் செயல்பாடு உங்களை ஒருங்கிணைக்கிறதா?
மிக நிச்சயமாக ஒருங்கிணைக்கிறது. புதியதாக என்னவோ செய்யப்போகிறோம் என்ற உணர்வுடன் 2001 ஆம் ஆண்டு “ஸ்ரீ சக்தி அறக்கட்டளை நிறுவனத்தைத் தொடங்கிய நாளில் என்னுள் இருந்த மகிழ்வையும், நிறைவையும் இந்த கணம் வரையில் உணர்கிறேன். என்றபோதிலும் இந்த இருபது ஆண்டுகளும் பல்வேறுவிதமான தடை களையும் சிக்கல்களையும், முடிச்சுகளையும் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறேன். ஆண்களின் மையமாக இயங்குகிற இந்தச் சமூகத்தில் ஒரு பெண் இதுபோன்ற சமூகப்பணிக்கான நிறுவனத்தைத் தொடங்கி நடத்துவது என்பது அத்தனை எளிதில்லை என்கிற புரிதல் எனக்கு வருவதற்கே பல ஆண்டுகள் ஆகிற்று. அந்தப் புரிதல் எனக்கு ஏற்பட்டபொழுது ஆண்கள், அதிகாரம், பால்வேறுபாடு சார்ந்து என்னுடைய செயல்பாடுகளை இன்னும் கொஞ்சம் நேர்த்தியாகவும் திடமாகவும் வடிவமைத்துக் கொள்கிறேன். இதற்கு இலக்கியம் சார்ந்த என்னுடைய செயல்பாடுகளே துணையாக இருக்கின்றன. கவிதைக்குள் தோய்ந்திருக்கும் மனதுடன் சமூகத்தை எதிர்கொள்வது எனக்கு சற்று எளிதாக இருக்கிறது.
உங்கள் நிறுவனத்தைத் தொடங்கிய நோக்கத் தின் பாதையில் பயணிப்பதாக உணர்கிறீர்களா? இந்தப் பயணத்தில் உங்கள் செயல்பாடுகள் பற்றிச் சொல்லுங்கள்.
எத்தனை இடர்ப்பாடுகள் ஏற்பட்டாலும் ஒரு துறையில் இருபது ஆண்டுகள் கடந்து செயல்படுவது என்பதே தொடக்க கால நோக்கத்தின் பாதையில்தான் பயணித்துக் கொண்டிருக்கிறேன் என்று என்னை உணர வைக்கிறது. இந்த நிறுவனம் தொடங்கிய காலம் என்பது பெண்களுக்கான சுயஉதவிக்குழு என்கிற செயல்பாடு சீராக நடைபெற்றுக்கொண்டிருந்த காலம். பெண்கள் வீட்டை விட்டு வெளியே வந்து அரசு அலுவலகங்களை அணுகுதல் என்பதும் வங்கிகளுக்கு செல்லுதல் என்பதும் நடைமுறையில் இல்லாத காலத்தில் இந்த சுய உதவிக் குழு என்கிற செயல்பாடு தோன்றியது. முதன்முதலாக நபார்டு வங்கி இந்தத் திட்டத்தை அறிமுகம் செய்ய, வங்கிகள் பலவும் கடனுதவி செய்ய முன்வர, கிராமப்புறப் பெண்களுக்கு வங்கிகளும் அதன் நடைமுறைகளும் அறிமுகம் ஆகின. ஒரு காலத்தில் வங்கிகளுக்குச் செல்வதென்பது பணம் படைத்தவர்களின் செயல்பாடு போலவும் படித்தவர்களின் செயல்பாடு போலவும் இருந்தது. கையெழுத்துக்கூட போடத் தெரியாத, படிக்காத கிராமப்புற பெண்களுக்கு வங்கிகளுக்குச் செல்வதென்பது காவல் நிலையங் களுக்குச் செல்வதுபோல பயமும் தயக்கமும் நிறைந்தாக இருந்தது. இன்று தங்கள் பொருளாதார மேம்பாட்டிற் கான திட்டமிடலை, விவசாய நிலத்தை பராமரிக்க, குழந்தைகளின் உயர்கல்வியை வங்கிகளின் உதவியோடு தீர்மானித்து பெண்களே செயல்படுத்துகிறார்கள். இந்த நிறுவனத்தின் மூலமாக கிட்டத்தட்ட 800 கிராமங்களில் 50,000 பெண்கள்வரையிலும் பயன்பெறச் செய்திருக்கிறோம்.
பெண்கள் மேம்பாடுதவிர, இளைஞர்களுக்கான தொழில் பயிற்சி, வேளாண்மை, சுற்றுச்சூழல் என்று இந்த நிறுவனத்தின் மூலமாக தொடர்ந்து செயல்படுகிறோம்.
விவசாயம் குறித்த செயல்பாடுகளில் கவனம் கொண்டது எவ்விதம் நிகழ்ந்தது?
இயற்கையை விட்டு விலகமுடியாதது பெண்ணின் மனம். ஒரு சிறிய தாவரத்தையாவது வளர்க்காத பெண்ணைப் பார்க்கவே முடியாது. பறவைகளுக்கு தண்ணீர் வைக்காத, காக்கைக்கு உணவு வைக்காத பெண்கள் இல்லையென்றே சொல்லலாம் அல்லது மிக மிகக் குறைவு. பெண்களின் இந்த அடிப்படையான எளிய மனதையே நானும் கொண்டிருக்கிறேன். மேலும் நீர், நிலம், காடு, பல்லுயிரியம், வேளாண்மை போன்ற இயற்கை வளங்களைப் பாதுகாக்க ஒவ்வொரு தனிமனினுக்கும் கடமையிருக்கிறது. ஆனால் இரசாயன உரங்கள், மரபணு மாற்றப்பட்ட விதைகள் மூலமாக நம்முடைய நாட்டின் வளங்களை அழித்துக்கொண்டிருக்கிறோம். நம்முடைய உணவிற்காக அந்நிய நாடுகளிடம் மண்டியிடும் காலத்தை துவக்கிவைக்க மரபணு மாற்றப்பட்ட கடுகு விதை துவங்கியுள்ளது.
ஹிட்லரின் சித்திரவதை முகாம்களில் யூதர்களை கொன்று குவிக்க பயன்படுத்திய ழவஃகஆச - இ என்னும் விஷ வாயுக்களை உற்பத்தி செய்து கொடுத்த நிறுவனங்கள் ஙஞசநஆசபஞ மற்றும் இஆவஊத ஆகியவை. இந்த நிறுவனங்கள் தயாரித்த இரசாயன குண்டுகளைப் பயன்படுத்தியே இரண்டாம் உலகப்போரிலும் வியட்னாம் போரிலும் ஆயிரமாயிரம் உயிர்கள் கொல்லப்பட்டன. இந்த நிறுவனங்களின் தயாரிப்பான மரபணு மாற்றப்பட்ட பருத்தி 3 லட்சம் விவசாயிகளின் உயிர்களை காவு வாங்கியது. இவை தவிர இரசாயன உரங்களின் விளைவுகளைச் சொல்லித் தீர்க்கமுடியாது. இந்த இடத்திலிருந்தாவது மரபணு மாற்ற விதைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயலலாம்.
விவசாயம் என்கிற செயல்பாட்டின் தொடக்க மான விதைத்தலை ஒரு பெண்தான் கண்டுபிடித்திருக்க முடியும். ஆதிகாலம் தொட்டு இன்று வரையில் உணவுச் சங்கிலியின் கண்ணி அறுந்துவிடாமல் பெண்களால்தான் பாதுகாக்கப்பட்டு வருகிறது. பாரம்பரியமாகக் காக்கப்படுகிற விதையென்பது விதை என்கிற ஒரு சொல் மட்டுமல்ல. நாம் இன்றைக்கு இழந்து கொண்டிருக்கும் பாரம்பரிய அடையாளங் கள், உறவுகள் என யாவையுமே இதில் அடங்கும். அதனால்தான் நிலம், நீர் பாதுகாப்பு சார்ந்து எங்களுடைய நிறுவனத்தின் செயல்பாடுகள் அமைந் துள்ளன.
நிலம், நீர் பாதுகாப்புக்காக உங்கள் நிறுவனம் செயல்பாடுகளில் குறிப்பாக நீர்ச்செறிவு மேலாண்மை குறித்துச் சொல்லுங்கள். உங்களுக்கு இந்த செயலில் தனிப்பட்ட விருப்பம் ஏற்பட்டது எவ்வாறு?
நிலத்தோடு வாழ்கிறவள் நான், நிலம் என்றும் நீர் என்றும் பெண்ணே இருக்கிறாள் என நம்புகிறவள் நான். இவற்றை என்னுடயை வேலையின் தன்மையிலிருந்தும் உணர்ந்து கொள்கிறேன். அதனா லேயே நிலத்தின் தன்மை கெடாமல் பாதுகாக்க ஏதாவது செய்துகொண்டே இருக்க நினைக்கிறேன். பராமரிப்பற்ற மலையடிவார தரிசுநிலங்களில் பெய்கிற மழையானது, மண்ணை அரித்துச் செல்கிறது. மழைநீர் நிலத்தின் அடியில் சேகரமாகாமல் வீணாகிறது. நம்முடைய பாரம்பரிய முறையிலான நிலச் சீரமைப்புச் செயல்பாடுகளான மண்வரப்புகள், பண்ணைக்குட்டைகள், நீர் உறிஞ்சும் குழிகள் போன்ற வேலைகளை செய்யத் தவறிவிட்டோம்.. மேலும் கோடை உழவு செய்வதையும் தவிர்த்து விடுகிறோம்.
விவசாயம் என்பது மனிதர்கள் மட்டுமன்றி சிறிய பறவைகள், விலங்குகள் போன்ற அனைத்து உயிர்களுக் குமான உணவுச் செயல்பாடு என்கிற நம்முடைய ஆதி மனத்திலிருந்து வேறு இடத்திற்கு நகர்ந்து விட்டோம். மழைநீர் சேகரிப்பின்றி போய்விட்டதால் நிலத்தடி நீர் குறைகிறது. நீர் ஆதாரங்களை சிதைத்துவிட்டோம். நீர் வழிகளையும் ஆக்கிரமிப்பு செய்துவிட்டோம். நீர் ஆதாரங்களை பாதுகாக்காமல் விட்டதால் ஏற்படுகிற பாதிப்புகளை நாம் உணர்ந்து கொண்டிருக்கும் காலம் இது.
கிட்டத்தட்ட 6000 ஹெக்டேர் நிலப்பரப்பில் நம்முடைய பாரம்பரிய முறையின் நிலச் சீரமைப்புச் செயல்பாடுகளான மண்வரப்புகள், பண்ணைக்குட்டைகள், நீர் உறிஞ்சும் குழிகள் போன்ற பணிகளையும் சுமார் 1,00,000 பழமரங்களையும் மழைமரங்களையும் நட்டு பராமரிக்கிற செயலையும் இந்த நிறுவனத்தின் மூலமாகச் செய்கிறேன். இதனால் நேரடி விவசாயத்திலும், விவசாயம் சார்ந்த தொடர் செயல்பாடுகளிலும் 10,000 விவசாயிகள் வரையில் பயனடைகிறார்கள்.
நிலத்திற்கு மேலேதான் எல்லைகள் பிரிந்துகிடப்பதும், தனிமனித உரிமையும் பாகுபாடுகளும் இருக்கின்றன. நிலத்தின் அடியில் ஓடுகிற நீரோட்டத்திற்கு தடை ஏதுமில்லை. மேட்டு நிலத்தில் செய்யப்படுகிற நிலச் சீரமைப்புச் செயல்பாடுகள் அந்த நிலத்தில் மட்டுமல்லாது மற்ற நிலங்களி லும் நிலத்தடி நீரை வளப் படுத்துகிறது. இதனால் நிலத்தடி நீரோட்டம் சீராகிறது. அடுத்த தலைமுறையின் நீர் ஆதாரத்தைப் பாதுகாக்கிற பொறுப்பு அனைவருக்குமே இருப்பதாக நம்புகிறேன். எனவே மழை பொழிந்து நிலம் நெகிழுமெனில் என்னுடைய மனம் நிறைவடைகிறது.
சூழலியல் ஆர்வலராகவும் இருக்கிறீர்களே, அதைப்பற்றிக் கூறுங்கள்.
எனக்குள் எப்போதும் ஒரு காடு இருக்கிறதாக உணர்கிறவள் நான். இப்போது அந்த நினைவறையின் திரை விலக்கிப் பார்க்கிறேன். என்னுடைய பால்யம் தொடங்கி பதின்பருவ நினைவு வரை எனக் குள் பொதிந்து கிடப்பது ஒளியறியாத அடர்கானகம் எனில் அது என்னுடைய காடம்பாறை தினங்கள் தான்.
இத்தனை காலமாக அந்தக் காடு மழையில் நனைந்த ஈரத்துடன் இருள் அடர்ந்து எனக்குள் புதைந்து கிடக்கிறது. நனைந்த ஒளி, நீர்ப்பூச்சு மினுங்கும் கரும்பாறை, வான்முட்டும் தேன்பாறை, மந்திகள் தாவிக்குதிக்கும் பள்ளத்தாக்குகள் எனவும் மான், மிளா, கரடி, முள்ளம்பன்றி, கருங்குரங்கு, காட்டு அணில், காட்டு கோழி, காட்டு மாடு, சாரைப் பாம்பு, நல்லபாம்பு, பச்சை பாம்பு, கீரி, அட்டைப்பூச்சி, யானைகளின் கூட்டம், பெயர் தெரியாத எண்ணற்ற பூச்சிகள், கேளையாடு, வரையாடு என வனமிருகங்கள் நடமாடித் திரிந்த அந்தக் காட்டினுள் நான் வாழ்ந்திருக்கிறேன். வண்டுகளின் ஓயாத பேரிரைச்சலை, மின்னலில் பெரும் இடியோசையில் வெடித்துப் பூத்திருந்த காளான்களின் வெள்ளை நிறத்தை கண்டிருக்கிறேன். சிறு தொடுதலில் சாய்கிற காளான்களின் மென்மையில் நெகிழ்ந்திருக் கிறேன்.
வேங்கை மரத்தின் உடலைக் கீறி அதன் சிவந்து வடியும் பால் எடுத்து என் நெற்றியில் திலகமிட்டு வளர்க்கப்பட்ட பெண் நான். வேங்கை மரத்தின் பால் எடுக்க நானும் காட்டிற்குள் அலைந்திருக்கிறேன்.
அப்போது அங்கே நான் பார்த்த வெக்காளி, கல்வரசு, செங்கோரை, தோதகத்தி, தடுசு, தேக்கு, கடுக்காய், வேங்கை என பின்னாளில் நான் பெயரறிந்த என் பால்யகால மரங்களின் வாசனை என்மீது இப்பொழுதும் கமழ்ந்திருப்பதாகவே நான் நினைப்பதுண்டு .
அங்கு நான் பார்த்த உயர்ந்த பெருநெல்- மரங்களையும் சோப்புக் காய் மரங்களையும் இன்று நான் காணவேயில்லை. நின்று நிதானித்து ஒலிக்கின்ற செம்போத்துப் பறவையின் குரல், எதிர்பாராத சமயத்தில் ஓசையெழுப்பும் வவ்வால்களின் இறக்கை சப்தம்,என் மீது வண்ணங்களை அப்பிச் செல்லும் வண்ணத்துப் பூச்சிகள் இப்படி எதுவுமே இன்று நான் காணவேயில்லை எனினும் எனக்குள் ஒரு காடு இருக்கிறது. அந்தக் காடும், அந்தக் கானகத்தின் நடுவே நான் வாழ்ந்த பருவமும் என்னுடைய கவிதைகளில் இருக்கிறது. நிறுவனத்தின் செயல்பாடுகள் மூலமாக அதனைச் செயலாக்கம் செய்துகொண்டிருக்கிறேன்.
உங்களுடைய இத்தனை சமூகச் செயல்பாடு களினால் அருகிருந்து பார்க்கக்கூடிய உங்கள் அனுபவத்தில் இருந்து இன்று பெண்களின் நிலைமை என்ன? சமூகத்தில் என்னென்ன மாற்றங்கள் வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
பெண்களை திரும்பத் திரும்ப இயற்கையோடு இயைந்தே உணர்கிறேன். இயற்கையின் அனைத்துமே ஆண் பெண் வடிவங்கள் தான். நம் வாழ்நாளில் அவற்றை சிறிய அளவே நாம் நுட்பமாகக் கவனித்தால் போதும், இயற்கையின் குரலுக்கு நாம் சற்றே செவிசாய்த்தால் போதும், இந்த வாழ்வை நாம் மிகச்சரியாக வாழ்ந்துவிடுவோம் என நம்புகிறேன். ஆண்பெண் என்கிற இணை உயிர்களில் ஒன்று மேல், மற்றது கீழ் என்று இல்லாமல் செயல்பட வேண்டும். எத்தனை விதமான வாய்ப்புகள் வழங்கப்பட்டாலும், ஒரு பெண் தன் வாழ்நாளில் தன்னை முற்றிலும் உணர்ந்து கொள்வதென்பது கல்வியினால் மட்டுமே சாத்தியமாகும். திறந்த மனதுடன், அறிவும் ஆற்றலும் கொண்டவர்களாக, எந்த ஒரு செயலிலும் முடிவெடுக்கும் திறன் கொண்டவர்களாக, ஒரு சிக்கல் வரும்போது நிதானமாக எதிர்கொள்ளும் வலிமை கொண்டவர்களாக பெண்களும் தங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். அவரவர் சார்ந்திருக்கும் சமூக, குடும்பப் பின்னணியின் வழியாகவே ஒவ்வொரு பெண்ணுக்கும் இந்த வாய்ப்பும், வாழ்வும் நிர்ணயிக்கப்படுகிறது.
வெளிநாடுகள் பலவற்றுக்கும் சென்று இருக்கும் நீங்கள், உங்கள் பணி சார்ந்து, உங்களை பாதித்த அல்லது ஈர்த்த ஏதேனும் ஒரு விஷயத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம், மகளிர் முன்னேற்றத்திற்கான வழிகாட்டியாக செயல்பட்டதற்காக மாவட்ட மற்றும் மாநில அளவிலான விருதுகளை நேரு யுவகேந்திரா நிறுவனத்தின் மூலமாக வழங்கியது. அந்த சமயத்தில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பல்வேறு துறைகளைச் சேர்ந்த நூறு இளைஞர்களை ஒருங்கிணைத்து இந்திய சீன நல்லுறவுப் பயணம், இந்திய- சீன அரசுகளினால் திட்டமிடப்பட்டது. அதில் சமூகப்பணியாளராக தமிழ்நாட்டின் சார்பாக நானும் அந்தப் பயணத்தில் கலந்து கொண்டேன். அறுபது சதவீதம் மாணவ மாணவியரும், நாற்பது சதவீதம் சமூகப்பணி மற்றும் பஞ்சாயத்ராஜ் பணியாளர்களும் கலந்து கொண்ட வித்தியாசமான இந்த குழு இது. சீனா வின் நான்கு மாகாணங்களில் எங்களுடைய பயணம் அமைந்திருந்தது. இந்தியக் கலாசாரம் முழுமையும், சீனமக்களின் வாழ்வியல் மற்றும் கலைகளுமாக ஒரேசமயத்தில் சந்தித்துக்கொள்ள என்னைப் புதுப்பித்துக் கொண்ட பயணம் அது.
பல்வேறு கதைகளையும், கலாச்சாரங்களையும் உள்ளடக்கிய ஒரு பாரம்பரியமான சீனாவின் கலை, இலக்கியம், கலாச்சாரம், கல்வி தொழில் வளர்ச்சி, மருத்துவம், அரசியல், மதம், குடும்பம் என பரந்துபட்ட கலந்துரையாடலை அங்கிருந்த இளைஞர்களோடு கலந்து பேசியும் அவர்களோடு உறவாடியும் திரும்பியதில் அரசின் கலாச்சார பரிவர்த்தனை நோக்கம் நிறைவடைந்ததாக இருந்தது. தனிப்பட்ட வகையில் உறவுகள் தான் வாழ்வை அர்த்தமுள்ளதாக ஆக்குகிறது என்ற என்னுடைய நம்பிக்கை மேலும் ஆழப்பட்டது.
என்னுடைய அப்பா நீரேற்று மின்திட்டங்களில் கட்டடப் பொறியாளராக பணியாற்றியவர். அணைக் கட்டுகள் கட்டும்போதும், சுரங்கம் தோண்டும்போதும் ஏற்படுகிற மண்சரிவுகள் மற்றும் ஏனைய கட்டுமானம் சார்ந்த விபத்துகள் பற்றியும் அதனால் ஏற்படுகிற உயிரிழப்புகள் பற்றியும் அப்பாவின் அனுபவத்திலிருந்து கேட்டு வளர்ந்தவள் நான். பெரும் இடிபாடுகளில் சிக்கிய பலருடைய உடல்கள் இறந்த நிலையிலும்கூட வெளியே எடுக்க முடியாமல்போன செய்திகளும் என் நினைவுகளின் அடுக்குகளில் பதிந்தே இருக்கின்றன.
இந்த அறிதலுடன் சீனப்பெருஞ்சுவரில் நடந்தபொழுது அத்தனை பெரிய சுவரின் உருவாக்கத்தின் பின்னணியும், இழந்த உயிர்களுமே என்னுடைய நினைவில் வந்தன. மிகப்பெரிய கட்டடங்கள் அல்லது உலக அதிசயங்களுக்குப் பின்பு மட்டுமல்ல, வரலாறு முழுவதுமே இரத்தம் தோய்ந்ததாகவே இருப்பதை அங்கிருந்தே உணரத் தொடங்கினேன். அப்போது அங்கேயே வைத்து எழுதிய கவிதை இது,
சீனப் பெருஞ்சுவர்
இத்தனை அகலமாக இருக்குமென்பது
எனக்குத் தெரியாது
நான்
அப்படிப்பட்ட தேசத்திலிருந்து வந்தவளல்ல
இத்தனை பெரிய சுவர் தேவையா
என்பதும் எனக்கு தெரியாது
எத்தனை எத்தனை கற்கள்
எத்தனை எத்தனை உயரம்
எத்தனை எத்தனை உழைப்பு
இத்தனைக்கும் மேல் நடக்கிறார்கள்
ஓடுகிறார்கள்
வாகனங்களை ஓட்டுகிறார்கள்
ஆகாயத்தின் மீதிருந்து படமெடுக்கிறார்கள்
எதிலும் பதிவாகவில்லை
அத்தனை அத்தனை மரணங்கள்
ஒரு முறை
ஒரு கல் நகர்ந்தது
ஒன்பது பேர் இறந்தார்கள்
எத்தனையோ கற்கள் நகர்ந்திருக்கின்றன
நான்
என் மெல்லிய பாதங்கள்
அதன்மீது பட்டு நோகாத வண்ணம் நடக்கின்றேன்
ஓர் அஞ்சலி போல
ஆன்மாக்கள் வானத்தில் மிதக்கின்றன
அதைப் பார்த்தவாறே
அடுத்த என் மென்னடியை
எடுத்து வைக்கின்றேன்.