பெண்ணாகப் பிறப்பதற்கு தெளிவாக ஒரு நோக்கம்தான் இருக்கிறது. பெற்றெடுப்பது, குழந்தையை வளர்ப்பது. அந்த உடலமைப்பிற்கு வேறென்ன காரணம் கூறுவதற்கு இருக்கிறது? பெறுவது... அந்தவகையில் மானிட வம்சம் அழியாமலிருப்பது!
நகரம் முழுவதும் அலைந்து திர்ந்துகொண்டிருந்த பெண்ணுக்கு வயது வந்தபோது, அவள் கர்ப்பிணி யானாள். என்ன காரணத்திற்காக அவள் பிறந்தாளோ, அந்த காரியம் அந்தவகையில் நடைபெற்றது. அவள் பிரசவமானாள். அவளுடைய மார்பில் முலை எதற்காக வளர்ந்ததோ, அந்தவகையில் அந்த நோக்கமும் நிறைவேறியது. அவள் ஒரு குழந்தையை இடுப்பில் வைத்துக்கொண்டு நடப்பதைப் பார்க்கலாம்.
கர்ப்பம் முழுமையடைந்தபோது, சில பிரச்சினைகளும் உண்டாயின. மிகுந்த வேதனையை அனுபவித்து தான் அவள் பிரசவமானாள். அந்த குழந்தை ஒரு சுமை... சிரமம். முன்பு கிடைப்பது முழுவதையும் அவளே சாப்பிட்டு விடலாம். இரண்டு கைகளையும் வீசிக்கொண்டு நடக்கலாம். இன்று... ஏதாவது கிடைத்தால் அதற்கும் கொடுக்கவேண்டும்.
அந்தக் குழந்தை வளரவேண்டுமென அவள் நினைத்தாள். அதைப் பற்றிய எதிர்பார்ப்புகள் அவளுக்கு இருக்கின்றனவா? இருக்கவேண்டும். எதிர்பார்ப்புகள்தானே ஆசைகளுக்கு அடிப்படை? அந்த குழந்தை வளரவேண்டுமென்றும், பிறகு அவளைக் காப்பாற்றவேண்டுமென்றும் அவளுக்கு கனவுகள் இருக்கும். அதற்கு உணவுகொடுப்பதும் பாசத்தைச் செலுத்துவதும் பாதுகாப்பதும்... அனைத் தும் எதற்காக?
இப்போதே அவள் முத்தத்தைப் பெற்றுக்கொண்டி ருக்கிறாள். தடவியும், தடவப்பட்டும் சந்தோஷமடைந்து கொண்டிருக்கிறாள். அப்படியெனில், அவளுக்குக் கனவுகள் இருக்கின்றன... எதிர்பார்ப்புகள் இருக் கின்றன.
பத்து மாதங்கள் சுமந்து, வேதனையுடன் பிரசவித்தாள். அவளுடைய உயிர் ரத்தத்தைக் கொடுத்து வளர்த்துக்கொண்டிருக்கிறாள். தாய் கொஞ்சம் அதிகமாகவே தாங்கிக்கொள்ள வேண்டாமா?
அப்போது திரும்பக் கிடைக்கவேண்டுமென தோன்றும். மானிட சமுதாயத்திற்காக எந்தத் தாய் பிரசவித்து குழந்தைகளை வளர்த்திருக்கிறாள்?
யாருமே இல்லை. அவளுக்காகப் பெற்றாள். வளர்த்தாள். தந்தை இருந்தாலும், இல்லாவிட்டாலும். சுயநலம்தான்! இல்லாவிட்டால்... கூலிக்காக வேலை செய்கிறாள்.
அப்படியென்றால்... ஆசைக்கு அடிப்படையாக இருப்பது எதுவென்பது புரிகிறதல்லவா? பெற்றெடுப்பது, வளர்ப்பது... அதுதான் தொழில். அதற்கு ஆதாய மிருக்கவேண்டும். அந்தத் தொழிலில் இயல்பாகவே இருப்பதுதான் ஆசை.
அந்த குழந்தைக்கு நடக்கும் வயது வந்தபோது, மீண்டும் அவளுடைய வயிறு வீங்கியது. அவள் பெண்... பிரசவிப்பதற்காகவே பிறந்தவள். பிள்ளை பெறுவதற்காகப் படைக்கப்பட்டதே அந்த சரீரம். யாசித்து வாழ்பவளாக இருந்தாலும், அவள் உணவு சாப்பிடுகிறாள். சரீரத்தில் மாமிசம் இருக்கிறது. அதற்கு உணர்ச்சி இருக்கிறது. மீண்டும் அவள் பிரசவித்தாள். ஒன்றை இடுப்பிலும், இன்னொன்றைக் கையில் பிடித்துக்கொண்டும் அவள் பிச்சையெடுத்தாள்.
பிச்சையெடுத்துக் கிடைப்பதில் மூன்றில் ஒரு பகுதியை மட்டுமே அவளால் சாப்பிடமுடியும். சில வேளைகளில் அந்த குழந்தைகளின் வயிற்றை அடைப்பதற்கு கிடைக்காமல் போய்விடும்.
அப்போது அவர்கள் அழுவார்கள். அவளுடைய வயிறும் எரிந்துகொண்டிருக்கும். அவளுக்கு கோபம் வரும்.
இரவுவேளையில் படுத்துறங்க முடியாது. இரண்டு குழந்தைகளும் சேர்ந்து அழும். நடக்கும் குழந்தை பிடிவாதம் பிடித்து அழும்போது, இரு குழந்தைகளையும் ஒவ்வொரு இடுப்பிலும் வைத்துக்கொண்டு நடப்பாள். அப்படி எவ்வளவு தூரம் தூக்கி வைத்துக்கொண்டு நடக்கமுடியும்?
அதிக சுமை சுமப்பதால் உண்டாகக்கூடிய சிரமம் அவளுடைய முகத்தில் தெரியும். சில நேரங்களில் எண்ணெய் தேய்க்கப்படாமல் நார் கட்டைப்போல பறந்து கிடக்கும் தலைமுடியைப் பிடித்துத் தூக்கி மூத்த குழந்தையைக் குளிப்பாட்டுவாள். அழுதுகொண்டிருக்கும் இளைய குழந்தையின் நாசியையும் வாயையும், பற்களைக் கடித்து என்னவோ கூறியவாறு மூடி பொத்திப் பிடிப்பாள்.
அனைத்துமே தன்னைத்தானே மறந்து செய்பவை தான்.
மரத்தின் நிழலில் மடியில் தலையை வைத்தவாறு படுத்துத் தூங்கிக்கொண்டிருக்கும் குழந்தை களின் தலையில் பேன் கடித்துக் கொண்டிருக்கும். அவர்களின் சரீரத்தில் ஒட்டியிருக்கும் மணல் சிதறிக்கொண்டிருக்கும். அவள் அசையமாட்டாள். அவள் உறங்கட்டும்! சுகமாக உறங்கட்டும்!
இல்லத்தரசிகள் அவளிடம் கேட்பார்கள்:
"ஒண்ணில்ல... எண்ணிக்கை இரண்டாயிருச்சாடீ..?''
அவள் கூறுவாள்: "தெய்வம் தந்தது அம்மா. நான் வளர்ப்பேன்.''
தொடர்ந்து அவள் கூறுவாள்: "நாழி கஞ்சி கிடைச்சா, தண்ணியைக் குடிச்சிட்டு பருக்கையைக் கொடுத்து வளர்ப்பேன்.''
பிறகு அவள் அவர்களைப் பார்த்து சந்தோஷப்படுவாள். இளைய குழந்தையின் நெற்றியில் முத்தமிடுவாள்.
நல்ல மனம்கொண்ட இல்லத்தரசி கூறினாள்: "எவ்வளவு பேர் ஒரு பிஞ்சு காலைப் பார்க்கறதுக்காக விரதம் இருக்குறாங்க!''
அப்போது இன்னொருத்தி கூறினாள்: "ஆமா... வயசான காலத்தில இவை பிச்சை எடுத்தோ கெஞ்சியோ நாழி நீர் கொண்டுவந்து கொடுக்கும்.''
பிச்சை எடுப்பவளின் பிள்ளைகளாக இருந்தாலும், அவர்களுக்கும் விருப்பங்கள் இருக்கும். இந்த பூமியின் பொருட்கள் அவர்களுக்கு நிர்ணயம் செய்யப்படவில்லை என்ற விஷயம் அவர்களுக்குத் தெரியுமா? பிறவியெடுத்துவிட்ட காரணத்தால், அவர்களுக்கும் உரியவைதான். அவர்களுக்கு ஆசை இருப்பதற்கு அதுதான் காரணமாக இருக்க வேண்டுமல்லவா?
காப்பி கடையில் தொங்கிக்கொண்டிருக் கும் பழக்குலையைப் பார்த்து சுட்டிக் காட்டி அழும். கிடைக்காமல் நகர்வதில்லை. விளையாட்டு பொம்மைகள் வேண்டும். அவள் என்ன செய்வாள்? அவள் திருடியிருக்கிறாள். அந்தவகையில் சில விருப்பங்கள் நடந்தும், சில நடக்காமலும் போயிருக்கின்றன.
குழந்தைகளைப் பெற்றெடுக்கவேண்டுமென்ற ஆர்வம் அவளுக்கு ஏன் உண்டாக வேண்டும்? ஓ... தவறாகி விட்டது. அவள் பெண்ணாகப் பிறந்துவிட்டாளே! அந்த மாமிசத்தின் இயல்பு அது. வளர்க்கக்கூடிய பொறுப்பும் பெண்ணுக்குத்தான் இருக்கிறதா?
அப்படித்தான் உள்ளது. உண்மையிலேயே அதுவொரு அநீதிதான்.
அவளும் குழந்தைகளும் சேர்ந்து அவ்வாறு சாலையின் வழியாகச் செல்லும்போது, அந்தக் குழந்தைகளின் பிறப்பிற்குக் காரணமான ஆணும் அதில் போய்க்கொண்டிருப்பான். அவனுக்கு ஒரு பொறுப்புமில்லை. அதில் ஒரு கெட்ட நீதி இருக்கிறது. மானிட வம்சத்திற்கான பொறுப்புதான் குழந்தைகளை வளர்ப்பதென்றால், ஆணுக்குப் பொறுப்பு வேண்டாமா?
அவன் கடந்து செல்லட்டும்! அது சரியல்ல. பெண்ணுக்குப் பிரசவ வேதனை உண்டாகும்போது, ஆணுக்கும் அதேபோல வேதனை உண்டாகவேண்டும். பெண்ணுக்கு ஒரு முலை போதும். இன்னொரு முலை ஆணுக்கு இருக்கவேண்டும். அப்போது அவ்வாறு பொறுப்பற்றவனாக ஆண் போகமாட்டான். பால் தங்கி முலை நிறைய, அவன் ஓடிவருவான்.
ஓ..! சிறு பிள்ளைத்தனமான சிந்தனை...
அப்படித்தானே? பரவாயில்லை.
இடுப்பிலிருந்த குழந்தை தரையில் இறங்கியபோது, அவளுடைய வயிறு மீண்டும் வீங்கியது. தவறு ஒரு முறை நடக்கலாம். அப்போது அவள் இளம்வயதில் இருந்தாள். சதையின் நமைச்சல் காரணமாக வருவது... வராததைப்பற்றிப் புரிந்துகொள்ளாமல் நடந்து விட்டிருக்கலாம். இரண்டாவதாகவும் நடந்தது.
இவ்வளவையும் அனுபவித்த அவளுக்கு, இந்தச் சுமையைச் சுமக்கும் அவளுக்கு மூன்றாவதாகவும் தவறு நேர்ந்தது சரியல்ல. இனியும் அடக்கமோ ஒழுக்கமோ வரவில்லையா? வருவது, வராதது ஆகியவை புரியவில்லையா?
அவள் பெண்.. இத்தனைதான் பெண் பெற்றெடுக்க வேண்டுமென்று தீர்மானம் செய்யப்படவில்லை. அதனால், அது நடந்திருக்குமோ? இல்லை... ஒரு இரவுவேளையில் ஏத்தப்பழத்திற்காக மூத்த குழந்தை படுத்து அழுதது. அந்த சமயத்தில் சாக்கடையிலிருந்து கிடைத்த ஒரு துண்டு ஏத்தப்பழத்தைச் சாப்பிட்டு, அதற்கு சுவை பிடித்துவிட்டது. அருகிலிருந்த கடையின் திண்ணையில் படுத்து உறங்கிக்கொண்டிருந்த ஒருவன்- அவனும் ஒரு பிச்சைக்காரனாக இருக்கலாம்- கண் விழித்தான். அவளும் வந்தாள். அவனுடன் பேசினாள். அவனிடம் மொத்தத்தில் இருந்ததே இரண்டணாக்கள்தான். அதை அவள் வாங்கினாள். குழந்தை ஏத்தப்பழத்தைத் தின்றவிட்டு படுத்துறங் கியது.
அதன்காரணமாகத்தான் பிறகும் வயிறு வீங்கியது. அப்படியில்லாமல் சதையின் நமைச்சல் அல்ல. ஆனால், அவளுடைய சரீரம் பச்சை மாமிசத்தாலும் ரத்தத்தா லும் ஆனதுதான். பிறகும் அவள் கர்ப்பத்தைத் தரிக்க வேண்டுமென்பதை இயற்கை தீர்மானித்து விட்டது.
மூன்றாவது குழந்தையை இடுப்பில் வைத்துக் கொண்டு, இரண்டாவதைக் கையில் பிடித்துக்கொண்டு, மூன்றாவதை பின்னால் நடத்திக்கொண்டு அவள் நடந்துசென்றாள்.
மூத்த குழந்தைக்கு உணவைத் தேடுவதற்கு நல்ல திறமை இருக்கிறது. அதன் உருண்டைக் கண்கள் எங்கிருந்தும் சாப்பிடுவதற்கான பொருளைக் கண்டுபிடித்துவிடும். கை வைக்குமிடத்தில் அது சாப்பிட்டுவிடும். ஆனால், இளைய குழந்தைகளுக்குக் கொடுப்பதில்லை.
அவனுடைய கை எப்போதும் நிறைந்தும், வாய் அசைந்து கொண்டுமிருக்கும். இளைய குழந்தைகள் அதைப் பார்த்து அழும்.
தாய் மூத்தவனுக்குச் சாபமிடுவாள்.
"டேய் எமனே! உன் தம்பிங்கதானேடா?''
வாய் நிறைந்திருப்பதால் அவனால் பேசமுடியாது. பல நேரங்களில் அவனை தாய்க்குப் பின்னால் பார்க்க முடியாது. அவன் ஓடிவந்து சேர்ந்துகொள்வான். அது ஏன் தெரியுமா? தாயுடன் சேர்ந்து நடக்கவேண்டும் என்பதற்காக அல்ல. தாயின் பங்கு கிடைப்பதற்காக...
நீங்கள் அவளை வேண்டிய அளவுக்கு குற்றம் சுமத்திக்கொள்ளுங்கள். அவள் நான்காவது முறையும் கர்ப்பிணியானாள். எந்த சூழலில் என்று கூறமாட்டேன். கூறுவதால் பயனில்லை. ஆனால், அவள்தான் சுமந்தாள். அவள்தான் வேதனையைத் தாங்கிக்கொண்டு பெற்றாள். அவளுடைய முலையைக் குடித்து அந்த குழந்தை வளர்கிறது.
உங்களுக்கு, மானிட வம்சத்திற்கு ஒரு சன்மானத்தையும் அளித்துவிட்டாள். ஏனென்று கேட்கிறீர்களா? இப்படிப்பட்ட குழந்தைகள் எதற்கென்று கேட்கிறீர்களா? அவள் பெறவேண்டுமென்று இயற்கை ஏன் தீர்மானித்தது?
ஒரே சந்தேகம்தான். அந்த கடையின் திண்ணையில் மூன்று குழந்தைகளும் உறங்கியபிறகு, சுற்றுப் புறங்கள் பேரமைதியில் மூழ்கியபிறகு, அவளுக்கருகில் மெதுவாக ஊர்ந்து வந்த ஆணிடம் அவள் என்னவெல்லாம் கூறியிருப்பாள்?
"வேண்டாம்... வேண்டாம்...'' என்று விலக்கியிருக்க மாட்டாளா? "இனிமேலும் என்னால் பெறமுடியாது'' என்று கூறாமலிருக்க வழியில்லை. உணர்ச்சிவசப்பட்ட நிலையிலிருக்கும் மனிதன் அவற்றையெல்லாம் காது கொடுத்துக் கேட்கவா போகிறான்? எது எப்படியோ... இரண்டோ நான்கோ அணாக்கள் கை மாறியிருக்கும். அந்த கை மாறுதலுடன் நடைபெற்ற ஒப்பந்தத்தில் எதிர்காலத்தைப் பற்றி எந்தவொரு நிபந்தனையும் இல்லையா? இல்லாமல் இருந்திருக்கலாம்.
பிச்சை எடுப்பவர்களாக இருந்தாலும், மனிதப் பிறவிகள். மாமிசத்திற்கு மாமிசத்துடன் சேர்ந்து ஒன்றாவதற்கு ஒரு ஆர்வமிருக்கும்.
===
இரண்டு குழந்தைகள் பின்னால்... ஒன்றைக் கையில் பிடித்திருக்கிறாள். ஒன்று இடுப்பில்- இப்படித்தான் அந்த ஊர்வலம். ஒரு வீட்டின் படியிலிருந்து நாழி கஞ்சி நீர் கிடைத்தால், அவள் சபதம் செய்திருப்பதைப்போல பருக்கைகளைக் கொடுப்பதற்காக நீரைப் பருக சட்டியை உதட்டில் வைக்கும்போது, நான்கு கைகள் பிடிக்கும். அந்த நீரும் பருக்கைகளும் சிதறிவிழும். அவள் என்ன செய்வாள்?
இனியும் அவள் பிரசவிப்பாளா? எது எப்படியோ... சந்தேகம்தான். மாமிசம் இல்லை. எலும்புதான் இருக்கிறது. அந்த நிலையில் சிரமம்தான். எனினும், உறுதியாகக் கூறமுடியாது.
பயங்கரமாக மழை பெய்துகொண்டிருந்த ஒரு இரவு வேளையில் மூன்றாவது குழந்தை வாந்தியெடுக்க ஆரம்பித்தது. பேதியும் ஆனது. என்ன நடக்கிறதென்பது தெரியவில்லை. இரண்டாவது குழந்தை மட்டும் கண் விழித்து எழுந்து அமர்ந்து கேட்டது:
"என்னம்மா ராமனுக்கு?''
ராமனை அவன் தடவிப் பார்த்தான். வாந்தி நின்றபோது, அவன் கேட்டான்:
"என்னம்மா? ராமன் வாந்தி எடுக்கலையே?''
ராமனை தாய் அழைத்தவாறு உரத்த குரலில் அழுதாள். பொழுது வெளுக்கும்வரை அந்த இரண்டாவது பையன் உறங்கவே இல்லை. நேரம் வெளுத்தபோது, தன் தம்பி இறந்து விறைத்துக் கிடப்பதைப் பார்த்தான். இரண்டாவது குழந்தையைத் தூக்கிக்கொண்டு, அவள் ஏத்தப்பழத்திற்குத் தேவைப் பட்ட இரண்டணாக்களுக்காக பிறந்த குழந்தையை இறுதியாக முத்தமிட்டாள். தொடர்ந்து நடந்தாள். இறந்துகிடக்கும் குழந்தையைச் சுட்டிக் காட்டியவாறு இளைய குழந்தை அதன் மொழியில் என்னவோ கூறியது.
ஒருவேளை... ஏன் அண்ணனை கையைப் பிடித்துக் கொண்டு வரவில்லையென்று கேட்டிருக்கலாம். அவர்கள் நான்கு பேரும் இன்றுவரை ஒன்றாக இருந்தார்கள்.
இரண்டாவது பையன் சற்றுதூரம் செல்லும்வரை திரும்பிப் பார்த்துக்கொண்டே இருந்தான். அந்த ஊர்வலம் மூன்று பேராகக் குறைந்தது.
மூத்த பையன் அவனுடைய உணவைத் தேடிச் செல்வான். சாயங்காலம் திரும்பிவருவான். ஏதாவது கையில் இருக்கிறதா என்று தாய் கேட்பாள். அவனுக்கே போதுமான அளவுக்குக் கிடைக்கவேண்டாமா?
ஆனால், தாய் அவனுக்கு ஏதாவது வைத்திருப்பாள். அதை உண்பதற்குத்தான் வருகிறான். பிறகு அங்கேயே படுக்கலாம். போகவும் செய்யலாம். இரவில் அவன் போனபிறகு, தாய் தூங்கமாட்டாள். அவனுக்குப் பின்னால் அந்த ஆன்மா உழன்றுகொண்டிருக்கும்.
ஒருநாள் அவன் வரவில்லை. மறுநாளும் வரவில்லை. அடுத்த நாளும் இல்லை.
இரண்டாவது குழந்தை கேட்டான்: "அண்ணன் எங்கம்மா?''
பிறகு கொஞ்ச நாட்கள் அவள் பிச்சை எடுக்கவில்லை. நகரம் முழுவதும் பலமுறை சுற்றிக் கொண்டிருந்தாள். ஹோட்டலுக்குப் பின்னாலும், மூலைகளிலும், குப்பைக் குவியல்களுக்குப் பின்னா லும்...
அனைத்து இடங்களிலும் அவள் பலமுறை தேடினாள். பலரிடமும் கேட்டாள். நான்கு குழந்தைகள் சேர்ந்து நிற்பதைப் பார்த்துவிட்டால், அங்கு ஓடிச்செல்வாள்.
அவளுக்கு ஒரு விஷயம் தெரிந்தால் போதும்.
அவன் உயிருடன் இருக்கிறான் என்பது தெரிந்தால் போதும்.
தூங்குவதற்காகப் படுக்கும்போது, இரண்டாவது குழந்தை கூறுவான்: "அம்மா... அண்ணன் இன்னிக்கு வருவான். அண்ணனுக்கு சாப்பிடுறதுக்கு வச்சிருக்கணும்.''
அவள் எவ்வளவு நாட்களாக கிடைத்ததில் ஒரு பகுதியை அந்தச் சிரட்டையில் வைத்து வந்திருக்கி றாள்! ஒருநாள் உறக்கத்திலிருந்து அவள் "மகனே..!' என்றழைத்தவாறு வேகமாக எழுந்தாள். அவன் வந்து அழைப்பதைப்போல தோன்றியது.
அவன் இறந்திருக்க வேண்டுமென்று அவளுக்குப் பட்டது. அவள் அவனுடைய குரலைத் தெளிவாகக் கேட்டாள். கண் விழித்தபோது அவனில்லை.
அவன் இறந்துவிட்டான். ஆவி வந்து அழைத்திருக் கிறது!
ஒருவேளை... பறக்கப் பழகிய பறவைக் குஞ்சு பறந்து ஆகாயத்தில் மறைந்துபோயிருக்கலாம்! அந்த இரண்டாவது சிறுவனுக்கு கொஞ்ச நாட்களாகவே ஒரு அறிவு தோன்றியிருக்கிறது. தானே சென்றால் ஏதாவது கிடைக்குமென்று... சாப்பிட்டதின் மீதியைத் தாய்க்கும் தரலாம். அவன் ஒரு பாட்டையும் படித்து வைத்திருக்கிறான்.
"அம்மா பசிக்குது... தாயே பசிக்குது!''
தாய் சம்மதித்தாள். அவனுடைய முதல் நாள் வெற்றிகரமானதாக அமைந்தது. மொத்தத்தில் தளர்ந்துபோன தாய் ஒரே இடத்தில் இருக்க ஆரம்பித்தாள். இப்போது அவளுடைய குழந்தை அவளுக்கு பிச்சையெடுத்துக் கொண்டுவந்து கொடுக்கிறது. ஒன்றை மட்டும் பெற்றிருந்தால், இந்த அளவுக்கு இது கிடைத்திருக்குமா?
அவன் மதியமும் சாயங்காலமும் வருவான். கிடைப்பது முழுவதையும் கொண்டுவருவான். அந்த பாடலைப் பாடியவாறு அவன் சென்றால், யாரும் கொடுத்து விட்டுத்தான் போவார்கள். அந்த அளவுக்கு நல்ல நாக்கு... உணர்ச்சி. அவன் யாசிப்பதற்கென்றே பிறந்தவன்.
தாய்க்கு உணவு கொடுத்து, அவனுக் குக் கட்டுபடியாகவில்லை. ஒருநாள் மதியம் அவன் வரவில்லை. தாய் சாயங்காலம்வரை காத்திருந்தாள். இறுதியில் அவள் தேடிக்கொண்டு வெளியேறி னாள்.
ஒரு மூலையில் கார் ஏறி நெஞ்சு நசுங்கிய நிலையில் அவன் கிடந்தான். அவன் பிச்சையெடுத்துக் கொண்டு வந்ததெல்லாம்....
அவளின், குழந்தையின் அன்றைய உணவு சாலையெங்கும் சிதறிக் கிடக்கிறது.
===
சுமையில்லாமல் அவள் தனியாக இருந்தாள். நான்காவது குழந்தை இறந்திருக்கும். இல்லாவிட்டால்... அதுவும் தன் வழியில் போயிருக்கலாம். அதுவும் இல்லையென்றால், மூன்று குழந்தைகள் இல்லாமற் போய்விட்ட நிலையில் நான்காவதும் பயனற்றதென்று நினைத்து உதறிவிட்டிருக்கலாம். எவ்வளவு நாட்களாக பயனே இல்லாமல் அவள் சுமந்திருக்கிறாள்!
சற்று தனியாக நடக்கட்டும்!
பிறகு ஒரு காட்டுக் கொம்பைப் பற்றியவாறு நடக்கும் அவளைப் பார்க்க நேரிட்டது. நகரத்திலிருந்து செல்லும் ஒரு பிரதான சாலை. நகரத்தின் எல்லை முடிந்து, கிராமப் பகுதி தெரிந்தது. சாலையின் வழியாக அவள் மெதுவாக நடந்து போய்க்கொண்டிருக்கிறாள். அந்த மரக் கொம்பும் ஒரு மூட்டையும் இருந்தன. அவற்றைக் கையிலிருந்து விடாமல் அவள் மெதுவாக நடந்துகொண்டிருந்தாள்.
எதற்கு அவள் நடந்து போய்க்கொண்டிருக்கி றாள்? இனியும் போய்ச் சேரவேண்டிய இடமிருக்கி றதா? இருக்கலாம்.
ஒவ்வொரு மனிதனும் போய்ச் சேரவேண்டிய இடம் நிச்சயிக்கப்பட்டதாக இருக்கலாம். அது எந்த இடமென்று தெரியாது. ஆனால், அங்குவரை போய்ச் சேர்ந்தே ஆகவேண்டும்.
அவளுடைய இடம் வரவில்லை. ஒருவேளை நடக்காமலிருந்தால், அவளுடைய வாழ்க்கை மேலும் கொஞ்ச சமயம் நீளலாம். அது நடக்காதே! நேரமும் நிச்சயிக்கப்பட்டு விட்டது. அதற்குள் உயிர்சக்தி தளர்ந்து முடியவேண்டும். அதற்காகக்கூட அவள் நீங்கிக் கொண்டிருக்கலாம்.
வழியில் பயணித்தவர்கள் சற்று பார்த்துக் கொண்டே சென்றார்கள். அவர்களுக்கு நிற்பதற்கு நேரமில்லை.
அவர்களும் தங்களுக்கான இடங்களுக்குப் போய்ச் சேரவேண்டாமா?
மார்பில் ஒரு அடையாளம்போல தெரிவது... நான்கு குழந்தைகள் குடித்த முலை. இடுப்பில் குழந்தையைத் தூக்கி வைத்ததன் தழும்பு இருக்கிறது. தன்னைப் படைத்த கடவுளுக்கு முன்னால் அவள் சமாதானம் கூறவேண்டிய அவசியமில்லை.
அவள் பெண்ணாகப் பிறந்தாள். செய்ய வேண்டியதைச் செய்தாள்.
சிறிது நேரம் நடந்துவிட்டு, அவள் திரும்பிப் பார்ப்பாள். யாரையோ? எதற்கோ? இல்லாவிட்டால்... வாழ்க்கையையே திரும்பிப் பார்க்கிறாளோ? இவ்வளவு காலம் வாழ்ந்த ஒருத்திக்கு சில விஷயங்கள் வாழ்க்கையைப் பற்றி கூறுவதற்கு இருக்கும். அவளுக் கும் எல்லையற்ற பரம்பரைகளுக்குக் கூறுவதற்கு ஒரு செய்தி இருக்கும். அவளுக்கு அவளுடைய செய்தியை ஒப்படைப்பதற்கு ஆளில்லை.
அவள் தாயானாள். அவளையும் ஒரு தாய் பிரசவித்தாள். ஒரு நீண்ட பெருமூச்சைப்போல ஒரு சிறிய காற்று வீசியது. பாதையின் இடத்திலிருந்த மரங்களின் இலைகள் ஒரு முனகல் சத்தத்தை உதிர்த்தன. அந்தப் பகுதியில் ஒருவேளை அவளுடைய தாயின் ஆன்மா உலவிக்கொண்டிருக்கலாம். அந்தச் சிறிய காற்று அதன் பெருமூச்சாக இருக்கலாம். தெரியாத மொழியில் மகளை அந்த ஆன்மா ஆறுதல் படுத்தலாம்.
ஒரு மரத்தின் கீழ்ப்பகுதியைப் போய் அடைந்தாள். எழுந்துநின்ற ஒரு வேரில் தலைவைத்து, அந்த வாழ்க்கை முடிவுக்கு வந்தது. இறுதியாக உண்டான தாகம் காரணமாக, ஒரு துளி நீருக்காக திறக்கப் பட்ட வாய் அப்படியே இருக்கிறது. ஒரு துளி நீர் விழுந்திருந்தால், அது மூடியிருக்கும்.
கண்கள் திறந்தே இருக்கின்றன. தடவி அடைப் பதற்கு யாருமே இல்லை. ஒரு கால் மூட்டு நீளாமல் வளைந்திருக்கிறது. அந்த நிகழ்வில் ஒரு செய்தி இருக்கிறது.
அவளுடைய செய்தியின் ரத்தினச் சுருக்கம்! யாரும் ஒன்றைத்தான் பார்ப்பார்கள். பார்த்தவாறு சிறிது நேரம் நிற்கிறார்களெனில், ஒருவேளை அந்தச் செய்தியைத் தெரிந்துகொள்ளலாம்.
ஒரு பிச்சைக்கார சிறுவன் மட்டும் அவளையே வெறித்துப் பார்த்தவாறு நின்றுகொண்டிருந்தான். அவள் கூறுவதைப்போல தோன்றியது:
"நான் என் வேலையைச் செய்துவிட்டேன். வாழ்ந்த காலம் முழுவதும் நான் பாரத்தைச் சுமந்து கொண்டிருந்தேன். நிழலுள்ள ஒரு இடத்தில்... செழிப்பாக வளர்ந்திருக்கும் புல்வெளிக்கு மத்தியில்... எந்த சமயத்திலும் வற்றாத ஒரு நீரூற்றுக்கு எதிரே... என்னைக் கிடத்தவேண்டும்! நான் நிம்மதி அடைவேன்!'
அவளுடைய குழந்தைகள் இருந்திருந்தால், ஒருவேளை அவள் கூற நினைப்பது அதுவாக இருக்காது. நினைவாகப் போகும் ஒரு உயிருக்கு இதைத் தவிர வேறெதுவும் கூறுவதற்கில்லை.
அந்த பிச்சைக்கார சிறுவன் யார்? அவன் எதற்காக இப்படி பார்த்துக்கொண்டு நின்றிருக்கி றான்? ஒருவேளை அவளுக்கருகில் இருக்கும் ஒரு சிறிய மூட்டையில் அவன் பார்வை பதிந்திருக்க லாம்.
===