ஸ்.பி.பி. மிகவும் கனிவானவர். யாருக்கும் சிறு தீங்கும் நினைக்காதவர். தான் கடைசியாக ஆன்லைன் மூலம் கலந்துகொண்ட ஜப்பான் தமிழ்ச் சங்க நிகழ்ச்சியில்கூட... ""கொரோனாவைப் பற்றி நாம் தப்பாய்ப் பேசத் தேவையில்லை. நமக்கது சாபம். நாம் செய்த தப்புக்கு அது தண்டனை. இயற்கையை நாம் மிகவும் வஞ்சித்துவிட்டோம்.

Advertisment

என் ஆள், என் ஜாதி, என் தேசம், என் கலர் என்பதெல்லாம் சாதாரண ஆட்கள் பேசுவது. எல்லோரும் என் ஆட்கள் என்று நினைத்து, நம்மிடம் அதிகப்படியாக இருப்பதைப் பகிர்ந்து கொள்ளலாம். பகிர்ந்துகொள்ள முடியவில்லை என்றால்தீமை செய்யாமலாவது இருக்கலாம். இப்போது கொரோனாவால் இந்த நன்மை நிகழ்வதைப் பார்க்கிறேன். பலர் பகிர்கிறார்கள்"" என்று கொரோனா தொற்றுக் கிருமியைப் பழிப்பதைக்கூட அவர் மனம் ஏற்கவில்லை. மனம் நெகிழ்கிறது. இப்படி எல்லாருக்கும் நல்லவராக ஒரு மனிதனால் வாழமுடியுமா? முடியும் என்று நிரூபித்த வாழ்வு அவருடையது. அவர் வெளியே தெரியாமல் பலருக்கும் பேருள்ளத்தோடு உதவியிருக்கிறார்.

gg

அதுபற்றி இப்போது பலரும் சொல்லிக்கொண்டிருப் பதைக் கேட்கும்போது, அவரது இதயத்தின் விசாலம் வியக்க வைக்கிறது.

கடந்த 50 ஆண்டுகளாக, நான்கு தலைமுறைகளுக்குப் பாடி இருக்கிறார் எஸ்.பி.பி. அவரது குரலை ஒவ்வொருவரும் தனது குரலாக நினைக்கும் அளவுக்கு அவர் குரல் நெருக்கமாக இருந்ததுதான் மிக வியப்பு. அதேபோல் எல்லா உணர்வுகளையும் அவரது குரல் வெளிப்படுத்தியிருக்கிறது. கனிவும் பணிவும் அவர் இரத்தத்தின் குணங்கள். சின்னத்திரை பாடல் நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றதன் வழியாக, மக்கள் அவரை ஒரு பாடகனுக்கும் மேலாக கொண்டாடத் தொடங்கினார்கள். அதனால் அவர் ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் அண்ணனாக, மாமாவாக, தந்தையாக, சித்தப்பாவாக அனைவருக்குமான உறவினராகிவிட்டார். அதனால்தான் அவர் இழப்பு பேரிழப்பாக அமைந்துவிட்டது.

""நந்தா"" படத்தில் யுவன் இசையில் நான் எழுதிய ’முன்பனியா, முதல் மழையா என் மனதில் ஏதோ விழுகிறதே... விழுகிறதே... உயிர் நனைகிறதே!’ என்ற பாடலைப் பாடவந்த எஸ்.பி.பி, தனியே அமர்ந்து, அக்கறையோடு அவருக்குள்ளேயே பாடிப் பார்த்தார். அந்தப் பாடலுக்கு யுவன் ஹைபிச்சில் மெட்டமைத்திருந்தார். அதனால் யுவனிடம் அவர், இந்த பிச்சில் பாடினால் பாடல் கொஞ்சம் உரத்த குரலாக இருக்கும்; நீங்கள் சொல்வது மாதிரியும் மெலோடி கெடாமலும் இரண்டு விதத்தில் பாடுகிறேன். எது தேவை என்று சொல்லுங்கள்"" என்றார். அவரது பாணியில் பாடியதுதான் யுவன் உட்பட எல்லோருக்கும் பிடித்திருந்தது. இப்படி, ஒவ்வொரு பாட்டையும் அதன் உயிர்த்துடிப்பை உணர்ந்து, அதற்கேற்ப பாடியவர் எஸ்.பி.பி.

அவர் பாடி சமீபத்தில் வெளியான பாடல் ’தமிழரசன்

படத்தில், நான் எழுதிய நீதான் என் கனவு-மகனே,

வாவா கண் திறந்து ’

-என்ற பாடல்தான். பாடலைப் பாடிமுடிந்ததும், அங்கிருந்த எல்லோரும் அவருடன் படம் எடுத்துக் கொண்டோம். நான் உயரம் குறைவு என்பதால், அவர் தன் உயரத்தைக் குறைப்பதுபோல் குனிந்து நின்று, என் தோள்மீது கைபோட்டுக்கொண்டு படம் எடுக்கச் செய்தார். இப்படி ஒரு மனிதர்... இவருடன் நாம் இருந்திருக்கிறோம்...

பணிபுரிந்திருக்கிறோம் என்ற நினைவு நினைத்தாலே இனிக்கிறது. எஸ்.பி.பி.யின் மறைவு, இந்திய இசைக்கு மட்டுமல்ல... அவரது ஒவ்வொரு ரசிகனின் வீட்டிலும் நிகழ்ந்த- ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.