கலைஞர் வாழ்வின் ரகசியப் பக்கங்கள்!

/idhalgal/eniya-utayam/secret-pages-artist-life

லைஞர், எங்கள் அப்பாவின் பால்யகால நண்பர். வாழ்வின் உயர உயரங்களுக்குப் போனபோதும் நட்பை மறக்காதவர் கலைஞர். நட்பின் பெருமையை உணர்த்தியவர்.

அவர் எங்கள் அப்பாவிடமும், எங்கள் குடும்பத்தினரிடமும் காட்டிய வாஞ்சையை, எழுத்துக்களால் வர்ணிக்கமுடியாது. நாங்கள் கண்டுணர்ந்த கலைஞர், எங்கள் அப்பாவின் வாயால் கேட்டுணர்ந்த கலைஞர் எங்கள் வாழ்வெல்லாம் நிறைந்து நிற்கிறார்.

எங்கள் அப்பாவை உறவினர் என்பதைத் தாண்டி, உற்ற நண்பர் என்பதிலே பெருமை கண்டவர் கலைஞர்.

kalaingar

எங்கள் அப்பா தென்னனின் இயற்பெயர் தெட்சணாமூர்த்தி. பதிமூன்று பதினான்கு வயதிலேயே அவர் பெயரைத் தென்னன் என்று மாற்றியவர் கலைஞர். கலைஞர் ஆயிரக்கணக்கானோருக்கு தன் வாயால் அழகுதமிழ்ப் பெயர்களைச் சூட்டியிருக்கிறார். என்றாலும் , அவரால் முதன்முதலில் பெயர் சூட்டப்பட்ட பெருமையும் எங்கள் அப்பாவிற்கே உண்டு.

கலைஞரின் நினைவுகள் வாட்டியெடுக்கின்றன. உண்ண முடியாமல் உறங்க முடியாமல் மனதைத் துயரம் துரத்துகிறது. கலைஞர் இன்று உலகத் தலைவராக உயர்ந்து நிற்கிறார் என்றால் அவர், அதற்கு கொடுத்த விலை கொஞ்ச நஞ்சமில்லை. கலைஞரைப் பற்றிய எத்தனையோ தகவல்களும் நினைவுகளும் வட்டமடிக்கின்றன.

கலைஞரின் அப்பா முத்துவேலர், சிறந்த நாதஸ்வர வித்வான். சிறந்த நையாண்டிக் கவிஞர். சித்தமருத்துவத்திலும் மாந்ரீகத்திலும் ஈடுபாடு கொண்டவர்.

அவருக்கு திருக்குவளையிலிருந்தே குஞ்சம்மாள் என்பவரை, அக்கால வழக்கப்படி பால்யத் திருமணம் செய்துவைத்தனர். அறிவுச்சுடராகத் திகழ்ந்தவர், வயதுக்கு வரும் முன்னரே மறைந்துவிட்டார்.

ஆனாலும் அவரைத்தான் கலைஞரின் குடும்பமே தெய்வமாக வணங்கியது. அடுத்து வேதம்மாள் என்பவரை முத்துவேலருக்குத் திருமணம் செய்து வைத்தனர். அவரும் சில ஆண்டுகளிலேயே மறைந்துவிட, மூன்றாவதாகத்தான் அஞ்சுகத்தம்மாளை அவருக்குக் கட்டிவைத்தனர். அவர்களுக்குப் பெரியநாயகி, சண்முகசுந்தரம் என்ற மகள்கள் பிறந்தனர். நெடுநாள் கழித்து மூன்றாவதாக அஞ்சுகத்தம்மாள் கருத்தரித்தபோது, அவருக்கு எதிர்பாரா அவசர சூழலில், வீட்டில் வைத்து அவரது மகள்களே பிரசவம் பார்த்திருக்கிறார்கள். அந்தப் பிரசவத்தில் பிறந்தவர்தான் கலைஞர். இதை கலைஞரின் அக்கா சண்ம

லைஞர், எங்கள் அப்பாவின் பால்யகால நண்பர். வாழ்வின் உயர உயரங்களுக்குப் போனபோதும் நட்பை மறக்காதவர் கலைஞர். நட்பின் பெருமையை உணர்த்தியவர்.

அவர் எங்கள் அப்பாவிடமும், எங்கள் குடும்பத்தினரிடமும் காட்டிய வாஞ்சையை, எழுத்துக்களால் வர்ணிக்கமுடியாது. நாங்கள் கண்டுணர்ந்த கலைஞர், எங்கள் அப்பாவின் வாயால் கேட்டுணர்ந்த கலைஞர் எங்கள் வாழ்வெல்லாம் நிறைந்து நிற்கிறார்.

எங்கள் அப்பாவை உறவினர் என்பதைத் தாண்டி, உற்ற நண்பர் என்பதிலே பெருமை கண்டவர் கலைஞர்.

kalaingar

எங்கள் அப்பா தென்னனின் இயற்பெயர் தெட்சணாமூர்த்தி. பதிமூன்று பதினான்கு வயதிலேயே அவர் பெயரைத் தென்னன் என்று மாற்றியவர் கலைஞர். கலைஞர் ஆயிரக்கணக்கானோருக்கு தன் வாயால் அழகுதமிழ்ப் பெயர்களைச் சூட்டியிருக்கிறார். என்றாலும் , அவரால் முதன்முதலில் பெயர் சூட்டப்பட்ட பெருமையும் எங்கள் அப்பாவிற்கே உண்டு.

கலைஞரின் நினைவுகள் வாட்டியெடுக்கின்றன. உண்ண முடியாமல் உறங்க முடியாமல் மனதைத் துயரம் துரத்துகிறது. கலைஞர் இன்று உலகத் தலைவராக உயர்ந்து நிற்கிறார் என்றால் அவர், அதற்கு கொடுத்த விலை கொஞ்ச நஞ்சமில்லை. கலைஞரைப் பற்றிய எத்தனையோ தகவல்களும் நினைவுகளும் வட்டமடிக்கின்றன.

கலைஞரின் அப்பா முத்துவேலர், சிறந்த நாதஸ்வர வித்வான். சிறந்த நையாண்டிக் கவிஞர். சித்தமருத்துவத்திலும் மாந்ரீகத்திலும் ஈடுபாடு கொண்டவர்.

அவருக்கு திருக்குவளையிலிருந்தே குஞ்சம்மாள் என்பவரை, அக்கால வழக்கப்படி பால்யத் திருமணம் செய்துவைத்தனர். அறிவுச்சுடராகத் திகழ்ந்தவர், வயதுக்கு வரும் முன்னரே மறைந்துவிட்டார்.

ஆனாலும் அவரைத்தான் கலைஞரின் குடும்பமே தெய்வமாக வணங்கியது. அடுத்து வேதம்மாள் என்பவரை முத்துவேலருக்குத் திருமணம் செய்து வைத்தனர். அவரும் சில ஆண்டுகளிலேயே மறைந்துவிட, மூன்றாவதாகத்தான் அஞ்சுகத்தம்மாளை அவருக்குக் கட்டிவைத்தனர். அவர்களுக்குப் பெரியநாயகி, சண்முகசுந்தரம் என்ற மகள்கள் பிறந்தனர். நெடுநாள் கழித்து மூன்றாவதாக அஞ்சுகத்தம்மாள் கருத்தரித்தபோது, அவருக்கு எதிர்பாரா அவசர சூழலில், வீட்டில் வைத்து அவரது மகள்களே பிரசவம் பார்த்திருக்கிறார்கள். அந்தப் பிரசவத்தில் பிறந்தவர்தான் கலைஞர். இதை கலைஞரின் அக்கா சண்முகசுந்தரத்தமாள் என்னிடம் அடிக்கடி கூறியிருக்கிறார்.

kalaingarதிருக்குவளையில் உறவினர்களுக்குள்ளேயே போட்டி, பகை, பிரச்சினை என்று வந்தது. இதனால் மனம்வெறுத்து குடும்பத்தோடு திருவாரூருக்கே வந்துவிட்டார் முத்துவேலர். அங்கிருந்து கச்சேரிகளுக்குப் போய்வந்தார்.

இந்த நிலையில் அவருக்கு மிகவும் முடியாமல் போய்விட்டது. அதனால் அவரை கூண்டு வண்டியில் வைத்து அஞ்சுகத்தம்மாளும் அவரது பெண்பிள்ளைகளும் திருக்குவளைக்கு அழைத்துச் சென்றனர். திருக்குவளைக்கு முன்னதாக இடுகாட்டுக்குப் பக்கத்தில் இருந்து வந்த ஒரு பெண், கை நிறைய சாம்பலை அள்ளிக்கொடுத்து, இதை முத்துவேலர் உடம்பில் பூசச் சொல்லிவிட்டுப்போயிருக்கிறார். இதன் பின் மரணப்படுக்கையில் இருந்து எழுந்து உட்கார்ந்திருக்கிறார் முத்துவேலர். இறந்துபோன குஞ்சம்மாளே வந்து முத்துவேலரை உயிர்பிழைக்க வைத்தார் என்று அந்தக் குடும்பம் நம்பத்தொடங்கியது. அதிலிருந்து குஞ்சம்மாளை வழிபடுவது கலைஞர் குடும்பத்தின் வழக்கமானது. திருவாரூரில் கலைஞர் வாங்கிய சன்னதித்தெரு வீட்டிற்குக் குஞ்சம்மாள் இல்லம் என்பதுதான் பெயர். கலைஞர், திருவாரூர் கீழவீதியில் இருந்த மருத்துவர் சங்கக் கட்டிடத்தில் பேசிக்கொண்டிக்கும் நேரத்தில், முத்துவேலர் உயிர் பிரிந்தது. இந்த செய்தியை மேடையில் பேசிக்கொண்டிருந்த கலைஞருக்கு, துண்டுச் சீட்டில் எழுதித் தெரிவிக்கிறார் தென்னன். அதைப் பார்த்தபின்னும், உரையை முழுதாக முடித்துவிட்டுதான் கீழே இறங்கினார். முத்துவேலரின் இறுதிச் சடங்கு திருவாரூர் நெய்விளக்குத் தோப்பு இடுகாட்டில் நடந்தது.

திருவாரூர் என்பது அப்போது கோயிலைச் சுற்றி இருக்கும் நான்கு வீதிகள்தான். அப்போது மாணவரான கலைஞரும் தென்னனும் தங்களுக்குள் நமஸ்காரத்தைப் பரிமாறிக்கொள்ளும் அர்ச்சகர்களை எதிரில் பார்த்தால், வணக்கம் வணக்கம் என்று கைகூப்பி உரக்க வணக்கம் சொல்வார்களாம். இதைக்கேட்டு எரிச்சலாகும் அவர்கள் உருப்படாதது கள் என்று திட்டிவிட்டுப் போவார்களாம். இந்த வணக்கப் போராட்டம்தான் அறியா வயதில் கலைஞர் நடத்திய முதல் போராட்டம். அடுத்துதான் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் குதித்தார் கலைஞர்.

கலைஞர் பள்ளியில் படிக்கும்போது, மாணவி ஒருவர் மீது காதல் கொண்டார். அந்தப் பெண்ணும் கலைஞர் மீது பார்வைக் கணைகளை வீசுவார். அந்தப்பெண், டைப் கிளாசுக்குப் போக, கலைஞரும் அவருக்காகவே கமலாலயக்கரையில் இருந்த அந்த டைப் இன்ஸ்ட்டிடியூட்டில் சேர்ந்திருக்கிறார். எல்.ஓ.வி.இ. என்ற நான்கு எழுத்தை மட்டுமே அப்போதைய கலைஞர் டைப் அடிப்பாராம். ஒரு கட்டத்தில் அந்தப் பெண்ணோடு கடிதப் பரிமாற்றமும் நடந்தது. அப்படியொரு கடிதத்தில்தான், ’"மிருக ஜாதியில் புலி மானைக் கொல்லும். மனித ஜாதியில் மான் புலியைக் கொல்கிறதே'’ என்று எழுதினாராம் கலைஞர். அந்த வசனமே பின்னர் "மருதநாட்டு இளவரசி' படத்தில் இடம்பிடித்துப் புகழ்பெற்றது. கலைஞர் குடும்பத்தோடு அப்போது ஆண்டாள் தெரு அம்மையப்பா டாக்கீஸுக்குப் போக, கலைஞரும் தென்னனுடன் போய் பின்னாலே உட்கார்ந்து காதலியையே பார்த்துக்கொண்டிருப்பாராம். அந்தப் பெண் ஒருநாள் கோயிலுக்குப் போகும்போது, அவரைத் தனியே சந்தித்து... "உன்னையே மணப்பேன்' என்று கலைஞர் சொல்ல, அந்தப் பெண்ணும், ’"உங்களைத் தவிர வேறு யாரையும் நினைக்கமாட்டேன்'’ என்று சத்தியம் அடித்தாராம். இவர்களின் காதல் விவகாரம் இரண்டு குடும்பங்களுக்கும் தெரியவர, பிரளயமே வெடித்திருக்கிறது. காரணம் இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், எதிரும் புதிருமாக இருந்தார்கள். கடைசியாய் உறவினர்கள் மூலம் சமாதானம் பேசப்பட்டபோது ‘புரோகிதத் திருமணத்துக்கு ஒத்துக்கொண்டால் சம்மதம்’ என்று சொல்லியிருக்கிறது பெண் குடும்பம். கலைஞரோ, கொள்கை முக்கியம் என்று வீராப்பாகச் சொல்லிவிட்டாராம். அந்தப் பெண் பிடிவாதம் பிடித்துத் தன் குடும்பத்தினரை திருமணத்திற்கு சம்மதிக்க வைப்பார் என்று கலைஞர் எதிர்பார்த்திருக்க, அந்தப் பெண்ணோ வீட்டினரின் மிரட்டலுக்குப் பயந்து, வேறொருவரை மணக்க ஒத்துக்கொண்டாராம். அதனால், அவசர அவசரமாக அந்தப் பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்துத் திருமணம் பண்ணிவைத்துவிட்டார்கள்..

காதலில் தோற்ற கலைஞர், இதனால் பித்துப் பிடித்தது போல் திரிந்தாராம். இவர் நிலையைப் பார்த்த இவரது குடும்பத்தினர் அவசரகதியில் பெண் பார்த்து, இசைச் சித்தர்’ சி.எஸ்.ஜெயராமனின் தங்கை பத்மாவை கலைஞருக்குத் திருமணம் பண்ணி வைத்துவிட்டார்கள். தன் காதலை மறக்கமுடியாமலும், தன்னை மறந்து திருமணம்செய்துகொண்ட காதலியின் மீதான கோபத்தை பொறுக்க முடியாமலும், கலைஞர், "பழனியப்பன்' என்ற நாடகத்தை எழுதினார். அதில் ஒரு காதல் ஜோடி. அந்தக் காதலிக்குத் திருமணம் ஆகிவிடும். இதனால் காதலன் தவிப்பான். கொஞ்சநாளில் காதலி விதவையாகிவிடுவாள். அவளைக் காதலன் கைப்பிடிப்பான் என்று கதையைப் பின்னி, அதில் பகுத்தறிவோடு காதலுக்கு எதிரான போக்கையும் தன்னை மறந்த காதலியையும், இளமைக்கே உரிய வேகத்தோடு சாட்டையடி வசனங்களால் சாடியிருந்தார்.

இதில் வேடிக்கை என்னவென்றால், கலைஞர் நாடகத்தில் உருவாக்கிய காட்சியே உண்மையாகிவிட்டது. உண்மையிலேயே கலைஞரின் காதலி, கொஞ்ச நாளிலேயே விதவையாகிவிட்டார். கடைசியில் அந்தப் பெண் மீது இரக்கம் கொண்ட கலைஞர், அந்தக் குடும்பத்துடன் பேசி, அந்தப் பெண்ணிற்கு மறுமணம் நடத்தச் செய்தார்.

இதில் மிகவும் ரகசியப் படலம் என்னவென்றால்....

கலைஞர் சுற்றுப் பயணத்தில் இருந்தபோது, எதிர்பாராத விதமாக, அவரது முன்னாள் தோழி, தன் மகளோடு வந்து கலைஞரை சந்தித்தார். அப்போது அவர் 60 வயதைத் தண்டிவிட்டார். அவரைப் பார்த்து நெகிழ்ந்து போன கலைஞர், அவர் மறுத்தும் அவருக்குச் சிறிது பண உதவிசெய்து, அவர் மகளுக்கும் தனக்குத் தெரிந்த இடத்தில் வேலை வாங்கிக் கொடுத்தார். அந்த பள்ளிநாள் தோழி விடைபெற்றுப் போன பின், தன் நண்பர் ஒருவரிடம், "என்னவோ தெரியலை... அவங்களோட கைகுலுக்கணும்ன்னு ஆசையா இருந்துச்சு. ஆனாலும் தயக்கம் தடைபோட்டுடுச்சுய்யா'’ என்றாராம் பரபரப் பாக. இது பற்றிப் பின்னர் குறிப்பிடும்போது... அவள் முதுமையை எட்டிவிட்டாள்... ஆனாலும், இளமையில் நான் ரசித்த அந்த குண்டு குண்டான கெண்டை விழிகள் இன்றும் என் நினைவை விட்டு அகலுவதில்லை. அந்தக் கண்கள்மீது நான் கொண்ட காதல் அப்படியே மாறாமல் இருக்கவேண்டுமென்பதற்காக, இப்போது நான் அவளைப் பார்க்க விரும்பவில்லை என்றார் நெகிழ்ச்சியாக.

கலைஞருக்கும் முதல் மனைவியான பத்மாவதிக்கும் 1944 செப்டம்பரில் திருமணம் நடந்தது. புது மாப்பிள்ளையான கலைஞர், மாமனார் வீடான சிதம்பரத்துக்கு ’மறுவீடு’ போய்விட்டு ரயிலில் புது மனைவியோடு திருவாரூருக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறார். அவர்களுக்குத் துணையாக தென்னன் இருக்கிறார்.

மயிலாடுதுறையில் இறங்கிய ஒரு மிலிட்டரி ஆசாமி, தனது டிரங்க் பெட்டிக்குப் பதில், கலைஞர் வைத்திருந்த டிரங்க் பெட்டியை எடுத்துக்கொண்டு இறங்குகிறார்.

கலைஞர், பெட்டி மாறியதைச் சுட்டிக்காட்டியும், போதையில் இருந்த அந்த மிலிட்டரி ஆசாமி காதில் போட்டுகொள்ளாமல் போகிறார். உடனே மயிலாடுதுறை ஸ்டேஷனிலேயே புதுமனைவியோடு இறங்கிய கலைஞர், பெட்டியை வாங்க முற்பட... வாட்ட சாட்டமான அந்த போதை ஆசாமி கலைஞரை அடித்துத் தள்ளுகிறார்,

உடனே கலைஞர் அந்த மிலிட்டரி ஆசாமியைத் திருப்பித் தாக்க, தென்னனும் சேர்ந்து கொள்கிறார். கலைஞர் கொடுத்த அடியில் போதை தெளிந்த அந்த மிலிட்டரி, பெட்டியைக் கொடுக்கிறார். கலைஞர் அவரிடம் பெட்டியைத் திறந்துகாட்டி, அது தன்னுடைய பெட்டி என்று நிரூபித்துவிட்டு நகர்கிறார். கலைஞர் போட்ட அந்த ஃபைட்டைப் பற்றி, தென்னன் தன் குடும்பத்தினரிடம் சொல்லிக்கொண்டே இருப்பாராம். பத்மாவதிக்குப் பிறந்த இந்திரஜித் என்ற குழந்தை அப்போதே இறந்துவிட, அடுத்து பிறந்த குழந்தைதான் மு.க.முத்து. கலைஞரின் அப்பா இறந்த நிலையில், உறவினர்களும் கைவிட்டு, கேலிபேசிய நேரத்தில், இரண்டு சகோதரிகளோடு நின்ற கலைஞருக்கு தாய் அஞ்சுகத் தம்மாளே ஆறுதல். மளமளவென படங்களுக்கான வசனங்களை எழுதிக்குவித்தார். அரசியலிலும் மிளிர்ந்தார். 1957-ல் சட்டமண்ற உறுப்பினரானார். அந்த சமயம் 63 ஜனவரி 17-ல் அவரது தாயார் அஞ்சுகத்தம்மாள் மறைவெய்த, ரொம்பவே கலங்கிப் போனார் கலைஞர். அந்த மனநிலையைத்தான் பின்னர் 66-ல் முரசொலி மாறன் இயக்கத்தில் உருவான "மறக்கமுடியுமா?' படத்துக்கு எழுதிய ’"காகித ஓடம்'’ பாடலில் பதிவு செய்தார்.

’காகித ஓடம் கடல் அலை மீது

போவது போலே மூவரும் போவோம்

தாயின் மடியும் நிலைத்திடவில்லை

தந்தையின் நிழலும் காத்திடவில்லை

ஆறிலும் சாவு நூறிலும் சாவு

அம்மா எங்களை அழைத்திடு தாயே!’

-என்ற கலைஞரின், கதையோடு இணைந்து சுய துயரம் பொங்கிய வரிகள், தமிழகத்தையே கண்ணீர் விடச் செய்தது.

தன் காயங்களையே படிக்கட்டுகளாக்கிக்கொண்டு மேலே ஏறியவர் கலைஞர். அதனால்தான் தமிழ்ச் சமூகத்தின் காயங்களுக்கு மருந்திடும் கரங்கள் அவருக்கு வாய்த்தன.

uday010918
இதையும் படியுங்கள்
Subscribe