சமீபகாலமாகத் தமிழ்த் திரையுலகத்தின் போக்கு நம்பிக்கை தருவதாக மாறிவருகிறது. கலை இலக்கியத்திற்கு முக்கியத்துவம் தரும் வகையில், சமூக அக்கறையுடன், மனித உணர்வுகளைத் துல்லியமாகப் படம்பிடிக்கும் திரைப்படங்கள் இப்போது வெளிவருகின்றன. அந்த வரிசையில் நட்சத்திரத் தம்பதிகளான ஜோதிகா - சூர்யா தயாரித்துள்ள ‘மெய்யழகன்’ படத்தைக் குறிப்பிடலாம்.
மனிதனுக்குள் மறைந்திருக்கும் அன்புக்கும் - தொலைந்து போன உறவுகள் மீண்டும் இணையும்பொழுது ஏற்படக்கூடிய பரவசத்திற்கும் - இப்படத்தின் மூலம் வடிவம் கொடுத்திருக் கிறார் இயக்குநர் பிரேம்குமார். காதல் உணர்வுகளை மென்மையான முறையில் சொல்லிய அவரது ‘96’ திரைப்படத்தைப் போல, மென்மையான பாச உணர்வுகளை இந்தப் படம் திரைமொழியில் மிருதுவான இலக்கியக் குரலில் பேசுகிறது.
பூர்விக வீட்டை இழக்கும் ஒரு குடும்பம் அந்த ஊரிலேயே வாழ விரும்பாமல் நகரத்தை நோக்கிப் படையெடுக்கக்கூடிய ஒரு காட்சி மனதை உலுக்கக்கூடியது. புலம்பெயரவேண்டிய வேறு வேறு சூழல்களைப் பல நேரங்களில் மனித இனம் அனுபவித்திருக்கும். இந்த மாதிரியான நெருக்கடிக்கு உள்ளாகாத மனிதர்கள் பெரும்பாலும் இருக்கமுடியாது.
அப்படிப்பட்ட மனிதர்களின் மனசாட்சியை எழுப்பும்விதமாக இருப்பதால் ரசிகர்கள் இந்தப் படத்துடன் அப்படியே ஒட்டிக் கொள்கின்றனர்.
எதிர்பாராத பல சம்பவங்கள் வாழ்க்கையை வேறு கோணத்தில் பார்க்க வைக்கிறது என்பதற்கு இப்படம் மிக நல்ல உதாரணம். ஒருவர் வேண்டாம் என்று ஒதுக்கும் ஒரு பொருள், அது சாதாரணமானதாகக்கூட இருக்கலாம். ஆனால், அது இன்னொரு மனிதருக்கு உயிர்ப் பொருளாக மாறும் அதிசயத்தை வாழ்க்கை நிகழ்த்திவிடுகிறது. இப்படி, எதிர்பாராத திருப்பங்களைக் கொண்ட வாழ்க்கையின் புல்லரிப்புகள் இந்தப் படத்தில் அச்சு அசலாக இருப்பதால், ரசிகர்கள் ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் அந்த உணர்வுகளில் புல்லரிப்பது படத்தின் வெற்றி!
நகரத்து நவநாகரிகத் தோற்றம் கொண்ட அரவிந்த் சாமி கிராமத்து மண்ணுக்கு ஏற்ற கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். கார்த்தியின் நடிப்பைச் சொல்லவேண்டிய அவசியமே இல்லை. மற்ற துணை கதாபாத்திரங்களும் பாராட்டவேண்டிய அளவிற்குப் படத்திற்கான நியாயம் செய்திருக்கின்றனர்.
குழந்தைப் பருவத்தின் மகிழ்ச்சியான தருணங்களைத் தொலைத்துவிட்டு ஓடிக்கொண்டிருக்கும் மனித வாழ்க்கைக்குள் மறந்துபோன இனிமைகளைக் கொண்டு சேர்க்க மெனக்கெட்டிருக்கிறது மெய்யழகன்.
இரத்தம் தெறிக்கும் காட்சிகள், வன்முறைச் சம்பவங்கள், ஆபாச நடனங்கள், காது கூசும் வசனங்கள் - இப்படியான சூழலில், தீக்காயங்களுக்கு மருந்திடும் மயிலிறகைப் போல, மனித மனங்களை வருடிவிடும் விதமாக இந்தத் திரைப்படத்தை மாற்றியிருக்கிறார் இயக்குநர்.
உலகம் முழுக்கப் பரவி இருக்கும் காற்று, ரப்பர் குழாயில் அடைக்கப்பட்டு, வண்டிகளின் சக்கரமாகி, முன்னேற்றத் திற்கு உதவுவது போல, இந்தப் பூமிப்பந்து முழுவதும் அன்பால் நிறைந்திருந்தாலும் நம் மீது அன்பு காட்ட ஒருவர் பிறக்கும்போது வெறுப்புகள் எல்லாம் விருப்பங்கள் ஆக மாறும் அதிசயம் நடந்துவிடுகிறது. அப்படியான ஓர் அற்புத தருணத்தை நடத்திக் காட்டியிருக்கிறது திரைப்படம்.
குடியிருக்கும் வீட்டை இழந்ததால் சொந்த ஊருக்குப் போகவே கூடாது என்று நினைக்கும் அருள்மொழி (அரவிந்த்சாமி) 22 வருடங்கள் கழித்து, சித்தப்பா மகள் திருமணத்திற்கு வேறு வழியில்லாமல் சென்று கலந்துகொள்கி றார். தஞ்சாவூர் அருகே இருக்கும் நீடாமங்கலத்தில் நடை பெறும் திருமணத்தில் ஒப்புக்காக முகம்காட்டிவிட்டு அன்றைய இரவே சென்னைக்குப் புறப் பட்டுவிடவேண்டும் என்ற அவரின் எண்ணத்தை மெய்யழகனின் (கார்த்தி) பாசம் அசைத்துப் பார்க்கிறது.
தன்னை ‘அத்தான், அத்தான்’- என்று அழைத்து அத்தனை பாசத்தையும் பொழிந்துகொண்டிருக்கும் கார்த்திக்கும் -
அவர் தனக்கும் என்ன உறவு என்று தெரியாமல் தவிக்கும் அரவிந்த்சாமியும் நெகிழ வைக்கிறார்கள். அவர்களின் இந்தத் தவிப்பில் ரசிகர்களும் சேர்ந்து தவிக்கநேரிடுகிறது.
கார்த்தியின் உறவைப் பற்றித் தெரிந்துகொள்ள அரவிந்த்சாமி எடுக்கும் முயற்சிகள் தோல்வியில் முடிந்தாலும் அத்தனையும் கவித்துவமானவை. இரவுப் பேருந்தில் வீடு திரும்ப நினைக் கும் அரவிந்த்சாமி பேருந்தைத் தவற விடும்போது, அந்த நாளின் இரவு, பாசப் போராட்டமாக அமைகிறது. ஆனாலும் கடைசி வரை கார்த்தியின் பெயர் தெரியாமல் தவிக்கும் அரவிந்த் சாமிக்குக் கடைசியில் கார்த்தியின் பெயர் ஞாபகத்திற்கு வந்ததா, இல்லையா என்பது டன் கதை முடிகிறது.
நிர்பந்தம் காரணமாக, மனதுக்குப் பிடித்தவனைத் திருமணம் செய்யாமல் போவது சோகம் என்றால், அதைவிட கைப்பிடித்த கணவனால் எந்த மகிழ்ச்சி யும் இல்லாமல் போகும் சோகம் கொடுமையானது. மீண்டும் திருமணம் செய்யமுடியாமல் போன அருள்மொழி யைச் சந்திக்கும்போது ‘‘உன்னையே திருமணம் செய்திருக்கலாம்” என்று அந்த உறவுப் பெண் சொல்லும் இடங்களில் ரசிகர்களும் உடைந்து போகின்றனர்.
கனவு நாயகர்களான அரவிந்த்சாமி மற்றும் கார்த்தி ஆகியோருக்குள் மறைந்து கிடந்த பாச உணர்வுகளை வெளிப்பட வைத்த இயக்குநரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இயற்கை சார்ந்த கிராமத்து வாழ்க்கையை வாழ்ந்துவிட மாட்டோமா என்ற ஏக்கம் படம் பார்ப்பவர்களுக்கு நிச்சயமாக இருக்கும். சிலிர்க்க வைக்கும் காட்சி அமைப்புகளும், ஒளிப்பதிவு நுணுக்கங் களும் படத்தின் ஈர்ப்புத் தன்மைக்கு நிறைய உதவி செய்திருக்கின்றன.
அரவிந்த்சாமியைப் பக்கத்தில் பார்த்து விட வேண்டும் என்று நினைத்த நடிகை தேவதர்ஷினிக்கு, அவரின் மனைவியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததில் அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இதை அவர் படத்திற்கு வெளியே தெரிவித்து, கலகலப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.
இந்த அளவுக்கு அன்பு செலுத்தும் ஒருவரின் பெயர் நம் நினைவில் இல்லையே என்ற குற்ற உணர்ச்சியில் அரவிந்த்சாமி படும்பாடு உறவுகள் மீது நாம் அக்கறை காட்டவேண்டும் என்ற உணர்வைத் தருகிறது. நடிகர் கமல்ஹாசன் குரலில் ஒலிக்கும் ‘யாரோ இவன் யாரோ’ என்ற பாடல் எப்போது கேட்டாலும் கண்களைக் குளமாக்கும். படத்தின் சாதகமான அம்சமாக மாறிய இவை எப்போதுமே மனதுக்குள் மழையடித்தபடி சுற்றி வருகின்றன.
96- படத்தில் இசையமைத்த கோவிந்த் வசந்தாவே இந்தப் படத்திற்கும் இசையமைத்திருக் கிறார் என்பது கூடுதல் செய்தி. தமிழ் மண்ணுக்கே உரியதான ஜல்லிக்கட்டு, மூவேந்தர்கள் பற்றிய கதைகள் என்று விரியும் கதையின் நீளம் வரலாறு மீது ஆர்வம் கொண்டவர்களுக்கு விருந்தாக மாறியிருப்பது முற்றிலும் உண்மை! படத்தில் வரும் ராஜ்கிரணும் ஜெயப்பிரகாஷும் கூட அன்பு ததும்பும் உரையாடல்களால் நெகிழவைத்து விடுகிறார்கள்.
காவிரிக் கரையில் மது அருந்துவது, சிகரெட் பிடிப்பது என்பது போன்ற காட்சிகளைத் தவிர்த்திருந்தால், படம் இன்னும் கொஞ்சம் கூடுதல் மகிழ்வைத் தந்திருக்கும். இயல்பாகக் காட்சிகளைச் சிந்தரிப்பது என்ற பெயரில், அழகிய ஓவியத்தைச் சுற்றி மையைச் சிந்தியதுபோல இப்படிப் பட்ட காட்சிகள் கொஞ்சம் உறுத்தத்தான் செய்கின்றன.
எனினும், படம் பார்த்து வெளியே வரும்போது, அத்தனை பேருக்கும் அவரவர் சொந்த ஊர் மீதான காதலும், பால்ய கால நட்புகளின் மீதான ஏக்கமும் பெருகுவது நிச்சயம். அந்த அளவிற்கு அரவிந்த்சாமியும் கார்த்தியும், நட்பைக் கவிதையாய்க் கொண்டாடியிருக் கிறார்கள்.
அன்பும் நட்பும் இல்லையெனில் இந்த உலகம், ஈரமற்று உலர்ந்துபோய்விடும் என்பதையும் இந்தப் படம், உணர்த்துகிறது.
ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் வாழ்த்துப் பூங்கொத்துகள்!