செத்துப் போனவர்கள் வசதியான வீரர்கள். அவர்களின் வாழ்விலிருந்து நாம் ஜோடிக்கும் உருவங்களை வாதுக்கு அழைப்பதற்காக அவர்கள் எழுந்து வரப்போவதில்லை.’’ இந்த வரிகள் 1998இல் சாகித்திய அகாடமி விருது பெற்ற எனது மனம் கவர்ந்த சிறுகதையாளர் சா. கந்தசாமிக்கு ரொம்பப் பிடிக்கும்.
எனது “அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம் “ நூலில் ஆப்ரோ- அமெரிக்கக் கவிஞர் கார்ல் வெண்டல் ஹோம்ஸ் எழுதிய இந்த வரிகள் கொண்ட கவிதையைச் சும்மா பிரித்துப் படித்தவர் சிரித்தார். “பாருய்யா அந்த கருப்புக் கவிஞன் நம்ம பசங்களுக்காகவே எழுதி வெச்சா மாதிரி சொல்லியிருக்கான் .’’ என்று சொல்லி விட்டு பளிச்சென்று பல்லைக் காட்டி கந்தசாமி சிரித்த சிரிப்பு அவரைப் பிரிந்து துயருரும் இந்தப் பொழுதில் நினைவுக்கு வருகிறது. அவரைப் பிரிந்த துயரமே என்னிடம் வந்து என்னைப் பார்த்து சிரிப்பதுபோலத் தோன்றுகிறது.
சா. கந்தசாமியின் வெள்ளை வெளேரென்ற பாகவதர் சிகை பாணி முகத்தைப் பார்க்கும்போதெல்லாம் 1968இல் எனக்கு 20 வயது இருக்கும்போது முதல் முதலாகப் பார்த்த ’’சாயா வனம்’’ பற்றி எல்.எல்.ஏ பில்டிங்கில் வந்து பேசிய அழகான, கிராப் தலையும், அரும்பு மீசையும் கொண்ட 28 வயது இளைஞரான சா. கந்தசாமிதான் எனக்கு நினைவுக்கு வருவார்.
என்னிடம் “ போயா , வாயா “ என்று பேசும் ஒரே மனிதர் சா. கந்தசாமிதான். என்னைவிட எட்டு வயது பெரியவர். நாங்கள் இருவரும் நிறைய முரண்பட்டிருக்கிறோம். நான் அவருக்கு ரொம்ப நெருக்கமானவன் இல்லை. ஆனால் அவரது சிறுகதைகளுக்கு ரொம்ப ரொம்ப நெருக்கமானவன். நவீனத் தமிழ்ச் சிறுகதைக்கு அவரது பங்களிப்பு மிகவும் கலை பற்றிய பிரக்ஞையோடு கூடியது. நவீனத் தமிழ் இலக்கியத்துக்கு சா. கந்தசாமியின் பங்களிப்பு ரொம்ப முக்கியமானது. சிறுகதைகளின் வடிவ நேர்த்திக்கு அவர் நிறைய மெனக்கிட்டிருக்கிறார்.
சா கந்தசாமி அடிக்கடி சொல்லுவார் "" நான் எல்லோரது கதைகளையும் படிப்பேன் .ஆனால் யார் மாதிரியும் எழுத மாட்டேன். "" அவருக்கு நிறைய விஷயங்கள் தெரியும்.
அபூர்வமான அந்த விஷயங்களை அவர் சொல்லும் முன்னர் அவர் கண்ணை விரித்து , உதடு குவித்து, வெளிப்படுத்தும் உடல் மொழியை நான் அப்படி ரசித்து இருக்கிறேன். சுயமாக நிறைய யோசித்து பேசுவார் என்றாலும் கோபம் நிறைய வரும். அந்த நேரத்தில்தான் மாயவரத்தில் பிறந்தவரான அவரது பூர்வீகம் மதுரைக்குப் பக்கத்தில் மேலூர்தான் என்பது மனசுக்கு உறைக்கும்.
நான் கல்லூரியில் நுழைந்த காலத்தில் “கசடதபற’’ இதழில் அவரது “தக்கையின் மீது நான்கு கண்கள் ’’ கதையைப் படித்து என்னை இழந்தவன் இதுவரையிலும் அந்தக் கதையிலிருந்து மீளவில்லை. ’’உயிர்கள் ’’ எனும் சிறுகதையில் வாத்தியாருடன் வேட்டைக்குப் போகும் சிறுவர்களின் ஒவ்வோரு பேச்சும் செயல்களும் அவர்களது வயது, வாத்தியார் எப்படிப்பட்டவர், வாத்தியாருக்கும் சிறுவர்களுக்குமான உறவு என்ன என்பதையெல்லாம் இலை மறை காயாக வெளிப்படுத்துவார். சிறுகதையில் ஒரு பையனின் அக்கா கதாபாத்திரம் “வாம்மா மின்னல்’’ என்று சொல்வது மாதிரி தலைகாட்டி ஓடிவிடும்.
ஆனால் வாசகனின் மனதில் நாற்காலி போட்டுக் கொண்டு நிரந்தரமாக உட்கார்ந்து விடும். எதையும் உரத்து சத்தம்போட்டுச் சொல்லாமல் , உணர்ச்சி வசமான வார்த்தைகளைப் பயன்படுத்தாமல், என்ன நடக்கிறது என்பதை மிகத் துல்லியமாக எழுதுவதில் மன்னன். கதாபாத்திரங்களின் நடவடிக்கைகளை வர்ணிப்பதின் மூலமாகவே அவர்களின் உள்மனக் கட்டுமானங்களை உணர வைத்து விடும் திறன் படைத்தவர். ’’எழுத்துக்கலை அலங்காரமாக இருக்காது “ என்று நம்பிச் செயல்பட்ட ஒரு மகா கலைஞன்.
புனைவிலக்கியம் மட்டுமின்றி சிற்பி எஸ். தனபால், அசோகமித்திரன் போன்றவர்களின் ஆவணப்படங்கள எடுத்தவர். சுடுமண் சிற்பங்கள் பற்றிய இவர் ஆய்வின் அடிப்படையில் “காவல் தெய்வங்கள் “ எனும் குறும்படம் எடுக்கப்பட்டது.
ஜூலை 31 இல் காலை 7 மணிக்கு நம்மை விட்டுப் பிரிந்த சா. கந்தசாமிக்கு தமிழ் இலக்கியப் பரப்பில் நிரந்தர இடம் இருக்கிறது.