கூட்டம் முடிவடைந்து, தலைவரின் வீட்டையடைந்து, உணவு சாப்பிட்டு முடித்து, தங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரசாங்க விருந்தினர் மாளிகைக்கு வந்தேன். அப்போது இரவு பதினோரு மணி ஆகியிருந்தது. பரந்துகிடந்த விருந்தினர் மாளிகையின் ஒரு ஓரத்தில் என்னுடைய அறை இருந்தது. குளிர்சாதனம் உட்பட்ட வசதிகள் கொண்டதாகவும், விசாலமானதாகவும் அறை இருந்தது.
இரவின் கடுமையான வெப்பத்திலிருந்து சற்று பாதுகாப்பு கிடைக்கட்டுமென்று எண்ணி, கூட்டத்திற்குச் செல்வதற்கு முன்பே நான் அறையின் ஏ.ஸி.யை "ஆன்' செய்துவிட்டிருந்தேன்.
காப்பாளரின் கையிலிருந்து சாவியை வாங்கி அறையைத் திறந்து உள்ளே நுழைந்தபோது, என்னவோ ஒரு பொருத்தமற்ற தன்மை உள்ளதை உணர்ந்தேன். சந்தனத்தின் பலமான வாசனை அறை முழுவதும் பரவியிருந்தது. எனக்கு சந்தன வாசனை மிகவும் பிடிக்கும். அதனாலேயே நான் மைசூர் சாண்டல்வுட் சோப்பைப் பயன்படுத்துகிறேன். எனினும், இந்த வாசனை, அதன் கடுமை நான் தாங்கிக்கொள்வதைவிட மிகவும் அதிகமாக இருந்தது.
அந்த வாசனை எங்கிருந்து வருகிறதென்பதை நினைத்த வாறு சிறிதுநேரம் நின்றுகொண்டிருந்தபிறகு, "போகட்டும்... எங்கிருந்தாவது இருந்துவிட்டுப் போகட்டும்' என்று நினைத் துக்கொண்டே குளியலறைக்குள் நுழைந்தேன்.
கை, கால்களைக் கழுவிவிட்டு, சீக்கிரமாகப் படுத்துறங்க வேண்டுமென்று நினைத்தேன். பகலின் நீண்டபயணமும், சொற்பொழிவும் என்னை மிகவும் களைப்படையச் செய்திருந்தன.
ஆனால், குளியலறையின் கதவுக்கு முன்னால் சென்றதும், நான் முழுமையாக அதிர்ச்சியடைந்துவிட்டேன்.
வெளியேயிருந்து கதவு தாழிடப்பட்டிருந்தது.
குளியலறை தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது என்ற விஷயத்தில் இந்த அளவுக்கு ஏன் அதிர்ச்சியடைய வேண்டும் என்று நீங்கள் கேட்பீர்கள். ஆனால், என் குணம் எனக்குத்தானே தெரியும்! வாழ்க்கையில் இதுவரை நான் வேற்றிடத்தில் தங்கும்போது-
அது ஒரு வீடோ, ஹோட்டலோ- எதுவாகவும் இருந்துவிட்டுப் போகட்டும்- அறைக்குள் இருக்கக்கூடிய குளியலறையை வெளியேயிருந்து பூட்டிவைக்க மாட்டேன். கதவை வெறுமனே சாய்த்து வைப்பேன். அதைத்தான் செய்வேன். இங்கும் அதையேதான் செய்தேன். எனினும், இங்கு இப்போது...
இதுதவிர, இன்னொரு விஷயமும் என் பார்வையில் பட்டது.
நான் எப்போதும் குளியலறையின் பல்பை "ஆன்' செய்து வைத்திருப்பதுதான் வழக்கம். ஆனால், இங்கு... இப்போது... கதவின் சிறிய இடைவெளியின் வழியாகப் பார்த்தேன்: அறையில் வெளிச்சமில்லை!
பல்பு ஃப்யூஸ் ஆகிவிட்டிருக்குமோ?
நான் அறைக்குள் நுழைந்து ஸ்விட்சைப் போட்டதும், பல்பு எரிந்தது- அப்படியென்றால், ஃப்யூஸ் ஆகியிருக்கவில்லை.
அப்படியென்றால்... நான் "ஆன்' செய்து வைத்திருந்த பல்பை அதற்குப்பிறகு யார் "ஆஃப்' செய்தது?
இதற்கெல்லாம் மேலாக... அறையில் சற்று நேரத்திற்குமுன்பு யாரோ வெந்நீரால் குளித்தால் உண்டாகியிருக்கக்கூடிய நீராவியும் இருந்தது. வாஷ் பேஷினுக்கு மேலேயிருக்கும் கண்ணாடி யில் முகத்தைப் பார்க்கமுடியவில்லை. பக்கெட்டில் குளித்துமுடித்து மீதமிருந்த வெந்நீரும் இருந்தது.
பிறகு நான் கால்களைக் கழுவுவதற்கோ கைகளைக் கழுவுவதற்கோ நிற்கவில்லை. பயம் உண்டாகிவிட்டதா என்று கேட்டால், பயம் உண்டானது. ஆனால், அதையும் தாண்டி உண்டானது- ஒரு வகையான மனக் குழப்பம்தான்.
அறைக்குள் யாரோ நுழைந்து என் குளியலறையைப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதென்னவோ உண்மை. சொந்த ஊரிலும் வெளியேயும் ஹோட்டல்களிலும் விருந்தினர் இல்லங்களிலும் எவ்வளவோ முறை தங்கியிருக்கும் எனக்கு, முதன்முறையாக இப்படிப்பட்ட ஒரு அனுபவம் உண்டானது.
திரும்பத்திரும்ப அதைப்பற்றியே நினைத்துக்கொண்டி ருந்தேன். நான் இல்லாத வேளையில் இங்குவந்து குளித்தது யாராக இருக்கும்?
மொத்தத்தில் வாய்ப்புள்ளது ஒரேயொரு கூட்டத்திற்கு மட்டும்தான்- விருந்தினர் மாளிகையின் அலுவலகத்திலிருக்கும் பணியாட்கள். மாலையில் வெளியேறிச் சென்றபோது, நான் அவர்களின் கையில் சாவியைக் கொடுத்திருந்தேனே!
அப்படியே இல்லையென்றாலும், அவர்களின் கையில் மாற்று சாவி இருக்கவும் செய்யும். அதைப்பயன்படுத்தி... நான் இல்லாத வேளையில் குளியலறைக்குள் நுழைந்து...
ஆனால்... "இருக்காது'- நான் எனக்குள் கூறிக்கொண்டேன்.
"எந்தச் சமயத்திலும் எந்தவொரு பணியாளும் அவ்வாறு செய்யமாட்டார்கள். கண்டுபிடிக்கப்பட்டுவிட்டால், பணி போய்விடுமென்பது உறுதியல்லவா? பிறகு... ஒரு நல்ல அறையின் நல்ல குளியலறைக்குள் நுழைந்து குளிக்கவேண்டுமென்று ஆசைப்பட்டால், யாரும் வாடகைக்கு எடுத்திராத வேறு அறைகள் இருக்குமே! அங்கு போகக்கூடாதா?
இவ்வாறு சிறிது நேரம் ஒவ்வொன்றையும் சிந்தித்தவாறு நின்றுவிட்டு, இறுதியில் வெறுப்புடன் எனக்குள் கூறிக்கொண்டேன்:
"சரி... எந்த நாசம் வேண்டுமானாலும் நடக்கட்டும்!'
இவ்வாறு கூறியவாறு நான் தூங்குவதற்காகப் படுக்கவும் செய்தேன். ஆனால், தூக்கம் வரவேயில்லை.
ஒவ்வொன்றையும் மனதில் நினைத்தவாறு இவ்வாறு... இவ்வாறு... படுத்திருந்தபோது, எப்போதோ எனக்குள் தோன்றியது- அறையில் யாரோ இருக்கிறார்கள்!
நான் திடுக்கிட்டு எழுந்து, விளக்கைப் போட்டுப் பார்த்தபோது, யாருமில்லை.
எனக்கு வெறுமனே தோன்றியிருக்கலாம் என்று மனதை சமாதானப்படுத்திக் கொண்டாலும், பிறகு... படுக்க முடியவில்லை.
சாளரங்களின் கனமான திரைச் சீலைகளை ஒரு பக்கமாக விலக்கிவிட்டு, கதவுகளை முழுமையாகத் திறந்துவிட்டேன்.
வெளியே நல்ல... நிலவு இருந்தது.
சாலையின் வழியாக இடையே சீறிப்பாய்ந்து போய்க் கொண்டிருந்த லாரிகளின் சத்தத்தையும், தூரத்தில் எதோவொரு கோவிலிலிருந்து ஒலிக்கும் செண்டையின் ஓசையையும் தவிர, வேறெந்தவொரு சத்தமும் எங்குமில்லை.
அப்போது... பின்னாலிருந்து யாரோ மெதுவான குரலில் கூறினார்கள்:
""பயந்துட்டீங்களா?''
அதிர்ச்சியடைந்து பின்னால் பார்த்தபோது, யாருமில்லை.
ஆனால், யாரோ வேகமாக நடந்துசெல்வதை என்னால் தெளிவாக உணரமுடிந்தது.
புடவையின் சலசலப்பு... கொலுசு முத்துகளின் "ஜல்ஜல்' ஓசை...
எந்த சமயத்திலும் நான் ஒரு பெரிய தைரியசாலியாக இருந்ததில்லை. அதேநேரத்தில்- பெரிய பயந்த சுபாவமுள்ளவனாகவும் இல்லை. ஆனால், இப்போது... பயம் காரணமாக என் இதயத்துடிப்பு நின்றுவிட்டதைப்போல இருந்தது.
யார் அது?
இங்கு... நான் தங்கியிருக்கக்கூடிய இந்த அறைக்குள் நுழைந்து... இரவு வேளையில்... அப்போது மீண்டும் மிகவும் தெளிவாகக் கேட்டேன்:
""இல்ல... நான் உங்களை எதுவும் செய்யமாட்டேன். நீங்க எனக்கு எந்தவொரு தவறும் செஞ்சதில்லியே! வழக்கம்போல இந்த வருஷமும் இங்க திருவிழாவுக்காக வந்திருக்கேன். உங்க பையில இருந்து மைசூர் சாண்டல்வுட் சோப்பை எடுத்து குளிச்சேன்... எனக்கு சாண்டல்வுட் சோப்பை எப்பவும் ரொம்ப பிடிக்கும். அதனாலதான்... கேட்காமலேயே... பிறகு... நீங்க என்மேல கோபப்பட மாட்டீங்கன்னும் எனக்கு உறுதியான கருத்து இருந்தது.
எதுக்காக எல்லா வருஷங்கள்லயும் இந்த நாள்ல இங்க மிகச் சரியா வர்றேன்னு கேட்டா... இந்த நாள்லதான் அவங்க என்னை...
சதித்திட்டம்... எல்லாமே சதித்திட்டம்...
அப்பாவியான என்னை நம்ப வச்சு...''
பிறகு... தேம்பித்தேம்பி அழும் சத்தம் கேட்டது.
அப்போது நான் ஒரு இயந்திரத்தைப்போல என் பொருட்கள் அனைத்தையும் அள்ளிப் பைக்குள் போட்டுக்கொண்டு, வேகமாக வெளியேறினேன். நான் அதிகமாக நடுங்கிக்கொண்டிருந்தேன். இனிமேலும் இந்த அறையில் இருந்தால்...
காப்பாளரின் அறையில் வெளிச்சம் இருந்தது.
அவர் தூங்காமல் என்னவோ கணக்குப்போட்டுக் கூட்டிக் கொண்டிருந்தார்.
அறையின் சாவியை அவரிடம் கொடுத்துவிட்டு நான் கூறினேன்:
""நான் போறேன்.''
என்னை சந்தேகத்துடன் பார்த்துவிட்டு, அவர் கூறினார்:
""மெட்ராஸ் மெயிலுக்கு இன்னும் நேரம் இருக்கே!
நான் எதுவும் கூறவில்லை. அப்போது அவர் மீண்டும் கூறினார்:
""எதையாவது பார்த்தீங்களா?''
நான் சிறிதுநேரம் அவரையே பார்த்துக்கொண்டு நின்றிருந்து விட்டு, வெளியே நடந்தேன். அப்போது பின்னாலிருந்து அவர் கூறுவது என் காதில் விழுந்தது.
""இந்த அறை வேணாம்னு இவரோட நண்பர்கிட்ட நான் சொன்னேன். ஆனா, அதுக்குப்பிறகும்... அவர்...''
விருந்தினர் மாளிகையின் கேட்டிற்கு வெளியேயிருந்த கல்லாலான திண்டில் நான் அமர்ந்தேன். புகைவண்டி நிலையத் திற்கு என்னை அழைத்துச் செல்லக்கூடிய வாடகைக்கார் வருவதற்கு இன்னும் நேரமிருந்தது.
உலகம் முழுவதும் பேரமைதியாக இருந்தது.
தூரத்திலிருந்த மலைகளிலிருந்து வீசிக்கொண்டிருந்த குளிர்ந்த காற்றில் சந்தனத்தின் வாசனை இருந்தது.