அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்
நமக்கு வரும் அழிவிலிருந்தும் ஆபத்திலிருந்தும் நம்மைப் பாதுகாத்துக்கொள்ள நமக்குக் கிடைத் திருக்கும் ஆயுதம்தான் நம் அறிவு என்று இதன் மூலம் அறிவுறுத்துகிறார் வள்ளுவப் பேராசான்.
ஆனால், தற்காத்துக் கொள்ளும் அறிவு நம் ஆட்சியாளர்களுக்கு கொஞ்சமும் இல்லாததால் தான், கொரோனாவின் ஊழித்தாண்டவத்தை உயிர் பயத்தோடு இன்று நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
இன்னொரு அமெரிக்காவாய் இந்தியா ஆகி விடுமோ என்று நாடே மரண பீதியில் இருக்கிறது. மே 1-ஆம் தேதி நிலவரப்படி, இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 35, 365 பேர். இவர்களில் 1,152 பேர் மரணமடைந்திருக்கிறார்கள்.
நம் தமிழகத்திலோ 2,526 பேர் கொரோனாவின் கொடூரப் பிடியில் சிக்கியிருக்கிறார்கள். சென்னையில் மட்டும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1,082-ஆகக் கிடுகிடுவென உயர்ந்திருக்கிறது. தமிழகத்தில் மரணத்தைத் தழுவியவர்கள் எண்ணிக்கை 28 என்ற வகையில் துயரக் கணக்குகள் அதிகரித்து வருகின்றன.
இவ்வளவு இவ்வளவு பெரிய பாதிப்பு நிகழ யார் காரணம்? இங்குள்ள பொது மக்களா? இல்லை. ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் வந்த வினை இது.
*
கடந்த டிசம்பர் இறுதியிலேயே சீனாவில் இருந்து கொரோனா பரவத் தொடங்கியபோதே, அதன் எல்லை நாடான நம் இந்தியா, உடனடியாகப் பாதுகாப்புச் சுவரை ஏற்படுத்தி இருக்கவேண்டும். ஜனவரி இறுதியில் கேரளாவில் ஏற்பட்ட தொற்று மூலம் இந்தியாவிற்குள் கொரோனா நுழைந்தபிறகாவது, இந்திய அரசு தன் வாசல் கதவை மூடியிருக்க வேண்டும். ஆனால், இங்கிருக்கும் ஆட்சியாளர் களோ, கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட வில்லை, அதைக் குணப்படுத்தும் சிகிச்சை இல்லை என்று தெரிந்தும், இந்தியாவில் இருந்து சென்று தொற்றுக்கு ஆளான, கொரோனா நோயாளிகளை எல்லாம் இங்கே கொண்டுவந்து இறக்குமதி செய்தார்கள். அவர்களை எல்லாம் விமான நிலையப் பகுதிகளிலேயே வைத்து, சிகிச்சை கொடுத்து, சரிசெய்த பின்னராவது அவர்களை மக்களோடு கலக்க அனுமதித்திருக்கலாம். அதையும் அவர்கள் செய்யவில்லை. போதாக் குறைக்கு வெளிநாட்டில் இருந்து வந்த வெளி நாட்டுப் பயணிகளைக் கூட சரிவர பரிசோதிக் காமல், கண்துடைப்பு நாடகத்தை நடத்தியபடி, உள்ளே அனுமதித்து, ஒட்டுமொத்த இந்தியாவையும் கொரோனாவின் கோரக் கைகளில் ஒப்படைத்துவிட்டார்கள். ஆக கொரோனா பரவலுக்கு முழுக்காரணமும் இங்கே இருக்கும் அதிகார வர்க்கம்தான். ஆனால் அவர்கள் செய்த பாவத்துக்கு, இன்று மரண பீதியிலும் பொருளாதார முடக்கத்திலும் சிக்கிக்கொண்டு பரிதவித்துக் கொண்டிருப்பவர்கள், எந்த பாவமும் செய்யாத பொதுமக்கள்தான்.
*
நான் கேட்பதெல்லாம், மார்ச் 24 ஆம் தேதி முதல் மே 3-ந் தேதி வரை, இரு கட்டங்களாக ஏறத்தாழ 39 நாட்கள் ஊரடங்கைப் பிரதமர் மோடி பிரகடனம் செய்திருக்கிறார்.
மேலும் இப்போது மே 14 வரை ஊரடங்குக் காலம் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. ஆக இங்கே எல்லோருக்கும் 53 நாட்கள் ஊரடங்கு தண்டனை கொடுக்கப்பட்டிருக்கிறது.
இப்படி, ஊரடங்கு மூலம், ஒட்டுமொத்த இந்திய மக்களையும், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி ஒரே நாளில் வீடுகளுக்குள் முடக்கிய மோடி, அவர்களின் வயிற்றுப் பசியைப் பற்றி ஏன் யோசிக்கவில்லை?.
ஊரடங்கு நாட்களில் எல்லோரும் குடும்பம் குடும்பமாக வீட்டுக்குள் முடங்கிக்கிடக்கிறார்கள். குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள், நோயாளிகள் என ஒவ்வொரு குடும்பத்திலும், கவனத்தோடு பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்குத் தேவையான எதுவும் இப்போது கிடைக்கவில்லை. அதனால், ஒட்டுமொத்த இந்தியக் குடும்பங்களும் இப்போது மூச்சுத் திணறுகின்றன.
அரசு அலுவலகங்கள் மூடப்படுவிட்டன. தனியார் நிறுவனங்களும், தொழிற்சாலைகளும் பூட்டு போடப்பட்டுவிட்டன. சிறுதொழில் நிறுவனங்களும் மூடிக்கிடக்கின்றன. வணிக வளாகங்களையும் கடை கண்ணிகளையும்கூட அரசு திறக்க விடவில்லை. இப்படி எல்லாமும் மூடப்பட்டதால், சம்பளமோ, ஊதியமோ, வருமானமோ பெரும்பாலோருக்கு கிடைக்கவில்லை. இப்படி பொதுமக்களின் வாழ்வை ஒரே நாளில் இருட்டாக்கிவிட்டார்கள். இதனால் ஒவ்வொரு நாளையும் நகர்த்த மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
ஊரடங்கு தவிர்க்க முடியாது என்கிற போது, ஊரடங்கில் இருக்கும் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உதவிகளை அரசாங்கங்கள் தானே தரவேண்டும்?
*
130 கோடி மக்கள் வாழும் இந்தியாவில், ஏறத்தாழ 13.5 கோடி பேர் , பசி பட்டினியோடு வாழ்கிறார்கள் என்று கணக்கு சொல்லும் ஐ.நா.வின் உலக உணவுத்திட்ட இயக்குநரகம், இப்போதைய கொரோனா ஏற்படுத்திவரும் கடும் பாதிப்பால் ஆண்டு இறுதிக்குள், இந்த எண்ணிக்கை பசி, பட்டினியாளர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 27 கோடியாக உயரும் என்று சொல்லியிருப்பதோடு, மூன்று மாதங்களுக்குப் பின் மாதந்தோறும் பெரிய அளவில் பட்டினிச் சாவுகளை இந்தியா சந்திக்கவேண்டி வரும் என்றும் எச்சரித்திருக்கிறது.
ஒரு ஆட்டு வியாபாரிகூட, தான் பட்டியில் அடைத்துவைக்கும் ஆடுகளுக்குத் தேவையான இலை, தழைகளைக் கொடுத்துவிட்டுத்தான் அடைப்பான். அவைகளுக் கான தீவனத்தை நாம்தானே கொடுத்தாக வேண்டும் என்ற எண்ணத்தோடு, அவற்றை அவன் பராமரிப்பான். அந்த அடிப்படை அறிவுகூட இல்லாமல், இங்கிருக்கும் அதிகார வர்க்கம், தான் முடக்கிவைத்த மக்களைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல், கொரோனா சாக்கில் நிதியைத் திரட்டிக்கொண்டே, வரவுசெலவுக் கணக்கைப் பார்த்துக்கொண்டிருக்கிறது.
*
இந்த வசூலின் பின்னணியிலும் ஏகப்பட்ட ஓரங்க நாடகங்கள் அரங்கேற்றப் படுகின்றன.அதற்கு முன் ஒரு தகவலை நாம் கவனிக்கவேண்டும். பெரும் தொழிலதிபர்கள் என்ற பெயரில் இருக்கும் பணத் திமிங்கலங்கள் 50 பேர் வங்கிகளில் வாங்கிய 68 ஆயிரம் கோடி ரூபாய்க் கடனை, வாராக்கடனாக ரிசர்வ் வங்கி மூலம் அறிவித்திருக்கிறது மோடி அரசு. இது கடந்த செப்டம்பர் வரையிலான நிலவரம். இது குறித்து ராகுல்காந்தி உள்ளிட்டோர் கேள்வி எழுப்பியபோது, கடன்களைத் தள்ளுபடி செய்யவில்லை. கணக்கியல் ரீதியாக வாராக்கடன்களின் பட்டியலில் தான் வைத்திருக்கிறோம் என்று மழுப்புகிறார் மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன். கொடுக்கப்பட்ட கடன்கள், தள்ளுபடி செய்யப் படுகிறது என்பதன் கௌரவ அறிவிப்பே வாராக்கடன். இந்த 50 பேர் பட்டியலில் விஜய் மல்லையா, பாபா ராம்தேவ், மெகுல் ஷோக்ஷி, நீரவ் மோடி உள்ளிட்டோர் இருக்கிறார் கள். இதில் மோடி தரப்புக்கு நெருக்கமான பாபா ராம் தேவ் டீம் மட்டும் 2,212 கோடி ரூபாயைக் கடனாக வாங்கி, திருப்பிக் கட்டாமல் விழுங்கியிருக்கிறது.
நிலை இப்படி இருக்க, கொரோனா நிவாரண நிதியாக தனது பதஞ்சலி நிறுவனம் மூலம் 25 கோடி ரூபாயை வழங்குவதாக ஹரித் துவாரில் இருந்துகொண்டு அறிவித்திருக்கிறார் பாபா ராம் தேவ். இதை பெருமையாக ஏற்று கொண்டு, அவர் பெயரை நிவாரண நிதி தந்தோரின் பட்டியலில் அறிவித்திருக்கிறது மோடி அரசு.
2,212 கோடியை விழுங்கிய மோசடிப் பேர்வழி பாபா ராம்தேவ், 25 கோடி ரூபாயை நிவாரண நிதியாகத் தருகிறார் என்றால், அந்த நிவாரண நிதி, அந்தத் தள்ளுபடிக்கான பிராயச்சித்தமா? இந்த வாராக்கடன்களின் பின்னணியில் என்னென்ன பேரங்கள் நடந்திருக்கின்றன என்பதெல்லாம் டெல்லிக்கே வெளிச்சம்.
அதேபோல், 13 பேரின் உயிர் பறித்த துத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின் வலி, இன்னும் பலரின் நெஞ்சில் அப்படியே இருக்கிறது. இதற்குக் காரணமான ஸ்டெர்லைட் ஆலைக்கு மூடுவிழா நடத்தப்பட்டும்கூட, அது நீதித்துறையையும் அதிகாரவர்க்கத்தையும் சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட ரத்தக்கறை படிந்த ஸ்டெர்லைட் நிறுவனம், இங்குள்ள எடப்பாடி அரசிடம் கொரோனா நிவாரணத் தொகையாக, 5 கோடி ரூபாயைக் கொடுத்திருக்கிறது. அந்த நிதியின் பின்னணியில் எப்படிப்பட்ட சதி இருக்குமோ என்று பதறுகிறார்கள் தூத்துக்குடிக்காரர்கள்.
இப்படிப்பட்ட வசூல்களுக்கிடையே மக்கள் பிரதிநிதிகளின் தொகுதி மேம்பாட்டு நிதியிலும் கைவைத்து அள்ளி வருகின்றனர்.
மேலும் அரசு ஊழியர்களின் சலுகைகளையும், சம்பளத்தையும் குறைத்து, அதிலிருந்தும் இங்குள்ளோர் நிதி திரட்டுகின்றனர்.
இப்படி கோடி கோடியாக நிதியைத் திரட்டியும்கூட, மக்களுக்குப் பெரிதாய் எந்த நிவாரண உதவியும் வந்து சேரவில்லை என்பதே உண்மை. இங்குள்ள எடப்பாடி அரசு, ரேசன் கார்டுதாரர்களுக்குத் தலா ஆயிரம் ரூபாயை மட்டும் கொடுத்துவிட்டு, அமைதியாக இருக்கிறது. இன்றைய விலைவாசியில் அது எத்தனை நாளைக்கு வரும்?
எனவே, கொரோனா நெருக்கடியை சமாளிக்க இங்குள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 10 ஆயிரம் ரூபாய் வீதமாவது எடப்பாடி அரசு கொடுக்க முன்வரவேண்டும். நிதி இல்லை என்ற பழைய பல்லவியை இனியும் பாடுவதில் அர்த்தம் இல்லை. வாக்களித்த மக்களை பசியில் சாகவிடாமல் காப்பாற்ற வேண்டிய தார்மீகப் பொறுப்பு ஆளும்கட்சிக்கு இருக்கிறது. கோடிகோடியாக மக்களிடமிருந்து சுருட்டியவர்கள், அந்த மக்களைக் காப்பாற்றத் தங்கள் சொந்த கஜானாவையாவது திறக்க முன்வரவேண்டும். தங்கள் தேர்தல் செலவுக்கு ஒதுக்கிவைத்ததில் இருந்தாவது, அவர்கள் தங்கள் கர்ணக் கைகளை நீட்டவேண்டும். இல்லையென்றால் ஆபத்துக்கு உதவாத அரசு, மக்களின் சாபத்தை சந்திக்கவேண்டி இருக்கும்.
*
அரசின் உத்தரவை ஏற்று வீடடங்கி இருக்கும் பொதுமக்களுக்கு எந்தவித வருமானமும் இல்லை. அதனால் அன்றாடத் தேவை களையே அவர்களால் தீர்த்துக்கொள்ள முடியவில்லை. நாளை எப்படி? என்று தெரியவில்லை. எந்தெந்த வேலைகள், யார் யாருக்கும் இருக்கும் என்பதற்கு உத்திரவாதம் இல்லை. வேலை இழப்பும், பசியும் அவர்களை ஒரேயடியாய் பயமுறுத்திக் கொண்டிருக்கிறது.
துயரத்தில் தவிக்கும் கூலித் தொழிலாளர்கள், எங்கிருந்தாவது தங்களுக்கு உதவிக்கரம் நீளாதா? என்று குடும்பத்தோடு காத்திருக்கிறார்கள். வீட்டு வேலை செய்து காலத்தை நகர்த்திவந்த பெண்களும், எடுபிடி வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்றி வந்த ஆண்களும் இப்போதே தங்கள் வேலையை இழந்து விட்டு, பசி பட்டினியை நோக்கி வந்துவிட்டார்கள். கட்டுமானப் பணியாளர்களும், மூட்டை தூக்கும் தொழிலாளர்களும், எவராவது வந்து தங்களுக்கு உணவு கொடுப்பார்களா? என்ற நிலையில் பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள். நெசவுத் தொழிலாளர்கள், சாயப்பட்டறைத் தொழிலாளர்கள், தோல் தொழிற்சாலை ஊழியர்கள் என அனைத்துத் துறையினரும் கலங்கிய விழிகளுடன் கையறு நிலையில் நிற்கிறார்கள். ஆட்டோ, கால் டாக்ஸி ஓட்டுநர்கள் போன்றோரும் அடுத்த வேளைக்கு என்ன செய்வது என கைபிசைகிறார்கள்.
இன்று தன்னார்வலர்கள் எவராவது உணவுப் பொட்டலத்தை கொடுக்கமாட்டார்களா என்ற எதிர்பார்ப்போடு, சாலையோர பிளாட் பாரவாசிகளும், மாற்றுத்திறனாளிகளும், அன்றாடங்காய்ச்சிகளும் பசியில் பரிதவிக்கிறார்கள். எவராவது பொட்டலங்களோடு வருவது தெரிந்தால், அவற்றை வாங்க, கொரோனாவைப் பற்றிக் கூட கவலைப்படாமல் முண்டியடிக்கிறார்கள். இதுதான் இன்று நாம் சந்திக்கும் பேரவலம்.
கொரோனவைவிடவும் பசி அரக்கனின் பிடியில் சிக்கி, உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகமாகிவிடுமோ என்ற பதட்ட நிலை நம்மைச் சூழ்ந்திருக்கிறது. இது பற்றியெல்லாம் ஆட்சியாளர்கள் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.
'இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்’
-என்கிறான் வள்ளுவப் பேராசான். இங்கே கையேந்திதான் உயிர்வாழ வேண்டும் என்ற நிலை ஏற்படுமானால், இப்படியொரு உலகத்தைப் படைத்தவன் கெட்டொழியட்டும் என்பது அதன் பொருள். உணவுக்குக் கையேந்த வைக்கிறவன் இறைவனே ஆனா லும் கெட்டழிவான் என்று இந்தக் குறள் மூலம் வள்ளுவன் சாபம் விடுகிறான் என்றால், இங்கே இருக்கும் ஆட்சியாளர்கள் எம்மாத்திரம்?
-கனத்த நெஞ்சோடு,
நக்கீரன்கோபால்