தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை

வீயாது அஇஉறைந் தற்று.

-என்பார் வள்ளுவர்.

இதன் பொருள், தீமை செய்கிறவர்கள் எவரானாலும் தீமையிடமிருந்து தப்பமுடியாது. அவர் கள் செய்த தீய செயலே, அவர்களின் நிழல்போல் அவர்களை ஒட்டிக் கொண்டு, அவர்களுக்கும் தீமையை உருவாக்கும் என்பதாகும். இந்தக் குறள், அந்த கள்ளக்குறிச்சி சக்தி இண்டர்நேசனல் பள்ளி யின் நிர்வாகிகளுக்கு வள்ளுவர் கொடுக்கும் சாப மாகவே அமைந்திருக்கிறது.

Advertisment

பள்ளியின் விடுதியில் தங்கிப்படித்து வந்த கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் திகிலூட்டும் மரணம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் பதறவைத்திருக்கிறது. படிக்கவில்லை என்று ஆசிரியர்கள் கண்டித்ததால் அந்த ப்ளஸ் டூ மாணவி ஸ்ரீமதி, பள்ளியின் மூன்றாவது மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்டதாக பள்ளி நிர்வாகம் சொன்னது.

ஆனால் மருத்துவமனை சவக்கிடங்கில் போடப் பட்டிருந்த அந்த மாணவியின் உடலைப் பார்த்த அவர் குடும்பம், இது தற்கொலை அல்ல; பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு நடந்த கொலை என்று நீதி கேட்டுப் போராடினர். சம்பவம் நடந்து நான்கு நாட்களாகியும் காவல்துறை விசாரணையில் மெத்தனம் காட்டியதால், ஸ்ரீமதியின் உறவினர்களும் ஏரியா பொதுமக்களும் ஆத்திரமடைந்தனர்.

அதனால் 17-ஆம் தேதி அந்தப் பள்ளியை நோக்கிக் கோபமாகத் திரண்டனர்.

Advertisment

srimathi

பொதுமக்களின் கோபத்திற்குக் காரணம்:

அந்தப் பள்ளியின் நிர்வாகி ரவிக்குமார், ஒரு வில்லனைப் போலவே நடந்திருக்கிறார். ஏற்கனவே அங்கே ஐந்தாறு மாணவர்களின் மர்ம மரணங்களும் கொலைகளும் நடந் திருக்கிறது என்கிறார்கள் ஊர் மக்கள். 2006-வாக்கில் அங்கே 8-ஆம் வகுப்பு படித்த சின்னசேலத்தைச் சேர்ந்த ஒரு மாணவன், கழுத்து நெறித்துக் கொல்லப் பட்டு, அங்குள்ள கழிவறையில் வீசப்பட்டிருக்கி றான். அப்போது போராடிய மக்களை தன் சமூகத் தைச் சேர்ந்த அடியாட்களை வைத்து அடித்து விரட்டியிருக்கிறார் ரவிக்குமார்.

அதேபோல், பள்ளி வாகனத்தின் அருகே நின்றுகொண்டிருந்த ஒரு மாணவி மீது, ஸ்டெப்னி டயரை மேலே இருந்து அலட்சியமாகப் போட்டதில், அந்த மாணவி துடிதுடித்து இறந்திருக்கிறாள். இதையெல்லாம் லோக்கல் போலீஸின் துணையோடு மூடி மறைத்துவிட்டார்களாம். மேலும், அந்தப் பள்ளியின் நிர்வாகி ரவிக்குமார், இந்துத்துவ வெறி கொண்ட ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர். பா.ஜ.க.வில் இருக்கும் ஹெச்.ராஜா, அண்ணாமலை முதல், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பி.ஏ.வரை நெருக்கமான தொடர்புள்ளவர் என்கிறார்கள்.

சாதிரீதியாக எடப்பாடியோடும் நெருக்கம் பாராட்டி வந்திருக்கிறார் ரவிக்குமார். சாதிபலம், அதிகாரச் செருக்கு, பணத் திமிரோடு அவர் அடாவடி ராஜாங்கம் நடத்திவந்திருக்கிறார். நிதி மோசடியில் சிக்கி, ஓட்டம் பிடித்த கலைமகள் சபாவின் 5 ஏக்கர் நிலத்தை அதிகாரிகள் துணை யோடு அபகரித்துக்கொண்டு, அந்தப் பள்ளியை ரவிக்குமார் விரிவாக்கம் செய்திருக்கிறாராம். மாணவர்கள் எவரேனும் உரிய நேரத்தில் கல்விக் கட்டணத்தைக் கட்டாவிட்டால், அவர்களை நாள் முழுக்க முட்டிபோட வைப்பதையும், தனி அறையில் அடைத்துவைப்பதையும் அவர் தொடர்ந்து செய்துவந்திருக்கிறார். அவரது எல்லா டெரருக்கும் அவர் மனைவியான சாந்தியும் ஒத்துழைப்பாக இருந்திருக்கிறார். இப்படி எல்லா வகையிலும் பள்ளி நிர்வாகித் தரப்பு அடாவடி செய்துவந்ததால், மாணவி ஸ்ரீமதி மரணம், அந்தப் பகுதி மக்களை வெகுவாகக் கொந்தளிக்க வைத்திருக்கி றது. அதுதான் 17-ஆம் தேதி ஆக்ரோசமாக வெடித் திருக்கிறது.

மாணவி விவகாரம், பெரிதாக மாறலாம் என்று கணக்குப் போட்ட பள்ளி நிர்வாகி ரவிக்குமார், பள்ளிக்கு எதிராக போராட்டத்தை மக்கள் கையில் எடுத்தால், தனக்கே உரிய பாணியில் அடித்துவிரட்டு வதற்காக தன் சமூகத்தைச் சேர்ந்த ஏறத்தாழ 500 ரவுடிகளைப் பள்ளியில் தங்கவைத்திருக்கிறார்.

அவர்களுக்கும் காவல்துறையைச் சேர்ந்தவர்களுக்கும் அந்தப் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தினசரி அசைவ உணவும், தயாரித்து வினியோகிக்கப் பட்டு இருக்கிறது. அங்கே மது வகைகள் சப்ளை செய்யப் பட்டதை, ஊர்க்காரர்கள் பார்த்திருக்கிறார்கள்.

srimathi

திசைதிருப்ப உருவாக்கப்பட்ட கலவரம்

இப்படிப்பட்ட பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்காமல் போலீஸ் மௌனம் சாதித்த தால், கொந்தளித்த மக்கள், பள்ளி நிர்வாகத்திற்கு எதிராகக் கோஷம் போட்டபடி, அங்கிருந்த பர்னிச்சர் களைத் தாக்க, அப்போது பள்ளித் தரப்பு ஏற்பாடு செய்த அடியாட்கள், பள்ளி வளாகத்தில் நிறுத்தப் பட்டிருந்த போராட்டக்காரர்களின் டூவீலர் உள்ளிட்ட வாகனங்களுக்குத் தீயை வைத்து, ஆவேசப் போராட்டத்தைக் கலவரமாக மாற்றினர். போலீஸோடு சேர்ந்து அவர் கள் பொதுமக்களைத் அடித்து உதைத்து விரட்டினர். இதனால் அவர்கள் எதிர் பார்த்தது போலவே, மாணவியின் மரண விவகாரத்தைவிட, கலவரம் பெரிதாக்கப்பட்டது. இந்தக் கலவரத்தில் பள்ளித் தரப்பில் ஒருவர்கூட தாக்குதலுக்கு ஆளாகவில்லை. பள்ளியின் பர்னிச்சர் போன்ற பொருட்களும், வாகனங்களும் மட்டும்தான் சேதமடைந்தன. பள்ளி நிர்வாகத்திடம் பவ்யம் காட்டிய காவல்துறை, கலவரம் செய்ததாக அந்தப் பகுதி மக்கள் மீதும், நீதிகேட்டுப் போராடிய பல்வேறு அமைப்பினர் மீதும் பாய்ந்தது. ஏறத்தாழ 350 பேருக்கு மேல் கைது செய்யப்பட்டார்கள்.

அந்தப் பகுதியில் உள்ள ஏழு ஊர்களைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமூக இளைஞர்கள்தான், கலவரத்தில் ஈடுபட்டார்கள் என்ற செய்தியையும் கசியவிட்டு, இதை சாதிக்கலவரமாக்கும் முயற்சியும் நடந்தது. இவை எல்லாம் ஊடகங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்ட பிறகுதான், பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகியோரை போலீஸ் கைதுசெய்தது.

அந்த ஐந்து பேரும் பாதுகாப்பாக, விருந்தினர் போல் பராமரிக்கப்பட, பொதுமக்கள் தரப்பில் நான்கைந்து பேரை, ஒரே மாதிரி பாத்ரூமில் "வழுக்கி விழ வைத்து' அவர்களின் எலும்புகள் முறிக்கப்பட்டிருக்கிறது. பள்ளித் தரப்பில் ஒருவர்கூட இப்படி வழுக்கி விழவில்லை.

இதில் முக்கியமான ஒன்று என்னவென்றால், அந்தப் பள்ளி நிர்வாகம், தனது சேதங்களுக்கு காப்பீட்டு நிறுவனங்கள் மூலம், நஷ்ட ஈடைப் பெற்றுவிடும். ஆனால் மாணவி தரப்புக்கும், போராடிய தரப்புக்கும் எந்த நிவாரணமும் கிடைக்கப் போவது இல்லை. ஒட்டுமொத்த தமிழக மக்களும் பள்ளி நிர்வாகத்தைக் கண்டிக்கிறபோதும், இங்குள்ள அரசால், காவல்துறையை நடுநிலையோடு அங்கே இயக்கமுடியவில்லை. காரணம் ஆர்.எஸ்.எஸ். அங்கே அவர்களையும் ஆட்டிவைக்கிறது என்பதையே உணரமுடிகிறது.

இவை எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். மாணவி ஸ்ரீமதிக்கு என்ன நடந்தது? அவர் உண்மையிலேயே தற்கொலைதான் செய்துகொண்டாரா? எல்லோருக் கும் எழும் சந்தேகங்களை மட்டும் பார்ப்போம்.

srimathi

மாணவி மரண விவகாரத்தில் எழும் சந்தேகங்கள்:

*பள்ளி மாடியிலிருந்து மாணவி கீழே விழுந்து கிடந்ததை, வாட்ச்மேன் பார்த்து தகவல் சொன்னார் என்கிறது நிர்வாகம். அவரை எவர் கண்ணிலும் பள்ளி நிர்வாகம் காட்டவில்லை. அந்த மாணவியின் வகுப்புத் தோழிகளிடம் விசாரிக்க முடியாதபடி, அவர்களும் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறார் கள். பள்ளியின் எந்த ஆசிரியரும், ஊழியரும்கூட ஊடகங்களிடம் தென்படவில்லை. அங்கே எல்லாமே "அப்பல்லோ மர்மம்' போலவே இருக்கிறது.

*அது ஒரு எதிர்பாராத தற்கொலை என்றாலோ விபத்து என்றாலோ, ஏன் பள்ளி நிர்வாகம் 108 ஆம்புலன்ஸை அழைக்கவில்லை? காய்கறி வாங்கப் பயன்படுத்தும் பாடாவதி யான ஆம்னி வேனில், மாணவி யின் உடலை யாருக்கும் தெரியா மல் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றது ஏன்?

*அந்த ஆம்னி வேன், குற்றத் திற்கான சாட்சியம் என்பதால், கலவரத்தின் சாக்கில் அதைப் பள்ளி ஏற்பாடு செய்திருந்த ரவுடிகளே எரித்துவிட்டார்கள் என்கிறது கள நிலவரம். இது எவ்வளவு பெரிய தடய அழிப்பு?

* நம் நக்கீரன் தலைமை நிருபர் தம்பி பிரகாஷ், அவருக்குத் துணையாக ஆன்லைன் வீடியோ கேமரா தம்பி நவீன், கேமரா தம்பி அஜீத் மூவரும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையின் மார்ச் சுவரியில் இருக்கும் பெண் ஊழியரின் உரையாடல் மூலம் சில முக்கியமான தகவல்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்திருக்கிறார்கள். அதில் பேசும் அந்தப் பெண் ஊழியர், “அதிகாலை மூன்றரை நான்கரை மணி யளவிலேயே இரண்டுபேர் தூக்கிவந்து ரத்தத்தில் நனைந் திருந்த மாணவியின் உடலை மருத்துவமனையில் போட்டுவிட்டுப் போனார்கள். அப்போது அந்த மாணவியின் கீழாடையில் இருந்த நாடா, பின்பக்கமாகக் கட்டப்பட்டு இருந்தது’ என்று தெரிவித்திருக்கிறார். யாராவது உடையின் நாடாவை பின்பக்கம் கட்டுவார்களா? மேலும் அவர், "அந்த மாணவியை நாசம் செய்துவிட்டுத் தான் அந்தப் பாவிகள் கொண்டுவந்து போட்டி ருக்கிறார்கள்' என்று, மாணவி இருந்த நிலையை உணர்த்தி யிருக்கிறார்.

* அதேபோல், ஸ்ரீமதியை மருத்துவமனையில் பரிசோதித்த அன்றைய டூட்டி டாக்டர், "இறந்து நாலஞ்சு மணி நேரம் ஆகியிருக்கும் போலிருக்கே? இவ்வளவு தாமதமாகவா எடுத்துவருவது?' என்று கேட்டிருக்கிறார். அப்படி என்றால், நான்கரை மணி வாக்கில் மருத்துவமனைக்கு ஸ்ரீமதி யைக் கொண்டு சென்றிருக்கிறார் கள் என்பது தெரிகிறது. அதற்கும் நான்கைந்து மணி நேரத்திற்கு முன்னதாக இறப்பு நேர்ந்திருக் கிறது என்பது டாக்டரின் கூற் றால் நிரூபணமாகிறது. அப்படி யானால் நள்ளிரவு 12- 1 மணி அளவில் ஸ்ரீமதி, மரணத்துக்கு உள்ளாகியிருக்கிறார் என்பது உறுதியாகிறது.

* இதேபோல், போஸ்ட் மார்ட்ட அறிக்கை, முந்தைய நாள் இரவு 8 மணிக்கு மாணவி சாப்பிட்ட உணவு செரிக்காமல் வயிற்றில் இருந்தது என்கிறது. உணவு செரிக்க குறைந்தபட்சம் 4 மணி நேரம் ஆகும் என்கிறார்கள். ஆக இரவு 12 மணிக்குள் அவள் மரணம் நிகழ்ந்திருக்கவேண்டும் என்பது தெரிகிறது. இது மருத்துவமனை டாக்டர் சொன்ன நேரத்தோடு பொருந்துகிறது. இந்த நேரக் கணக்கிலேயே, பள்ளி நிர்வாகத்திடம் நேர்மை இல்லை.

* ஆக அந்த நள்ளிரவு நேரத்தில் மாடியிலிருந்து மாணவி குதித்திருந்தால், அவரின் அலறல் சத்தம் விடுதி மாணவர்கள் உட்பட எவருக்கும் கேட்காதது எப்படி?

* அதேபோல் மாணவி கீழே விழுந்ததாகச் சொல்லப்பட்ட இடத்தில் கொஞ்சம் கூட ரத்தக்கறை இல்லை என்கிறார்கள். அந்த ரத்தக்கறையை அந்த மாணவியே விடிவதற்குள் சுத்தப்படுத்திவிட்டு, அதன் பின் உயிரிழந்தாரா?

* அதேநேரம், பள்ளியின் சுவர்ப் பகுதி ஒன்றில், ரத்தம் தோய்ந்த மாணவியின் உள்ளங்கை அச்சு, விரிந்த நிலையில் பதிந்திருக்கிறது. இது எப்படி? கீழே விழுந்த மாணவி, எழுந்துபோய், தன் நினைவாக கை அச்சை சுவரில் பதித்துவிட்டு வந்து, கீழே படுத்துக்கொண்டாரா?

*ஸ்ரீமதி நன்றாகப் படிக்கும் மாணவி. 90 சத மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்தவர். எனவே படிப்புக்காக அவர் தற்கொலை செய்துகொள்ளவில்லை என்பது உறுதியாகிறது. மாணவி எழுதியது என்று பள்ளி நிர்வாகம் காட்டிய தற்கொலைக் கடிதத்தில் இருப்பது, அந்த மாணவியின் கையெழுத்தே இல்லை என்கிறார் அவர் அம்மா. அப்படியானால் தற்கொலை கடிதத்தை டிக்டேட் செய்து, தனது சக மாணவர்கள் மூலமோ ஆசிரியர்கள் மூலமோ, மாணவி எழுதினாரா?

srimathi

*போஸ்ட்மார்ட்ட அறிக்கை, மாணவியின் உடலின் பல பகுதிகளிலும் காயங்கள் இருந்ததைச் சுட்டிக்காட்டுகிறது. குறிப்பாக அவரது வலது மார்பில் ’லவ் பைட்’ எனப்படும், பாலியல் மூர்க்கத்தால் உருவாகும் காயம் இருந்ததாக அதில் சொல்லப்பட்டிருக்கிறதே இது எப்படி?

*போஸ்ட்மார்ட்டத்தின்போது, வழக்கமாக சந்தேக மரணம் அடையும் பெண்கள் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டார்களா? என்பதை ஸ்வாப் டெஸ்ட் மூலம் உறுதி செய்வார்கள். அது இந்த மாணவிக்கு நடத்தப்படவில்லை? உண்மை தெரிந்துவிடும் என்பதாலா? அதிலும் தகுதியற்ற டியூட்டர்கள் மூலம் ஏன் போஸ்ட்மார்ட்டத்தைச் செய்தார்கள்? பதிலில்லை.

*இறந்த உடலை மார்ச்சுவரிக்குக் கொண்டுபோனால், அந்த உடலில் இருந்த நகைகளைக் கழற்றி, உறவினர்களிடமோ, போலீசிடமோ ஒப்படைப்பார்கள். ஆனால் ஸ்ரீமதி அணிந்திருந்த கம்மல், கழுத்துச் செயின், கொலுசு ஆகியவை என்ன ஆனது என்று தெரியவில்லை. யார் வாங்கியது என்று தெரிவிக்கப்படவில்லை.

*பள்ளித் தரப்பைச் சேர்ந்த ஆசிரியை மாலினி என்பவரிடம் நக்கீரன் தம்பி பிரகாஷ் பேசியபோது, இரவு 10 மணிக்கெல்லாம் பள்ளியையும் மாடியையும் பூட்டிவிடுவோம் என்று சொன்னார்.

அப்படி என்றால் நள்ளிரவில் மாடிக்குப் போக ஸ்ரீமதிக்கு சாவி எப்படி கிடைத்தது? யார் அவருக்குத் திறந்துவிட்டது?

*சமூகநல ஆர்வலரும் கல்பாக்கம் மருத்துவருமான புகழேந்தி, மாணவியின் ஒரு பக்க விலா எலும்புகள் முழுதும், வரிசையாக நேர்கோட்டில் உடைந்திருக்கிறது என்றும், கீழே விழுந்தால் தாறுமாறாகத் தான் எலும்பு உடையும் என்றும், கீழே விழுபவர்களுக்கு கைகால் எலும்புகளும் உடைந்திருக்கும் என்றும் சந்தேகம் கிளப்புகிறார். இந்த சந்தேகங்களை எல்லாம் யார் போக்குவது?

-இப்படி முழுக்க முழுக்க சந்தேகங்களே அணிவகுக்கின்றன. இதையெல்லாம் நீதித்துறை கவனத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும்.

*அந்தப் பள்ளி, அனுமதி இல்லாமலே மாணவர் விடுதியை நடத்தி வந்திருக்கிறது. இது குறித்துக்கூட காவல்துறை அவர்களிடம் கேள்வி எழுப்பவில்லை.

* 12-ஆம் தேதி இரவு பள்ளியில் பிறந்தநாள் பார்ட்டி நடந்தது என்றும், அப்போது மதுவிருந்து நடந்தது என்றும், இதில் ஸ்ரீமதியைப் பங்கேற்கவைத்து போதைமருந்து கொடுத்திருப்பார்கள் என்றும் ஊர்மக்கள் சந்தேகித்தது பற்றி நாம் ஏற்கனவே பதிவுசெய்திருக்கிறோம்.

இப்போதுதான், தற்கொலைக்குத் தூண்டல், மாணவிக்கு போதைமருந்து கொடுத்தல் என்னும் இரண்டு கூடுதல் குற்றச்சாட்டை, காவல்துறை பதிவுசெய்திருக்கிறது. இதைக்கண்டு பிடிக்க காவல்துறைக்கு 2 வாரம் ஆகியிருக்கிறது.

* ஸ்ரீமதி இறந்த நேரத்தில், பள்ளி வளாகத்தில், ரவிக்குமாரின் மகன் சக்தியும் தம்பி சரணும் இருந்தார் என்கிறார்கள் ஊர்மக்கள். அவர்கள் அப்போதே தலைமறைவாய் ஆகிவிட்டார்கள். மக்கள் எழுப்பிய சந்தேகத்தின் அடிப்படையில்கூட இவர்களைத் தேடிப்பிடித்து விசாரிக்க காவல்துறை முன்வரவில்லை.

*கலவரம் நடந்த அன்று, பள்ளிக்குள் ஒரு சொகுசுப் படுக்கை அறை இருப்பதையும் அங்கே ஆணுறைகள் இருந்ததை யும் பார்த்ததாக பலரும் படத் தோடு செய்தியை வெளியிட்ட னர். இது குறித்தும் விசாரிக்கப் படவில்லை.

* இந்த நிலையில், பள்ளிக்காக எல்லோரையும் "சமாளித்து' வருகிற ரவிக்குமாரின் சமூகத்தைச் சேர்ந்த மோகன் என்பவரை, தம்பி பிரகாஷ் விசாரிக்கச் சென்ற போது, சரி, "என்னவோ நடந்துடுச்சி... என்றபடி, சிலரை அழைத்து, "நிருபருக்கு பணம் கொடுத்தனுப்பு. அதிலும் 10 கொடு' என்றிருக்கிறார் மோகன். அதாவது நம் நிருபருக்கே 10 லட்ச ரூபாய் கொடுக்கச் சொல்லியிருக்கிறார் அந்த நபர். நம் நிருபர் தம்பியோ, வேகமாக எழுந்துவந்திருக்கிறார். பணத்தால் எல்லாவற்றையும் வாங்கிவிடலாம் என்ற நினைப்பு அவர்களுக்கு.

உண்மையான நிரந்தரமான இழப்பு யாருக்கு? பள்ளி நிர்வாகமோ, கலவர சேத மதிப்பை ஒன்றுக்கு நான்காகக் காட்டி, அதற்கான இன்சூரன்ஸ் பணத்தை வாங்கிவிடும். ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, கைகால் உடைக்கப்பட்டவர்களுக்கு, எந்த நிவாரணமும், நியாயமும் கிடைக்காது. இதுதான் சுடுகிற நிஜம்.

*மாணவி ஸ்ரீமதிக்கு நேர்ந்த கொடூரத்தைத் தற்கொலை என்று மழுப்பலாகச் சொல்கிறது பள்ளி நிர்வாகம். காவல்துறையோ பள்ளி நிர்வாகத்தில் பலவீனமான குரலை, அழுத்தமாகப் பதிவுசெய்யப் படாதபாடு படுகிறது.

* மிரட்டும் பள்ளிகள்

ஸ்ரீமதி விவகாரத்தில் நீதிக்கான போராட்டம் பலமாக நடப்பதைப் பார்த்து திகைத்துப்போன தனியார் பள்ளிகள், அடுத்து பாதுகாப்பாக எப்படி தப்பு செய்யலாம் என்று யோசிக்க ஆரம்பித்து விட்டன. அதற்கு ஒரு உதாரணம், கோவை ஜி.ஆர்.டி. பப்ளிக் ஸ்கூல், இப்போது பெற்றோர் களிடம் ஒரு விண்ணப்பத்தில் கையெழுத்து வாங்கி பயமுறுத்துகின்றன. அதாவது பள்ளி வளாகத்திற்குள் மாணவர்களுக்கு எந்த இழப்பு ஏற்பட்டாலும், அதற்கு பள்ளி பொறுப்பல்ல என்று பெற்றோரே பொறுப்பேற்கும் வகையிலான "இண்டமினிட்டி' (ஒய்க்ங்ம்ய்ண்ற்ஹ்) விண்ணப் பம் அது.

அந்த விண்ணப்பத்தில், “உங்களுடைய பள்ளி வளாகத்தில் எங்கள் பிள்ளைகளின் ஒரு பொருள் தொலைந்தாலோ, சேதமடைந்தாலோ, அவர்கள் காயமடைந்தாலோ, அல்லது உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் அவர்களுக்கு காயம் ஏற்பட்டாலோ, அதற்காக பள்ளி நிர்வாகத்திடம் நானோ, என்னைச் சார்ந்தவர்களோ எந்தவித உரிமை கோரலையும் செய்யமாட்டோம் என்று உறுதியளிக்கிறோம்.- இப்படி எழுதப்பட்டிருக்கிறது.

இப்படி ஒரு ஒப்பந்தமா? என்று அந்தப் பள்ளி நிர்வாகத்திடமே கேட்டபோது, "ஆமாம் கையெழுத்து வாங்குகிறோம். இதற்காக நிர்பந்தம் செய்வதில்லை' என்கிறார்கள். இது எவ்வளவு பெரிய கொடுமை.

பள்ளிக்கூடத்தில் மாணவி இறந்தாலும், தாக்கப்பட்டாலும், பாலியல் சித்திரவதைக்கு ஆளானாலும், கொல்லப்பட்டாலும் அது குறித்துக் கேள்வி எழுப்பக்கூடாது என்கிறது பள்ளிக்கூடம். எவ்வளவு திமிர்? இவர்களுக்கு இந்தத் துணிச்சல் எப்படி வந்தது?

எந்த நிலையிலும் உதவிக்கரம் நீட்ட, காவல்துறையும் அதிகாரவர்க்கமும் இருக்கிறது என்ற தைரியம், இந்த கள்ளக்குறிச்சி விவகாரத்தால் தனியார் பள்ளிகளுக்கு வந்திருக் கிறது.

உடனடியாக அந்த கொலைகாரப்பள்ளியை அரசு இழுத்து மூடவேண்டும். இப்போது அங்கே படித்துக்கொண்டிருக்கும் மாணவர்கள் 3.500 பேரின் எதிர்காலம் என்ன ஆவது என்கிறார் கள் சிலர். கொரோனா காலத்தில் இரண்டு வருட மாக பள்ளிகள் மூடப்பட்டபோது, இவர்கள் கவலைப் பட்டார்களா? இந்த சம்பவம் ஒரு அரசுப்பள்ளியில் நடந்திருந்தால், தலைமை ஆசிரியர் முதல் அனைவரையும் சஸ்பெண்ட் செய்திருப்பார் கள். இழுத்து மூடி சீல் வைத்திருப்பார்கள். அதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்படா விட்டால், அரசும் மக்களும் இதுபோன்ற கொடுமைகளை அடிக்கடிப் பார்க்கவேண்டி இருக்கும்.

-ஆதங்கத்தோடும் கவலையோடும்,

நக்கீரன்கோபால்