நேர்காணல் : வீரசோழன் க.சோ.திருமாவளவன்
சோ.தருமன்-
தனது அப்பட்டமான அதிரடி எழுத்துகளால் தமிழிலக்கியத்தைத் திரும்பிப் பார்க்க வைத்தவர். விவசாயம் சார்ந்த குடும்பத்தில் இருந்து வந்த இவர் கரிசல் இலக்கியத்தின் மூலம் தனது தனித் துவமான படைப்புகளால் எழுந்து நிற்கிறார். இவரது சிறுகதைகளும், புதினங்களும் அடித்தட்டு மக்களுக் காக, அவர்களையே பேசுகின்றன. சமூக நீதிக்கான குரலாக, ஒடுக்கப்பட்டவர்களின் நீதிக்கான வாதடலாக இவரது எழுத்துகள் இயங்கிவருவது பெருமைக்குரியது. பல்வேறு விருதுகளால் சிறப்பிக்கப்பட்ட தருமனின் ’சூல்’ நாவல், சாகித்ய அகாடமி விருது பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. பொன்னுத்தாய், சோலை யப்பன் ஆகியோரின் திருப்புதல்வராக தூத்துக்குடி மாவட்டம் உருளைகுடி எனும் சிற்றூரில் 1953 ஆகஸ்ட் 8-ல் பிறந்த தருமன், இலக்கோடும் பொறுப் புணர்வோடும் எழுதிவருகிறார். அதனால் அவர் எழுத்துக்களில் மனிதம் நிரம்பிவழிகிறது. அவரை நம் இனிய உதயத்துக்காக சந்தித்தபோது...
* விவசாயக் குடும்பத்தில் பிறந்த நீங்கள், எப்படி இலக்கிய விவசாயியாக மாறினீர்கள்?
நல்ல கேள்வி. நான் தூத்துக்குடி மாவட்டம் கோயில்பட்டி அருகே இருக்கும் ஒரு குக்கிராமத்தில் பிறந்தவன். எங்கள் கிராமமே விவசாயத்தை நம்பியிருக் கும் கிராமம். நான் இப்போதும் ஒரு விவசாயிதான். எங்கள் குடும்பத்தின் வேர் என்றால் அது விவசாயம் தான். எங்களுடைய பாட்டன், தாத்தா, அப்பா, நான் என எல்லோருக்குமே ஆதாரமாக இருந்ததும், இருப்பதும், அதுதான். எனக்கும் 10 ஏக்கர் கரிசல் காடு உள்ளது. அந்ததக் காலத்தில் கிராமங்களில் எந்தவித பொழுதுபோக்கு அம்சங்களும் இருக்காது. அப்போது நாட்டுப்புறக் கூத்துக்கள் மட்டும்தான் இருந்துச்சு. நான்கு அல்லது ஐந்து கிலோ மீட்டர் தள்ளி உள்ள ஊர்களில் ஏதேனும் கூத்து என்று கேள்விப்பட்டால், எங்கள் கிராம மக்கள் அதைப் பார்க்கக் கிளம்பிப் போய் விடுவார்கள். கூத்து பார்த்து விட்டு நடுச்சாமத் தில்தான் எங்கள் கிராமத்திற்கு திரும்புவார்கள். இதில் எங்க அய்யாவும் ஒரு நாட்டுப்புற கலைஞர் என்பதால், அதையெல்லாம் பார்த்து ரசிக்கும் வாய்ப்பு எனக்கு என் 13 வயசு வரை கிடைச்சிது. .
அதுக்குப் பிறகு எனக்கு மனசில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டது. அதை நிரப்புறதுக்குதான் நான் வாசிக்க ஆரம்பிச்சேன். பள்ளிக்கூடத்தைக் கட் அடிச்சிட்டு நான் லைப்ரரிக்குப் போய்டுவேன். இப்படித்தான் வாசிக்கும் பழக்கம் வந்துது. என் தாய் மாமாவான எழுத்தாளர் பூமணியின் வீட்டுக்கு அதிகமா போவேன்.
அங்கு நிறைய புத்தகங்கள் இருக்கும். நான் பார்காத, தெரிந்திடாத புத்தகங்களெல்லாம் அங்கு இருக்கும். அதை எல்லாம் எடுத்து வந்து வாசிப்பேன். அந்தப் புத்தகங்கள்தான் என்னை செதுக்குச்சு. அந்த தீராத வாசிப்புதான் என்னை எழுத்துத் துறைக்கு கொண்டு வந்துச்சு.
எனக்கு கிடைச்ச வாய்ப்புகளை நான் நல்லா பயன்படுத்திக் கிட்டேன். விவசாயக் குடும்பத்தில் பிறந்த விவசாயியான நானும், எழுத்து விவசாயி ஆகிவிட்டேன்.
* உங்கள் தந்தையார் நாட்டுப் புறக் கூத்தில் நடிப்பார் என்று சொன்னீர்களே?
ஆமாம். என் தந்தை பிரபலமான கூத்துக் கலைஞர். கும்மிக்கூத்துக் கலைஞரா அவர் இருந்தார். ராமாயணக் கூத்தெல்லாம் அப்ப நிறைய நடக்கும். எங்க அய்யாதான் அதில் ஹீரோ. ராமர் வேசம் கட்டி ஆடுவார். அப்ப ராமர், சீதை, லட்சுமணன், மாரீசன், பரசு ராமன் வேசமெல்லாம் கட்டிக்கிட்டு கூத்துக் கலைஞர்கள் எல்லோரும் ஆடிப் பாடி நடிப்பாங்க. அதை எல்லாம் ரசிச்சிப் பார்ப்பேன். ஒரு கட்டத்தோடு, இதெல்லாம் முடிஞ்சிப்போயிடுச்சி. அதுல எனக்குப் பெரும் வருத்தம். ஆனாலும் நான் வாசிக்கும் பழக்கத்தால் எழுத்தாளர் ஆயிட்டேன். என் மாமா பூமணி எழுத்தாளராக இருந்ததும், எங்களுக்கு அருகிலேயே கி.ரா இருந்ததும், எனக்குக் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம். சிறுகதைகள் எழுதுவதற்கு முன் நான் கவிஞனாகவும் இருந்தவன். கணையாழி, தீபம் போன்ற இதழ்களில் எனது கவிதைகள் வந்துள்ளன.
*கவிதையை எதற்காகக் கைவிட்டீர்கள்?
கவிதையில் சொல்வதைவிட சிறுகதையில் நாம் நிறையச் சொல்லலாம் என்று தோன்றியதால், . கவிதைகளை விட்டுவிட்டு, சிறுகதைகள் எழுத வேண்டுமென்ற முடிவுக்கு வந்தேன். உரைநடைக்குள் போனதால் எனக்கு விசாலமான இடம் கிடைத்தது. மதுரையிலிருந்து வெளியான ""மகாநதி"" எனும் பத்திரிகையை கவிஞர் பரிணாமன் மற்றும் மதுரை காமராசர் பல்கலைகழகத்தின் தமிழ்த்துறை பேராசிரியராக இருந்த தி.சு. நடராஜன் இருவரும் நடத்தினார்கள். அந்தப் பத்திரிகையின் ஆசிரியராக கவிஞர் பரிணாமன் இருந்தார். என் முதல் சிறுகதை 1980 ஆம் ஆண்டில் நான் எழுதிய சிறுகதையான ’விறுவு’ மகாநதியில் வெளியானது. அதன் பின் நான் கவிதை எழுத விரும்பவில்லை. சிறுகதைகள் எழுத ஆரம்பித்துவிட்டேன்.
* உங்கள் சூல் நாவல் சாகித்ய விருது பெற்றது. அந்த நாவலை எழுத வேண்டுமென்ற எண்ணம் எப்படி வந்தது?
ரஷ்யாவில் புரட்சி ஆரம்பமாகி, கூட்டுப்பண்ணை உருவாகிய சமயத்தில் ஒரு சம்பவம் அங்கே நிகழ்ந்தது. விவசாயிகளின் கூட்டுப்பண்ணைக்கு அரசு சார்பில் விதைகள் அனுப்பப்பட்டன. பின்னர் மேலே இருந்து ஒரு உத்தரவும் வந்தது... எல்லா வேலை யையும் குறிப்பிட்ட காலத்திற் குள் முடிக்க வேண்டும் என்று சொன்னது. இங்கு விவசாயம் பார்க்கிறவர்களை சம்சாரி என்று அழைக்கிறோம். சோவியத்தில் ’மொழிக்’ என்று பெயர். இந்த நாளில் மழை ஆரம்பிக்குமென்று அங்கிருக்கும் விஞ்ஞானிகள் கணித்துக் கொடுத்திருக்கிறார்கள். அதன் அடிப்படையில்தான் அங்கே விவசாயமே நடக்கிறது. அப்போது அந்த அரசின் உத்தரவில், விதையை நான்கு அடி அங்கூலத்துக்கு ஊன்ற வேண்டும் என்றும், இதை மீறுபவர்கள் சோவியத் யூனியன் சட்டப்படி தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்றும் கூட்டுப் பண்ணை விவசாயிகளிடம் சொன்னது. அதன்படி விவசாயிகள் எல்லா வேலையையும் முடிக்கிறார்கள். அதிகாரிகள் கிளாடர் விமானத்தில் அந்தக் கூட்டுப்பண்ணையைச் சுற்றிப் பார்க்கும்போது, விதைக்கப்பட்ட நிலம் எங்கேயும் ஒரு பயிர் கூட முளைக்கவில்லை. அந்த நிலம் முழுவதும் வெட்ட வெளியாகக் கிடந்தது. அதிகாரிகள் திகைத்துப் போனார்கள். அதே நேரம், ஒரே ஒரு விவசாயிக்கு ஒதுக்கப்பட்ட நிலம் மட்டும் பச்சைப் பசேலென வளர்ந்திருக்கிறது. மேலிருந்து கிளாடர் விமானம் நேராக அந்த விவசாயி நிலத்தை நோக்கி இறங்குகிறது. அங்கு இறங்கியதும் அந்த ’மொழிக்’ கூட்டி வர ஆணை பிறப்பிக்கிறார்கள். மொழிக் வந்து நிற்கிறார். உங்களது நிலத்தில் ஊன்றப்பட்டது மட்டும் வளமாக வளர்ந்திருக்குதே.. அது எப்படி எனக் கேட்கிறார் அதிகாரி. ஐயா தாங்கள் கொடுத்த அறிவிப்பு எனக்கும் வந்தது. எல்லாம் சரிதான் ஐயா. மழை அறிவிப்பு கொடுத்து இருந்தீர்களே அதில் மட்டும் எனக்கு சிறிது சந்தேகம் இருந்தது. நான் பரம்பரை விவசாயி. எங்கள் பாட்டன் காலத்திருந்து நாங்கள் வேலை பார்ப்பவர்கள். இயற்கையின் அறிகுறிகள் வைத்து மழை தொடங்குவதைக் கணிப்போம். உங்கள் அறிவிப்பின்படி, அந்த நாளில் மழை தொடங்குவதற்கான வாய்ப்பேயில்லை. ஒரு பத்து நாள் தாமத மாகவே மழை பெய்யும் என்பதை முன் கூட்டியே கணித்திருந்தேன். அந்த நம்பிக்கையில், விதை போட்ட நான், 7 அங்குலம் ஆழம் வைத்தேன். காரணம் அதில் ஈரப்பதம் வேண்டும், மேலும் ஈரப்பதம் இருந்தால் வளர்வதற்கு சரியாக இருக்கும் என 3 அங்குலம் கூடுதலாக வைத்தேன். என்னுடைய கணிப்புப் படி மழை பத்து நாட்கள் பிந்தியது. அதனால் எனது நிலத்தில் முளைத்தது. மற்றவர்கள் நிலத்தில் முளைக்கவில்லை என்று அந்த விவசாயி சொல்ல, மேலும் திகைத்து போனார்கள் அதிகாரிகள். இது சோவியத் யூனியன் விவசாயிகளுக்கு மட்டும் என்று கிடையாது. இது போன்று வாழ்வின் அனுபவங்கள், விவசாய நுணுக்கங்கள் கொண்டவர் களை அரசாங்கம் பயன்படுத்தியதே கிடையாது. அவர்களின் இந்த நுண்ணறிவை காட்ட வேண்டும் என்பதற்காகவே சூல் நாவல் எழுத ஆரம்பித்தேன்.
*இதன் மூலம் என்ன சொல்ல நினைத்தீர்கள்?
விவசாய நிலம் தரிசு நிலமாகக் காரணம், நகரக் குடியேற்றம். அது நிகழக் காரணம், கண்மாயில் நீர் நிலைகள் அழிந்ததுதான். பிரிட்டிஷ் காலத்தில் விவசாயம் எப்படி இருந்தது?, ஜமீன்தார்கள் காலத்தில் எவ்வாறு இருந்தது? ராஜாக்கள் காலத்தில் எப்படி இருந்தது? என்றெல்லாம் கேள்வி எழுப்பி, இப்போது நீர்நிலைகள் அழிந்து வரக் காரணம் என்ன? என்றும் யோசித்தேன். இப்படி விவசாயம் சம்பந்தமான எல்லாவற்றையும் பேசும்படியாகத்தான் சூல் நாவலை நான் எழுதினேன். இந்த நாவலை எழுதுவதற்கு நான் பத்து ஆண்டுகள் எடுத்துள் ளேன். 2005 லிருந்து 2015 வரை நான் நடத்திய ஆய்வுகள் தான் இந்த நூல். இதற்காகப் பல்வேறு ஊர்களுக்குப் பயணித்து, 90 வயது பாட்டிமார்களிடம் சில விபரங்களைத் திரட்டி, அதன் மூலமாய் இந்த நாவலை எழுதினேன்.
*உங்கள் படைப்புகளில் உங்களுக்கு மிகவும் பிடித்த படைப்பு எது?
ஒவ்வொரு படைப்பையும் நான் விரும்பிதான் உருவாக்குகிறேன். இதுவரை நான் நான்கு நாவல்தான் எழுதியிருக்கேன். அது ஒவ்வொன்னும் ஒவ்வொன் னைப் பேசுது. ஆனாலும் ’கூகை’ நாவல்தான் மத்ததை விட என் மனதிற்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகி விட்டது. என்னுடைய சூல் நாவல் சாகித்ய அகடமி விருதை வாங்கினாலும், எனக்கு அதிகம் பிடிச்சது என் கூகைதான். அந்த நாவல்தான் என்னுடைய மாஸ்டர் பீஸ் என்றும் சொல்லலாம். கூகை நாவலில், வேறொரு மொழி நடையை சோதனை முயற்சியாகப் பயன்படுத்தினேன். அது மலையாளம் மற்றும் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது.
* கூகை நாவலில் உங்களைப் பாதித்த பகுதி அல்லது கதாபாத்திரம் பற்றிச் சொல்ல முடியுமா?
ஆண்டாளம்மா என்ற ஒரு கதாபாத்திரம் வரும். அவர் ஒரு திருநங்கை. அப்படிப்பட்டவர்களுக்கு வாழ்க்கை கிடையாது. அதனால் அவர்களது அண்ணன் வீட்டில் இருப்பார். கடைசி காலத்தில் அவர்களுக்கு பைத்தியநிலை ஏற்பட்டுவிடும். அதை ஒரு புனைவாகவும், கலையாகவும் செதுக்கி இருப்பேன். இப்போ தும் அதை மீண்டும் மீண்டும் நான் எடுத்துப் படிப்பேன். அவர் பற்றிய பகுதி, என்னை மிகவும் பாதித்தது.
*.கிராமத்துச் சொல வடைகள் உங்கள் படைப்புகளில் முக்கியமான அங்கம் வகிக்கிறது. அவையெல்லாம் இன்று அகன்றுவிட்டன. இதை எப்படிக் கருதுகிறீர்கள்?
இப்போது எல்லோருடைய வாழ்வையும் ஊடகங்கள் கையில் எடுத்துக்கொண்டு விட்டன. இப்போது கிராமத்து சொலவடைகள் மறைந்து, செந்தில், கவுண்டமணி, வடிவேல் சொல்லும் நகைச் சுவைகள் ஆளத் தொடங்கி விட்டன. கிராமத்துச் சொல வடைகள் வாழ்வியல் மாற்றங் கள் ஏற்படும் போது மாறத் தான் செய்யும் என்றாலும், விவசாயம் சம்மந்தப்பட்ட அத்தனை பழமொழியும் அழிந்து போய்விடும். இப்போதுள்ள தலைமுறைக்கு பழமொழி என்றால் என்னவென்றே தெரியாது. அது மிகப்பெரும் இழப்பு. நம்முடைய மூதாதையர்கள் அவ்வளவு நுணுக்கமாக பழமொழியை கட்டமைத்து அதன் மூலம் வாழ்வியல் உண்மைகளைச் சொல்லி இருக்கிறார்கள்.
* நேரில் சந்தித்த, பாதித்த சம்பவங்களைக் கதையாக்கிய அனுபவங்கள் பற்றிச் சொல்லுங்கள்?
நான் முன்பு ஒரு பட்டாசு தொழிற்சாலையில் வேலை பார்த்தேன். அப்போது ஏற்பட்ட வெடி விபத்தில் உயிர் தப்பியவன் நான். பக்கத்து அறையில் என்னுடன் வேலை பார்த்த 13 பேர் அதில் இறந்து போனார்கள். ஆதலால் அந்த பாதிப்பை, அந்த உணர்வை என்னால் ""நசுக்கம்"" எனும் சிறுகதையாக எழுத முடிந்தது. அது ஆங்கிலத்திலும் வெளி வந்தது. இந்தியில் ""பிதாய்"" எனும் பெயரில் சிறுகதை வெளிவந்தது. மலையாளத்தில் ""கரீம் திங்கள்"" எனும் தலைப்பில் மலையாள மனோராமா வில் வெளிவந்தது. அந்தச் சிறுகதை எல்லா மொழி களுக்கும் சென்று சேர்ந்தது. அது எல்லா மொழி களிலும் பேசப்பட்ட சிறுகதை அது.
* உங்கள் ஆதர்ச எழுத்தாளர் கி.ரா.பற்றி...?
என் தேடலுக்கான விதை விழுந்தபோது அதைத் தாங்கும் சக்தியாக, பூமியாக இருந்தவர் அவர் தான். அன்றைய காலகட்டத்தில் எனக்கு வேலை எதுவும் கிடையாது. 1972 - 76 காலகட்டங்களில் என்னோடு பெரும் பட்டாளமே உருவாகி விட்டது. எங்களுக்கு புத்தகம் வாங்குவதற்குக் கூட காசு கிடையாது. கி.ரா இடைச் செவலில் இருந்தார். எங்களுக்கு புத்தகம் கொடுத்து ஆதரித்தது கி.ரா.வும் அவரது மனைவி கணபதி அம்மாவும்தான். தென்மாவட்ட எழுத்தாளர் களை 3 பேர் உருவாக்கினார்கள் என்று சொல்லலாம். சுந்தர ராமசாமி, தி.க.சி, கி.ரா, இவர்கள் தான் அவர்கள். இந்த மூவர் வீட்டிற்கும் எப்போதும் போகலாம். என் படைப்பு அல்லது கதை பற்றி படித்து கி.ரா எனக்கு கடிதம் எழுது வார். கதை அற்புதமா இருந்தது. கடைசியாக முடிக்கையில் இப்படி எழுதலாமே, கொஞ்சம் யோசித்துப் பாருங்கோ என்று தனது அபிப்பிராயத் தையும் சொல்லி நம் எழுத்தை மெருகேற்றுவார். அவரைப் போல் தட்டிக்கொடுத்து இளம் எழுத்தாளர்களை உருவாக்கிய ஆளுமைகள் இப்போது அரிது. மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மாண்புமிகு நீதியரசர் ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்களால், உங்கள் முகநூல் பதிவு தீர்ப்பில் சுட்டிக்காட்டப் பட்டிருக்கிறதே?
உண்மைதான். நான் காலையில் 6 மணிக்கு எழுத ஆரம்பித்தால், 2 மணி வரை அலுவலக வேலை போன்று அந்த வேலையைச் செய்பவன். மதியம் 3 மணிக்கு மேல் தூண்டில் போடச் சென்று விடுவேன். ஏழு மணி வரை குளத்தங்கரையிலே இருப்பேன். 6 குளங்கள் உள்ளன. எல்லாக் குளங்களிலும் மீன் பிடிக்க எனக்கு அனுமதி உண்டு. குத்தகைக்கே எடுத்திருந்தாலும் எனக்கு மட்டும் எப்போதும் அனுமதி உண்டு. அப்படி ஒரு நாள் தூண்டில் போட்டுக் கொண்டிருக்கையில், ஒரு ஆள் என்னிடம் வந்து பவ்வியமாகக் கும்பிட்டார். பின் நாங்கள் கிடை மாடுகள் மேயக்கக்கூடிய ஆட்கள் கமுதியிலிருந்து வருகிறோம் மேற்கு தொடர்ச்சிமலை வரை சென்று பின் திரும்பி வர மூன்று மாதங்கள் ஆகும். ஐயா என்றவர், மாட்டைத் தண்ணீர் குடிக்க விடலாமா என்று கேட்டார். தாராளமாக விடுங்கள் என்றேன். இல்லை ஐயா நிறைய கண்மாய்களை அரசு குத்தகைக்கு விட்டு விட்டார்கள். மாடு கண்மாயில் தண்ணீர் குடிப்பதற்கு அனுமதி மறுக்கிறார்கள் என்றார். நாய்களை வைத்து மாடுகளை விரட்டுவதும் நடக்கிறது. பறவைகள் மீன் சாப்பிடுகிறது என்று, வெடி வைத்துப் பறவையை விரட்டுகிறார்கள். தேவையில்லாத கழிவுகளை, மீனுக்கு இரை என்கிற பெயரில் ஏராளமாகக் கொட்டுகிறார் கள். மீன் பிடிப்பதற்கு வசதியாக அவர்கள் விருப்பப்படி தண்ணீரை வெளியேற்றுகி றார்கள். என்றெல்லாம் சொன்னார். நான் திடுக்கிட்டுப் போனேன். அந்தக் கண்மாயை யாருக்காக நம் முன்னோர்கள் உருவாக்கி னார்கள்.? ஒரு தனி நபருக்கு விடுவதற்கா? என எனது முகநூலில் பதிவு போட்டேன். இது எந்த வகையில் நியாயம்? என்று கேட்டு 3 உருக்கமான செய்தியைப் பதிவு செய்தேன். சைபீரியாவில் இருந்து ஒரு பறவை தமிழகம் வந்து குளிர்காலத்தை கழித்து விட்டு செல்வதற்காக வருகிறது. நம்மைப் பற்றி அந்தப் பறவை என்ன நினைக்கும்? காக்கை குருவி எங்கள் ஜாதி என்று பாடிய பாரதி வாழ்ந்த மண்ணா இது? வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என்று சொன்ன வள்ளலார் வாழ்ந்த மண்ணா இது? யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று பாடிய கணியன் பூங்குன்றனார் நாடா இது? என உருக்கமாய் முகநூலில் பதிவு செய்திருந்தேன். இது மதுரை உயர் நீதிமன்றக்கிளை மாண்புமிகு நீதியரசர் ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்கள் பார்வையில் பட்டுள்ளது. அதே வேளையில் தேனி கண்மாய் சம்மந்தமாக வழக்கு நீதியரசர் முன் வந்துள்ளது. அந்த வழக்கிற்கு தீர்ப்பு எழுதுகையில் முகநூலில் நான் எழுதிய பதிவையிட்டு தீர்ப்பு வழங்கி உள்ளார்கள். மொத்தம் 11 பக்கங்களைக் கொண்ட தீர்ப்பில் 9 பக்கம் ஆங்கிலம், 2 பக்கம் தமிழ் கொண்டது. அதில், இனிமேல் குத்தகைக்கு வரும் நடைமுறைகளை மாற்றவேண்டும் என்று தன் தீர்ப்பில் அவர் எழுதியிருந்தார். பொதுமக்களுக்கான நுகர்வோர் உரிமையை உத்தரவாதம் செய்த பின்னரே கண்மாய் ஏலம் விடப்பட வேண்டும். ஆடு, மாடுகளைத் தடுக்கக் கூடாது, பறவைகளை விரட்டக் கூடாது, கழிவுகளைக் கொட்டக்கூடாது என்றும், மீறி நடந்தால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்தத் தீர்ப்பில் அழுத்தமாக அவர் எழுதினார். அதில் எனக்கு மிகப்பெரிய பாராட்டு கிடைத்தது. அந்த தீர்ப்பு நகல் எனக்கும் அனுப்பி வைத்திருந்தார்கள். தீர்ப்பிலே நான் முகநூலில் எழுதிய கருத்தை பின்பற்ற வேண்டும் என்று நீதியரசர் குறிப்பிட்டுள்ளார்கள். அது ஆவணமாக மாறிவிட்டதென வழக்கறிஞர்கள் என்னிடம் பேசினார்கள்.
* உங்களுக்குக் கிடைத்த சாகித்ய அகாடமி விருது பற்றி..?
சாகித்ய அகாடமி விருதுத் தேர்வில், இருபத்து மூன்று பேர் இருக்கிறார்கள். முதலில் கிரவுண்ட் லிஸ்ட் என்று ஒன்றை தயார் செய்து எந்த புத்தகத்தையெல்லாம் சேர்க்கலாமென பத்து பேர் கொண்ட குழுவை அமைக்கிறார்கள். அந்த பத்து பேர் சேர்ந்து புத்தகங்களை தேர்வு செய்து இவற்றை விருதுக்கு எடுத்துக் கொள்ளலாம் என பரிந்துரை செய்கிறார்கள். அந்த பத்து பேர் யாரென்று யாருக்குமே தெரியாது. அவர்கள் மூலமாய் பத்து புத்தகங்கள் தேர்வு செய்யப்படுகிறது. அந்த பத்து புத்தகங்கள் பத்து பேருக்கு அனுப்பப்படுகிறது. அந்த பத்து புத்தகங்களில் மூன்று புத்தகங்கள் தேர்வு செய்து கொடுக்க வேண்டும். தேர்வு செய்வதற்கு உண்டான பணத்தொகை அளிக்கப்படும்.
* இன்றைய கவிதை உலகம் பற்றி?
இன்று எல்லாரும் கவிதை எழுதறாங்க. முகநூல் வந்த பிறகு அத்தனை பேரும் கவிஞர்களா ஆயிட் டாங்க. லட்சக்கணக்கில் கவிஞர்கள் இருக்காங்க. கவிதைகள்தான் இல்லை. அவங்களே கவிதை எழுதி, அவங்களே அதை புத்தகமா போட்டுக்கிட்டு, அதுக்கு சினிமாக்கவிஞர்களா பார்த்து வாழ்த்துரை வாங்கிக் கிட்டு, அவங்களே தூக்கிக்கிட்டு கஷ்டப்படறாங்க. உண்மையான கவிதைக்கு எதுக்கு அணிந்துரை? எதுக்காக படைப்பாளன் புத்தகம் போட மெனக் கெடனும்? நான் என் கதையை புத்தகமாக்கனும்ன்னு அலைந்ததில்லை. என் எழுத்து உயிருள்ள எழுத்தா இருந்தா அது தானாப் பொழைச்சிக்கட்டும். இல்லைன்னா அது மண்ணோட மண்ணா மக்கிப் போகட்டும்ன்னு விட்டுடுவேன். அதனால் என்னிடம் கவிதை எழுதிக்கொண்டு வந்து யாராவது காட்டினால், கவிதை எழுதி எல்லாம் இப்ப ஜெயிக்கமுடியாது. அதை எழுத நிறைய பேர் இருக்காங்க. அதனால் உரைநடை எழுதுங்கள், சிறுகதை, நாவல் எழுதுங்கள்ன்னு அன்பாச் சொல்றேன். ஏன்னா நாவல் எழுத ஆளே இல்லை. வருசத்துக்கு நல்ல கனத்தியான நாவல்ன்னா... ஏழெட்டுதான் வருது. அதுல ரெண்டு மூணுதான் தேறுது.
* வளரும் எழுத்தாளர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
இப்படியொரு கேள்வியை என்னிடம் வைக்கிறீங் களே என்ன சொல்றது? நான் சிறந்த எழுத்தாளர். ஆனால் எழுத்தாளர்களை உருவாக்கும் எழுத்தாளன் இல்லை. இன்றைக்கு இப்படித்தான் எல்லோரும் இருக்கிறார் கள். அதுக்கு இன்னும் சில தகுதிகள் வேணும். சு.ரா, கி.ரா, தி.க.சி. போன்றவர்கள்தான் அப்படி இருந்தார்கள். வாழ்ந்தார்கள். இருந்தாலும் சொல்றேன். எழுத்தாளர்கள் முதல்ல வாழ்க்கை அனுபவங் களைத்தான் எழுத நினைக்கனும். வெறும் புனைவுகள் வேலைக்கு ஆகாது. அதேபோல், வாசிப்பு அனுபவங் களை மட்டும் வைத்துக்கொண்டு எழுத்தாளர்கள் வண்டியோட்ட முடியாது. வாழ்வின் அனுபவங் கள் இதயத்தில் சேர்ந்தால்தான் உயிர்ப்பான படைப்பு களைப் படைக்க முடியும். நான் தொழிற்சங்கப் போராட்டங்களில் கலந்துக் கிட்டு பலமுறை சிறைக்குப் போய், அந்த அனுபவத்தை வச்சிதான் அது பற்றிய கதைகளை எழுதினேன். இன்றைக்கு இருக்கும் காவல் நிலையமோ, நீதிமன் றமோ, சிறையோ குற்றவாளிகளைத் திருத்தறதா இல்லை. அவர்களைத் திருத்த, அவர்களைத் தனிமைப் படுத்தக் கூடாது. இதை எல்லாம் நான் உணர்ந்து எழுதி யிருக்கேன். இன்னும் சிறையில் நடக்குற கொடுமை களைப் பற்றி யாரவது முழுசா சொல்லி இருக்காங் களா? சிறைக்குள் சாதீயம் கொடிகட்டி பறப்பது வெளியில் இருப்பவர்களுக்குத் தெரியுமா? கைதிகளை சிறைக்குள் கொண்டு போனவுடன் முதல்ல நீ என்ன ஜாதின்னுதான் கேட்பாங்க? ஜாதி வாரியா கைதிகள் பிரிக்கப்பட்டு தனித்தனியா அங்கே வைக்கிறாங்க. ஒருத்தனை மாத்தி அனுப்பினால்... அவன் உயிருக்கே ஆபத்து. அதுமட்டுமல்ல, அங்கே சிறைக்கொட்டடி யில் ஜாதித் தலைவர்களின் படங்கள் பெருசு பெருசா ஒட்டியிருக்காங்க. இதெல்லாம் வெளியே எத்தனை பேருக்குத் தெரியும்? இதெல்லாம் அங்க போனாத் தான் தெரியும். அதேபோல் இன்னைக்கு மதவாதம்ன்னு பலரும் பேசுறாங்களே, எவராவது அது பற்றிய உண்மை யைத் தோலுரிச்சிருக்காங்களா? ஒரு சிறுகதையை எழுதியிருக் காங்களா? அந்த தைரியம் யாருக்காவது இருந்ததா? அவங்களால் முடியாது. நான் ஒரு கிறிஸ்தவ மடத்தில் பல வருடங்கள் வேலை பார்த்தேன். எல்லாவற்றையும் பார்த்தேன். நான் பார்த்த அத்தனை பாத்திரத்தையும் நிஜப்பெயரிலேயே கதைகளில் உலவ விட்டேன். இப்படி அங்கே நடக்கும் அத்தனையையும் உணர்ந்து தான் கதை மூலம் எல்லாவற்றையும் தோலுரிச்சேன். அதனால் அழுத்தமாகச் சொல்லிக்கொள்கிறேன்.அனுபவமே எழுத்தாளர்களுக்கு உண்மையான ஆசான்.