சமயம் பற்றிய கருத்துக்களைத் தொகுத்துப் பார்க்கிறேன். இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் தேவையான சமயம் எதுவாக இருக்கமுடியும்? சமயம் மனிதனை விடுதலை செய்கிறதா?அடிமைப் படுத்தி ஆட்டி வைக்கிறதா? விடுதலைக்கான உள்ளுறை உந்துதல்களோடுதான் மதங்கள் இருக் கின்றனவா? சமயம் பெண்களைக் காப்பாற்றிக் கரை சேர்க்கிறதா? கழுவிலேற்றுகிறதா? சாதியையும் தீண்டாமையையும் உதறியெறிய முடியாத சமயங்களைச் சமயமாகக் கருதமுடியுமா? இத்தகைய கேள்விகள் சமயம் குறித்த பார்வையை நாம் விளங்கிக் கொள்ள உதவும்.
சமயவாதிகளுக்கு மட்டுமின்றி மானுடம் குறித்த தேடலில் உள்ள யாவருக்கும் சமய ஆய்வுகள் பெரிதும் பயன்படும். மனந்திறந்த உரையாடலில் தான் சமயத் தேக்கங்களை உடைக்க முடியும். மாற்றங் களுக்குத் தடையாகும் மதங்கள் மக்களுக்குச் சுமையாவதையும் நாம் காணமுடியும். மற்ற மதங்களை விமர்சிக்கலாம். ஆனால் சொந்த மதத்தைத்தான் உள்ளிருந்து சரிசெய்ய முடியும். சொந்த வீட்டைச் சுத்தப்படுத்துவதிலிருந்து தொடங்கலாம். நான் சார்ந்திருக்கும் கிறிஸ்தவ சமயம் எதைச் சாதித்தது எதைச் சாதிக்கத் தவறியது என்பதிலிருந்து தொடங்குகிறேன். நிச்சயம் பழைமைபேணிகள் இதை எதிர்ப்பார்கள். சமகாலத்தில் வாழப்பழகாதவர்கள் எதிர்ப்பார்கள். உண்மையான இயேசுவை உணர்ந்து கொள்ளாதவர்கள் எதிர்ப்பார்கள். இவர்களால் சமுதாயத்திற்குப் பயனில்லை. தானும் தேறாதவர்கள். பிறர் சொல்லியும் கேளாதவர்கள்.
ஆனால் பாதிப்புற்றோர் பேசித்தான் ஆகவேண்டும். தலைவிதியை நொந்துகொண்டு வெந்ததைத் தின்று விதி வந்தால் சாவோம் என்பது வாழ்வது ஆகாது. மதம் ஒரு மனிதனை நடைபிணமாக்கிவிடுகிறது என்றால் எச்சரிக்கை மணியொலிக்க வேண்டியது சமூக அக்கறை உடையவர்கள் அனைவரின் கடமை யாகிறது. வெளிப்புற வடிவில் அல்லது மேலோட்ட மாகப் பார்த்தால் சமய நடவடிக்கைகள் கொண்டாட்ட மாகத் தெரிகின்றன. ஆனால் உள்ளார்ந்த வகையில் திண்டாட்டமாகவே அவை அமைகின்றன. எது சரி- எது உண்மை- எது நியாயம்-எது திசை என்பதைப் பற்றிய தேடல்களுக்கு மதம் தன்னைத் திறந்து கொள்ளத்தான் வேண்டும்.
தனியுடைமை சார்ந்து சமயங்கள் உருவெடுக்கின்றன. அரசாதரவோடும் வன்முறையோடும் பின்னிப் பிணைந்தே சமயங்கள் வரலாற்றில் வேர்பிடித்துள்ளன. மனிதனின் கைகளைப் பிணைக்கின்ற கண்ணுக்குத் தெரியாத சங்கிலிகளைக் கொண்டு மனித மனங்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன. சங்கிலிகளை மறைக்கும் அழகிய மலர்களாகச் சமயங்கள் உள்ளன. சமயத்தைத் திறனாய்வு செய்யாமல் சங்கிலிகளைக் கண்டுகொள்ள வழியில்லை. மனிதன் தளைப்பட்டுள்ளான். அரசியலில், பொருளியலில், பண்பாட்டில், கடவுள் பற்றிய மாயைகளில் சிக்குண்டு கிடக்கிறான். மதம் மனிதனை மனிதனாக்காமல் மாயையில் வைத்திருக்கிறது. நம் கைகளும் மனங்களும் கட்டப்பட்டிருப்பதற்கான காரணங்களைப் புரிந்துகொண்டால்தான் நாம் சமயத்தின் மாயைகளிலிருந்து விடுபட முடியும். சமயத்தைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் சமூக- பண்பாட்டு வரலாறு நமக்குப் புரிய வேண்டும்.
மனிதன் தனக்குள்ளும் வெளியிலும் பிளவுண்ட நிலையிலுள்ளான். மதம் அனைவரையும் சேர்க்கிறது என்று நாம் கருதிக் கொண்டிருக்கும்போதே பிரித்துவிடுகிறது. தனித்தனித் தீவாக்கி விடுகிறது. மனிதனுக்கு மனிதன் அந்நியமாகிப் போய்விட்டான். இந்தக் கையறு நிலையைத்தான் மதம் தனக்குச் சாதகமாக்கிக் கொள்கிறது. கூர்ந்து கவனித்தால் ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் வெவ்வேறு கடவுளர்கள் இருக்கின்றனர். மேல்சாதிகளுக்கு கடவுள் வேறு. கீழ்நிலைக்குத் தள்ளப்பட்டவர்களின் கடவுளர்கள் வேறு. வேறுபாடுகளும் ஏற்றத் தாழ்வுகளும் மதத்திற்குத் தீனியாகவும் உள்ளன. கறை நல்லதுதான் என்று நிலவும் சமுதாய அமைப்பை நியாயப்படுத்துகின்றன.
சாமிகள் ஆயுதந்தாங்கிப் போராடுவது சமுதாயத்தின் பிரதிபலிப்புதான். உண்மையில் சமுதாயத்தில் என்ன நடக்கிறதோ அதையே மறுகாட்சியாக மதம் நடத்திக் காட்டுகிறது. சண்டையிடும் மனிதர்கள் சண்டையிடும் தெய்வங்களைப் படைப்பதன் மூலம் தங்களின் சண்டைகளுக்கு நியாயம் கற்பிக்கின்றனர். எல்லாவற்றையும் தலைகீழாகப் பார்க்கின்றனர்.
கடவுளரைப் படைத்துவிட்டு மனிதனைப் படைத்தது கடவுள் என்கின்றனர். சாராயம் குடித்தால்தான் போதை என்றல்ல சமயமும் போதையையும் மயக்கத்தையும் மனிதனிடம் உருவாக்கிவிடுகிறது.
பணக்காரர்கள் கும்புடுகிற இயேசு வேறு. ஏழைகளின் இயேசு வேறு. மேலும் மேலும் செல்வங்களைக் குவித்துக் கொள்வதை ஆசிர்வதிக்கிறவராகப் பணக்காரர்களின் இயேசு உருவாக்கப்பட்டுள்ளார். ஏழைகளுக்கோ இயேசு கையில் சாட்டையுடன் வருகிறார்.
மதம் நல்லதே செய்யவில்லையா என்ற கேள்வியும் எழுகிறது. வரலாற்றில் மதத்தின் பங்கு நேர்மறையாகவும் உள்ளது. எதிர்மறையாகவும் உள்ளது. எளியோரின் கலகமாகவும் உள்ளது. எளியோரை அடக்கியொடுக்கி வைப்பதாகவும் உள்ளது. கலகக் குரலாகவும் வெடித்துள்ளது. நியாயமான கலகங்களைத் தடுப்பதாகவும் உள்ளது. இதயமற்ற அரக்கனாகவும் உள்ளது. உலகின் இதயமாகவும் உள்ளது. ஒவ்வொருவரின் ஆன்மாவாக அன்பை முன்னிறுத்தவும் செய்கிறது. அன்பற்ற உலகின் வம்பு வழக்காகவும் உள்ளது. கொடுமைகள் கண்டு பொங்கியெழவும் உறுதுணையாக உள்ளது. மூடத்தனங்களை வளர்ப்பதாகவும் உள்ளது. உனக்கு நீயே ஒளி என்று கூறுவதாகவும் உள்ளது. மதத்தை யும் கடவுளையும் எதிர்மறையாக விமர்சித்து ஒதுக்கித் தள்ளுவது மதத்தோடும் கடவுளோடும் தொடர் பில்லாதவர்களின் பிடியில் மதம் சிக்கிக் கொள்ளவே உதவும். மதத்திலிருந்து மீட்டுக்கொள்ள வேண்டிய கூறுகள் உண்டு. எதிர்மறைத் தத்துவம் பயன்படாது.
மதமும் அரசியலும்
மதம்; நடைமுறை சார்ந்த உலகியல் வாழ்க்கையை முன்னிறுத்துவதில்லை. சமூக உறவுகளை விட்டு ஒதுங்குவதை வலியுறுத்துகிறது. உலகியல் வாழ்வைத் துறப்பதையே உயர்வான அறமாகச் சித்தரிக்கிறது. இதனால் இயல்பான சமூக வாழ்விலிருந்து விலகி நிற்கிறது. சமூக வாழ்வியல் பற்றிப் பேச மறுக்கும் சமயம் சமுதாயத்திற்கு எதற்கு? உண்மை அறியும் பேரறிவே வாழ்வின் இலட்சியம் என்பதெல்லாம் மாறி உண்மையைப் பொய்மைப் போர்வையால் போர்த்துவதுதான் நடக்கிறது. கடவுளைப் பற்றிப் பேசாதவர்கள் கடவுளாக்கப்படுகின்றனர். அன்பே கடவுள் என்று தொடங்கிய சமயம் வெறுப்பையும் சகிப்பின்மையையும் போதிக்கின்றன. ஆதிக்கர்கள் மதத்தைத் தங்களின் கைப்பாவையாக ஆக்கிக் கொண்டனர். மதமும் அரசியலும் கள்ளக்கூட்டில் இணைந்தன.
மதத்திற்குள்ளும் போராட்டம் தேவை
ஆள்வோருக்கு எதிரான கலகம் சமய எல்லைக் குள்ளும் கிளம்பியது. சாதிகளையும் சடங்குகளையும் சமய வேறுபாடுகளையும் சமயவாதிகள் எதிர்த் துள்ளனர். அரசியல் பொருளியல் மாற்றங்களை ஏற்றுள்ளனர். சமயங்கள் உருவாக்கிய இலக்கியக் கதாபாத்திரங்கள் கூட்டு வாழ்வை நோக்கி நம்மை உந்தித் தள்ளுவன.
சமுதாய மாற்றத்திற்குத் தகுதியற்றதாகவும் அரசியல் அறிவற்றதாகவும் கிறிஸ்தவம் உள்ளது. அழிவது குறித்த அக்கறைகளும் இல்லை. கிறிஸ்தவத் தலைமைகள் இக்காலத்திற்கு உதவாத பழைமைவாதத்தால் சுமைகளாகிவிட்டனர். இன்னும் ஒரு இருபது ஆண்டுகளுக்குக்கூட இவர்கள் முட்டுக் கொடுக்கும் நிறுவனங்கள் நீடிக்க வாய்ப்பில்லை. ஆன்மீகத் தலைமைகள் முட்டாள்களாகவும் கிரிமினல்களாகவும் சாதி வெறியர்களாகவும் இயேசுவைக் காட்டிக் கொடுப்போராகவும் உள்ளனர். உள்முரண்களால் அழிந்து கொண்டிருக்கிறோம். இயேசுவும்கூட குடிலில், பேழையில்,கோயிலில் படமாகவும் சுருவமாகவும் குறுக்கப்பட்டார். போராளியின் கையிலிருந்த அத்தனை ஆயுதங்களும் பிடுங்கப்பட்டாயிற்று. யூதமதத்தை எதிர்த்துப் போராடிய கலகமூட்டியவரை கிறிஸ்தவம் மறுபடியும் சாதியச் சிலுவையில் ஏற்றிக் கொன்று விட்டது. இன்று அவர் வழிபாட்டுப் பொருள் ஆக்கப்பட்டுள்ளார். வாழ்வியல் வழிகாட்டியான அவர் அர்த்தமற்ற சடங்குகளுக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ளார். வரலாற்றில் வாழ்ந்த நாசரேத்தூர் இயேசுவிற்கும் கிறிஸ்தவர்களின் அடக்க ஒடுக்கமான சட்டங்களுக்குட்பட்ட இயேசுவிற்கும் தொடர்பில்லை.
கல்வி என்ற ஆயுதத்தை மக்களுக்கு வழங்கிய நேற்றைய கிறிஸ்தவம் இன்று மேலை நாட்டு அடிமைக் கல்வியை மக்களிடம் திணிக்கிறது. கல்வியும் மருத்துவமும் பிற சேவைகளும் இன்றுவரை மறுக்கப்படுவோருக்காகக் கிறிஸ்தவம் பணியாற்ற முன்வரவில்லை. எருசலேம் நகரின் அழிவை முன்னுணர்ந்து கதறி அழுத மாந்தநேயன் இயேசு இன்று இங்கு வந்தால் என்ன சொல்வார்? "யூதாசே நீ ஒரு முறைதான் என்னைக் காட்டிக் கொடுத்தாய். ஆனால் இந்தக் கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு நொடியும் என்னைச் சொல்லாலும் செயலாலும் வாழ்வாலும் காட்டிக் கொடுக்கின்றனர்' என்றுதானே அரற்றுவார்? நாம் திசைவழியற்றுப் போனோம். நாம் பயணிகள் என்பதை உணராமல் கூடாரங்களில் தங்கித் தேங்கி மங்கிப் போனோம்.
பெண்களைக் கிறிஸ்தவம் எப்படி நடத்துகிறது. முக்காடிட்டுக் கோயிலுக்கு வா என்கிறது. ஆண்களையும் அப்படி வரச் சொன்னால் இதில் உள்ள அபத்தம் புரியும். ஆணுக்கு ஒரு நீதி. பெண்ணுக்கு வேறொரு நீதி என்று செயல்படுவதைப் புரிந்து கொள்ள முடியும். கோயிலைக் கூட்டிப் பெருக்கவும் பீடத்தில் பூ அலங்காரங்களைச் செய்வதற்கும்தான் பெண்களைப் பயன்படுத்துகிறது. பெண்கள் பூசை வைக்க அனுமதிப்பதில்லை. கோயிலைச் சுத்தப்படுத்துவோர் கோயிலை நிர்வாகம் செய்யமாட்டார்களா? பூக்களைக் கொணர்வோருக்குப் பூசை வைக்கத் தெரியாதா? கோயிலில் வாசகம் வாசிக்கிற பெண்களுக்குப் பூசைகள் வைக்கத் தெரியாதா? தாய்வயிற்றிலிருந்து பிறந்தவுடன் ஆணைவிடப் பெண்கள்தான் முதலில் விரைந்து பேசக் கற்றுக் கொள்கின்றனர்.
அனுமதித்தால் அவர்கள் இன்னும் நன்றாகப் பூசை வைக்க முடியும். அனுமதி மறுப்பதால் பெண்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது. ஆண்கள் மந்திரங்களைச் சொன்னால்தான் ஆவியானவர் வருவாரா? பெண் சொன்னால் வரமாட்டாரா? வராதவரைப் பெண்கள் ஏற்க எதற்குக் கட்டாயப்படுத்த வேண்டும்? இதுவரை பெண்கள் பூசை வைக்கக்கூடாது என்று ஆவியானவர் சொல்லியிருக்கிறாரா? எவரின் கனவிலேனும் தோன்றி பெண்கள் பூசை வைத்தால் எனக்குப் பிடிக்காது என்று சொல்லியிருக்கிறாரா? இது ஆண்கள் ஆண்களுக்காக ஆண்களாலேயே கொண்டு வந்தது. அதிலும் குருக்கள் கொண்டு வந்தது. அதிலும் ஆயர்கள் கொண்டுவந்தது. அதிலும் கர்தினால்கள் கொண்டு வந்தது. அதிலும் போப் கொண்டு வந்தது. அதிலும் கிறிஸ்தவர் தேய்ந்து கொண்டிருக்கிற மங்கி மறைந்து கொண்டிருக்கிற அமெரிக்க-அய்ரோப்பிய நாடுகளில் 124 கர்தினால்கள் கொண்டு வந்தது.
ஆக எல்லோருக்கும் எது நன்மை என்பது ஒரு சில வெள்ளைக்கார உயர் குருமார்களிடம் மட்டுமே உள்ளது. பெரும்பான்மைக் கிறிஸ்தவர்கள் வசிக்கும் இந்தியாவிலிருந்து ஒரு போப் வருவாரா? ஆப்பிரிக்காவிலிருந்து வருவாரா? இலத்தீன் அமெரிக்கரிடமிருந்து வருவாரா? வர முடியுமா? வரவிடுவார்களா? இத்தகையோரிடம்தான் கிறிஸ்தவம் சிக்கியுள்ளது. இவர்கள் பெண் குருத்துவத்தை ஏற்க மாட்டார்கள். ஆசியாவிலிருந்து போப் வருவதை ஒத்துக் கொள்ள மாட்டார்கள்.
அண்மைக்காலமாகக் கேரளா வில் கன்னியர்கள் அங்கு பாலியல் அத்துமீறல்களில் ஈடுபடும் குருக்களுக்கும் ஆயர்களுக்கும் எதிராகக் கலகம் செய்கின்றனர்.
ஏன்? ஆண்களின் பாலியல் உரிமைகளைத் திருச்சபை கடுமையாக ஒடுக்குகிறது. குருக்கள் திருமணம் செய்யக் கூடாது என்கிறது. அதனால் கள்ள உறவுகள் தான் பெருகும் என்கிற அடிப்படை உண்மையைக்கூட அதனால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆணுக்குப் பெண்ணின் மீதான ஈர்ப்பும் காதலும் இயல்பானது. பெண்ணுக்கு ஆணின் மீதான ஈர்ப்பும் காதலும் இயல்பானது. இயல்புக்கு மாறாக அவற்றைக் கடவுளின் பெயரால் மறுக்கிறது. திருமணம் செய்து கொள்ளாதே என்று குருக்களுக்கும் கன்னியர்களுக்கும் சட்டத்தைத் திணிக்கிறது. ஆனால் பல்வேறு சிக்கல்களில் அவர்கள் சிக்கித் தவிக்கும்போது அவற்றை எதிர்கொள்ளத் திராணியற்றதாகத் திருச்சபை உள்ளது. மனம் திறந்து விவாதித்தால்தான் மாற்றங்கள் பிறக்கும்.
மூடி மூடி வைப்பதால் எத்தனை கேவலங்கள்? எத்தனை அவமானங்கள்? எத்தனை எத்தனை பேரின் வாழ்க்கை ஒன்றுமில்லாமல் போய்விடுகிறது?
கர்தினால்கள் மீதே பாலியல் குற்றச்சாட்டுகள். போப் மன்னிப்புக் கேட்கிறார். அமெரிக்காவில் திருச்சபையின் பெரும்பகுதி நிதி பாலியல் குற்றச் சாட்டுகளுக்காளான குருக்களையும் ஆயர்களையும் கர்தினால்களையும் காப்பாற்றுவதற்காகச் செலவிடப்படுகிறது. வணிக ஊடகங்களும் மாற்று சமயங்களில் உள்ள மதவெறியர்களும் பரபரப்பாக்கி ஆதாயம் தேடுகின்றனர். ஆனால் இதில் அக்கறை செலுத்தி இந்தச் சிக்கலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியவர்கள் வாய்மூடி மௌனிகளாக உள்ளனர்.
நாம் பேசவில்லை என்பதாலேயே பிரச்சினைகள் நம்மைவிட்டுக் கடந்து சென்றுவிடுவதும் இல்லை. சிக்கல்கள் மேன்மேலும் கடுமையாகுமே தவிர தீரவே தீராது. தீராத தலைவலியை வலிந்து கொண்டுவருவதற்கே வழிவகுக்கும்.
ஆத்திரத்தை அடக்கு. மூத்திரத்தை அடக்கு.
அதுபோல் பாலியலை அடக்கு என்று கூறுவதில் பொருள் உள்ளதா? அடக்கு முறையினால் இயல்புக்கு மாறாக வாழப்பழக்குவது தான் துறவறப் பயிற் சியா? பாலியல் உந்துதல் கள் தவறென்றால்.. பாவம் என்றால் உலகின் பெரும் பான்மை மக்களான திருமணம் முடித்துள்ள 99 விழுக்காட்டினர் தவறானவர்களாகவும் பாவிகளாகவும் குற்றவாளி களாகவும் ஆகிவிடுகின்ற னர். பாலியல் கேவலம் என்று கற்பிப்பதும் இயல்பான உந்துதல்களை அடக்கி வாழவேண்டும் என்பதும் மதத்தின் எதேச்சதிகாரப் போக்கினைத் தான் வெளிப்படுத்துகிறது. மனிதன் மனிதனாக வாழமுடியாமல் போகிறது. அரைகுறை வாழ்வை வாழ்ந்துவிட்டுப் போ என்பது வாழ்வியல் சட்டமாக்கப்படுகிறது.
உண்மை சமயம் உலகியலையும் உடலியலையும் ஏற்கிறது. புலன்கள் இங்கு வெறுக்கப்படவில்லை. உடலும் உடலின்பமும் கொண்டாடப்பட்டு வந்துள்ளன. இல்வாழ்க்கை முற்றாக ஒதுக்கப்பட வில்லை. அர்த்தமுள்ள வாழ்க்கை என்பது அர்த்தங் களை உருவாக்கிக் கொள்வதுதான். ஆனால் அர்த்தங் களை அழிக்கும் வேலையில் மதம் இப்போது மும்முரமாக உள்ளது.
மனித வாழ்க்கை பல்வேறு பரிமாணங்களையும் பன்முகத்தன்மைகளையும் உள்ளடக்கியுள்ளதைப் புரிந்து கொள்ளாமல் மதம் ஒற்றைப் பரிமாண மனிதர்களை உருவாக்குகிறது. ஒற்றைப் பரிமாண மனிதர்களால் கலவரங்களே அதிகரிக்கும். இவர்களின் ஒற்றை வரலாறு சாரமற்றது. வாழ்வின் அர்த்தங்களை அழிப்பதால் சமூக வாழ்வு தடம் புரள்கிறது. அழிகிறது.
மாற்று மக்கள் விடுதலை
மதம் வேறு. மதவாதம் வேறு. மதம் பன்முகத் தன்மையுடையது. மதவாதம் ஒற்றைத்தன்மையுடையது. அரசியல் நோக்கமுடையது. மதம் என்பதே மூடத்தனம் என்று அணுகுவதன் மூலம் மதஉணர்வுடைய மக்கள் எதிரிகளுக்கு இரையாக்கப்படுகிறார்கள். மதம் என்ற வடிவிலும் வர்க்கப்போராட்டம் தொடர்கிறது என்பதே பொதுவுடைமையர் பார்வை. ஆதிக்க சக்திகள் தங்களின் சுரண்டலுக்கும் ஒடுக்குமுறைக்கும் மதத்தையும் பயன்படுத்திக் கொள்கின்றனர். மதவெறியைத் தூண்டுகின்றனர். மதம் ஆதிக்கத்தைக் களைந்து கொண்டால் ஒழிய மக்கள் விடுதலைக்குப் பயன்படாது. மனிதனைச் செழுமைப்படுத்துவதற்கு உதவாத மதம் மதமாகாது.
இதுவரையிலான கடவுள் ஆணாகத்தான் இருந்திருக்கிறார். கிறிஸ்தவம் விதிவிலக்கல்ல. கடவுளை ஆணாகப் பார்க்கிறது. தந்தையாகப் பார்க்கிறது. தந்தை மகன் தூயஆவி என்று பேசுகிறது. குறைந்தது தூய ஆவியையேனும் பெண்ணாகப் பார்ப்பதில் என்ன தவறு வந்துவிடப் போகிறது? கடவுளை ஆணாகப் பார்ப்பது சமுதாயத்தில் பெண்களை இரண்டாம் இடத்திற்குத் தள்ளுகிறது. கடவுளை அரசனாகப் பார்த்தால் மக்கள் அடிமைகளாகின்றனர். கடவுளை உழைப்பாளியாக ஏன் பார்ப்பதில்லை? கடவுளைத் தாழ்த்தப்பட்டவராக ஏன் பார்ப்பதில்லை? அதைப் போன்றே கடவுளை ஏன் பெண்ணாகப் பார்ப்பதில்லை? அநீதியை எதிர்த்து நீதியை நிலைநாட்டுபவராகக் கடவுளை ஏன் பார்க்கக்கூடாது? மானுட விடுதலைக்காகவே மதம். மானுடநேயமற்று மனிதனுக்கு விலங்கிட்டு அடிமைப்படுத்துவதை மதம் ஆதரிக்கும் என்றால் அதை எதிர்த்துப் போராடி அழிக்கத்தான் வேண்டும்.
விடுதலை இறையியல்
விடுதலை இறையியல் என்ற வடிவில் கிறித்தவம் மக்கள் விடுதலைக்காகத் தன்னைப் புதுப்பித்துக் கொள்ள முடியும். புதிய நெறிகள் குறித்த ஆய்விற்கு மதம் தன்னைத் திறந்து கொள்ள வேண்டும். இப்போது இறைவன், மேல் உலகம் போன்ற கருத்தாக்கங்களுக்குப் புதிய பொருள் வழங்கப்படுகிறது. சுரண்டலையும் ஒடுக்குமுறையையும் ஒழித்துக்கட்டுவதைப் புதிய மதமாக்கிக் கொள்ள முடியும். உழைக்கும் மக்களுக்குப் புதிய ஒளியையும் நம்பிக்கையையும் வழங்கும் மதத்தின் சமூக அக்கறை கவனிக்கப்பட வேண்டியது.
இயேசு வரலாற்று நாயகர். இயேசுவும் அவருக்கு முற்பட்ட அபிரகாம் முதலியவர்களும் யூதமரபைச் சார்ந்த வரலாற்று மனிதர்கள் மட்டுமல்ல. மனிதகுலம் முழுமைக்கும் உரியவர்கள். அவர்களின் சமயச் சார்பைக் காட்டிலும் அவர்களின் சமூகச் சார்புக்கே அழுத்தம் தரப்பட்டிருக்கிறது. கிறித்துவத்தின் சமயமும் சமூகச் சார்பும் பிரித்து அறிய இயலாத அளவிற்கு ஒன்று எனக் காட்டப்படுகிறது.
சமயக்கூறுகள் சமயச்சார்பில்லாதவர்களிடமும் காணப்படுகின்றன. வாழ்க்கை பற்றிய பேருண்மை களுக்கு நம்மையும் நம் மனத்தையும் திறந்து வைக்கும் பொழுதுதான் உயிர்களோடும் உலகோடும் உரையாடல் சாத்தியம். உரையாடலில்தான் உறவுகள் தழைக்கின்றன. வாழ்க்கை விரிவும் அழகும் செறிவும் பெறுகின்றன.
சமயத்தை ஒழிப்பதல்ல மாற்றுவதே தீர்வு
அரசியல் ஆதிக்கத்தாருக்கும் அதிகார நிறுவனத் தாருக்கும் புரோகிதர்களும் மூடநம்பிக்கைகளும் எப்போதும் தேவை. சமயத்தைக் கவிதையாகவும் இலக்கியமாகவும் கலையாகவும் மாற்றுவதின் வழியே சமயத்தின் ஆதிக்கத்தைக் குறைக்க முடியும். சமயத்தை நாம் ஒழிக்க நினைத்தால் சமயம் நம்மை ஒழிக்கும். சமயத்தை ஒழிப்பதைவிட மாற்றுவது பற்றித்தான் நாம் சிந்திக்க வேண்டும்.
உண்மையான சமயம் வெற்றியையும் தோல்வி யையும் சமமாக ஏற்றுக்கொள்ளச் செய்ய வேண்டும். கடவுளுக்குப் பயந்தவன் போலவும் நல்லவன் போலவும் நடிப்பது ஓர் அடிமைப் பண்பு. வாழ்க்கையைப் புரிந்து கொள்ள இயலாதபோதும் வாழ்க்கைச் சிக்கல்களைத் தீர்ப்பதற்குத் திறன்பெறாதபோதும் வாழ்க்கையில் அச்சம் மிகுந்திருக்கிறது. கடவுள் பக்தி சிலை வழிபாடு மூலம் மனிதன் தன்னைத்தானே வழிபடுகிறான். கடந்து சென்ற அனுபவங்களை மீண்டும் நினைவிலிருத்தி அசைபோடுகிறான். கடந்த கால நினைவுகளின் சுமைகளிலிருந்தும் மாயை களிலிருந்தும் தன்வழிபாட்டிலிருந்தும் விடுபட்டு மனிதன் சிந்தனைகளால் நிகழ்காலத்தின் எதார்த் தத்திற்குள் வந்துவிட வேண்டும்.
கடவுள் இல்லாமல் மனிதன் மனிதனாகி விடவில்லை கடவுள் இறந்துவிட்டார் என்றார் நீட்சே. கடவுள் இல்லை என்றார் பெரியார். எனினும் கடவுள் நம்பிக்கை அழியவில்லை. புதுப்புதுக் கடவுள்கள் தோன்றியவண்ணம் உள்ளன. மனிதன் கடவுள் பற்றிச் சிந்திக்கும்போது தன்னைத்தான் சிந்திக்கிறான்.
கடவுள் என்ற திரையில் தன்னைத்தான் வரைகிறான்.
தன்னை மதிப்பீடு செய்கிறான். அறத்தைக் கடைப்பிடிக்கவும் அமைதி கொள்ளவும் உலகச் சூழலில் தனது இருப்பைத் தக்கவைக்கவும் கடவுளின் கைப்பிடித்து நடக்கிறான். கடவுள் மனிதனுக்கு ஒரு தளம். கருவி. பார்வை. விளக்கு. கடவுள் இல்லாமல் மனிதன் மனிதனாகி விடவில்லை.
சமகாலப் பொருள்படுத்துதலும் சமயங்களும்
ஆன்மாவிற்கு அழிவில்லை என்பதை மனிதருக்கும் மானுட இலட்சியங்களுக்கும் அழிவில்லை என்று பொருள்படுத்தலாம். இயற்கையிலிருந்தும் சமுதாயத்திலிருந்தும் வரலாற்றிலிருந்தும் தன்னிலிருந்தும் அந்நியப்பட்ட மனிதன் மீண்டும் இணக்க மடைதலைப் பிரபஞ்ச ஞானம் எனலாம். மக்களை நெருங்கிச் செல்வதற்கு மதமும் ஒரு நெறி. மதம் நம்மைத் தோற்கடிக்க நாம் அனுமதிக்கக் கூடாது. மதத்தை வெல்வது என்பது அதைக் கடந்து செல்வதாகும். ஓசோ தனக்கு சமயம் உடன்பாடில்லை. சமயத்தன்மைதான் உடன்பாடு என்கிறார். நீட்சே கடவுள் உலகைப் படைத்து பிசாசிடம் ஒப்படைத்திருக்கிறார் என்றார்.
வால்டேர் கடவுள் இல்லை. நாம் ஒரு புதிய கடவுளைப் படைக்க வேண்டும். கடவுள் இல்லாமல் உலகம் இருக்க முடியாது என்றார். கடவுளைப் பற்றிக் கேள்வி எழுப்புவதால் இவர்களிடம் கருணை இல்லை. அன்பு இல்லை என்று கூறமுடியாது.
ஏழைகளின் கடவுளை விடுவி! பணக்காரர் கடவுளரை ஒழி!
சமயத்தின் பெயராலும் உழைக்கும் மக்களின் விடுதலைக்கான வழியை அடைத்து விடுகின்றனர்.
இது ஒரு கேவலமான அரசியல். சாமானியருக்கு உதவமுன்வராத சமயங்களையும் கடவுளரையும் பார்த்து நாம் கேள்விகள் கேட்க வேண்டும். இசுராயேலை விடுவித்த கடவுள் தமிழ் மக்களை அழித்தொழிக்க முனையும் ஆதிக்கர்களிடமிருந்து தமிழரை விடுவிக்க வேண்டாமா? நடக்கிற அனைத் தையும் வேடிக்கை பார்க்கிற கடவுள் எங்களுக்கு எதற்கு? காசேதான் கடவுளா? கடவுளுக்கு எதற்கு உடமைகளும் உண்டியல்களும்? கடவுளுக்கு எதற்கு நிறுவனங்கள்? கடவுளுக்கு எதற்கு இடைத்தரகர்கள்? கடவுளுக்குச் சாதி இருக்கிறதா? கடவுள் சிலரைத் தீண்டமாட்டேன் என்பாரா? தேவைக்கு மேல் சொத்து வைத்திருப்பவன் திருடன் என்றால் கடவுளைத் திருடனாக மாற்றியவர்கள் யார்? செல்வத்தைக் குவிப்பது குற்றச் செயலா? கடவுள் அருளா? உண்மையில் யார் பக்கம்? எங்களுடன் உடன் வராத கடவுள் எங்களுக்குத் தேவையா? கடவுளைப் பெண்ணாகப் பார்க்க முடியாது என்று வாதிட்டால் அதே வாதத்திற்காகச் சொல்ல முடியும். கடவுள் ஆண் இல்லை என்பதே உண்மை என்றால் அவரை ஆணாகப் பார்ப்பது தவறல்லவா? கடவுள் அன்பின் வடிவம் என்றால் எதிரியைக் கொல் என்பது தெய்வத்தின் குரல் என்று எப்படிக் கூறமுடிகிறது? கடவுளின் பெயராலும் கடவுளைத் துரத்துகிறார்களா?
கள்ளனும் அதிகாரியும் பொய்யனுமாக உள்ளவனிடம் கடவுளுக்கு எதற்குக் கூட்டு வைக்க வேண்டும்? உடமையாளனுக்கும் அரசாங்கத்திற்கும் சேவை செய்கிறவர்தான் கடவுளா? மோசமானவன் வெற்றி பெறும்போது கடவுள் என்ன செய்கிறார்? அவர் யார் பக்கம்? கடவுள் மனிதன் ஆட்டுவித்தால் ஆடுகிற பொம்மையா?
கடவுளை நம்புகிறவர்கள் இத்தகைய கேள்விகளைப் புறந்தள்ளிவிட்டு வழக்கம்போல் வாழ்வோம் என்று முடிவெடுக்க முடியாது.
சமத்துவமும் சகோதரத்துவமும் வளர்க்கும் நெறியைச் சமயமென்போம். மனித விடுதலைதான் சமயத்தின் குறிக்கோள். சமய நம்பிக்கைக்குச் சாதி தேவை இல்லை. இடைத்தரகர் தேவை இல்லை. எல்லோரும் எல்லாமும் பெறுவதைப் புதிய மதமென்போம்.
மனிதனை மனிதனாக்கும் சமதருமமே மதம்
கடவுள் என்ற கருத்தாக்கத்தைப் புரிந்து கொள்வோருக்கு வழிபாடுகள், சடங்குகள், சாத்திரங்கள் தேவையில்லை. இவற்றிற்கு மாறாக ஏற்றத்தாழ்வை, தனிஉடைமையை, அரசு அதிகாரத் தைத் தகர்க்க நாம் முற்படுவோம். எல்லாவற்றையும் எல்லோருக்கும் பொதுவாக்குவோம். இதுதான் சமதர்ம நெறி. கடவுள் என்றால் சமதர்மம். சமதர்மம் என்ற அந்தக் கடவுள்தான் நம்மை மனிதராக்கும். நமக்கு விடுதலை தரும்.
மனிதனைத் தெய்வமாக்குவதைவிட மனிதனை மனிதனாக்குவதே அரிய செயல். பெரிய செயல்.
மேலான செயல். பொருளைத் துறந்து தெய்வமா வதைவிடப் பொருளை அடிமைப்படுத்தி வாழ்வது அரிய பெரிய செயல் ஆகும்.
இயக்கத்திலிருக்கும் இயற்கையின் இயல்பை மறைத்துச் சமயமும் கடவுளும் ஒரு தேக்கத்திலிருப்பதைக் காண்கிறோம். மானிடரைப் பண்படுத்தி நல்ல மனிதராக்கும் இலட்சியத்தைக் கைவிடும் மதம் மதமல்ல. ஏழைகளையும் இயற்கையையும் பாதுகாக்காத மதத்தை நாம் பாதுகாக்க வேண்டிய தில்லை. தன்னலத்தோடு தன்சுகம் தேடும் அறிவு நாணயமற்ற சமூக அக்கறையற்ற மனிதரை உற்பத்தி செய்யும் மதங்கள் மறையவும் மானுடம் காக்கும் விடுதலைக்கூறுகள் சமயத்திலும் அகழ்ந் தெடுக்கப்படவும்வேண்டும். மையத்திலிருந்து விளிம்பு மக்களை வாட்டிவதைப்பதையும் ஆதிக்கங்களுக்குத் துணை போவதையும் சமயவாதிகள் கைவிட வேண்டும்.
இந்த உலகத்து மனிதனை அயல் உலகத்திற்குள் கொண்டுசேர்க்கும் சமய முயற்சிகளை முறியடித்தாக வேண்டும். பொருளியலிலும் சமூகப் பண்பாட்டுத் தளங்களிலும் தேவைப்படும் விடுதலையும் சமதர்மமும் சமயத்தளத்திற்கும் தேவை. சமயத்தை அர்த்தமற்ற வெற்றுச் சடங்குகளுக்குள்ளும் மாயைகளுக்குள்ளும் முடக்கி வைக்கும் இன்றைய ஆதிக்க சக்திகளையும் சுரண்டல் பேர்வழிகளையும் இனம் கண்டு ஒதுக்க வேண்டும். ஒருபோதும் சமயம் இவர்களுக்குத் துணை நிற்கக் கூடாது. சமயச் சிக்கல்களுக்கும் பொதுமையே தீர்வு. சமயத்தின் விடுதலைக்கூறுகளை நாம் உள்வாங்கிக் கொள்ள வேண்டும். நடைமுறை சார்ந்த உலகியல் வாழ்க்கையைப் பற்றி இப்போதேனும் பேசவேண்டும். சமூக அக்கறையும் அறிவுத் தேடலும் மறையும்போது மதங்கள் இறுகி நிறுவனமாகின்றன. ஆதிக்கசக்திகளின் கைப்பாவை ஆகின்றன. மதம் வேறு. மதவாதம் வேறு. மதம் பன்முகத் தன்மையுடையது. மதவாதம் ஒற்றைத்தன்மையுடையது. சமகாலப் புதிய ஆய்வுகளுக்கு மதம் தன்னைத் திறந்துகொள்ள வேண்டும். வாழ்வின் அர்த்தங்களை அழிக்கும் எந்தச் சமயமும் அழியும். சமத்துவமும் சமதர்மமும் பொதுமைப் பகிர்வும் நமக்கான நம் காலத்தின் சமயம்.