துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன்
அளியின்மை வாழும் உயிர்க்கு.
-என்பது வள்ளுவர் வாக்கு. இதன் பொருள் என்னவென்றால், மழையில்லாத நாடு வறண்டு வாடி நிம்மதி இழப்பது போலவே, அருள் நெஞ்சம் இல்லாத அரசைக் கொண்ட நாடும் நிம்மதி இழந்து விடும் என்பதாகும்.
வள்ளுவர் சுட்டிக்காட்டும் நிம்மதியற்ற நிலை இங்கு தீவிரமாக உருவாக்கப் பட்டு வருகிறது. இதற்குக் காரணம் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு தான்.
மோடி அரசு, மக்களிடம் கருணையையோ அன்பையோ, வாக்களித்ததற்கான நன்றியையோ காட்டவில்லை. மாறாக எல்லா வகையிலும் மக்களின் விருப்பத்திற்கு எதிர்த் திசையிலேயே அது நடந்துவருகிறது.
ஆர்.எஸ்.எஸ்.சின் சித்தாந்தத்தின் படியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேராசைப் படியும், நம் நாட்டுக்குக் காவி வண்ணம் பூச முயல்கிறது மோடி அரசு. அதேபோல் நம் இந்திய நாடு, பல்வேறு இனத்தையும் மொழியையும் கலாசாரத்தையும் கொண்ட நாடு என்பதை மறந்துவிட்டு, ஆர்.எஸ்.எஸ்.விருப்பப்படி, ஒரே நாடு, ஒரே மதம், ஒரே ரேசன் அட்டை என்று நாட்டின் நிலைமையை அது தலைகீழாக்க முயல்கிறது.
மேலும், இந்தியும் சமஸ்கிருதமும் மட்டும்தான் இந்தியாவில் வழங்கப்பட வேண்டும் என்றபடி குறிவைத்துக்கொண்டு மோடி அரசு இயங்குகிறது. அதற்காக கொஞ்சம் கொஞ்சமாக மாநில மொழிகளை ஒடுக்கிவிட்டு, மேற்கண்ட இரு மொழிகள் மட்டுமே இங்கு நிலைக்க வேண்டும் என்ற நிலையை உருவாக்கவும் அது துடிக்கிறது.
மத்திய அரசின் துறைகளையும் திட்டங் களையும் பெருமளவுக்கு இந்தி மயமாக்கி விட்ட மோடி அரசு, இப்போது சமஸ்கிருதத் துக்கு காவடி எடுத்துவருகிறது. அந்த மொழியை அனைத்து மாநிலங்களின் மூளைக்குள்ளும் திணிக்க, அது தாறுமாறான திட்டங்களை வகுத்து வருகிறது.
*
தமிழர்களான நாம் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்னும் பரந்த சிந்தனை கொண்டவர்கள். எந்த இனத்தின் மீதும் எந்த மொழியின் மீதும் தனிப்பட்ட விரோதம் பாராட்டாதவர்கள். அவரவருக் கும் அவரவர் தாய் மொழி உயர்ந்தது என்பதை உணர்ந்தவர்கள் நாம். மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்கிற நாகரிகப் பார்வையும் நமக்கு உண்டு. அப்படிப்பட்ட நம்மீது, தங்கள் மொழியைப் பலவந்தமாகத் திணிக்க முயல்வதன் மூலம், மொழிக்காகப் போராடுகிறவர்களாக நம்மைத் தொடர்ந்து மாற்றி வருகிறது மத்திய அரசு.
எங்கள் காலத்தில், திராவிட இயக்கங்கள் ஏற்படுத்திய விழிப்புணர் வால், மாணவப் பருவத்தில் இந்தியை எதிர்த்துப் போராடினோம். அப்படி யொரு சூழலை அன்றைய காங்கிரஸ் அரசு ஏற்படுத்தியது. இப்போதிருக்கும் தலைமுறையினர் இந்தியோடு சமஸ் கிருதத்தையும் சேர்த்து எதிர்க்கவேண்டிய நிலைமையை, இப்போதிருக்கும் மோடி அரசு ஏற்படுத்துகிறது. இவர்கள் மொழி வெறியோடு செய்யும் திணிப்புகள்தான், நம்மைப் போராடும் நிலைக்கு ஆளாக்குகின்றன.
65 களில் அப்போதைய காங்கிரஸ் அரசு, இந்தியை தமிழகத்தில் திணிக்க முயன்றதால்தான், திராவிட இயக்கங்கள் இந்தி எதிர்ப்புப் போராட் டத்தை நடத்தின. அது மாணவர்களின் போராட்ட மாக உருவெடுத்தது. அன்றைய காங்கிரசின் மொழி வெறி நடவடிக்கைகள்தான், தமிழகத்தில் திராவிட இயக்க எழுச்சியை ஏற்படுத்தி தி.மு.க. ஆட்சி பீடம் ஏறவும் வழிவகுத்தது.
அதன் மூலம் காங்கிரசின் ஆட்சிக் கனவு தமிழகத்தில் முழுதாகத் தகர்க்கப்பட்டது.
அன்று இந்தியை வைத்து தமிழகத்தையே தகிக்க வைத்த காங்கிரசின் தவறைத்தான், இப்போது மோடி அரசு, சமஸ்கிருதத்தையும் வைத்துக்கொண்டு செய்துகொண்டிருக்கிறது.
*
கடந்த 21-ந் தேதி, மத்திய அரசின் பிரசார்பாரதி நிறுவனத்தின் கீழ் இயங்கிவரும் தூர்தர்ஷனின் தலைமை அலுவலகம், தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் இருக்கும் மண்டலத் தொலைக்காட்சி நிலையங்களுக்கு ஒரு அதிரடி அரசாணையை அனுப்பியிருக்கிறது. அதில் தூர்தர்ஷன் தொலைக் காட்சியில் தினமும் காலை 7.15 மணி முதம் 7.30 மணி வரை 15 நிமிடங்கள் ஒளிபரப்பாகும் சமஸ்கிருதச் செய்திகளை அனைத்து மாநில தூர்தர்ஷன் தொலைக்காட்சிகளும் ஒளிபரப்ப வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
மேலும் ஒவ்வொரு சனிக்கிழமையிலும் மாலை 6 மணிக்கு டெல்லி தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகும் வாரந்திர சமஸ்கிருத செய்தித் தொகுப்பையும் அதே நாளில் ஏதேனும் ஒரு நேரத்தில் ஒளிபரப்ப வேண்டும் என்றும் அதில் வலிலியுறுத்தப்பட்டிருக்கிறது. இதன் மூலம் சமஸ்கிருதத்தை தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநில மக்கள் மீதும் பலவந்தமாகத் திணிக்க முயல்கிறது டெல்லிலி. இது மொழிவாரி மாநிலங்களின் உரிமைக்கு எதிராக டெல்லிலியின் யுத்தம்.
மத்திய அரசின் தூர்தர்ஷன் செய்திகள் அனைத்து மாநில அரசு சார்ந்த தொலைக்காட்சிகளிலும் , அந்தந்த மாநில மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு ஒளி பரப்பிவரும் நிலையில், எதற்காக இந்த சமஸ்கிருதச் செய்தி?.
இதை யார் கேட்டு புரிந்துகொள்ளப் போகிறார்கள். யாருக்குப் புரிந்தாலும் புரியாவிட்டாலும், சமஸ்கிருதத்தில் செய்தியை ஒளிபரப்பியே ஆக வேண்டும். என்பது வன்முறை அல்லவா?
இதை இங்கிருக்கும் தி.மு.க., ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், பா.ம.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகள் வன்மையாகக் கண்டித்திருக்கின்றன. எனினும் மத்திய அரசு, தனது முயற்சியைக் கைவிடவில்லை.
ஏற்கனவே மதவெறி அரசியலைக் கையில் எடுத்திருக்கும் மோடி அரசு, மொழிவெறி அரசாகவும் தன்னை மாற்றிக்கொண்டிருக்கிறது. அதனால்தான் அது தொடர்ந்து இந்திக்கும் சமஸ்கிருதத்துக்கும் பல்லக்குத் தூக்குகிறது. இந்த இரண்டு மொழிகளையும் வளர்க்கவும் பரப்பவும் திணிக்கவும் அது படாதபாடு படுகிறது.
மக்களால் பேசப்படாத மொழி என்பதால் தான் சமஸ்கிருதத்துக்கு "இறந்த மொழி' என்றபெயர் நிலவுகிறது. இறந்த மொழிக்குக் கட்டும் பல்லக்கின் பெயர் என்ன என்பதை எல்லோரும் அறிவார்கள்.
இந்தியாவில் சமஸ்கிருதம் தெரிந்த வர்கள் ஏறத்தாழ 15 ஆயிரம் பேர் என்று புள்ளி விபரங்கள் கூறுகின்றன. மோடி உட்பட மத்திய அமைச்சரவையில் இருக்கும் எவரும் சமஸ்கிருதத்தைப் பேசுவதில்லை. தற்காலப் படைப்பாளர்கள் எவரும் அந்த மொழியில் இலக்கியங்களைப் படைப்பதில்லை. பிராமணர்களின் ஆதிக்கத்தின் கீழ் இருக்கும் கோயில்களில் மட்டும் மந்திரமாக ஓதப்படுகிற மொழியாக மட்டுமே சமஸ்கிருதம் இருக்கிறது. அப்படி கோயில்களில் இந்த மந்திரங்களை ஓதக்கூடியவர்களுக்கும் கூட அந்த மொழியில் அறிவோ புலமையோ இருப்பதாகச் சொல்லமுடியாது.
இப்படிப்பட்ட சமஸ்கிருதத்தை, வேதம் மொழி என்றும் தேவ பாஷை என்றும் கூறிக்கொண்டு மற்றவர்கள் மீது திணிக்க முயல்வது எப்படி சரியாகும்?
*
சமஸ்கிருத மொழி மீது இவ்வளவு ஆர்வம் காட்டும் மத்திய அரசு, பிற மொழிகளின் வளர்ச்சி யில் கொஞ்சமும் அக்கறை காட்டுவதில்லை. காரணம் பிற மாநில மொழிகளை இந்திய மொழி என்றோ, அதைப் பேசுகிறவர் களை இந்திய மக்கள் என்றோ அது எண்ணவில்லை. மூன்று சமஸ்கிருத நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கங் களை மத்திய பல்கலைக்கழகங் களாக தரம் உயர்த்துகிறோம் என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அறிவித்தபோதே அதற்கு பல மாநில உறுப்பினர் களிடம் இருந்தும் பலமான எதிர்ப்பு எழுந்தது என்பதையும் நாம் மறந்து விடக்கூடாது.
சமஸ்கிருதத்தை விட தமிழ் பழமையான செம்மொழி என்று பல்வேறு பன்னாட்டு அரங்குகளில் பிரதமர் நரேந்திர மோடி வசனம் பேசி, அரசியல் நாடகம் நடத்துகிறார். ஆனால் அவர் அரசு, சமஸ்கிருத வளர்ச்சிக்காக ஒதுக்கும் தொகையில் கால் பங்கைக் கூட நம் தமிழுக்காக ஒதுக்கவில்லை. இதிலேயே டெல்லிலியின் ஓரவஞ்சனை பகிரங்கமாகிறது.
மாநில மொழிகள் என்ற எல்லைக்குள் வைத்துக்கொண்டு, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஒடியா மொழிகளின் வளர்ச்சிக்கு ஒதுக்கப்பட்ட நிதியை விட 22 மடங்கு அதிகமாக சமஸ்கிருதத்துக்கு டெல்லிஒதுக்கியிருக்கிறது.
இது பற்றிய தகவலை நாடாளுமன்றத்திலேயே வைத்த மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர், சமஸ்கிருத வளர்ச்சிக்காக 2019-20-ல் ரூ.231.15 கோடியையும், 2018-19-ல் ரூ.214.38 கோடியையும், 2017-18-ல் ரூ.198.31 கோடியையும் ஒதுக்கியதாக அதில் தெரிவித்திருக்கிறார்.
இதன்படி கடந்த 3 ஆண்டு களில் மட்டும் மொத்தம் ரூ.643.84 கோடி ரூபாயை சமஸ்கிருதத்தின் காலடியில் மோடி அரசு கொட்டியிருக் கிறது. அதே சமயம் கடந்த மூன்றாண்டுகளில் மோடி அரசு தமிழ் வளர்ச்சிக்காக ஒதுக்கிய மொத்த தொகையே வெறும் 23 கோடி தான். இதே அளவுக்குதான் மற்ற மாநில மொழிகளுக்கும் நிதியை கிள்ளிக் கொடுத்திருக்கிறது மோடி அரசு. இப்படி பிற மொழிகளிடம் பாரபட்சம் காட்டிவருகிற மோடி அரசு. எல்லா வகையிலும் சமஸ்கிருத்தைச் செல்லம் கொஞ்சிக் கொண்டாடி வருகிறது. அந்த வரிசையில்தான் இப்போது சமஸ் கிருதச் செய்தியை அனைத்து மாநில மக்களிடமும் திணிக்கும் அளவுக்கு அது வந்திருக்கிறது.
ஒரு மொழியை அழித்தால் அதைப் பேசுகிற இனமும் அழியும் என்கிறது கருத்துலகம். இந்த எண்ணத்தின் அடிப்படையில்தான் இலங்கையில் இனவெறி கொண்ட சிங்களர்கள், தமிழ் மொழியின் ஆவணங்கள் அடங்கிய யாழ் நூலகத்தை 81 ஜூன் 1-ந் தேதி இரவு தீவைத்துக் கொளுத்தி வெறிக்கூத்தை அரங்கேற்றினார்கள். அவர்களுக்கு இருந்த அதே இன வெறியும் மொழி வெறியும் மோடி அரசுக்கு இருப்பதையே அதன் நடவடிக்கைகள் காட்டுகின்றன. எனினும் தமிழகம் மோடி அரசுக்குத் தன் கடும் எதிர்ப்பைக் காட்டத் தொடங்கிவிட்டது.
*
மோடி அரசின் இது போன்ற மொழித்திணிப்பு முயற்சிகளுக்கு இங்கிருக்கும் முதுகெலும்பு இல்லாத எடப்பாடி அரசு, மறைமுக ஒத்துழைப்பைத் தந்துவருகிறது. குறிப்பாக, இங்குள்ள உலகத் தமிழாராய்ச்சி மையத்திலேயே இந்தி பயிற்சி வகுப்புகளையும், அதையடுத்து சமஸ்கிருத பயிற்சி வகுப்புகளை நடத்தும் முயற்சியில் இறங்கியது. முதற்கட்டமாக இந்தி பயிற்சி வகுப்பை தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மா.ஃபா.பாண்டியராசனே கூச்சமில்லாமல் தொடங்கிவைத்தார். ஆனால், அதைத் தமிழ்க் கவிஞர்களும் படைப்பாளர் களும் கடுமையாக எதிர்த்ததால், இந்திப் பயிற்சி வகுப்பை உடனடியாக மூட்டை கட்டியது எடப்பாடி அரசு.
டெல்லிலிக்கு அடிவருடும் இப்படிப்பட்ட ஆட்சி தமிழகத்தில் இருக்கும் வரை, தமிழுக்கு இது போன்ற சோதனைகள் வந்துகொண்டுதான் இருக்கும். இதையெல்லாம் தமிழினம் போராடி முறியடித்தே தீரும்.
-நம்பிக்கையோடு,
நக்கீரன்கோபால்