ர் இனத்தின் அடையாளமாகவும் பண்பாட்டு விழுமியத்தின் வெளிப்பாடாகவும் அமைவது இலக்கியங்கள். இதற்குச் சிறந்த சான்றாக விளங்குவன சங்க இலக்கியங்கள். செம்மொழியின் தகைமைக்கு அணிசேர்ப்பனவும் இவ்விலக்கியங்களேயாகும். இக்கட்டுரை அள்ளுர் நன்முல்லையாரின் பாடல்களின் மொழிநடை குறித்த சில சிந்தனைகளைப் பகிர்ந்துகொள்ளும்வண்ணம் அமைகிறது.

அகமும் புறமுமாகப் பிரிந்த சங்க இலக்கியங்களில் அகப்பாடல்கள் முழுமையும் அன்பின் மேன்மையையும் அதன்காரணமாகப் பிரிதல் நிகழும்போது தலைவிக்கு நேரும் அளவிடமுடியாத துயரையும் வெளிப்படுத்துவன. இவற்றில் பெரும்பான்மை விழுக்காடு காமத்தினை மையப்படுத்துவதாகும். இதற்கான முக்கியமான மையமாகப் பரத்தை திகழ்கிறாள். மிகு அன்பும், மிகு காமமுமாகவே அகப்பாடல்களின் தன்மையிருந்தாலும் இவற்றின் உட்கூறுகளாக அமையும் தன்னுணர்ச்சி, இரங்கற், வாழ்த்துப் பாடல்கள் என்பவை மேற்சுட்டியதை உறுதிச்செய்வதைக் காணலாம். இத்தகைய நிகழ்களின் விரிவாகவே மற்ற எல்லாக்கூறுகளும் பாடல்களில் விரித்துரைக்கப்படுகின்றன.

தான் பிறந்த ஊரின் பெயரால் அடையாளம் பெற்றவர் நன்முல்லையார். இவரின் பாடல்கள் மொத்தம் 11. குறுந்தொகையில் ஒன்பது பாடல்களும் அகநானூற்றில் ஒரு பாடலும் புறநானூற்றில் ஒரு பாடலுமாகப் பாடப்பட்டுள்ளன. இவற்றில் புறம் தவிர்த்து மற்றவை பெண்ணின் துயரைப் பற்றிய கவனத் திலேயே பாடப்பட்டுள்ளன. தலைவனின் பிரிவு ஏற்படுத்தும், பரத்தைமாட்டு ஒழுகும்போது ஏற்படும் துயரம், அதனால் ஏற்படும் உடல்மெலிவு, அதனால் ஏற்படும் ஊடலில் அல்லது கோபத்தில் வாயில் மறுத்தல் போன்றவை நன்முல்லையாரின் பாடல்களின் பொருண்மையாகின்றன.

பிரிவுத்துயரம் முக்கியமாக இவரது பாடல்களில் அங்கம் வகிக்கிறது. அதன் அடிப்படையில் பின்வரும் பாடலினைப் பார்க்கலாம்.

Advertisment

பூழ்க்கால் அன்ன செங்கால் உழுந்தின்

ஊழ்ப்படு முதுகாய் உழையினம் கவரும்

அரும்பனி யச்சிரந் தீர்க்கும்

Advertisment

மருந்துபிறி தில்லைஅவர் மணந்த மார்பே (குறு.68)

குறும்பூழ் பறவையினது காலைப்போன்ற செய்ய தாளையுடைய உழுந்தினது உதிர்தல் பொருந்திய முதிர்ந்த காயை மானினம் உணவாகக் கொள்ளும். அரிய குளிரினையுடைய முன்பனிக்காலத்துக் கொடுமையைத் தீர்க்கும் மருந்து அவரது கூடிய மார்பே வேறு இல்லை.

முதிர்ந்த உழுந்தின் காய் குறும்பூழ் (காடை) பறவையின் காலை ஒத்ததாக உள்ளது. அதாவது முதிர்ந்தது (முதுகாய்). முதிர்ந்த நிலைக்கு வந்து விட்டது பயன்பாட்டிற்கு வருதல் வேண்டும். ஆனால் உரியவருக்குச் சேரவேண்டிய பயன்பாடு உழையினத் திற்கு (மான் இனத்திற்குரிய இரையாக) மாறிவிடுகிறது உணவாக. ஆனால் இத்தகைய முன்பனிக் காலத்து எனக் குற்ற நோய்க்கான மருந்து தலைவனது மார்பன்றி வேறில்லை என்பதாகும்.

முதுகாயை உண்பது உறவற்ற உழையினம் தலைவியின் காமநோயை உண்பது பசலை - முதல் வாக்குமூலம்.

முதுகாயை உண்ணும் உழையினம் - நிகழ்ந்துவிட்ட செயல்.

காமநோயைத் தீர்க்கும் மருந்து - தலைவன் வராமை - நிகழாத செயல்.

முதுகாயை உழை தின்பதுபோல பசலை என்னைத் தின்கிறது.

இங்குக் குறிப்புப்பொருளால் தன்னுடைய நோயின் தன்மையைக் குறிப்பிடுகிறாள். முதுகாய் என்பது காமத்திற்கும் அதன் பயன்பாடு என்பது உழையல்ல. என் தலைவனின் மார்பே என்பதிலும் உறுதியாகக் குறிப்பிடுகிறாள். பசலையல்ல என்பதையும் குறிப்பாக உணர்த்துகிறாள்.

ஊழ்ப்படு முதுகாய் - இச் சொல் கூட்டுச்சொல் மற்றும் தொடர். ஊழ்ப்படுதல் என்பது இயற்கையாக பூவிலிருந்து மாறி காயாகிக் கனிவது. ஊழ்ப்படுதல் என்பது மலர்தல். அதிலிருந்து முதுகாயாக மாறுதல். அதேபோன்று களவு வாழ்க்கை விடுத்து கற்பு வாழ்க்கை என்பது ஊழ்ப்படுதல். இவையும் இயற்கை. ஆனால் உழையுண்பது இயற்கையல்ல. அரும்பனிகாலம் பலவற்றை எண்ண வைக்கிறது. எனவே காமம் நோயாகிறது. எனவே இதனைத் தீர்க்கும் மருந்து அவரது மார்பே என்கிறாள். இத்துயரில் அவளின் உடல் மெலிகிறது. மானினம் தன்னினத்தோடு இல்லாது உழுந்துண்ண வருகிறது. அவ்வாறே தலைவியின் நிலையும். தலைவன் மறந்துவிட்டான் உரிய காலத்தில் வந்து நோய் தீர்க்க என்பதாம். காமம் என்பதை நோயாகவே உறுதிப்படுத்துகிறாள். அதுவொரு இயற்கை உபாதை என்றும் அறிவுறுத்துகிறாள்.

ஒரு படைப்பின் பொருள் வளத்திற்கும் பலத்திற்கும் சொற்கள் முன்னிற்கின்றன. சொற்களின் ஆளுமை பாடலைச் சிறப்புறக் காட்சிப்படுத்துவதாகும். பெண்பாற்புலவர் பாடல்களில் பொதுவாகச் சொற்கள் மிகு ஆளுமையுடன் பொருளைப் புலப்படுத்துவதில் வலிமையுடன் இயங்குகின்றன எனலாம். சொற்களே நம்மிடம் பேசுகின்றன.

தலைவன் கூற்றாக அமைந்த பாடல் குறுந்தொகையில்

காலையும் பகலும் கையறு மாலையும்

ஊர்துஞ் சியாமமும் விடியலு மென்றிப்

பொழுதிடை தெரியிற் பொய்யே காமம்

மாவென மடலொடு மறுகில் தோன்றி

தெற்றெனத் தூற்றலும் பழியே

வாழ்தலும் பழியே பிரிவுதலை வரினே (குறு.32)

நடையைக் குறித்து கிப்பன் எட்வர்ட் குறிப்பிடுகையில் படைப்பினைப் படிக்கும்போது அது படிப்போரைக் கவர்ந்து, வயப்படுத்தும் கருவியாக அமையும் என்கிறார். மர்ரே குறிப்பிடும்போது நடை படைப்பாளியின் தனித்தன்மையின் அடையாளம். படைப்பை உணர்த்தும் உத்தி. மேலும் இலக்கியத்தின் உச்ச நயம் என்பார். இக்கருத்துக்களை மேற்சுட்டிய பாடலின் சொற்களில் பொருத்தியுணரலாம்.

dd

காலை, நடுப்பகல், மாலை, நடுஇரவு, விடியற்காலம் எனும் இவ்வைந்து பொழுதுகளும் வேட்கைநோய் கொண்டாரை வேறுபாடின்றி வருத்தும். இந்நிலையில் காமம் என்பது பொய்யாகிவிடுமா? எனத் தலைவன் கேட்கி றான். மேலும் இதற்குப் பிரிவு ஏற்படின் நான் மடலேறினால் அதன் காரணத்தை அறியும் இவ்வூர் அதற்குக் காரணம் தலைவியென அவளைத்தான் தூற்றும். இதுவும் பழியாகும். இதனையறிந்து நான் வாழ்தலும் எனக்குப் பழியாகும் என ஆற்றாமை மீதூரப் பேசுகிறான். காமத்தின் மீதான வேட்கையும், அது கிடைக் காமற்போயின் கிட்டும் பிரிவைப் பொறுக்காமையும் அதன்பொருட்டு இருவருக்கிடையில் நிகழும் பழியும் கொடுமை யானது என்பதுதான் இப்பாடல் உரைப்பது.

இதில் காலைப்பொழுது, பகல்பொழுது சற்று சிக்கலில்லை. ஆனால் மாலை வந்துவிட்டால் பொறுக்கமுடியாது. எனவே பொழுதே உதவிடாமல் உள்ளது. எனவே தான் அடை சேர்த்து கையறு மாலை என்பதைப் புலவர் பயன்படுத்துகிறார். மாலை என்பது உதவிடும் மாலைதான். ஆனால் அதுவே கையற்று நிற்கிறது. எனவே தலைவன் கையற்று நிற்கிறான்.

அதேபோன்று இரவைக் குறிப்பிடும்போது ஊர் துஞ்சும் யாமம். துஞ்சுதல் என்பது கிட்டத்தட்ட இறப்புநிலை. நடு இரவில் தன்னைமறந்து தூங்குதல் என்பது ஊரின் இயல்பாக உள்ளது. அதற்கு தலைவனின் ஆற்றாமை புரியவில்லை. எது நடந்தாலும் அதற்குத் தெரியாது. அத்தகைய ஆழ்ந்து உறக்கம் எனும்போது தன்னைச் சார்ந்த நிலை ஊருக்கு. எனவேதான் வலியின் அழுத் தத்தைக் குறிப்பிட கையறு மாலை, துஞ்சு யாமை என்கிற சொற்களைப் புலவர் பயன்படுத்தி காமத்தின், ஆற்றாமையின் கொடுமையை உணர்த்து கிறார். அதேபோன்று பழியே என்கிற ஒருசொல் இருவேறு நிலைகளைக் கைக்கொள்கிறது. ஒன்று தூற்றல் இன்னொன்று வாழ்தல். தூற்றுதலால் பழி வரும். பழியால் வாழமுடியாது. எனவே வாழ்தலும் பழியாகிவிடுகிறது. சொற்களின் அழுத்தம் இப்பாடலில் விரவிப் பாடலின் பொருண்மையைச் சிறப்புற வைக்கிறது. நடையின் சிறப்பில் சொற்கள் வலுவான இடத்தைப் பிடிக்கின்றன. இது படைப்பாளனின் உத்திகளில் ஒன்றாக மிளிர்கிறது.

ஒரு பாடலுக்கு இன்றியமையாதது வடிவமும் பொருளும். இவை ஒன்றுடன் ஒன்று நெருங்கிய உறவு கொண்டது. சிறந்த வடிவம் சிறந்த பொருளை வெளிப்படுத்தலும் சிறந்த பொருள் சிறந்த வடிவத்தைத் தக்க வைத்தலும் ஒரு பாடலுக்குச் சிறப்பாகும். வடிவத்தின் வழியாக நினைத்தவற்றை வெளிப்படுத்தும் பொருள் புலப்பாடு என்பது படைப்பாளனைக் காலத்திற்கும் நினைக்க வைக்கிறது. இதில் நன்முல்லையார் எளிய உவமைகள், காட்சிப்படுத்தல், இயற்கையின் கூறுகள் இவற்றை உத்திகளாகப் பயன்படுத்தி அவற்றின்வழி பாடலின் பொருளைப் புலப்படுத்துவது அருமையாக உள்ளது. இதனைச் சில சான்றுகள் வழி கண்டறியலாம்.

களிறுபொரக் கலங்கு கழல்முள் வேலி

அரிதுஉண் கூவல் அங்குடிச் சீறூர்

ஒலிமென் கூந்தல் ஒண்ணுதல் அரிவை

நடுகல் கைதொழுது பரவும் ஒடியாது

விருந்துஎதிர் பெறுகதில் யானே என்ஐயும்

ஓ........வேந்தனொடு

நாடுதரு விழுப்பகை எய்துக எனவே (புற.306)

மறக்குடி மகளிரின் இல்லத்திற்குச் சென்ற நன்முல்லையார் அம்மறக்குடி மகள் நடுகல்லை வழிபட்டு தன் இல்லத்திற்கு நாளும் விருந்து வரவேண்டுமென்றும்,. தன் கணவன் போரில் வெற்றி காணவேண்டும் அதற்கெனப் போர்செய்யும் பகை வேந்தர் உண்டாகவேண்டும் என்று வேண்டுவதைக் கண்டு வியப்புறுகிறார். அதுவே இப்பாடலாக மலர்கிறது. வீரநிலை சமுகத்தில் ஒரு பெண் இத்தகைய வீரப்பண்புடன் இருப்பதைக் காணும் நன்முல்லையார் அதனோடு ஒத்த மனதுடையவராக இருப்பதால் இதனைப் பாடவேண்டும் என்று எண்ணுகிறார்.

குறைந்த நீர் உள்ள, குடிப்பதற்கு அரிதாக உள்ள நீர்நிலையைக் களிறு கலக்கும் சிறிய குடிகளைக் கொண்ட ஊர். இதன் பொருளாதார சூழலை விளக்குகிறார். இருப்பினும் இத்தகைய சிறிய ஊரிலும் வறுமையிலும் செம்மையாக வாழ்கிற பெண் என்பதை தழைத்த கூந்தலும் ஒளியுடைய நெற்றியும் என உவமைப்படுத்துகிறார். அதற்குக் காரணம் அப்பெண் வீரநிலை மாண்பைக் கொண்டவளாக இருப்பதே.

அதற்குக் காரணமாக நடுகல்லை வணங்குகிறாள். விருந்து வரவேண்டும் என்கிற அவள் மனவுணர்வு போற்றத்தக்கது. இதனை வெளிப்படுத்துகிறார் இப்பாடலில்.

சேற்று நிலை முனைஇய செங்கட் காரான்

ஊர் மடி கங்குலி-, நோன் தளை பரிந்து

கூர் முள் வேலி கோட்டின் நீக்கி

நீர் முதிர் பழனத்து மீன் உடன் இரிய

அம் தூம்பு வள்ளை மயக்கி, தாமரை

வண்டு ஊது பனி மலர் ஆரும் ஊர

யாரையோ? நிற்புலக்கேம் வாருற்று

உறை இறந்து ஒளிரும் தாழ் இருங் கூந்தல்

பிறரும், ஒருத்தியை நம் மனைத் தந்து

வதுவை அயர்ந்தனை என்ப, அஃது யாம்

கூறேம், வாழியர், எந்தை, செறுநர்

களிறுடை அருஞ் சம்ம் த்தைய நுறும்

ஒளிறு வாட தானைக் கொற்றச் செழியன்

பிண்ட நெல்லின் அள்ளூர் அன்ன என்

ஒண் தொடி நெகிழினும் நெகிழ்க

சென்றீ பெரும நிற் தகைக்குநர் யாரோ?

(அக.46)

இப்பாடல் சற்றே நீண்ட அடிகளைக் கொண்டது என்றாலும் ஒரு நாடகப் பாங்கினைக் கொண்டதாக உள்ளது. இதில் காட்சியமைப்பும் நேர்த்தியாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. மாந்தர்கள் எள்ளல் சுவையுடன் அதேசமயம் உணர்வின் வேகத்திலும் சொற்களை வீசுகிறார்கள். மெல்லிய அம்புகளைப் போலப் பாய்கின்றன சொற்கள். அது ஏறபடுத்தும் விளைவுகள் ஆழமானவை.

காரான் - கரிய நிறமுடைய எருமை. அதற்கென உள்ள கொட்டில்.

அங்குள்ள நீரையும் சாணத்தையும் அதுவே குழப்பிச்

சேறாக்கி

பின் அதனை வெறுக்கிறது. கயிற்றை அறுக்கிறது. கொம்பால்

வேலியைத் தகர்க்கிறது. வண்டுகள் உறங்கும் தாமரைப் பூவை உண்கிறது.

தோழி தலைவனிடத்துப் பேசுகிறாள். எருமைபோல நீ என்கிறாள்.

உன்னைப் பாதுகாத்த இடத்தை வெறுத்து.. சேறாக்கி...நாணம் எனும்

வேலியைத் தகர்த்து.. பரத்தையரையடைய விறலியை பாணன்

என்னும் கோட்டாலே (கொம்பாலே) விலக்கி..பரத்தையரின் தாயை

மயக்கிக் கூடா ஒழுக்கம் கொண்டவன் அல்லவா நீ.

தலைவனுக்கு உணர்த்துவது. அன்பில்லாத தலைவன்

அயலவன்.

எனவே அவன் குறித்து செய்தியுரைக்கும் யாவரும் அயலவர்.

நீ எங்கு சென்றால் என்ன? நாங்கள் அதைப்பற்றிக் கவலைப்படவில்லை. உன்னைப்போன்ற அயலவர்தான் எங்கள் வீடுதேடி வந்து சொன்னார்கள் உன் கூடா ஒழுக்கத்தின் செயற்பாட்டை. நீ விரும்பிய வண்ணம் செல்க. வாழ்க. உன்னால் அள்ளூர் போன்ஃ என் வளையல் கைவிட்டு நெகிழ்ந்தால் நெகிழட்டும். கவலையில்லை. சென்றீ.

முக்கோணமாய் மூன்று காட்சிகள். ஒரு நாடகம்போல இயங்குகிறது பாடல். இயல்பான கொட்டிலில் கிடக்கும் எருமை அதற்குரிய பாதுகாப்பை உணராது அதனை அதுவே சேறாக்கிக் குழப்பி வெளியேதான் சுதந்திரம் எனச் செல்வது அறியாமை. முரட்டுத்தனத் தால் அது இனிய, மென்மையான தாமரையை உண்கிறது கொடுமையாய். இது தலைவன் இருக்கும் ஊரில் நிகழ்வது. எனவே தலைவனும் இத்தன்மை கொண்டவன் என்பது உறுதிப்படுகிறது.

அன்பில்லாதவன் மிருகத்திற்கு சமம் எனவே எருமைக்கு சமம். எனவே இதனை யாரும் விரும்பார். இவ்வாறு அன்பில்லாத செயலை - கூடா ஒழுக்கம் மேற்கொள்ளும் தலைவன் எப்படி தலைவிக்கு உகந்தவன் ஆவான். எனவே அயலவன் ஆனான். தொடர்பற்றவன்.. நல்லவன் என்று எண்ணியதால் வருத்தம் மேலிட வளை நெகிழ்கிறது. வளை எப்படிப்பட்ட வளை அள்ளூர் போன்ற எல்லா வளங்களும் இன்பமும்நிறைந்தவளை. நெகிழட்டும் அன்பற்று. அது இயல்பானது. தலைவனாகிய நீ எங்கு வேண்டுமானாலும் கட்டற்றுச் செல்லலாம் ஆனால் தலைவி அப்படியில்லை. ஒழுங்குக்குட்பட்டிருக்கிறாள்.

எனவே தலைவன் சென்ற இடம் அறியாள். ஆனால் அவள் வீடுதேடி வந்து தலைவன் பரத்தையுடன் கூடாஒழுக்கம் கொண்டிருப்பதைச் சொல்லிவிட்டுப் போகிறார்கள். எனவே அதன்பின் அவள் தலைவனுடன் ஊடல் கொண்டு எள்ளி நகையாடுகிறாள். செல்க. வாழ்க என்கிறாள். உணர்வு தளும்பிய சொற்களுடன் இப்பாடல் நாடகமாய் காட்சிப்படுகிறது. இதன் பின்னணியில் ஒரு ஆணின் பண்பற்ற செயலும் ஒரு பெண்ணின் வரன்முறையான வாழ்க்கையும் உணர்த்தப்படுகிறது.

யாரையோ? நிற் புலக்கேம்... என்ற சொற்கள் எல்லாவற்றையும் காட்சிப்படுத்திவிடுகின்றன. யார் நீ? அன்பில்லாதவனான நீ யாரையோ? நின்னை புலக்கமாட்டோம்..

அஃது யாம் கூறேம்

ஏன் கூறவேண்டும். அதற்கான தேவை என்ன? ஊரே கூறுகிறது உன் ஒழுங்கற்ற செயலை. இதில் நாங்கள் வேறு கூற வேண்டுமோ?

வாழியர், எந்தை வாழ்த்துகிறார்கள் எள்ளலுடன்.

பிண்ட நெல்லின் அள்ளூர் அன்ன என்

ஒண் தொடி நெகிழினும் நெகிழ்க

சென்றீ..பெரும.. நிற் தகைக்குநர் யாரோ?

செல்வாய். பெரும. உன்னை யார் தடுப்பார்? ஏன் தடுக்கவேண்டும். நீதான் அயலவன் ஆயிற்றே.

அன்பில்லாதவன் ஆயிற்றே. ஒழுங்கற்றவன் ஆயிற்றே. உன் கண்ணிய்ப் பாதுகாப்பையும் சேறாக்கி உடைத்தவன் அல்லவா? கூடா ஒழுக்கம் சிறந்த்து என்று சென்றவன் அல்லவா? பெரும வேறு. இப்படி பல உணர்வுகளைப் பாடலில் வைத்துக் காட்சிப்படுத்தி வெளிப்படுத்து கிறார்.

வெளிப்படுத்தலில முடிவை முன்னரே சுட்டி பின் அதற்கான காரணத்தை வெளிப்படுத்தும் உத்தியும் பின்வரும் பாடலின் வழியாக உணர்த்துகிறார்.

நோம்என் நெஞ்சே நோம்என் நெஞ்சே வருத்தப்படி நெஞ்சமே வருத்தப்படு நெஞ்சமே. ஏன் என்றால் முல்லை நிலத்தில் சிறிய அழகான இலைகளையும் அழகான மலர்களையும் பிரசவித்தபின் நெருஞ்சியானது முள்ளையும் பிரசவித்துத் துன்பம் செய்கிறது. இது வேண்டுமென்று செய்வதில்லை. நெருஞ்சியில் மட்டுமல்ல முள்ளைக்கொண்ட ரோஜாவிலும்கூட முள் உண்டு. அது இயற்கையானது.

ஆனாலும் தலைவிக்கு இப்படி அழகாக மலருடன் ஏன் முள்ளையும் படைத்தான்.மலரைப் பறிக்கும்போது முள் காயம் ஏற்பட்டால் அது மலருக்கான பாதுகாப்பாக உணர்த்தப்படுகிறது. எனவே மலருக்கு முள் பாதுகாப்பாகும் என்பர். ஆனால் இதைப் பார்க்கிற தலைவி இதைப் போன்றதுதான் தலைவனும் என்கிறாள். அதாவது இயற்கையில் மலரை முள் எதுவும் செய்வதில்லை. மற்றவருக்குத்தான் துன்பம் தருவது. எனவே தனக்குப் பாதுகாப்பாக அந்த முள்ளைப் போன்றிருக்காமல் முள் மலரையே காயப்படுத்தலாமா? துன்பத்தைத் தரலாமா? இயற்கையின் மாறுபாடு அல்லவா? எனவேதான் இனிய செய்த தலைவன் இன்னாவும் செய்கிறான். இயற்கையின் மாறுபடுகி றான் என்று இயற்கையான மலரையும் முள்ளையும் மலரையும் முரணாக்கிக் காட்சிப்படுத்துகிறாள் தலைவி. இதுவொரு புது உத்தியாகும்.

அள்ளூர் நன்முல்லையாரின் பாடல்கள் மொத்தம் 11 தான். என்றாலும் அகத்தின் சிறப்பையும் பெண்ணின் உணர்வுகளையும் தலைவனின் செயற்பாடுகளையும் பல்வகைச் செயற்பாடுகளின் அழுத்தத்தால் உணர்த்து கிறார். அவரின் மொழிநடை சொல்லுகிற முறையாலும், வெளிப்படுத்தும் தன்மையாலும், படைத்துள்ள சொற்களாலும், அவரின் அனுபவத்தின், படைப்பாளுமையின் திறனை, மொழியைக் கையாளும் போக்கைக் கண்டறியமுடிகிறது. வாழ்க்கை என்பது உணர்வுகளால் நிரம்பியது. உணர்வுகளே சுவை கூட்டுபவை. இவற்றை இயற்கையான மொழிநடையில் அழுத்தமாகவும் ஆழமாகவும் சுவையாகவும் எள்ளலுடனும் முரண் சுவையிலும் நன்முல்லையார் படைத்துக்காட்டியுள்ளமை அனுபவித்தற்குரியது.