பொதுவாகவே இசை ரசிகர்களிடம் ஒரு குழப்பம் எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். யார் இசையமைத்தது என்று சரியாகத் தெரியாமல் தாங்களாகவே ஒரு அனுமானத்தில் இவர் இசையமைத்ததுதான் என்ற எண்ண ஓட்டத்திலேயே அந்த பாடலை ரசித்துக்கொண்டிருப்பார்கள். ஜி.ஆர்.சுப்பராமன், இசையை கே.வி.மகாதேவன் இசை என்றும், கே.வி.எம் இசையை எம்.எஸ்.வி இசை என்றும், எம்.எஸ்.வி. இசையை இளையராஜா இசை என்றும், சங்கர்கணேஷ், சந்திரபோஸ் இசையை இளையராஜா இசை என்றும் நினைத்துக்கொள்வதுண்டு. ஒரு கட்டத்தில் விவரம் தெரியவரும் போதுதான், அடடே! என்று வியந்துபோவார்கள்.
இசையமைப்பாளர்களுக்கு மட்டுமல்ல, எஸ்.பி.பி. - மனோ, இயேசுதாஸ், ஜெயச்சந்திரன் போன்ற பாடகர்களின் நிலைமையும் இதேதான். மனோ பாடல் களை எஸ்.பி.பி. பாடியது என்றும், ஜெயச்சந்திரன் பாடியதை இயேசுதாஸ் பாடியது என்றும் நினைத்துக் கொள்வதுண்டு. குரல் வளம் கொஞ்சம் ஒத்துப்போவ தால் இவர்களைப்போலவே இன்னும் நிறைய பாடகர் களுக்கும் இதே நிலைமைதான்.
அப்படித்தான் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ணதாசன், வாலி எழுதிய பாடல்கள் என்று பலரும் நினைத்துக்கொண்டிருக்கும் பல பாடல்களை எழுதியவர் அ.மருதகாசி.
மருதகாசி எழுதிய சில பாடல்களைச் சொன்னால் உங்களுக்கே இது புரியும்.
காவியமா? நெஞ்சின் ஓவியமா?
மாசில்லா உண்மைக் காதலே...
வசந்த முல்லை போலே வந்து...
முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போல...
அழகான பொண்ணுநான் அதுக்கேத்த கண்ணுதான்...
வாராய் நீ வாராய்
ஆடாத மனமும் உண்டோ
நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே
தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும்
உலவும் தென்றல் காற்றினிலே...
சித்தாடை கட்டிக்கிட்டு
மாட்டுக்கார வேலா உன் மாட்டைக் கொஞ்சம் பார்த்துக்கடா
தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம்
என்னை விட்டு ஓடிப் போக முடியுமா
கோடி கோடி இன்பம் பெறவே
மணப்பாறை மாடு கட்டி மாயவரம் ஏருபூட்டி
கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி
சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா
கண்ணதாசனும், மருதகாசியும் ஒரே காலகட்டத்தில்- 1949ஆம் ஆண்டில் சினிமாவுக்கு வந்தாலும், கண்ணதாசனுக்கு முன்பே சினிமாவில் கோலோச்சியவர் மருதகாசி. வயதிலும் கண்ணதாசனைவிட ஏழு வயது மூத்தவர்.
உடுமலை நாராயண கவியைப்போல் பாடல் எழுத இன்னொருவர் பிறக்க வேண்டும் என்று இசையமைப்பாளர் சி.ஆர்.சுப்பராமன் சொன்னபோது, அவரை விட சிறந்த நூற்றுக்கணக்கானவர் களை உருவாக்குவேன் என்று கண்ணதாசன் குரல் கொடுத்தபோது, பலரும் ஏளனமாகச் சிரித்தார்கள். அப்போது அப்படிச் சிரித்தவர்களில் எம்.எஸ்.விஸ்வநாதனும் ஒருவர். அந்த அளவுக்கு அப்போது புகழ் உச்சியில் இருந்த உடுமலை நாராயணகவி, தனது திரைப்பாடல் வாரிசாக மருதகாசியை கருதி, அவர் மேல் அன்பு வைத்திருந்தார். மருதகாசியும் உடுமலை நாராயணகவியை தனது குருவாக பாவித்தார். உடுமலையை அன்று சி.ஆர்.சுப்பராமன் புகழ்ந்தது போலவே, இன்று, உலகத்திலேயே கண்ணதாசன் தான் சிறந்த கவிஞன் என்று இசையமைப்பாளர் இளையராஜா புகழ்கிறார்.
அவரே, கேட்டமாத்திரத்தில் உடனே மெட்டுக்கு பாட்டு எழுதுவதில் வல்லவர் கண்ணதாசன் என்றும் புகழ்ந்து வருகிறார். ஆனால், ஆரம்ப காலங்களில் மெட்டுக்குப் பாட்டு எழுதுவது கண்ணதாசனுக்கும் சிரமமானதாகவே இருந்திருக்கிறது. மெட்டுக்கு பாட்டு என்பதில் அவருக்கு உடன்பாடும் இல்லாமல் இருந்திருக்கிறது. மெட்டுச்சிறையில் போட்டு மடக்கி, பாடலாசிரியனின் கற்பனையை கொன்றுவிடுகிறார்கள் என்பது கண்ணதாசனின் எண்ணம். ஆனால், மெட்டுக்குப் பாட்டு எழுதுவதில்தான் மருதகாசிக்கு மகிழ்ச்சி.
"வஹினிஞ்சிய பாங்டியா' என்ற மராத்திய படத்தை தழுவி எடுக்கப்பட்ட தமிழ்ப்படம் மங்கையர் திலகம். அதில் ஒரு தாலாட்டுப்பாடல். மாராட்டியப் பாடலின் மெட்டிலேயே தமிழில் எழுத முதலில் கண்ணதாசனை அழைத்தார் இயக்குநர் எல்.வி.பிரசாத். அந்த மெட்டுக்கு கண்ணதாசன் எழுதிய பாடலில் பிரசாத்துக்கு திருப்தி இல்லை. அதன் பின்னர் மருதகாசியை அழைத்தார். "நீல வண்ண கண்ணா வாடா நீயொரு முத்தம் தாடா' என்று அவர் எழுதியது, மூலப்பாடலை விடவும் இது நன்றாக இருக்கிறது என்று பேசப்பட்டது. இதையடுத்து 1950-ல் "மந்திரிகுமாரி' படத்தில் "வாராய் நீ வாராய்' பாடலை எழுதியதும் மருதகாசிக்கு ஏறுமுகம்தான். தஞ்சை ராமையாதாஸ், உடுமலை நாராயணகவி கோலோச்சிக்கொண்டிருந்த காலத்தில் தன் கொடியை' பறக்கவிட்டார் மருதகாசி.
மெட்டுக்கு பாட்டு எழுதுவது என்பது உடுமலை நாராயணகவிக்கு எட்டிக்காயாக இருந்தது.
இந்தி மெட்டுக்கும், வங்காள மெட்டுக்கும் பாடல் எழுதுவதை, தோசைக்கல்லுக்கு எழுதும் பாடல் என்று எரிச்சல் பட்டிருக்கிறார். கிராமபோன் ரிக்கார்டுகள் தோசைக்கல்லைப்போல் கறுப்பாகவும், வட்டமாகவும் இருந்ததால், அதில் வரும் மெட்டுக்கு ஏற்றாற்போல் பாட்டு எழுத வேண்டியது இருந்ததால் அவ்வாறு குறிப்பிடுவார்.
பிறமொழி மெட்டுக்களுக்கு பாட்டு எழுதும் வாய்ப்பு தனக்கு வந்தபோதெல்லாம் அதை மருதகாசிக்கு அனுப்பிவிடுவார் உடுமலை. அப்படித்தான் தனக்கு வந்த அலிபாபாவும் நாற்பது திருடர்களும் பட வாய்ப்பை மருதகாசிக்கு கொடுத்தார் உடுமலை. "தேகோஜி சாந்த் நிக்லா பிசே கஜூர் கே' எனும் பாடல் மெட்டுக்கு, அதை தமிழில் மொழிபெயர்த்தால் "பாருங்கள் நிலா வந்தது பேரீச்சம் மரத்தின் பின்னே' என்று வரும். ஆனால், மருதகாசியோ, "அழகான பொண்ணு நான் அதுக்கேத்த கண்ணுதான்' என்று அட்டகாசமாக எழுதினார். அதே போல, "படீ ஹீயி கிஸ்மத்கா சாதர் ஸியேஜா ஸியேஜா' எனும் பாடலை தமிழில் அப்படியே மொழிபெயர்த்தால் "கிழிந்து போன விதியெனும் துகிலை தையடா தையடா' என்று வரும். ஆனால் மருதகாசியோ, "உல்லாச உலகம் உனக்கே சொந்தம் செய்யடா செய்யடா செய்யடா' என்று எழுதி அப்பாடலை பெரும் ஹிட் ஆக்கினார்.
கண்ணதாசன் வசனகர்த்தாவாக தனது பாதையை மாற்றிக்கொண்டு வலம் வந்துகொண்டிருந்த காலத்தில் திரையுலகில் முதன்மைக்கவிஞராக கொடிகட்டிப் பறந்தார் மருதகாசி. பின்னர், கண்ணாதாசன் கொடிகட்டிப் பறந்த காலத்தில் மருதகாசிக்கு வாய்ப்புகள் குறைந்தன. இந்த நிலையில், சொந்தப்படம் எடுத்த சோகக்கதை வேறு. நான்காயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள் எழுதி சம்பாதித்த பணத்தை, ஒரே ஒரு சொந்தப் படத்தைத் தயாரித்து இழந்து கடனாளி ஆனார்.
மருதகாசி, கே.வி.மகாதேவன், வி.கே.ராமசாமியின் தம்பி முத்துராமலிங்கம், வயலின் மகாதேவன் ஆகிய 4 பேரையும் பங்குதாரர்களாகக் கொண்ட எம்.எம்.புரொடக்ஷன்ஸ் படக்கம்பெனி சார்பில் "அல்லி பெற்ற பிள்ளை' என்ற படம் தயாரிக்கப்பட்டது. 31-7-1959-ல் வெளிவந்த இப்படம் தோல்வியைத் தழுவியது. இதுகுறித்து மருதகாசியின் தம்பி அ.முத்தையன், "என் அண்ணன் ஒரே ஒரு படம் எடுத்தார். குசேலர் ஆனார்' என்று கூறியுள்ளார்.
பட வாய்ப்புகள் குறைந்து, அல்லி பெற்ற பிள்ளையால் நஷ்டமடைந்து சொந்த ஊருக்கே சென்று விவசாயம் பார்த்துக்கொண்டிருந்தார் மருதகாசி. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மேலக்குடிக்காடு கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் 13-2-1920-ல் பிறந்த மருதகாசியும் விவசாயம் பார்த்து வந்தவர்தான். அதன் பின்னர் தான் பாட்டெழுத வந்தார். 20-வயதில் 1940-ல் திருமணம் செய்துகொண்டார். மருதகாசி - தனக்கோடி அம்மாளுக்கு 6 மகன்கள், 3 மகள்கள்.
மருதகாசியின் தாத்தா பெரும் பண்ணையார்.
அந்த ஊருக்கு நாடகம் நடத்த எம்.ஆர்.ராதா, பாலையா என்று வரும் நாடகக்குழுக்கள் தங்குவதற்கும், சாப்பிடுவதற்கும் ஏற்பாடு செய்வார் மருதகாசியின் தாத்தா. அப்படி வந்த பழக்கத்தில்தான் நாடகங்களுக்குச் சென்று அதன் மூலமாக சினிமாவுக்கு பாட்டெழுத வந்தார். நாடகக் குழுக்களில் திருச்சி லோகநாதன் இசைமெட்டுக்களுக்கு பாடல் எழுதி வந்தார் மருதகாசி. 1949-ல் சேலம் மாடர்ன் தியேட்டர் டி.ஆர்.சுந்தரம், டி.ஆர்.மகாலிங்கத்தை வைத்து, "மாயாவதி' என்ற படத்தை எடுத்தபோது, நாடகப்புகழ் கவிஞராக இருந்த மருதகாசியின் பெருமையை திருச்சி லோகநாதன், சுந்தரத்திடம் எடுத்துச்சொல்ல, அப்படத்தின் மூலம் பாடலாசிரியர் ஆகும் வாய்ப்பு கிடைத்தது மருதகாசிக்கு.
பல ஏக்கரில் விவசாயம் செய்ததால் மருதகாசியுடன் 400 பேர் வேலை பார்த்தார்கள். கும்பகோணம் அரசுக்கல்லூரியில் உயர்கல்வி படித்தாலும் வேலையாட்களுடன் சேர்ந்து மருதகாசியும் ஏர் ஓட்டுவார். போர் அடிப்பார். விவசாயக் குடும்பத்தில் பிறந்து, தானும் ஒரு விவசாயியாக இருந்ததால்தான் அவர் பாடல்களில் தமிழ் மண்ணின் கலாச்சாரத்தையும், விவசாயிகள் நிலையையும் உணர்வுப்பூர்வமாக பதிவு செய்தார்.
"தரையைப் பார்த்து நிக்குது நல்ல கதிரு, தன் குறையை மறந்து மேலே பார்க்குது பதரு, அதுபோல் அறிவு உள்ளது அடங்கிக் கிடக்குது வீட்டிலே, எதுக்கும் ஆகாத சிலது ஆர்ப்பாட்டம் பண்ணுது நாட்டிலே -
அதாலே
மனுசன மனுசன் சாப்பிடுறாண்டா தம்பிப்பயலே
என்ற மருதகாசியின் வரிகள் எக்காலத்திற்கும்
ஏற்றதாக இருக்கிறது.
"மழை சொட்டு சொட்டுன்னு சொட்டுது பாரு
அங்கே..' என்ற பாடலில்,
"கஷ்டப்பட்டு ஏழை சிந்தும் நெத்தி வேர்வைபோலே,
அவன்
கஞ்சிக்காகக் கலங்கிவிடும் கண்ணீர்த் துளியைப்போலே,
முட்டாப் பயலே மூளை இருக்கா என்று ஏழை மேலே
துட்டுப் படைச்ச சீமான் அள்ளிக் கொட்டுற
வார்த்தைபோலே
மழை சொட்டு சொட்டுன்னு சொட்டுது பாரு அங்கே
என்று காதல் டூயட்டில் கூட பாமரர்களின் நிலையை பதிவுசெய்திருப்பார்.
கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி, மணப்பாறை ஏரு பூட்டி, மனுசன மனுசன் சாப்பிடுறாண்டா, ஏர் முனைக்கு நேர் இங்கு எதுவுமே இல்லை என்று எடுத்துக்காட்டாக நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.
சொந்த ஊருக்கு போய் விவசாயம் பார்த்துக் கொண்டிருந்த மருதகாசியை, மீண்டும் திரையுலகிற்கு அழைத்து வந்து, தனது படங்களில் தொடர்ந்து வாய்ப்புக் கொடுத்து பாட்டெழுத வைத்தார் எம்.ஜி.ஆர். நான்காயிரம் பாடல்களுக்கு மேல் எழுதி, "திரைக்கவித் திலகம்' என்று போற்றப்பட்ட மருதகாசியின் திரையிசைப் பாடல்கள் அனைத்தும் கடந்த 2007-ஆம் ஆண்டில் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.