டுக்குமுறைக்கு எதிரான விடுதலையின் குரல்கள் எப்போதும் இலக்கியத்தில் பேசப்பட்டு இருக்கின்றன. மண் விடுதலை பேசிய அளவுக்குப் பெண் விடுதலை குறித்த கலைநுட்பங்கள் பேசப்படவில்லை.

புறக்கணிப்புக்கு உள்ளாகும் இருளின் நிழலாக இருப்பவர்கள் பெண்கள். அந்த இருளின் நிழலைத் தன் எழுத்தில் படம்பிடித்துக் காட்டுபவர்தான் அரை நூற்றாண்டுகள் கடந்தும் எழுதி வரும் அம்பை!

விடியலுக்கான அங்கீகாரம் பறவைகளின் கீச்சொலி; கல்விக்கான அங்கீகாரம் பல்கலைக் கழகங்கள் வழங்கும் சான்றிதழ்; காற்றுக்கான அங்கீகாரம் அசைந்து கொடுக்கும் தாவரங்களின் இலைகள். அந்த வகையில் படைப்பாளிகளுக்கான அங்கீகாரமாக அமைவன விருதுகள். தேசிய அளவிலும், மாநில அளவிலும் படைப்பை அங்கீகரித்து வழங்கப்படும் சாகித்திய அகாதெமி விருது தேசத்தின் மிக உயரிய விருதாகக் கருதப் படுகிறது. 2021-ஆம் ஆண்டிற்கான இவ்விருது எழுத்தாளர் அம்பைக்குக் கிடைத்திருப்பது எல்லோரையும் பெருமைப்பட வைத்திருக்கிறது. சி.எஸ். லட்சுமி என்ற இயற்பெயர் கொண்ட இவர் தென்னகத்துத் திராவிடப் பெண் தெய்வமான அம்பையின் பெயரைப் புனைபெயராகச் சூடிக் கொண்டார். கட்டுரைகளை இயற்பெயரிலேயே எழுதி வருகிறார்.

அம்பைக்குக் கிடைத்த விருது என்பது ஒட்டுமொத்த பெண்களுக்கும் கிடைத்த விருதாக மகிழ்ச்சி தருகிறது. இந்த விருது அனைத்துப் பெண்களைக் கொண்டாடுவதற்குச் சமமான விருது. பெண்களின் தனித்த இயல்புகளை, உரிமைகளை, அனைத்துப் பெண்களுக்குமான எழுத்துக்களை, பெண்ணின் மன உணர்வுகளை நுட்பமாகச் சொல்வதில் வெற்றிபெற்றவர் இவர். இவரின் ‘சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை’ என்ற பதிமூன்று சிறுகதைகள் அடங்கிய சிறுகதைத் தொகுப்புக்கு இவ்விருது அறிவிக்கப் பட்டிருக்கிறது.

Advertisment

பதின்பருவத்திலியே அதாவது 1960-களிலிருந்து எழுத்துலகில் நடைபயின்ற அம்பையை ‘வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’ என்ற சிறுகதைத் தொகுப்பு தவிர்க்கமுடியாத வேறு ஓர் உயரத்திற்கு அழைத்துச்சென்றது. தமிழ் நவீனப் பெண்ணிலக்கியத்தில் அம்பை உருவாக்கிய தடம் அழுத்தமானது. சுருக்கமாகச் சொன்னால் இவரின் எழுத்துக்கள் என்பவை அடக்குமுறைக்கு எதிரான போர்க்குரல் என்று சொல்லிவிடலாம்.

acde

Advertisment

பெரியாரின் பெண் விடுதலைக் கருத்துக்களுக்கு இலக்கிய வடிவம் கொடுத்தால் அங்கே அம்பையின் படைப்புகள் உயிர் பெற்றுவிடும். பெண்கள் கையில் இருக்கும் கரண்டியைப் பிடுங்கிக் கொண்டு புத்தகத்தைக் கொடுங்கள் என்ற பகுத்தறிவு பகலவன் கூறியதைச் செயல்படுத்தும் முயற்சியாக பெண்களின் கையில் இருக்கும் கரண்டியைப் பறிக்கும் செயல்பாட்டைச் செய்திருக்கின்றன இவரின் படைப்புகள். பல நேரங்களில் கரண்டி பறிக்கப்படாமல் புத்தகம் கொடுக்கப்பட்டிருக்கிறது. உயர் அதிகாரியாக இருந்தாலும் வீட்டுக்கு வந்தபின் அந்தப் பெண்தான் சமைக்கவேண்டும். சமையல்கட்டு பெண்களின் வாழ்க்கையில் எந்த அளவுக்கு ஆக்கிரமித்து இருக்கிறது. பெண்ணின் கையால் சமைத்தால்தான் அது சிறப்பாக இருக்கும் என்று நம்ப வைக்கும் சூழலில் அதை உடைத்து எறியும் வலிமைமிக்க எழுத்துக்களைப் பிரசுரித்தார் அம்பை.

கல்வியறிவு அற்றவர்களாக, பொது அறிவு அற்றவர்களாக, அரசியல் அறிவு அற்றவர்களாக, கலை இலக்கிய அறிவு அற்றவர்களாக, மண்டுகளாக, மூடத்தனம் மிக்கவர்களாக மாற்றி வைத்திருக்கிறது இந்தக் குடும்ப அமைப்பு. அதன் எதிரொலி சாகித்திய அகாதெமியின் விருது அறிவிப்பிலும் தொடர்கிறது. இதுவரை அறுபத்தியிரண்டு விருதுகள் அறிவிக்கப்பட்டாலும் அவர்களுள் நால்வர் மட்டுமே பெண்கள் என்று எண்ணும் போது இந்தப் பின்னடைவைப் புரிந்துகொள்ள முடிகிறது. திரைப்படத்துறையிலும் கதாநாயகனுக் கான சம்பளத்திற்கும் கதாநாயகிக்கான சம்பளத்திற் கும் வித்தியாசம் பாராட்டப்படும் சூழலில் பெண்களுக்கான பிரதிநிதித்துவத்தை எங்கே பார்க்கமுடியும் என்ற ஐயம் எழுகிறது? காலங்காலமாக அடிமைத்தனம் எப்படி அன்றாட வாழ்க்கையில், பண்பாட்டுத் தளங்களில், குடும்ப அமைப்புகளில் கண்ணுக்குத் தெரியாத கிருமி போலப் படிந்து கிடக்கிறது என்பதை ஆழமாக உணர்ந்து அதைப் போக்க முயற்சி செய்தவர் அம்பை. பெண்ணடிமைத்தனம் குறித்த இலக்கிய அவதானிப்பை வெகுநுட்பமாகச் செய்தவர். ‘

அம்மா ஒரு கொலை செய்தாள்’ என்ற சிறுகதையில் வெளிப்படையாக ஒருவரின் குரல்வளையை நெரிப்பதுதான் கொலை என்பதல்ல. உணர்வுகளைக் கொலை செய்தாலும் கொலைதான் என்ற இடத்தில், கறுப்பாக இருக்கும் பெண்ணைப் பெற்ற பெற்றோர் அவளுக்குத் திருமணம் செய்து வைக்க படும்பாட்டைப் பேசும் இடத்தில் மகளின் உணர்வுகள் கொலை செய்யப்பட்டதாகக் காட்டும் இடம் மிக உன்னதமானது.

பெண் படைப்பாளிகள் எழுதச் சிரமப்படும் கருத்துக்களைத் தொட்டுச் சென்றவர். உறவு, காதல், திருமணம், அரசியல், இசை என்று பல்வேறு பரிமாணங்களைத் தொட்டவர். சுயசிந்தனை கொண்ட படித்த பெண்களை மிக இயல்பாகப் படைத்தவர். இவரின் கதைகள் தமிழகத்தின் எல்லையைக் கடந்தும் வாசகரை அழைத்துச் செல்லும். பெண்களின் உறவுச் சிக்கல்கள், பிரச்சினைகள், குழப்பங்கள், கோபதாபங்கள், சமரசங்கள் என எல்லாவற்றையும் எள்ளல் நடையில் சொல்லியிருப்பார். பெண்கள் எப்படிச் சிந்திக்கவேண்டும் என்று பாடம் நடத்தின இவரின் எழுத்துக்கள்.

பருவமடையாத ஒரு பெண்ணின் மன உணர்வுகளைக் கண்ணாடிபோல் காட்டும் சிறுகதை ‘காட்டில் ஒரு மான்’ என்ற கதை. அது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு இந்திய மொழிகளில் புனைவு மொழிபெயர்ப்புக்கான வோடாஃபோன் கிராஸ்வேர்ட் புக் அவார்டைப் பெற்றுத் தந்தது. இந்து சமூகம் தன்னியல்பாகச் சிந்திப்பதற்கு ஒரு மனைவிக்குச் சுதந்திரம் தராததுபோலவே பத்திரிகை உலகிலும் தான் நினைத்ததை எழுதும் சுதந்திரம் பெண்ணியம் பேசியதால் இவருக்கு மறுக்கப்பட்டது. ஆண்கள் உருவாக்கிய வரம்புக்குள் தான் பெண்களின் இடம் தீர்மானிக்கப்படுகிறது. இதை ஏற்றுக்கொள்ள அம்பையின் மனம் ஒப்பவில்லை. ஓர் இடதுசாரி சிந்தனையாளராகவும், சமூகச் செயற்பாட்டாளராகவும், களப்போராளியாகவும், தீவிர பெண்ணியவாதியாகவும் இருக்கும் இவர் இதற்கு எப்படித் தன்னை ஒப்புக் கொடுப்பார்!

குடும்பத்தில் தன் பேச்சுக்கு மதிப்பில்லாமல் போகும்போது, குடும்பத்தில் தனக்கான உரிமை மறுக்கப்படும்போது தனக்கு இழைக்கப்படும் அநியாயம் என்று எண்ணாமல் இயல்பாக ஏற்றுக்கொண்டு விட்டனர். வழிவழியாக இருக்கும் இந்த நடைமுறை சரியானது என்று நம்பத் தொடங்கிவிட்டனர். இந்த நம்பிக்கை எழுத்திலும் பிரதிபலித்தன. இந்தக் காலகட்டத்தில் அடுத்த தலைமுறைப் பெண்கள் இதற்கு ஏன் கட்டுப்பட வேண்டும் என்ற கேள்வியை எழுப்புகிறார் அம்பை. அந்தப் பழைய நம்பிக்கை எப்படி உண்மையாகும்? இந்தக் கேள்வி தமிழ்ச் சமூகத்தின் பெண் எழுத்தாளர்கள் பற்றியும், சமூகத்தின் பெண்களின் இடம் என்ன என்பது பற்றியும், தமிழ் இலக்கியத்தில் பெண்கள் பற்றியும் ஆராயத் தூண்டின.

பெண்கள் தமிழில் ஆத்மார்த்தமான இலக்கிய முயற்சி என்ற இலக்கை எடுத்துக்கொள்ளாமல் வணிக எழுத்திற்குச் சென்றது ஏன்? தனக்கான உண்மையான உணர்வுகள் இருக்கையில் வணிக எழுத்தின் நிரந்தரமான உத்திகளுக்குள் தன்னைச் சுருக்கிக்கொண்டது ஏன் என்ற வினா எழுப்புகிறார்.

செவிப்புலன் பாதிக்கப்பட்ட மகளின் காதுப் பிரச்சினையைத் தீர்க்க நினைக்கும் அப்பாவுக்கும், மௌனக்கடலில் மயங்கிக் கிடக்கும் மகளுக்கும் இடையில் நடக்கும் உணர்வுப் போராட்டத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறது - சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை என்ற கதை. ஒருவரை அவரின் இயல்புடன் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை ஏற்படுத்தித் தரும் இந்தத் தொகுப்பு விருதுக்குத் தகுதியானதே!

இந்த விருது என் எழுத்துக்குக் கிடைத்த அங்கீகாரம், இருந்தபோதும் முன்னோடி படைப்பாளிகளுக்கு வழங்கப்படவில்லை. எனவே எனக்கு இந்த விருது கூச்சத்தைத் தருகிறது என்றும் கூறுகிறார்.

ஆரம்பத்தில் ஒருவகையில் புறக் கணிப்பு இருந்தாலும் அங்கீகாரம் கிடைப்பது கொஞ்சம் கடினமாகவே இருந்தது. வாசிப்பு குறைந் துள்ளது என்பதைத் தாண்டி வாசிப்பு முறை மாறியுள்ளது என்று கருத்து தெரிவித்தார். புதிதாக எழுத வருபவர்கள் என்னைவிட அதிக விஷயங்கள் தெரிந்து கொண்டு எழுத வருகிறார் கள், நிறைய படித்துவிட்டு எழுத வருகிறார்கள் என்று நம்பிக்கை தெரிவிக்கும் இவர் ‘ஸ்பாரோ’ என்ற பெண்கள் அமைப்பின் நிறுவனர். இலக்கியம் என்றால் வாழ்க்கையிலுள்ள உண்மைகளைப் பற்றியதல்ல; உண்மை என்று நாம் உணர்வதற்கும் நமக்கும் இடையே இருக்கும் உறவு பற்றியதுதான் இலக்கியம் என்ற தீர்க்கமான கருத்து கொண்டவர்.

இதுவரை பயணிக்காத பாதையில், இதுவரை யாரும் சிந்திக்காத முறையில் சிந்திப்பவர் இலக்கியத்தில் தடம் பதிக்கிறார்கள்; தனக்கென்று தனித்த இடம்பிடிக்கிறார்கள். அந்த வகையில் அம்பை யின் எழுத்துக்கள் யாருடனும் ஒப்பிடமுடியாத தனித்துவம் மிக்கவை. அவர் போட்ட ராஜபாட்டையில்தான் பெண்ணியம் சார்ந்த எழுத்துக்கள் பயணிக் கின்றன. அந்த இலக்கியத் தேரின் தடம்பற்றி ஆயிரம் ஆயிரம் எழுதுகோல்கள் வடம்பிடிக்கின்றன.