மிழ்க் கவிஞர்கள் எல்லோரும் பெருமைகொள்ளக்கூடிய ஒரு நிகழ்வு. எந்தவித சலசலப்பும், ஆடம்பரமும் இல்லாமல் அரங்கேறியிருக்கிறது.

தமிழகத்தின் குக்கிராமமான முத்துவீரகண்டியன்பட்டியிலிருந்து ஒரு கவிஞர் சாகித்ய அகாதமியால் கௌரவப்படுத்தப் பட்டிருக்கிறார்.

சாகித்ய அகாதமியின் எழுபதாம் ஆண்டு விழா தலைநகர் டெல்லியில் நடைபெற்றது. 1947-இல் தொடங்கப்பட்ட சாகித்ய அகாதமி அமைப்பு 2017-ல் எழுபதாம் ஆண்டை நிறைவு செய்து, பிப்ரவரி 2018-ல் ஆறுநாள் விழாவாகக் கொண்டாடியது.

இந்தியாவின் எல்லா மொழிகளில் இருந்தும் நாவல், சிறுகதை, கட்டுரை, கவிதை என்று படைப்புக்கு ஒருவரைத் தேர்ந்தெடுத்து விழாவில் கலந்து கொள்ளச் செய்திருந்தனர்.

Advertisment

இலக்கியத்திற்கென்று நேருவால் உருவாக்கப்பட்ட அமைப்பு, அரசின் தலையீடு இல்லாமல் அரசு நிதிபெற்று இயங்கிவருகிறது வியப்புக்குரியதல்லவா?!

ஒவ்வொரு மொழியின் சார்பாகவும் ஒரு படைப்பாளர் அவ்விழாவில் பங்குபெற்றனர். தமிழ் மொழியின் சார்பாக தமிழகத்திலிருந்து கலந்துகொண்ட ஒரே கவிஞர், படைப்பாளர், கவிஞர் ஜே. தமிழ்ச்செல்வன்.

தஞ்சாவூர் மாவட்டத்தின் பூதலூர் அருகே உள்ள உட்புற கிராமமான முத்துவீரக்கண்டியன்பட்டியைச் சேர்ந்தவர் கவிஞர் ஜே. தமிழ்ச்செல்வன். "பூபாளம்' என்ற சிற்றிதழின் ஆசிரியராகவும், "துடிப்பு' என்ற இருவர் இலக்கிய இதழின் இணை ஆசிரியராகவும் உள்ளார். திரைத்துறையிலும் கால் பதித்து வருகிறார். "நிலா பழுத்த சாலை' என்ற கவிதை நூலுக்குச் சொந்தக்காரர்.

Advertisment

எல்லா மொழிப்படைப்பாளர்களும் கூடியிருந்த அரங்கில், தமிழால் கவிதை வாசித்து தலைநிமிர்ந்து நின்றிருக்கிறார்.

படைப்பாளர்கள் அனைவரும் ஹிந்தியிலோ, ஆங்கிலத்திலோ தம் படைப்புகளை எடுத்து வைக்க, கவிஞர் தமிழ்ச்செல்வன் தாய்மொழி தமிழில் தம் கவிதைகளை வாசிக்க அனுமதி கிடைத்தால் மட்டுமே விழாவில் கலந்துகொள்வதாகக் கூறி, தமிழ்மொழியை ஒலிக்கச் செய்திருக்கிறார். எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக ஆங்கில மொழியாக்கத்தையும் அதன் பிறகு வாசித்திருக்கிறார்.

கவிதைக்கான அமர்வில் 18 மொழி கவிஞர்கள் கலந்துகொண்டனர்.

valampurilena

தமிழகம், கர்நாடகம், கேரளத்தைச் சேர்ந்த மூன்று படைப்பாளர்களின் உடையும் தென்னிந்தியர்கள் என அடையாளம் காட்டியது. மற்ற மாநிலப் படைப்பாளர்கள்- விதம்விதமான உடைகளில் வேறுபட்டு இருந்தனர். கேரளம், கர்நாடக மாநில படைப்பாளர்கள்கூட தமது படைப்புகளை அவர்களது தாய்மொழியில் வழங்கவில்லை; ஆங்கிலத்திலேயே பேசினர்.

டெல்லியில் மற்ற மொழி படைப்பாளர்களால் ஜே.டி. செல்வன் என்று அழைக்கப்பட்ட நமது கவிஞர் சாகித்ய அகதாமி விழாவிற்குச் சென்றுவந்த அனுபவத்தை நம்மோடு பகிர்ந்துகொண்டார்.

சாகித்ய அகாதமியில் படைப்பாளர்கள் மிகுந்த மதிப்பும், மரியாதையுமாக நடத்தப்படுவதாகவும் நூல்கள் முறையான வகையில் பாதுகாக்கப்பட்டு வருவதாகவும் கூறுகிறார்.

ஒவ்வொரு மாநிலத்திலும் சாகித்ய அகாதமி அலுவலகம் சொந்தக் கட்டிடத்தில் இயங்கிவருகிறது. அம்மாநில மொழியின் நூல்கள் வகைப்படுத்தப்பட்டு வரிசைப்படுத்தப்பட்டு பராமரிக்கப்படுகிறது. இலக்கிய விழாக்கள் நடத்தப்படுகின்றன. அந்தந்த மாநில மொழியில் சாகித்ய அகாதமி விருதுகள் வழங்கப்படுகிறது.

நம் தமிழகத்தில் வாடகைக்கட்டிடத்தில் இயங்கி வருகிறது என்பதையும் மாநில சாகித்ய அகாதமி விருதுகள் வழங்கப்படுவதில்லை என்பதையும் அறிந்தபோது வருத்தமுறுவதாகத் தெரிவித்தார் கவிஞர்.

எல்லா இலக்கியவாதிகளும் அறிமுகமாகி பேசி மகிழும்போது தம் மொழியின் மூத்த படைப்பாளர்களை அறிமுகப்படுத்தினர்.

நம் தமிழ்மொழியின் மூத்த படைப்பாளர்களை அறிமுகப்படுத்த தேடினால், அப்போதுதான் யாரையுமே அழைக்கவில்லை என்பது தெரிந்தது.

தமிழ் மொழிக்காக கவிஞர்கள் சார்பில் கலந்துகொண்டதில் பெருமகிழ்ச்சி கொள்வதாகவும், தமிழின் நாவல், சிறுகதைக்கு என்று யாரையுமே அழைக்காதது வருத்தமளிப்பதாகவும் கூறுகிறார் தமிழ்ச்செல்வன்.

மாலன், பாரதிபாலன், தமிழகன் ஆகியோர் அகாதமியின் உறுப்பினர்களாக வந்திருந்தனர். படைப்பாளர்கள் சார்பில் யாரும் அழைக்கப்படவில்லை.

பூதலூரில் புறப்பட்டு சென்னையில் நண்பர்களின் வழியனுப்புதலோடு டெல்லி பயணித்தவருக்கு, திரும்ப வரும்போது பூதலூர் ரயில் நிலையத்தில் நல்லதொரு வரவேற்பை வழங்கியுள்ளனர்.

பட்டாசு சத்தங்களுடன், மாலை அணிவித்து வரவேற்று அழைத்துச்சென்று பூதலூரில உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து, பாராட்டுக்கூட்டமும் நடத்தியுள்ளனர்.

நிறைவான நிகழ்வு கூறி மகிழ்கிறார் ஜே. தமிழ்ச்செல்வன்.

சிறிய ஊரிலிருந்து சீர்மிகு இந்தியத் தலைநகரம் வரை சென்று கவிதைக்காக கரம் உயர்த்தி வந்திருக்கும் கவிஞரைப் பாராட்டுவோம்.

தமிழ்மொழி சூடிக்கொண்டுள்ள தமிழ்ச்செல்வனின் பேனா புதிய புதிய கவிதைகளைப் பிரசவிக்கட்டும்.