வைக்கோல் பரப்பப்பட்ட மூங்கில் ஏணியாலான பாடையைச் சுமந்தவாறு உச்சிக்குடுமியும் தொப்பை வயிறும் உள்ள நான்கு பிராமணர்கள் முன்னால் நடந்துகொண்டிருந்தார்கள். பாடைக்கு நேர் முன்னால் வாத்தியார்...
சடங்குகளைச் செய்வதற்கான பாரம்பரிய உரிமை கொண்டவர்.
அவருடைய பூணூல் அழுக்குப் பிடித்து கறுத்துக் காணப்பட்டது.
வாயில் வெற்றிலைக் கறையும் வேறு கசடுகளும் படிந்திருப்பதைப் போல தோன்றும். நிறம் கெட்டுப்போன பற்களுக்கு மத்தியில் ஒட்டிக் கொண்டிருக்கும் கறை வெளியே நன்கு தெரியக்கூடிய வகையில் கோணலாக இருக்கும் வாயின் அமைப்பு... அந்த காரணத்தால் வாய் நாற்றமெடுக்கும் என்பது ஒரு உண்மையான விஷயம்.
வாத்தியாரின் கையில் கனமான ஒரு பாத்திரம் இருந்தது.
பாத்திரத்தில் பச்சை மாவிலைகளும், தர்ப்பைப் புல் துண்டுகளும் இருந்தன.
பாத்திரத்திலிருக்கும் நீரில் தீர்த்தக் கரண்டியைவிட்டு, வழி முழுக்க மந்திரங்களை உச்சரித்து நீரைத் தெறித்து விழும்படி செய்தார்.
மரணமடைந்த மனிதர் சொர்க்கத்திற்குச் செல்வதற்கான நேர்வழி, இந்த சுத்திகரிக்கும் செயல்தான் என்பது புரிந்தது.
பிணமிருந்த பாடைக்குப் பின்னால் இவர்களைத் தவிர, வேறு நான்கோ ஐந்தோ பேர் இருந்தார்கள்.
இரண்டு பேர் குளித்து, தார் பாய்ச்சிக் கட்டிய வேட்டியுடன் இருந்தார்கள்.
அவர்களின் சரீரத்திலிருந்து நீர் சொட்டிக் கொண்டிருந்தது.
இரண்டு பேர் வயதானவர்கள்.
நடக்கும்போது, தென்னை மடல் விசிறியால் வீசியவாறு உடலிலிருந்த வியர்வையை நீக்கிக் கொண்டிருந்தார்கள். மற்றவர்களின் கைகளில் எடை நிறைந்த கோணிப் பைகள் தொங்கிக்கொண்டிருந்தன.
அதில் புழுங்கல் அரிசியும் தேங்காய்களும் தர்ப்பைப்புற்களும் வைக்கோல்களும் அகல் விளக்கும் சிறுபீளைச் செடிகளும் இருந்தன.
எரிப்பதற்கும் இறுதிச் சடங்குகளுக்கும் தேவைப்படும் பொருட்களாக இருக்கலாம். அதிகம் பயன்படுத்தப்பட்ட கோணிப்பைகளின் பல பகுதிகளிலும் ஓட்டைகள் இருந்தன.
ஓட்டைகளின் வழியாக விழக்கூடிய பொருட்கள் விழுந்துகொண்டிருந்தன.
மிகவும் பின்னால் நடந்து வருவது... வெட்டியான். அவன் சண்டாள ஜாதியில் பிறந்தவன்.
அணிந்திருந்த துணி முழுவதும் பலவகையான கறைகள். பாவத்தின் கறைகள் என்று அவற்றைக் கூறலாமா? பாகற்காய், பலா, மாங்காய், ரத்தம் ஆகியவற்றின் கறைகளாக அவை இருக்கலாம். இந்த கறைகளைத் தவிர, கூற முடியாததும் வெளியே தெரியாததுமான மனிதக்கறைகள் வேறும் இருக்கலாம்.
வெட்டியானின் தலையில் கோணி மூட்டை இருந்தது. வாய்ப்பகுதி மூடி கட்டப்படாதிருந்த கோணியிலிருந்து வெளியே தாவிக் குதிப்பதற்கு தயாராக இருக்கும் சிரட்டைகள்...
இரண்டு கைகளைக் கொண்டும் இறுக பொத்திப் பிடித்திருந்தான்.
அவன் நடக்கும்போது, மூச்சுவிட முடியாத நிலையில் இருப்பதைப்போல, பார்த்துக்கொண்டு நிற்பவர்களுக்கு தோன்றும்.
இடுகாட்டிற்கான பயணம்... அந்த பிணக் கட்டிலில் படுத்திருப்பது யாராக இருக்கும்? சலவை செய்த பழைய துணியால் மூடப்பட்டிருந்த அந்த பிணம் ஒரு இறந்த பிராமணனுடைய உடலாக இருக்கலாம். அதுவும் இல்லாவிட்டால்... ஒரு பெண்ணின்...
ஆணோ, பெண்ணோ எதுவாக இருந்தாலும்...
குறிப்பிட்ட வேறுபாடு எதுவுமில்லை.
இரண்டில் எதுவாக இருந்தாலும், மனிதப் பிறவிதானே?
பொது இடுகாடு சற்று தூரத்தில் இருக்கிறது.
பிராமணர்களின் பிணத்தை மட்டுமே அங்கு அடக்கம் செய்வார்கள். பிராமணர்களின் இடுகாடு என்ற ஒரு பழைய அறிவிப்புப் பலகையை அங்கு பார்த்திருக்கும் ஞாபகம் இருக்கிறது.
பிராமணர்களின் இடுகாட்டிற்கு அப்பால் வேறு பூமி இல்லை. கடல்தான்...கடலின் ஓரத்தில் இருக்கும் பிராமணர்களின் இடுகாட்டை மிகவும் தூரத்திலிருந்தே பார்த்திருக்கிறேன்.
அதற்குள் நுழைந்து பார்ப்பதற்கு பலமுறை ஆசைப்பட்டதும் உண்டு.வெறுமனே நுழைந்து பார்ப்பது... அது ஒரு விருப்பமாக இப்போதும் மனதிற்குள் கிடக்கிறது. மற்ற இடுகாடுகளிலிருந்து மிகவும் வித்தியாசமானது என்று கூறுகிற அளவிற்கு அங்கு எதுவும் இல்லாதிருக்கலாம். ஆவிகள்...
அப்படியொன்று இருந்தால், அங்கும் சுற்றித் திரிந்து கொண்டிருக்கலாம்.
சுற்றித் திரிந்து கொண்டிருக்கும் ஆவியைப் பார்க்கவேண்டுமெனில், இப்போது மாட்டின் மாமிசத்தைச் சாப்பிடாமல் இருக்கவேண்டும்.
நிர்வாணமாக நகரத்தின் தெருக்களில் நடந்து செல்லவேண்டும்.
மனைவியைத் தவிர வேறு யாரும் என் நிர்வாண சரீரத்தைப் பார்த்திராத நிலையில், அதற்காக இப்போது ஆசைப்பட்டு பயனில்லையே!
எனினும், ஒருநாள் அந்தச் சுவருக்குள்ளும் சுற்றி நடக்கவேண்டும்.
முழுவதும் எரிந்திராத ஒரு சிதைக்கு முன்னால் போய் இருக்கவேண்டும். புகையும், கரிக்கட்டையும், எலும்பும், முட்டிகளும் சிதறிக் கிடக்கும் இடத்தில் அமர்ந்து இப்படிப்பட்ட ஒரு சுலோகத்தைக் கூறி பார்க்கவேண்டும்....
"சர்வதர்மான் பரித்யஜ்ய
மாமேகம் சரணம் வ்ரஜ
அஹம் த்வா சர்வபாபேப்யோ
மோக்ஷயிஷ்யாமி மா ஸுச:''
பிணத்தைத் தாங்கிய பாடையும் ஆட்களும் போய் மறைந்துவிட்டார்கள். அத்துடன் அய்யர் களைப் பற்றிய மரணத்திற்குப் பிந்தைய சிந்தனைகளும் முடிந்ததைப்போல ஆயின.
சன்னிதானத்தை அடைந்து பகவானை வணங்கினேன்.
கோவில் நடை முடிந்தது.
பிராமணர்கள் நெருக்கமாக வசிக்கக்கூடிய சமூக மடத்திற்கு இடது பக்கமாகச் சென்று, என் வீட்டிற்குப் போகவேண்டும்.
எப்போதும் அவர்களைப் பார்க்காமல் இருக்க முடியாது.
ராமகிருஷ்ணன் "வேர்கள்' எழுதிய பிறகு, தன் வயிற்றிலேயே அடித்துக் கொண்ட ஒரு அனுபவம் உண்டானது. "ஈட்டு' என்ற பெயரில் பாதி எழுதிய புதினத்தை அதைத்தொடர்ந்து நெருப்பு வைத்து எரித்தேன். என் சொந்த தாயின் கற்புத் தன்மையைப் பற்றி மற்றவர்கள் கேள்வி கேட்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக, நான் அந்த தியாகத்தைச் செய்தேன் (இது கதையுடன் சம்பந்தப்பட்டது அல்ல).
சமூக மடத்தை அடைந்தபோது, அனைவரும் சேர்ந்து பொதுவாக பயன்படுத்தக்கூடிய பிராமணர்களின் பஞ்சாயத்து வாசலில், அங்கிருக்கும் பெண்கள் கூட்டமாக நிற்பதைப் பார்த்தேன்.
பாட்டிமார்களும் திருமணமான பெண்களும் விதவைகளும் வாயாடிகளும் ஊரையே விலைக்கு வாங்குபவர்களும் அந்த கூட்டத்தில் இருந்தார்கள். ஒரு காகம் விழுந்து இறந்தால், மற்ற காகங்கள் கூட்டமாக கூடி நின்று, சண்டை போடுவதைப்போல அவர்களுடைய உரையாடல் இருப்பதைப்போல எனக்குத் தோன்றியது.
எல்லா பெண்களுமே இப்படித்தான் இருக்க வேண்டும்...எந்த ஜாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும்.
அவர்கள் இவ்வாறு கூட்டமாக கூடி நிற்கக்கூடிய அளவிற்கு சமூகத்தில் பெண்களுக்கு என்ன உண்டாகிவிட்டது? இந்த ஒரு கேள்வியை நான் என்னிடமே கேட்டுக்கொண்டேன். அந்தப்பக்கம் நுழைந்து சென்று கேட்பதற்கு, அப்போதிருந்த நாணமும் மானமும் சிறிதும் அனுமதிக்கவில்லை.கேட்காமல் இருப்பது என்பதிலும் சிரமம் இருக்கிறது.
விஷயத்தைத் தெரிந்து கொள்ளாமல் இருந்தால், அன்று முழுவதும் மனம் வெடித்து அழுது கொண்டேயிருக்கும். எதையாவது அறிவதற்கான வாய்ப்பு கிடைக்கும் பட்சம், அதை அப்போதே அறிந்து கொள்ளவேண்டும். அது ஒரு மோசமான குணம்.
சிறிது நேரம் சமூக மடத்தின் இடதுபக்கத்தில் நின்றேன். அவ்வாறு வெறுமனே நின்று கொண்டிருந்தபோது, சில பெண்கள் இந்தப்பக்கம் கூர்ந்து பார்ப்பதைப் பார்த்தேன். அப்போது வெங்கிச்சமணி மடத்திலிருந்து வெளியே வருவதைப் பார்த்தேன்.
வெங்கிச்சமணியும் நானும் ஒரே பெஞ்சில் அமர்ந்து, மூன்றாவது வகுப்பில் சேர்ந்து படித்தோம். இப்போது வேத பாடம் நடத்திக்கொண்டிருக்கிறான் வெங்கிச்சமணி.
தலை வளைய வடிவில் மொட்டை அடிக்கப் பட்ட நிலையில் இருக்கிறது.ஏழு பிரி உள்ள பூணூலில் மூன்று சாவிகளும் ஒரு ஓட்டை காலணாவும் இருக்கின்றன.
"வணக்கம்... சுவாமி.''
"என்ன இங்கு இந்த அளவிற்கு ஆரவாரம்?''
கேள்வியைக் கேட்டு, வெங்கிச்சமணி விரிந்த கண்களால் பார்த்தான்.
கிட்டத்தட்ட ஒரே வயதில் இருந்து கொண்டு, ஒரே பெஞ்சில் அமர்ந்து கொண்டு படித்த உணர்வு எதுவும் அந்த பார்வையில் இல்லை.
ஓரக்கண்களால் சுழற்றிப் பார்த்தவாறு, வெறுப்பையும் எரிச்சலையும் வெளிக்காட்டும் வகையில் யாரிடம் என்றில்லாமல் கூறினான்:
"அந்த பாவி முத்துலட்சுமி இறந்துவிட்டாள்.''
உடனடியாக நம்ப முடியவில்லை. முத்துலட்சுமி இறந்துவிட்டாளா? சமூக மடத்தின் முத்துலட்சுமி...!
சமூக மடமிருக்கும் சாலையின் எதிரே இருந்த ஒரு அறையின் வாசற்படியில் அமர்ந்து, வழியில் செல்பவர்களைப் பார்த்து, பாதி புன்னகையுடன் சிரிக்கும் முத்துலட்சுமி!
பெரிய குங்குமப் பொட்டையும், கறுத்து இருண்ட அழகான பெரிய கண்களையும், "அனைவரையும் எனக்குத் தெரியும்' என்ற அர்த்தத்தைக் கொண்ட புன்சிரிப்பையும் இனி பார்க்க முடியாது. அதிகாலை வேளையிலேயே பார்த்த... வைக்கோல் பரப்பப்பட்ட மூங்கில் ஏணி மெத்தையில் படுத்திருந்தது அழகியான முத்துலட்சுமிதான்.
ஒரு தடவைகூட முத்துலட்சுமியின் நட்பை விரும்பியிராத நான், அன்று இரவு அந்த முகத்தை நினைத்து... நினைத்துப் பார்த்துக்கொண்டே படுத்து உறங்கிவிட்டேன்.