கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில், வயதுப் பாகுபாடுகளின்றி அனைத்து வயதுப் பெண்களும் வழிபாடு செய்யலாம் என்று கடந்த 28-09-2018 ஆம் நாள் உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு தீர்ப்பை வழங்கியது. அந்தத் தீர்ப்பை மறு ஆய்வு செய்யவேண்டும் என்று கோரிக்கை வைத்து, தனிநபர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பாக இதுவரை, அதாவது 23.10.2018 ஆம் நாள் வரை 19 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் மீதான விசாரணையை, வரும் நவம்பர் 13ஆம் நாள் மேற்கொள்ள இருப்பதாக உச்சநீதிமன்றம் தற்போது அறிவித்திருக்கிறது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனுக்களை அவசர வழக்காக ஏற்று விசாரிக்கவேண்டும் என்கிற கோரிக்கையையும் உச்சநீதிமன்றம் ஏற்கனவே நிராகரித்து விட்டது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கதாகும். இன்னொரு பக்கத்தில் கேரள அரசு மறுஆய்வு மனுவை தாக்கல் செய்து இந்தச் சிக்கலுக்குத் தீர்வு காணவேண்டும் என்றும் பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்கள் வலியுறுத்திக் கொண்டி ருக்கிறார்கள்.

இந்தச் சிக்கலில் உச்சநீதிமன்றம், அடுத்து என்ன சொல்ல இருக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் வழிபாட்டு முறைகளில் தனித்த சட்ட திட்டங் களோடு ஒரு சர்வாதிகார மலையாகச் செயல்பட்டு வந்த சபரிமலை, இப்போது கைகலப்புகளும், கலவரங் களும், தடியடிகளும், அடக்குமுறைச் சட்டங்களும் நிறைந்த ஒரு கலவர மலையாக மாறிப்போயிருக்கிறது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பினால் ஊக்கம் பெற்று சபரிமலைக்குச் சென்று ஐயப்பனை வழிபட முனைந்த பல இளம்பெண்கள், பெரும் கலவரங்களுக்கும், வன்முறைகளுக்கும் இடையே வலுக்கட்டாயமாகத் திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார்கள். கேரள மாநிலத் தின் காங்கிரஸ் கட்சியும், பாரதிய ஜனதா கட்சியும் அம்மாநிலத்தை ஆளுகின்ற இடதுசாரி அரசுக்கு எதிராக இந்தச் சிக்கலைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு மாநில அரசுக்கும், உச்சநீதி மன்றத்தின் தீர்ப்புக்கும் எதிராகப் போரா டிக் கொண்டிருக்கின்றன. ஆதாயம் கிடைக்கிற இடத்தில் அரசியல் செய்தாக வேண்டிய அவசியம் அவ்விரு கட்சிகளுக் கும் நேர்ந்திருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

Advertisment

சபரிமலை ஐயப்பன் விவகாரத்தில் நாடே இப்போது இரண்டுபட்டுக் கிடக்கிறது என்றும் சொல்லலாம். நடிகர் சிவகுமார் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்று பெண்கள் அனைவரும் சபரிமலையில் ஐயப்பனை வழிபடலாம் என்கிறார். அதெப் படி? அந்த மலைக்கு என்று ஒரு ஐதீகம் உண்டல்லவா? என்று நடிகர் ரஜினிகாந்த் கேட்கிறார். தமிழக அரசியல் கட்சிகளும் சபரிமலை யில் அனைத்துப் பெண்களும் வழிபடுவது குறித்த தங்களது கருத்துகளில் வேறுபட்டு நிற்கின்றன.

அதென்னவோ தெரியவில்லை, நமது நிகழ்கால இந்தியாவின் மக்கள் அனைவரும், அனைத்துக் களங் களிலும் பெண்களை மையப்படுத்தியே சிந்திக்க வேண்டிய நிலைக்கு வலுக்கட்டாயமாகத் தள்ளப் பட்டிருக்கிறார்கள். கணவன் மனைவி உறவுக்கு அப்பாற் பட்ட புரிந்துணர்வுடன் கூடிய “உறவு’, திடீரெனக் கட்ட விழ்த்து விடப்பட்டிருக்கின்ற மீ டூ பாலியல் சீண்டல் விவகாரம், அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் வெடித்துக் கிளம்புகின்ற பிரபலங்களின் பாலியல் வல்லுறவு விவகாரங்கள், அனைத்துப் பெண்களும் ஐயப்பனை வணங்கலாம் என்பதில் தோன்றியுள்ள போராட்டப் புயல் போன்றவற்றையெல்லாம் ஒருங்கி ணைத்துப் பார்க்கும்போது, எதன் பொருட்டேனும் நாட்டுமக்கள் அனைவரும் திசை திருப்பப்படுகிறார் களோ என்கிற ஐயம் இயல்பாகவே நமக்கு எழுகிறது. என்றாலும் கூட, அப்படியெல்லாம் யாருக்கும் எந்த ‘அஜெண்டாவும் இருக்காது என்கிற சுயசமாதானச் சிந்தனைகளோடுதான் நாம் இந்த சபரிமலை ஐயப்பன் வழிபாட்டு விவகாரத்தைப் பார்க்க முனைகிறோம்.

வரலாறு நெடுகிலும் இந்தியப் பெண்களின் நிலை இழிநிலையாகவே இருந்து வருவதையும், வரலாறு நெடுகிலும் அவர்கள் போராடிப் போராடியே மேலெழுந்து வந்துகொண்டிருக்கிறார் கள் என்பதையும் எவரும் மறுக்க முடியாது.

Advertisment

sabarimalaissue

ஒரு காலத்தில் நமது பெண்கள் மிகக் கொடூரமான முறையில் உடன்கட்டை’’ என்கிற பெயரில் உயிரோடு கொளுத்தப்பட்டார்கள். இளமைப் பருவமாகவே இருந்தாலும் விதவைக் கோலத்திலேயே கடைசிவரை வாழும்படி நிர்பந்திக்கப்பட்டார்கள். கேரள சமஸ்தானங்களின் ஆட்சி நிர்வாக முறையில் தாழ்த்தப் பட்ட பெண்களின் மார்பகங்களின் அளவுகளுக்கு ஏற்ப வரி வசூல் செய்யப்பட்ட அக்கிரமம் நடந்தது.

உயர்சாதி மக்கள் வாழும் தெருக்க ளில் தாழ்த்தப்பட்ட பெண்கள் கால் முட்டிக்குக் கீழேயும் இடுப்புக்கு மேலேயும் ஆடை அணிந்து நடக்கக் கூடாது, அதாவது மார்பகங்களை உடையால் மூடக்கூடாது என்கிற சட்டம் கேரள சமஸ்தான ஆட்சிக் காலங்களில் நடைமுறையில் இருந்தது. நமது வரலாற்றின் பக்கங்களில் பெண்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இதுபோன்ற நூற்றுக்கணக்கான அடக்குமுறைகளின் தொடர்ச்சியாகவே நிகழ்காலத்தின் பெண்கள் சபரிமலையில் மறிக்கப்படுகி றார்கள் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

பெண்களின் இளமையோடு தொடர்புடைய மாதவிடாய், ஒரு கடவுளுக்கு எந்த வகையில் “தீட்டாக’’ மாறிவிடும் என்பது தெரியவில்லை. மாதவிடாய் காலத்தில் அடர்ந்த வனத்தில், பெண்கள் நடமாடினால், அந்த ரத்தவாடைக்கு புலிகள் வந்து அவர்களைக் கொன்றுவிடும். எனவே பாதுகாப்பு கருதியே சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்று அறிவியல்பூர்வமான காரணம் ஒன்றை ஒரு நண்பர் சொன்னார். அப்படியானால் பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தான் செய்யவேண்டுமே தவிர அந்தக் கோயிலின் ஐதீகத்தைப் பற்றி ஏன் பேசவேண்டும்?

இன்னொரு மதத்தின் வழிபாட்டுக் கூடங்களில் அந்த மதத்தின் பெண்கள் வழிபாட்டிற்கு அனுமதிக் கப்படுவதில்லையே, அங்கு போய் நீங்கள் போராட முடியுமா? என்கிறார் இன்னொரு நண்பர். என்னை நீ ஏன் அடிக்கிறாய் என்று கேட்டால், அதோ அங்கே ஒருவன் இன்னொருவனை அடித்துக் கொண்டிருக்கி றானே அவனை எதிர்த்துக் கேட்க முடியுமா? என்று கேட்பது என்ன நியாயம்? அப்படிப் பார்த்தால் பெண் களின் சுதந்திரத்திற்கான மாற்றங்களும், போராட்டங் களும் அங்கும்தானே நடந்து கொண்டிருக்கின்றன? வளைகுடா நாடுகளில் ஒன்றான சவூதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்டுவதற்கான உரிமையை அண்மையில் அந்நாட்டு அரசு வழங்கியிருக்கிறதே! முத்தலாக் நடைமுறை தொடர்பான விவாதங்களும் சட்டப்போர்களும் நடந்து கொண்டுதானே இருக்கின்றன? பெண்கள் வழிபாட்டுக் கூடங்களுக்கு வரத் தேவையில்லை என்பதற்கும், வயதுக்கு வந்துவிட்ட பெண்கள் அவர்களது மாதவிடாய் காலம் முடியும் வரை இந்தக் கோயிலுக்கு வந்து இந்தக் கடவுளை வழிபடக்கூடாது என்பதற்கும் எவ்வளவோ வேறுபாடுகள் இருக்கின்ற னவே! அல்லது, அனைத்துப் பெண்களும் அங்கு சென்று ஐயப்பனை வழிபடலாம் என்கிற ஒரு பெரும்பான்மை மக்களின் பெண்பிரிவினருக்கான தீர்ப்பினை, அந்தந்த மார்க்கத்தின் பெண்களுக்கான ஒரு சட்ட அங்கீகாரமாக ஏன் கருதக்கூடாது? எனவே சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களும் வழி படலாம் என்பது எந்தவகையிலும் ஒரு மதத்தின் பிரச்சனை அல்ல. மாறாக அது பெண்களின் வழிபாட்டு உரிமை தொடர்பான பிரச்சனையே ஆகும். இந்தப் புரிதல் இன்றி வேறு மதங்களுக்கு எதிராக இந்தச் பிரச் சனையை திசைதிருப்பி யாரும் குளிர்காயக் கூடாது.

sabarimalaissue

முதல் முறையாக ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் தோன்றும்போது அவள் பூப்பெய்தியதாகவும், ருதுவாகி விட்டதாகவும், சமைந்துவிட்டதாகவும், வயதுக்கு வந்துவிட்டதாகவும் துள்ளிக் குதித்துக் கொண்டாடி அந்த இயற்கையை ஒரு விழாவாக மாற்றி அதற்கு வாழ்த்துரைப்பதற்காக அமைச்சர் களையெல்லாம் அழைத்து சுவரொட்டி ஒட்டுவதும், அவளது அடுத்த மாதவிடாயை ‘தீட்டு’ என்று சொல்லி அவளை ஒதுக்குவதும் வெட்கக் கேடான முரண் அல்லவா? ஒரு பெண் இன்னொரு உயிரைச் சுமந்து, படைக்கும்’ தகுதியில் இருக்கிறாள் என்பதற்கான இயற்கையின் சிறப்பான அடையாளமாக விளங்குகின்ற மாதவிடாய்க் காலத்தை ஒரு கடவுள் விரும்பவில்லை என்றால் அவர் எப்படி அவளுக்குமான கடவுளாக இருக்கமுடியும்?

இளம் வயதுப் பெண்கள் இரவில் நடமாடக் கூடாது என்பதற்கும், இந்த இறைவனின் சன்னதிக்கு இளம் பெண்கள் யாரும் வரக்கூடாது என்பதற்கும் என்ன வேறுபாடு? பெண்களின் உடலில் இயற்கை நடத்து கின்ற மாதாந்திரச் சுழற்சியை, உயிரியலின் அறிவியலா கப் பார்க்காமல் தூய்மைக் கேடாகக் கருவதுவதுதான் பெண்களை நாம் கடவுளாக மதித்துப் போற்றுகின்ற லட்சணமா?

உச்சக்கட்ட வேதனையாக பெண்களின் கூட்டத் தைத் திரட்டி அவர்களைக் கொண்டே பெண்களை மறிக்கின்ற கொடுமை சபரிமலையின் பாதைகளில் நடந்துகொண்டிருக்கிறது. நாடெங்கிலும் பல்லாயிரக் கணக்கான பெண்கள், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராகப் போராடும்படி களமிறக்கப்பட்டிருக்கிறார் கள். இத்தகைய “கும்கி’’ கலாசாரம் நமது நாட்டின் ஒட்டு மொத்த பெண்விடுதலைக்கு எதிரானதும், அவர்களது சிந்தனை ஆற்றலை பல நூற்றாண்டுகளுக்குப் பின்னுக்கு இழுப்பதும் ஆகும்.

தங்களது இளமைக்கால நடமாட்டங்களை, பாலியல் அச்சம் கலந்த குற்றஉணர்ச்சிகளோடு கட்டுப் படுத்திக் கொள்ளவும், மாதவிடாய் நாள்களை கூடுத லான குற்ற உணர்ச்சி களோடு கடக்கவும் நமது சமூகம் பெண் களை நெடுங்காலமாகப் பழக்கிவைத்திருக்கிறது. பெண்களின் அத்தகைய அறிவியலுக்குப் புறம் பான குற்ற உணர்ச்சி களைத்தான் சபரிமலை ஐயப்பன் கோயிலின் ஐதீக ஆதரவாளர்கள் நேரடியாகவும் மறைமுக மாகவும் இப்போது உறுதி செய்துகொண்டி ருக்கிறார்கள்.

எல்லாம் மாறும் என்பதே மாறாதது!

என்னது? கணவனை இழந்த பெண்ணை, அவளது கணவனின் பிணத்தோடு சேர்த்து உயிரோடு எரித்துக் கொன்றார்களா?

என்னது? திருமணம் செய்து கொண்டு உடலுறவுச் சுகத்தை அனுபவிக்காமல் இறந்துவிட்ட பெண்ணின் பிணத்தை தாழ்த்தப்பட்ட ஒருவனைக் கொண்டு புணர வைத்து அதன்பிறகு அவளை எரித்தார்களா?

என்னது? பெண்கள் தங்களது மார்பகங்களை மூடாமல் உயர்சாதிக்காரர்களின் தெருக்களில் அவற்றை முழுவதுமாகத் திறந்து காட்டிக் கொண்டு நடமாட வேண்டுமா?

என்னது? திருவாங்கூர் சமஸ்தான ஆட்சியில், தாழ்த் தப்பட்ட பெண்களின் மார்பகங்களின் அளவுகளுக் கேற்ப அவர்களுக்கு வரிவிதித்து வசூல் செய்தார்களா?

என்னது? மார்பகங்கள் இருந்தால்தானே அவற்றுக்கு வரி வசூல் செய்வீர்கள்? என்று தென்தமிழ்நாட்டின் குமரிமாவட்டத் தமிழச்சி ஒருத்தி தன் மார்பகங்களை அறுத்து வாழை இலையில் வைத்துக் கொண்டுவந்து சமஸ்தான ஆட்சியின் வரி வசூலிப்பாளர்களின் கையில் கொடுத்துவிட்டு உயிரைவிட்டாளா?

என்றெல்லாம் வரலாற்றில் பெண்களுக்கெதிராக நடத்தப்பட்ட இழிவான ஒடுக்குமுறைகளைப் படித்தறிந்து கடும் அதிர்ச்சிக்குள்ளாகி, இன்றைய இளைய தலைமுறையினர் கேள்விகளைக் கேட்கிறார் கள் அல்லவா? அதே போல ஒரு காலம் வரும். அப்போது, என்னது? இளம் வயதுப் பெண்களை ஐதீக ஐயப் பர்கள் சபரிமலை சன்னிதானத்தில் இருந்து விரட்டி யடித்தார்களா? மாதவிடாய் நாள்கள் அல்லாத மற்ற நாள்களிலும்கூட பெண்கள் சபரிமலையின் சாஸ் தாவை வணங்குவதற்கு அனுமதிக்கப்படவில்லையா?

என்று ஆச்சரியத்தோடு கேட்பார்கள். அந்தக் காலம் விரைவில் வரும்.

ஏனெனில், மாற்றம் ஒன்றே மாறாதது!