தமிழில் தற்போது எழுதிவரும் எழுத்தாளர்களில் அனைவராலும் விரும்பப்படுபவர் எஸ். ராமகிருஷ்ணன். முப்பது ஆண்டுகளாகத் தொடர்ந்து இலக்கியத்தில் முத்திரை பதித்து வருபவர். 250 சிறுகதைகள், 10 நாவல்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டிருப்பவர். திரைப்படத்துறையிலும் பணியாற்றுபவர். இந்த ஆண்டு தனது "சஞ்சாரம்' நாவலுக்காகச் "சாகித்ய அகாடமி'யின் விருதைப் பெற்றிருக்கும் அவரிடம் சண்டைக்கோழி-2 படத்தில் அவருடன் இணைந்து பணியாற்றிய வசனகர்த்தா பிருந்தா சாரதி மின்னல் நேர்காணல் ஒன்றை நடத்தியிருக்கிறார்.
அலைபேசி அழைப்புகள், தொலைக்காட்சி முற்றுகை என்று பரபரப்பாயிருந்தாலும் பதில்களில் வழக்கம்போல் அர்த்தம்மிக்க ஆழம் தெரிகிறது. வணக்கம் சார்.... முதலில் இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது தங்களுக்குக் கிடைத்ததற்கு வாழ்த்துக்கள்...
விருது அறிவித்தவுடன் உங்கள் மனநிலை?
மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. முழுநேரமாக எழுத்தையே வாழ்க்கையாகக் கொண்டவனுக்கு இது போன்ற விருதுகள்தானே அங்கீகாரம்.
முதலில் அதை யாருடன் பகிர்ந்து கொண்டீர்கள்?
குடும்பத்தினரிடமும் நாம் பெரிதும் மதிக்கும் கவிஞர் தேவதச்சனிடமும்.
இவர் இப்போது இல்லையே என யாரை நினைத்து வருந்தினீர்கள்?
எனது தாத்தா இருவரும் உயிருடன் இல்லை. அம்மா வழி தாத்தா என் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தார். அவர் இருந்திருந்தால் மிகுந்த சந்தோஷம் அடைந்திருப்பார். அதுபோலவேதான் ஆச்சியும். அவரும் காலமாகிவிட்டார்
சஞ்சாரம் எந்தப் புள்ளியில் தொடங்கியது?
கோவிலில் கேட்ட நாதஸ்வரத்தில். சிறுவயதில் இருந்தே கோவில்களில் கேட்டிருக்கிறேன். நாதஸ்வர இசைத் தட்டுகளைக் கேட்டிருக்கிறேன். நாதஸ்வர இசையை எப்போது கேட்டாலும் யானை நடந்து வருவதுபோல கம்பீரமாகவே உள்ளது
இசைக் கலைஞர்கள் பற்றிய கதை என்பதால் சஞ்சாரம் என்று தலைப்பு வைத்தீர்களா?
இசை சஞ்சரிக்கக்கூடியதுதானே. இசைக் கலைஞர்களும் ஊர் ஊராக அலைந்து கொண்டிருக்கி றார்கள்.
இரண்டுக்கும் பொருத்தமாகவே சஞ்சாரம் என வைத்தேன் எழுதும் முன் கள ஆய்வு செய்வதுண்டா?
நிறைய தெரிந்து கொள்வேன். இசைக்கலைஞர்களை தேடிப் போய் பார்த்து வாசிக்க வைத்து நிறைய அறிந்து கொண்டேன்
நிறைய பயணம் செய்கிறீர்கள்? எழுத்துக்கு அது எந்த விதங்களில் உதவி செய்கிறது?
பயணம் வாழ்க்கை குறித்த எண்ணங்களை மாற்றிவிடுகிறது. இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட தேசத்தில் பயணம் செய்வதன் வழி நிறைய கற்றுக் கொள்ளமுடிகிறது. மனிதர்கள் மீது பெரும் நம்பிக்கை வருகிறது
சிறுகதை, நாவல், கட்டுரை, திரைக்கதை என பல வடிவங்களிலும் செயல்படுகிறீர்கள்? எதில் சுதந்திரமாக உணர்வீர்கள்?
சிறுகதையில். அடிப்படையில் நான் ஒரு சிறுகதை ஆசிரியன்.
அதுதான் சவாலான வடிவம் எழுத்தில் யாரையாவது முன்னோடியாகக் கொண்டிருக்கிறீர்களா?
பாரதியை எப்போதும் முன்னோடியாக கருதுவேன்.
மாய யதார்த்தக் கதை களில் முன்பு நிறைய சிறுகதைகள் எழுதினீர்கள்? இப்போது யதார்த்தக் கதைக்குத் திரும்பிவிட்டீர்கள்... என்ன காரணம்?
இப்போதும் மாய யதார்த்தக் கதைகள் எழுதிக் கொண்டிருக்கிறேன். "என்ன சொல்கிறாய் சுடரே' என்ற சமீபத்திய தொகுப்பில் பத்து மாய யதார்த்த கதைகள் இருக்கிறதே
தமிழ் தாண்டி உங்களைக் கவர்ந்த இந்திய எழுத்தாளர் ஒருவரையும் வெளிநாட்டு எழுத்தாளர் ஒருவரையும் கூறச் சொன்னால் யார் யாரைக் குறிப்பிடுவீர்கள்?
வைக்கம் முகமது பஷீர் என்ற மலையாள எழுத்தாளரை விரும்பிப் படிப்பேன். வெளிநாட்டு எழுத்தாளர் என்றால் லியோ டால்ஸ்டாய்.
வாசகர்களிடம் நீங்கள் எதிர்பார்ப்பது என்ன?
ஆழ்ந்த வாசிப்பும் படித்தவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் மனதையும் மட்டுமே வாசகர்களிடம் எதிர்பார்க்கிறேன்
கற்பனையில் உருவாக்கிய கதாபாத்திரம் போல் நிஜத்தில் யாரையாவது சந்தித்ததுண்டா?
நிறைய. சில நேரம் ஆச்சரியமாக இருக்கும். தோளில் குரங்கை வைத்தபடியே அலையும் ஒருவரைப் பற்றி எழுதியிருந்தேன். அதுபோலவே ஒருவரை நேரிலும் கண்டேன். அவர் எனது கதாபாத்திரம் உயிர்பெற்றது போலவே இருந்தார்
அண்மையில் மறைந்த எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள் குறித்துச் சில வார்த்தைகள்?
மிகச்சிறந்த எழுத்தாளர். நல்ல நண்பர். புதுச்சேரி வரலாற்றை சிறந்த நாவலாக எழுதியவர். மிகச்சிறந்த பேச்சாளர். பண்பாளர். அவரது மறைவு மிகுந்த மனவருத்தத்தை ஏற்படுத்தியது
உள்ளூர்க் கதை உலகக் கதையாக எப்போது மாறுகிறது?
உலகக் கதைகள் யாவும் ஏதோவொரு தேசத்தின் உள்ளுர்க் கதைகளே. மனிதனின் ஆதார விஷயங்களை பற்றி பேச ஆரம்பித்தால் அந்த கதை எல்லா தேசங் களுக்கும் பொதுவாகிவிடும்.
நேர்காணல் : பிருந்தாசாரதி