சுப்பிரமணியபுரத்துல 'மதுர குலுங்க' அப்படிங்கிற முதல் பாட்டு பாடிமுடிச்சாச்சு. அதுக்கப்புறம்தான் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்த் அண்ணா, 'ஒன்னு பண்ணுடா இந்த டி சீரிஸ்னு எம்.டி. சி.டி. வாங்கி அதுல, இந்த பாட்ட மட்டும் பர்டிகுலரா ரெக்கார்ட் பண்ணிக்கோ. ஏன்னா பாட்ட போட்ட உடனே கேக்குற மாதிரி இருக்கணும். உன்னுடைய போன் நம்பரையும் அந்த சி.டி.யில எழுதி கையில வச்சிக்கோ. இந்த பாட்டு சி.டி.யை எல்லா இசையமைப்பாளருக்கும் நேரிலேயே கொண்டுபோய்க் கொடு. அப்படிக் கொடுக்கும் போது இன்னும் உனக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கும்'’ அப்படின்னு சொல்றாரு.
மெயின் சி.டி.யை பத்திரம் பண்ணிட்டு, காப்பி பண்ணுன சி.டி.யை கையில எடுத்துக் கிட்டு அதுல போன் நம்பரை எழுதி, எல்லாம் ஸ்டுடியோவிலயும் போய் நிப்பேன்.
அப்படி நிக்கும்போது, குங்குமப்பூவும் கொஞ்சு புறாவும் அப்படிங்கிற பட ஆடிஷனுக்காக தஞ்சாவூர், மதுரையில் இருந்தெல்லாம் இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா சார பாக்குறதுக்காக நிறைய பேர் சென்னை வந்திருக்காங்க. ஒரு பாடகர் எனக்கு போன் போட்டு இந்த விலாசம் எங்கண்ணா இருக்கு அப்படின்னு கேக்குறாரு.
நீங்க வாங்க நான் உங்களை கூட்டிட்டுப் போறேன்னு சொல்லிட்டு அவங்கள வரச் சொல்றேன். அதுல இன்னொரு விஷயம் என்ன இருக்குன்னா, நாம இவங்கள அழைச்சுக்கிட்டு போனமாதிரியும் இருக்கும், நாமளும் யுவன்சங்கர் ராஜா சார பார்த்த மாதிரியும் இருக்கும். தஞ்சாவூரில் இருந்தும் மதுரையில் இருந்தும் அவங்க ஒரு ஒப்பாரி சாங் பாடுவதற்காக வர்றாங்க.
ஒவ்வொரு ஊர்லயும் எப்படி ஒப்பாரிப் பாடல்கள் பாடறாங்க அப்படிங்கறதப் பாடிக் காட்டுறதுக்காக அவங்க வராங்க. இப்ப நானும் கும்பலோட கும்பலா யுவன்சங்கர் ராஜா அலுவலகத்தில் போய் நிக்கிறேன். அப்படி போயி நிக்கும்போது அவர் போன் பேசிட்டே வந்தாரு. நான் அந்த சி.டி.யை அவர் கையில் கொடுத்தேன். என் கையிலிருந்து சி.டியை வாங்கிட்டுப் போனாரு. போன் பேசிட்டு திரும்பவந்து இந்த சி.டி.யை நீங்க கொடுத்தீங்களா இது என்ன அப்படின்னு கேட்டாரு. சுப்பிரமணியபுரத்தில நான் பாட்டு பாடி இருக்கேன் சார். மதுரை குலுங்க திருவிழா சாங் சார்ன்னு சொன்னேன். அந்த சாங் நல்ல ஹிட்தானே. கேட்டிருக்கேனே. அப்படின்னு சொல்லிட்டு இப்ப என்ன பண்றாரு உங்க வாய்ஸ் டெஸ்ட் எடுத்துட்டு வாங்க அப்படின்னு சொல்லிட்டு ஸ்டுடியோ உள்ள போகச் சொன்னாரு.
அவங்க வாய்ஸ் டெஸ்ட் எடுக்குறாங்க. நம்ம ஊர்ல நான் பாடுன தாலாட்டு, ஒப்பாரிப் பாடலை பாடுறேன்.
பாவக்கா பந்தலிட்டேன்... பாவக்கா பந்தலிட்டேன்...
அந்த பாவக்கா பாழும் காத்து வந்து,
அந்த பாவக்காய் பந்தலுல சாய்ச்சுடுச்சு...
பந்தலுல சாய்ச்சிடுச்சு...
அதாவது ஒரு பாவக்காய் பந்தல், காத்தடிச்சு சாஞ்சு
போச்சுன்னா அது வளரவும் வளராது. திரும்ப நடவும் முடியாது.
எதுக்கும் ஆகாமப் போயிடும்.
அதனால வீட்ல ஒரு பலமான் இருந்து ஏதாவது ஒன்னு ஆயிடுச்சுன்னா என்ன ஆகும்ன்னா அந்த வீட்ல வருமானம் இருக்காது. எல்லாமே நிலைகுலைஞ்சு நின்னுடும். நாலு சுவர் எழுப்பி ஓடு போடுற நேரத்துல நின்னுபோச்சுன்னா எப்படி இருக் குமோ அப்படி இருக்கும். இந்தப் பாட்டை நான் யுவன் சார்ட்ட பாடிக் காட்டுறேன். நல்லா இருக்குதே இப்ப நான் கொடுக்கிற வரியை நீங்க பாடுன டோன்லயே பாடுங்க அப்படின்னு சொல்றாரு.
அந்தப் பாட்டு கங்கை அமரன் சார் எழுதுனது. தயாரிப்பு எஸ்.பி.பி. சார். இந்த படம் "குங்குமப்பூவும் கொஞ்சும்புறாவும்" கங்கை அமரன் சார் லிரிக்ஸ் தராரு.
என் ராசாத்தி கிளியே
உன்ன நானும் தவம் இருந்தேன்
இப்ப வெம்பி வதங்குதடி
வெறும் சருகா போனதடி
படத்துல ராஜா சார் சன் யுவன் சங்கர் ராஜா மியூசிக். ராஜா
சாருடைய தம்பி கங்கை அமரன் லிரிக்ஸ். அவருடைய பையன் வெங்கட் பிரபுதான் அந்த படத்துக்கு அசிஸ்டன்ட் டைரக்டர். பாட்டு காப்பி பண்ணி கொண்டுவந்து கொடுக்கிறது பா. ரஞ்சித். இந்த படத்தோட டைரக்டர் ராஜ்மோகன். அவருடைய அஸோஸியேட்தான் பா. ரஞ்சித்.
இப்ப எஸ்.பி.பி. சார் பாட்ட கேட்டுட்டு, இந்த பாட்டு இளையராஜா சார் பாடவேண்டிய பாட்டு. இந்த பையன் வாய்ஸ் நல்லாதான் இருக்கு. இதையே வச்சிடலாம் அப்படின்னு சொல்லிட்டாரு. அப்படிதான் இந்த பாட்டு வாய்ப்பு கிடைச்சது.
இந்த பாட்டு ஆடியோ ரிலீஸ் எல்லாம் முடிஞ்சிடுச்சு. இப்போ இந்த பாட்ட தீம் மியூசிக் கம்பெனிக்கு கொடுத்துட்டாங்க. அது ஒரு மிகப்பெரிய பேனர். இந்த பாட்டு எஃப்.எம்.ல ஓடுது. "பொல்லாதவன்" படத்தோட ப்ரடியூசர் கதிரேசன் சாரும், வெற்றிமாறன் சாரும் கார்ல உட்கார்ந்து பேசிட்டுப் போகும்போது இந்த பாட்டு ஓடுது. இவர்கள் திடீர்னு பாட்ட கேட்டுட்டு, இது யார் பாடுனது அப்படின்னு கவிஞர் ஏகாதசிகிட்ட போன் போட்டு கேக்குறாங்க. ஏன்னா அவருதான் "ஆடுகளம்" படத்துல "ஒத்த சொல்லால" அப்படிங்கிற பாட்டு எழுதுனவரு. இந்த ஒத்த சொல்லால பாட்டு 10 பேர் பாடிட்டாங்க. ஆனா புரொடியூஸருக்கும் டைரக்டருக்கும் அந்த பாட்டுக்கு வந்து இன்னும் ஒரு பெக்கூலியர் வாய்ஸ் கிடைக்கல.
ராவான வாய்ஸா இருந்தா நல்லா இருக்கும் அப்படின்னு யோசிக்கிறாங்க. தேடுறாங்க. அப்படி தேடும்போது இந்தப் பாட்டைக் கேட்டுட்டுதான் ஏகாதசி சாருக்கு போன் பண்ணி "என் ராசாத்தி கிளியே" இந்த பாட்ட பாடுனது யாரு அப்படின்னு கேக்குறாங்க. அப்போ கவிஞர் ஏகாதசி என்னைப் பத்திச் சொல்றாரு. உடனே இவங்க என்ன பண்றாங்க பொல்லாதவன் பட ப்ரொடியூசர் கதிரேசன் கவிஞர் ஏகாதசிகிட்ட போன் நம்பரை வாங்கி எனக்கு போன் பண்றாங்க. கதிரேசன் "ஆடுகளம்" படத்தோட புரொடியூசர். அத்தோடு மட்டுமல்ல, அவரு பைஃவ் ஸ்டார் கம்பெனியோட ஓனர். எனக்கு போன் வரும்போது மத்தியான நேரம் நான் தூங்கிட்டேன்.
திரும்ப ஏகாதசி அடிக்கிறார். "ஏம்ப்பா கதிரேசன் சார் போன் அடிச்சிருக்கார். நீ எடுக்கலையே" v அப்படின்னு கேக்குறாரு. நான் உடனே திரும்ப அவருக்கு அடிக்கிறேன். உடனே கதிரேசன் சார், "தம்பி நான் இந்த மாதிரி ப்ரடியூசர் பேசுறேன்பா.
எங்க இருக்கீங்க" அப்படின்னு கேட்டார். "நான் சென்னையில்தான் சார் இருக்கேன்" அப்படின்னு சொன்னேன். "நைட்டு ஒம்போது மணிக்கு ஜி.வி. பிரகாஷோட ஆபீஸ் வந்துருங்கன்னு அவர் சொல்றாரு.
அவர் பயங்கர ஸ்ட்ரிக்ட்டா இருப்பாரு.
அது மாதிரி டியூனும் ரொம்ப பயங்கரமா இருக்கும். உன் குரல் மட்டும்தான் எங்களுக்கு வேணும். நீ பயப்படாம பாடுனா போதும்" சொல்லி அட்ரஸ், லொகேஷன் எல்லாம் சொல்றாரு.
கதிர் சார் சொன்ன மாதிரியே போனேன். அங்க உள்ள போனா வெற்றி மாறன் சார், தனுஷ் சார், பிரதீப் சார் எல்லாம் பேசிட்டு இருக்காங்க. எனக்கு மனசெல்லாம் ஒரே படபடப்பா ஆயிடுச்சு. ஏன்னா நான் அப்பதான் முதன்முதலா ஒரு ஹீரோவ நேர்ல பார்க்கிறேன். தனுஷ் சார பாத்துட்டு அப்படியே ஒரு ஓரமா கைகட்டி நிக்கிறேன். ஜீ.வி. சார்தான் கூப்பிட்டு மியூசிக் எல்லாம் படிச்சிருக்கியா அப்படின்னு கேட்டாரு. "சொல்லிக் கொடுத்தா பாடுவேன் சார்" அப்படின்னு சொன்னேன். அது போதுமே அப்படின்னு டக்குனு என்ன பண்ணுனாரு, "ஏதாவது பாடுன சாங் வச்சிருக்கீங்களா இல்லன்னா ரெக்கார்டிங் பண்ணினது ஏதாவது இருக்கா"ன்னு கேட்டாரு. "இல்ல சார் நான் இப்பதான் ஒன்னு ரெண்டு பாட்டு பாடி வந்துட்டு இருக்கேன்"னு சொன்னேன். அவர் உடனே என்ன பண்ணாரு நீங்க ஒரு வாக்மேன் எடுத்துக் கிட்டு இந்த சாங்க மொட்டை மாடியில் போய் உட்கார்ந்துகிட்டு பிராக்டிஸ் பண்ணுங்க. அப்புறமா கூப்பிடுவாங்கன்னு சொன்னாரு. v ராத்திரி மூணு மணிக்கு கூப்பிட்டாங்க. இப்ப ஹெட்போன போட்டுக்கிட்டு பாடுங்க அப்படின்னாங்க.
ஆனா அவங்கள மாதிரி பர்பெக்டா எனக்கு பாட வரல. ஏன்னா நம்ம திருவிழா பாட்டு பாடுனதுக்கப்புறம் ஹீரோவுக்கு இதுவரைக்கும் பாடல. ஹீரோக்கு பாடும்போது அந்த ஹீரோவுக்கான தன்மையோட பாடணும். அவர் விஷுவல் வரும்போது அவர் பாடுன மாதிரி இருக்கணும். அப்ப அந்த வாய்ஸ் ஹீரோவுக்கு ஒட்டணும். அந்த சிச்சுவேஷனுக்குன்னு ஒரு செலிப் ரேஷன் வேணும். நான் பல்லவி பாடும்போது அது அவங்களுக்கு புடிக்கல. வெற்றிமாறன் சார் கூப்டாரு. தம்பி கதை சொன்னா நீ அத புடிச்சிட்டு பாடுவீங்களா அப்படின்னாரு.
சரி சார் அப்படின்னு சொன்னேன். உடனே ஒன்னும் இல்ல அந்த பொண்ணு வந்து அவர் மேல பாசமா இருக்கு. அவர் வந்து கோழிச் சண்டை போடுறவரு. அந்த படத்துல அவர் கோழிச் சண்டைதான் விடுவாரு. அதனால அவங்க என்ன பண்ணுவாங்க அப்படின்னா, இன்னொரு பையன், இந்த பையன் ரெண்டு பேரும் அந்த பொண்ண ஃபாலோ பண்ணுவாங்க. ஆனா அந்த பொண்ணு வந்து யார லவ் பண்றேன்னு கேட்டா அப்படியே இவன காட்டுவாளா அவன காட்டுவாளான்னு ஒரு பதட்டத்திலேயே ரெண்டு பேரும் இருப்பாங்க. அப்படியே அந்தப் பொண்ணு கையை தூக்கி தனுஷ காட்டுவாங்க.
அப்படியே அந்த ஹீரோ ரெக்க கட்டி பறப்பாரு. இந்த குளோஸப்ல நீங்க பாடணும்ன்னு சொன்னார். அந்த டயத்துல எனக்கு வாய்ஸ் ரொம்ப தின்னா இருக்கும்.
மறுபடியும் பாடும்போது அந்த பேஸ்ல வாய்ஸ் உட்காரல. உடனே என்ன பண்ணிட்டாங்க. நாளைக்கு இது மாதிரி மறுபடியும் ஒன்பது மணிக்கு வந்துருங்க அப்படின்னாங்க. அடுத்த நாள் போனா மறுபடியும் அந்த பேஸ் வரல. சரி நீங்க படுத்து தூங்குங்க அப்படி னாங்க. தூங்கி ரெண்டு மணிக்கு எழுப்புறாங்க. இப்ப மைக் கிட்ட வந்து அந்த கரகரப்போடு பாடுங்க அப்படின் னாங்க. பல்லவி வந்து அப்படித்தான் எடுத்தாங்க. அதுக் கப்புறம் பல்லவி நார்மலா, ஹைபிட்ச்ல நல்லா வந்துடுச்சு. அதுதான் இந்த பாட்டு.
ஏ ஒத்த சொல்லால என் உசிரெடுத்து வச்சிக்கிட்டா
ரெட்ட கண்ணால என்ன தின்னாடா…
பச்ச தண்ணி போல் அட சொம்புக்குள்ள ஊத்திவச்சி
நித்தம் குடிச்சு என்னக் கொன்னாடா
ஏ… பொட்ட காட்டுல ஆலங்கட்டி மழை பெஞ்சு
ஆறொன்னு ஓடுறத பாரு…
அட பட்டாம் பூச்சிதான் என் சட்டையில ஒட்டிகிச்சு
பட்டாசு போல நா வெடிச்சேன்…
முட்டக் கண்ணால என் மூச்செடுத்து போனவதான்
தொட்ட பின்னால ஏதோ ஆனேன்டா…
அப்படின்னு அந்த பாட்டு வரும். நம்மளையும் ஒருத்தி விரும்புறா அப்படின்னு சொல்லிட்டு அவன் ரெக்க கட்டி பறக்கிறான். அதனால அது விஷூவல்ல பார்த்தா அவன் சைக்கிள்ள ஆடுவான். காருமேல நின்னு ஆடுவான். முடிவெட்டுற கடையில போய் நின்னுகிட்டு ஆடுவான். அது மாதிரி ஒரு குதூகலமான பாட்டு இந்த பாட்டு.
இந்த படம் தேசிய விருதுக்கு போகும்போது இதுக்கு தேசிய விருது அறிவிக்கிறாங்க. இந்த பாட்டு ஏகாதசிதான் எழுதுனாரு. இந்த படத்துக்கு ஏழு தேசிய விருது அறிவிக்கிறாங்க. அப்ப நம்ம பாடுன பாட்டுக்கான நடனத்துக்கும் தேசிய விருது அறிவிக்கிறாங்க.
இந்தப் படம் பொங்கலுக்கு கரெக்டா சன் பிக்சர்ஸ்ல ரிலீஸ் ஆகுது.
ஆடுகளம்ங்குற இந்த படத்தோட ஆடியோ லாஞ்சுக்கு, டைரக்டர் ஷங்கர், ரஜினி சார் பேமிலி, ஏன்னா தனுஷ் வந்து மருமகன்ல. இப்ப நம்ம ரஜினி சாரோட மருமகனுக்கு பாடிட்டோம் அப்படிங்கற ஒரு பேரு வேற வந்துருச்சு. அந்த பாட்டு உலகத்திலேயே மிகப்பெரிய வரலாறு ஹிட்டு. அப்படியே வாழ்க்கை நகர்ந்துகிட்டே போகுது. ஒருமுறை ரோட்ல நடந்து போயிட்டு இருக்கும்போது "நாடோடிகள்" அப்படின்னு ஒரு போஸ்ட் பாக்குறேன். ஆஹா சசிகுமார் சார், சமுத்திரக்கனி சார் மறுபடியும் இணையுறாங்க அப்படின்னு சசி சாரோட ஆபீசுக்குப் போறேன்.
சசி சார் பார்த்த உடனே, "வாப்பா வாப்பா எப்படி இருக்க. நல்லா இருக்கியா" அப்படின்னு நலம் விசாரிச்சாரு. என்ன விஷயம் அப்படின்னாரு. சார் நான் பாட்டுக்குப் பாட்டுக் கச்சேரியில் பாடிட்டு இருந்திருப்பேன். நீங்க பாட்டுக்கு ஒரு பாட்டு ஒன்னு குடுத்துட்டீங்க. அதனால சினிமாவுல பாடிட்டேன் . ஆனா நிறைய பாட்டு வந்தாதான் பேமெண்ட் கொடுப்பாங்க. ஒரு பாட்டு இரண்டு பாட்ட வச்சு பேமெண்ட் கொடுக்கமாட்டாங்க. அதனால இப்ப நம்ம "நாடோடிகள்" போஸ்டர் பார்த்தேன் சார். அதுல ஏதாவது ஒரு வாய்ப்பு கிடைக்குமா"ன்னு கேட்டேன்.
அப்ப அவர், "அத நான் பண்ணலப்பா. அத அண்ணன் பண்றாரு. இந்த படத்துல நான் நடிக்கிறேன் அப்படின்னு சொல்றாரு. இருந்தாலும் உனக்காக நான் அண்ணன்கிட்ட போன் பண்ணி பேசுறேன்"னு சொல்லிட்டு, அண்ணனுக்கு போன் பண்ணி ஒரு உண்மையைச் சொல்றாரு. "அண்ணா நம்ம சுப்பிரமணியபுரம் படத்துல முதல் ஷுட்டிங்ல மதுர குலுங்க அப்படிங்கிற பாட்டுதான் ஷூட் பண்ணினோம்.
அந்தப் பையன் ரொம்ப ராசியான பையன்னே. அதனால அந்த பையனுக்கு இந்த படத்துலயும் ஒரு பாட்டு போடுங்க அப்படின்னு சொன்னாரு. பேசிக்கிட்டு இருக்கும்போதே சமுத்திரக்கனி அண்ணன் கார்ல இருந்து இறங்கி ஸ்டூடியோக்குள்ள வந்தாரு. சரி வாங்க போகலாம் அப்படின்னு ஸ்கார்பியோ கார்ல இந்த பக்கம் சசி சார், அந்த பக்கம் சமுத்திரக்கனி சார் நடுவுல என்ன உட்கார வைத்து சுந்தர் சி. பாபு... அவர்தான் அந்தப் படத்தோட மியூசிக் டைரக்டர். அவர்கிட்ட கூட்டிட்டுப் போறாங்க.
மியூசிக் டைரக்டர் சுந்தர் சி. பாபுதான் கத்தாழைக் கண்ணால, வால மீனு விலங்கு மீனு பாட்டுக்கெல்லாம் மியூசிக் பண்ணுனவரு. அதாவது வீணை சிட்டிபாபுவுடைய பையன்தான் அவரு.
அவர்தான் மியூசிக். நான் போறேன். ஆனா அவர் முகத்தைப் பார்த்தா கடுகடுன்னு இருக்காரு. என்னடா இது பாட்டெல்லாம் பாடி ரெகார்டிங் முடிச்சாச்சு இப்ப இவனுக்கு வேற வாய்ஸ் டெஸ்ட் கொடுத்து பாடவைக்கணுமா அப்படிங்கற கடுப்புதான் அவருக்கு. ஏற்கனவே பாடுன பாட்டு நல்லாதானே வந்து இருக்கு. அப்படின்னு அவர் சொல்லிக் கொடுக்கும்போதே ஒரு டென்ஷனாவே சொல்லிக் கொடுக்கிறார்.
ஒருவழியா நான் பாடி முடிச்சாச்சு. டைரக்டருக்கும் ரொம்ப ஹேப்பி. அதுக்கு அப்புறம் சுந்தர் சி. பாபுவுக்கும் ரொம்ப ஹேப்பி. வாய்ஸ் நல்லாதான் இருக்கு. அடுத்தடுத்து வாய்ப்புகளுக்கு நான் சொல்றேன் அப்படின்னு மியூசிக் டைரக்டர் சுந்தர் சி. பாபு சொன்னாரு. சரிங்க சார்ன்னு சொல்லிட்டு நானும் வந்துட்டேன்.
பார்த்தா பாடல் வருது. ஓப்பனிங் சீன் போகுது நம்ம பாட்டு 15 நிமிஷம் கழிச்சு வருது.
அப்பல்லாம் பட்டுச் சட்டை பட்டு வேஷ்டி கட்டிக்கிட்டு திருவிழாவுக்குப் போறதில்ல. அப்படியே அங்க போய் நின்னோம் அப்படின்னா அந்த உருமி அடிக்கும்போது, அந்த சத்தம் கேட்டு நம்மள ஓடிவந்து பாக்கணும் அப்படின்னு பரணி சொல்லுவாப்ல அப்பதான்...
ஆடுங்கடா மச்சான் ஆடுங்கடா
அழகான பொண்ணப் பாத்து தேடுங்கடா
பாடுங்கடா மச்சான் பாடுங்கடா
பாவாடை பின்னாலதான் ஓடுங்கடா
குத்த வச்ச பொண்ணு எல்லாம்
அத்தை பொண்ணு தான்
மத்தப் பொண்ணு எல்லாம் இந்த
மாமன் பொண்ணுதான்
இதை யார் எழுதினான்னா நம்ம அண்ணன் கபிலன். இப்ப இந்த பாட்டு பெரிய ஹிட். மரண ஹிட். ஒருசமயம் டூவீலர்ல அப்படியே வடபழனி வந்துட்டு போயிட்டிருக்கேன். லட்சுமண் ஸ்ருதி கச்சேரி கோடம்பாக்கத்தில நடந்துகிட்டு இருக்கு. அப்பெல்லாம் ஒவ்வொரு அம்மன் கோயில்லேயும் கச்சேரி நடக்கும். கச்சேரி சவுண்டு கேட்குது. நான் அப்படியே வண்டிய ஓரமா நிப்பாடிட்டு உள்ள போயி நிக்கிறேன். அடுத்த பாடல் இப்பதான் ரிலீஸ் ஆன நாடோடிகள் பட புதுப்பாடல்ன்னு லக்ஷ்மண் ஸ்ருதியில பாடுறாங்க. நான் அப்படியே கைய கட்டிட்டு ஓரமா போய் நிக்கிறேன். நான்தான் பாடினேன் அப்படின்னு சொன்னாலும் அங்கே இருக்கிறவன் எல்லாம் ஏத்துக்கமாட்டாங்க. அவங்க பாடுற வரைக்கும் நின்னு பார்த்துட்டு ஆஹா நம்ம பாட்டும் கச்சேரில போட ஆரம்பிச்சிட்டாங்க அதனால ரொம்ப சந்தோஷமா வீட்டுக்கு போய் ஒய்ஃப்கிட்ட சொல்றேன். ஒய்ஃபுக்கும் ரொம்ப சந்தோஷம்.
அப்புறம் சசி சார், சமுத்திரகனி சார் அடுத்தடுத்து இன்னும் நிறைய படங்கள் எல்லாம் வருது. சுந்தர் சி. பாபு சொன்னாரே அதே மாதிரி நடந்துபோச்சு.
அந்த படம் 150 நாள். இந்த படமும் 150 நாள் ஓடுச்சு. ஆடுகளமும் 150 நாள் ஓடிடுச்சு. இப்ப படங்கள் எல்லாம் ஒரு வாரம் ஓடுறதே பெருசா இருக்கு.
அப்படி 100 நாள் ஓடும்போதே ஷீல்டும் வாங்கிட்டேன். உடனே சசி சார் ஹாப்பிதானே... சந்தோஷம்தானே அப்படின்னாரு. இப்ப மதுரை குலுங்க, ஆடுங்கடா மச்சான், ஒத்த சொல்லல இப்படி மத்த பாட்டு எல்லாம் வந்து கணக்குக்கு நிறைய வந்துகிட்டே இருக்கு.
அடுத்து யுவன்சார்கிட்ட இருந்து ஒரு போன். நான் தாம்பரத்தில் அப்பதான் கச்சேரியில இருக்கேன். மேனேஜர் மறுபடியும் லைன்ல வராரு. டக்குனு கச்சேரி முடிஞ்சு அடிச்சேன். அண்ணா இதுமாதிரி நீங்க போன் அடிச்சு இருக்கீங்க என்ன விசேஷம் அப்படின்னு கேட்கிறேன். உடனே அவர் ஒரு சாங் ரெக்கார்டிங் இருக்குன்னு சொல்றாரு. சரின்னு டூவீலர்ல போறேன். சாமி... மழைன்னா மழை அவ்வளவு மழை. சோன்னு பெய்யுது. நான் போய்ச் சேரும்போது பாடவேண்டிய போர்ஷன அப்பதான் ஒருத்தரு ஹெட்போன் வச்சு பாடப் போறாரு. நான் அப்ப சொல்றேன், மழையில நனைஞ்சுட்டேன் சார். டூவீலர்லதான் வந்தேன் அப்படின்னு சொல்றேன். இவ்வளவு தூரம் நனைஞ்சிட்டு வந்துட்ட போல. சரி அந்த போர்ஷனை ஒரு டேக் குடுங்க அப்படின்னு சொல்றாரு. ஹெட்போன் மாட்டினவருக்கிட்டே இருந்து வாங்கி மாத்தி என்கிட்ட கொடுக்குறாரு. அந்த பாட்டுதான் ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம் அதை காதலுன்னு சொல்லுறாங்க அனைவரும் காதல் ஒரு கண்ணாமூச்சி கலவரம் அது எப்பொழுதுமே போதையான நிலவரம் கவிஞர் சிநேகன் எழுதுன பாட்டு. இந்த படத்துல தம்பி ராமையா சார், கருணா சார் இவங்க எல்லாம் ரொம்ப அற்புதமா ஒரு பாடலை நல்லா ஹிட் பண்ணி இருப்பாங்க.
அதுக்கப்புறம் காஞ்சனாவுக்கு ஒரு கோரஸ் பாடுன்னு தமன் சார் கூப்பிடுறாரு. நான் போறேன். அங்க லாரன்ஸ் சார் உட்கார்ந்து இருக்காரு. பாட்டை வேற ஒரு சிங்கர் பாடியாச்சு. இத கவிஞர். நா. முத்துக்குமார் அண்ணன் எழுதினார். நீங்க இப்ப ஒரு கோரஸ் பாடனும். நீங்க ஊர்ல பாடுனத கேட்டதை அப்படியே பாடிக் காட்டுங்க அப்படின்னாங்க. நான் அப்ப தான், காயே கருப்பாங்கா கஞ்சி ஊத்தி நெல்லிக்கா ஊரே புளியங்கா. உப்பு கட்சி நெல்லிக்காய் அப்படிங்கிற பாட்ட பாடுறேன்.
சங்கிலி புங்கிலி கதவ தொற நான் போட்ட வெங்கல புலி இது எல்லாத்தையும் அப்படியே கோரசா பாடுறேன். இதெல்லாம் என்ன புதுசு புதுசா நல்லா இருக்கே அப்படின்னு இதையே பல்லவி ஆக்கி சரணம் ரெடி பண்ணி பேசாம இவர் வாய்ஸ்ல ஒரு பாட்டே வைச்சுடலாம்ன்னு முடிவே பண்ணிட்டாங்க.
வண்டி ஓடும்...