கிராமியப் பாடகர் வேல்முருகனின் என் பாட்டு வண்டிப் பயணம்... சந்திப்பு முனைவர் பழமொழி பாலன் ஜல்ஜல் தொடர்

/idhalgal/eniya-utayam/rural-singer-velmurugans-en-patu-vandi-yatra-meet-dr-prophecy-balan-jaljal

கிராமிய இலக்கியங்களில்தான் தமிழர் களின் ஆதி நாகரிகமும் பண்பாடுகளும் இன்னும் உயிர்ப்போடு வாழ்கின்றன.

கிராமத்து மனிதர்கள் ஒவ்வொரு வரையும் கிராமிய இலக்கியமாகக் கருதலாம்.

வெள்ளந்தித்தனமே அவர்களின் பேரழகு.

மண் மனம் திறக்கும் ஒப்பனையற்ற அவர்களின் மொழி நடையே அவர்களின் ஆபரணம்.

இலக்கண எல்லைகள் பற்றிக் கவலைப் படாத, அவர்களின் மண்மணம் தோய்ந்த பாடல் களே, தமிழ் இலக்கணத்தின் ஆதிக் கருப்பை. அதிலிருந்த உண்டான ஓசை ஒழுங்கி லிருந்து உயிர்பெற்றவைதான் நம் இலக்கியங்கள்.

குறிப்பாக நம் கிராமியப் பாடல்களான நாட்டுப் புறப் பாடல்கள்தான், அருந்தமிழை இந்த நூற்றாண்டு வரை வாய்வழியாகவே அழைத்து வந்திருக்கிற வாகனங்கள்.

கிராமியப் பாடல்களில் வெளிப்படும் எதுகை, மோனை கள் செயற்கைப் பூச்சு இன்றி இயல்பாகவே அமைந்து விடுகின்றன.

vv

அத்தகைய நாட்டுப்புறப்பாடல்களால் மக்களின் இதயங்களைக் கொள்ளையடித்து வருகிறவர்களில், பிரதானமானவர் கலைமாமணி வேல்முருகன். இவரது குரலில் சுப்பிரமணியபுரம் படத்தில் "மதுர குலுங்க', நாடோடிகள் படத்தில் "ஆடுங்கடா', ஆடுகளம் படத்தில் "ஒத்த சொல்லால' என்றெல்லாம் வழிந்த எண்ணற்ற திரைப்பாடல்களும், நாட்டுப்புறப் பாடல்களும், தனிப்பாடல்களும் தமிழ்மக்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட வை.

தமிழக அரசின் கலைமாமணி விருது, பின்னணிப் பாடகருக்கான எடிசன் விருது, முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்களின் திருக்கரங்களால் நாட்டுப்புற நாயகன் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றிருப்பதோடு, உலக கின்னஸ் சாதனையையும் நிகழ்த்தியிருக்கிறார்.

நதிகளுக்கு வரலாறு உண்டு. உயிர்த்தோடும் ஓடைகளுக்கு எவர் எழுதினார் வரலாறு? விருட்சங் களுக்கு வரலாறு உண்டு. பூத்துக் குலுங்கும் செடி கொடிகளின் வரலாற்றைச் சிந்தித்தவர் யார்?

இயல்பாகப் பூத்துக் குலுங்கும் நம் கிராமிய கலைஞர்களுக்கென்று அழுத்தமான வாழ்வியல் இருக்கிறது.

அவர்களுக்கான வரலாறு என்பது பெரிதும் எழுதப்படாமலே இருந்துவிடுகிறது. மொழியின் வளர்ச்சிக்கான அத்தனை இலக்கு களையும், இவர்கள்தான் வீதிகள் தோறும், ஊர்கள் தோறும் தூக்கிக்கொண்டு சுமக்கிறார்கள். இப்படிப்பட்ட கிராமியக் கலைஞர்களின் வாழ்வியல் அழகையும் மதிப்பையும் ஆவணப் படுத்தும் வகையிலும், உங்களுடன் தன் அனு பவங்களைப் பகிர்ந்துகொள்ளும் ஆசையுடனும் நம் மண்மணம் மாறா மக்கள் பாடகர் கலைமாமணி வேல்முருகன், தன்னையும் தன் வாழ்வியல் அனுபவங்களையும் பகிர்ந்துகொள்ள வருகிறார்.

அவரது பாட்டுவண்

அவரது பாட்டுவண்டி, நம் கண்ணெதிரில் ஜல்ஜல்லென மணியோசை எழுப்பியபடி வருகிறது. அவர் வண்டியில் நாமும் ஏறிக்கொண்டு, பயணிப்போம் வாருங்கள். இனி அவரே பேசுகிறார்...

*

என்னை வாழ வைத்துக்கொண்டிருக்கும் உலகத் தமிழர்கள் எல்லோருக்கும் என் அன்பான வணக்கம். உங்களை எல்லாம் "இனிய உதயம்' இதழ் மூலம் சந்திப்பதிலும் உங்களோடு பேசுவதிலும் சந்தோசமான சந்தோசம்.

முதல்ல எங்க ஊர்ப்பக்கம் ஒரு தடவை வந்துபாருங்க. அப்படி என்னய்யா உங்க ஊர்ல இருக்குன்னு கேட்கறீங்களா? ஞாயம்தான்.

திரிகூட ராசப்பக் கவிராயரைக் கேள்விப்பட்டி ருப்பீங்க. அவர் தன்னோட "குற்றாலக் குறவஞ்சி' யில், குறவர் குலப் பெண்கள் பாடற மாதிரி ஒரு பாட்டை எழுதி இருக்கார்....

வானரங்கள் கனிகொடுத்து

மந்தியொடு கொஞ்சும் !

மந்திசிந்து கனிகளுக்கு

வான்கவிகள் கெஞ்சும் !

தேன்அருவித் திரை எழும்பி

வானின் வழி ஒழுகும்!

செங்கதிரோன் பரிக்காலும்

தேர்க்காலும் வழுகும்!

vv

கூனல் இளம் பிறை முடித்த

வேணி அலங்காரர் !

குற்றாலத் திரி கூட

மலை எங்கள் மலையே!

-அப்படீ ன்னு ஆண் குரங்குகள் பழத்தை எல்லாம் பறித்து பெண் குரங்குகளுக்கு கொடுத்து விட்டுக் கொஞ்சு காட்சியைக் காட்டி இருப்பார். அதுல சில பழங்களை பெண் குரங்குகள் கீழே சிந்துதாம். அந்த பழங்களை எல்லாம் கீழ சிந்துறதுக்கு பதிலா, எங்களுக்குத் தரக்கூடாதான்னு வானுலகத் துல இருக்கறவங்க எல்லாம் ஏக்கத்தோடு கேப்பாங் களாம்.

கிராமியப்பாட்டு பாடுற நான் எதுக்கு இப்படி சந்தம் ஒழுகும் இலக்கியப் பாட்டைச் சொல்றேன்னு நினைக்கிறீங்களா? அதுக்குக் காரணம் இருக்கு.

இப்படிப்பட்ட காட்சி, குற்றால மலையில் மட்டும்ன்னு இல்லை. கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் தாலுக்காவில் இருக்கும், எங்கள் முதணை கிராமத்திலும் பார்க்கலாம். ஏன்னா...

எங்க சிற்றூரைச் சுத்தியும் திண்டு திண்டாப் பழுத்துத் தொங்கும் பலா தோப்புகளும், தேன் வடியும் முந்திரித் தோட்டங்களும் நிறைய இருக்கு, அணில்களும், கிளிகளும், பேர் தெரியாத பறவை களும் பசியாற ஏதுவாக அதில் கனிகள் கனிஞ்சிருக் கும். இப்படி கனிகள் வாசத்தால் கமகமக்கும் ஊர்தாங்க, எங்க முதணை கிராமம்.

அது ஒரு செம்மண் பூமி. வெள்ளைவேட்டி கட்னவங்களை எல்லாம் காவி கட்டவச்சிடும். எங்கள் ஊர்ல பாலாறும், மணிமுத்தாறும் பாயுது. இடையிடையில் காஞ்சாலும், மழைக்காலம்ன்னு வந்தா, வானமே உடைஞ்சி விழுந்த கணக்கா, மடைதிறந்த வெள்ளம் பாயும். அதெல்லாம் பூமியக் குளிர வைக்கிறதாலதான், மரம் செடி கொடி எல்லாம் எப்பவும் பசுமையா, குளிர்ச்சியா இருந்துக்கிட்டே இருக்கும்.

எங்கள் ஊரைச் சுத்தி காவல் தெய்வங்கள் நிறைய இருக்குங்க. வீரனார், செம்பையனார், அப்புறம் புகழ்பெற்ற விருத்தகிரீஸ்வரர்ன்னு ஏகப்பட்ட கோயில்கள் இருக்கு. இந்த பக்கம் ஒரு பத்து கிலோமீட்டர் தூரம் போனா, வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன்னு பாடிய ஐயா வடலூர் ராமலிங்க அடிகளார் திருக்கோவில். கொஞ்சம் அந்தப் பக்கம் போனா, ஸ்ரீமுஷ்ணம் வராக பெருமாள் உட்கார்ந்திருக்கார். விருத்தாசலத்தில் கொளஞ்சியப்பர்ன்னு சொல்லக் கூடிய சுயம்புவா வந்த முருகரும் இருக்காரு. இப்படி ஊரைச் சுற்றி ஆலயங்களே வேலியாக இருப்பதால் எங்க பக்கம் பக்திக்கும் பாட்டுக்கும் பஞ்சமே இருக்காது.

எங்கள் ஊரிலிருந்து மூன்று கிலோமீட்டர் தூரத்துல நெய்வேலி நிலக்கரி நிறுவனம் இருக்கு. அந்தத் தொழிற்சாலையை நம்பித்தான் எங்க ஊர்ல பெரும்பாலான குடும்பங்கள் இருக்கு. விவசாயம் அப்படின்னா, முந்திரி, மா, பலா கேழ்வரகு, கம்பு இது மாதிரி மானாவாரிப் பயிர்கள்தான் அங்க விளையும். நெல்லுன்னு பார்க்கப் போனா, நான் பிறந்த காலகட்டத்திலேயே இல்லை.

சரிப்பா? அது என்ன ஊர் பேரு முதணைன்னு கேட்கறீங்களா?

மகா தீபத்தன்னைக்கு, திருவண்ணாமலை, மலை உச்சியில், கார்த்திகை தீபம் ஏத்தும் போது, அந்த கொப்பரைக்கு எங்க ஊரில் இருந்துதான் நெய் போகும். இப்ப நேத்துன்னு இல்ல. நூறு, இருநூறு வருசமாவே இங்க இருந்துதான் நெய் போகுது. அதுதான் ஐதீகமாம். எங்கெங்கெல்லாம் இருந்து நெய் வந்தாலும், எங்கள் ஊர்ல இருந்து போகிற நெய்யத்தான், முதல்ல அந்த கொப்பரையில் ஊத்துவாங்க. அதனாலதான் எங்க ஊருக்கு "முதல் நெய்' என்கின்ற பெயர் அமைஞ்சிருக்கு. அந்த முதல் நெய்தான், கொஞ்சம் கொஞ்சமா மருவி, மருவி "முதணை'ன்னு ஆயிடிச்சி. இதுதாங்க எங்கள் கிராமத்தோட ஜாதகம்.

எங்க அப்பா பேரு தனசேகரன். கலை ஆர்வம் மிகுந்தவர் அவர், நெய்வேலி நிலக்கரித் தொழிற்சாலைல சமையல் வேலை செஞ்சுக்கிட்டு இருந்தார். அப்பவே மாசம் 10 ஆயிரம் ரூபா சம்பளம். இப்ப அது ஒன்னரை லட்சத்துக்கு சமம். அம்மா பேரு அமிர்தாம்பாள். பேருக்கு ஏத்தபடி அன்பையே அமிர்தமா எங்களுக்கு ஊட்டி வளர்த்தது எங்க அம்மாதான்.

ஆரம்பத்துல நல்லா வசதியா, குவாட்டர்ஸ்ல தான் குடி இருந்தோம். எனக்கு எட்டு வயசு இருக்கும் போது, என்ன கால நேரமோ தெரியலை. அப்பா, வேலையை விட்டு நின்னுட்டாரு. அதனால பாரம் தாங்காம, எங்க குடும்ப வண்டி திணற ஆரம்பிச்சிடிச்சி.

அதனால் அன்றாடப் பொழப்பே கேள்விக் குறியா ஆச்சு. எத்தனை நாளைக்குதான் அடுத்த வீடு அண்ட வீடுகள்ல கடன் கேக்க முடியும். திக்குத் தெசை தெரியாமத் தெகைச்சுப் போயி நிக்கிறோம்.

அதனால் குடும்ப பாரம். எங்க அம்மா தலைல ஏறிடிச்சி. எங்க அம்மாவோட தூக்கம் போச்சு. நிம்மதி போச்சு. ஆஞ்சு ஓஞ்சு உட்காரக்கூட நேரமில்லாம, மண் சுமக்குற வேலை, அம்மாவை நசுக்க ஆரம்பிச்சிது.

vv

எங்களுக்காக உழைச்சு உழைச்சு ஓடா தேஞ்சுது எங்க அம்மா. எங்க கண்ணுக்கு முன்னாலயே அம்மா எலும்பும் தோலுமா எளச்சிப் போனுச்சு. பிள்ளைகள நல்ல நிலைல பாப்போம்ன்னு கனவு கண்டுக்கிட்டு இருந்த எங்க அம்மா, என் பதிமூணாவது வயசுல எங்கள விட்டுட்டு ஒரேயடியா கண்ணை மூடிடிச்சி.

நான் பாடுற பாட்டு, நான் இப்ப சம்பாதிக்கிற சம்பாத்தியம், எனக்குக் கிடைக்கிற கைத்தட்டல்ன்னு எதையுமே பார்க்காம... அதோட அறிகுறியக் கூட தெரிஞ்சிக்காம அம்மா போய்சேர்ந்துடுச்சு.

இதனால் இருக்குற வெளிச்சமும் அணைஞ்சி போச்சு.

இப்ப நாம் கச்சேரிக்குப் போறப்ப எல்லாம் ரசிகர்கள் அதிகம் கேட்கும் என் பாட்டுகள்ல ...

“பத்து மாசம் என்ன சுமந்து

பெத்து எடுத்த அம்மா - ஓம்

பாசத்துக்கு முன்னால எல்லாமே சும்மா

ரத்தத்தை எல்லாம் பாலாத் தந்து

பொத்தி வளர்த்த அம்மா-உங்க

அன்புக்கு முன்னாலே

ஆகாயமும் சும்மா...’

-இந்தப் பாட்டும் ஒன்னு. இதை இப்ப உலகமே கேட்குது. பல மேடைகள்ள என்னை இதைப் பாடச்சொல்லி எல்லோரும் கேக்கறாங்க. இதை நான் பாடுறப்ப எல்லாம் மனசுக்குள்ளயே நான் எங்க அம்மாவ நினைச்சி அழுவேன். இது அண்ணன் இளையகம்பன் எழுதிய பாட்டு. என் மனசுக்குக் குரல் கொடுத்த மாதிரி, அந்தப் பாட்டை உருக்கமா அவர் எழுதி இருப்பார்.

அம்மா இல்லைன்னு ஒரு பக்கம் மனசு ஒரு நிமிசம் துவண்டாலும், அடுத்த நிமிசமே, உங்கள் எல்லோரையும்போல, இந்த உலகத்துல இத்தனை உறவுகள் கிடைச்சிருக்கேன்னு என்னை நானே தேத்திக்குறேன்.

சரி, கொஞ்சம் வண்டிய, எங்கவூர் திருவிழாப் பக்கம் நகர்த்துவோம்.

பொதுவா, தைப்பூசத் திருவிழான்னாலே, கடலூர் மாவட்டத்துல, அந்த வள்ளலாரின் வடலூர் லயும், எங்க முதணை கிராமத்திலும்தான் ஏக சிறப்பா கொண்டாடுவாங்க. ஊரே பரபரத்துப்போய் நிக்கும். சின்னச் சின்ன பசங்கள்ல இருந்து பெரிய வயசான ஆளுக வரை ஒருவித உற்சாகத்தில் இருப்பாங்க. பொம்பளைகளும் வீடுவாசலை சுத்தம் பண்ணி காவடிக்கு ரெடியாவாங்க.

எங்கவூர் மணிமுத்தாறு நதிக்கரையிலதான் காவடி சோடிப்பாங்க, அதுக்காக முந்தின நாளு இரவே ஆளுக எல்லாம் ஆத்துக்கு போயிடுவாங்க. காலையில நாலு மணிக்கெல்லாம் குளிச்சிட்டு, சாமியாடி, மயில் காவடி, சேவல் காவடி, பால்காவடி, சந்தனக் காவடி, சர்பக் காவடி, வாள் காவடி, விளக்கு காவடின்னு விதவிதமா காவடி எடுப்பாங்க.

இன்னும் சிலபேர் நாக்குலயும் சிலபேர் உடம்பு முழுக்கவும் அலகு குத்திக்கிட்டு பெரிய காவடி, சின்னக் காவடி, ஊர்க்காவடி, நாட்டுக் காவடின்னு அதுகளை ஜோடிப்பாங்க. அப்ப ஆத்தங்கரையே ஏதோ போர்க்களம் மாதிரி விறுவிறுப்பாவும் பக்திமயமாவும் இருக்கும்.

அப்புறம் ஆத்துல இருந்து எங்கவூர் செம்பையனார் கோவிலுக்கு காவடிகளத் தூக்கிக் கிட்டு வருவாங்க. சும்மாவா தூக்குவாங்க.

காவடியாம் காவடி

கந்தவேலன் காவடி

கண்கொள்ளாக் காட்சிதரும்

கடம்பனுக்குக் காவடிலின்னு நிறைய நிறைய பாடல்களப் பாடியபடி ஆடிக்கிட்டே நடப்பாங்க.

எங்க அப்பா நல்லா தவில்வாசிப்பார். அதை எல்லோரும் ரசிப்பாங்க. இதையெல்லாம் சின்ன வயசுல கேட்கும்போதே நரம்புல முறுக்கேறும்.

தைப்பூசத்துக்கு ஊருக்கு சிறப்பு பஸ் எல்லாம் வரும். மாமா, அத்தை, முறைப்பொண்ணுங்க, மச்சான்கள்னு வீடே கோலாகலமா இருக்கும். ஊரே திருவிழா கோலமா இருக்கும். சுடச்சுட ஆவி பறக்குற ஆரஞ்சு கலர் சேமியா, செகப்பு கலர் சர்பத்து, வாட்ச்சு மாதிரி கையில சுத்துற ஜவ்வு மிட்டாய், வளையல், சாந்து போட்டு, சைடூசி, பலூன், ப்பீபீ இதெல்லாம்தான் திருவிழாவோட ஸ்பெஷல்.

எங்க பாட்டி பேரு அரும்பு. அப்பாவோட அம்மா அவங்க. அவங்கதான் எங்களுக்கு உறுதுணையாவும், ஆறுதலாவும் இருந்தாங்க. எங்க ஊரிலேயே எங்க பாட்டி மட்டும்தான் ரொம்ப கலரா செவப்பா இருக்கும். எங்க அம்மாவோட அப்பா அம்மான்னு பாத்தா, அம்மா பிறந்த கொஞ்ச நாள்லயே அவங்க எல்லாம் இறந்துட்டாங்க.

எங்க அம்மா பொறந்ததிலிருந்து அவங்க அப்பா அம்மாவைப் பார்த்ததே இல்லை. எங்க அம்மாவை வளர்த்தது எல்லாமே அம்மாவுடைய அண்ணனும் அண்ணியும்தான்.

நான் பொறந்ததும் போராட்டத்துக்கு நடுவுலதான். ரொம்ப நாள் வேண்டுதலுக்குப் பிறகு தான் நான் எங்க அம்மா வயித்துல வந்துருக்கேன். அம்மா மாசமா இருந்த சமயம் பார்த்து, தைப்பூசத் திருவிழாவும் வந்தது. ஊரே திருவிழா ஜோர்ல இருக்கு. ஊர்ல பாதி பேர் கோயிலுக்குப் போக, மீதிபேர் காவடி எடுக்க ஆத்துக்குப் போயிட்டாங்க. ஆத்துக்குப் போன லிஸ்டுல எங்க அப்பாவும் இருந்தார். ஊரே வெறிச்சோடிபோய் இருந்துருக்கு. நடமாட்டமே இல்லை. அம்மா நிறைமாசமா இருந்ததால், அம்மா கூட பாட்டி மட்டும்தான் துணைக்கு இருந்துருக்கு. அந்த நேரம் பார்த்து அம்மாவுக்கு பிரசவ வலிவந்துடுச்சு. அம்மா வலி தாளாம அழுதுக்கிட்டுத் துடியாத் துடிச்சிக்கிட்டு இருக்குது.

(இன்னும் ஓடும்....)

uday010123
இதையும் படியுங்கள்
Subscribe