கர்னல் பாலா சார், நம்மிடமிருந்து விடைபெற்றுக் கொண்டார்.
’நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு’
-என்பார் வள்ளுவர். நேற்றிருந்தவர் இன்றில்லை என்பதுதான் இவ்வுலகின் பெருமை என்பது இதன் பொருள்.
எவரும் நீண்டநள் வாழமுடியது என்பது இந்த பூமியின் தன்மையாகவும் பெருமையாகவும் இருக்கலாம். ஆனால் நம்மைச் சேர்ந்தவர்களும் நம்மீது அன்புகொண்டவர்களும் மறையும் போதுதான், அதன் இழப்பும் வலியும் எத்தகையது என்பது தெரிய வரும். அதிலும் பாலா சாரைப் போன்ற தன்னலம் கருதாத மாமனிதர்கள் மறைவது என்பது துயரத்திலும் துயரம். நாட்டிற்கும் மாணவர் சமூகத்திற்குமான பேரிழப்பு!
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/balasir.jpg)
பல்கலைக் கழக வேந்தராக, உயரங்களிலேயே சஞ்சரித்துக் கொண்டிருந்த கர்னல் பாலசுப்பிரமணியம், தனது அன்பிற்குரிய மாணவர்களும், பல்கலைக் கழகப் பேராசிரியர்களும், சக நண்பர்களும் கூட ‘பாலா சார்’ என்று அழைப்பதில்தான் பெருமிதமும் மகிழ்ச்சியும் கொண்டிருந்தார். இதன் மூலம், சாதாரண நிலையில் இருப்பவர்களிடமும் சமன்மைப் பண்பை வளர்த்த பெருந்தன்மையாளர் அவர்.
இளைஞர்களின் நலனுக்காக -குறிப்பாக மாணவர் களின் உயர்வுக்காக இடையறாது துடித்துக்கொண்டிருந்த அந்த நல்லிலிதயம் ஓய்ந்துவிட்டது. தனது கருணைக் கரங்களால் ஏழை எளிய மக்களுக்கு இடையறாது வழங்கிக்கொண்டே இருந்த அந்தக் கொடைக் கரங்கள் அசைவதை நிறுத்திக்கொண்டன. பாலா சார், நம் நினைவு களோடு கலந்துவிட்டார்.
மராட்டிய மாநிலத்தின் பெருநகரமான புனேயில் அவரால் விதைக்கப்பட்டு, வளர்க்கப்பட்டு, கிளை விட்டு, தழைத்துப் பெரும் ஆலமரமாய் வளர்ந்து நிற்கிறது அவரது ஸ்ரீ பாலாஜி சொசைட்டி பல்கலைக் கழகம். அதன் வேந்தராக-பல ஆயிரம் மாணவர்களுக்கு வழி காட்டியவராக- பல ஆயிரம் மாணவர்களை உயரத்திற்குக் கொண்டு போய்ச் சேர்ப்பித்தவராக- பல நூறு கோடிகளுக்கு அதிபராக - மராட்டிய மாநிலமே திரும்பிப் பார்க்கும் வகையில்- ஒரு தலை சிறந்த ஆளுமை யாக- தலை நிமிர் தமிழராக வாழ்ந்தவர் அவர்.
எரிந்து கொண்டிருந்த கற்பூரதீபம் அணைவதைப் போல், கடந்த 20-ந் தேதி ஒரே நொடியில் காற்றில் கரைந்துவிட்டார். அவரது பல்கலைக் கழக மாணவர் களும், உற்றார் உறவினர்களும், அவரால் உருவாக்கப் பட்ட, அவரால் உதவிக்கரம் நீட்டப்பட்ட அத்தனை பேரும், கண்ணீர் சிந்த, அவர் விடைபெற்றுக் கொண்டார். எனினும், அவர் நடமாடிய ஒவ்வொரு இடத்திலும் அவர் நினைவுகள் கனிவோடு புன்னகைத்தபடியே நிற்கின்றன.
கர்னல் பாலாவைக் கடந்த சில வருடங்களாகத் தான் நான் அறிவேன். ஆனால் வாழ்க்கை முழுதும் அவரோடு பழகியது போன்ற பேரன்பான அனு பவத்தை அவர் கொடுத்திருக்கிறார். என் மீதும், என் குடும்பத்தினர் மீதும், நம் நக்கீரன் மீதும் அவர் அளவுகடந்த அக்கறையையும் அன்பையும் வைத்திருந்தார். ஒரு மூத்த சகோதரராகத் திகழ்ந்தார். அவரது உழைப்பும், ஏழைகளுக்கு உதவும் பண்பும், மனதின் உயர்வும்தான் அவர் மீது பெரும் ஈர்ப்பை உண்டாக்கியது.
அவரது வாழ்க்கை ஏட்டை நாம் புரட்டினால், அதன் எல்லாப் பக்கங்களும் சாதனைப் பக்கங் களாகவே நம்மை வியக்க வைக்கின்றன. தஞ்சை மாவட்டம் மன்னார்குடி அருகேயுள்ள கண்டிதம் பேட்டை என்ற குக்கிராமத்தில், ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் தான் பாலசுப்பிரமணியம் என்கிற பாலா. அவருக்கு நினைவு தெரிவதற்கு முன்பே அவரது அப்பா, வேலைக்காக மலேசியா, சிங்கப்பூர் என்று போய்விட்டார். குடும்பம் வறுமையின் உச்சத்தை அனுபவித்தது. அவர் திரும்பி வந்த போதும் வெறும் கையோடுதான் வந்தார். 8 ஆம் வகுப்பு படிக்கும் போதுதான் தன் தந்தையையே நேரில் பார்த்தாராம் பாலா. வெறும் கையோடு வந்த அப்பாக்காரர், பாலாவை "படிக்கவேண்டாம் என்றும் ஆடு மாடுகளை மேய்த்து வா' என்று கட்டளை இட்டார். பாலாவோ, இல்லை நான் படித்து முன்னேற வேண்டும் என்று கெஞ்சியும் அவர் கேட்கவில்லை. இதனால் 10 ஆம் வகுப்பைக் கூட தாண்ட முடியாத சிறுவனாக வீட்டை விட்டு வெளியேறிய பாலா, சென்னையில் கோடம்பாக்கம் பகுதியில் சுற்றித் திரிந்தார். அவர் நினைத்த மாதிரி கோடம்பாக்கத்தின் ஸ்டுடியோ கதவுகள் , அவருக்காகத் திறக்கவில்லை. பசி, பட்டினியோடு தெரு ஓரங்களில் தங்கியபடியே, வேலை தேடினார் பாலா. அந்த நிலையிலும் நான் வெற்றிபெற்றே தீருவேன் என்ற வைராக்கியத்தை மட்டும் அவர் இழக்கவேயில்லை.
அதன் விளைவுதான் அவரை எளிதில் எட்டமுடியாத உயரத்திற்கு அழைத்துச் சென்றது. கோடம்பாக்கத்தில் பசியோடு சாலையோரம் படுத்திருந்த அவரை, அவர்மேல் இரக்கப்பட்ட ஒருவர், ஒரு மேக்கப் மேனிடம், டச் அப் பாயாகச் சேர்த்துவிட்டார். கொஞ்சநாள் அங்கிருந்த அவர், நாட்டிற்காவது பயன்படுவோம் என்ற திடீர் முடிவால், ராணுவத் தில் சேர்ந்தார். அங்கு கடுமையாக உழைத்த அவர், ராணுவப் பணி களுக்கு இடையிலேயே தீவிரமாகப் படித்து 3 மாஸ்டர் பட்டத்தைப் பெற்றார் என்றால் அவரது வைராக்கியம் எப்படிப்பட்டது என்பதை நாம் தெரிந்துகொள்ளலாம். பணியிலும் அவர் காட்டிய பொறுப்புணர்வால், ஒரே நாளில் சாதாரண ராணுவ வீரர் என்ற நிலையில் இருந்து, கர்னலாக குடியரசுத் தலைவரால் நேரடியாக நியமிக்கப்பட்டார் பாலா. இந்தியாவில் இதற்கு முன் இப்படி யாரும் ஒரே நாளில் கர்னல் ஆனது இல்லை. அந்த சாதனையையும் நம் மன்னார் குடித் தமிழரான பாலாதான் சாதித்துக் காட்டினார். நாட்டுக்காகத் தங்களையே அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் ராணுவத்தினரின் குழதைகளுக்கு, கார்ப்பரேட் கல்வியை வழங்கவேண்டும் என்று ஆசைப் பட்டார். உடனே, மதிப்பு மிக்க கர்னல் பதவியிலிருந்து விலகி, புனேயில் ஒரு கல்லூரிக் குழுமத்தில் பேராசிரியராகச் சேர்ந்து அதற்கான அனுபவத் தைச் சேகரிக்க ஆரம்பித்தார். அவருடைய பொறுப்புணர்வாலும், வெற்றி பெறும் வேகத்தாலும், தனியே ஒரு கல்லூரியைத் தொடங்கு வதற்கான பாதை அவர் கண்ணெதிரே விரிந்தது. அவர் வேலை பார்த்த நிறுவனமே அவருக்கு ஊக்கம் தர, அவர் ஸ்ரீபாலாஜி சொசைட்டிக் கல்லூரியைத் தொடங்கினார். இதனால், கார்ப்பரேட் வாழ்க்கைக்கு வழிவகுக்கும் எம்.பி.ஏ. படிப்பு, ஆயுதப் படையைச் சேர்ந்த வீரர்களின் குழந்தைகளுக்குக் கிடைத்தது. இதன்மூலம், ராணுவத்தினரின் பிள்ளைகளுக்காகக் கல்வி நிறுவனத்தைத் தொடங்கிய முதல் இந்தியக் கல்வியாளர் என்ற பெருமைக்குரியவரானார் கர்னல் பாலா. அந்தக் கல்லூரி அவரது தீவிர பொறுப்புணர்வால், பெரும் கல்லூரிக் குழுமமாக வளர்ந்து இன்று பல்கலைக் கழகமாக உயர்ந்து நிற்கிறது. அவரது திருப்பணியால், 25000-க்கும் மேற்பட்ட மாணவர்கள், உலகின் தலை சிறந்த பன்னாட்டு நிறுவனங்களில் தற்போது பணிபுரிந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/balasir1.jpg)
தன் கல்வி நிறுவனத்தில் படிக்கிற அத்தனை பேரும் சிறந்த மனிதர்களாக வளரவேண்டும் என்று கருதுகிறவர் பாலா சார், அதற்காக அவர்களிடம் அதீத அக்கறையைக் காட்டுவது போலவே கறாரான கண்டிப்பையும் காட்டுவார். அவர்களுக்கு எந்த வகையிலும் கெட்ட பழக்கங்களோ, துர்குணங்களோ வந்துவிடக்கூடாது என்பதில் அவர் கண்ணும் கருத்துமாக இருப்பார். அதனால் தன் கறாரைப் பற்றியும் தன்னைப் பற்றியும் அவர் சொல்லும் போது ’"நான் இரக்கமுள்ள அரக்கன்'’ என்று நகைச்சுவையாகச் சொல்லிக்கொள்வார் எனினும், பாலா என்கிற மாமனிதரின் எல்லாப் பக்கமும் அப்பழுக்கற்றதாகவே இருந்தது.
அவரது வெற்றிமுகம் இது என்றால், அவரது இரக்க குணம் ஆயிரக்கணக்கானோரை அவர் மூலம் பயன்பட வைத்தது. அந்தப் பகுதியைச் சேர்ந்த அத்தனைக் குடும்பத்து மாணவ மாணவிகளுக்கும், அவர்கள் கல்விபெற உதவிக்கரம் நீட்டினார் பாலா சார். தான் பிறந்த கண்டிதம்பேட்டை கிராமத்தையே, அடிப்படை வசதிகள் நிரம்பிய ஊராக மாற்றிக் காட்டினார். அவரால் அங்கே பயன்படாத குடும்பங்களே இல்லை என்கிற அளவுக்கு அந்த ஊரின் வளர்ச்சியோடு ஒன்றிப் போயிருந்தார் பாலா சார். அதோடு கண்ணில் தென்பட்ட பசித்தவர்களை எல்லாம் உண்ணவைத்தும் அவர் அழகு பார்த்தார்.
அதனால்தான் அவர் மறைவுச் செய்தி மன்னார்குடியைச் சுற்றியுள்ள ஆலங்கோட்டை, உள்ளிக்கோட்டை, மேலத்திருப் பாலக்குடி, கீழத்திருப்பாலக்குடி, குடிகாடு, சுந்தரக்கோட்டை உள்ளிட்ட சுற்றுப்பட்டு கிராமங்கள் அத்தனையையும் துயரத்தி லும் துக்கத்திலும் மூழ்கடித்தது. அங்கங்கே கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களும், அஞ்சலிக்கான பிளக்ஸ் போர்டுகளும் வைக்கப் பட்டு, அப்பகுதி மக்களால் துக்கம் அனுஷ்டிக்கப்பட்டது. பலரின் வீடுகளிலும் கர்னலின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலிகள் நடந்தன. இவையெல்லாம் தான் கர்னல் பாலா எப்படி வாழ்ந்தார் என்பதைக் காட்டும் கண்ணாடியாக அமைந்தன.
மற்றவர்களிடம் உதவி தேடிச் செல்பவர்களைத் தான் இந்த உலகம் அதிகம் பார்த்திருக்கிறது. ஆனால், நம் கர்னல் பாலா சாரோ, தான் உதவி செய்வதற்கு வாய்ப்பாக, யாராவது தன்னைக் தேடிவர மாட்டார்களா என்று எப்போதும் தேடக் கூடியவராக இருந்தார். தன் கண்ணில் பட்டவர்களுக்கு எல்லாம் எந்த வகையில் உதவுவது? என்று சிந்தித்துப் பார்த்து உதவிக்கரம் நீட்டுபவராக இருந்தார். இதை நான் உணர்ந்தது போலவே, அன்பிற்குரிய சகோதரர் லேனா தமிழ்வாணன் அவர்களும் கூர்ந்து கவனித்திருக்கிறார். அதை நக்கீரனிலும் அவர் பதிவுசெய்திருக்கிறார். பாலா சார் போன்ற ஒரு மா மனிதரை இனி காண்பது என்பது அரிதிலும் அரிது.
இலக்கியத்திலும் ஆர்வம் கொண்ட கர்னல் பாலா சார், நல்ல கவிஞர்கள் உருவாக வேண்டும் என்ற பெரும் நோக்கில், நம் இனிய உதயம் இதழின் மூலம், கல்லூரி மாணவர் களுக்கான கவிதைப் போட்டிகளை நடத்தி, முதல் பரிசாக ஒரு லட்ச ரூபாயையும், ஏனைய பரிசுகளாக ஆயிரக்கணக்கான ரூபாய்களையும் வழங்கி, இலக்கிய உலகின் கவனத்தையும் பெரிதும் ஈர்த்தார்.
இப்படிப்பட்ட பண்புகளால் தான் அனைவரின் இதயங்களிலும் பாலா சார் வேரூன்றிப் போயிருக்கிறார். விளக்காகச் சுடர்ந்த அவரைத் தான் காலம் கையமர்த்தி இருக்கிறது. பாலா சாருக்கு, புனே சென்று அவருக்கு அஞ்சலி செய்த போது, அந்த மாபெரும் விருட்சம், தான் நிறைய சாதித்த மன நிறைவோடு கண்ணாடிப் பேழைக்குள் படுத்திருந்தது.
அவர் முகத்தில் இருந்த புன்னகை, வாழ்ந்ததின் பயனை அடைந்துவிட்டேன் என்று சொல்வது போலிலிருந்தது. பாலா சார் இன்று இல்லை யென் றாலும், அவரது கல்வி நிறுவனங்கள், அவரது புகழ்க்கொடியை விண்ணளாவப் பறக்க விட்டுக் கொண்டிருக்கின்றன. அவர் இல்லாத வெற்றிடங்களும் அவரைத் தான் இப்போது பேசிக்கொண்டிருக்கின்றன. பாலா சாரின் நினைவுகள், வாழ்ந்துகொண்டே இருக்கும்.
பாலா சாருக்கு, மன நெகிழ்வோடு, கடைசிக் கடைசியாய் ஒரு ராயல் சல்யூட்.
-நக்கீரன்கோபால்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-03/balasir-t.jpg)