"என்னை இடதா வலதா என்று கேட்கிறார்கள். நான் ரெண்டும் இல்லை. அதனால்தான் மய்யம் என்று பெயர் வைத்திருக்கிறேன்''. ""நான் கறுப்புச் சட்டை அணிபவன், கருப்புக்குள் காவியும் உண்டு'', ""தேசிய கீதத்தில் திராவிடம் என்னும் வார்த்தை இருக்கும் வரை திராவிடம் இருக்கும்'' - இவை, சமீபத்தில் கட்சி ஆரம்பித்திருக்கும் நடிகர் கமல்ஹாசன், தனது கட்சியான, "மக்கள் நீதி மய்யம்' தொடக்க விழாவிலும் பல்வேறு தருணங்களிலும் பேசியவை.
""கொள்கை என்னனு கேட்டாங்க, அப்படியே தலைசுத்திருச்சு'', ""நான் பிறப்பால் கன்னடன். என்னை நீங்க தான் தமிழனாக்கிட்டீங்க''- இவை கட்சி தொடங்கும் பணிகளில் தீவிரமாக இருக்கும் நடிகர் ரஜினிகாந்த் அவ்வப்போது சொன்னவை. தமிழ்நாட்டில் சிஸ்டம் சரியில்லை என்று ரஜினிகாந்தும், ஊழல் நிறைந்திருக்கிறதென்று கமல்ஹாசனும் அரசியலுக்கு வந்திருக்கின்றனர். ஆண்டாண்டு காலம் ஆடிப் பாடிவிட்டு, அயர்ச்சி வந்த போது அரசியல் தேடி வந்திருக்கும் இருவரும் ஊழலை ஒழித்து சிஸ்டத்தை சரிசெய்வதென்பது அடுத்த கட்டம். முதல் கட்டத்தில், இவர்களது கட்சிகளின் கொள்கைகள் என்ன, செயல்திட்டம் என்ன, பின்பற்றப் போகும் சித்தாந்தம் என்ன, என பல கேள்விகள் பதில் சொல்லப்படாமல் இருக்கின்றன. அது சார்ந்த கேள்விகள் எழுந்தால், தொடக்கத்தில் படித்தது போன்ற குழப்பும் பதில்கள் தான் இவர்களது எதிர்வினை.
""நான் அடிப்படையில் தெலுங்குப் பெண் என்றா லும் தமிழில்தான் என் மன ஓட்டம் இருக்கும். தமிழ் மண்ணில் பிறப்பது பாக்கியம். தமிழின் பெருமையை இன்னும் பலர் உணரவில்லை'', குழப்பும் பேச்சுகளுக்கு மத்தியில் கேட்ட தெளிவான இந்த வார்த்தைகள், கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி, நாகப்பட்டினம் அருகே நடந்த அரிமா சங்க விழாவில் நடிகை ரோகிணி பேசிய வார்த்தைகள். நடிப்பு, திரைப்பட இயக்கம், பாடல்கள் எழுதுவது என தனது பணிகளையும் அதைத் தாண்டி பெண்கள் பாதுகாப்பு, சுயாதீன திரைப்பட செயல்பாடுகள் என தொடர் செயல்பாட்டாளராக இருக்கும் ரோகிணியின் இந்த வார்த்தைகளில் இருக்கும் தெளிவும் உறுதியும், தமிழ்தான் என் அடையாளம் என்று கூறும் திடமும், முழு நேர அரசியல்வாதிகளாகி தமிழ்நாட்டு மக்களின் வாழ்வை மாற்றி, அரசு இயந்திரத்தை சரிசெய்யப் போவதாகச் சொல்லும் அந்த இருவரின் வார்த்தைகளில் இல்லை என்பது வருத்தமே.
"எதற்காக அவர்களிடம் அந்த வார்த்தைகளை எதிர்பார்க்கிறீர்கள்? ரோகிணியும் ரஜினி, கமலும் ஒன்றா? மொழி அடை யாளத்தை அவர்கள் உரக்கச் சொல்லுதல் அவசியமா? மக்களுக்கு நல்லது செய்ய கொள்கைகள் தேவையா?', என்று கேள்விகள் எழலாம். ரசிகர்கள் சூழ்ந்த மேடையில் நின்றுகொண்டு, இந்தியன், முதல்வன், சிவாஜி படங்கள் பாணியில் ஊழலை விமர்சிக்க அடையாளங்கள் தேவையில்லை. ஆனால், "நீட்'டுக்கும், நியூட்ரினோவுக்கும், கீழடிக்கும் முடிவெடுக்க அடையாளம் தேவை. தமிழுணர்வும், சித்தாந்தங்களும், இடதும் வலதும் செய்யும் முடிவுகள் அவை.
முடிவெடுக்கும் இடத்திற்கு வர உங்களுக்கு ஆசை இருந்தால், முடிவை எங்களுக்கு சாதகமாக எடுப்பீர்களா என்று தெரிந்து கொள்ள உங்கள் அடையாளங்கள் தேவை தான்.
அதுவும், தமிழ்நாட்டில் ஒரு அரசியல் வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறதென்றும் அதை நிரப்ப வேண்டுமென்றும் கூறிக் கொண்டு, நேர்மை, துணிவு எதுவும் இல்லாத இந்த மாநில அரசைப் பயன்படுத்தி அதன் மேலேறியும், ஆளுநர் ஆய்வு என்ற பெயரில் அத்துமீறியும் தமிழகத்தில் ஒரு இடத்தைப் பிடித்துவிடலாம் என மதவாத பா.ஜ.க. ஏதேதோ வேடம் போடும் இந்த வேளையில், உங்கள் கொள்கைகளை உறுதியாகச் சொல்லாமல் இருப்பது, பா.ஜ.க.வின் மாறுவேடம்தான் நீங்களோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. தமிழ்த்தாய் வாழ்த்தை மதிக்காதவர்கள் தமிழகத்தைக் கட்டுப்படுத்தும் நிலை இப்பொழுது இருக்கும் இந்த வடிவிலும் வேறு எந்த வடிவிலும் தொடர்வதை தமிழ்மக்கள் விரும்பவில்லை.
ஒரு புறம் யாரென்றே கூறாமல், ஊர் முன் நின்று வித்தை காட்டுபவர்கள் போல் இவர்கள் இருக்க, மறுபுறம் ஊருக்குள் இருப்பவர்களின் ஆதியை சோதித்து இனம் பிரிக்கிறது இன்னொரு தரப்பு. யார் தமிழர், யார் தமிழரில்லை என்று சான்றிதழ் வழங்க தான்தோன்றியாக வந்த ஒரு கூட்டம். இவர்களின் வரையறைப்படி தமிழருக்காக ஊனுயிர் கொடுத்த பல தலைவர்கள் தமிழர்களல்லர். கீழடியில் புதைந்திருக்கும் பெருவரலாற்றை அப்படியே மூடத் துடிப்பவர்கள், ஆண்டாளை ஆயுதமாக்கி மதச்சார்பற்ற மனதுகளை சீண்டுபவர்கள், மாநில உரிமையை மடக்கிப் பிடிப்பவர்கள், நதி நீரிலும் கைவிட்ட நீதி என நாலாபுறமும் தமிழகத்தை ஆபத்துகள் சூழ்ந்துள்ள நிலையில், இளைஞர்கள் அரசியல் பேசுவதும், செயல்படுவதும் பெரிய ஆறுதல். அந்த அரசியல் காட்சிப் போதையால் சுருங்கி அதற்குள்ளேயே அவர்கள் அடங்கிப் போகாமல் இருக்கத்தான் கொள்கைகள் தேவை, தமிழுணர்வு தேவை.
""தமிழ்நாட்டில் இளைஞர்கள் அரசியல் பேச ஆரம்பித்துவிட்டார்கள். ஜல்லிக்கட்டின்போது களத்திலும் இறங்கிவிட்டார்கள். சுற்றுச்சூழல், மதவாதம், மொழி மற்றும் கலாச்சாரத் திணிப்பு போன்றவற்றில் சரியான பார்வை கொள்ளத் தொடங்கிவிட்டார்கள். இந்த மாற்றத்தை, கருத்தியல் சிந்தனையை தடுத்து மீண்டும் அவர்களை சினிமா நட்சத்திரங்களை நோக்கி திருப்புவதற்காகத்தான் இந்த இருவரின் அரசியல் பிரவேசம்'' என்கிறார் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி.
தேர்தல் அரசியலில் உள்ளவர்கள் எதிர்ப்பதற்கு ஆதரிப்பதற்கும் காரணங்கள் இருக்கலாம். இயக்க அரசியலில் இயங்கி வரும் திருமுருகன் காந்தி கூறுவது முக்கியமாகிறது. ஏற்கனவே ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு முதல்வரான பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரின் ஆட்சியின் நிலையில் மாநில அரசின் உரிமைகள் மீதான மத்திய அரசின் முரட்டுத்தனத்தையும் அத்துமீறலையும் அவ்வப்போது காண்கிறோம்.
இவர்கள் இருவரும் கொள்கை, கோட்பாட்டுக் கெல்லாம் அப்பாற்பட்டவர்கள். ஆம், இவர்களது கொள்கையை கூவத்தூர் முதல் குட்கா வரை பார்த்தோம். முறைகேடுகள் ஒரு பக்கமென்றால், நெடுங்காலமாக "மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி' என்று திராவிட இயக்கம் சாதித்தவற்றையெல்லாம் இன்முகத்துடன் எடுத்துக் கொடுத்துவிட்டு இடுப்பு வலிக்க குனிந்து நிற்கிறார்கள் இந்த கொள்கையற்றவர்கள். இதற்கு முன் திரையுலகில் இருந்து அரசியலுக்கு வந்த நடிகர் விஜயகாந்த் இதே போலத்தான் கூறினார். ""எனக்கு கொள்கையெல்லாம் கிடையாது, மக்களுக்கு வீட்டுக்கு வீடு ரேஷன் பொருள்கள் கொடுப்பேன், ஊழலை ஒழிப்பேன்'' என்றார். 'சரி, கொள்கைகள் வேண்டாம், ஊழலை எப்படி ஒழிப்பீர்கள், அதையாவது சொல்லுங்கள்' என்ற போது, ""இப்பொழுது சொல்ல மாட்டேன், சொன்னா மத்தவங்க காப்பி அடிச்சுருவாங்க'' என்றார். இன்று அவரின் அரசியல் இருப்பு எப்படியிருக்கிறது? இதே போலத்தான் இவர்களும் சொல்கிறார்கள். நாளையை நாமே கணித்துக் கொள்ளலாம்.
சரி, விமர்சனப் பார்வை கொண்டவர்கள்தான் இவ்வளவு யோசிக்கிறோம் என்று மக்களிடம் பேசினால், மக்கள் தெளிவாகக் கேட்கிறார்கள், ""கலைஞர் முழுவீச்சில் செயல்பட்ட பொழுது, ஜெயலலிதா இருந்தபொழுது இவர்கள் ஏன் வரவில்லை?"" என்று. அதிலும் ரஜினிகாந்த், ஒரு பக்கம் நிர்வாகிகள் நியமனம், மறுபக்கம் புதிய திரைப்பட அறிவிப்பு என்று இன்னும் போர் மனநிலைக்கு வராமலேயே இருக்கிறார்.
அவரது ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள். இவர் களுக்கிடையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் செய்த கலவரம் நமக்கு மறக்கமுடியாத கேளிக்கை.
இத்தனை குழப்பமான குரல்களிடையே தெளிவாய் ஒலித்த நடிகை ரோகிணியின் குரல் கவனம் ஈர்த்தது. தமிழ்நாட்டில் பிறப்பது பாக்கியம் என்று பேசிய ரோகிணியிடம் பேசியபோது, ""தமிழ் பழமையான மொழி, செம்மொழி என்பதையெல்லாம் தாண்டி தமிழ் மொழிக்கென்றே பல தனித்துவங்கள் இருக்கின்றன. தமில் இயல்பாகவே பாசமுள்ள மொழி. என்னுடைய வாசிப்பு, யோசனை எல்லாமே தமிழில்தான் இருக்கு. இதை தமிழ் மட்டுமே தெரிஞ்சுக்கிட்டு நான் சொன்னா, தப்பு. ஆனால், பிற மொழிகளும் தெரிஞ்ச நான் சொல்றேன். நான் தமிழ்ப் பெண்ணா என்னை உணருகிறேன். எங்கிருந்தோ வருது ஆப்பிள், எங்கிருந்தோ வருது உணவுப் பண்டங்கள். அதை நாம நம்ம மண்ணில் விளைஞ்சாதான் சாப்பிடணும்னு இல்ல. நம்ம உடலுக்கு நல்லதுன்னா சாப்பிடலாம். உடலுக்கு உணவு மாதிரி, மனதுக்கு மொழி. தமிழராய் உணர்பவர்கள், வாழ்பவர்கள் தமிழர்கள். அவர்களை சாதி அடிப்படையில் வரையறுப்பது தேவையற்றது'' என்றார்.
"மையம்' என்று போடாமல் "மய்யம்' என்று போட்டு தன்னை பெரியாரியவாதியாக நிறுவும் கமல்ஹாசனும், லச்சினையில் இருந்ததாமரையையும் பாம்பையும் நீக்கி, தன்னை பாரதிய ஜனதா கட்சிக்கு தூரமாகக் காட்டிக் கொள்ளும் ரஜினிகாந்தும் இப்படி தங்கள் கொள்கையை, நிலைப்பாடை தெளிவாகக் கூற வேண்டும். நடக்கும் பிரச்சனைகளுக்கும் மக்களின் இன்னல்களுக்கும் மத்திய அரசுக்கும் தொடர்பே இல்லையென்பதுபோல், மாநில அரசை மட்டுமே விமர்சித்து வரும் சினிமா வீரர்கள் இவர்கள்.
அதே சினிமா துறையில் இருந்து அரசியல் நோக்கங்கள் இல்லாமல், தொழிலைப் பற்றி எண்ணாமல், ""அடிப்படையில் தெலுங்குப் பெண் என்றாலும் நான் தமிழச்சி'' என்று கூறும் ரோகிணியிடம் ரஜினி, கமல் அரசியல் வருகை குறித்துக் கேட்டோம். ""இப்போதான வர்றாங்க, வரட்டும், களமிறங்கட்டும், செயல்படட்டும். அப்புறம் சொல்றேன்'' என்றார் நட்பையும் தொழிலையும் எண்ணாமல்.
-வீபீகே