னித வாழ்க்கையானது பெரும்புரட்சிகளுக்குப் பின்பு இயந்திரமயமாகிவிட்டது. இவ்வியந்திர வாழ்க்கையில் ஏற்பட்ட சலிப்பினால் மனிதன் கடந்த காலத்தைத் திருப்பிப் பார்க்க விரும்பினான். அதற்குப் புதின இலக்கியம் அவனுக்குத் துணைபுரிந்தது. ""காவியத்திலும் நாடகத்திலும் வரும் மாந்தர்கள் தங்கள் வாழ்க்கையோடு மிகவும் நெருங்கிய தொடர்புடையவர்கள்போல் தோன்றிய காரணத்தால் பதினெட்டாம் நூற்றாண்டு மனிதர்களுடைய பார்வை நாவலின் பக்கம் திரும்பியது. ஆகவே, பழங்கால மக்களுக்குக் காப்பியம் இருந்ததைப் போல எலிசபெத் கால மக்களுக்கு நாடகம் இருந்ததைப் போலத் தற்கால மக்களுக்கு அகப்பார்வையும், காரண காரியங்களும் பொருந்திய நாவல் இருக்கிறது'' என்பர்.

பெண்மை

w1917 மார்ச் 8-ஆம் தேதி ரஷ்யப் புரட்சியைத் தொடங்கி யவர்கள், ரஷ்யப் பெண்தொழிலாளர்கள். மன்னராட்சி ஒழிந்து உலகின் முதல் சோசலிஸ்ட் புரட்சி தோன்றுவதற்குக் கால்கோளிடப்பட்ட நாளே பின்னாளில் 1917 மார்ச் 8 அன்று மகளிர் தினமாகக் கொண்டாடப்படுவதற்குக் காரணமாயிற்று. இப்புரட்சியைப் பெண்களே முன்னெடுத்து நடத்தினர். உணவு வேண்டும். போர்நிறுத்தம் வேண்டும். சுதந்திரம் வேண்டும் என்று பெண் தொழிலாளர்கள் ஆண் தொழிலாளர்களையும், வீரர்களையும், நோக்கிப் போராட அறைகூவல் விடுத்தனர். இதன் பயனாக ஆண்- பெண் வேறுபாடின்றிச் சமத்துவம் உறுதி செய்யப்பட்டது.

சமூதாயத்தில் இன்றைய புதிய சமூக நிலைகள் மக்களின் வாழ்க்கையைப் பற்றிய சிந்தனைத்தளத்தில் பல மாறுதல்களை ஏற்படுத்தி வருகின்றன. அவ்வகையிலேயே பெண்களிடம் சமூகம் அவர்களுக்குக் கொடுத்துள்ள முக்கியத்துவம், தகுதி மற்றும் அதிகாரம் ஆகியவற்றின் அடிப்படையில் சில மாற்றங்களைக் கோருகின்றது. இம்மாற்றங்களின் விளைவு பெண்நிலைவாதத்தினை முன்னிறுத்துகிறது.

Advertisment

பிரதாப முதலியார் சரித்திரத்தின் வழியாகத் தொடங்கிய வரலாற்றில் பெண்படைப்பாளி களின் பங்களிப்பு புதினத்தில் குறிப்பிடத் தக்கது. சங்க இலக்கியத்தில் பெரும்பான்மைப் படைப்புகளை வழங்கிய பெண் படைப்பாளிகள் அதற்குப் பின்பு உள்ள காலங்களில் பல்வேறு அரசியல், சமூக, சமயமாற்றங்களின் காரணங்களினால் பின்தள்ளப்பட்டனர்.

நீதி இலக்கியக் காலந்தொடங்கிப் பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதிக்காலம் வரை எழுத்துலகில் பங்களிப்புச் செய்த பெண்படைப்பாளிகள் ஒருசிலரே. ஐரோப்பியர்களின் வருகை, கல்விப் பரவலாக்க, அச்சு ஊடக வருகை, சமூகத்தில் நிகழ்ந்த அரசியல் ரீதியான எழுச்சி ஆகியவை பெண்களின் எழுத்தியலை மீண்டும் மீட்டெடுத்தன. இவை மட்டுமல்லாது எழுது முறையில் ஏற்பட்ட மாற்றங்களும் இதற்குக் காரணமாயின.

இராஜம்கிருஷ்ணன், பாமா, ஆண்டாள்பிரியதர்ஷினி, மலர்வதி, பிரியபாபு, தமிழ்நதி போன்ற பெண் படைப்பாளிகள் வெவ்வேறு சிந்தனைப் பின்புலம் கொண்டவர்கள். பின்புலத்திலேயே அவர்களின் புதினங்களும் வடிவம் பெற்று வெளிவந்துள்ளன. சமூக மற்றும் குடும்பப் பின்புலம்- அவர்கள் கையாளும் மொழி, புதிய சிந்தனைகள், புதிய கோட்பாடுகள்- சமூகம் சார்ந்த புரிதல்கள் என இவை அனைத்தும் ஒன்றிணைந்து புதின ஆசிரியர்களின் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தவையாக மாறியுள்ளன. அத்தகைய புரட்சிப் பெண்களின் கருத்துக்கள் ஆய்வு செய்யப்படுகிறது.

Advertisment

வேருக்கு நீர்: இராஜம்கிருஷ்ணன்

w

பெண் புதின ஆசிரியர்களுள் குறிப்பிடத்தக்கவர். இவருடைய படைப்புகளில் பெண்பாத்திரங்கள் பிரச்சினைக் குரிய சூழ்நிலைகளில் வைத்துச் சமூக ஆய்வு முறையில் கதையினை அறிவியல் பூர்வமான முறையில் கையாளுகிறார்.

இராஜம்கிருஷ்ணன் சிந்தித்து எழுதும் படைப்பாளி. ஒரு விஞ்ஞானி யைப் போல அவர் எழுதும் நாவல் களுக்குரிய விவரங்களை முழுவது மாகச் சேகரித்துக்கொள்கிறார். நாவல் என்பது நான்கு சுவர்களுக் குள் அமர்ந்து கற்பனை செய்யும் படைப்பு அல்ல. மாறாக வாழ்க்கை அனுபவத்திலிருந்து நாவலாசிரியர் பெறக்கூடிய படிப்பினைகளின் விளைவாகும் என்று கூறுவதுடன் அவருடைய ஒவ்வொரு புதினத் திலும் ஒரு பிரச்சினை கையாளப் படுகிறது.

இந்திய விடுதலை, அதையொட்டிய அரசியல் நிகழ்வுகள் முதலியவற்றை வளைக்கரம், வேருக்குநீர், ரோஜா இதழ்கள் ஆகிய புதினங் கள் வழியாக வெளிப் படுத்திய இவர் கரிப்பு மணிகள், குறிஞ்சித்தேன் ஆகிய புதினங்கள் வழியாகச் சமூகம் சார்ந்த பிரச்சினைகளை வெளிப் படுத்தியுள்ளார். இவரின் களஆய்வு சார்ந்த புதினங்கள் தமிழ் புதினவரலாற்றிலும், பெண் புதின ஆசிரியர்கள் வரிசையிலும் இவருக்குத் தனித்த இடத்தைப் பெற்றுத்தந்தன. எனவே தான் இந்திய அரசின் உயரிய விருதான சாகித்திய அகாதெமி விருதை முதல் பெண் நாவலாசிரியராகப் பெற்றார் என்பது குறிப்பிடத் தக்கது.

சமூகம் சார்ந்த அலைவாய்கரையில், கரிப்புமணிகள், கூட்டுக்குஞ்சுகள் ஆகிய புதினங்கள் தொழிலாளி வர்க்க பெண்களது வாழ்வைச் சித்திரிக்கும் புதினங்களாக அமைந் துள்ளன.

இராஜம்கிருஷ்ணன் மார்க்சியவாதியாக இல்லாவிட்டாலும், இருபதாம் நூற்றாண்டில் தொடக்ககால நாவலாசிரி யர்களில் ஆண் படைப் பாளர்களுக்கு இணையாக நாவலுலகில் தன்னை அடையாளப் படுத்திக் கொண்டவர். சமூக விழுமியங்களையும், பொழுதுபோக்கு அம்சங்களையும் முதன்மைப்படுத்தி எழுதியவர்.

காந்தி ஆசிரமத்தை நடத்தி வரும். யமுனாவின் தந்தை உடல்நிலை சரியில்லாததால், யமுனாவே ஆசிரமத்தை எடுத்து நடத்தும் பெண்ணாகக் காட்டப்படுகிறாள். காந்தி நூற்றாண்டு விழாவிற்காக ஆசிரமக் குழந்தைகளைத் தயார் செய்கிறாள். இங்குக் காந்தியக்கொள்கைகள் சமூகத்தில் கடைப்பிடிக்கப்படுகிறதா என்ற கேள்வியையும் ஆசிரியர் முன்வைக்கிறார்.

ஆசிரமத்தில் காந்தியக் கொள்கையைக் கேட்டு வளர்ந்த துரை என்பவனை மணம் முடிக்கிறாள் யமுனா. துரை பதவி உயர உயரத் தன் கொள்கைகளை விட்டுத் தவறான பாதையில் செல்கிறான். மனைவி தன்னை நோக்கிக் கேள்விகளை எழுப்பும்போது, அவளை பிற ஆடவரோடு இணைத்துக் கூறும் கீழ்நிலைக்கு ஆளாகிறான். சமூகத்திற்காக வாழவேண்டும் என்ற யமுனாவும், சுயநலத்தோடு வளர்ந்து வந்த பாதையை மறந்து சுயநலத்தோடு வாழும் மனிதனாகத் துரை மாறிவிடுகிறான். மனைவி என்பவள் கணவனுக்குக் கட்டுப்பட்டவளாக இருக்கவேண்டும் இல்லையெனில் பிரிந்துவிடவேண்டும் என்று கூறுகிறான். அத்தகைய போக்கினை மாற்றும் புரட்சிப் பெண்ணாகத் திகழ்கிறாள் யமுனா.

களமும் புதினமும் -ஆண்டாள் பிரியதர்ஷினி புதினம் கற்பனையிலிருந்து மட்டுமே தோன்றுவதல்ல;

மாறாக மக்களின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு தம் புதினங்களைப் படைத்தவர் ஆண்டாள் பிரியதர்ஷினி. தகனம் புதினமானது மயான பூமிவாழ் மக்களின் தீர்வை நோக்கித் தமிழ்ப் புதின வரலாற்றில் தனியிடம் பெற்றது.

மனிதனுக்கும், மண்ணிற்கும் இடையே உள்ள தொடர்பு பூர்வஜென்மத் தொடர்பு. மனிதன் மண்ணிலேயே பிறந்து மண்ணிலேயே வீழ்கிறான். தகனம் புதினத்தின் கதைக்களம் மயானபூமியில் நடைபெறுகிறது. மண் மனிதனின் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது; மண் மனித மனங்களைப் பக்குவப்படுத்தும் இயல்புடையது என்ற கருத்தினைச் சுட்டிக்காட்டுகிறார். பிணம் எரிக்கும் தொழிலில்கூடத் தொழிலில் தர்மம் காக்கப்படுகிறது என்பதை முன் வைக்கிறார்.

பெண்களுக்குச் சற்றே பழக்கமில்லாத, ஒரு தளத்தைத் தேர்ந்தெடுத்து அதில் முயற்சி செய்து வெற்றியும் பெற்றுள்ளார். இறுதிச்சடங்கில் பெண்களுக்கு இடமளிக்காத நிலையில், பெண் எழுத்தாளர் பெண்ணைக் கதைத்தலைவியாகச் சுட்டிக்காட்டியிருப்பது புதுமையிலும் புதுமையான செயல். தகனம் 17 பாகங்களைக் கொண்டு விரிகிறது. ஒவ்வொரு பாகத்தின் தொடக்கத்திலும் பாரதியார், பட்டினத்தார் கதைப்பாடல், நாட்டுப்புறப்பாடல்கள் சுட்டியிருப்பது புதினத்தின் புதுமையாகும்.

கதைக்களம்

சென்னையை ஒட்டிய புறநகர்ப் பகுதியில் அமைந்த தாழாங்குப்பத்தில் கதை தொடங்குகிறது. மனிதன் செய்யும் வேலைகளிலேயே கடைசியான ஒன்று மனித மலம் அள்ளுவதுதான் என்று நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு அதைவிட மோசமான வேலைதான் வெட்டியான் வேலை. குலத்தொழிலாக வெட்டியான் வேலை செய்யும் இரு குடும்பங்களுக்கு இடையேயான கதைக்களம். முன்பகை காரணமாக இரு குடும்பங்களும் தனித்தனியே தங்களது தொழிலைச் செய்து வருகின்றனர். குலத்தொழிலான வெட்டியான் வேலை பிடிக்காமல், அரசியலில் சேர்கிறான் சின்னராசு. தனது அத்தை மகளான சின்னப்பொண்ணு தாய் தந்தையை இழந்த நிலையில் இரு சகோதரிகளுடன் வெட்டியான் வேலை செய்து வருகிறாள். குலத்தொழிலின் பயனாகத் தனது குடும்பம் நோய் மற்றும் வறுமையில் வாடினாலும் அரசியல் ஆதாயம் தேடும் சின்னராசு, தன் அத்தை மகளை ஆதரிக்கவில்லை. சின்னராசு பத்து மக்களின் ஓட்டு வங்கிக்காக அரசியல் கணக்குப்போடும் மயான நிலையில் அல்லல்படுகிறாள். கலைத்தலைவி சின்னப்பொண்ணு, "தப்பை மறைக்கத் துணைபோற தொழில் இல்ல இது. ஒவ்வொரு பிணத்தையும் எரிக்கப்போகும்முன் சாமியை வேண்டுகிறேன். இந்த ஆளோட ஆத்மா நல்லபடியா சாந்தி அடையனும் என்று எல்லாப் பொணத்துக்கும் கடைசி சொந்தக்காரர்கள் நாங்க தான். எனவே அவர்களை நாங்கள் வழியனுப்பி வைக்கிறோம். புனிதமாய் செய்கிறவேலை' என்று இருந்த வெட்டியான் தொழிலுக்கும் வினையாக வரவிருந்த மின்சாரமயான திட்டம் பிணங்களுக்கு வேண்டுமானால் தீர்வாக இருக்கலாம். வெட்டியான் வாழ்விற்குத் தீர்வு என்ன? (பக்.42) என்று படைப்பாளிகளின் சிந்தனைக்கே விட்டுவிடுவதன் மூலம் பாரதியின் குயில் wபாட்டினை நினைவூட்டுகிறது. இந்தத் தகனம் கடையனுக்கும் கடைத்தேற்றம் என்ற சித்தாந்தம் எழுத்தில் மட்டும்தானா, என்று வாசகர்களிடம் கேள்வி கேட்டு ஒவ்வொருவரையும் மேலும் சிந்திக்க வைக்கிறார் படைப்பாளி.

பாலினம் சார்ந்த அவலங்கள்

சிறுவயதிலேயே தந்தையைத் தொலைத்த சின்னப் பொண்ணு புரட்சிப்பெண்ணாகக் குலத்தொழிலை மேற்கொள்கின்றாள். ஆண்களுக்கு இணையான மன உறுதியுடன் பிணத்தை எரிப்பதும், புதைப்பதும், சிக்கல்களைச் சந்திப்பதுமான செயலில் ஈடுபடுகின்றாள். செய்யும் தொழில் பிணத்தை எரிப்பது என்றாலும், அவற்றிலும் ஆண் பெண் என்ற பாலினப்பாகுபாடு மேலோங்கி இருப்பதைப் புதினத்தில் காணமுடிகிறது.

பெண்ணின் நிலைப்பாடும் வாழ்க்கை நகர்வும்

விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்ட மக்களைப் பற்றிய புதினமாக அமைவதால் அவர்களுடைய எதர்த்தமான நிலைப்பாட்டையும், வாழ்க்கை நகர்வையும் நெகிழ்ச்சியுடன் ஆசிரியர் வெளிப்படுத்துகின்றார். மயானத்தை நம்பி வாழுகின்ற இருசப்பன், சின்னப்பொண்ணு ஆகியோரை மையமிட்ட இரண்டு குடும்பம். அக்குடும்பம் சார்ந்த உறுப்பினர்களே இப்புதினத்திற்குக் கதைமாந்தர்கள். குடும்பப் பொறுப்பை ஏற்று மயானத் தொழிலைச் செய்து வரும் சின்னப்பொண்ணுவின் வாழ்க்கை நகர்கிறது.

""எல்லா நாளும் சுடுகாடுதான் வீடு. இங்கப் பொணம் எரிஞ்சாதான் வீட்டுல அடுப்பெரியும். வாய்க்கரிசி வந்தால்தான் வயிற்றுக்குக் கஞ்சி, பொறந்த நாளுக்குப் புதுசு எடுக்காம தட்டிப் போச்சு, இன்னிக்குப் பொணம் விழுந்துதோ... புதுசு கிடைச்சது'' என்ற மனதை உலுக்கும் சொற்கள் புதினத்தில் இடம்பெறுகிறது.

தொழில் சார்ந்த அவலங்கள்

பிணத்தை எரிப்பதும், புதைப்பதுமான தொழிலைச் செய்பவர்களுக்கு அரசியல்வாதிகளும், அதிகார வர்க்கத்தாலும், பெரும் முதலாளிகளாலும் பலவிதமான அவலங்கள் ஏற்படுவதையும் அதனை எதிர்த்துப் புரட்சிப்பெண்ணாக திகழும் நிலையையும் புதினம் சுட்டிக்காட்டிகிறது.

""பொம்பளப் புள்ளங்கள் இவனுங்க சொகத்துக்கு மோந்துப்புட்டு பிரச்சினையாயிரக் கூடாதுன்னு எரிக்க வக்கிறது இவனுங்களுக்குப் பொழப்பாயிடுச்சு. அந்தப் பொண்ணை எரிச்சு சாம்பலாக்கி இல்லாமல் பண்ணிப்புடலாம்'' என்று தன் தவறை மறைப்பதற்காகப் பெண்ணை எரிக்க வேண்டிய அவலநிலை காணப்படுகிறது.

புலம்பெயர்ந்தோர் இலக்கியம்

1960-ல் இலங்கையிலிருந்து ஈழத்தமிழர்களின் புலம்பெயர்வு தொடங்கியது. அவர்கள் படைத்த இலக்கியங்களைவிட 1983-ல் இலங்கையில் ஏற்பட்ட கலவரத்தின் காரணமாகப் புலம்பெயர்ந்தோரால் படைக்கப்படும் இலக்கியங்களே புலம்பெயர்ந்தோர் இலக்கியத்தின் முதன்மையாகக் கருதப்படுகின்றன.

புலம்பெயர்ந்தோர் படைப்பாக்கம்

புலம்பெயர்ந்தோர் படைப்புகள் அவர் களின் தாய்நாடு குறித்த ஏக்கத்தையும், குடியேறிய நாடு அவர் களுக்கு அளித்துள்ள புதுவாழ்வில் அவர்கள் சந்திக்கும் இடர்ப்பாடு களையும் விளக்கமாகக் கூறுபவையாக அமைந் துள்ளன. இப்படைப்புகள் தாயகத்தின் உறவுகள், நினைவுகள் மற்றும் தேடலை முன் வைப்பதா கவும் உள்ளன.

பார்த்தீனியம்-தமிழ்நதி

விடுதலைப்புலிகளின் வரலாற்றுப்பாத்திரத்தை அங்கீகரிக்க வேண்டும் என்று கருதுபவராக இருந்தாலும், ஈழப் போராட் டத்தில் ஏற்பட்ட சறுக்கல் களையும் உள்முரண் களையும் அதனால் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர் களின் வாழ் வையும் புதினத் தில் பதிவு செய்துள்ளார்.

பார்த்தீனியம் புதினம்

ஈழ அரசியலை முன் வைத்து எழுதப்பட்ட புதினம். மக்கள் மீது திணிக்கப்பட்ட யுத்தம் எப்படித் தன் கொடிய கரங்களால் மக்களின் அன்றாட வாழ்வைச் சிதைக்கிறது என்பதை எளிய மொழியில் மிகவும் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர்.

யுத்த பின்னணியில் வானதி மற்றும் பரணியின் காதல் சிதைக்கப்படுகிற நிலையினையும் எடுத்துரைப்பதாகப் புதினம் அமைந்துள்ளது.

கதைக்களம்

எண்பதுகளின் தொடக்கத்தில் இருந்து எண்பதுகளின் இறுதியில் முடியும் ஈழத்துச் சூழலை அடிப்படையாகக் கொண்ட இந்தப் புதினம் அமைதிப்படை என்ற பெயரில் இந்திய இராணுவம் ஈழத்தில் செய்த அத்துமீறலை எடுத்துரைக்கிறது. சிங்களத்தினரிடமும் இந்திய இராணுவத்தினரிடமும் பாதிக்கப்பட்டவர்கள் தமிழ்ப்பெண்களே. குழந்தைகள் மரணம், நிர்க்கதியான நிலை, உடமைகள் இழப்பு, மானத்தை இழத்தல், உறவுகளை இழத்தல் என அதிகமாகப் பாதிக்கப்பட்டவர்கள் பெண்களே. அதிகாரத்தின் வன்முறைக்கும், வன்முறைக்கு எதிராக போராட்டத்திலும் அதிகம் பாதிக்கப்பட்டனர்.

இப்புதினத்தில் வானதியும், வசந்தனும் பள்ளிப்பருவத்தில் இருந்தே காதலர்களாக இருக்கின்றனர். சிங்கள பேரினவாத அரசின் இனஅழிப்பு நடவடிக்கைகளால், கோபமுற்றுப் போராளி எனும் இயக்கத்தில் இலட்சக்கணக்கான தமிழ் இளைஞர்கள் சேர்ந்தது போல் பரணி என்ற பெயரினைக் கொண்டு விடுதலைப்புலியாக மாறுகிறான்.

வானதி முதலில் பள்ளியில், பின்பு பல்கலைக்கழகத்தில் எனத் தன் குடும்பத்தோடு இடம்பெயர்கிறாள். முதலில் சிங்கள இராணுவத்தால் பின்பு இந்திய இராணுவத்தால் என அவளது குடும்பமானது பாதிக்கப்படுகிறது. தந்தை வேலையை இழப்பதோடு சாதாரண மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகிறது.

வானதி பயணம் சென்ற பேருந்தின் முன்னதாகச் சென்ற வாகனம் வழிமறிக்கப்பட்டுப் பயணிகள் வெட்டிச் சரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்து வெட்டப்பட்ட கையோடு ஓடிவருபவரைக் காப்பாற்ற வானதி பேருந்திலிருந்து இறங்குகிறாள். இறங்கியிருப்பது மரணப்படுகுழிக்குள் என்பதை உணர்ந்தபோதும் பேருந்தைவிட்டு இறங்கிவிடுகிறாள்.

அவளைக் காப்பாற்றும் பொருட்டு பேருந்திலிருந்து ஒருவர் அவளைத் தூக்கிவிடுகிறார். வானதியின் பக்குவப்பட்ட மனமும், அவளது துணிந்த செயல்பாடும் புதினம் வழி அறிய முடிகிறது.

இந்திய அமைதிப்படையால், பாலியல் வல்லுற வுக்குப் பெண்கள் ஆளாக்கப்படும் அவலநிலையும், விடுதலைப்போராளிகளின் அர்ப்பணிப்பு, தியாகங்கள், சொந்தநாட்டிலேயே அகதிகள் ஆக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் அவலம், இந்திய இராணுவத் தால் சிதைக்கப்பட்ட தமிழ்ப்பெண்கள் எனப் பல வரலாற்றுப் பதிவுகளை இப்புதினம் பதிவு செய்துள்ளது.

தூப்புக்காரி- மலர்வதி

பெண்ணுலக எழுத்தாளர்கள் தமிழ்ப் படைப்புலகிற்குப் பற்பல வகைகளில் பங்களித்துள்ளனர். அவ்வகையில் 2012-ஆம் ஆண்டில் இளம்படைப்பாளர்க்குரிய சாகித்திய அகாதெமி விருதுபெற்றவர் மலர்வதி. அவரது படைப்பான தூப்புக்காரி புதினத்தில் பெண்ணின் நிலைப்பாட் டினைப் பதிவு செய்கிறார்.துப்புரவுத் தொழிலாளர்கள் அனுபவிக்கும் கொடுமைகள், அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கலை விரிவாகப் பேசும் இப்புதினம் பெண்ணின் வாழ்வியல் புரட்சி நிலையினையும் சித்தரிக்கிறது.

குமரி மாவட்டம் வடசேரி, தக்கலை, மார்த்தாண்டம், களியக்காவிளை பகுதிகளைக் களமாகக் கொண்டிலங்கும் தூப்புக்காரியின் கனகம், பூவரசி ரோஸ்லி, (கதிரேசன்- மனோ- மாரி) இவர்களை மையமாகக் கொண்டு கதை அமைந்துள்ளது. நாஞ்சில் வட்டார மக்கள் மொழியில் வறுமை, வரதட்சணை, விரக்தி, வேதனை, காதல், அன்பு, அரவணைப்பு, ஆணாதிக்கப் போக்கு, தொழில் இழிவு, புதிய ஏற்றத்தாழ்வு போன்றவற்றை மையமாகக் கொண்டு புதினம் அமைகிறது.

தொழில்சார்ந்த சிக்கல்

மருத்துவமனையில் துப்புரவுத் தொழிலாளியாகப் பணியாற்றும், கனகம், ரோஸ்லி, இருவரும் கணவனின்றிக் குழந்தைகளை வளர்க்கும் தாயாக இருக்கின்றனர். வறுமையில் காலத்தை ஒட்டினாலும் புரட்சிப்பெண்ணாக உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ? எனும் நம்பிக்கையில் மலம் அள்ளும் தொழிலையும் முரண்பாடில்லாது ஒத்திசைவு கொண்டவர்களாகச் செய்கின்றனர். இருவரின் வாழ்விலும் எந்த ஆதரவும் இல்லை; உடன்பிறந்தோர், உறவினர் என்ற சொந்தமில்லை. இருவர்தம் பிள்ளைகளைப் (பூவரசி- இராணி) படிக்க வைக்க ஆசை, ஆனால் பொருளாதாரம் இல்லாத நிலை பூவரசியின் காதலால் அனைத்தும் தடைப்படும் நிலை வயிற்றுப்பிழைப்பை ஓட்டிச்செல்லும் போராட்டமாக வாழ்க்கை அமைவதை ஆசிரியர் புலப்படுத்துகிறார்.

துப்புரவுத்தொழிலை மேற்கொள்ளும் விதவையான கனகம், தன் மகளான பூவரசியைத் தையல் தொழிலுக்கு மாற்றிட நினைக்கிறாள். மனோவால் பூவரசி கர்ப்பம் ஆகிறாள்.

ஆனால் மனோ வேறு பெண்ணைத் திருமணம் செய்து வெளிநாட்டிற்குச் சென்றுவிடுகிறான். கருவுற்ற குழந்தையைச் சுமக்கும் அவலம் பூவரசிக்கு ஏற்படுகிறது. இருப்பினும் அவள் தனது குழந்தையை அழித்துத் தானும் மாய்ந்து கொள்ளவில்லை. மாறாகத் தன் அம்மாவின் இறப்பால் அதே மருத்துவமனையில் தாயின் துப்புரவுத் தொழிலை மனமுவந்து செய்வது பூவரசியின் மன உறுதியினைப் புலப்படுத்துகிறது.

கருக்கு- பாமா

1980-ல் தமிழில் புதியதாக உருப்பெற்ற மாற்றுப் பெண்ணியச் சிந்தனைகள். தலித்தியச் சிந்தனைகள் ஆகியவற்றை முதன்மைப்படுத்தி பாமாவின் படைப்புகள் வெளிவந்துள்ளன.

தலித் படைப்பாளரான பாமா ஓர் இலக்கியப் போராளி. கருக்கு என்ற புதினத்தின் வாயிலாக இலக்கிய உலகிற்கு அறிமுகமானவர். சமூகத்தின் விளிம்பு நிலை மனிதர்களை முதன்மைப்படுத்தி புதின வரலாற்றில் புரட்சிநிலையை உருவாக்கியவர் பாமா. தன் வாழ்வின் நிகழ்வுகளைச் சுயசரிதையாக எழுதிய தமிழின் முதல் பெண் நாவாலாசிரியர் அப்புதினத்திற்குக் கருக்கு என்று பெயரிட்டார்.

பனைமட்டையின் இருபுறமும் இரம்பம் போல இருக்கும் கருக்கு எளிதில் நம்மை அறுத்துவிடும். தலித் மக்கள் பல்வேறு நிலைகளில் அடக்கப்பட்டு, அறுக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு வாழும் நிலையையையும் தங்களிடம் இயல்பாகவே உள்ள போர்க்குணத்தை இழந்துவிடாமல், தங்களை அடிமைப்படுத்தும் தடைகளை உடைத்தெறிந்து, தளைகளை அறுத்தொழித்து விடுதலை பெறவேண்டும் என்ற ஆசையினாலும், புத்தகத்திற்குக் கருக்கு என்று பெயரிட்டேன். (தழும்புகள் காயங்களாகி- முன்னுரை ப.9) என்று ஆசிரியரே கூறுகிறார்.

கருக்கு நாவலைத் தொடர்ந்து, சங்கதி, வன்மம் ஆகிய நாவல்களின் வழியாகப் பெண்களின் பிரச்சினைகளையும் அவர்களின் மென்மை உணர்வுகள் புரட்சிநிலையாக மாறுவதையும் ஆசிரியர் முன்வைக்கிறார்.

தலித் பெண்கள் வலுவற்றவர்களாகவும், நலிவுற்றவராகவும் காட்டப்படுகின்றனர். வயலில் இருவருமே வேலைசெய்கின்றனர்.

ஆண்களைவிடப் பெண்களுக்குக் குறைவான கூலிகொடுக்கப் படுகிறது. (ப.44) பெண்களின் உடலுழைப்பு சுரண்டப்படும் நிலை கருக்கு நாவலில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஆண்கள் காவல்துறையினரிடம் இருந்து தங்களைக் காத்துக் கொள்ள வீட்டை விட்டு வெளியேறிய சமயத்தில் காவலர்கள் பெண்களைத் துன்புறுத்தும் அவலநிலையினை ஆசிரியர் சுட்டிக்காட்டுகிறார்.

புதினம் முழுவதும் தனக்கு ஏற்பட்ட அவலத்தைக் கூறினாலும், இறுதியில் துணிவுடன் வாழமுடியும் என்ற நம்பிக்கையும், தெம்பும், வீம்பும் காணமுடிகிறது. நாலுபேருக்குப் பிரயோசனப்படுற மாதிரி, அர்த்தத்தோட வாழமுடியும்னு நெனைக்கிறேன் என்று தைரியத்துடன் கூறுகிறார்.

பெண் உடல்மொழியும் நாவலும்:

மூன்றாம் பாலின் முகம்- பிரியா பாபு இந்த உலகத்தில் மூன்றாம் பாலினம் திருநங்கைகள், என்றால், முதல் பாலினம் யார் என்ற கேள்வியில், ஆணே முதல் பாலிலினமாகக் கருதப்படுகிறான் என்றால், பெண் என்பவள் ஆண் உலகத்தில் இரண்டாம் நிலையிலே பார்க்கப்படுகிறாள் என்று கேள்வியை எழுப்பும் திருநங்கையாகிய பிரியா பாபு தம் நாவலில் பெண் நிலைப்பாட்டினையும், பெண்சாயலில் உள்ள திருநங்கைகளின் நிலையினையும் முன்வைக்கிறார்.

""நான் ஒரு திருநங்கை என்று அறிந்த பின்பு, குடும்பத்தால், சமூகத்தால் ஒதுக்கப்பட்டேன். திருநங்கைகளின் வலியை, அவமானத்தைப் பதிவு செய்ய இந்நாவலை எழுதி இருக்கிறேன்'' என்று ஆசிரியர் கூறியுள்ளார்.

கதைக்களம்

ரமேஷ் எனும் இளைஞனுக்குள் பெண்ணின் உணர்வு மேலோங்குகிறது. பெண்ணாக அலங்கரித்துக் கொள்ள மனம் விரும்புகிறது. தாய் தடுக்க முயல்கிறாள். சமூகம் கேலிசெய்கிறது. வீட்டில் வெளியில் புறக்கணிக்கப்படும் நிலை படிக்கும்போதே ஸ்கூலில், பொம்பள, அலி, ஓரம்போ எனக் கிண்டல் வேற. என்னோட மனசை அடக்க முடியல தினமும் அடி, உதை, திட்டு, ஆம்பளையா நடக்கச்சொல்லி... முடியல, வியாபாரம் செய்து பிழைக்க நினைத்தாலும் சமூகம் விடுவதில்லை (ப.18) என்று திருநங்கைகளின் அவலம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

வீட்டில் அழகான பொண்டாட்டி இருக்கும்போது, வெளியில் உங்களுக்கு ஒரு பொண்டாட்டி இருக்குதே...

அதுக்கு பேர் என்ன, என்று அப்பாவையும், உனக்கு மாசம் ஒரு பொண்ணு வேணும், கூடவே குடி வேற, நீங்க உங்க மன சந்தோஷத்துக்காகச் செய்யலாம் அது தப்பில்லை என்று பாரதியாகச் சமூகத்திடம் திருநங்கைகள் எழுப்பிய குரலாக அமைந்துள்ளது. ரமேஷ் எனும் ஆண் பாரதி என்ற பெண் ஆனாள், என்றும், புடவையை உதறிவிட்டுப் பாரதி கண்ட புதுமைப்பெண்ணானாள் என்று புதினத்தை நிறைவு செய்கிறார் ஆசிரியர்.

மனிதர்களாகப் பிறந்து காலப்போக்கில் ஆணுடலுக்குள் பெண் தன்மை வளர ஆரம்பித்து முழுப்பெண்ணாகவும் மாறமுடியாமல் பெண் மனதுடனும் வாழும் திருநங்கைகள் குறித்த பதிவுகள் நவீன இலக்கியங்களில் குறிப்பாகப் புனைகதை வடிவில் தமிழ்ச்சமூகத்திற்குப் புதிய பொருண்மைகளைப் பதிவு செய்கின்றன. தமிழ் இலக்கிய நெடும்பரப்பில் தொல்காப்பியம் தொடங்கி இன்று வரை தொடர்ந்து பதிவு செய்யப்பட்டுள்ளன எனினும் புனைகதைகளே திருநங்கைகளின் சிக்கல்களை எடுத்துரைக்கும் இலக்கியமாகத் திகழ்கிறது.

தாய்வழிச்சமூக அமைப்பில் பெண்ணுக்குத் தீயை, மழையை, காற்றை தன் ஏவலுக்குக் கட்டுப்படுத்தும் ஆற்றல் இருந்தது நம்பப்பட்டது. காப்பிய காலத்திலும் இந்நம்பிக்கை தொடர்ந்து பேசப்பட்டது. "மாநகர் உள்ளீர் மழை தரும் இவள்' என்று மணிமேகலையும், "வானம் பொய்யாது வளம் பிழைப்பு அறியாது பத்தினிப் பெண்டிர் இருந்த நாடு' என்று சிலப்பதிகாரம் சிறப்பித்துள்ளது. இத்தகைய பெண்களைப் பாடாத புலவர்களும் இலக்கியங்களும் இல்லை எனலாம். பழந்தமிழ் இலக்கியங்கள் சமூகக் கட்டமைப்பில் பெண்களின் நிலைப்பாட்டை மட்டும் பதிவுசெய்தது.

புதின இலக்கியமோ பெண்ணின் சிறப்பை மட்டுமல்லாமல், சமூக அமைப்பில் பெண்ணின் பங்களிப்பு பற்றியும் எடுத்துரைக்கும் இலக்கியமாகத் திகழ்கிறது. அவ்வகையில், பெண் படைப்பாளிகளான, இராஜம்கிருஷ்ணன், கொள்கைக் காகப் போராடும் பெண்ணாக யமுனாவையும், பெண்களை அணுகவிடாத மயான களத்தில் புரட்சிப்பெண்ணாகச் சின்னப்பொண்ணுவையும் மனித அழுக்குகளை மட்டுமல்ல, மனித மனங்களின் அழுக்கினையும் புனிதப் படுத்தும் பெண்ணாகக் கனகத்தையும் எடுத்துரைப் பதன் மூலம் பெண்ணின் நிலை உணர்த்தப் படுகிறது. தாய்நாட்டைக் காக்கும் பொறுப்பில் ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் உள்ளார்கள் என்பதை எடுத்துக் காட்டும் வகையில் வானதியையும் சமூகப்போர்க் களத்தில் புரட்சி செய்து வெற்றி பெற்ற பெண்ணாகத் திகழும் கருக்கு புதினத்தின் ஆசிரியர் பாமா திகழ்வதையும் அறிய முடிகிறது. இறைவன் படைப்பில் அனைவரும் போற்றத் தக்கவர்கள் என்பதை எடுத்துக்காட்டும் வகையில் பிரியா பாபு தன் புதினத்தைப் படைத்துள்ளார். மனிதனின் வாழ்க்கை பெண்மையால் மட்டுமே முழுமையடைகிறது என்பதைப் பெண் புதினப் படைப்பாளிகள் தங்கள் படைப்புகளில் பதிவுசெய்துள்ளனர்.