ஐந்து பெண் பிள்ளைகளைப் பிரசவித்த மனைவியும் கணவரும், மனைவியின் பெற்றோரும் சேர்ந்தமர்ந்து ஆலோசனை செய்தபிறகு, அவரை ஒரு அறுவை சிகிச்சைக்கு ஆளாக்கினார்கள்.
இளமையும் ஆரோக்கியமும் உயிரணுக்களும் அவரை இன்னொரு பெண்ணிடம் கொண்டு போய்விடலாம் என்று அவர்களில் ஒவ்வொருவரும் பயந்தார்கள். யாராவது ஒருத்தி அவருக்கு அடிபணிந்து ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தால், சொத்தையும் இடங்களையும் பாகம் பிரிக்கவேண்டிய நிலை உண்டாகிவிடும் என்ற பயம்தான் அவர்களை அந்த கொடூர செயலைச் செய்யும்படி தூண்டியது.
"வாஸக்டமி'க்குப் பிறகும், தான் ஆண்மைத் தனம் குடிகொள்ள வாழமுடியும் என அவர் நம்பினார். பலரும் கூறி, காதில் விழுந்த விஷயங்களை அவரும் நம்பினார்.
அவ்வளவுதான்.
உண்மையிலேயே அந்த அறுவை சிகிச்சை அவரை வேறொரு ஆளாக மாற்றியது. குரலும், உடல் அசைவுகளும் ஆணுடையதாக இருந்தாலும், உடலுறவு என்பது அவருக்கு சாத்தியமற்ற ஒரு விஷயமானது.
விதைக்கொட்டைகள் சுருங்கின. உயிரணு இல்லாமற் போனது. வாரக்கணக்கில் சிரமப்பட்டு வசீகரித்து தயார்செய்த காதலிகள், படுக்கையில் ஆரம்பப் போராட்டத்திலேயே ஏமாற்றத்தின் கசப்பை அனுபவித்தார்கள்.
ஒரு குழந்தையைப்போல அவரை மடியில் படுக்கச்செய்து, கொஞ்சுவதற்கு அவர்கள் கற்றார்கள். தன்னை ஆணாக இல்லாமற் செய்த மனைவியைப் பழிக்குப்பழி வாங்குகிறோம் என்ற உணர்வுடன் அவர் மற்ற பெண்களுடன் உடலுறவு கொள்ள நிரந்தரமாகத் தயாரானார். அவர் தொட்ட ஒவ்வொரு பெண்ணும் அவரை "மகனே...!'' என்றும், "பேபீ...'' என்றும் அழைத்தார்கள்.
ஆண்களை அறுவை சிகிச்சைக்கு ஆளாக்கிய நவீன சமூகத்தை அவர் பலமாக வெறுத்தார். சமூகத்தின் எழுதப்படாத சட்டங்களின்படி அவர் ஒதுங்கி வாழ்ந்தார். நல்ல இல்லத்தரசராக...
கடுமையான உழைப்பாளராக...
பணக்காரராக....
ஆண்மைத்தனம் அற்றவராக ஆகிவிட்ட கணவரிடம் உண்டான வெறுப்பை மனைவி எந்தச் சமயத்திலும் வெளிப்படுத்தவே இல்லை. உடலுறவு என்பது வெறுக்கக்கூடிய ஒரு விஷயமென்று அவள் நினைத்தாள்.
ஆனால், அவள் வீட்டை நிர்வாகம் செய்வதில் திறமை வாய்ந்தவளாக இருந்தாள். இனிமையாகப் பேசக்கூடியவளாக இருந்தாள். சமையல் செய்வதில் திறமைசாலியாகவும்...
வயது கூடக்கூட, அவளுக்கு தன் தாயின் உடலமைப்பும் முக பாவமும் வந்து சேர்ந்தன.
பணி முடிந்து திரும்பிவரும் கணவர் குளித்து முடித்து,அரை நிர்வாணக் கோலத்துடன் படுக்கும்போது, அவருடைய பருமனான சரீரத்தை ஒரு குற்றவுணர்வுடன் மட்டுமே மனைவியால் பார்க்க முடிந்தது.
இசையையும் இலக்கியத்தையும் விரும்பிய இந்த மனிதருக்கு என்ன ஆனது? இவர் எதைப் பற்றிய சிந்தனையில் இருக்கிறார்? அந்தக் கண்களில் தெரியக்கூடிய பிரகாசம் கண்ணீரின் பிரகாசமோ?
மாதவிடாயால் உண்டாகக்கூடிய சரீரப் பிரச்சினைகளையும், மன வேதனைகளையும் அனுபவிக்கக்கூடிய அந்த பரிதாபத்திற்குரிய பெண், கணவரைத் தொல்லைப்படுத்த வேண்டாம் என்று மனதில் நினைத்த காரணத்தால், அவருக்கு அருகில் செல்லாமல் இருந்திருக்கலாம்.
அடுப்பிலிருந்த பிரசர் குக்கரில் கோழி பிரியாணி வெந்து கொண்டிருந்தது. வாணலியில் மசாலா புரட்டிய கறி மீன் பொரிந்து கொண்டிருந்தது.
உணவு சமைத்தல் என்பது தன்னுடைய புனிதக் கடமை என்ற விஷயம் அவளுக்கு நன்கு தெரியும். ஒரு உத்தம பத்தினியின் முக்கியமான கடமை... கணவரை, ஊட்டிவிட்டு சந்தோஷம் அடையச் செய்வதுதான்.
________________
மொழி பெயர்ப்பாளரின் உரை
வணக்கம்.
இந்த மாத "இனிய உதய'த்திற்காக மூன்று சிறந்த மலையாள சிறுகதைகளை மொழிபெயர்த்திருக்கிறேன் "கொச்சு வறீதின் பைபிள்' என்ற கதையை எழுதியவர் தேசிய சாகித்ய அகாடெமி விருதுபெற்ற நட்சத்திர மலையாள எழுத்தாளரான உறூப். "மலையாள மனோரமா' வார இதழின் ஆசிரியராகப் பணியாற்றிய இவர் எழுதிய ஒரு கதை "நீலக்குயில்' என்ற பெயரில் 1954-ஆம் வருடத்தில் திரைப்படமாக எடுக்கப்பட்டது. மத்திய அரசாங்கத்தின் சிறந்த படத்திற்கான வெள்ளிப் பதக்கம் அப்படத்திற்குக் கிடைத்தது. இத்தகைய விருதைப் பெற்ற முதல் மலையாளப் படமே அதுதான். "கொச்சு வறீதின் பைபிள்' கதையை எந்த அளவிற்கு உயிரோட்டத்துடன் உறூப் எழுதியிருக் கிறார்! இதில் வரும் கொச்ச வறீது என்ற ஏழை மனிதனை நம்மால் மறக்க முடியுமா? தனக்குப் பிறந்த இரு ஆண் குழந்தைகளும் மரணத்தைத் தழுவ, அவர்களை அடக்கம் செய்ய தேவைப்படும் ஐந்து ரூபாய்க்காக தன்னிடமிருக்கும் பைபிளை விற்கத் தீர்மானிக்கும் அவனின் அவல நிலை நம் கண்களை ஈரமாக்கும். கதையின் இறுதியில் எழுதப்பட்டிருக்கும் பைபிளின் வரிகள் நம்மை ஆழமாக சிந்திக்க வைக்கும்.
1979-ஆம் வருடத்தில் நம்மிடமிருந்து விடைபெற்றுக்கொண்ட உறூப் இத்தகைய அருமையான படைப்புகளின்மூலம் என்றும் வாழ்வார். "முருங்கைமரத் தோப்பு' என்ற கதையை எழுதியவர்... கேரள சாகித்ய அகாடெமி விருதுபெற்ற மூத்த மலையாள எழுத்தாளரான உண்ணிகிருஷ்ணன் புதூர். தன் பிறப்பிற்குக் காரணமான மலையாளத் தந்தையைத் தேடிக்கொண்டிருக்கும் ஒரு நேப்பாளி கூர்க்கா காவலாளி யின் கதை... இப்படிப் பட்ட பல கதாபாத்திரங்களை நம் வாழ்க்கைப் பாதையில் நாம் தினமும் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம்! இதில் வரும் நரேந்திரன் தன் தந்தையை எப்படியாவது கண்டுபிடித்துவிட மாட்டானா என்ற எதிர்பார்ப்பு இதை வாசிக்கும் ஒவ்வொருவரின் மனதிலும் உண்டாகிக்கொண்டேயிருக்கும். அதுதான் கதையின் வெற்றி! கதையின் இறுதிப் பகுதியை வாசிக்கும்போது, இனம்புரியாத ஒரு உணர்ச்சிமயமான நிலையில் நாம் இருப்போம்... நரேந்திரனைப்போல... என்பது மட்டும் நிச்சயம். "மதிப்பிற்குரிய ஒரு திருமண உறவு' என்ற கதையை எழுதியிருப்பவர்...மலையாளப் பெண் எழுத்தாளர்களின் துருவ நட்சத்திரமும், தேசிய சாகித்ய அகாடெமி விருதுபெற்றவருமான மாதவிக்குட்டி. "வாஸக்டமி ஆபரேஷன்' செய்யவேண்டிய சூழலுக்கு ஆளாகும் ஐந்து பெண் பிள்ளைகளின் தந்தையான ஒரு மனிதரின் கதை. இதில் வரும் மனைவியின் கதாபாத்திரம் அருமை! ஒரு சிறிய கதையில் அந்தப் பெண் கதாபாத்திரத்தையும், அவளின் இயல்புகளையும் எந்த அளவிற்கு நம் மனங்களில் ஆழமாகப் பதிய வைக்கிறார் மாதவிக்குட்டி! இந்த மூன்று சிறுகதைகளும் உங்களுக்கு மாறுபட்ட அனுபவங்களைக் கட்டாயம் அளிக்கும். "இனிய உதயம்'மூலம் நான் மொழிபெயர்க்கும் அருமையான இலக்கிய படைப்புகளைத் தொடர்ந்து வாசிக்கும் உயர்ந்த உள்ளங்களுக்கு என் இதயத்தின் அடித்தளத்திலிருந்து நன்றி.