காலம் வெகுவாக மாறிவிட்டது. ஒரு காலத்தில் தமிழ்ச்சமுதாயம் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்தது. ஒரு ஊரில் ஒரு ராஜா ராணி இருந்தார்கள் என்று கதை சொல்வது போலத்தான் இப்போது இதையும் சொல்ல வேண்டியுள்ளது.
ஒரு பெரிய கூடம் (ஹால்) இருக்கும். குறைந்தது 20 பேரை நிம்மதியாகப் படுத்து உறங்க வைக்கும் கொள்ளளவு அந்தக் கூடத்திற்கு இருக்கும். ஒரே நேரத்தில் முப்பது அல்லது 40 பேருக்குப் பந்தி வைக்க வேண்டும் என்னும் கொள் அளவும் அந்தக் கூடத்திற்கு இருக்கும். இதற்கு அடுத்து அங்கணம் என்று கூறும் வழக்கம் இருந்துள்ளது. இதற்கு அடுத்து அங்கணம் என்று கூறப்படும் சின்ன பட்டாசாலை ஒன்று இருக்கும். இதிலும் சுமார் 20 பேர் படுக்கலாம். இது இன்னும் சில வீடுகளில நிலா முற்றம் எனப்படும் நிலாவொளி உள்ளே விழும் அமைப்பில் கம்பிகள் மட்டும் மேற்கூரையாகப் போடப் பட்டதாக அமைந்திருக்கும்.
இவை தவிர, இரேழி ஒன்று இருக்கும். முன்னறைக்கும் வாசலுக்கும் இடைப்பட்ட பகுதியைத்தான் இரேழி என்று கூறுவது வழக்கம். அறை என்று சொன்னால் பொதுவாக ஒன்றோ இரண்டோ அறைகள் சின்னஞ் சிறிய அளவில் இருக்கலாம். ஒன்று அந்த வீட்டு மாப்பிள்ளை வந்தால் தங்க வைப்பதற்கு. மாப்பிள்ளைகள் வந்தால்....? கூடிக் கும்மாளம் அடிக்க வேண்டியதுதான். மற்றொன்று சாமான்கள் வைக்கும் ஸ்டோர் ரூம்.
மற்றபடி சமையல் அறை ஒன்று பெரிதாக இருக்கும். ஒத்தார் ஓர்ப்படிகள் ஒன்றாய்க் கூடிக் கும்மியடிக்கும், தப்பு... தப்பு... சமையல் செய்யும் இடம்.
ஆமாம் இப்போது எதற்கு இந்த வாஸ்து சாஸ்திரம் என்று கேட்கத் தோன்றுகின்றதா?
சங்க இலக்கிய மான் குடும்பத்துக் காட்சி ஒன்றை இப்போது கூறுவது இக்கட்டுரைப் பொருளுக்குப் பொருத்தமாக இருக்கும். தமிழில் எதனைச் சொல்லப் புகுந்தாலும் சங்கத்தில் இருந்து எடுத்துக்காட்டிச் சொல்வது தமிழுக்குப் பெருமை என்பதனை விடவும் அதனைச் சொன்னவருக்கே பெருமை அதிகம். ""எத்தனைதான் தேக்கு இருந்தாலும் பர்மா தேக்கு போல வராது என்பார்கள். அது போலத்தான் பத்தித்தமிழ், பாமரத்தமிழ், இலக்கியத்தமிழ் என்று பல சொன்னாலும் சங்கத்தமிழ் என்பதில் உள்ள பெருமை மற்ற எதிலும் இல்லை'' என்று பேரா. தி. இராசகோபாலன் சொல்வார். விளக்க முற்படும் எந்தச் செய்திக்கும் சங்கச் சான்றே தங்கச் சான்றாக ஒளிவீசும் என்பதில் ஒருவருக்கும் ஐயம் இருக்காது. உயர் மதிப்பையும் அள்ளித் தருவது. தமிழனின் அறவியல், உடலியல், உளவியல் நுட்பத்தை எடுத்துக் கூறும் சான்றுகளின் கருவவூலமும் அதுவே எனலாம்.
தான் காதலித்த தலைவனோடு உடன் போக்கு சென்றுவிடுகிறாள் தலைவி. அவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறந்துவிடுகின்றது. அப்போதும் அவளது தாயும் தந்தையும் அவள் மீது கோபத்துடன் இருக்கின்றனர். ஆனால், அவளை வளர்த்த செவிலித் தாயால் அப்படி இருக்க இயலவில்லை. அவள் சென்று தலைவியைப் பார்த்துவிட்டு வருகிறாள். தான் கண்டு வந்த காட்சியைச் சொன்னால் நற்றாய் மனம் மாறி, தலைவி மீது கொண்டுள்ள சினத்தை மாற்றிக்கொள்வாள் என்று நினைக்கிறாள். தலைவியின் கடிமனைக்குச் சென்று வந்த செவிலி உவந்த உள்ளத் தினளாய் நற்றாய்க்குப் பின்வருமாறு கூறுகிறாள்.
மறியிடைப் படுத்த மான்பிணை போலப் புதல்வன் நடுவணன் ஆக நன்றும் இனிது மன்றஅவர் கிடக்கை காட்டில் குட்டியை ஈன்ற காதல் மான்கள், குட்டி இடையில் படுத்திருக்க அதனைத் தழுவிக் கலைமானும் (ஆண்மான்) பிணை மானும் (பெண்மான்) படுத்திருக்குமாம். அது போலப் புதல்வன் நடுவே படுத்திருக்க, அவனைத் தழுவியவாறு தலைவனும் தலைவியும் படுத்திருக்கும் காட்சி இனிமையானது. பரந்து விரிந்த நீல வானத்தைத் தழுவிக்கொண்டிருக்கும் இந்த மண்ணுலகத்திலும் இதற்கு அப்பாற்பட்ட தேவர் உலகமாகிய விண்ணுலகத்திலும் இந்தக் காட்சி கிடைப்பது அரிது என்று கூறுகிறாள். இதில் தலைவன், தலைவி இருவரும் தம் குழந்தை மீது கொண்ட காதலை விளக்குகிறாள். இருவரது அன்பையும் பற்றி கூறுகிறாள்.
அப்போதும் மனம் மாறாத நற்றாயைப் பார்க்கிறாள். மற்றொரு காட்சியையும் கூறுகிறாள்.
புதல்வன் கவையினன் தந்தை; மென்மொழிப் புதல்வன் தாயோ இருவரும் கவைஇயினள் இனிது மன்ற அவர் கிடக்கை உன் மகள் எப்படிப்பட்ட தாயாக இருக்கிறாள் தெரியுமா? தலைவன் தன் புதல்வனாகிய உன் பேரனைத் தழுவியபடி படுத்திருக்கிறான். உன் மகளோ தான் ஈன்றெடுத்த மகனான உன் பெயரனையும் தன் காதல் தலைவனையும் ஒரு சேர ஒரு தாயாகத் தழுவிக்கொண்டு படுத்திருக்கிறாள் என்னும் கருத்துத் தொனிக்கப் பாடுகிறாள். அப்போதும் சினம் தணியாத தாய்க்கு அங்கு அரங்கேறிய மற்றொரு காட்சியையும் படம் பிடிக்கிறாள்.
புதல்வன் கவைஇய தாய் புறம் முயங்கி நசையினன் வதிந்த கிடக்கை! இப்போது புதல்வனை அரவணைத்துக்கொண்டு படுத்திருக்கிறாள் தலைவி. அவளின் முதுகுப் புறத்தைத் தழுவி, விருப்பத்தோடு படுத்துக் கொண்டிருக்கிறான் தலைவன். அவர்களை அவ்வாறு காண்பது மிகவும் இனிய காட்சி. அது பாணர்கள் தங்கள் யாழின் நரம்புகளை மீட்டி இசைக்கும் இசையைப் போல இனியது; மிகுந்த பண்பும் உடையது'' என்கிறாள். இப்படிப்பட்ட அழகொளிரும் இல்லறக் காட்சிகளை அமைக்கிறார் பேயனார் என்னும் சங்கத் தமிழ்ப் புலவர்.
ஆறறிவு பெற்ற மக்களினம் கயிற்றுத் தொட்டிலில் குழந்தைகளைப் படுக்க வைக்க ஐந்தறிவு பெற்ற கங்காரு இனம் தம் குட்டிகளை வயிற்றுத் தொட்டிலில் உறங்க வைக்கின்றன. குரங்குகள் தம் குட்டிகளை மரம் தாவும் காலம் வரும்வரை வயிற்றில் கட்டிக்காக்கின்றன.
பூனைக் குட்டிகளைப் பாருங்கள். தாய்ப்பூனை அருகில் இருக்கும்போது பாதுகாப்பு உள்ளது என்னும் உணர்ச்சியில் அச்சமற்று நன்கு உறங்கும். தாய்ப்பூனை வெளியில் சென்றிருக்கும்போது அவை அச்சத்துடன் திரு திருவென விழித்துக் கொண்டிருக்கும்.
ஐந்தறிவே உள்ள மான்கள் தங்கள் குட்டியை அணைத்துக்கொண்டு படுக்கின்றன. வீட்டு விலங்கு களான பூனை, நாய் முதல் சிங்கம், புலி வரை விலங்கினங்கள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட பருவம்வரை தம் மக்களைத் தனியாகப் படுக்க வைப்பதில்லை.
நம் பண்டைய பண்பாட்டுத் தமிழர்கள் தங்கள் குழந்தையைத் தனியாகப் படுக்க வைத்ததில்லை. ஒருவேளை செல்வர்களின் இல்லங்களில் இணையர் தனியறையில் படுக்க நேர்ந்தால் அவர்களின் குழந்தைச் செல்வங்கள் பாட்டன், பாட்டியுடன் கதை கேட்டு, பாட்டுக் கேட்டு மகிழ்வாகப் படுத்துறங்கும்.
கூட்டுக் குடும்பம் நலிந்து தனிக்குடும்பம் மலிந்த, நாகரிகத்தில் முற்றிப்போன இன்றைய சமுதாயத்தில் தனியறையில் குழந்தைகளைப் படுக்க வைப்பதும் மலிந்து போனது. எட்டுக்கு எட்டு அறை ஒன்றில் குழந்தை யையும் அதற்கென ஒரு கணிப்பொறி மற்றும் இத்யாதி இத்யாதிகளையும் வாங்கி அடைத்துவிடுகின்றனர்.
அணைப்பாரற்ற அந்தக் குழந்தை அன்பு, பாசம் என்னும் ஏக்கத்தால் மூச்சு முட்டியபடியே உறங்குகிறது. உயிர் வாழ்கிறது.
இன்னும் சிலர் வேலைக்காரச் சிறுமியிடம் தம் குழந்தையைப் படுக்க வைக்கின்றனர்.
இதனினும் பெருங்கொடுமை பெருகி வரும் மகிழ்வுந்துப் பயணம். இப்போதெல்லாம் அம்மாவும் அப்பாவும் வெளியில் செல்கின்றார்கள் என்றால் குழந்தைகள் வரமாட்டேன் என்று அடம் பிடிக்கின்றன. காரணம் காரில் முன் இருக்கையில் கணவனுடன் மனைவிதான் அமர வேண்டும். இது இன்றைய நாகரிகம். அவர்கள் இருவரும் பாட்டுக் கேட்டுக்கொண்டோ, அல்லது ஆங்கிலத்தில் பேசிக்கொண்டோ தம் குழந்தையைச் சட்டை செய்யாமல் முன்பக்க இருக்கைகளில் அமர்ந்து இருப்பார்கள். அந்தக் குழந்தையோ பின் இருக்கையில் சோர்ந்த, வாடிய முகத்துடன் ஜன்னலில் இருந்து வெளியே வெறித்துப் பார்த்தபடி.
இந்நிலையில் அக்குழந்தைக்கு எப்படி மன ஆரோக்கியம் இருக்கும்? அக்குழந்தையின் உலகம் எந்திரங்களாக ஆன பின்பு அக்குழந்தையும் பாசம். பந்தம், அன்பு, கருணை, இரக்கம் என்னும் நற்பண்புகள் எதனையும் புரிந்துகொள்ள முடியாத எந்திரமாகவே ஆகிவிடுகின்றது. அதனால், எதிராளியின் துன்பத்தைக்கூட புரிந்துகொள்ளவோ, உதவவோ முடியாமல் போய்விடுகின்றது. சற்று அழுத்தமாகக் கூறவேண்டுமென்றால் எதிராளியைத் துன்புறுத்துவதும் கூடிப் போகிறது என்று கூறலாம். குழந்தைகள் வளரும்போது இக்குணமும் படிப்படியே வளர்ந்து வன்முறையாளர்களாக அவர்களை மாற்றிவிடுகின்றது.
இளமையில் தம்மைத் தனிமைப்படுத்திய பெற்றோர் களை முதுமையில் அவை தனிமைப்படுத்திவிடத் துடிக்கின்றன. முதியோர் இல்லங்களில் பெற்றோர் களைப் போடுகின்றன. ஐந்தில் விளைவதுதான் விளைவு. குழந்தையின் பத்து வயதிற்குள் அதன் சிந்தையில் என்ன நற்பண்புகள் பதிகின்றதோ அதுதான் எப்போதும் ஒளிவிடும். இவற்றை உணராது ஐயோ முதியோர் இல்லங்கள் பெருகிவிட்டனவே என்று அங்கலாய்த்தலில் ஒரு பயனும் விளையப்போவது இல்லை. இளமையில் அவர்களைத் தனிமைச் சிறையில் இடும் உங்களை அவர்கள் முதுமையில் இடுகின்றார்கள்.
""அப்பா! தாத்தா இறந்த பின்பு அந்தக் கொட்டாங்கச்சியை என் கிட்ட கொடுங்கப்பா. உங்களுக்கு நான் அதில் தானே கஞ்சி ஊற்றவேண்டும்'' என்று ஒரு மகன் சொன்னதாக நம் தந்தையர் கூறும் கதை போலத்தான் இதுவும்.
ஆய்வு என்று எதனையும் மேற்கொள்ளாத சங்கத் தமிழன் இந்த உளவியல் சார்ந்த உண்மைகளை உணர்ந்தவன். இதற்குச் சான்றுகளே மேற்கூறிய பாடல்கள்.
ஆனால், இதனை இத்தனை ஆண்டுகள் கழித்து ஆய்ந்து கண்டவர்கள் டென்மார்க் ஆய்வாளர்கள். இந்த ஆய்வின் முடிவினையும் மேற்சொன்ன கருத்தோடு ஒப்பிட்டுப் பார்ப்பது இன்றைய தேவை. 2 முதல் 6 வயது வரையிலான 500 குழந்தைகளை ஆய்வு செய்த டென்மார்க் ஆய்வாளர்களுள் ஒருவரான டாக்டர் நன்னா ஓல்சன் கூறுவதாவது: ""பெற்றோருடன் உறங்கும் குழந்தைகள் உடல் மற்றும் மன நலத்துடன் இருக் கிறார்கள் என்கின்றனர். முக்கியமாகப் பாதுகாப்பு உணர்வு இருப்பதனால் நிம்மதியாக உறங்குகின்றனர். ஹார்மோன்கள் அளவாகச் சுரக்கின்றன. அவர்களது செரிமானம் சீராக இருக்கிறது. அதனால் அவர்கள் குண்டாவதில்லை.
தனியாக உறங்கும் குழந்தைகள் அச்சத்துடன் சரியாக உறங்குவதில்லை. தூக்கத்தில் தொந்தரவு ஏற்பட்டால், அது ஹார்மோன்களைப் பாதித்து உடல்பெருக்கத்தைத் தூண்டும். சரியான உறக்கமின்மையால் உண்ட உணவு சரியாகச் செரிப்பது இல்லை. அதன் காரணமாகக் குண்டாக இருக்கின்றனர். பெற்றோருடன் படுத்து உறங்கும் குழந்தைகளைவிட தனியாகப் படுத்து உறங்கும் குழந்தைகளின் உடல் எடை மூன்று மடங்கு கூடுதலாக உள்ளதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது'' என்கிறார்.
மக்கள் மெய்தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர் சொற்கேட்டல் இன்பம் செவிக்கு என்பார் திருவள்ளுவர். தம் குழந்தையின் மெய்யை வருடுவது குழந்தைக்கு இன்பம். பெற்றோர்க்குப் பேரின்பம். அந்த இன்பப் போதையில் மூழ்கித் திளைத்த மீசைக்காரனும்.
கன்னத்தில் முத்தமிட்டால், உள்ளந்தான்
கள்வெறி கொள்ளுதடி!
உன்னைத் தழுவிடிலோ- கண்ணம்மா
உன்மத்தம் ஆகுதடி!
என்று பாடிப் பரவசமடைந்து படிப்போரையும் பரவசத்துள் ஆழ்த்துகின்றான்.
குழலையும் யாழையும் தம் இனிய குரலில் இசைத்து நம்மை இன்பம் கொள்ளச் செய்யும் மழலைகளைத் தனியாக உறங்க விடாதீர்கள். ஏக்கத்தின் தவிப்பில் உழலவும் விடாதீர்கள். இனியேனும் என்னும் பெருமையுடன் உலாவருவீர்களாக!
ஏப்ரல் முதல் தேதிக்கும் பிப்ரவரி 14-ஆம் தேதிக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. காதலர்களாக இருப்பவர்களால் அதனைக் கண்டிப்பாகக் கண்டுபிடிக்க இயலாது. மற்றவர்கள் கண்டுபிடித்து இருப்பார்கள். ஆமாம்.... இரண்டும் முட்டாள்கள் தினம்தான்.
காதலர் தினத்துக்கு "எனக்கு மோதிரம் கொடுப்பீர்களா?' என்று காதலி கேட்டவுடன், "ம் கண்டிப்பாகக் கொடுக்கறேன். லேண்ட் லைன்ல இருந்தா மொபைல்ல இருந்தா?' என்று காதலன் கேட்கத் தொடங்கிய அன்றிலிருந்தே ஏமாற்றத் தொடங்கிவிடும். காதலனும், கிரீன் கலர் சூரிதார் போட்டு காதலுக்குக் கிரீன் சிக்னல் காட்டலாமா இல்லை இன்னும் கொஞ்சம் நாள்கள் தெருத்தெருவாகக் காதலனை அலைய விடலாமா? என்று திட்டமெல்லாம் போட ஆரம்பித்து விடும் காதலியும் கொண்டாடும் நாள் காதல் திருநாள். காதல் மோகம் தீர்ந்து புளித்துப் போனவுடனேதான் புரிகிறது அது ஒரு மாயவலை என்று.
காதலர் தினம் பிப்ரவரி 14, குழந்தைகள் தினம் நவம்பர் 14. இதுவும் முட்டாள்கள் தினமா என்றால் இல்லை. பத்து மாதங்கள் கழித்துக் காதலர்களின் குழந்தை கொண்டாடும் நாள் இது. ஆனால், அந்தக் குழந்தை இந்நாளைக் கொண்டாடுமா? அது கொண்டாடும் முறையில் காதல் அமைகிறதா? என்பதுதான் இன்று காதலர்கள் முன் இருக்கும் வினாக்கள்.
காய்ச்சல் வந்தவரின் அருகில் சென்றால் காய்ச்சல் தொற்றிக்கொள்வது போல காதலர்தினம் அயல் நாட்டில் இருந்து நம் நாட்டுக்குத் தொற்றிக்கொண்டுவிட்டது. இஃது ஒரு தொற்று நோய் போலப் பரவியுள்ளது.
விழி இருந்தும் வழி இல்லாமல்
மன்னன் பழி தாங்கிப் போகிறேன்.
விழி இழந்து
பார்க்க வழி இழந்து
நின் மனவலி தாங்காது
கதறும் ஒலி கேட்டும்,
உனை மீட்க வழி தெரியாமல்
மக்களுக்காகப் பலியாடாகப் போகிறேன் -நீ
ஒளியாய் வாழு!
பிறருக்கு வழியாய் இரு!
சந்தோச ஒளி
உன் கண்களில் மின்னும்!
-உன்னுடைய வாலண்டைனிடமிருந்து!
இந்தக் காதல் கவிதையே இன்றைய கலாச்சாரச் சீரழிவுக்குப் பாதை வகுத்துக் கொடுத்த கவிதை. இது உரோமானியப் பாதிரியார் வாலண்டைன் எழுதிய காதல் கவிதை. காதலை எதிர்த்த ஒரு மன்னனுக்கு எதிராகக் காதலர்களை வாழவைத்த ஒரு பாதிரியாரின் நினைவு நாளைக் காதலர் தினமாக இன்று உலகமே கொண்டாடுகிறது.
கொடூரமாகவும் கோமாளித்தனமாகவும் ஆட்சி புரிந்த உரோமானியச் சக்கரவர்த்தி கிளாடியின் முட்டாள்தனமான கட்டளைகளால் அவனை விட்டு விலகிப் போயினர் அவனுடைய இராணுவ வீரர்கள். புதிய இராணுவ வீரர்களை அவனால் சேர்க்க முடியவில்லை. யாரும் முன் வந்து இராணுவத்தில் சேர மறுத்துவிட்டார்கள். அவனுடைய மந்திரிகளும் வீரர்களைச் சேர்ப்பதற்கான ஆக்கபூர்வமான ஆலோசனைகள் எதனையும் அவனுக்குக் கொடுக்கவில்லை. இதனால் எரிச்சல் உற்றான் கிளாடி.
தன் நாயகியுடன் சல்லாபமாக இருந்த நள்ளிர வொன்றில் எரிச்சல் உற்ற உரோமானியச் சக்கரவர்த்தி கிளாடியின் மனத்தில் உதித்தது ஒரு வித்தியாசமான சிந்தனை. "திருமணமானவர்கள் தமது அன்பு மனைவியை விட்டு வர மனமில்லாமலும், திருமணமாகாதவர்கள் தமது காதலியை விட்டு வர மனமில்லாலும் இருப்பதனாலேயே இராணுவத்தில் சேரத் தயங்கு கிறார்கள். இவர்களுக்கு எல்லாம் குடும்ப வாழ்க்கை என்ற ஒன்று இல்லாத பட்சத்தில் இவர்கள் மனம் வெறுத்து இராணுவத்தில் சேருவார்கள். போரிலும் மூர்க்கத்தனமாய்ப் போரிடுவார்கள். வெற்றி எளிதில் கிட்டும்' என்ற முட்டாள்தனமான எண்ணம் தோன்றியது.
உடனேயே நள்ளிரவு என்றும் பாராமல் தன் அந்தரங்க அமைச்சரை அழைத்து ""உரோமாபுரி நாட்டில் இனி யாருமே திருமணம் செய்யக்கூடாது. ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்ட திருமணங்களும் நிறுத்தப்படுதல் வேண்டும். இந்தக் கட்டளையை மீறுபவர்கள் யாராயினும் கைது செய்யப்பட்டு இருட்டுச் சிறையில் அடைக்கப்படுவார்கள். பின்னர் அறிவிக்கப்படும் ஒரு நாளில் பொது இடத்தில் வைத்துக் கல்லால் அடித்துத் தலை துண்டிக்கப்பட்டுக் கொல்லப்படுவார்கள்'' என்ற அறிவிப்பை மக்களுக்குச் சொல்லும்படி பணித்தான். அரசனை மீற வழி தெரியாத அமைச்சர் அதனை அறிவிக்கச் செய்தார்.
இந்த அறிவிப்பைக் கேட்டு மக்கள் அதிர்ந்தார்கள். இருமனங்கள் இணைவதனை அரசன் அறுத்தெறியத் துணிந்தபோது திருமணங்கள் கனவாகிப்போன சோகத்தில் உரோமாபுரி சோகக் கண்ணீரில் மிதந்தது. அரசனின் இந்த முடிவு அநியாயம் என்று சொல்லிக் கொதித்தெழுந்த கிறித்தவப் பாதிரியார் வாலண்டைன், அரச கட்டளையை மீறி இரகசியத் திருமணங்களைச் செய்து வைத்தார்.
இந்தச் செய்தி அரசனுக்கு எட்டிவிட, வாலண்டைன் கைது செய்யப்பட்டு இருட்டுச் சிறையில் அடைக்கப் பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்டார்.
அவர் சிறையில் இருந்த காலத்தில் சிறைக்காவல் தலைவனின் கண் தெரியாத மகளான அஸ்டோரியசுக்கும் பாதிரியார் வாலண்டைனுக்கு இடையில் காதல் பூத்தது. அஸ்டோரியஸ் பாதிரியாரைச் சிறையிலிருந்து மீட்க முயன்றாள். இதனையறிந்த அரசன் அஸ்டோரியசை வீட்டுச்சிறையில் வைத்தான். காதலால் கண்கள் கிடைத்து விட்டது போன்ற மகிழ்ச்சியில் திளைத்திருந்த அஸ்டோரியஸ் கனவுகள் சிதைந்ததில் கலங்கினாள்.
ஆனால் வாலண்டைனுக்கான மரணதண்டனையில் மாற்றம் ஏதும் ஏற்படவில்லை. அஸ்டோரியசுக்கு ஒரு காகித அட்டையை வரைந்துவிட்டுத் தண்டனையை ஏற்க அவன் தயாரானான். வாலண்டைன் கல்லால் அடிக்கப்பட்டுச் சித்திரவதை செய்யப்பட்டுத் தலை துண்டிக்கப்பட்ட அந்தநேரத்தில் அத்தனை கட்டுக்காவல்களையும் மீறி வாலண்டைனிடமிருந்து வந்த அந்த அட்டையின் வரிகளைத் தோழி வாசிக்க அஸ்டோரியசின் கண்களிலிருந்து கண்ணீர்ப் பூக்கள் சொரிந்தன. அந்த அட்டையிலிருந்த கவிதைதான் மேலே உள்ளது.
ஆனால், தமிழர்கள் எந்தக் காலத்திலும் காதலை எதிர்த்ததில்லை. ஆண்டாண்டுக்காலமாய்க் காதலுக்கு மரியாதை தந்த இனம் தமிழினம். கடைக்கண் பார்வையால் வீசிப்பிடிக்கும் காதலுக்கு இலக்கணம் வகுத்த இனம் தமிழினம். காதலர்கள் ஒரே காதலில் நின்று அடுத்த கட்டமான கற்பு என்னும் திருமணத்தில் இணைய, போதிய வழிகளையும் சொல்லித் தந்த இனம் தமிழினம். காட்சி, ஐயம், குறிப்பறிதல், ஊடல், கூடல் என்று தொடங்கிக் காதலனுடன் போவதற்குக்கூட "உடன் போக்கு' என்று அழகான இலக்கணத்தைச் சொல்லவில்லையா தொல்காப்பியர். அந்த இனம் இன்று இந்த அந்நியச் சடங்கினை ஏற்று நம் பெருமையைக் குலைத்துவருகிறது. இன்று பிரச்சினை வந்த பிறகு காதலை வாழ வைத்த வாலண்டைனைத் தெரிந்த அளவு, வேறு எந்த மொழியிலும் இல்லாத அளவு, களவுக்கும் கற்புக்கும் இலக்கணம் தந்த தொல்காப்பியரைக் காதலர்களுக்குத் தெரியவில்லையே!
பாலொடு தேன்கலந்தற்றே பனிமொழி
வாலெயிறு ஊறிய நீர்
முத்தச் சுவையை இதனைவிட அழகாக எவரால் சொல்ல முடியும். இனிய சொற்களைப் பேசுகின்ற என் காதலியாகிய இவளின் வாயில் இருந்து ஊறிய நீர் பாலும் தேனும் கலந்த சுவை என்று கூறவில்லையா திருவள்ளுவர்? இனிக்க இனிக்கக் காதலுக்கு அழகிய இலக்கணம் வகுத்துக் கொடுத்தவர்கள் திருவள்ளுவரும் தொல்காப்பியரும்தாம் என்பது இன்றைய காதலர்களுள் எத்தனை பேருக்குத் தெரிந்திருக்கிறது.
இளையவர்களின் இன்ப நாளான காதலர்கள் தினத்தை ஏன் இப்படிக் குறை கூறுகிறீர்கள் என்று பலர் கேட்பது புரிகிறது. இன்றைய காதலர்கள் என்று அம்பிகாபதி- அமராவதி, லைலா-மஜ்னு போல அமரத்துவமாக, ஆழமாகக் காதல் செய்கின்றனரா? காதல் என்பது ஒரு ஃபாஷன் ஆகிவிட்டது. கேட்டால் காதல் என்பது காய்ச்சல்போல. ஆண்டுக்கொருமுறை வரும், ஆனால் ஆறு மாதத்தில் போய்விடும் என்கின்றனர் இன்றைய தலைமுறையினர். இந்தக் காய்ச்சல் வரவில்லை என்றால் அவர்கள் சராசரி இளைஞர்களே இல்லை என்ற எண்ணமும் வந்துவிட்டது. இத்தனையும் மீறிக் காதல் தேவைதானா என்றால் தேவைதான். ஏனென்றால் காதல் மட்டுமே இன்றைய சாதி மத வேறுபாட்டைக் களையும், மணக்கொடையை அகற்றும். சமத்துவத்தை உருவாக்கும். இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் காதல் எப்போது தேவை என்பதில்தான் சிக்கல் இருக்கிறது.
வயிற்றுப் பிரச்சினை நிறைவேறி வளமான வாழ்வுக்கு அடித்தளமிட்ட பின்பு காதல் தேவைதான். அப்படி என்றால் எப்போது காதலிக்கலாம். பள்ளிப்பருவம், கல்லூரிப்பருவம் முடித்து ஒரு அலுவலில் அமர்ந்து காதலிக்குச் சொந்தப் பணத்தில் ஒரு பரிசுப்பொருள் வாங்கித்தரும் அளவில் வாழ்க்கைத்தரம் விடுத்து, ""ஏய் மச்சி எப்படியாவது ஒரு 200 ரூபாய் ஏற்பாடு பண்ணித் தாடா. காதலர் தினத்துக்கு என் ஆளுக்கு ஏதாவது வாங்கித் தரணும்டா'' என்று கேட்கின்ற நிலைமையில் காதல் தேவையா என்று சிந்திக்க வேண்டியது இன்றைய காதல் செய்யும் இளைய தலைமுறையின் முறையான, முக்கியமான, முதன்மையான கடமை. சிந்தியுங்கள் காதலர்களே!