ந்திரகாந்த் பேருந்திலிருந்து இறங்கும் போது, திரிகூட மலைச்சிகரங்களில் வெயில் மறைய ஆரம்பித்திருந்தது. கதவாவுக்கும், படான்கோட்டிற்கும் செல்லும் சில ஆட்களுடன், பேருந்து அதற்குப் பிறகும் முன்னோக்கிப் போய்க்கொண்டி ருந்தது. சந்திரகாந்துடன் மேலும் இரண்டு மூன்று பேர் சேர்ந்து அங்கு இறங்கினார்கள். பக்கர்வால் இனத்தைச் சேர்ந்த ஒரு மனிதன், அவனுடைய மனைவி, ஏழு அல்லது எட்டு வயது இருக்கக்கூடிய பையன்... அவர்களுக்கு மத்தியில் வயதான வேறொரு ஆளையும் பார்த்தார். கிழவர் அந்த குளிரிலும் காதி பைஜாமாவையும் ஜிப்பாவையும் அணிந்திருந்தார்.

தேசிய நெடுஞ்சாலையிலிருந்து சந்திரகாந்தின் கிராமத்திற்கு நான்கு கிலோமீட்டர் தூரமிருந்தது. வழியில் ஆட்களின் நடமாட்டம் மிகவும் குறை வாகவே இருந்தது. சிறிது தூரம் காட்டுப்பகுதி... பிறகு... சிறியதும் பெரியதுமான சில கடைகள்... வீடுகள் மிகவும் குறைவாகவே இருந்தன. பூஞ்செடி களும் இலந்தை மரங்களும் உயரம் அதிகமாக இருந்த கருவேல மரங்களும் அங்கு அடர்த்தியாக வளர்ந்திருந்தன. “"டேங்க் மூலை'யை அடைந்த போது, கால், முகம் ஆகியவற்றைக் கழுவவேண்டும் போல சந்திரகாந்துக்குத் தோன்றியது. முக்கிய வேலைக்காக அங்கு வரக்கூடிய அனைவரும் அவ்வாறு செய்வதுண்டு சந்திரகாந்துக்கு அவசர மில்லை. அவர் தன் கையிலிருந்த நாளிதழை வாட்டர் டேங்கிற்குக் கீழேயிருந்த சிமெண்ட் பெஞ்சில் விரித்து, அங்கு அமர்ந்தார். மாதா வைஷ்ணவிதேவியின் பனிமூடிய குகையைக் கொண்ட திரிகூட மலையின் மூன்று சிகரங்களை யும் அங்கு நின்றால் காண இயலும். கைகளைக் கூப்பி, நிறைந்த மனதுடன் அவர் வைஷ்ணவி தேவியைத் தொழுதார். டிசம்பரில் பகல்வேளை சீக்கிரமாகவே முடிந்துவிடுவதால், இப்போது மலைச்சிகரங்களில் வெயிலின் பாதிப்பு முழுமை யாகக் குறைந்திருந்தது.

பக்கர்வாலாவின் மகன் பாதி மூடிவிட்டுச் சென்ற நீர்க்குழாயை அவர் இறுக மூடிவிட்டு, நீர்த் தொட்டியின்மீது பதிக்கப்பட்டிருந்த "நினைவுப் பலகை'யின் வார்த்தைகளில் கண்களை ஓட்டினார். சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்னால் சுபேதார் பத்ரஸேனுக்கு நகரத்தில் புகழ்பெற்ற கடையிலிருந்து அந்த "நினைவுப் பலகை'யை தயார்செய்து. தந்ததே சந்திரகாந்த்துதான். அதில் குறிக்கப்பட்டிருந்த வரிகளும் சந்திரகாந்துடையது தான். ஓய்வுபெற்று சொந்த ஊருக்குச் சென்ற போது, தன் தாய்லி தந்தையை ஞாபகப்படுத்தும் வகையில் கிராமத்தில் ஏதாவது செய்யவேண்டு மென்று சுபேதார் தீர்மானித்திருந்தார். அந்த வகையில்தான் நீர்த்தொட்டியும் குழாயும் இரண்டு சிமென்ட் பெஞ்ச்களும் அங்கு உண்டாயின. எது எப்படியோ... ஊரில் இருப்பவர்களுக்கு அது பெரிய நிம்மதியைத் தரும் விஷயமாக இருந்தது. நீர்த்தொட்டியின் பெயரில்தான் இப்போது இடமே அறியப் படுகிறது. சுபேதாரின் நீர்த்தொட்டி மக்களுக்கு பெரிய அளவில் நிம்மதியை அளித்தாலும், அவர் இப்போது உயிருடன் இல்லை. ஓய்வுபெற்று இரண்டு வருடங்கள் கடந்தபிறகு மரணமடைந்து விட்டார். நுரையீரலில் புற்று நோய்...

சந்திரகாந்தின் கிராமம் ஜம்மு நகரிலிருந்து முப்பத்தைந்து கிலோமீட்டர் தூரத்திலிருந்தது. நான்கு வருடங்களுக்குப்பிறகு இப்போதுதான் சொந்த ஊருக்கு வருகிறார். வங்கியில் பணி என்பதால், நேரம் சிறிதும் கிடைக்கவில்லை என்பதுதான் காரணம். இந்த நான்கு வருடங்களுக்கு மத்தியில் அவருடைய தந்தை ஆறு... ஏழு முறை நகரத்திலிருக்கும் அவருடைய வீட்டிற்கு வந்திருக்கிறார். தந்தையின் ஒரேயொரு மகன் சந்திரகாந்த் என்றாலும், தந்தைக்கு மகனையும் குடும்பத்தையும் பார்க்கவேண்டுமென்ற விருப்பம் சமீபகாலத்தில் பெரிய அளவில் உண்டாகவில்லை. உறவில் மிகப்பெரிய விரிசல் விழுந்திருக்கிறது. சொந்த ஊரில் தன் விவசாய நிலத்தில் விளையும் தானியங்களையும் கொஞ்சம் பொருட்களையும் மகனிடம் கொண்டுசேர்க்க வேண்டுமென்பது தான் பல நேரங்களில் வருவதற்கான நோக்கம்...

Advertisment

வாழ்க்கையில் சிறிதளவிலாவது சுயநலமில் லாமல் யாருமே இல்லை. தேவைகள் அதிகம்... தேவைகளின் அழுத்தம்தான், இல்லாத நேரத்தைக் கண்டுபிடித்து கிராமத்திலிருக்கும் தன் வீட்டிற்கு வருவதற்கு சந்திரகாந்தை இப்போது தூண்டி விட்டிருக்கிறது.

கடந்த இருபத்தைந்து வருடங்களாக நகரத்தில் வாடகை வீட்டில் சந்திரகாந்தின் குடும்பம் வசித்துக்கொண்டிருக்கிறது. வாடகை கொடுத்து வெறுப்பாகிவிட்டது. சில நேரங்களில் வீட்டின் உரிமையாளர் நடந்துகொள்ளும் விதமும் தாங்கிக்கொள்ளமுடியாத ஒன்றாக இருந்தது. வங்கிக்கடன்மூலம் சக்திநகர் பகுதியில் கொஞ்சம் நிலம் வாங்கியிருக்கிறார். எனினும், அங்கு ஒரு வீடு கட்ட முடியவில்லை. சொந்த ஊரிலிருக்கும் சொத்துகளை விற்றுப் பணம் பெறலாம் என்ற சிந்தனை உண்டானது அப்போதுதான். ஆனால், அதற்குத் தடையாக இருந்தது வயதான அவருடைய தந்தைதான். அவரை அனாதையாக விட்டுவிட்டு நகரத்தில் சந்தோஷமாக வாழ்த்து கொண்டிருக்கிறார் என்ற கெட்ட பெயர் இப்போதே இருக்கிறது. சூழ்நிலைகளை வைத்து சந்திரகாந்த் பெரிய பணக்காரர் என்பதாக நினைப்பு... நகரத்தில் வசிக்கிறார். வீட்டில் வண்டி இருக்கிறது. ஏ.ஸி. இருக்கிறது. ஃப்ரிட்ஜ் இருக்கிறது. டி.வி. இருக்கிறது. வங்கியில் வேலை. தூரத்திலிருந்து பார்க்கும்போது அனைத்தும் நன்றாக இருக்கின்றன என்பதாகத் தோன்றும். ஆனால், நிலைமை அந்த அளவுக்கு சிறப்பாக இல்லை என்பதே உண்மை.

சொந்த ஊரில் சந்திரகாந்த், ஹர்பம்ஸ் சவுதரி ஆகியோரின் விவசாய நிலங்கள் சேர்ந்திருக் கின்றன. ஹர்பம்ஸ் சவுதரி தின்னக்கூடிய, குடிக்கக்கூடிய கூட்டத்தைச் சேர்ந்தவர். ஜீப், ட்ராக்டர், பம்பு... அனைத்தும் இருக்கின்றன. சந்திரகாந்தின் நிலமும் சேர்த்து கிடைத்தால், விவசாயத்தைச் சற்று விரிவுபடுத்தலாம் என்பது சவுதரியின் சிந்தனையாக இருந்தது. இந்த விஷயத்தில் சந்திரகாந்திற்கு பெரிய எதிர்ப் பில்லை. காரணம்லி வேறு யாருக்காவது கொடுத் துக் கிடைப்பதைவிட, நிலத்திற்கு அதிக விலையை சவுதரி தருவார்.

Advertisment

தன் மனைவியின் வற்புறுத்தலுக்குக் கீழ்ப் படிந்து நேற்று தன்னுடைய தந்தைக்கு நான் கைந்துமுறை மெஸேஜ் அனுப்பவேண்டியநிலை உண்டானது. சவுதரியுடன் சேர்ந்து நகரத்திற்கு வந்து, ஒன்றாக அமர்ந்து நில விஷயத்தில் ஒரு தீர்மானம் எடுக்கவேண்டும் என்பதற்காகத்தான் செய்தியை அனுப்பவே செய்தார். ஆனால் தந்தை வரவில்லை. ஐந்தாறு முறை சவுதரி வீட்டிற்கு வந்து திரும்பினார். இறுதியில் தானே ஊருக்கு வரவேண்டிய நிலை சந்திரகாந்திற்கு உண்டானது. தன் தந்தை வராதது குறித்து பெரிய அளவில் வருத்தம் இருந்தது. வராததற்கான காரணம் சந்திரகாந்திற்கு நன்றாகத் தெரியும். சொந்த ஊரையும், சொந்த ஊரிலிருக்கும் நிலத்தையும் துறப்பது என்ற விஷயத்தை உயிருடன் இருக்கும் காலம் வரைக்கும் தன் தந்தை விரும்பவில்லை என்பது சந்திரகாந்திற்கு நன்றாகத் தெரியும்.

ரயில்வே கேட்டை நெருங்கியபோது இருள் அதிகரித்துக்கொண்டு வந்தது. ஜம்முவிலிருந்து பஞ்சாப்லி தில்லி பகுதிக்குச் செல்லக்கூடிய ஏதோ ரயில் வண்டி கடந்து சென்றுகொண்டிருந்தது. காரணம் என்னவென்று தெரியவில்லைலி வண்டி குறைவான வேகத்துடன் போய்க்கொண்டிருந்தது. வண்டி சென்றவுடன், கேட்டைத் தாண்டினார். மதுவின் போதையில் ஆரவாரம் எழுப்பியவாறு போய்க்கொண்டிருந்த சிலரைப் பார்த்தார். சற்று தூரத்தில் ரயில் தண்டவாளத்திற்கருகில் இருட்டின் மறைவில் கள்ளு பருகிக்கொண்டிருந்த சில மனிதர்கள் இருந்தார்கள்.

கிராமத்தின் எல்லையை அடைந்தபோது, குளத்தின் கரையிலிருந்த ஆலமரத்திற்குக் கீழே கூட்டம் கூடி நின்றுகொண்டிருந்தவர்கள், எதையோ பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருப்பது காதில் விழுந்தது. கிராம வளர்ச்சி அமைப்பின் கூட்டத்திற்கு வந்தவர்கள்... சுமார் இருபது பேர் இருப்பார்கள். அந்தக் கூட்டத்தில் பெரியப்பா ஹரிராம், தாராசந்த் மாஸ்டர், ஹர்பம்ஸ் சவுதரி ஆகிய ஊரின் முக்கிய நபர்களும் இருந்தார்கள். அதையும் தாண்டி இருந்தவர்கள்... கொஞ்சம் இளைஞர்கள். அவர்கள் பேசிப்பேசி உஷ்ணமாகிக் கொண்டிருந் தார்கள். அவர்களில் பலரையும் நகரத்தின் நீதிமன்றத்திற்கு முன்னாலும் வேறு சில இடங்களிலும் பார்த்திருக்கும் நினைவு வந்தது. பார்க்கும்போது சிரிப்பார்கள். மனதில் மூத்தவர் களையும் இளையவர்களையும் பாகுபடுத்திப் பார்த்து, ஆட்களை வணங்குவதிலும் ஒதுக்குவதி லும் அந்த கூட்டத்திலுள்ளவர்கள் கைதேர்ந்த வர்கள்.

அங்கு நிற்கவேண்டுமென்ற நோக்கம் சந்திர காந்துக்கு இல்லை. ஆனால், பெரியப்பா ஹரிராமையும் ஹர்பம்ஸ் சவுதரியையும் பார்த்த போது, நிற்காமல் போக முடியவில்லை. சவுதரி, சந்திரகாந்தை அருகில் வருமாறு அழைத்தார். "சந்திரகாந்த் பாய்... நீங்க செய்தது நல்ல விஷயம். எது எப்படியோ... வந்துட்டீங்க இல்லியா? காரியத்தை முடிச்சுட்டுதான் போகணும். நாளை ஞாயிற்றுக்கிழமை. மதிய வேளை வர்றப்போ காரியங்களை செய்து முடிச்சிருக்கணும். இங்க... இப்போ தண்ணி வினியோகத்தைப் பற்றி விவாதம் நடந்துகிட்டிருக்கு. வாங்க... கொஞ்ச நேரம் இங்க இருந்துட்டுப் போலாம்.''

வீட்டை அடைந்தபோது, இரவு நேரம் அதிகமாகிவிட்டிருந்தது. கிராமத்தில் இருள் நிறைந்திருந்தது. எல்லா இடங்களிலும் பெரிய பெரிய மின்சாரத் தூண்கள் நடப்பட்டிருந்தன. ஆனால், அவற்றில் ஒன்றில்கூட பல்ப் இல்லை. வீட்டின் வாசலில் கட்டிலில் அமர்ந்துகொண்டு தந்தை ஹுக்கா புகைத்துக்கொண்டிருப்பதை இருண்ட வெளிச்சத்தில் தூரத்திலிருந்தே பார்க்க முடிந்தது. தந்தை, சந்திரகாந்தை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதைப்போல தோன்றியது. யாராவது முன்கூட்டியே கூறியிருக்கவேண்டும். பல வருடங்களுக்குப்பிறகு வீட்டிற்கு வந்தாலும், வரவேற்பு மிகவும் சாதாரணமாகவே இருந்தது. தன் தந்தைக்கு அருகில் சந்திரகாந்த் கட்டிலில் அமர்ந்தார். ஹுக்காவை இழுத்துப் புகைத்து விட்டு, தந்தை மெதுவான குரலில் கூறினார்: "உன் மெஸேக் கிடைச்சது. நகரத்திற்கு வரணும்னு நான் நினைச்சேன். ஆனால், முடியல. பிறகு... என் உடல்நிலையும் இப்போ அந்த அளவிற்கு நன்றாக இல்லை.''

தந்தை மிகவும் சோர்வடைந்து காணப்பட் டார். எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனை மிகவும் கவலைக்குள்ளாக்கியிருக்க வேண்டும். வாழ்க்கை யில் யாரையும் நம்பியிருக்காமலேயே இதுவரை வாழ்ந்துவிட்டார். இனி இருக்கக்கூடிய காலமும் அப்படித்தான் இருக்கவேண்டுமென்று நினைத் திருக்கவேண்டும். தந்தை மிகவும் அமைதியான வராகவும் கையற்ற நிலையில் இருப்பதைப் போலவும் காணப்பட்டார். பல வருடங்களுக் குப்பிறகு தன் மகன் இப்போது வீட்டிற்கு வந்திருப்பதற்கான நோக்கம் தந்தைக்கு நன்றாகத் தெரியும். கடந்த வருடம் தந்தை நகரத்திலிருக்கும் வீட்டிற்கு வந்தபோது, அனைத்து விஷயங்களை யும் சந்திரகாந்த் குறிப்பாக உணர்த்தியிருந்தார். பாதி அளவிற்கு தந்தை மெதுவான குரலில் சம்மதத்தையும் வெளிப்படுத்தியுமிருந்தார். தன் தர்மசங்கடமான நிலையை சந்திரகாந்த் தன் தந்தைக்கு தெரியப்படுத்தியிருந்தார். சொந்த ஊரில் பார்த்துக்கொள்வதற்கு ஆள் யாரும் இல்லாத விஷயத்தையும், நகரத்திலிருக்கும் வசதிகளையும் தன் தந்தைக்குப் புரியவைப்பதற்கு முயற்சித்தார். நகரத்தில் ஒரு வீடு உண்டாக்கு வதன் முக்கியத்துவத்தைப் பற்றி சந்திரகாந்த் கூறிக்கொண்டிருந்தாலும், பிறந்த ஊரும் தான் செயல்பட்டுக்கொண்டிருக்கும் மண்ணும் தந்தைக்கு மிகவும் விருப்பத்திற்குரியதாக இருந்தது. நகரத்திற்கு வந்தால், உடனடியாக ஊருக்குத் திரும்பிவிடவேண்டும்...

s

சந்திரகாந்தும் தந்தையும் ஒன்றாக வாசலில் அமர்ந்து உணவு சாப்பிட்டார்கள். அதிகமாக எதுவும் பேசிக்கொள்ளவில்லை. உணவு சாப் பிட்டு முடித்ததும், சந்திரகாந்த் சமையலறையை ஒட்டியிருந்த அறைக்குள் சென்றார். எவ்வளவோ காலம் தான் படுத்து உறங்கிய அறை அது.... நடந்து வந்ததால் உண்டான களைப்பை அவர் உணர்ந்தார். முன்பு இதைவிட தூரம் நடந்திருக் கிறார். ஆனால், இப்போது முடியவில்லை. ஒருவேளை... மனக்கவலை சரீரத்தையும் சோர்வுக் குள்ளாக்கியிருக்கவேண்டும். சரீரத்தை களைப்பு தளர்த்தியவுடன், கட்டிலில் படுத்தார். விளக்கை அணைத்தார். எனினும், வாசலிலிருந்த பல்பின் வெளிச்சத்தில் அறையிலிருந்த பொருட்கள் அனைத்தையும் தெளிவாகக் காணமுடிந்தது. சுவரிலிருந்த அலமாரியில் புத்தகங்களின் ஒரு கட்டு பார்வையில் பட்டது. முதல் வகுப்பிலிருந்து எம்.காம். வரை படித்த புத்தகங்கள் அந்த கட்டில் இருக்கும். ஆங்கில இலக்கணம், சிறியதும், பெரியதுமான டிக்ஷனரிகள்.... தன் பிள்ளை களுக்குப் பயன்படக்கூடிய பல புத்தகங்களும் அந்த கட்டில் இருக்குமென்பதை அவர் நினைத் தார்.

எந்த அளவிற்கு உறக்கம் வந்தது! ஆனால், இப்போது உறக்கம் காணாமல் போய்விட்டது. சிந்தனைகளுக்கு கனம் அதிகமானதுதான் காரணம். இன்று இரவு இனி தூக்கம் வருவது சிரமம்தான்... இடையில் அவ்வப்போது எழுந்து நீர் பருகினார். மிகவும் அருகிலிருந்த அறையில் படுத்திருந்த தந்தையும் தூங்குவதற்கு வாய்ப் பில்லை என்று அவர் நினைத்தார். அமைதியற்ற நிலையை உண்டாக்கக்கூடிய சிந்தனைகள் தந்தையையும் ஆக்கிரமித்திருக்கும்...

சந்திரகாந்தின் மனம் பல சிந்தனைகளின் வழியாகவும் கடந்துசென்றது. ராணியின் கோபத்தை பல வேளைகளிலும் அனுபவித்திருக் கிறார். "சொந்த ஊரிலிருக்கும் வீட்டையும் நிலத்தையும் எப்போது விற்பது? இந்த நகரத்தில் ஒரு வீட்டை உண்டாக்கி, மரணத்தைத் தழுவ முடியுமா?'' என்று ஆரம்பிக்கும் அவளுடைய பேச்சுகள்... ஊரிலிருக்கும் வீட்டையும் நிலத்தை யும் விற்றுவிட்டால், அதற்குப்பிறகு தன் நிலை என்னவாகும் என்ற சிந்தனைதான் தந்தையைப் பாடாய்படுத்திக்கொண்டிருக்கிறது. இந்த இரண்டிற்குமிடையே கிடந்து மூச்சுவிடமுடி யாமல் இருக்கக்கூடிய பிறவிதான் தன்னுடையது என்று சந்திரகாந்த் நினைத்தார்.

ராணியின் இடத்தில் தான் இருந்திருந்தால், செய்வது என்னவாக இருக்கும்? இனி தந்தையின் இடத்திலிருந்து சிந்தித்துப் பார்த்தால்...? எந்தவொரு தீர்மானத்திற்கும் சந்திரகாந்தால் வரமுடியவில்லை. யார் சரி... யார் தவறு என்பதைத் தீர்மானிக்க முடியவில்லை. மனதின் மூலையில் எங்கோ... யாரோ கூறுவதைப்போல இருந்ததுலி சில விஷயங்களில் தவறு செய்வது ராணி என்று. அப்படியே இல்லையென்றாலும்லி சிறிய விஷயங்களில் அவள் வேகமாக செயல்படு வது பல வேளைகளில் தாங்கிக்கொள்ள இயலாத தாக ஆவதுண்டு. எதையுமே பார்க்கவில்லை, கேட்கவில்லை என்பதைப்போல முன்னோக்கிப் போய்க்கொண்டிருப்பாள். ராணியின் குணம் வினோதமானது என்று தோன்றியிருக்கிறது. வீட்டில் அனைத்து வசதிகளையும் அனுபவித்துக் கொண்டு, மற்றவர்களைவிட கொடுத்துவைத்த வள் என்பதைக் காட்டிக் கொள்பவள்... திருமணமான நேரத்தில் இப்படியெல்லாம் இருந்ததில்லை. எம்.ஏ.வில் தேர்ச்சிபெற்றபோதும் சாதாரண வாழ்க்கைதான் நடந்துகொண்டிருந் தது. மெதுவாக... மெதுவாக நகரத்தின் காற்று அவளுடைய தலைக்குள் நுழைந்து கொண்டி ருந்தது. நகரத்தில் புகழ்பெற்ற பெரிய பள்ளிக் கூடத்தில் ஆசிரியையானவுடன், சாதாரண விஷயங்களில் அதிக கவனம் உண்டானது. ஊரிலுள்ள சொத்துகளைப் பற்றி அவள் பல நேரங்களில் நிறைய பேசுவாள். நகரத்தில் வீடு உண்டாக்குவதற்கு அது பயன்படும் என்பது அவளுடைய வாதமாக இருந்தது. ஆனால், சொத்தின் உரிமையாளரான வயதான தந்தை யைப் பார்த்துக்கொள்ளும் விஷயத்தில் எந்த வொரு அக்கறையுமில்லை. எப்போதாவது தந்தை வீட்டிற்கு வந்தால், ஒரே முணுமுணுப்புதான்... நிலைமை அப்படியிருக்க, நிரந்தரமாக தந்தை தங்களுடன் சேர்ந்து வசிப்பதற்கு வந்தால், எப்படிப்பட்ட நிலைமை உண்டாகும்?

இரவில் நேரம் மிகவும் கடந்துவிட்டிருந்தது. நேரம் தவறிப் போய்க்கொண்டிருந்த ரயில் வண்டியின் சீட்டியடிச் சத்தம் கேட்டது. சந்திரகாந்த் உறக்கத்தை வரவைக்கக்கூடிய முயற்சியில் இருந்தார். ஆனால், தூக்கத்தின் அருள் கிடைக்கவில்லை. ராணியின் பலவிதமான குணங்கள் முன்னால் தோன்றிக்கொண்டிருந்தன. சிந்தனைகளில் மூழ்கிவிட்ட சந்திரகாந்த், பொழுது புலரும் வேளையில்தான் சற்று கண்களை மூடினார்.

மூடுபனியின் காரணமாக மங்கலான வெயில் கடந்து வந்தபோது, உறக்கத்திலிருந்து கண் விழித்தார். வாசலிலிருந்த மரத்திலிருந்து பறவை கள் சலசலத்துக் கொண்டிருந்தன. சந்திரகாந்தின் மனம் இப்போதும் ராணியின் உரிமை உணர்விற் கும், தந்தையின் கையற்ற நிலைக்குமிடையே கிடந்து உழன்று கொண்டிருந்தது. வீடு முழுவதும் அலங்கோலமாகக் காட்சியளித்தது. வாசலில் உடைந்து பாழாய்ப்போன கட்டிலும் சில பொருட்களும் இருந்தன. சமையலறையில் குழாயை சரியாக அடைக்கமுடியாத காரணத் தால் நீர்த்துளிகள் பாத்திரத்தில் விழுந்துகொண்டி ருக்கும் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. தந்தை தனியாக இப்படி அந்த வீட்டில் வசிப்பது அவருக்கு சிறிதும் சரியான விஷயமாகத் தோன்ற வில்லை. அப்போது காலை நேரநடை முடிந்து, தந்தை உள்ளே வந்துகொண்டிருந்தார். கையில் வைத்திருந்த கழியை கொக்கியில் தொங்கவிட்ட பிறகு, வாசலில் கொம்பில் கட்டப்பட்டிருந்த கன்றுக்குட்டிக்கு அருகில் அவர் சென்றார். கன்றுக்குட்டியைத் தடவியவாறு, பிரிவின் உணர்வு நிறைந்திருந்த கண்களுடன் தந்தை சந்திரகாந்தைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தார்.

சிறிது நேரம் கடந்ததும், புதிய மணப் பெண்ணைப்போல ஒரு இளம்பெண் மெல்ல... நடந்துவருவதைப் பார்த்தார். அவள் நேராக சமையலறைக்குள் நுழைந்து மாவு வைக்கப் பட்டிருந்த டின்னை எடுத்தாள். காலை நேர உணவிற்கான ஆயத்தம் அது. உறவு என்று கூறுவதாக இருந்தால்லி இளம்பெண் பக்கத்து வீட்டிலிருக்கும் குடும்பத்தைச் சேர்ந்தவள். அவளுடைய உதவியால்தான் தந்தை இவ்வாறு வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

முன்பக்க கதவை யாரோ மெதுவாகத் தட்டுவதைக் கேட்டு கதவைத் திறந்தார். பெரியப்பா ஹரிராம் உள்ளே வந்து தந்தைக்கு அருகில் கட்டிலில் அமர்ந்தார்.

பெரியப்பா என்னவோ கூற நினைக்கிறார் என்பதாக சந்திரகாந்திற்குத் தோன்றி யது. ஆனால், கூறமுடியவில்லை. காலை யில் தந்தையும் பெரியப்பாவும் ஒன்றாகச் சேர்ந்து நடப்பதற்காகச் செல்வார்கள். தந்தை விஷயத் தைக் கூறியிருப்பார். தந்தைக்காக பெரியப்பா பேசுவதற்காக வந்திருப்பார். சிறிது நேரம் எல்லாரும் அமைதியாக இருந்தார்கள். இறுதி யில் பெரியப்பாதான் அமைதியை விலக்கி னார். "சந்திரகாந்த்... நகரத்தில் என்ன விசேஷங் கள்? பிள்ளைகளின் படிப்பு எப்படி போகிறது?''

பெரியப்பா அவ்வாறு கேட்டது நல்லதற்குத் தான் என்று சந்திரகாந்திற்குத் தோன்றியது. பதிலின்மூலம் வெளிப்படையாகத் தன்னுடைய பொருளாதாரரீதியான சிரமங்களைக் கூறுவதற்கான சந்தர்ப்பத்தை அவர் பயன்படுத்திக் கொண்டார். "வீட்டு வாடகை, மின்சார பில், பத்திரிகை, பால், குழந்தைகளின் கல்விக் கட்டணம், மாத இறுதியில் நெருக்கடிதான்... பிள்ளைகள் வளர்ந்து கொண்டிருக்கிறார்கள். நாளையோ... நாளைக்கு மறுநாளோ... திருமணத்திற்கு தயாராவார்கள்.'' தந்தையும் கேட்டுக்கொள்ளட்டுமே என்று நினைத்து, சற்று உரத்த குரலில் சந்திரகாந்த் கூறினார். இவற்றையெல்லாம் கேட்டு, தந்தையின் மனதில் மாறுதல் உண்டாக்கக்கூடிய எண்ணமும் அதில் இருந்தது.

மதியம் மூன்று மணி ஆனபோது, சந்திரகாந்த் வெளியேறினார். கிராமத்திற்குப் பெரிய அளவில் மாறுதல் எதுவும் உண்டாகியிருக்கவில்லை. தேவைப்படக்கூடிய வளர்ச்சி எதுவும் கண்களில் படவில்லை. ஞாயிற்றுக்கிழமையாக இருந்ததால், சந்திப்பில் பணி எதுவுமில்லாமல் சிலர் சேர்ந்து நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் என்னவோ ரகசியமாக பேசிக்கொண்டிருப்பது தன்னைப் பற்றித்தான் என்பதாக சந்திரகாந்திற் குத் தோன்றியது. எல்லாருக்கும் அவருடைய தந்தையின்மீதுதான் இரக்கம்.. நன்றியில்லாத மகன் என்றே தன்னை எல்லாரும் பார்க்கிறார்கள் என்று அவருக்குத் தோன்றியது.

ரயில் தண்டவாளத்தை குறுக்காகக் கடந்து, சந்திரகாந்த் ஹர்பம்ஸ் சவுதரியின் வீட்டை அடைந்தார். சவுதரி வீட்டில் இல்லை. காலை யிலேயே அவர் ஸாம்பாவிற்குச் சென்றிருந்தார். "திரும்பி வரும் நேரம்தான்.' வீட்டிலிருப்பவர்கள் சந்திரகாந்தை அமரும்படி கட்டாயப்படுத்தி னாலும், சிறிது நேரம் கழித்து வருவதாகக் கூறிவிட்டுத் திரும்பிவிட்டார்.

சந்திரகாந்த் வீட்டிற்கு வந்தபோது, தந்தை அங்கு இல்லை. ஒருவேளை... வயலுக்குச் சென்றிருக்கலாம். சந்திரகாந்த் கட்டிலில் படுத்தவுடன், சற்று தூங்கிவிட்டார். கண்களைத் திறந்தபோது, வாசலுக்கு முன்னால் முற்றத்தில் தந்தை யாருடனோ பேசிக்கொண்டிருப்பது காதில் விழுந்தது. "என் முழு எதிர்பார்ப்பும் உங்க இருவரின்மீதுதான். சந்திரகாந்த்துக்குக் கொஞ்சம் கூறி புரியவைக்கணும். இன்னும் கொஞ்சகாலம்தானே காத்திருக்க வேண்டி யிருக்கும்? என் காலம் முடிஞ்சிட்டா, பிறகு... அவனுடைய விருப்பப்படி எதை வேண்டுமா னாலும் செய்துகொள்ளலாமே! சாயங்காலம் சவுதரியைப் பார்த்துட்டு, இறுதிப் பேருந்தில் அவன் திரும்பிப் போவான். பேருந்து நிலையத்திற்குச் சென்று அவனைப் பார்த்து, விஷயங்களைக் கூறி புரியவைக்கறதுக்கு முயற்சி செய்யுங்க.''

தந்தையின் வார்த்தைகளில் கையற்ற நிலை வெளிப்படையாகத் தெரிந்தது. தனக்குச் சொந்தமான பொருட்களை வேறு யாரிடமோ கேட்டு வாங்குவதைப் போல.... தந்தையுடன் பெரியப்பா ஹரிராமும் சித்தப்பா ஜாய்மலும் இருந்தார்கள். அவர்களுக்கு அருகில் செல்லாமல் சந்திரகாந்த் தன் அறைக்குள் சென்றார். அவர்களுக்கு அருகில் எப்படி போகமுடியும்?

சாம்பலின் பெரிய கூம்பாரத்தில் அமர்ந்திருப் பதைப்போன்ற நிலை... சாம்பல் குவியலுடன் சேர்ந்து கீழ்நோக்கி இறங்கி... இறங்கிப்போய்க் கொண்டிருக்கிறார்.

தாங்கமுடியாத தர்மசங்கடமான நிலையில் சந்திரகாந்த் இருந்தார். இறுதிப் பேருந்து புறப்படுவதற்கு இன்னும் ஒரு மணிநேரம் மட்டுமே எஞ்சியிருந்தது. தந்தை கட்டி உண்டாக்கிய உலகத்தை இல்லாமல் போக வைக்கவேண்டுமா? இல்லாவிட்டால்.... ராணியின் கட்டி உண்டாக்கப்படப்போகும் உலகத்தை இல்லாமல் போக வைக்கவேண்டுமா? அலைகளைப்போல சிந்தனைகள் அவரை ஆட்டிப்படைத்துக்கொண்டிருந்தன. சிறிது நேர சிந்தனைகளுக்குப் பிறகு, சந்திரகாந்த் மனதில் உறுதிப்படுத்திக்கொண்டார்லி ஊரிலிருக்கும் சொத்துகளை விற்கக்கூடிய தீர்மானத்தைக் கைவிட்டாகிவிட்டது என்பதை தந்தையிடம் கூறிவிட வேண்டியதுதான்... அந்தவகையில் தந்தையின் கவலை நீங்கட்டும்... மறுபக்கத்தில் ராணி, பிள்ளைகள் ஆகியோரின் சிந்தனைகளுக்கு எப்படி தீர்வு காண்பதென்று அவருக்குத் தெரியாமலிருந்தது. ஹர்பம்ஸ் சவுதரியைப் பார்க்காமலே நகரத்திற்குப் பயணமாக வேண்டியதுதான்... தந்தையை திடீரென்று இழக்காமல் இருப்பதற்காக... இன்னும் சிறிது காலம் இந்த உலகத்தில் தந்தை வாழவேண்டு மென்று அவர் விரும்பினார்.

தந்தை இருக்கும் அறைக்குள் சந்திரகாந்த் சென்றார். அமைதியாக இருக்கும் தந்தையைப் பார்த்தார். தன் தீர்மானத்தைக் கூறியபோது, பெரிய அளவில் எதிர்வினை எதுவும் உண்டாக வில்லை. தந்தை தன் மகனை இறுக அனைத் துக் கொண்டு முதுகை வருடினார். சந்திர காந்தின் கண்கள் நிறைந்தன. தந்தையின் தோளில் தலையைச் சாய்த்து வைத்துக் கொண்டு வாய்விட்டு அழவேண்டும் என்று அவர் நினைத்தார். தந்தையின் தொடுதலில் பாசத்தின் வெப்பத்தை அவர் முழுமையாக அனுபவித்தார்.

நகரத்திற்கான பயணத்திற்காக வீட்டைவிட்டு வெளியேறியபோது, பாதைகள் யாருமே இல்லாமலிருந்தன. முன்னால் பெரியப்பா ஹரிராம் பேருந்து நிறுத்தத்திற்கு நடந்து செல்வதைப் பார்த்தார். தனக்கு விஷயங்களைப் புரியவைப்பதற்காகப் போகிறார்... சீக்கிரமாக பேருந்து நிறுத்தத்தை அடைவதற்காக பிரதான பாதையைவிட்டு, வயலைக் குறுக்காகக் கடந்து வேகமாக பெரியப்பா போய்க்கொண்டிருக்கிறார்.

தூரத்தில் பேருந்தின் ஹார்ன் சத்தத்தைக் கேட்டதும், சந்திரகாந்த்தும் நடையை வேகமாக்கினார். காலையில் அலுவலகத் திற்குச் செல்ல வேண்டுமல்லவா? அந்த இறுதிப்பேருந்தில் எப்படியும் ஏறியே ஆகவேண்டும்.