காரின் கதவை மேலும் சற்றுத் திறந்து வைத்தான்.
தாங்கமுடியாத அளவுக்கு மூச்சு அடைத்தது. காற்று பலமாக உள்ளே நுழைந்து, சற்று மோதி சத்தத்துடன் விளையாடியபோது ஒரு நிம்மதி உண்டானது.
எதிர்ப்பக்கத்திலிருந்த பெட்டிக்கடையை நோக்கிக் கூறினான்: ""ஒரு குளிர்ந்த சோடா...'' புகைவண்டி நிலையப் பகுதியிலிருக்கக்கூடிய ஆரவாரம் சற்று அடங்கியிருந்தது. எனினும், சிறிதுநேரம் புகைவண்டியின் சீட்டியடி சத்தம் கேட்டது. அப்போது சாத்துக்குட்டியின் வாடகைக் காரும் அருகில் நகர்ந்துவந்து நின்றது.
""நேற்று நிறைய பணம் கிடைச்சதே!'' உண்ணி இருக்கையில் சாய்ந்து படுத்தவாறு உரத்தகுரலில் கூறினான்: ""காத்து இருக்கறப்போ பிடிச்சுக்கோ.''
அப்போது சாத்துக்குட்டி தன் காரின் கதவை பலமாக அடைத்துவிட்டு, உண்ணியின் அருகில் வந்தான். உண்ணி பின்னோக்கின நகர்ந்து அமர்ந்து இடத்தை ஏற்படுத்தித் தந்தான். அவன் வரவழைத்த சிரிப்புடன் கூறினான்:
""அண்ணே... நீங்க நினைக்கிற மாதிரி எதுவுமில்ல.''
""போடா...'' உண்ணி முரட்டுத்தனமான குரலில் தொடர்ந்தான்: ""மந்திரவாதிக்கு உருக்கில் எழுதத் தேவையில்ல... இருக்கட்டும்... பொன்னா... பெண்ணா?''
சாத்துக்குட்டி வெட்கத்துடன் சற்று சிரித்தான். பிறகு கூறினான்.
""ரெண்டும்...''
""உன் காலம்டா... நடக்கட்டும்... நீ சரியா பயன்படுத்திக்கிட்டியே?''
""தந்ததை வாங்கிக்கிட்டேன்.''
""அப்படின்னா... உன்னை மிதிக்கணும்.'' உண்ணி கண்களை உருட்டியவாறு கூறினான்.
""நாம எல்லாரும் வாடகைக்கார்கள்டா... இறங்கிட்டா பிறகு... உறவு இல்லடா.''
பெட்டிக்கடையைச் சேர்ந்த சிறுவன் சோடாவை நீட்டினான். அதை வாங்கி இழுத்துப் பருகும்போது உண்ணி கேட்டான்: ""உனக்கு சோடா?''
புட்டியைத் திரும்பத் தந்துவிட்டு உண்ணி கேட்டான்: ""சூடா இருப்பவன் வேணுமா?''
""வேணாம்.''
""நல்லது... பட்டை சாராயத்தைத் தாங்கிக்க முடியல.''
""எப்படி தாங்கிக்க முடியும்? அண்ணே... நேத்து நீங்க எத்தனை அடிச்சீங்க? மருத்துவமனையில இருந்து வெளியேவந்து ஒருவாரம்தானே ஆகுது? அதை மறந்துடாதீங்க.''
முந்தைய நாள் நடைபெற்ற சம்பவங்கள் அனைத்தையும் உண்ணி நினைத்துப் பார்த்தான். மொய்தீன்தான் சிக்கவைத்தான். அவன் வந்து திரும்பத் திரும்ப கட்டாயப்படுத்தியபோது, அவனுடன் சேர்ந்து சென்றுவிட்டார். சாவு கிராக்கி! அவனுக்கு வேண்டு மென்றால், குடித்தால் போதாதா? மற்றவர்களை இப்படி வற்புறுத்தி... அது இருக்கட்டும்.
மொய்தீனுக்கு என்ன ஒரு வெறி! புட்டிகளின் அடிப்பகுதியைக் காணும் வரை, ஒரு வகையான பொறுமையற்ற தன்மை!
இந்த மொய்தீனின் வாப்பாவும் தாத்தாவும் எந்த அளவுக்கு பரிசுத்தமானவர்களாக இருந்தார்கள் என்பதை அப்போது நினைத்துப் பார்த்தான். ஊரில் அவர்களின்மீது அனைவருக்கும் மிகுந்த மரியாதை. ஊரில் மொய்தீனும் பரிசுத்தமானவன்தான்.
பாவக்குட்டி ஹாஜியின் மகன் இந்த நிலைக்கு ஆளாவான் என்பதை யாராவது நினைத்திருப்பார் களா?
இல்லாவிட்டாலும்... முன்கூட்டியே யாராலும் எதையாவது நினைக்கத்தான் முடியுமா?
""இன்னைக்கு சோறு சாப்பிடலையா?'' சாத்துக்குட்டி கேட்டான்.
""இல்ல.''
""அது ஏன்?''
""வேணாம்.''
""இது நல்லதுக்கானதில்ல தெரியுதா?''
""டேய்... அழுமூஞ்சி... பேசாம இரு'' என்று திட்டிவிட்டு, ஒரு நீளமான பீடியை எடுத்துப் புகைத்தவாறு இருக்கையில் சாய்ந்து படுத்தான்.
அப்போது மொய்தீன் கூறிய வார்த்தைகள் நினைவில் வந்தன. "வாப்பாவும் தாத்தாவும் இஸ்லாம் சம்பந்தப்பட்ட காரியங்களையும் ஈமான் சம்பந்தப்பட்ட காரியங்களையும் கறாரா செஞ்சவங்க. அவங்களுக்கு பயன் இருக்கு. சொர்க்கத்திற்குப் போனா, விரும்பக்கூடிய அனைத்தையும் குடிக்கலாம். விரும்பக்கூடிய அனைத் தையும் சாப்பிடலாம். நம்மளோட நிலைமை அப்படி இல்லியே! சாப்பிடக்கூடிய... குடிக்கக்கூடிய வெறி எல்லாத்தையும் இங்கேயே தீர்த்துடணும்.'
"மொய்தீன்... உண்மைதான். சாப்பிட்டு... குடி.... அது எல்லாத்தையும் செஞ்சு செஞ்சு... ஒருநாள் நீ செத்துடு.'
"சாகாதவங்க யாரு இருக்காங்க? எல்லா பரிசுத்தமானவங்களும் செத்துட்டாங்க!'
"யாருக்குத் தெரியும்?'
அப்போது ஏதோ ஒரு வண்டியின் இரைச்சல் சத்தம் கேட்டது.
""ப்ளூமவுண்டன் வந்திருச்சாடா?''
லோக்கல் என்றால், காத்திருந்து பயனில்லை. இருந்தால்கூட, பெரிய அளவில் எதுவும் கிடைக்காது.
ப்ளூமவுண்டன் வரும். இங்கேயே இருக்கவேண்டும். பிறகு.... சற்று மெரினாவுக்குச் சென்று பார்க்கவேண்டும்.
நேற்றைக்கு முந்தைய நாள் அவனும் மொய்தீனும் சேர்ந்து மெரீனாவிற்கு வண்டியைக் கொண்டுசென்று விட்டபோதுதான், அந்த நல்ல ஆதாயம் கிடைத்தது.
எது எப்படியோ.... ப்ளூமவுண்டன் வரட்டும். விசேஷமாக ஏதாவது கிடைக்கலாம். பேன்டும் கோட்டும் ஸ்கர்ட்டும் குதிகால் உயர்ந்த ஷூக்களும் ஆங்கிலமும் பவுடரின் வாசனையும்... இந்த விஷயங்களுடன் இந்த நகரம் முழுவதையும் அழுத்தி மிதித்துவிடலாம் என்பதைப்போல வெளியே வருவார்கள். பிறகு... கடலில் நீரை எறிந்ததைப்போல, அவர்களும் இதில் மூழ்கிப்போய்விடுவார்கள்.
""அய்யா...'' காருக்கு அருகிலிருந்து வழக்கமான பலவீன முனகல்.
காக்கி ட்ரவுசரின் பைக்குள் கையை நுழைத்து, பத்து பைசாவை எடுத்துக் கொடுத்தபோது, சற்று பார்த்தான்.
யார்?
இவள் யார்?
""என்ன ஊரும்மா?''
""காட்பாடி.'' அதைக் கூறிவிட்டு வெற்றிலைக் கறைபடிந்த புளியங்கொட்டையைப் போலிருந்த பற்களை வெளியே காட்டினாள்.
சிறிதுநேரம் வெறித்துப் பார்த்துவிட்டு, அங்கிருந்து போகும்படி உண்ணி கையால் சைசை செய்தான். அவள் அதன்படி நடக்கவும் செய்தாள். காட்பாடி!
காட்பாடிதான் வேலூருக்கான புகைவண்டி நிலையம்.
இப்போது அங்கு இறங்கினால் பேருந்து இருக்கிறது. ஆனால், முதன்முறையாக காட்பாடியில் இறங்கி, இரட்டை மாட்டுவண்டியில் பயணம் செய்த நாள் நினைவில் வந்தது.
"டேய்... பையா... என்ன ஊரு?'
"மலையாளங்க... யாரும் இல்லீங்க!'
"பிறகு ஏன் அங்கே போகணும்?'
"ஏதாவது வேலை கிடைச்சா?'
"வேலூர்ல என்ன வேலை கிடைக்கப் போகுது? மெட்ராஸுக்குப் போனா நல்ல வேலை கிடைக்கும்.'
எப்படி மெட்ராஸுக்குச் செல்வது என்று தெரியவில்லை. அமைதியாக குலுங்கியவாறு மாட்டுவண்டியில் கண்களைப் பதித்துக்கொண்டு அமர்ந்திருந்தான்.
"சரி... நான் அங்க கொண்டுபோய் விடுறேன். அப்புறம் உன் அதிர்ஷ்டம்...'
உண்மையிலேயே "அதிர்ஷ்டம்' என்ற ஒன்று இருக்கிறது என்றுதான் நினைக்க வேண்டியதிருக்கிறது. இல்லாவிட்டால்- வேலூரில் சென்று இறங்கியபோது, அப்படியெல்லாம் எதுவும் நடந்திருக்காதே!
நான்கு பக்கங்களிலும் மலைகள்... நடுவில் நகரம்... கொதித்துக் கொண்டிருக்கும் நீரைக் கொட்டிவைத்த ஒரு பெரிய கிண்ணத்தைப்போல தோன்றியது. அந்த கொதிக்கும் நீரிலிருக்கும் மீன்கள்தான் அனைவரும்.
உதடு வறண்டு போகிறது.
காலும் கையும் வறண்டு போகின்றன.
தோலும் வறண்டது.
நரம்புகளும் வறட்சியாகின்றன.
யாரும் திரும்பிப் பார்ப்பதில்லை. வண்டி ஓட்டு பவர்கள்... சுமை தூக்குபவர்கள்... கடலையைத் தின்றவாறு நிலவில் நடப்பதைப்போல நடந்து செல்லும் சிவப்பு, பச்சை நிறங்களில் புடவைகள் அணிந்த பெண்கள்... நிறைய துணியைத் தலையிலும், மிகவும் குறைவான துணியை இடுப்பிலும் சுற்றிய கிழவர்கள்...
அவர்களும் மெதுவாக நடந்து போய்க்கொண்டிருக்கிறார்கள்.
தனக்கு மட்டும்தான் இந்த அளவிற்கு வெப்பம் தோன்றுகிறதா.
களைப்படைந்தபோது ஒரு வீட்டின் நிழலில் ஏறிச் சாய்ந்தான். திடீரென்று எழுந்தான். கொதித்துக் கொண்டிருக்கும் பூமி!
முகத்தில் பெரிய வியர்வைத் துணிகளுடன் அங்கு நின்றான். எதுவுமே இல்லாத தந்தைக்கும் தாய்க்கும் பிள்ளைகள் பிறக்கக்கூடாது என்று அப்போது சிந்தித்தான். நான்காவது வகுப்பில் படிக்கும் போது தங்கமோதிரம் அணிந்துகொண்டு மனோகரன் வந்த கதையும் அப்போது நினைவில் வந்தது. மனோகரன்- சர்க்கிள் இன்ஸ்பெக்டரின் மகன். வக்கீலின் மகளின் மகன்.
அவர்களுக்கு நிறைய வயல்களும், நிலங்களும் இருக்கின்றன என்பதைக் கேள்விப் பட்டிருக்கிறான். மணிச்சத்தம் ஒலிக்கும் குதிரை வண்டியில்தான் மனோகரன் பள்ளிக்கூடத்திற்கு வருவான்.
அவனுடைய தங்கமோதிரத்தின்மீது ஒருமுறை தொட்டுப் பார்த்தபோது, கோபித்துக்கொண்டான்: "கழுதை! நீ ஏன் இதையெல்லாம் தொடுற?'
மனோகரன் என்றால் எல்லாருக்கும் பயம். அவன் நல்ல தந்தைக்கும் தாய்க்கும் பிறந்தவன். அப்படித்தான் பிறக்கவேண்டும். அவையெல்லாம் அப்போது நினைவில் வந்தன.
ஏதோ ஒரு வண்டியின் வருகையை சத்தமாக அறிவிக்கி றார்கள். காதுகளைத் தீட்டிக்கொண்டு கேட்டான். மீண்டும் அதேதான். ஜோலார்பேட்டை லோக்கல்...
வெப்பத்தைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. காக்கி ஆடையின் பொத்தான்களை அவிழ்த்தான். மார்புப் பக்கம் சற்று நீளமாக ஊதினான்... "அனைத்து வெப்பங்களும்... ஓடிடுங்க' என்பதைப்போல...
சாத்துக்குட்டி அருகில்வந்து கேட்டான்: ""அண்ணே... நீங்க சோறு சாப்பிடுறீங்களா?''
""டேய்... சைத்தானே! இப்போ சாப்பிடுறதா?'' என்று கூறிவிட்டு, வெளியே வந்து காரின் கதவை அடைந்தான்: ""இப்போ வர்றேன்.''
எதிர்பக்கத்திலிருந்த திருப்பத்தில் திரும்பினால் கடை இருக்கிறது. இரண்டு புட்டி பீரை மிகவும் மெதுவாகக் குடித்தபோது ஒரு சுகம்... கோடைக்காலத்தில் தினந்தோறும் பீர் பருகவேண்டுமென்று அப்போதுசிந்தித்தான். ஆனால், வாடகைக் காரால் அப்படியெல்லாம் மிகவும் சரியாக ஏதாவது செய்யமுடியுமா?
திரும்பவந்து காரில் அமர்ந்தபோது, மெல்லிய காற்று கிழக்கு திசையிலிருந்து வருவதைப்போல உணர்ந்தான்.
அப்போது வேலூரைப்பற்றி மீண்டும் நினைத்தான்.
களைப்படைத்த பிறகும் படுக்கமுடியாமல் அவ்வாறு நின்றுகொண்டிருந்த அவனுக்கு முன்னால், அந்தப்பெண்ணைக் கொண்டுவந்தது யார்?
ஈஸ்வரனாக இருக்கவேண்டும்.
ஈஸ்வரன்... அவன் எப்போதோ இறந்துவிட்டான்.
"மகனே... நீ மலையாளிதானே?'
"ஆமா.'
தெருவுல வெறுமனே பிச்சையெடுத்து சுத்திக் கிட்டிருக்கேல்ல?'
பதில் கூறவில்லை.
"அது எப்படி வேணும்னாலும் இருக்கட்டும்... என்கூட வா.'
"ஒரு வேலைதர முடியுமா?'
"ஓஹோ... அதுதான் விஷயமா? வா.... பார்க்கலாம்.'
அவனுடன் நடந்தபோது வேலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில்லை. நிழல் இருக்குமிடத்தில் அமரலாம் அல்லவா? சிறிது நீரும் பருகலாம்.
ஆனால், நடந்தது அதுவல்ல.
ஒரு வாரம் முடிந்ததும், என்ன ஒரு உற்சாகம் தோன்றியது! பணி பரவாயில்லை.
தாய் மலையாளத்தில் பேசுகிறாள். மகளும் தந்தையும் தமிழ். தந்தையின் தாய் தெலுங்கு.
முதலில் பதைபதைப்பு உண்டானது. பிறகு... என்ன கூறினாலும், எல்லாருக்கும் புரியும் என்பதையும் தெரிந்துகொண்டான்.
தந்தையின் தாய் இறந்துவிட்டாள். அப்போது தந்தை நெஞ்சிலடித்துக்கொண்டு அழுதது... தெலுங்கில்.
தெலுங்கு நன்றாகப் பேசத்தெரியாத காரணமாக இருக்கவேண்டும். அவன் அப்போது அழமட்டுமே செய்தான் என்பதை உண்ணி நினைத்துப் பார்த்தான்.
எல்லாரும் எல்லா விஷயங்களுக்கும் அவனை அழைத்தார்கள்.
தாய் கூறுவாள்: "உண்ணி... நீதான் கடைக்குப் போகணும்.' தந்தை வேறொன்றைக் கூறவேண்டுமென்று நினைப்பான்.
"டேய்... சோம்பேறி. நீ வரி அலுவலகத்துக்குப் போய் நம்ம மச்சினனைக் கொஞ்சம் பார்த்துட்டு வரணும்.'
"சரி'...
மகள் எந்த கட்டளையும் பிறப்பிப்பதில்லை. ஆனால், கருத்து கூறினாள்.
"நீ பெரிய ஆளு! நாட்டுக்கோட்டை செட்டியாச்சே!'
அவளுடைய உருண்ட கன்னங்களில் விழுந்துகிடந்த சுருண்ட தலைமுடியை மேல்நோக்கி எடுத்து ஒதுக்கிவிட்டவாறு கூறினாள்.
"கண்ணம்மா... நான் இப்படி ஆயிட்டேன்.'
"சும்மா சொன்னேன்... வருத்தப்படாதே.'
அந்த நல்ல சம்பவங்கள் ஒவ்வொன்றையும் நினைத்துப் பார்த்தபோது, அவையனைத்தும் கடந்துசென்றவை என்று தோன்றவில்லை. நடந்து கொண்டிருக்கின்றன.
அவள் பெரியவளாகிக் கொண்டிருக்கிறாள்.
தன்னுடன் சேர்த்து வந்துவிட விரும்புவதாக அவள் கூறியபோது, அதிர்ச்சியடைந்து விட்டான்.
"இப்படியெல்லாம் பேசாதே.'
"எதுக்குப் பேசறேன்! நான் வந்து உன்னை ஆளாக்குவேன்.'
விலகி... விலகி... திரிந்தேன். ஆனால், கண்ணம்மா அந்த அளவிற்கு என்னுடன் நெருங்கினாள்.
இளம் வயது.... எதைப் பற்றியும் தெரியாது. பெண்ணைப் பற்றியும்...
நள்ளிரவில் திரும்ப வந்தபோது, இருட்டிற்குள் வந்தாள்.
"கண்ணம்மா... எங்கிட்ட ஒண்ணுமே கிடையாதே!'
"என் உலகமே நீதான்.'
இனிமையான வார்த்தைகள்... இந்த இனிமை வற்றிப்போகுமென்று நினைக்கவில்லை.
அவளுடைய தாய் வாய்விட்டு அழுததாகக் கேள்விப்பட்டேன். தந்தை கூறினார்: "அந்தப் பொண்ணு செத்துப் போயிட்டா... இனி அந்தக் கதையை விட்டுடு.'
இதை யாரோ கூறி அறிந்துகொண்டபோது, கண்ணம்மாவுக்கு தைரியம் மேலும் அதிகமானது.
இங்கு வந்து மூன்று வருடங்களும் கொண்டாட்டம் தான்... நிறைய நகைகள் இருந்தன. பெரும்பாலானவற்றை விற்றாகிவிட்டது. ஒரு வேலைக்குச் செல்வதற்கும்கூட கண்ணம்மா அனுமதிக்கவில்லை.
"அவள் ஒரு "நெருப்புக்குச்சி'யேதான். தொட்டால், நெருப்பு பற்றியது. பிறகு... பற்றியெரிதல்தான்!
இரண்டாவது வருடத்தில் ஒரு குழந்தை பிறந்த போது, வேலைக்குப் போகாமலிருக்க முடியாத நிலை உண்டானது.
அதிர்ஷ்டம்... அந்தச் சமயத்தில் "ட்ரைவிங்' கற்றுக்கொண்டான்.
பத்தொன்பது வருடம் எஸ்டேட் துரையின் பங்களாவில் ஓட்டுநர்... அந்த பத்தொன்பது வருடங் களுக்குள் எவற்றையெல்லாம் பார்த்தாகிவிட்டது? எவற்றையெல்லாம் அனுபவித்தாகிவிட்டது?
ஆனால், அப்போதும் துள்ளி விளையாடும் இளம்மானைப் போலிருந்த கண்ணம்மாவின் முகத்தைப் பார்க்கும்போது, எல்லாவற்றையும் மறந்துவிடுவான்.
அப்போதுதான் அந்த கழுதையுடன் அறிமுகமானது.
அவன் இப்படிப்பட்ட ஒரு செயலைச் செய்வான் என்பதை யார் எதிர்பார்த்தார்கள்? தெரிந்திருந்தால்... "துடைப்பக்கட்டை'யை எடுத்து அப்போதே நெஞ்சில் அடித்திருப்பான்.
அவனை ஏன் அடிக்கவேண்டும்?
அவள் ஏன் அவனுடன் சேர்ந்து ஓடிப்போனாள்? காலையில் எழுந்தபோது அவள் இல்லை.
கண்ணம்மா எதற்கு எல்லாவற்றையும் உதறிவிட்டு, தன்னுடன் ஓடிவந்தாள்? இப்போது நான்கு வயதுள்ள குழந்தையைக்கூட விட்டுவிட்டு, அவனுடன் சேர்ந்து ஓடிப்போனாள்?
போகட்டும்... எல்லாரும் போகட்டும்... இல்லா விட்டாலும்... யாராலும் எங்கும் உறுதியாக நிற்க முடியுமா? எல்லாருமே வாடகைக் கார்கள்...
""அண்ணே...!'
சாத்துக்குட்டி காருக்கு அருகில்வந்து அழைத்த போது, தலையை உயர்த்திப் பார்த்தான்.
""ம்...''
""ஒரு சொந்த விஷயம்...''
""சொல்லு.''
""அவ வருவா.''
""யாரு?''
""கோமளம்.''
""பிறகு?''
""நாங்க ஒரே வீட்ல சேர்ந்து வசிச்சா என்னன்னு நினைக்கிறோம்.''
""எவ்வளவு நாள்?''
""நிரந்தரமா... அவளுக்கு நானுன்னா உயிர்.''
அவன் கதவைத் திறந்து மெதுவாக வெளியே வந்தான். சாத்துக்குட்டியின் முகத்தையே வெறித்துப் பார்த்தான். பிறகு கன்னத்தில் ஓங்கி ஒரு அடி!
""அண்ணே...!''
""கழுதை!''
சாத்துக்குட்டிக்கு எதுவுமே புரியவில்லை. அவன் கன்னத்தைத் தடவியவாறு நின்றுகொண்டிருந்தான்.
""ஒரு நாள் தங்கிக்க... ஒரு வாரம் தங்கிக்க... "நிரந்தரமா' என்ற கதையைப் பத்தி வாய் திறக்காதே. ஒரு பெண்ணும் நிரந்தரமாக நிக்கமாட்டா...''
அவ்வளவையும் கூறியதும், சாத்துக்குட்டியின் குழப்பம் தீர்ந்தது.
அப்போது மூன்று நான்கு தெருவிலிருக்கும் சிறுவர்கள் அருகில்வந்து தங்களுக்கிடையே கேட்டுக் கொண்டார்கள்: ""என்ன சமாச்சாரம்?''
""உன் அப்பாவோட சமாச்சாரம்... போடா...'' உண்ணி உரத்த குரலில் கூறினான்.
அவர்கள் வால்களை இழந்து ஓடினார்கள். சாத்துக்குட்டியின் கையை உண்ணி இறுகப்பற்றினான். "பார்' கடைக்குள் நுழைந்து குடித்தார்கள்.
திரும்பத் திரும்ப குடித்தார்கள்.
""போதும் அண்ணே.''
""என் கையில் காசு இருக்குடா... வாடகைக் கார் ஓட்டிய காசு.''
அவன் மெதுவாக ரசியம் கூறுவதைப்போல கூறினான்.
"என் மகள் எங்கே? பதினெட்டு வயசுவரை தனிமனுஷனா வளர்த்த அம்புஜம் எங்கே?''
""அண்ணே... அதை மறந்துடுங்க.''
""எப்படி மறக்கறது? அவதானே எனக்கு இந்த வண்டியைத் தந்தா? நான் அவளை விட்டுக்கொடுத்தேன். எனக்கு இந்த வண்டி கிடைச்சது. வாடகைக் கார்கள்!''
காசைக் கொடுத்துவிட்டு, இருவரும் வெளியேறிச் செல்லும்போது, உண்ணி சாத்துக்குட்டியின் காதில் மெதுவான குரலில் கூறினான்.
""உன்னை அடிச்சதுக்கான காரணத்தைப் புரிஞ்சிக் கிட்டியா? ஒருநாள் தங்கிக்க. ஒன்பது நாள் தங்கிக்க... நிரந்தரமாக வாடகைக் காரை வச்சிருக்க முடியாது.''
இவ்வளவையும் கூறிவிட்டு, சாத்துக்குட்டியின் கழுத்தில் கையை வைத்து, அவனுடைய கன்னத்தைத் தடவிவிட்டுக் கேட்டார்: ""தம்பி... உனக்கு வலிச்சிடுச்சா?''
""இல்ல.''
பிறகு இருவரும் சிறிதுநேரம் நின்றவாறு அழுதார்கள்.
தொடர்ந்து காரை நோக்கி நடக்கும்போது, சாத்துக்குட்டி கேட்டான்:
""இப்போ அம்புஜம் எங்கே இருக்கா?''
""யாருக்குத் தெரியும்?'' என்ற அர்த்தத்துடன் உண்ணி கையை விரித்தார்.
""நான் வாடகைக் கார் ஓட்டுறேன். பலரும் ஏறியிருக்காங்க. ஓட்டினேன். கார் நின்னது. இறங்கி நடந்தாங்க. நான் வாடகைக்கார் ஓட்டிக்கிட்டிருக்கேன்.''
கிழக்கு திசையிலிருந்து பலமாக வீசிக்கொண்டிருந்த காற்றுபட்டதும், சாத்துக்குட்டிக்கு ஒரு உற்சாகம்... அவன் கூறினான். ""அண்ணே... உங்களுக்குத் தெரியுமா? நான் அம்புஜத்தை உயிருக்கு உயிரா காதலிச்சேன்.''
""நல்லது...''
""அவளோட படிப்பு முடியட்டும்னு நினைச்சேன்.''
""நல்லது...''
""பிறகு...''
""இனி கோமளத்தைக் காதலி... அவள் போறவரை...''
""அண்ணே... இது என்ன பேச்சு?''
""நாம ஒரே இடத்தில் நிக்கிறவங்க இல்ல.
உன்னோட... என்னோட அப்பாங்க எதையும் சம்பாதிச்சு வைக்கல. வீட்டைவிட்டு வந்தோம்... ஊரைவிட்டு வந்தோம்... பிறகும்...''
உண்ணி காரின் கதவைத் திறந்து உள்ளே நகர்ந்து முகத்தை இறுகவைத்துக்கொண்டு அமைதியாக இருந்தான். சாத்துக்குட்டி காருக்குள் வலிய நுழைவதை அவன் பார்த்தான். உள்ளே ஒரு சிரிப்பு... அவன் ஸ்டியரிங்கின்மீது தாளம் போட்டவாறு முணுமுணுத்தான்.
"கோமளமென்ற ஒரு பெண்...
மோகம் உண்டாக்கும் பெண்...'
அப்போது அறிவிப்பு காதில் விழுந்தது.
"ப்ளூமவுண்டன் எக்ஸ்பிரஸ் நான்காவது ப்ளாட்ஃபாரத்திற்கு வந்துகொண்டிருக்கிறது.'
எத்தனை முறை வந்ததுடா! பையா... வா... வா... ஒருகை பார்ப்போம்.
எஞ்ஜின் மெதுவாக ஊர்ந்து தண்டவாளத்தில் உரசும் சத்தம்... முதலில் அதைக் கேட்டபோது, பல் கூசியது.
இப்போது அதைக் கேட்பதே இல்லை. இனி. இப்போது... இறங்கிவரப் போகும் இறக்கம் குறைவான பாவாடை... தோளில் தொங்கிக்கொண்டிருக்கும் கேமரா... கூலிங் க்ளாஸ்... குதிகால் உயர்ந்த ஷூ... பவுடரின் வாசனை... டக்... டக்... டக்...
அப்படியொரு பிணம்... சில நேரங்களில் யாருடைய கையிலாவது தொங்கிக்கொண்டிருக்கும்.
"டாக்ஸி... ஹோட்டல் ஓஷியானோ... ப்ளீஸ்...'
ஆனால், காருக்கு முன்னால் வந்துநின்றது- புடவை அணிந்த, பொட்டு வைத்திருக்கும் ஒரு தனி கிராமத்துப் பெண்... அவளுடன் ஒரு இளைஞனும்...
அம்புஜம்!
அவன் வாடகைக் காருக்குள் உரசியவாறு தாழ்ந்து படுத்திருந்தான்.
"டாக்ஸி!'
அழைத்தது கேட்கவில்லை.
திரும்பத் திரும்ப அழைத்ததும், தலையை உயர்த்திப் பார்த்தான். டாக்ஸிக்கு அழைத்தால், ஓடாமல் இருக்கமுடியாது.
உண்ணி அந்த இளம்பெண்ணை மீண்டும் வெறித்துப் பார்த்துவிட்டு கேட்டான்:
""நீ எப்போ வந்தே... அம்புஜம்?''
""யாரு?''
""தெரியலைன்னு நடிக்கவேண்டாம். பொறுப்பு...'' நீண்ட பெருமூச்சை விட்டவாறு கூறினான்.
""எங்க போகணும்? உள்ளே ஏறு அம்புஜம்.''
""என்னமோ பைத்தியக்காரன்மாதிரி பேசுறாரே!''
அவளும் இளைஞனும் சேர்ந்து அப்பால் நகர்ந்தவுடன், உண்ணி அவர்களையே வெறித்துப் பார்த்துவிட்டுக் கட்டான். ""நீ அம்புஜமா கலையா? அம்புஜமாகப் போறியா? பாவம்...''
""டாக்ஸி...'' -அழைப்பு கேட்டதும், பார்த்தான். கத்தரிக்காய்களைப் போல பல அளவுகளிலிருந்த நான்கு பிள்ளைகள்... தடிமனான தந்தை... அதைவிட பருமனான தாய்... இரண்டு பெட்டிகளும், ஒரு பேக்கும்...
உண்ணி சற்று பார்த்தான். அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டான். செறுப்பிளசேரியிலிருந்தா? ஸ்ரீகிருஷ்ணபுரத்திலிருந்தா? சேர்த்தலயிலிருந்து...? பாம்பனம்கோட்டிலிருந்து...? காஞ்ஞம்காட்டிலிருந்து...?
""டாக்ஸி...''
உண்ணி கையால் சைகை செய்தான்... ""இல்ல...''
அவர்கள் போய்விட்டார்கள்.
கிழக்கு திசைக்காற்று வீசுகிறது. நரம்புகளில் சந்தோஷம் கிடந்து அலையடிக்கிறது.
சந்தோஷமா?
""உண்ணி அண்ணே... புறப்படுங்க. நல்ல வருமானம் இருக்கு!'' மொய்தீன் கதவைத் திறந்து ஏறியமர்ந்தான். சிறிது நேரம் மொய்தீனைப் பார்த்துவிட்டு, கேட்டான்:
""எங்கே?'' ""மவுண்ட்ரோட்டுக்கு...''
காரை "ஸ்டார்ட்' செய்தபோது, "கொச்சின் எக்ஸ்பிரஸ் சில நிமிடங்களில் மூன்றாவது ப்ளாட்ஃபாரத்திற்கு வந்துசேரும்' என்ற அறிவிப்பு கேட்டது.
வரட்டும்... அதிலும் இருப்பார்கள் உண்ணிகள்... கண்ணம்மாக்களைப் பார்ப்பார்கள்... பிறகு...? பிறகு...? அம்புஜங் கள் உண்டாவார்கள்... தந்தைகளுக்கு வாடகைக் கார்களைக் கொடுத்துவிட்டு, அவர்கள் போய்விடுவார்கள்.
அப்போது அம்புஜத்தின் மாநிறத்திலிருக்கும் மெலிந்த கழுத்து நினைவில் வந்தது. இறுதியில் அங்கு கையை வைத்தது நெறிப்பதற்கு... ஆனால், தடவியவாறு கூறினான்: "மகளே... போய்க்கொள்.'
இரவு முழுவதும் பிரகாசத்தை அணிந்து நடனமாடக்கூடிய பேட்டரியின் நைலான் விளம்பரத்தை அவன் பார்த்தான். இப்போது அது வெளிறிப் போய், பேயைப்போல நின்றுகொண்டிருக்கிறது.
கார் இடதுபக்கமாகத் திரும்பியது.