(தமிழக அரசியலிலும் இலக்கியம் உள்ளிட்ட கலைத்துறையிலும் தவிர்க்க முடியாத தனிப்பெரும் சக்தியாகத் திகழ்ந்தவர் கலைஞர். 80 ஆண்டு பொதுவாழ்வுக்குச் சொந்தக்காரரான கலைஞர், ஐந்து முறை தமிழகத்தை ஆண்ட பெருமைக்குரியவராகவும் திகழ்ந்தார். கதை, கவிதை, கட்டுரை, புதினம், சொற்பொழிவு, திரைக்கதை, வசனம், பாடல் என இலக்கியத்தின் சகல தளத்திலும் தனது முற்போக்கு முத்திரையைப் பதித்தவர் அவர். மறைந்தும் மறையாமல் வாழும் கலைஞரின் 97 ஆவது பிறந்தநாளை அவர் கட்சியினர் கொரோனா நிவாரண உதவிக்கான திருநாளாகக் கொண்டாடுகிறார்கள். தமிழகமே கலைஞரை நெகிழ்வோடு நினைவில் ஏந்தும் தருணத்தில், அவரைப் பற்றி இலங்கை எழுத்தாளர் ஷோபாசக்தி எழுதிய கட்டுரை ஒன்றை இங்கே படைக்கிறோம்)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kalaingar_23.jpg)
சில ஆண்டுகளிற்கு முன்பு வெளியான எனது 'கண்டிவீரன்' சிறுகதைத் தொகுப்பை நான் கலைஞர் மு.கருணாநிதிக்கு சமர்ப்பித்திருந்தேன். அந்தச் சமர்ப்பணக் குறிப்பில் அவரை திரைப்பட வசனங்கள் ஊடாக எனக் குத் தமிழைக் கற்றுக்கொடுத்த ஆசான் எனப் பதிவு செய்திருந்தேன்.
தமிழக அரசியலிலும் தமிழ் சினிமாவிலும் கலைஞரின் வீறு கொண்ட எழுச்சி 1940-களின் இறுதியில் ஆரம்பிக்கிறது. அதே வேளையிலேயே தி.மு.க.வின் தாக்கமும் கலைஞரின் திரைப்படங்களும் அவரது எழுத்துகளும் கடல் கடந்து இலங்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இலங்கைத் தமிழர்களின் வீடுகளிலே அறிஞர் அண்ணாவின் படமும் கலைஞரின் படமும் தொங்கத் தொடங்கின.
இலங்கையில் தமிழ்த் தேசியமும் தமிழருக்கு சுயாட்சிக் கோரிக்கையும் தனிநாட்டுக் கோரிக்கையும் முளைவிடத் தொடங்கிய காலமும் இதுதான்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kalaingar1_10.jpg)
இலங்கைத் தமிழ்த் தேசிய அரசியல் கட்சித் தலைவர்களும் அவர்களின் உணர்வுமிக்க தீவிரத் தொண்டர்களும் தி.மு.கவைப் பின்பற்றியே தங்களது அரசியலை வடிவமைத்துக் கொண்டார்கள்.
தி.மு.கவின் தனித் தமிழ்நாடு கோரிக்கையும் அதன் பின்னான முழுமையான மாநில சுயாட்சிக் கோரிக்கையும் அந்தக் கோரிக்கைகளை முன்னெடுக்க அவர்கள் முன்னெடுத்த மொழிப் பற்று, இனவுணர்வு, பண்டையகால தமிழ்நில அரசர்களின் காலத்தைப் பொற்காலமாகச் சித்திரிப்பது, மேடைகளில் முழங்கும் அடுக்குத் தமிழ், தீப்பொறியான பத்திரிகை எழுத்துகள் எல்லாவற்றையும் இலங்கைத் தமிழ்த் தேசியவாதிகள் அப்போது தி.மு.க.வை பின்பற்றியே அமைத்துக்கொண்டார்கள்.
பிற்காலத்தில் அவர்களது தேர்தல் சின்னமாக தி.மு.கவின் உதயசூரியனே அமைந்து போயிற்று.
அதேவேளையில் தி.மு.க.வின் சாதி மறுப்பு, கடவுள் மறுப்பு, சமூகநீதி, சுயமரியாதைத் திருமணம் போன்றவற்றையெல்லாம் மிகக் கவனமாக இலங்கைத் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் தவிர்த்துக்கொண்டார்கள்.
ஏனெனில் அன்றிலிருந்து இன்று வரை இலங்கைத் தமிழ் அரசியல் கட்சி களின் அதிகாரம் ஆதிக்க சாதியினரான வெள்ளாளர்களிடமே இருந்து வருகிறது.
தங்களது அரசியல் வளர்ச்சிக்குத் தேவையான தமிழ்த் தேசியத்தை மட்டுமே அவர்கள் தி.மு.க.விடமிருந்து எடுத்துக்கொண்டார்கள்.
அன்னப்பறவை தண்ணீரிலிருந்து பாலைப் பிரித்து எடுக்குமாம். இவர்கள் பாலிலிருந்து தண்ணீரை மட்டுமே பிரித்து எடுத்துக்கொண்டார்கள்.
நான் மின்சாரமோ திரையரங்கோ பத்திரிகைகளோ இல்லாத ஒரு சிறு கிராமத்தில் சிறுவனாக வளர்ந்த எழுபதுகளில் கிராமத்து கோயில் திருவிழாக்களிலோ அல்லது திருமண நிகழ்ச்சிகளிலோ கிராமத்தின் உயர்ந்த பனைகளில் லவுட் ஸ்பீக்கரைக் கட்டி கலைஞரின் திரைப்பட வசனங்களை ஒலிக்கவிடுவார்கள்.
பராசக்தி, மனோகரா, பூம்புகார் என எத்தனையோ படங்கள். என் கிராமத்தின் பனைகளிலிருந்து ஒலிக்கும் அந்த வசனங்களில் சாதி மறுப்பும் கடவுள் மறுப்பும் பாட்டாளி வர்க்கச் சிந்தனையும் பெண் உரிமைக்குரலும் சிவாஜி கணேசனதும் எஸ்.எஸ்.ராஜேந்திரனதும் கண்ணம்பாவினதும் விஜயகுமாரியினதும் குரல்களிலே வரும்.
கலைஞரின் அரசியல் எழுச்சி உரைகள் தேர்தல் சமயங்களில் சற்றே மாற்றிப் பிரதிபண்ணி உள்ளுர் இளைஞர்களால் பேசப்படும். கலைஞரின் திரைப்பட வசனங்கள் கிராமத்து நாடகங்களில் அப்படியே நடிக்கப்படும். கலைஞரின் குரலை வாங்கிப் பேசிய பல இளைஞர்களில் நானுமொருவன். எந்தவொரு முற்போக்கு அரசியல் இயக்கமோ அரசியல் பத்திரிகையோ கிடையாத என் கிராமத்தில் கலைஞரின் வசனங்கள் மூலமே நான் இலக்கியத் தமிழையும் சமூகநீதி கோரிய குரலையும் சாதி எதிர்ப்பையும் நாத்தீகத்தையும் முதன் முதலில் கற்றுக்கொண்டேன்.
அந்தப் பெரும் நன்றிக் கடனே என் நூலொன்றைக் கலைஞருக்கு நான் சமர்ப்பிக்கக் காரணாமயிருந்தது. இதொன்றைத் தவிர நான் ஒருபோதும் எனது நூலொன்றை உயிருடன் இருந்த ஒருவருக்குச் சமர்ப்பித்ததில்லை.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kalaingar2_2.jpg)
இலங்கையில் தமிழர்கள் மீதான முதலாவது இன வன்முறை 1956-ல் ஆரம்பித்தது. இதன் பின் எத்தனையோ இன வன்முறைகள். அத்தனை வன்முறைகளையும் எதிர்த்து இந்தியாவிலிருந்து ஒலிக்கும் முதற் குரல் கலைஞருடையதாக இருந்தது.
இலங்கைத் தமிழ் மக்களுக்கு சுயாட்சியும் கவுரவமான அரசியல் தீர்வும் சனநாயக ஆட்சிமுறையும் கிடைக்க வேண்டும் என இறுதிவரை மனப்பூர்வமாக விரும்பிய தலைவர் கலைஞர்.
கலைஞர் வெறும் அறிக்கைளிலும் மேடைகளிலும் மட்டும் ஈழத் தமிழர்களிற்கு ஆதரவாகச் செயற்பட்டவர் அல்ல. அவரும் அவரது கட்சியினரும் ஈழத் தமிழர்களிற்கு ஆதரவாக எண்ணற்ற போராட்டங்களையும் மாநாடுகளையும் நடத்தியவர்கள்.
ஈழப் போராளிகளிற்கு தமிழகத்தில் தமது வீடுகளிலும் சட்டமன்ற விடுதிகளிலும் அடைக்கலம் கொடுத்தவர்கள். பல்வேறு இக்கட்டுகளிலிருந்து புலிகளைக் காப்பாற்றியவர்கள்.
தி.மு.க.வின் முக்கிய தலைவரான சுப்புலஷ்மி ஜெகதீசனும் மற்றும் பலரும் இதற்காக நீண்டகாலம் சிறைவாசத்தையும் அனுபவித்திருக்கிறார்கள்.
கலைஞர் ஒருபோதும் சகோதரப் படுகொலைகளை ஆதரித்தவரல்ல. ராஜீவ் காந்தி கொலையை நியாயப்படுத்திப் பேசியவரல்ல.
ஆனால் புலிகள் சென்னையில் பத்மநாபாவையும் தோழர்களையும் கொலை செய்ததைத் தொடர்ந்து கலைஞரின் ஆட்சி கலைக்கப்பட்டது.
ராஜீவ் காந்திப் படுகொலையைத் தொடர்ந்து தி.மு.க. குறி வைத்துத்தாக்கப்பட்டது. கட்சிக்கு பலத்த பின்னடைவு ஏற்பட்டது. அப்போது நடந்த தேர்தலில் வரலாற்றில் இல்லாதவாறு தி.மு.க. படுதோல்வியைச் சந்தித்தது.
இலங்கையின் முக்கிய அரசியல் தலைவர்களாக விளங்கிய செல்வநாயகம், அமிர்தலிங்கம் போன்ற எல்லோருடனும் கலைஞருக்கு எப்போதுமே நல்லுறவு இருந்தது. பிரபாகரன் ஒரு முறை கலைஞருக்கு உதவி கோரி எழுதிய கடிதத்தில் எங்களின் நம்பிக்கை நட்சத்திரம் நீங்கள் என எழுதியிருந்தார்.
பிரபாகரனின் 23வது வயதில் மெரினா கடற்கரையில் கலைஞருடன் முதற் சந்திப்பு நிகழ்ந்தது. கலைஞர் அனைத்து ,ஈழப் போராளி இயக்கத் தலைவர்களுடனும் தொடர்ச்சியான உறவையும் உரையாடலையும் வைத்திருந்தார்.
எம்.ஜி.ஆர் போல வெறுமனே புலிகளிற்கு மட்டுமான நட்புச் சக்தியாகவோ ஈழப் பிரச்சினை குறித்துக் கிஞ்சிற்றும் அறிவில்லாதவராகவோ கலைஞர் இருக்கவில்லை. அவர் ஈழப் பிரச்சினையின் அடிப்படை குறித்துத் தெளிவாகப் புரிந்திருந்தார். அவர் வெறுமனே குருட்டுத்தனமாகப் புலிகளின் புகழைப் பாடுபவராக இருந்ததில்லை.
புலிகளைக் கண்டிக்க வேண்டிய நேரத்தில் கண்டிக்கச் செய்தார். எதிர்க்க வேண்டிய நேரத்தில் எதிர்த்தார். ஆனால் அந்த எதிர்ப்பு ஒருபோதும் வெறுப்பாக மாறியதில்லை.
புலிகளின் அரசியல்துறை தலைவர் சு.ப. தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டபோது கலைஞர் இரங்கல் கவிதை எழுதினார். அப்போது தன்னுடைய திரைப் படங்களில் ஈழத்துக்கு ஆதரவான கூறுகளைக் கலைஞர் பொதித்துவைத்து எழுதினார். தமிழகத்தின் கட்டப்பொம்மனுக்கு இணையாக ஈழத்தில் பேசப்படும் பண்டாரவன்னியனை வைத்து பாயும்புலி பண்டாரவன்னியன் எனக் காவியம் எழுதினார்.
கலைஞர் 1985-ல் உருவாக்கிய தமிழீழ ஆதரவாளர் அமைப்பு (டெசோ) ஈழத்தமிழர்களிற்காக பல்வேறு போராடடங்களைத் தமிழகத்தில் நடத்தியது.
ஆன்டன் பாலசிங்கம் உட்பட மூன்று போராளி இயக்கத் தலைவர்களை இந்தியாவிலிருந்து நாடு கடத்த மத்திய அரசு முடிவெடுத்தபோது கலைஞர் அதை உறுதியாக எதிர்த்துநின்று டெசோ அமைப்பின் மூலம் போராடினார். பிரமருக்குக் கறுப்புக்கொடி காட்டுவேன் என்றார். மத்திய அரசு உத்தரவை வாபஸ் வாங்கியது.
1986 மேயில் மதுரையில் டெசோ அமைப்பின் சார்ப்பில் மாபெரும் இலங்கைத் தமிழர் ஆதரவு மாநாட்டை நடத்தினார்.
வாஜ்பாய்,என்.டி.ராமராவ் என அனைத்திந்தியத் தலைவர்கள் கலந்துகொண்ட மாநாடு அது. இம்மாநாட்டில் இயற்றப்பட்ட தீர்மானங்கள்:
1)இலங்கைத் தமிழர்களுக்கு நிலையான உரிமையும் நிரந்தரப் பாதுகாப்பும் கிடைக்கும் வரை போராடுவது,
2) போராளிகளுக்கு அடைக்கலம் தரும் கடமையிலிருந்து தவறாமல் இருப்பது,
3) தமிழினத்தின் பாதுகாப்புக்காக எந்தவித தியாகத்துக்கும் தயாராக இருப்பது,
4) இந்தக் கடமைகளைச் செய்யும்போது மத்திய-மாநில அரசுகளின் அடக்குமுறைகளுக்கு ஆளாக நேர்ந்தாலும் அவற்றை இன்முகத்துடன் ஏற்பது, என்பவையாக இருந்தன.
இலங்கைக்கு 1987 -ல் சென்ற இந்திய அமைதிப் படையினர் பொதுமக்கள் மீது நிகழ்த்திய கொலைகளையும் பாலியல் வல்லுறவுகளையும் பொதுமக்களின் குடியிருப்புகள் மீதான விமானத் தாக்குதல்களையும் கலைஞர் உடனுக்குடன் கண்டித்தவாறேயிருந்தார்.
இதன் உச்சக்கட்டமாக 1990 மார்ச் இந்திய அமைதிப் படை நாடு திரும்பியபோது முதலமைச்சர் என்கிற ரீதியில் அதை வரவேற்ற வேண்டிய கடமை கலைஞருக்கு இருந்தது. ஆனால் கலைஞர் அந்தக் கடமையை மறுத்தார்.
அப்போது கலைஞர் மீது வைக்கப்பட்ட விமர்ச னம் 'தேசத்துரோகி' என்பதற்கு ஒப்பாக இருந்தது.
அதற்கெல்லாம் கலங்காமல் தன் முடிவில் உறுதியாக இருந்தார் கலைஞர்.
இந்திய அமைதிப்படையை வரவேற்க செல்லாத முதல்வர் கலைஞர் இரகசியமாக ஆன்டன் பாலசிங்கத்தைச் சென்னைக்கு வரவேற்றார். அவரோடும் வட -கிழக்கு மகாணசபை முதல்வர் வரதராஜப் பெருமாளோடும் பேசி தமிழ்ப் போராளி களிடையே ஒரு உடன்பாட்டைக் கொண்டுவர முயற்சித்தார். அது நடக்கவில்லை.
இதன் பின்பு நடந்தது ராஜீவ் கொலை. இதற்குப் பின்பு இந்திய அரசு மட்டுமல்ல இந்திய மக்களும் ஈழப் போராளிகளை வேறு மாதிரிப் பார்க்கத் தொடங்கினார்கள். புலிகளை அழித்துவிடுவது என்கிற முடிவில் இந்தியா மட்டுமல்ல பல்வேறு சர்வதேச நாடுகளும் உறுதியாக இருந்தன.
அமெரிக்காவில் நடைபெற்ற இரட்டைக் கோபுரத் தாக்குதலைத் தொடர்ந்து புலிகள் சர்வதேச அளவில் நெருக்கப்பட்டனர்.
கிட்டத்தட்ட 30 நாடுகளில் புலிகளுக்கு தடைவிதிக்கப் பட்டது. வெறுமனே ஒரு மாநிலக் கட்சியின் தலைவரான கலைஞரின் கைகளை மீறிச் சம்பவங்கள் நடந்தன.
முள்ளிவாய்க்காலில் இறுதிப் போர் நடந்ததுவரை கலைஞர் இந்த யுத்தத்தை நிறுத்த தன்னால் முடிந்தளவு முயற்சித்தார். தி.மு.க. முக்கியஸ்தர்கள் சிலரோடு புலிகள் கடைசிவரை தொடர்பை வைத்திருந்தனர். கலைஞர் மெரினா கடற்கரையில் சில மணிநேரங்கள் நடத்திய யுத்த நிறுத்தம் கோரிய உண்ணாவிரதம் கேலியானது எனச் சிலர் சொல்வதை நான் ஏற்பதாக இல்லை.
அவர் உண்ணாவிரமிருந்தபோது இலங்கை அரசு கனரக ஆயுதத் தாக்குதல்களையும் விமானத் தாக்குதல்களையும் நிறுத்துவதாக உறுதியளித்தது.
அந்த உறுதியளிப்பின் நகல் பிரணாப் முகர்ஜி மூலம் கலைஞரடம் கையளிக்கப்பட்ட பின்பே கலைஞர் உண்ணாவிரத்தை முடித்துக்கொண்டார்.
கலைஞர் தமிழ்த் தேசியவாத முகம்கொண்ட பிற தமிழகத் தலைவர்களைப் போல புலிகளை விமர்சனமின்றி வழிபட்டவரல்ல. தீவிர புலி விசுவாசம் காட்டி அரசியல் செல்வாக்குப் பெற வேண்டிய நிலையில் அவரிருக்கவில்லை.
அவரது அரசியல் பலமும் அவரது கட்சியின் கட்டமைப்பும் இந்த மொண்ணைத்தனமான தமிழ்த் தேசியத்திலிருந்து வேறானவை. சனநாயக அரசியலை அடிப்படையாக்கொண்டவை.
திராவிட இயக்கத்தில் தமிழ் இலக்கியத்தில் தமிழ் சினிமாவில் என்றென்றைக்கும் தலைமகனாகக் கலைஞர் கருதப்படுவது போல ஈழத் தமிழர்களின் இன்ப துன்பங்களில் உடன் இருந்தவராக எங்களது அரசியலிலும் கலை - இலக்கியத்திலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியவருமாகவே கலைஞரைக் காலம் குறித்துக்கொள்ளும்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-06/kalaingar-t.jpg)