"மோஹனா, உன்னைப் பார்த்தா அம்மாவுக்கு

அடையாளம் தெரியாது.''

""மகனைப் பார்த்தா அம்மாவுக்கு அடையாளம் தெரியாதா?''

""உன்னை அம்மா பார்த்து பத்து... பன்னிரண்டு வருஷங்க ஆச்சே!''

Advertisment

""உண்மைதான்.''

மோஹனன் கூறினான். அவன் மரணமடைந்து பன்னிரண்டு வருடங்களுக்கும் மேலாகிவிட்டது. இந்த கால அளவில் அவன் முற்றிலும் மாறிப்போயிருக்கிறான். அவனுடைய குரல் மாறிவிட்டது. நிறம் மாறிவிட்டது. வாசனை மாறிவிட்டது.

அரைக்கால் சட்டையும், சட்டையும் அணிந்து நடக்கக்கூடிய சிறுவனிலிருந்து ஒரு இளைஞனாக அவன் வளர்ந் திருக்கிறான்.

Advertisment

மோஹனன் மட்டுமல்ல... தினே மாறியிருக்கிறான்.

அவனுடைய கண்கள் இரண்டு பெரிய துளைகளாக இருக்கின்றன. வெளிறிப்போன எலும்பு தெரியும் கன்னங்களில் செம்பு நிறத்தில் உரோமங்கள். உயரமான அவனுடைய சரீரம் வளைந்திருக்கிறது.

மோஹனனின் தாயும் மாறியிருக்கிறாள். பழைய நாராயணியம்மா அல்ல. நிறம் மங்கலாகிவிட்டது. முடி உதிர்ந்துவிட்டது. கண்கள் தாழ்ந்துவிட்டன. விதியின் பலி மிருகமாக இப்போது அவள் இருக்கிறாள்.

மோஹனனின் தந்தையும் மாறியிருக்கிறார். தலைமுடி முழுவதும் நரைத்து கிழவனாகிவிட்டார். காச நோயாளியாகிவிட்டார். முழு குடிகாரனாகிவிட்டார்.

கல்லறை சாலையின் வழியாக அவர்கள் நடந்தார்கள். சாக்குப் பையைத் தூக்கிப்பிடித்தவாறு ஆண்டி எதிரில் வந்துகொண்டிருந்தான். உரோமங்கள் நிறைந்த கனமான கைகளில் வியர்வை வழிந்துகொண்டிருந்தது.

""தினேஷா... எங்க போற மகனே? உச்சிப்பகல் பொழுதுல இந்த சாலை வழியா ஏன் நடக்கிறே?''

உச்சிப்பகல் பொழுதில் கல்லறை சாலையின் வழியாக நடக்கக்கூடாது.

""இந்த பையன் யாரு மகனே தினேஷா?''

""தெரியலையா? மோஹனனைத் தெரியாதா?''

ஆண்டி மோஹனனையே கூர்ந்து பார்த்தான். சரீரத்தில் பலமிருந்தாலும், கண்ணுக்குப் பார்வை சக்தி போதாது. தெரியவில்லை.

""கணாரன் மாஸ்டரோட மகன்.''

ஆண்டி அதிர்ச்சியடைந்து விழித்துப் பார்த்தான். மாஸ்டருக்கு ஒரேயொரு மகன்தான். அவன்...

""நீ என்ன மகனே சொல்றே? அந்த பையன் செத்து பத்து... பன்னிரண்டு வருடங்களாச்சே?''

தினேஷன் குலுங்கிக் குலுங்கி சிரித்தான். ஆண்டி திகைப்புடன் பார்த்தான்.

""வா மோஹனா...''

மோஹனனின் கையைப் பிடித்தவாறு தினேஷன் நடந்தான். திகைப்படைந்து நின்றிருந்த ஆண்டியைக் கடந்து அவர்கள் நடந்தார்கள். பள்ளிக்கூடம் முடிந்து பிள்ளைகள் சிதறியவாறு வந்தார்கள். சாலை முழுவதும் பெண் பிள்ளைகளின் வாசனை பரவியது.

கால்விரல்களைப் பார்த்தவாறு, பாவாடையைத் தரையில் இழையவிட்டவாறு நடந்து வந்துகொண்டிருந்த பெண் பிள்ளையை மோஹனன் பார்த்தான். அவன் கேட்டான்:

""அந்த இளம்பெண் யாரு தினேஷா?''

""கேளு மாஸ்டரோட இளைய மகள் சுதா. திடீர்னு அவள் பெரியவளாய்ட்டா.''

அவளை மோஹனன் திரும்பிப் பார்த்தான்.

""நீ பார்க்கறப்போ அவளுக்கு மூணு... நாலு வயசுதான் இருக்கும்.''

வசந்தாலயத்தின் முன்பகுதியை அடைந்தபோது தினேஷன் கேட்டான்:

""உனக்கு வசந்தாவை ஞாபகத்தில இருக்குதா?''

""இல்லை.''

""அவ பெரியவளாய்ட்டா. கல்யாணமும் முடிஞ்சிட்டது.''

""எனக்கு லேசா ஞாபகம் இருக்கு.''

ஒன்றாம் எண் கள்ளுக்கடைக்கு முன்னால் நடந்தார்கள். ""உன்னோட அப்பா இப்போ ஒரு முழு குடிகாரர். உன் சாவு அப்பாவையும் அம்மாவையும் தளர்ந்துபோக வச்சிருச்சு மோஹனா.''

அப்பாவையும் அம்மாவையும் மட்டும்தானா?

தினேஷனைத் தளரவைத்தது யார்? தினேஷனின் தலைவிதியை முழுவதுமாக மாற்றியது யார்? தினேஷனை இப்படி ஆக்கியது யார்?

""நாம ஒரு நாள் கள்ளு குடிக்கணும்.''

""நீ திரும்பி வந்ததைக் கொண்டாடுறதுக்கா?''

""ஆமா.''

அவர்கள் மோஹனனின் வீட்டிற்கு முன்னால் வந்துசேர்ந்தார்கள். தும்பைச் செடிகளுக்கு மத்தியில் படிகள் மேல்நோக்கிச் சென்றன. வாசலில் ஒட்டுப்புற்கள் வளர்ந்து கிடந்தன. அதற்குமேலே நடந்தார்கள். தினேஷன், மோஹனன்...

இருவரின் வேட்டிகளிலும் புல்லின் விதைகள் இறுக ஒட்டியிருந்தன- ஒட்டிக்கொள்ளும் பெண்களைப்போல.

வெளியே யாருமில்லை. திண்ணையில் போடப்பட்டிருந்த பெஞ்சும் நாற்காலிகளும் காலியாகக் கிடந்தன. சத்தமில்லை. அசைவுமில்லை.

வாசலில் ஏறினார்கள். கதவு திறந்து கிடந்தது. உள்ளே நுழைந்தார்கள். அங்கும் யாருமில்லை.

""அப்பா பள்ளிக்கூடம் விட்டு வந்திருக்க மாட்டாரு.''

""மாஸ்டர் பள்ளிக்கூடத்துக்குப் போறதில்ல.''

""போறதில்லியா?''

உள்ளே கட்டில் அசைந்தது. மெதுவாக ஒரு மெல்லிய சத்தம் கடந்து வந்தது.

""அது அம்மாதானே?''

மோஹனன் முன்னோக்கிப் பாய்ந்தான்.

அறையில் அம்மா கம்பளியைப் போர்த்தியவாறு படுத்திருந்தாள். டர்பன்டைனின் வாசனை. பேரமைதி, கவலை ஆகியவற்றின் வாசனை... நோயின் வாசனை...

""அம்மா!''

மோஹனன் அழைத்தான்.

அம்மா கண்களைத் திறந்தாள். தினேஷனைப் பார்த்துப் புன்னகைத்தாள். புன்னகைக்க சிரமப்பட்டாள்.

""மகனே, எப்போ வந்தே?''

""இது யார்னு பாருங்கம்மா.''

தினேஷன் மோஹனனைச் சுட்டிக் காட்டினான்.

அம்மா மோஹனனைப் பார்த்தாள். புரியவில்லை.

நெற்றியைச் சுளித்துக்கொண்டு பார்த்தாள்.

""என் மகன்!''

அம்மா தொண்டை வெடிக்க அழைத்தாள். அவள் படுக்கையிலிருந்து வேகமாக எழுந்திருப்பதற்கு முயற்சித்தாள். முடியவில்லை. அவள் கையை நீட்டினான். அம்மாவின் மெலிந்த, நடுங்கிக்கொண்டிருந்த கைகளில் மோஹனன் விழுந்தான். அம்மா அவனைக் கட்டிப்பிடித்துக் கொண்டாள். அவனுடைய சரீரத்திற்கு சந்தனத்திரி, மண் ஆகியவற்றின் வாசனை இருந்தது.

""என் தங்க மகனே, நீ எங்க இருந்தே?''

அம்மா அவனை இறுக அணைத்துக் கொண்டாள். குழிவிழுந்த கண்களில் நீர் நிறைந்தது.

""மகனே, அம்மாவை விட்டுட்டுப் போகணும்னு உனக்குத் தோணுச்சுல்ல?''

எதுவுமே பேசாமல் மோஹனன், அம்மாவின் மார்பின்மீது ஒட்டி அமர்ந்தான். அவனுடைய கண்கள் ஈரமாயின.

அவனுடைய முதுகை அம்மா வருடினாள். ஜுரத்தால் பாதிக்கப்பட்டுப் படுத்திருந்த ஒரு சிறுவனின் எலும்பு தெரியும் முதுகல்ல இது. சதைப் பிடிப்பான, இளமையின் பலம் நிறைந்த முதுகு அது. அம்மாவின் கைகள் நடுங்கின. கண்கள் வெடித்து வழிந்தன.

தினேஷன் அதைப் பார்த்தவாறு நின்றிருந்தான்.

அவனுடைய வாழ்க்கையின் அபூர்வ நிமிடங்களில் சில இப்போது கடந்து சென்றுகொண்டிருந்தன. மோஹனன் போகவில்லை. அம்மாவை விட்டுவிட்டுச் செல்வதற்கு அவனுக்கு விருப்பமில்லாமலிருந்தது. அவனை தெய்வம் அழைத்தது. தெய்வம் அவனை புத்தாடை அணியச் செய்தது. பிணப்பெட்டியில் படுக்கச் செய்தது. நான்கடி மண்ணுக்குள் இறக்கியது.

தினேஷன் மண்ணுக்குள்ளிருந்து மோஹனனை வெளியே கொண்டுவந்தான். அவனுக்கு மறுவாழ்வு தந்து வாழவைத்தான்.

நாராயணியம்மாவுக்கு தினேஷன் அவளுடைய ஒரே மகனைத் திரும்பத் தந்தான்.

அம்மா கட்டிலிலிருந்து எழுந்தாள். கீழே இறங்கினாள். கண்ணீரைத் துடைத்தாள். சமையலறைக்குள் நுழைந்தாள்.

நீண்டநாட்களுக்குப்பிறகு அடுப்புகள் பற்றி எரிந்தன. பாத்திரங்கள் ஓசை உண்டாக்கின. அம்மி அரைத்தது.

அம்மா கூறினாள்:

""மகனே, குளிச்சிட்டு வா.''

மோஹனன் குளித்துவிட்டு வந்தான்.

""வேட்டியை மாத்து மகனே.''

சலவை செய்து தேய்க்கப்பட்டிருந்த வேட்டியை அம்மா எடுத்துத்தந்தாள். சுத்தமான வேட்டியையும் சட்டையையும் அணிந்தான். அம்மா அதைப் பார்த்துக்கொண்டிருந்தாள். கண்கள் திடீரென்று நீரால் நிறைந்தன.

""நண்பர்கள் ரெண்டுபேரும் பேசிக்கிட்டு இருங்க. நான் சோறு தயார் செய்யறேன்.''

கண்களைத் துடைத்து, புன்னகைத்தவாறு அம்மா சமையலறைக்குள் சென்றாள்.

சமையலறையிலிருந்து வெங்காயத்தின் வாசனை வந்தது. வெங்காயக் குழம்பா? ரசமா?

""நாம சமையலறைக்குள்ள போய் உட்காரலாம்.''

தினேஷன் கூறினான். அவர்கள் சமையலறைக்குள் சென்றார்கள். இரண்டு அடுப்புகளும் பற்றி எரிந்துகொண்டிருந் தன. செம்புப் பாத்திரத்தில் சோறு கொதித்துப் புரண்டு கொண்டிருந்தது. வெந்த அரிசியின் வாசனை உயர்ந்து வந்தது. வேறொன்றில் வெங்காயக் குழம்பு கொதித்துக்கொண்டி ருந்தது. புளி, வெங்காயம் ஆகியவற்றின் வாசனை எழுந்து வந்தது.

""இப்போ சோறு தயாராகிடும்.''

அம்மா கூறினாள்.

""தினேஷன் குளிக்கலையா?''

""இல்லை.''

தினேஷன் குளித்து எவ்வளவோ நாட்களாகிவிட்டன.

""குளிக்கலைன்னா சோறு தரமாட்டேன்.''

நாராயணியம்மா சிரித்துக்கொண்டே கூறினாள்.

dd

""போயி குளிச்சிட்டு வா.''

காய்ச்சிய எண்ணெய் இருந்த பாத்திரத்தை எடுத்துத் தந்தாள். சோப்பையும் மேற்துண்டையும் எடுத்துக்கொடுத்தாள். தினேஷன் குளியலறைக்குள் சென்றான்.

பல நாட்களுக்குப்பிறகு அவன் சற்று குளித்தான்.

அவனுடைய குழி விழுந்த கண்கள் புத்துணர்ச்சி பெற்றன. பிரகாசித்தன.

சாப்பாடு தயாரானது.

""அப்பா எப்போ வருவாரு?''

அம்மாவின் முகம் திடீரென்று அமைதியானது.

""இப்போ வருவாரு மகனே.''

இப்போது வரமாட்டார். தினேஷனுக்கு அந்த விஷயம் தெரியும். கணாரன் மாஸ்டர் ஒன்றாம் எண் கள்ளுக்கடையில் சுய உணர்வில்லாமல் படுத்து உறங்கிக்கொண்டிருப்பார். இல்லாவிட்டால் உஸ்மான் நினைவு க்ளப்பில் அமர்ந்து சீட்டு விளையாடிக்கொண்டிருப்பார்.

""அப்பா பள்ளிக்கூடத்துக்குப் போறதில்லியா?''

மீண்டும் அம்மாவின் முகம் அமைதியானது.

""சில நேரங்கள்ல போவார். சில வேளைகள்ல போகமாட்டார். மகனே, உன் அப்பா இப்போ அப்படித்தான்.''

மோஹனனின் மரணம் எப்படிப்பட்ட பாதிப்புகளை உண்டாக்கிவிட்டிருக்கிறது! அது யாரையெல்லாம் பாடாய்ப்படுத்தியது? தகர்த்தது?

""அப்பாவுக்காக காத்திருக்க வேணாம். சாப்பிடுங்க பிள்ளைகளா.''

தினேஷனும் மோஹனனும் பலகையில் அமர்ந்தார்கள்.

அம்மா தட்டினை வைத்தாள். சோறு பரிமாறினாள். மோஹனனின் தட்டில் பரிமாறும்போது, அம்மாவின் கை நடுங்கியது. கண்கள் ஈரமாயின.

""எனக்கு இந்த அதிர்ஷ்டம் கிடைச்சதே! என் கடவுளே!''

அம்மா யாரிடம் என்றில்லாமல் கூறினாள். கடவுளை அழைத்தாள்.

"என் தங்கமகன் திரும்பக் கிடைச்சிட்டானே! என் கடவுளே!''

கன்னத்தின் வழியாக கண்ணீர் வழிந்து இறங்கியது.

தினேஷனும் மோஹனனும் அமைதியாக சோற்றை சாப்பிட்டார்கள்.

தினேஷன் வயிறுநிறைய சாப்பிட்டான். நீண்டநாட்களுக் குப்பிறகு அவனுடைய வயிறு சற்று நிறைந்தது. அவனுக்கு களைப்பு உண்டானது. படுக்க வேண்டுமென்று தோன்றியது. உறங்கவேண்டும்போல இருந்தது.

""களைப்பா இருந்தா படு தினேஷா.''

அம்மா கூறினாள்.

""இல்ல... களைப்பு எதுவும் இல்ல.''

அவனுக்கு படுக்கத் தோன்றவில்லை. அம்மாவின் அருகிலேயே இருக்கவேண்டும் அவனுக்கு. மோஹனனைப் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும் அவனுக்கு. தாயும் மகனும் கவலைகளை மறந்து சந்தோஷமாக இருப்பதைப் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும் அவனுக்கு.

அம்மா கேள்விகள் கேட்டாள்.

மோஹனன் பதில் கூறினான்.

அம்மாவிடம் கூறுவதற்கு அவனிடம் ஏராளமான விஷயங்கள் இருந்தன. நீண்டநாட்கள் மண்ணுக்கு அடியில் இருந்த கதை. அம்மாவுக்கும் கூறுவதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றனவே? மோஹனனின் மரணத்திற்குப்பிறகு இந்த வீட்டில் யாரும் சிரிக்கவில்லை. இந்த வீட்டில் ஓணத்திற்கு பூ இடவில்லை. விஷுவுக்கு கனி வைக்கவில்லை. புத்தலம் உற்சவத்திற்கு இங்கு யாரும் புத்தாடை அணியவில்லை. தேசியதின கொண்டாட்ட நாளன்று பாடல், நடனம் ஆகிய வற்றுடன் இரவில் ஊர்வலப் பயணம் நடைபெற்றபோது, இந்த வீட்டில் மட்டும் வண்ண விளக்குகள் எரியவில்லை. இந்த வீடு நீண்டகாலமாக மரணவீடாகவே இருக்கிறது.

"இந்த வீட்டில் நான் சந்தோஷத்தைக் கொண்டுவருவேன்.' தினேஷன் தனக்குள் கூறிக்கொண்டான். இங்கு பூ இடுவார்கள். கனி வைப்பார்கள். புத்தாடை அணிவார்கள். வண்ண விளக்குகள் எரியும்.

அம்மா தூங்கவில்லை. மோஹனனும் தினேஷனும் தூங்கவில்லை ""அப்பா இன்னும் வரலையே?''

""ராத்திரிதான் வருவார் மகனே. நீ கொஞ்சம் தினேஷனின் வீட்டுக்குப் போ. தினேஷனோட அம்மாவைக் கொஞ்சம் பாத்துட்டு வா...''

""வா... என் வீட்டுக்குப் போலாம்.''

""அம்மா... நீங்க வர்றீங்களா?''

""நானா?''

அவள் வெளியே சென்று எவ்வளவோ காலமாகிவிட்டது. பாதைகளின் வாசனையைக்கூட மறந்துவிட்டாள்.

""அம்மா, நீங்களும் வாங்க.''

தினேஷன் வற்புறுத்தினான். தாய் சம்மதித்தாள்.

அவள் ஆடையை மாற்றினாள். தலைமுடியைக் கட்டினாள். அவர்கள் வெளியேறினார்கள்.

சந்தோஷத்தால் ஈரமான கண்களுடன் தினேஷனுக்கும் மோஹனனுக்கும் மத்தியில் அவள் நடந்தாள்.

பாதையில் சென்றவர்களும் பக்கத்து வீடுகளில் இருப்பவர்களும் அந்த காட்சியைக் கண்குளிரப் பார்த்தார்கள்.

அவள் பெருமூச்சுவிட்டாள்.

எல்லாரும் நாராயணியம்மாவைக் கைவிட்டார்கள். தெய்வமும் கைவிட்டது.

ஆனால், தினேஷன் கைவிடவில்லை.

அம்மா வாசலிலேயே அமர்ந்திருந்தாள். கையில் வார இதழ்... ""இது யாரு? நாராயணியா?''

அம்மாவால் நம்பமுடியவில்லை. எந்த இடத்திற்கும் எந்தச் சமயத்திலும் சென்றிராத நாராயணி இதோ முடியைக் கட்டி, வெண்ணிற ஆடை அணிந்து வந்திருக்கிறாள்.

""யார் இதுன்னு பாரு லட்சுமி.''

அம்மா தினேஷனையும் மோஹனனையும் மாறிமாறிப் பார்த்தாள்.

""லட்சுமி... உனக்குத் தெரியலையா? என் மோஹனனைத் தெரியலையா?'' அம்மா திகைப்புடன் அமர்ந்திருந்தாள்.

""அங்கே யாருடி?''

தானியப் பெட்டியின்மேலிருந்து அம்மாவுடைய தாயின் நடுங்கிய குரல் கேட்டது.

""மோஹனைப் பார்த்தப்போ எனக்கும் தெரியல. பார்த்து பத்து பன்னிரெண்டு வருஷங்க ஆச்சுல்ல?''

""அவன் வளர்ந்துட்டான்.''

மோஹனன் நின்று சிரித்தான். அவன் தினேஷனைவிட உயரமாக இருந்தான். தடிமனாக இருந்தான். தினேஷனைவிட நிறத்துடன் இருந்தான். ஆனால், அவனுக்கு மறுவாழ்வு தருவதற்கு தினேஷன் தேவைப்பட்டான்.

""அங்க யாருன்னு உங்கிட்ட கேட்டனேடி லட்சுமி?''

""நாராயணி... மோஹனனும் இருக்கான்.''

""மோஹனனா? நீ என்னடீ சொல்றே? பைத்தியம் பிடிச்சிருச்சா?''

அம்மாவின் தாயால் நம்பமுடியவில்லை. வேறு யார் நம்பினாலும்... கூடத்தில் வெண்ணிறத் துணியில் இறந்து கிடப்பதை அவள் பார்த்திருக்கிறாள். தலைப்பகுதியில் குத்து விளக்கு எரிந்துகொண்டிருந்தது. சந்தனத்திரிகள் புகைந்து கொண்டிருந்தன. நாராயணியம்மா அழுதுகொண்டிருந்தாள். வாசல் முழுவதும் ஆட்கள் இருந்தார்கள்.

""மாதுவம்மா, எப்படி இருக்கீங்க? நல்லா இருக்கீங்களா?''

""நாராயணீ, இந்த பிறவியில எனக்கு என்ன சுகம் இருக்கு? குழிக்குள்ள போறதுக்கு காத்திருக்கேன்.''

நாராயணியம்மா உள்ளே சென்றாள். பின்னால் மோஹனனும் நடந்தான்.

தானியப் பெட்டியின்மீது போர்வை சுருண்டு கிடந்தது. அதற்குள் ஒரு ஆள் படுத்திருப்பதை நினைப்பதென்பதே சிரமமான விஷயமாக இருந்தது. அம்மாவின் தாய் மிகவும் மெலிந்துபோயிருக்கிறாள். சோர்வுடன் காணப்படுகிறாள். எலும்புகளுக்கு வெப்பம் குறைந்துவிட்டது. குருதிக்கு வேகம் குறைந்துவிட்டது.

""இதோ... மோஹனன். பாருங்க மாதுவம்மா.''

கண்களைச் சுழலவிட்டுப் பார்த்தாள். தெளிவாகப் பார்க்க முடியவில்லை. எனினும், பார்த்தாள். கழுத்துவரை வெண்ணிறத் துணியைப் போர்த்திப் படுத்திருக்கும் சிறுவன்... தலை மொட்டையடிக்கப்பட்டிருக்கிறது. கறுத்து காய்ந்த தேங்காயைப் போன்ற முகம்...

""தினேஷா...''

அம்மா அழைத்தாள்.

"என்ன ஒரு தூக்கம் இது! உனக்கு பசிக்கலையா? எழுந்திரு... மணி ரெண்டாயிடுச்சு.

அவன் உறங்கவில்லை. கண்களை மூடிப் படுத்திருந்தான். இப்படிப் படுத்துத்தான் அவன் ஜானகியை ராதாவாக்கினான். நளினியைப் படைத்தான். இதோ... இறுதியாக மோஹனனுக்கு மறுவாழ்வு தந்திருக்கிறான்.

""தினேஷா... உங்கிட்ட எழுந்திருக்கச் சொன்னேன்.''

எல்லாரும் சாப்பிட்டார்கள். தினேஷன் மட்டுமே எஞ்சியிருந்தான். எவ்வளவு முறை அழைத்தாகிவிட்டது!

அவன் எழுந்திருக்கத் தயாராக இல்லை.

அவனுக்கு உணவு வேண்டாம். பசி இல்லை.

""தினேஷா...''

அம்மா அழைத்துக்கொண்டேயிருந்தாள். அவன் அழைப்பைக் காதில் வாங்கவில்லை.

அவன் மோஹனனுடன் சேர்ந்து நடப்பதற்காகச் சென்றான்.

பாலத்தில் சென்று அமர்ந்து பல விஷயங்களைப் பற்றியும் பேசிக்கொண்டிருந்தார்கள். நுலகத்திற்குச் சென்று அமர்ந்து வாசித்தார்கள்.

இந்த உலகத்தில் அவனுக்கு சுகமில்லை... சந்தோஷ மில்லை. காரணம்- இந்த உலகம் கடவுளால் படைக்கப் பட்டது.

அவன் சொந்தமாக ஒரு உலகத்தைப் படைத்தான். அங்கு அவனுக்கு சுகம் இருக்கிறது. திருப்தி இருக்கிறது.

அவன் கட்டிலிலிருந்து எழுந்தான். வெளியேறிப் புறப்பட்டான்.

""நீ எங்க போறே?''

பதில் இல்லை.

பற்றி எரிந்துகொண்டிருந்த வெயிலில் இறங்கினான்.

அம்மா பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள். காடுபோல வளர்ந்திருக்கும் முடி... அழுக்கடைந்த வேட்டி... கிழிந்த சட்டை...

""சட்டையை மாத்திக்கிட்டுப் போ தினேஷா.''

பதில் இல்லை.

தெருவில் இறங்கி நடந்தான்.

எங்கு போகிறான்?

மனிதனின் சத்தம் கேட்காத- மனிதன் பயணித்து வராத எங்காவது ஓரிடத்திற்குப் போய் இருக்கவேண்டும்... படுத்திருக்கவேண்டும்... கண்களை மூடவேண்டும்...

படைக்கும் செயலைத் தொடரவேண்டும்.