ந்தக் கட்டுரை, தமிழ்நாட்டின் வட்டார மொழிகளில் எழுதப்பட்டு வருகின்ற இலக்கியங்களுக்கோ, வட்டார மொழிகளில் எழுதி வருகின்ற எழுத்தாளர்களுக்கோ, வட்டார மொழி இலக்கியங்களின் சுவைஞர்களுக்கோ இவற்றுக்கெல்லாம் மேலாகத் தங்களது வட்டார மொழி வழக்கில் காலங்காலமாகப் பேசி வாழ்கின்ற தமிழ் மக்களுக்கோ எதிரானது அல்ல!

மாறாக, வட்டார மொழி இலக்கியங்களின் மீது வலிய வலிய புனையப்படுன்ற அதீதமான உன்னதங்களுக்கு முன்பாகச் சில வினாக்களை இக்கட்டுரை முன் வைக்கிறது.

அறியாமை எங்கிருந்து தோன்றினாலும் அது அறியாமைதான். அது இலக்கியங்களின் வடிவத்தில் தோன்றுகிறதே என்பதற்காக அதைப் பொறுத்துக்கொள்ளவோ சகித்துக்கொள்ளவோ வேண்டும் என்கிற அவசியம் ஏதுமில்லை.

“வட வேங்கடம் தென்குமரி ஆயிடைத்

Advertisment

தமிழ் கூறு நல்லுலகத்து’’

என்று தொல்காப்பியமும்,

“நெடியோன் குன்றமும்

Advertisment

தொடியோள் பௌவமும்

தமிழ் வரம்பறுத்த

தண் புனல் நாட்டு’’

என்று சிலப்பதிகாரமும், அக்காலத் தமிழர்களின் வாழ் நிலப் பரப்புகளுக்கான எல்லைகளை வரையறை செய்து காட்டியுள் ளன. அவ்விலக்கியங்கள் உரத்துச் சொல்லி யுள்ள இவ்வுண்மையானது, வரலாற்று ஆய்வாளர்களால் உறுதி செய்யப்பட்டுள் ளன. ஒரு பேருண்மை என்பது எல்லோருக் குமே தெரியும்.

1956-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் நாள் தமிழகம் மொழிவழி மாநிலமாக அதாவது தமிழ்மொழிக்கு உரிய மாநிலமாக வகைப்படுத்தப்பட்டு அதற்கான நில எல்லை களும் வரையறை செய்யப்பட்டன. அப்படி வரையறை செய்யப்பட்டபோது, நமது தொல்காப்பியமும் சிலப்பதிகாரமும் உறுதி செய்த வட வேங்கடப் பகுதியானது ஆந்திர மாநில எல்லைக்குள் போய்விட்டது. அது மட்டுமின்றி கர்நாடகம், கேரளம் ஆகிய இரண்டு அண்டை மாநிலங்களிடமும் தமிழகம் தன் பரவலான நிலப்பரப்புகளை இழந்தது. அதனால் எல்லைப் பகுதிகளின் தமிழர்கள் ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மூன்று மாநிலங்களின் மக்களாக மாறிப் போனார்கள்.

இந்தப் பாகப் பிரிவினையின்போது இயற்கை நமக்களித்திருக்கின்ற நல்லதொரு வாய்ப்பாக, 1074 கிலோமீட்டர் நீளம் கொண்ட கிழக்குக் கடற்கரை தமிழகத்தின் இன்னொரு எல்லை அரணாக அமைந்து போனதால் தமிழகத்தின் பெரும்பகுதி நிலப்பரப்புகள் அண்டை மாநிலங்களால் அபகரிக்கப்பட்ட வாய்ப்புகளின்றித் தப்பித் துக்கொண்டன.

தமிழகத்தின் கடந்த கால எல்லை வரலாறு கள் துயரம் மிக்கவையாக இருந்தாலும் கூட, நிகழ்காலத் தமிழகத்தின் நிலப்பரப்பு களுக்கு நான்கு திசைகளிலும் வரையறுக்கப் பட்ட விளிம்பு எல்லைகள் உண்டு. அந்த எல்லைகளுக்கு உள்ளடங்கிய நிலப்பரப்புக் குத்தான் ‘தமிழ்நாடு’ எனப் பெயர் சூட்டி னார், பேரறிஞர் அண்ணா அவர்கள். இப்போது தமிழ் நாட்டிற்குள் வாழுகின்ற மக்கள் தமிழர்கள் என்கின்ற தேசிய இன அடையாளத்தைப் பெற்றுள்ளனர். தமிழ் நாட்டின் மொழி “தமிழ் மொழி’’ என்று உலக அளவில் அடையாளப்படுத்தப் பட்டிருக்கிறது.

இப்போது “தமிழ் மொழி’’ என்கின்ற இந்த நமது மொழி அடையாளம்தான் தமிழர் களுக்கும், தமிழர்களின் பல்லாயிரம் ஆண்டு மரபு உரிமையாக விளங்கி வருகின்ற நிலப் பரப்புக்கும் இருக்கின்ற ஒற்றைப் பாதுகாப்பா கும். தமிழ் என்கின்ற தங்களது மொழியைத் தான், தமிழர்கள் தங்களது அனைத்துவிதமான உரிமைப் போராட்டங்களுக்கும் உரிய வாளாகப் பயன்படுத்த வேண்டும், கேடயமாக வும் பயன்படுத்தித் தங்களைத் தற்காத்துக் கொள்ளவும் வேண்டும்.

கடவுள், சாதி, மதம், வர்க்கம் போன்றவற் றால் தமிழர்கள் ஒன்றுபட்டுப் போராடுவதற் கான வாய்ப்புகள் எள்ளளவும் அமையப் பெறவில்லை. அப்படியான ஒருங்கிணைப்பில் ஒன்றுபட்டுப் போராடவும் முடியாது. எனவே தான் நமது தமிழ் மொழியானது அதன் எல்லைகளுக்குள் வலிமை மிக்கதாகவும், வீழ்த்த முடியாததாகவும், தமிழர்களின் வாழ்வாதாரங்களுக்கான பயன்பாட்டு மொழியாகவும் விளங்க வேண்டும் என்று நமது அறிஞர்களும் சமூகவியலாளர்களும் பன்னெடுங்காலமாக இடையறாது வலியுறுத்தி வருகின்றனர். மானுடவியலில் இது மிக முதன்மையானதொரு கோட்பாடாகும்.

jaya

உலக அளவில் தற்போது பயன்பாட் டில் இருக்கின்ற சற்றேறக் குறைய 7,200 மொழிகளில் ஆங்கிலம், சீனம், ரஷ்யன், பிரெஞ்சு, ஜெர்மன், ஸ்பானிஷ், இந்தி, தமிழ், அரபு, ஜப்பான் உள்ளிட்டப் பதிமூன்று மொழிகள்தான் பத்து கோடிக்கும் மேற்பட்ட மக்களால் பேசப்படுகின்ற மொழிகளாக விளங்குகின்றன. உலக அளவில் பத்து கோடிக்கும் மேற்பட்ட மக்களால் பேசப் படுகின்ற மொழிகளில் ஒன்றாகத் தமிழ்மொழி யும் விளங்குகிறது என்பது நமக்கு ஒரு பெருமையாக இருந்தாலும், மற்ற பன்னிரண்டு மொழிகளுக்கு அந்தந்த நாடுகளில் இருக்கின்ற மரியாதையிலும், ஆட்சியதிகாரத்திலும், பயன்பாட்டு முறைகளிலும் வெறும் பத்து விழுக்காட்டு அளவுக்குக்கூட நமது தமிழ் நாட்டில் தமிழ்மொழிக்கு இல்லை. ஏனெனில் மற்ற பன்னிரண்டு மொழிகளும் அந்தந்த நாடுகளின் அரசாங்க மொழிகளாக அரியணை யில் ஏற்றப்பட்டுள்ளன. நமது தமிழ் மொழியோ இந்தியாவின் மாநில மொழிகளில் ஒன்றாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது. அதனால்தான் நமது மாநிலத்தின் எல்லை களுக்கும் அதிகாரங்களுக்கும் உட்பட்டு நமது தமிழைப் பாதுகாக்கவும் வளர்க்கவும் வேண்டியவர்களாக நாம் இருக்கிறோம்.

தமிழர்களாலும் தமிழை விரும்பாதவர் களாலும் தொடர்ந்து தமிழ் மொழிக்குப் பல்வேறு வகையான பின்னடைவுகள் நேர்ந்து வருகின்றன. தமிழ் மொழிக்கு எதிரான அரசியல் ஆதிக்கம், மட்டு மீறிப் பெருகிப் போய்விட்ட பிறமொழிக்கலப்பு, எவ்வகையிலும் பயன்பாட்டு மொழியாகிவிடாமல் பார்த்துக் கொள்கின்ற முனைப்பு, வெறும் பொழுது போக்கு மொழியாக மட்டுமே கட்டமைக்கப் பட்டுவருகின்ற இழிவு போன்ற இன்றும் பல கூறுகளைத் தமிழ்மொழிக்கு நேர்ந்துள்ள பின்னடைவுகளாகப் பட்டியலிட முடியும்.

இவ்வகையில் தமிழ் மொழியின் மீது தொடுக்கப்பட்டு வருகின்ற பெருந்தாக்குதல் களின் பட்டியலில் மேலும் ஒன்றாக “வட்டார மொழி இலக்கியம்’’ என்கிற பின்னிழுப்புப் பணி இப்போது வேகமாகத் தலையெடுத்துத் தழைத்து வளர்ந்து கொண்டிருக்கிறது.

வட்டார மொழி இலக்கியங்கள் அதிக அளவில் உன்னதப்படுத்தப்படுவதாலும், அவ்வகை எழுத்தாளர்கள் கண்களை மூடிக் கொண்டு கொண்டாடப்படுவதாலும் புதிதாக எழுத முனைகின்ற இளையோர்கள் திகைத்து நின்று வட்டார மொழிகளின் பக்கம் தங்களது எழுதுகோலைத் திருப்புகின்றனர். மோசமான முன்னத்தி (முன் நடத்தி) ஏர்கள் பிந்தைய ஏர்களைப் பாழடிக்கின்றன.

இப்போது முதலில் வட்டார மொழி என்றால் என்ன? என்கின்ற தெளிவுக்கும் முடிவுக்கும் நாம் வந்தாக வேண்டும்.

இந்தக் கட்டுரையின் வசதிக்காக நமது தமிழகத்தை நெல்லை, கோவை, மதுரை, காஞ்சி, சென்னை என்று ஐந்து மண்டலங் களாகப் பிரித்துக்கொள்வோம். இந்த ஐந்து மண்டலங்களிலும் தமிழர்கள் பேசுகின்ற தமிழ் மொழியின் ‘ஒலிப்பு’ முறைகள் வேறுபட்டி ருக்கும். இந்த ஐந்து மண்டலங்களிலும் சில பொருள்களுக்கும் உயிரினங்களுக்கும் சூட்டப்பெற்றுள்ள பெயர்களும் வேறுபட்டி ருக்கலாம். இந்த ஐந்து மண்டலங்களிலும் தமிழர்கள் தங்களது மொழியான தமிழைத் தான் வெவ்வேறு வகையான ஒலிப்பு முறைகளில் இழுத்தும் குறைத்தும் தங்களது வட்டார வழக்கத்தின்படி பேசுகிறார்கள். அவர்களது ஒவ்வொரு சொல்லுக்கும் முழுமையான நல்ல தமிழ் வடிவங்கள் உண்டு. அந்த முழுமையான வடிவங்களை முறையாக உச்சரிக்க இயலாத நிலையில் அவர்கள் அச் சொற்களைக் குறைத்தும், சற்று மாற்றியும், நீட்டியும், இன்னபிற சிறுசிறு மாறுதல்களைச் செய்தும் பேசுகிறார்கள். அவ்வளவுதான்!

அவர்களது வட்டார மொழியில், மணிலாக் கொட்டை மல்லாட்டையாகும். வருகிறீர்களா? என்பது வாரியளா? என்றாகும். தின்றுவிட்டுப் போ! என்பது துன்னுட்டுப்போ! என மாறும். இங்கேதான் இருக்கிறாயா? என்பது இங்கதான் கீறயா? என வியக்கும். கொன்று விடுவேன் என்பது, கொன்னுறுவேன் என எச்சரிக்கும். வேளாண்மை என்பது வெள்ளாமையாகும்.

இப்படியாக நல்ல, முறையான, வேர்ச்சொல் தகுதிபெற்ற பல்லாயிரக் கணக்கான தமிழ்ச் சொற்களை அந்தந்த வட்டாரமொழிகளில் இருந்து நாம் பட்டியலிட முடியும்.

தமிழக மக்கள் தங்களது தமிழை, தங்களது வட்டார வழக்குப்படி வாய் வசதிக்கேற்ப உச்சரித்துப் பேசினாலும் கூட தங்களது சொத்துப் பத்திரங்கள், திருமண அழைப்பிதழ்கள், கோரிக்கை மனுக்கள், துண்டறிக்கைகள் போன்றவற்றை எழுதநேரும் - போது மிகவும் தெளிவாகவும் உறுதியாகவும் அவர்கள் எல்லோருக்கும் பொதுவான எழுத்து நடைக்கு வந்துவிடுகிறார்கள். ஆனால் சில இலக்கியவாதிகளோ அவர்களது பேச்சொலியை வட்டார இலக்கியம் என்ற பெயரில் ஆவணப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.

ஒருபடி மேலே சென்று அந்தந்த வட்டார பேச்சு மொழி ஒலிகளை ‘மக்கள் மொழி’ என்றும் நாங்கள் மக்களின் மொழிக்குப் பக்கத்திலேயே இருக்கிறோம் என்றும் சொல்லிக் கொள்கிறார்கள்.

தமிழில் வட்டார மொழியிலான இலக்கியங் களை அதிகமான எண்ணிக்கையில் நீங்கள் படைத் திருந்தாலும் கூட உங்களுக்குக் கிடைக்கவேண்டிய இலக்கிய அங்கீகாரம் கிடைத்தபாடில்லையே அது ஏன்?’’ என்று ஒரு வட்டார மொழி எழுத்தாளரிடம் அவரைச் சந்திக்கப்போன இலக்கிய அன்பர்கள் கேட்ட போது, என்ன செய்வது? எங்கே திருக்குறளையும் ராமாயணத்தையும் , சிலப்பதிகாரத்தையும் என் தலை மேலே வைத்து அழுத்துகிறார்களே! கொஞ்சமும் தயவு தாட்சண்யம் பார்க்காமல் அதையெல்லாம் உடைக்க வேண்டியிருக்கிறது!’’ என்று சொன்னாராம்.

நானறிந்த புலவர்களிலே கம்பனையும், வள்ளுவனை யும், இளங்கோவையும் போல இந்தப் பூமியில் எங்கேயும் கண்டதில்லை என்று மகாகவிபாரதி கொடுத்த ஒப்புதல் வாக்கு மூலம், இந்த வட்டார மொழி எழுத்தாளருக்கு ஒரு வெற்றுக் கூச்சலாகத்தான் கேட்கிறது போலும். இதையொட்டிச் சிந்திக்கும்போது யாரை யார் உடைப்பது? என்கிற கேள்வி நமக்குள் எழாமல் இல்லை.

தமிழ் மொழியின் சொற்கள் அனைத்தும் உரிய காரணங்களோடு கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. அச்சொற்களை அந்தந்த பகுதி மக்கள் மிகவும் குறிப்பாக கற்காத பாமர மக்கள், தங்களது வாய் வசதிக்கேற்ப மாற்றிப் பேசுகிறார்கள். அவர்களின் வசதிக்கு ஏற்ப அவர்கள் பேசிக்கொள்ளட்டும். அது அவர்களின் குற்றமல்ல! ஆனால் அவற்றை நாம் ஏன் ஆவணப்படுத்த வேண்டும் என்று வட்டாரமொழி இலக்கியப்படைப்பாளிகள் நினைத்துப் பார்ப்ப தில்லை. நாடு முழுமைக்குமான உண்மையான தரமான பொதுத் தமிழின்மீது ஏனோ அவர்களுக் குள்ளிருக்கும் அதீத வெறுப்பானது, மக்கள் பேசுகின்ற வட்டார மொழிகளின் மீதான பாசமாகவும், அக்கறை யாகவும் மாறிவிடுகிறதோ என எண்ணத் தோன்றுகிறது.

கதை மாந்தர்களின் தேவைக்கு ஏற்ப ஒரு புதினத்தில் ஆங்காங்கே வட்டார மொழியானது உரையாடல் மொழியாக இடம் பெறுவதில் தவறில்லைதான். ஆனால் ஒரு புதினம் முழுவதுமே உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை ஒரு வட்டார மொழியிலேயே கட்டி யெழுப்பப்படும் போதுதான் அது பிற வட்டாரமொழி யினருக்கு இது என்னடா இது? என்ற நிலையை ஏற்படுத்துகிறது.

வட்டார மொழி வடிவங்கள்தான் “மக்கள் மொழி என்று சொன்னால், தூய தமிழ்நடையில் எழுதப் பட்டுள்ள ஆயிரக்கணக்கான கவிதை இலக்கியங்களும் அவற்றுக்கான உரைநடை இலக்கியங்களும் மக்களுக்கு எதிரானவையா எல்லது மக்களுக்குத் தொடர்பில்லாதவையா? என்று கேட்கத்தோன்றுகிறது. மேலும் “பண்டிதத் தமிழ்’’ என்று கேலி பேசுகிறார் களே அதுஏன்? என்றும் எண்ணத் தோன்றுகிறது.

தமிழ் நாட்டின் ஒவ்வொரு வட்டாரத்திலும் வாழுகின்ற மக்கள் தங்களுக்கான வாழ்வாதாரங்களை, கல்வியை, குடிநீரை, மருத்தவ வசதியை அரசுகளிடம் கோருவதைப் போல தங்களது வட்டார மொழியில் இலக்கியங்கள் வேண்டுமென்று யாரிடமாவது கோரிக்கை வைத்தார்களா என்ன? அல்லது திருக்குறளும் சங்க இலக்கியங்களும் எங்களது வட்டார மொழிகளில் எழுதப்பட வில்லையென்று அவற்றையெல்லாம் நிராகரித்துவிட்டார்களா?

இதையெல்லாம் கூட விட்டுவிடுவோம். அறிஞர் அண்ணா, பேராசான் ஜீவானந்தம், குன்றக்குடி அடிகளார், கலைஞர் கருணாநிதி போன்றோரின் பொதுத் தமிழ்ச் சொற்பொழிவுகளை அனைத்து வட்டார மக்களும் ஆர்ப்பரித்து வரவேற்று மகிழ்ந்தார்களே அது ஏன்? மக்கள் தெளிவாகத்தான் இருக்கிறார்கள். மக்கள் மொழியில் எழுதுகிறேன் என்று கிளம்பியவர்களுக்குத்தான் ஏதோ கோளாறு இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளமுடிகிறது.

ஒரு மாணவன் பாடக் குறிப்பேட்டில் தனது வட்டார வழக்கில் ஒரு சொல்லை எழுதிவிடுகிறான் என்றால் அவன் ஆசிரியரால் திருத்தப்படுகிறான். அதே வட்டார மொழியில் ஓர் எழுத்தாளர் முழுமையாக ஒரு நூலை எழுதிவிட்டால் அந்த எழுத்தாளருக்குப் பாராட்டுகள் குவிந்துவிடுகின்றன.

தமிழகத்தின் எந்த வட்டாரத்து மக்களாயினும் அவர்கள் தங்களது வாழ்க்கையில் ஏதேனும் தவறுகள் செய்துவிட்டால் கண்டனங்களுக்கு ஆளாகின்றனர். அதே மக்கள் தங்களது வாய்மொழியில் செய்கின்ற தவறுகளோ வட்டாரமொழி எழுத்தாளர்களுக்குப் பெருவிருந்துகளாக அமைந்துவிடுகின்றன. இந்த முரண்டு ஓர் அவலமுரண் அல்லவா?

வட்டார மொழி இலக்கியம் என்னும் பெயரில், ஒற்றைப் பெருந்தமிழுக்குள் நான்கு ஐந்து வகையான புதுத்தமிழ் உருவாக்கப்படுவது எந்த வகையில் தமிழுக்குப் பெருமை சேர்ப்பதாக அமையும்? “தமிழால் ஒன்றுபடுவோம்!’’ என்கின்ற கோட்பாட்டினை, வட்டாரத் “தமிழ் மொழிகளால் ஒன்றுபடுவோம்!’’ என்று மாற்றி விடுவார்களோ என்ற அச்சமும் நமக்கு ஏற்படுகிறது.

பிற வட்டாரங்களின் தமிழர்களால் இயல்பாகவும் எளிதாகவும் படிக்கவியலாத, பள்ளிப் பிள்ளைகளுக் குப் பாடங்களாக்க வாய்ப்புக் குறைவான, மேடைகளில் மேற்கோள் காட்டிப் பேசுவதற்கு இடந்தராத சிக்கலான மொழி நடையைக் கொண்ட இவற்றுக்கெல்லாம் மேலாக மொழிபெயர்க்க முடியாத வட்டார மொழி இலக்கியங்கள், முட்டுசந்துகளில் நிறுத்தப்பட்டுள்ளன என்பதுதானே உண்மை! இத்தகைய முட்டுச் சந்து இலக்கியங்களுக்கு உலக அளவிலான அங்கீகாரத்தைக் கோருவது கோமாளித்தனமின்றி வேறென்ன?

வட்டார மொழி இலக்கியங்கள், தமிழ் இலக்கிய வகையில் ஒரு பிரிவு ஆகும். அதுவும் ஒரு பக்கம் இருக்கும் என்கிறார் எழுத்தாளர் திருப்பூர் கிருஷ்ணன். நியாயம்தான்! தமிழ் இலக்கிய வகைப்பாடுகளில் அதுவும் ஒரு வகையாக இருப்பதில் எந்தத் தடையும் இல்லை. நோயற்ற உடல் என்று எவ்வுடலும் இருக்காதுதான். ஆனால் அதுதான் இலக்கியம் அது மட்டும்தான் இலக்கியம் என்கிற அதீத முரட்டுக் குரல்களும் அது போன்ற குரல்களுக்கு பெருகிவரும் ஆதரவும்தான் தமிழை அபாயக் கட்டத்திற்கு இழுத்துச் செல்வதாக இருக்கின்றன.

செத்துப் போக இருந்த தமிழுக்கு இப்பதாம் உயிர்வரத் தொடங்கியிருக்கு. தமிழ் தனது பொய் நடை யைக் கைவிட்டு மக்கள் மொழியாக மாறிக் கொண்டு வருகிறது என்று வட்டாரமொழி இலக்கியம் குறித்துப் பெருமிதம் நிறைந்த தனது வாக்கு மூலத்தைப் பதிவு செய்திருக்கிறார் புகழ்பெற்ற ஒரு வட்டார மொழி எழுத்தாளர்.

எத்தனையெத்தனையோ இடர்ப்பாடுகளுக்கு நடுவிலும் ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக சாகாமல் வாழ்ந்து வருகிற தமிழ் மொழியை, கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பாக யாருடைய கோரிக்கையாகவும் இல்லாமல் சுய முடிவில் வலுக்கட்டாயமாகத் தோற்றுவிக்கப்பட்ட வட்டார மொழி இலக்கியங்கள் எப்படிக் காப்பாற்றுகின்றன என்பது தெரியவில்லை.

ஒரு பகுதி பாமர மக்களின் தமிழைக் கொண்டு ஒட்டுமொத்த தமிழ் நிலப்பரப்புக்கான தமிழை நிராகரிப்பதும், கேலிபேசுவதும், இது மக்கள் மொழி என்பதும், இந்த மொழி நடை இலக்கியங்கள் தான் தமிழுக்குப் புத்துயிரூட்டி அதைக் காப்பாற்றி வருகின்றன என்பதும் உண்மையான பொதுத் தமிழுக்கும், தமிழின் காரணச் சொற்களுக்கும், தமிழின் வேர்ச்சொற்களுக்கும் இழைக்கப்படுகின்ற இரண்டகமன்றி வேறென்ன?

இனி வட்டார இலக்கியங்களை அவற்றின் சுவைக் காகவும், கிளுகிளுப்புத் தன்மைக்காகவும், பொழுது போக்கிற்காகவும் விரும்பிப்படிப்பவர்கள் அவற்றின் சொற்களுக்குள் கல்லறை கட்டி மூடப் பட்டுள்ள உண்மையான தமிழ்ச் சொற்களையும் வேர்ச்சொற் களையும் கண்டறிய முனைய வேண்டும். அப்போது தான் தமிழில் இருந்து எவ்வளவு தூரம் கடந்து வந்து படைப்புகள் என்ற போர்வையில் இவர்கள் தமிழை ஆவணப்படுத்தியிருக்கிறார்கள் என்பது விளங்கும்.

அனைத்து வகையான போதாமைகளையும், தொலை நோக்குப் பார்வைகள் ஏதுமற்ற செயல்பாடுகளையும் வரவேற்று உபசரிக்கின்ற பொதுப்புத்தியை இயல்பாகப் பெற்றிருக்கின்ற நமது தமிழ்ச் சமூகம், தமது மொழியை உருமாற்றியும், குழைத்தும், குதறியும் ஆவணப்படுத்துகிற எழுத்தாளர்களைப் பார்த்தும் கரவொலி எழுப்பி வரவேற்பதில் எவ்வித வியப்பும் இல்லை.

தமிழ் மக்கள் அனைவருக்குமான உண்மை யான நல்ல தமிழ், காலங்காலமாகப் பல்வேறு வகையான இடர்ப்பாடுகளைச் சந்தித்து அவற்றையெல்லாம் கடந்து வந்து கொண்டு இருக்கிறது, வாழ்ந்து கொண்டும் இருக்கிறது. வட்டார மொழி என்கிற, தன் மீது வலிய புனையப்பட்ட இந்த இடர்பாட்டையும் இரண்டகத்தையும் கூட அது கடக்கும்.

எனவே தமிழின் இளம் தலைமுறைப் படைப்பாளி கள் தங்கள் முன்பாகக் கடைவிரிக்கப்படுகின்ற இந்தப் போக்கினைக் குறித்துப் பெரிதாக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை.

ஓர் எழுத்தாளன் எப்படி எழுதவேண்டும், எதையெதை எழுதவேண்டும் என்கிற உரிமையைப் பெற்றிருக்கிறான் என்பது உண்மைதான்! அதே வேளையில் பொதுவெளிக்குக் கடைவிரிக்கப்படுகிற எவற்றின் மீதும் வினாக்களை எழுப்புவதற்கும் விமர்சனங்களை முன் வைப்பதற்கும் மற்றவர்களும் உரிமை பெற்றிருக்கிறார்கள் என்பதும் உண்மைதானே?