இந்திய ஒன்றியத்தின் தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டுப் போராடிய விவசாயிகளை சீக்கியர்கள் என மத அடையாளமிட்டு சுருக்க நினைத்தது பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு. ஆனால், பா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநிலங்களான உத்தரபிரதேசம், ஹரியானா மாநிலங்களிலிருந்தும் பிற மாநிலங்களிலிருந்தும் விவசாயிகள் டெல்லி நோக்கித் திரண்டனர். வேளாண் திருத்தச் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி ஓயாமல் தொடரும் போராட்டத்தில் சீக்கியர்கள் மட்டுமல்ல, இந்து-முஸ்லிம்- கிறிஸ்தவர் கள்-சமணர்கள்-பௌத்தர்கள் எனப் பல மதத்தினரும் இருக்கிறார் கள். மத நம்பிக்கை இல்லாத மனிதர்களும் உழவர்களின் உரிமைக் குரலுக்காக ஓரணியில் நிற்கிறார்கள்.
இதனை வியப்பாகப் பார்க்கிறார்கள் அரசியல் தலைவர்கள். இந்தியாவில் 1990 முதல் மதவாத அரசியல் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதன் விளைவாக கடந்த 7 ஆண்டுகளாக, மதவாதக் கொள்கையை முன்னிறுத்தும் கட்சி ஒன்றியத்தைத் தொடர்ச்சியாக ஆட்சி செய்து வருகிறது. அதன் தாக்கம் பல மாநில அரசுகளிலும் தெரிகிறது. ஆட்சியைக் கடந்து கல்வி-சட்டம்-காவல்-நிர்வாகம் என அனைத்து நிலைகளிலும் பெரும்பான்மை மத உணர்வே மேலோங்கி இருக்கிறது. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு சிறுபான்மை சமுதாயத்தினர் அச்ச உணர்வைக் கொண்டிருக் கிறார்கள். அவர்கள் மீதான தாக்குதல்கள்-அவர்களுக்கு எதிரான சட்டங்கள் என உடல்ரீதியாகவும் உளவியல்ரீதியாகவும் அச்சுறுத்தல் கள் தொடர்கின்றன.
உலகநாடுகளின் பார்வையில் இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பன்முகத்தன்மை கொண்ட இந்தியா வில் குறிப்பிட்ட மதம் சார்ந்த உணர்வு மேலோங்கி வருவது ஜனநாயகத்தன்மைக்கு எதிரானதாக அமையும் என சமூக-பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்திய மக்களின் மனநிலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டு, அது அரசியல் தளத்தில் எதிரொலித்து வருவதாகக் கருதப்படும் நிலையில், அமெரிக் காவின் தலைநக ரான வாஷிங்டன் டி.சி.யைச் சேர்ந்த PEW Center என்ற நிறுவனம் ஓர் ஆய்வை மேற்கொண்டு அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் பெரும்பான்மை மக்கள் தங்களுக்கு மத சுதந்திரம் இருப்பதாகக் கருத்து தெரிவித்தி ருக்கிறார்கள். அதே அளவுக்கு, பிற மதங்களை மதிப்பதுதான் உண்மையான இந்தியனுக்கான அடையாளம் என்றும் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இந்தப் பண்புதான் பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவின் அடையா ளம். பெரும்பான்மை மக்களாக இந்து மதத்தினர் இருக்கும்போது அவர்களில் பெரும்பாலானவர்கள் ஒரே கருத்தைச் சொல்வதால், சிறுபான்மையினரும் சுதந்திரமாக இருக்கிறார்கள் என்று கருத முடியுமா என்ற கேள்வி எழலாம்.
முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், சமணர்கள் என எல்லா மதங்களிலும் உள்ள பெரும்பான்மை மக்களின் கருத்துகள் இதே போலத்தான் உள்ளன. என் மதம் எனக்கு. உன் மதம் உனக்கு என்ற மனப்பான்மை பெரும்பான்மையான மக்களிடம் உள்ளது. அதனால், மத எல்லைகளைக் கடந்த நண்பர்கள், மதக் கலப்புத் திருமண இணையர்கள் குறைந்த அளவிலேயே உள்ளனர்.
எனினும், இறுக்கமான சாதி-மத கட்டமைப்புக் கொண்ட நாட்டில், உன் மதமா? என் மதமா? என்ற சண்டையைத் தவிர்க்க நினைக்கும் மனப்பான்மையே பெரும்பான்மை மக்களிடம் உள்ளது என்கிறது அந்த ஆய்வு.
மதவாத அரசியல் என்பது பெரும்பான்மை மத உணர்வுகளை மட்டும் கிளறிவிடவில்லை. பெரும்பான்மை மொழியின் ஆதிக்க உணர்வையும் சேர்த்தே கிளறிவிட்டது. இந்தியர்கள் என்றால் அவர்கள் இந்துக்களாக இருக்கவேண்டும். இந்தி பேசக்கூடியவர்களாக இருக்கவேண்டும். அப்படிப்பட்டவர்கள்தான் உண்மையான தேசபக்தர்கள் என்ற பரப்புரை கால் நூற்றாண்டுக்கும் மேல் செய்யப்பட்டதன் விளைவாக இந்தி பேசும் இந்துக்களே இந்தியர்கள்-அவர்கள் பா.ஜ.க.வுக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும் என்ற எண்ணம் விதைக்கப்பட்டது. அதன் விளைச்சலை வடஇந்திய மாநிலங்களில் காண முடிகிறது என்கிறது அமெரிக்க நிறுவனம் நடத்திய ஆய்வு.
வட இந்தியாவிலும்-மத்திய இந்திய மாநிலங்களிலும் 10 பேருக்கு 5 பேர் இந்தியர்கள் என்றால் இந்துக்கள்-இந்தி பேசுபவர்கள்-பா.ஜ.க.வுக்கு வாக்களிப்பவர்கள் என்ற மனநிலையைக் கொண்டிருக்கிறார்கள். தெற்கு நோக்கி நகரும்போது அந்த எண்ணிக்கைப் பெருமளவில் குறைந்திருக்கிறது. 10 பேரில் 2 பேர் கூட இந்து-இந்தி-பா.ஜ.க. என்ற எண்ணத்தைக் கொண்டிருக்கவில்லை. இந்துக்களாக இருந்தாலும் பிற மதத்தவராக இருந்தாலும் எல்லாரும் உண்மையான இந்தியர்கள்தான் என்ற எண்ணம் தென்னிந்திய மக்களிடம் அதிகளவில் உள்ளது. இந்தி மொழி ஆதிக்கத்தை தென்னிந்திய மொழிக் குடும்பத்தார் ஏற்றுக்கொள்ளவில்லை. ‘மதம்’ பிடிக்காத நல்லிணக்க முறையையே வாழ்க்கையிலும் அரசியலிலும் கடைப்பிடிக்கிறார்கள்.
தென்முனையான தமிழ்நாட்டை நோக்கி வரும்போது இந்த வேறுபாடு இன்னும் அதிகமாக இருக்கிறது என்பதே யதார்த்த நிலவரம். வந்தாரை வாழ வைக்கும் பண்பாடு கொண்ட மாநிலத்தில் மதவெறி-மொழி ஆதிக்கம் ஆகியவற்றுக்கு இடமில்லை. அதை நம்பி வாக்கு சேகரிக்கும் பா.ஜ.க. கட்சிக்கு செல்வாக்கும் இல்லை. சட்டமன்றத்திற்கு 4 பேர் செல்ல வேண்டுமென்றாலும் மாநிலத்தில் உள்ள கட்சியின் தோள் மீது ஏறி சவாரி செய்ய வேண்டியிருக்கிறது.
இந்து-இந்தி-தாமரை சின்னம் என்று அரசியல் நடத்த வருகிறவர்களிடம் ‘ஒன்றியம்’ என்ற ஒற்றைச் சொல்லை ஆயுதமாக ஏந்துகிறது தமிழ்நாடு. அந்த ஆயுதத்தைக் கண்டு நடுநடுங்கிறது தாமரை. இது பிரிவினைச் சொல் என்று அலறுகிறது. ஒன்றியம் என்றாலே ஒன்றியிருத்தல்தான். ஒன்றியிருப்பது எப்படி பிரிவினையாகும்? அம்பானிகளோடும் அதானிகளோடும் ஒன்றியிருந்து, மக்கள் நலனிலிருந்து வெகுதூரம் பிரிந்திருப்பவர்கள்தான் விளக்கம் சொல்ல வேண்டும்.