ராஜுமுருகன் திரையுலகில் இப்போது பெரும் நம்பிக்கைச் சுடராக ஒளிரும் இளம் இயக்குநர். மக்களிடம் எதை எதை? எப்படி விதைக்க வேண்டும்? என்று தனக்குத் தானே தனித் தடம்போட்டுக் கொண்டு பயணிக்கும் பன்முகக் கலைஞர். மெல்லிய இசை கசியும், இவரது ஒவ்வோர் அசைவிலிருந்தும் அறத்துக்கு இயைபான கனல் பூப்பது அபூர்வமான அனுபவம். மானுட ஈரத்தோடு பிரச்சினைகளை அணுகும் இந்த இதயவாதியை, நம் வாசகர்களுக்காகக் கேள்விகளோடு துரத்தினோம். குழந்தை பிறந்த பூரிப்போடு கோவையில் மாமியார் வீட்டில் இருந்த அவரைக் கொரோனா நெருக்கடிக்கு நடுவிலும் வாழ்த்துச் சொல்லி மடக்கினோம். அவர் தந்த பதில்கள், அவரது உயரத்தையும் ஆழத்தையும் ஒருசேர வெளிப் படுத்துகின்றன.
ஒரு இதழாளராக வாழ்க்கையைத் தொடங்கி, விறுவிறுப்பான கதாசிரியராக நகர்ந்து, தனித்துவமிக்க இயக்குநராக உயர்ந்திருக்கிறீர்கள். கடந்துவந்த பாதையைத் திரும்பிப் பார்க்கும் போது என்ன தோன்றுகிறது?
* திரும்பிப் பார்க்கும் அளவுக்கு எனது பாதைகளோ பயணங்களோ இருப்பதாக நினைக்கவில்லை. எலக்ட்ரானிக் டிப்ளமோ படித்துமுடித்த பிறகு, வேலை தேடி மதுரைக்குப் போனேன். அங்கு நண்பர் ஒருவர் மூலமாக டி.வி.எஸ். கம்பெனியில் வேலைக்கான வாய்ப்பு வந்தது. டிப்ளமோ சர்டிபிகேட்டோடு போனால் சூப்பர்வைசர் வேலை கிடைக்கும். ஆனால் நான் டிப்ளமோ சர்டிபிகேட்டை ஒளித்துவிட்டு பத்தாவது சர்டிபிகேட்டோடு போய் ஒப்பந்தக் கூலி தொழிலாளியாக வேலைக்குச் சேர்ந்தேன். ஏனெனில், என்னால் எப்போதும் எளிய மனிதர்களோடும் அவர்களின் உலகத்தோடும் தான் என்னைப் பொருத்திக் கொள்ளவும் பொருந்திப் போகவும் முடிகிறது. இப்போது வரையிலும் அப்படிதான். காசுக்காக மட்டுமே எந்த வேலையையும் ஒத்துக்கொள்வது கிடையாது.
எந்தத் திட்டமிடலும் இலக்குகளும் எனக்கு இருந்தது இல்லை. எல்லாமே அன்பின் வழியாகவும் நம்பிக்கை யின் வழியாகவுமே நடந்தன. ஆகவே ஒரு நல்ல பத்திரிகை யாளனாகவோ எழுத்தாளனாகவோ இயக்குநனா கவோ இருக்கிறேனோ இல்லையோ நல்ல தோழனாக இருப்பதற்கே எப்போதும் முயற்சிக்கிறேன். முயற்சிப்பேன்.
உங்கள் இளமைக் காலம், குடும்பம், ஆசிரியர்கள், நண்பர்கள் பற்றி?
* எனது ஊர் திருவாரூர் மாவட்டத்திலுள்ள அபிவிருத்தீஸ்வரம் கிராமம். சரிபாதியாக இந்துக்களும், இஸ்லாமியர்களும் வாழும் ஊர். ரமலான் மாதத்து நோன்புக் கஞ்சியையும், கிடாரி அம்மன் கோவில் கிடாச் சோற்றையும் இப்போது நினைத்தால்கூட எச்சில் ஊறுகிறது. அற்புதமான கவிஞர் பாடலாசிரியர் கா.மு.ஷெரீப், திராவிடப் பேச்சாளர் நன்னிலம் நடராஜன், கவிஞர் அபிவையார் தாஜுதின் போன்றவர்களெல்லாம் அந்த ஊர்தான்.
எனது அப்பா ராஜேந்திரன் கால்நடை மருத்துவராக இருந்தார். அதிகாலை நான்கு மணிக்கு வந்து அப்பாவை எழுப்புவார்கள். மருந்துப் பையைத் தூக்கிக் கொண்டு அவரோடு போவேன். பிரசவ வலியில் கிடக்கும் மாட்டின் பின்புறம் கையை விட்டு பனிக்குடம் உடைந்த நீரோடு, சொள சொளவென கன்றுக்குட்டியை வெளியே எடுத்துப் போடுவார் அப்பா. அதன் முகத்திலுள்ள ஈரத்தை எல்லாம் வழித்து விட்டு, காதில் உயிர்க் காற்றை ஊதுவார். மாட்டுக்குச் சொந்தக்காரர் தயங்கி வந்து நிற்கும்போது, ‘லட்சுமியே வந்துருக்குய்யா... காசெல்லாம் வரும்போது வந்து குடு’ என்று சொல்லிவிட்டு வருவார். உயிர்களின் மீதான அன்பும் நேயமும் அவரிடமிருந்துதான் எனக்குள் விதைக்கப்பட்டிருக்கிறது என உணர்கிறேன்.
அம்மா மல்லிகா, வீட்டு வேலை... வயல் வேலை... என காய்த்த கைகளும், வெடித்த பாதமுமாய், கிடைத்த இந்த மண்ணின் இன்னொரு அம்மா. சரவணன், குமரகுரு, சித்தார்த்தன் என மூன்று அண்ணன்கள்.
‘நீங்க அண்ணன் தம்பிகளா, மாமன் மச்சான்களாடா’ என ஊரில் கிண்டல் பண்ணுவார்கள். அந்த அளவுக்கு இன்று வரையிலும் நண்பர்களைப் போன்றுதான் இருக்கிறோம். இன்றைய குழந்தைகளுக்குக் கிடைத்திராத கிராமத்து விளையாட்டுகளும், கூட்டுக் குடும்பக் கொண்டாட்டங்களும், திருவிழாக்களும் நிறைந்த உலகம் எங்களுடையது. தமிழ் வாத்தியார் செல்வராஜ் ஐயா மீதான ஈர்ப்பு. ரோஸி சிஸ்டரின் தாய்மை. இப்போதும் என் பள்ளி நாட்களையும் பால்யத்தையும் அடைகாத்துக் கொண்டிருக்கின்றன. அப்போது கிடைத்த நண்பர்கள் பஷீர், முத்துராமன், பகவதி தொடங்கி இப்போது அருள் எழிலன், பரமு, எச்.வினோத் வரை நண்பர்களால் ஆனது என் உலகம்.
இடதுசாரிச் சிந்தனை உங்களுக்குள் எப்போது, யாரால் மலர்ந்தது?
* என் அண்ணன் சரவணனும், பாடலாசிரியர் யுகபாரதி அண்ணனும் நெருங்கிய நண்பர்கள். யுகபாரதி அண்ணனின் அப்பா தா.க.பரமசிவம் அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சாவூர் நகர செயலாளராக இருந்தார். அண்ணனின் வீட்டில்தான் முதன்முதலாக மூலதனம் புத்தகத்தைப் பார்த்தேன். அந்தப் புத்தகமும் மார்க்ஸ் ஏங்கெல்ஸின் முகங்களும் எனக்குள் சொல்ல முடியாத உணர்வுகளை உண்டாக்கியது. அந்த பதினான்கு வயதில் உண்மையில் அந்த புத்தகம் முழுமையாக எனக்குப் புரியவில்லை. மறுபடி மறுபடி வாசித்தேன். அது எனக்குள் ஏற்படுத்திய தாக்கம் எண்ணங்களிலேயே மிகப்பெரிய மாற்றங்களை உருவாக்கியது.
அதன்பிறகு ஃபிடலின் ""கியூபா என்ற கனவு தேசம்"", சேகுவேராவின் ""பொலிவிய நாட்குறிப்பு"" தொடங்கி மார்க்சிம் கார்க்கி, தஸ்தாயெவ்ஸ்கி வரை யிலான புத்தகங்களும் தோழமைகளுமாக ஒரு விருப்பமான உலகம் என் கைக்குக் கிடைத்தது.
எனது ஊருக்குப் பக்கத்தி லேயே உள்ள வெண்மணி யில் நடந்த வரலாற்றுச் சாதியக் கொடூரத்தை பற்றி, சோலை சுந்தர பெருமாள் எழுதிய ""செந்நெல்"" நாவல் எனக்குள் பல கேள்விகளை எழுப்பியது. இன்னமும் இந்த ஊர் ஏன் ஊராகவும் காலனியாகவும் பிரிந்து கிடக்கிறது என்ற முக்கியமான கேள்வியை எழுப்பியது. வர்க்க விடுதலைக்காகவும் சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் பெரும் அர்ப் பணிப்போடும் துணிவோடும் வாழ்வையே பணயம் வைத்துப் போராடிய பல தோழர்கள் இந்த மண்ணி லேயே வாழ்ந்திருக்கிறார்கள் என்ற உண்மைகள் என் தேடலில் கிடைத்தன. அதேபோல் ம.க.இ.க. பாடல்கள், த.மு.எ.க.ச., கலை இலக்கிய பெருமன்றத் தினர் நடத்திய கலை இரவுகள் எல்லாம் எனக்குள் பெரிய அதிர்வை உருவாக்கின.
அதன் பிறகு மதுரையில் டி.வி.எஸ் நிறுவனத்தில் பணியாற்றியபோது அங்கிருந்த தொழிற்சங்க தோழர்களுடனான நட்பு, திருப்பூர் சாயப்பட்டறையில் வேலை பார்த்த போது இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தோழர் களுடன் இணைந்து பணியாற்றக் கிடைத்த வாய்ப்பு போன்றவை எல்லாம் இடதுசாரி இயக்கங் களின் மீதும் தோழர்களின் மீதும் தீராத அன்பை விதைத்து விட்டது. அதன் தொடர்ச்சியாகவே தோழர் சிந்தன் மற்றும் காம்ரேட்களுடன் இணைந்து “காம்ரேட் டாக்கீஸ்’’ உள்ளிட்ட வேலைகளை இன்று வரை செய்து வருகிறேன்.
உங்கள் இதழியல் அனுபவம், திரையுலகப் பயணத்திற்கு எந்த அளவிற்குப் பயன்படுகிறது?
* என்னை ஒரு பத்திரிகைகாரனாக மாற்றியது ரா.கண்ணன் சார் தான். விகடனில் நிருபராக வேலை பார்த்த காலகட்டம். நிறைய விசயங்களைக் கற்றுக் கொடுத்தது. விதவிதமான மனிதர்களோடு பழகவும் உரையாடவுமான அனுபவங்களை அந்த நாட்கள் தான் வழங்கின. ஒரு நாள் மேற்கு மாம்பலம் வீட்டில் பீரோ புல்லிங் பண்ணி கொள்ளையடித்த திருடனைச் சந்திப்போம். மறுநாளே தாதா வீரமணியை என்கவுண்டரில் போட்டுத் தள்ளிய காவல் டீமை சந்திப்போம். மூலக்கடை டாஸ்மாக்கில் கானாப் பாடகருடன் ரெண்டு ரவுண்டு போட்டு விட்டு, ஈ.சி.ஆர். ஃபார்ம் ஹவுசில் பிரபல நடிகரோடு ரெண்டு ரவுண்டு போகும். டிராபிக் ராமசாமியைப் பேட்டி எடுத்துவிட்டு, சுடுகாட்டு ஊழலில் சிக்கிய அமைச்சர் பேட்டிக்குப் போவோம். எத்தனை முகங்கள் எத்தனை உரையாடல்கள்... உண்மையில் பத்திரிகையாளராக எனக்குக் கிடைத்த அனுபவங்கள் என் திரை வாழ்க்கையில் இன்று வரை பெரிய பங்காற்றிக் கொண்டிருக்கின்றன. திரையில் வடிவமைக்கும் பாத்திரங்களும் பேசும் அரசியலும் குறைந்தபட்சம் உண்மை தன்மையோடும் நம்பகத் தன்மையோடும் இருப்பதற்கு இதழியல் அனுபவங்களே காரணம்.
குக்கூ படம், காதலின் மெல்லுணர்வையும், பார்வையற்றவர்களின் உணர்வுலகையும் கவித் துவமாகப் பேசியது. இதற்குப் பார்வையற்றவர் களிடமிருந்து எந்த மாதிரியான வரவேற்பு கிடைத்தது? அந்தப் படத்தின் அனுபவத்தைப் பற்றிக் கொஞ்சம்?
* லிங்குசாமி சாரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய பிறகு என் முதல் படமாக நான் இயக்க ஆரம்பித்தது “சந்திரபாபு’’ என்ற படத்தைதான். நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி சார் அந்த படத்தைத் தயாரித்தார். சில காரணங்களால் அந்தப் படம் நின்றுபோனது. சக்கரவர்த்தி சார் அற்புதமான மனிதர். சினிமா காதலர்.
இன்று வரையிலும் அவருடனான நட்பு தொடர் கிறது. அந்த படம் நின்றுபோன பிறகு துயரமான ஒரு காலகட்டத்தில் இருந்தபோதுதான் கண்ணன் சார் சொல்லி, விகடனில் “வட்டியும் முதலும்’’ தொடர் எழுதினேன். அது தளர்ந்து கிடந்த எனக்கு உற்சாகத்தையும் நம்பிக்கையையும் கொடுத் தது. இன்னும் நிறைய தோழர்கள் கிடைத் தார்கள். குடி, சிகரெட், ஒழுங்கு இல்லாத வாழ்க்கை முறை என இருந்தவன் அத்தனையையும் ஒழித்துக் கட்டிவிட்டு ஒரு விடியலில் மீண்டேன். நண்பன் பரமுவின் ஐ.ஐ.டி. வீட்டில் அவன் எனக்கு இயற்கை சுவாசம் கொடுத்தான். மறுபடியும் படம் பண்ணலாம் என்ற எண்ணத்தோடு இயக்குநர் ஷங்கர் சாரை சந்தித்தேன். அவரது “எஸ் பிக்சர்ஸு’க்காக நகைச் சுவைக் கதையைச் சொன்னேன். அதைக் கேட்டு விட்டு, அவர் உங்களிடமிருந்து இதை நான் எதிர்பார்க்கவில்லை. “வட்டியும் முதலும்’’ மாதிரி அழுத்தமான கதையைத்தான் எதிர்பார்த்தேன். ‘
அப்படி ஒரு கதையைச் சொல்லுங்கள்’ என்றார். ‘ அப்படியான ஒரு கதை இருக்கிறது ஒரு மாதத்தில் வருகிறேன் சார்’ என சொல்லிவிட்டு வந்து உருவாக்கியதுதான் குக்கூ கதை. அது நெடுநாட்களாக எனக்குள் இருந்த கதைதான். விகடனில் வேலைபார்த்தபோது சென்ட்ரல் ஸ்டேஷனில் பார்வையற்ற மாற்றுத் திறனாளி காதல் தம்பதியரைப் பார்த்து பேட்டி எடுத்தேன். அவர்கள் மின்சார ரயிலில் பொருட்கள் விற்று வாழ்பவர்கள். அந்த எளிய ஆன்மாக்களின் வாழ்க்கை, காதலும் அன்புமாய் அவ்வளவு வண்ணங்களோடு இருந்தது. அதுதான் “குக்கூ’’ வாக உருவானது.
குக்கூவுக்கு தேசிய விருது கிடைக்கும் என்பது பலரின் எதிர்பார்ப்பாக இருந்ததே?
* விருதுகளுக்காக எந்த படைப்பையும் உருவாக்குவது இல்லை. அதுவும் என்னைப் போன்ற அரசியலோடு இயங்கும் படைப்பாளிகளுக்கு அப்படியான எதிர்பார்ப்பெல்லாம் இருப்பது நியாயமே இல்லை. இன்னொன்று என்னுடைய படைப்புகளெல்லாம் எவ்வளவு குறைபாடுகளோடு இருக் கிறது என்பது எல்லோருக்கும் முன்பாக நிச்சயமாக எனக் குத் தெரியும். பொதுவாகவே நான் அவ்வளவு தகுதியான ஆளெல்லாம் இல்லை. குக்கூவைப் பொறுத்தவரை நானும் என் உதவி இயக்குநர் கரிகாலனும் நெடுநாட்கள் பார்வையற்ற மாற்றுத்திறனாளி தோழர்களின் உலகத்தில் வாழ்ந்தோம். மூர் மார்க்கெட் முருகேசன் அண்ணன், இளங்கோ, பருப்பி கோபி, தோழி வளர்மதி என நிறைய இதயங்களை அந்தக் காலம் கொடுத்தது. அடிக்கடி எனது வாட்ஸப்பில் ஏதேனும் ஒரு பார்வையற்ற மாற்றுத்திறனாளி தோழர் ’மனசுல சூரகாத்தை’யோ ’ஆகாசத்த நான் பாக்குறே’னையோ பாடி ஹார்டின் போட்டு அனுப்புகிறார்கள். அதுவே ஆகச் சிறந்த விருது.
அதிகார வர்க்கத்தின் போக்கை உங்கள் ஜோக்கர் தாறுமாறாகக் கிழித்துத் தொங்க விட்டதே... அதில் உள்ள பாத்திரங்களை நிஜ அரசியல்வாதிகளை மனதில் நிறுத்தித்தான் படைத்தீர்களா?
ஜோக்கரும் பயணங்களில் நான் சந்தித்த மனிதர்களின் திரைப் பிரதிதான். இந்த தேசம் முழுவதும் அநீதிகளுக்கு எதிராக இயலாமையும் கோபமுமாக அறச்சித்திரவதை கொள்ளும் எளிய மனிதர்கள் நிறைந்து கிடக்கிறார்கள். உண்மையில் இந்திய ஜனநாயகத்தின் உயிர் என்பது அரசோ அதிகாரமோ கிடையாது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சக மனிதர்களுக்காக வீதிக்கு வரும் தன்னார்வலர்கள், மனித உரிமைப் போராளிகளாலேயே ஜனநாயகம் இயங்குகிறது.
அப்படிப்பட்ட மனிதர்களுக்கான மரியாதை யும், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி இந்த மண்ணைக் கீழ்மை செய்யும் அரசியல்வாதிகளுக்கு எதிரான கோபமும்தான் “ஜோக்கர்’’.
கடும் அரசியல் விமர்சனங்களைக் கொண்ட ஜோக்கருக்கு தேசிய விருது கிடைத்ததை எப்படிப் பார்க்கிறீர்கள்?
* நான் நம்பும் அரசியலை ஏதோவொரு வகையில் வெளிப்படுத்தி, மக்களிடம் ஒரு உரையாடலை நிகழ்த்த வேண்டும் என்பதே என் விருப்பமாக இருக்கிறது. திரைத்துறையையும் அதற்காகவே நான் தேர்ந் தெடுத்தேன். அதற்கான அங்கீகாரமாக தேசிய விருது கொடுக்கப்பட்டதும் மகிழ்ச்சியே. ஆரோக்கியமான விஷயமும்கூட. ஜனநாயக நாட்டில் யாரும் யாரையும் விமர்சிக்கும் உரிமை உள்ளது.
ஆனால் அது தனிமனிதத் தாக்குதலாக இல்லாமல், கருத்தியல் தளத்தில் இருக்க வேண்டும். அது தொடர்ச்சியாக நடைபெறவும் வேண்டும்.
உங்கள் ஜிப்ஸி, ஒரு உயிருள்ள பாத்திரத்தின் தாக்கத் தில் உயிர்த்தவரா? ஒரு நாடோடிப் பாடகனின் வாழ்க்கையை சித்தரிக்கும் ஆர்வம் எதனால் ஏற்பட்டது?
* விகடனில் ஜிப்ஸி என்ற பெயரில் ஒரு தொடர் எழுதினேன். அதற்காக இந்தியா முழுவதும் பயணம் மேற்கொண்டபோது, பல நாடோடிப் பாடகர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் குதிரையை வைத்துக்கொண்டு பாடித் திரியும் ஒரு தேசாந்திரியைப் பார்த்தபோது தான் ஜிப்ஸிக்கான துவக்கம் கிடைத்தது. அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பும் யோசனைகளும் இல்லாமல் வாழ்க்கையை அதன் இயல்பில் வாழ்ந்து, நதியைப் போல நகரும் அவனது வாழ்க்கை எனக்குப் பிடித்திருந்தது. அப்படியான ஒரு வாழ்க்கையை, காதலைச் சொல்ல வேண்டுமென விரும்பினேன்.
இனம் மொழி சாதி மதம் என எந்த அடையாளத்தையும் சுமக்காமல், எல்லைகள் இல்லாமல் வாழும் அந்த வாழ்க்கையை, இந்த அடையாளங்களின் பால் நடக்கும் அநீதி அரசியல், எப்படி சிதைக்கிறது என்பதை ஜிப்ஸிக்குள் கதையாக வைத்து, அதைத் தோலுரித்துக் காட்டினேன். இந்தியா முழுவதும் பயணப்பட்ட போது ஒரு பக்கம் எளிய மனிதர்களின் மனிதத்தையும் இன்னொரு பக்கம் அடையாள அதிகார அரசியலின் கொடூரத்தையும் பார்த்ததின் விளைவே “ஜிப்ஸி’’ ஜிப்ஸியில் மிருதுவான காதல் சுடரை, மத வன்முறைச் சூறாவளிக் களத்திற்கு நடுவே பாதுகாப்பாக எடுத்துச் சென்றிருக்கிறீர்கள்? ஜீவா, ஜிப்ஸியாகவே உணர்ச்சிமயமாய் வாழ்ந்திருக்கி றார்.... நடாஷா சிங் ஒரு மெல்லிய இசைபோல் கதையோடு கலந்து கரைந்திருக்கிறார்...
நடனக்குதிரை சே’வாக வரும் அந்தக் காரைக் குடிக் குதிரையும்கூட ஆறறிவைக் காட்டி அசத்தி யிருக்கிறது....எப்படி இப்படிப்பட்ட பொருத்த மான தேர்வுகள்?
* ஜிப்ஸி கதாபாத்திரத்துக்கு எந்தவித சாயலும் இல்லாத ஒரு இந்திய முகம் தேவைப்பட்டது.
அதற்கு நடிகர் ஜீவா மிக கச்சிதமாகப் பொருந்தினார். இயல்பிலேயே இசையையும் பயணத்தையும் காதலிக்க கூடியவர் ஜீவா. அற்புதமான நடிகர். அவருக்கான சரியான படைப்பு அமைகிறபோதெல்லாம் மிகுந்த அர்ப்பணிப்போடு தன்னை வெளிபடுத்திக் கொள்பவர். ஜிப்ஸியில் நல்ல நடிகராகவும் நண்பராகவும் அவர் பங்கு முக்கியமானது. வஹீதா கதாபாத்திரத்திற்கு ஒரு இஸ்லாமியப் பெண்ணின் சாயல் முகம் தேவைப்பட்டது. இமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த நடாஷா சிங்கை மும்பையில் பார்த்துத் தேர்வு செய்தோம். சரியாகப் பயன்படுத்திக் கொண்டால் பிரமாதமான நடிகையாக மிளிர்வதற்கான எல்லாத் தகுதிகளும் அவரிடம் இருக்கிறது. .
“சே’’வாக வரும் நடன குதிரையின் உண்மையான பெயர் நயினார் முகமது. அவனும் எங்கள் தோழனாகி விட்டான். படத்தில் நாயகியின் தங்கையாக நடித் திருக்கும் ஃபஜிலா, நாகூர் தர்காவின் பிரசி டெண்ட் கலீபா தோழரின் மகள். இப்படி நாகூர், கேரளா, வாரணாசி என அந்த அந்த பகுதி களின் மனிதர்களைத் தான் படம் முழுவதும் நடிக்க வைத்தோம். ஜிப்ஸி மூன்று ஆண்டுகள் என் பயணம். நிறைய அனுபவங்களையும் மனிதர் களையும் இழப்புகளையும் சந்தித்தோம். எல்லா வற்றையும் எடுத்துக்கொண்டு என்னோடு பயணப் பட்ட தயாரிப்பாளர் அன்பர் எஸ்.அம்பேத்குமார் சாருக்கு தான் கடமைப் பட்டிருக்கிறேன்.
சென்சிடிவ் மிகுந்த ஒரு சிறுபான்மைச் சமூகத் திலிருந்து ஒரு காதல் பொறியை உண்டாக்கி, அதை அழகாக ஜிப்ஸியில் வளர்த்தெடுத்துச் சென்றிருக்கிறீர்கள். அவர்கள் தரப்பில் இருந்து எந்தவிதமான எதிர்வினை வந்தது?
* ஏராளமான இஸ்லாமிய தோழர்களிடமிருந்தும் படத்தைப் பாராட்டிக் கருத்துகள் வந்தன. கவிக்கோ மன்றத்தின் முஸ்தபா தோழர் ‘இந்தப் படம் எல்லோருக்குமான சுயபரிசோதனைக்கான நியாயங்களையும் பேசுகிறது தோழர்’ என்றார்.
பேராசிரியர் ஹாஜாகனி யைப் போன்ற முற்போக்கு முகாம்களில் செயல்படுகிற தோழர்கள் பாரட்டுகளையும் நியாமான பார்வை யையும் முன்வைத்தனர். ஒரு சில தோழர்கள் இஸ்லாமிய கலாச்சாரத்தைப் படமாக்கிய விதத்தில் ஒருசில பிழைகள் இருந்ததாகச் சுட்டிக்காட்டினார்கள்.
அதை ஏற்றுக்கொண்டு அதற்கான பதில்களையும் தெரிவித்தேன். உதாரணத்திற்கு ஜிப்ஸிக்கும் வஹிதாவுக்கும் இஸ்லாமிய முறைப்படி திருமணம் நடப்பதாக படத்தில் ஒரு காட்சி வரும். அதில் ஜிப்ஸி வஹிதாவுக்கு கருகமணி அணிவிப்பது போல வரும். இஸ்லாமிய கல்யாணங்களில் மாப்பிள்ளையானவர், பெண்ணுக்குக் கருகமணி அணிவிக்க மாட்டார். உறவுக் கார வயதான பெண்மணிகளே அணிவிப்பார்கள் என்பதுதான் உண்மை. ஆனால் படத்தில் அந்த கல்யாணம் நடப்பது வாரணாசியில். அங்கு உண்மையில் கல்யாணங்களை நடத்தி வைக்கும் இஸ்லாமியப் பெரியவரை வைத்துதான் அந்தக் காட்சியைப் படமாக்கினோம். அந்தப் பகுதி மக்களிடம் கருகமணி அணிவிக்கும் கலாச்சாரமே இல்லை. இந்தப் பழக்கம் எங்கள் பகுதியில் இல்லை. இஸ்லாமியர்களில் ஒரு பகுதியினர் இந்தப் பழக்கத்தைத் தழுவிக்கொண்டார்கள் என அவர் சொன்னார். எனவே மணமகனே கூட கருகமணியை அணிவிக்கலாம் என அவர்தான் அதைச் செய்து வைத்தார். இம்மாதிரி இந்தியா முழுவதும் மாறுபட்ட பழக்க வழக்கங்கள் இருக்கின்றன. இப்படி பெரும்பாலான தோழர்களிடம் இருந்து பாராட்டுகளும் ஒரு சிலரிடமிருந்து விமர்சனங்களும் வந்தன. எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டேன். தோழர்களே... ஒற்றுமையும் மனிதமுமே எனது படைப்பின் நோக்கமாக எப்போதும் இருக்கும்.
இந்துத்துவா சக்திகளிடமிருந்து ஜிப்ஸிக்கு எதிர்வினைகள், பிரச்சினைகள் என்று இருந்ததா?
* மிகத்தீவிரமான எதிர்வினை தணிக்கைக் குழுவில் இருந்தே தொடங்கிவிட்டது. காவி என்ற வண்ணமே படம் முழுக்க காட்டப்படக் கூடாது என்று நிபந்தனை வைத்தார்கள். எனவே அந்தக் காட்சிகளை எல்லாம் கருப்பு வெள்ளையாக மாற்றவேண்டியிருந்தது. 2 முழு பாடல்கள் உட்பட பல காட்சிகள் நீக்கப்பட்டன. அதையெல்லாம் கடந்தே படத்தைத் திரைக்குக் கொண்டுவந்தோம். அதன் பிறகும் இந்துத்துவா சக்திகளால் பல இடையூறுகள் ஏற்பட்டன. நிஜ வில்லன்களை எல்லாம் நிறைய சந்தித்தேன். மறைமுகமாக எவ்வளவோ தடைகளும் பயமுறுத்தல்களும் வந்தன. மார்க்ஸையும் அம்பேத்கரையும் பெரியாரையும் ஆசான்களாக ஏற்றுக்கொண்டவன் நான். இதற்கெல்லாம் பயந்தால் இங்கே இயங்கமுடியுமா? அந்த மூன்று பேரும் வழி காட்டுகிறார்கள். நமது பயணம் தொடர் ஓட்டம் போல் தொடர்கிறது.
தணிக்கையில் 50-க்கும் மேற்பட்ட காட்சிகள் வெட்டப்பட்டதாக அறிகிறோம். இது கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானதாக உணர்கிறீர்களா?
திரைப்படத் தணிக்கைக் குழுவைப் பொறுத்தவரை அரசியல் கட்சி சார்ந்த நபர்கள் அதில் அங்கம் வகிக்கக்கூடாது என்பதுதான் என் கருத்து. இப்போது இல்லை முன்பிலிருந்தே இதைத்தான் பேசி வருகிறேன். எந்தக் கட்சியின் அபிமானமும் சார்பும் இல்லாத அறிஞர்கள், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், ஓய்வுபெற்ற நீதிபதிகள், போன்றவர்கள் தான் தணிக்கைக் குழுவில் இடம்பெற வேண்டும். அது தான் ஜனநாயகமாக இருக்கும்.
ஜிப்ஸி படத்தின் மையச் சரடு 2002- ல் குஜராத் தில் நடந்த கோத்ரா கலவரத்தை ஒட்டி உருவாக்கப்பட்டது. இதற்காக குஜராத் சென்று உண்மையில் அந்த புகைப்படத்தின் கலவர சாட்சிகளாக இருந்த குதுபுதீன் அன்சாரி, அசோக் பார்மர் உள்ளிட்ட பலரைச் சந்தித்தோம். கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டுச் சிதைக்கப்பட்ட சகோதரிகளைச் சந்தித்தோம். அங்கு நான் பார்த்தது, கேட்டதில் ஒரு சின்ன துளிதான் ஜிப்ஸி படத்தில் வந்திருக்கிறது. அதன் அத்தனை உண்மைகளையும் எடுத்தால் இங்கே அந்த படத்தை எப்போதும் வெளியிடவே முடியாது. திரைத்துறையில் மட்டுமல்ல. எல்லா தளங்களிலும் கருத்து சுதந்திரத்துக்கு எதிரான பெரும் அச்சறுத்தல்கள் நடந்து கொண்டிருக்கின்றன. சமீபத்தில்கூட அம்பேத்கர் பிறந்தநாளில் சமூக செயற்பாட்டாளர் ஆனந்த் டெல்டும்டே மற்றும் கௌதம் நவ்லாகா ஆகியோரை இந்த அரசு கைது செய்தது. இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின்போது, சாடட் ஹசன் மாண்டோ (ள்ஹஹக்ஹற் ட்ஹள்ஹய் ம்ஹய்ற்ர்) எழுதிய சிறுகதைகள் அனைத்தும் பெரும் வலியைத் தந்தன. ஏன் இப்படி எழுதுகிறீர்கள் என அவரிடம் கேட்டபோது, ""நான் எழுதுவது மிகவும் குறைவு. சமூகம் நமக்குத் தரக்கூடிய பரிசு என்பது மிகவும் அதிகம்"" என்று குறிப்பிட்டார். அது இன்றைய காலகட்டத்துக்கும் சரியாகப் பொருந்துகிறது.
உங்கள் ஜிப்ஸி, மதவெறி அரசியலுக்கு எதிராக, மிகத் துணிச்சலாகவும் அதிரடியாகவும் குரல் கொடுத்திருக்கிறான். இதற்கு கிடைத்த வரவேற்பு எப்படி?
* ஒரு விசயத்தை இங்கே தெளிவாகச் சொல்ல வேண்டும். மதம் என்பதும் வழிபாடு என்பதும் அவரவர் விருப்பத்திற்கு உட்பட்டது. இந்த தேசம் முழுவதும் எளிய மனிதர்களின் நம்பிக்கைகளும் வழிபாடுகளும் அவர்களை ஏதோ ஒருவிதத்தில் இயக்கிக் கொண்டிருக்கின்றன. அந்த நம்பிக்கைகளை வெறியாக மாற்றி, அவர்களுக்குள் பிரிவினை நஞ்சை விதைத்து, தங்களது அரசியலுக்கும் அதிகாரங் களுக்கும் அவர்களைப் பயன்படுத்தி கொள்பவர்கள் தான் என் வில்லன்கள். சாதியை வைத்தும் மதத்தை வைத்தும் கடவுளர்களின் பேரால் மனிதத்தை கொன்று புதைக்கும் பதவி அதிகார வெறியர்களைத் தான் நாம் நிர்வாணப்படுத்த வேண்டும். எந்த மதமாக இருந்தாலும் அது இதயங்களுக்குள் அன்பைத்தான் விதைக்க வேண்டுமே தவிர வெறியை அல்ல. அதைத் தான் நான் பேச விரும்பிகிறேன். அதற்கு பொதுத் தளத்தில் எல்லா வகையான மக்களிடமிருந்தும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. அவர்களும் அதைத் தான் விரும்புகிறார்கள்.
மத அரசியலுக்கு எதிரான ஆயுதமாய் நீங்கள் உங்கள் ஜிப்ஸியைக் கையில் எடுத்த நேரத்தில், குடியுரிமைச் சட்ட திருத்த விவகாரத்தில், அதே போன்ற ஒரு தகிப்பு நாடெங்கும் கிளர்ந்திருந்ததே...? இதை எப்படிப் பார்க்கிறீர்கள்.?
இத்திரைப்படம் உருவாகி பல நாட்களாகிவிட்டது. தணிக்கை உட்பட படத்தை திரைக்குக் கொண்டு வருவதில் சில சிக்கல்கள் நிலவியதால் பட வெளியீட்டில் தாமதமானது. குடியுரிமைச் சட்டம் தொடர்பான சர்ச்சைகள் எல்லாம் அதற்குப் பிறகுதான் உருவாகின.
இதுபோன்ற பிரச்னைகளை எல்லாம் இந்த அரசு உருவாக்கும் என்பது ஏற்கெனவே எதிர்பார்க்கப் பட்டதுதான். இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ராமர் கோவில் சி.ஐ.ஏ. போன்ற அஜெண் டாக்களை இந்த அரசு நிறைவேற்றிக்கொண்டேதான் இருக்கும். எனவே இந்த மாதிரியான திரைப்படங்களை எப்போது வெளியிட்டாலும் அது பொருத்தமாகவே இருக்கும்.
இடதுசாரிகளும் தமிழக அரசியலில் சரியான பார்வையோடு இயங்கவில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறதே?
இடதுசாரி இயக்கங்கள் எடுக்கக்கூடிய எல்லா விதமான நிலைப்பாடுகளையும் கண்மூடித்தனமாக ஆதரிக்கும் மனோபாவம் எனக்குக் கிடையாது. சில விசயங்களில் அவர்களது நிலைப்பாடுகளில் முரண்பட்டு விமர்சனங்களையும் முன்வைத்து இருக்கிறேன். இம்மாதிரியான விமர்சனங்களுக்கும் விவாதங்களுக்கும் அங்கு இடம் உண்டு. என்னைப் பொறுத்தவரை கம்யூனிசத்தை தத்துவமாகவும் மனித விடுதலைக்கான சித்தாந்தமாகவும் பின்தொடர்கிறேன். கட்சிகள் எடுக்கக்கூடிய அரசியல் முடிவுகள் என்பது நிறைய சூழலோடு பின்னிப் பிணைந்தது. அதை பற்றி நான் பேசமுடியாது. பொதுவாக உலகமயமாக்கலுக்கு பிறகு நடந்த பெரும் மாற்றங்களுக்கு இடதுசாரி சிந்தனை இயக்கங்கள் தன்னை உட்ப்படுத்தி கொண்டேதான் இருக்கின்றன. எவ்வளவு மாற்றங்கள் நிகழ்ந்தாலும் மனித சமூகத்துக்கு எதிரான சுரண்டலை ஒழிக்கவேண்டும் என்ற குரல் மாறாது. கேப்டலிசத்தின் அழுகிய நிலைதான் பாசிசம் என்றார் லெனின்.
இன்றைக்கு ட்ரம்ப், மோடி போன்றவர் களெல்லாம் அந்த அழுகிய பாசிசத்தின் முகங்கள் தான். இப்படியான கொரோனா என்ற பெரும் துயரத்திலும் அமெரிக்கா உலகத்தையே டாலர் வியாபாரத்தின் பிடியில் வைத்திருக்கிறது. மருந்து களையும் பொருட்களையும் ஹைஜாக் செய்கிறது. ஆனால் அவர்கள் நாட்டில் இன்சூரன்ஸ் மருத்துவ கட்டமைப்புகள் பலவீனமாக இருப்பதால் மக்கள் அநியாயமாக சாகிறார் கள். இங்கே இந்தியாவில் கொரோனாவுக் கான தரமான பரிசோதனை கருவிகள்கூட வாங்க முடியாத நிலையில் பெரும் முதலாளிகளுக் கான அறுபத்தெட்டாயிரம் கோடி கடனை தள்ளுபடி செய்கிறது இந்த அரசு. பாசிசம் அதன் அழிவின் உச்சக்கட்டத்தை எட்டி விட்டது.
இந்த சூழலில் நம் முன்னே இருக்கும் நம்பிக்கை யான மாற்றாக இடதுசாரி இயக்கங்கள் இருக்கின் றன. அதிகாரமற்றவர்களின் கைகளுக்கு அதி காரத்தை மாற்றும் செயல்பாடுகள் அவர்களிடமே இருக்கிறது.
திராவிட இயக்கங் களின் செயல்பாடு? மற்றும் அவை தொடர் பான எதிர்பார்ப்புகள் பற்றி?
* தமிழகத்துக்கும், சமூக நீதிக்கும் திராவிட இயக்கங்கள் கொடுத்த பங்களிப்பு பெரிது. அதை ஒருபோதும் மறுத்துவிட முடியாது. சனாதனத்துக்கு எதிரான, ஒடுக்குமுறைகளுக்கு எதிரான சிந்தனைகள் இம்மண்ணில் விதைக்கப்பட்டதற்கு திராவிட இயக்கங்களுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. அது போலவே கலைத்தளத்திலும் கூட கலைஞரின் பராசக்தி வரவில்லை என்றால், ஜோக்கர் வந்திருக்குமா என்பது சந்தேகமே. பெரியார் என்ற மனிதர் இன்னமும் இந்த நிலத்துக்கு ஒரு காவல் சக்தியாக இருக்கிறார்.
இதில் ஒரு விசயம் என்னவென்றால் பெரியாரை கொண்டாடும் இந்த நிலத்தின் பெரும்பான்மையான மக்கள், கடவுள் மறுப்பாளர்கள் அல்ல. கடவுள் மறுப்பு என்பதையும் தாண்டி சுயமரியாதை, சாதிமறுப்பு, பெண்ணுரிமை போன்ற தளங்களில் பெரியாரின் சிந்தனை ஏற்படுத்திய பாதிப்புதான் இன்று வரை யிலும் இந்த மண்ணுக்கு ஒரு அரணாக இருக்கிறது. பெரியாரின் சிந்தனைகளை, அரசியல் தளத்தி லிருந்து அதிகார தளத்திற்கு எடுத்துச் சென்ற அண்ணா சீக்கிரமே மறைந்தது, நமக்கான பேரிழப்புதான். மாநில சுயாட்சி உள்ளிட்ட எவ்வளவோ முன்மாதிரிகளை திராவிட அரசியல் நமக்குக் கொடுத்ததை மறக்கவே முடியாது. அந்த நன்றியின் மிச்சம் இப்போதும் நம்மிடம் இருக்கின்றது. ஆனால் அவர்கள் தேர்தல் அரசியல் பாதையில் ஏராளமான சமரசங்களோடு வந்து சேர்ந்த இடத்தையும் நாம் பார்த்துக் கொண்டிருக்கி றோம்.
ஊழலையும், சாதியத்தையும், பணத்தையும் முன் வைக்கும் ஓட்டு அரசியல், மதவாதக் கூட்டு, இயற்கை வள சுரண்டல்கள், மலினமான சிந்தனைகள் என இப்போது புரையோடிப் போய் கிடக்கும் அநீதி களைப் பற்றி வெளிப்படையாக விமர்சிப்பதற்கும் எதிர்ப்பதற்கும் நான் தயங்கியதே இல்லை.
சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள், அதை வளர்க்கும் சித்தாந்தங்கள் இவற்றுடன் ஜனநாயக சக்திகளால் போட்டியிட முடிய வில்லையா?
* இன்றைக்கு கொரோனா போன்ற மிகப்பெரிய இடர்பாட்டை தேசம் சந்தித்திருக்கும் வேளையிலும் கூட, நோயிலும் மதவாதத்தை பரப்புகிறார்கள் சங்பரிவாரங்கள். குறிப்பாக நடுத்தர, உயர் நடுத்தர மக்களின் மனதில் சிறுபான்மையினர் குறித்த நஞ்சை விதைத்து வருகிறார்கள். இஸ்லாமியர்களிடமிருந்து விலகியே இருங்கள். அவர்கள் கொரோனா கிருமியைப் பரப்பிவிடுவார்கள் என்று, பயத்தை மக்கள் மத்தியில் உருவாக்குகிறார்கள். இந்த தேசத்தின் வளர்ச்சியிலும் தியாகங்களிலும் முன்னால் நிற்கும் நம் சகோதரர்களை பற்றி கேவலமான அவதூறுகளை கட்டவிழ்த்து விடுகின்றனர். அதற்கான கருவியாக சமூக வலை தளங்களையும் பயன்படுத்திக் கொள்கிறார்கள். மிகவும் அபத்தமான ஆபத்தான விவாதங்களை, பொழுதுபோக்காக மாற்றி மக்களிடையே பரப்பி வருகிறார்கள். சம்பந்தமே இல்லாத மிக அற்பமான விசயங்களுக்கெல்லாம் நம்மை எதிர்வினை ஆற்றவைத்து, நமது ஆக்கப்பூர்வமான நேரத்தையும் சிந்தனையையும் வீணடிக்கும் அரசியலைச் செய்து கொண்டிருக்கிறார்கள். உண்மையில் நம்மை அடிப்படைத் தேவைகளுக்காகப் போராட வைத்து, அலைய வைத்துவிட்டு, அவர்கள் அதிகாரத்தின் உயர் இடங்களை, நீதித்துறையை, பொருளாதாரத்தின் நாற்காலிகளை நிரப்பி கொண்டே இருக்கிறார்கள். ஆனா லும் கூட ஜனநாயக சக்திகள் முன்னெப்போதையும் விட இப்போது எழுச்சியாகவே இருப்பதாக எண்ணுகிறேன். இந்தக் காலகட்டத்திலும் இஸ்லாமிய தோழர்களும் இந்து மத பிற மத தோழர்களும் தன்னார் வலர்களாக இணைந்து நிற்பதைப் பார்க்கிறோம். ஐ.ஐ.டி. தொடங்கி ஜெ.என்.யு. வரை மாணவர்களிடம் அறம் சார்ந்த ஒரு எதிர்ப்புணர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக தென்னிந்தியாவில் இந்த எழுச்சி அதிகமாக இருக்கிறது. பெரியார், அயோத்திதாச பண்டிதர் போன்றவர்களால் கட்டமைக்கப்பட்ட தத்துவ அடித்தளம் தான் இதற்கு காரணம். சகோதர யுத்தங்களை மூட்டை கட்டி வைத்து விட்டு ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து நிற்பது தான் முக்கியம் என நினைக்கிறேன்.
உங்கள் அண்ணன் சரவணனும் எழுத்தாளர், திரை இயக்குநர், தாங்களும் அதே தடத்தில் முத்திரை பதிக்கிறீர்கள்.. இது எதார்த்தமானதா..?
என்னுடைய வாழ்க்கையை வடிவமைத்ததில் சரவணன் அண்ணனுக்கே மிக முக்கியப் பங்கு உள்ளது. நான் சென்னைக்கு வந்த புதிதில் சரவணன் அண்ணன் இயக்குநர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றி வந்தார். ஆனால் விசித்திரங்கள் நிறைந்த திரைத்துறையில், அண்ணனுக்கு முன்பாகவே நான் திரைப்படம் எடுத்துவிடும் சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. அண்ணனுக்கான வாய்ப்பு தள்ளிப்போய்க்கொண்டே இருந்த நிலையில், சமீபத்தில்தான் மெஹந்தி சர்க்கஸ் திரைப்படம் மூலம் அண்ணன் இயக்குநராக அறிமுகமாகியிருக்கிறார். மானுடம் சார்ந்த மிகத்தெளிவான பார்வை கொண்ட அவரிடமிருந்து இன்னும் ஏராளமான தரமான திரைப்படங்கள் உருவாகும்.
உங்கள் கொரோனா கால அனுபவம் எப்படி இருக்கிறது?
அடித்தட்டு, நடுத்தட்டு மக்களின் தவிப்பை எப்படி உணர்கிறீர்கள்?
* சரியாக இந்த நேரத்தில் எனக்குக் குழந்தை பிறந் திருக்கிறான். வீட்டில் மனைவி ஹேமாவுடனும் மகனுடனும் நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த கொரோனா காலகட்டம், ஒட்டுமொத்த மனித குலத்துக்குமான சுயபரிசோதனைக் காலம் என்றே உணருகிறேன். ஆயுதங்களை வாங்கிக் குவித்த வல்லரசு ஒருவேளை உணவுக்கு தெருவில் நிற்கிறது. வல்லரசு ஆவது முக்கியம் அல்ல. கல்வியிலும் மருத்துவத்திலும் தன்னிறைவடையும் நல்லரசாக இருப்பதே முக்கியம் என அந்தக் காட்சி உணர்த்துகிறது. இயற்கையின் மாபெரும் உயிர்ச் சங்கிலியில் மனித இனம் என்பது சிறு கண்ணிதான். ஒவ்வொரு உயிரோடும் இயற்கையின் ஒவ்வொரு கண்ணியோடும் அவனுக்கு தொடர்பு இருக்கிறது. எனவே புல் பூண்டு பறவை என ஒவ்வொரு உயிருக்குமான இடத்தை அளிக்கவேண்டும் என்பதையும் நம்மாழ்வார் சொன்னது போல தற்சார்பு வாழ்க்கை எவ்வளவு முக்கியம் என்பதையும் இந்த காலம் எனக்கும் உணர்த்தி இருக்கிறது.
டெல்லியிலிருந்தும் மும்பையிலிருந்தும் பெங்களூரி லிருந்தும் லட்சக்கணக்கான தொழிலாளிகள் சொந்த ஊர்களை நோக்கி நடப்பதை பார்க்கிறோம்.
நம் கழிவை அள்ளியவர்கள், நமக்கான உணவை உருவாக்கப் பங்களித்தவர்கள், நமது நகரத்தை கட்டமைத்தவர்கள், பசியோடு நடந்தே பல நூறு மைல்களைக் கடக்கிறார்கள். அந்த தொழிலாளர்கள் இல்லை என்றால் நமது உலகம் இயங்காது என்பதை தீவிரமாக உணர்கிறேன். மருத்துவர்கள் செவிலியர் கள் காவல் துறையினர் ஊடகவியலாளர்களைச் சிறிது நன்றியோடு நினைக்கிறேன். இனி யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதையும் மாற்றி யாதும் ஊரே யாதும் கேளிர் என வாழவேண்டும் என்று தோன்றுகிறது.
வாழ்வில் மறக்க இயலாத அனுபவம்?
வாழ்க்கையே மறக்க முடியாத அனுபவம்தானே.